லெனினியம் என்றால் என்ன?
ஜே.வி. ஸ்டாலின்

ரஷ்யாவில் நிலவிய சூழ்நிலைகளின் தனிச்சிறப்பான நிலைமைகளுக்கு ஏற்ப பிரயோகிக்கப்பட்ட மார்க்சியமே, லெனினியம் என்று சிலர் சொல்கின்றனர். இந்த நிர்ணயிப்பில், ஒரு துளியளவு உண்மை இருக்கிறது என்பது மெய்தான். ஆனால், இது எந்த விதத்திலும் முழுநிறைவான உண்மையைக் கொண்டிருக்கவில்லை. ரஷ்ய சூழ்நிலைகளுக்குப் பொருத்தமாக, மார்க்சியத்தை லெனின் பிரயோகித்தார் என்பதும், அதையும் மேதாவிலாசத்துடன் பிரயோகித்தார் என்பதும் மறுக்க முடியாத உண்மையே. ஆனால், ரஷ்யாவின் தனிச் சிறப்பான சூழ்நிலைகளுக்குப் பொருத்தமாகப் பிரயோகிக்கப்பட்ட மார்க்சியமாக மட்டுமே லெனினியம் இருந்திருக்குமானால், அது வெறும் தேசியத்தன்மை கொண்டதாகவே, ஒரு ரஷ்யத் தத்துவமாக மட்டுமே அல்லவா இருந்திருக்கும்? வெறும் தேசியத்தன்மை வாய்ந்த, ரஷ்யாவுக்கு மட்டுமே உரிய நிகழ்ச்சிப் போக்காக மட்டுமல்லவா இருந்திருக்கும்? இருந்தபோதிலும், நமக்கு நன்றாகத் தெரியும் லெனினியமானது ரஷ்யாவுக்கு மட்டுமே உரிய நிகழ்ச்சிபோக்கு அல்ல; மாறாக, இது ஒரு சர்வதேச நிகழ்ச்சிப்போக்கு.
இந்த நிகழ்ச்சிப்போக்கு முழுமையான சர்வதேச வளர்ச்சியில் வேரூன்றி இருக்கிறது. இதனால்தான், இந்த நிர்ணயிப்பானது ஒருபக்கச் சார்பு எனும் குறைபாடுடையதாக இருக்கிறது என்று நான் கருதுகிறேன்.
1840- ஆம் ஆண்டுகளின்போது இருந்த மார்க்சியத்தின் புரட்சிகர மூலக்கூறுகளை மீண்டும் உயிர்பித்ததே லெனினியம் என்று வேறு சிலர் கூறுகின்றனர். 1840-ஆம் ஆண்டுகளுக்குப் பிந்திய ஆண்டுகளில், மார்க்சியம் மிதமானதாகவும் புரட்சிகரமற்றதாகவும் ஆகி விட்டதாக அவர்கள் வாதிடுகின்றனர். மார்க்சின் போதனைகளை புரட்சிகரமானது என்றும் மிதமானது என்றும் இரு பகுதிகளாகப் பிரிப்பது, முட்டாள்தனமானதும் கொச்சையானதுமாகும் என்று நாம் அசட்டை செய்து புறக்கணிக்கிறோம். இந்த வரையறையானது முழுக்கவும் போதாமையானது, மனநிறைவற்றது என்று நாம் புறக்கணிக்கும் போதுகூட, இதில் துளியளவு உண்மையிருக்கிறது என்பதை நாம் கட்டாயம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்தத் துளியளவு உண்மை என்னவென்றால், இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதிகளால் மார்க்சியத்தின் புரட்சிகர உள்ளடக்கம் நசுக்கப்பட்டுக் கிடந்த நிலையில், லெனின்தான் மார்க்சியத்தின் புரட்சிகர உள்ளடக்கத்தை மீட்டெடுத்து அதன் பழைய நிலைக்கு கொண்டுவந்தார் என்பதுதான். இன்னமும், இது முழு உண்மையில் ஒரு துளியளவாகத்தான் இருக்கிறது. அப்படியானால், லெனினியம் பற்றிய முழு உண்மை என்ன? லெனினியமானது மார்க்சியத்தை அதன் பழைய நிலைக்கு மீட்டுக் கொண்டுவந்தது மட்டுமல்லாமல், மேலும் ஒரு உயர்ந்த படிக்கு முன்னோக்கி எடுத்துச் சென்றது. முதலாளித்துவத்தின் புதிய நிலைமைகளுக்கும் பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தின் புதிய நிலைமைகளுக்கும் ஏற்ப மார்க்சியத்தை மேலும் வளர்த்தது.
