சித்த மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்காத ஆயுஷ் அமைச்சகம்
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை

வெளிநாடுகளில் ஆயுஷ் மருத்துவ வ முறை களை ஏற்றுக் கொள்ள வெளிநாட்டு பல்கலை, மருத்துவ மையங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் அல்லது தேசிய மருத்துவ நிறுவனத்தால் சித்த மருத்துவம் சார்ந்த எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை.