அப்படியானால், இறுதிப் பகுப்பாய்வின்படி பார்க்கையில், லெனினியம் என்றால் என்ன?
ஏகாதிபத்தியமும் பாட்டாளி வர்க்கப் புரட்சியுமான சகாப்தத்தின் மார்க்சியம்தான் லெனினியம். இன்னும் துல்லியமாகச் சொல்வதானால், பொதுவில் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் கோட்பாடும் செயல்தந்திரங்களுமே லெனினியம்; குறிப்பாக, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கோட்பாடும் செயல்தந்திரங்களுமே லெனினியம். (பாட்டாளி வர்க்கப் புரட்சியை நாம் மனதில் கொண்டு பார்க்கையில்) புரட்சிகர காலத்துக்கு முந்தைய காலத்தில் மார்க்கம் எங்கெல்சும் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அப்போது ஏகாதிபத்தியம் வளர்ச்சியுற்றதாக இருக்கவில்லை. பாட்டாளிகள் புரட்சிக்கான தயாரிப்புகளைச் செய்து கொண்டிருந்த காலமது. பாட்டாளி வர்க்கப் புரட்சியானது. தவிர்க்க இயலாத உடனடி நடைமுறைக்கானதாக இன்னமும் ஆகாமலிருந்த காலமது. ஆனால், மார்க்ஸ் - எங்கெல்ஸ் ஆகியோரின் சீடரான லெனின், ஏகாதிபத்தியம் நன்கு வளர்ச்சியடைந்திருந்த காலத்தில் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டார். பாட்டாளி வர்க்கப் புரட்சி விரிவடைந்து கொண்டிருந்த காலமது. பாட்டாளி வர்க்கப் புரட்சி ஏற்கெனவே ஒரு நாட்டில் வாகைசூடியிருந்த காலமது. முதலாளித்துவ ஜனநாயகத்தை அடித்து நொறுக்கி பாட்டாளி வர்க்க ஜனநாயக சகாப்தத்துக்கு - சோவியத்துகளின் சகாப்தத்திற்கு கட்டியங்கூறிய காலமது.
இந்தக் காரணத்தால்தான், லெனினியமானது, மேலும் வளர்ச்சியுற்ற மார்க்சியமாக இருக்கிறது.
லெனினியத்தின் விதிவிலக்கான போர்க்குணத்தையும் விதிவிலக்கான புரட்சிகரத் தன்மையையும் சுட்டிக்காட்டுவது இப்போது வழமையாக இருக்கிறது. இது முற்றிலும் சரிதான். ஆனால், லெனினியத்தின் அலாதியான தனிச்சிறப்புக்கு இரு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, லெனினியமானது பாட்டாளி வர்க்கப் புரட்சியிலிருந்து உருப்பெற்று எழுந்தது. இந்த உண்மை நிலையின் காரணமாக, வேறுவழியில்லாமல் அந்தப் புரட்சியின் முத்திரை அதன்மேல் பதியாமலிருக்க முடியாது. இரண்டாவதாக, இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதத்துடனான மோதல்களில்தான் லெனினியம் வளர்ச்சியுற்று இன்னும் பலமடைந்தது. இந்தப் போராட்டம்தான், முதலாளித்துவத்துக்கு எதிரான வெற்றிகரமான போராட்டத்துக்கு, அத்தியாவசியமான பூர்வாங்க முன்னிபந்தனையாக இருந்தது; இன்னமும் இருந்துகொண்டு இருக்கிறது. ஒரு புறத்தில் மார்க்ஸ்-எங்கெல்சுக்கும். மறுபுறத்தில் லெனினுக்கும் இடையில், இரண்டாம் அகிலத்தினுடைய சந்தர்ப்பவாதத்தின் கடிவாளமற்ற ஆதிக்கம் மேலோங்கியிருந்த ஒரு முழுநிறைவான காலம் இருந்ததை நாம் கட்டாயம் மறந்துவிடக் கூடாது. சந்தர்ப்பவாதத்துக்கு எதிரான இந்த ஈவிரக்கமற்ற போராட்டமானது, லெனினியத்தின் ஆகமிக முக்கியத்துவமிக்க கடமைகளில் ஒன்றாக இல்லாமலிருக்க முடியாது என்பதையும் நாம் கட்டாயம் மறந்துவிடக் கூடாது.
- ஜே.வி. ஸ்டாலின்
(லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் - கீழைக்காற்று வெளியீடு - நூலிலிருந்து)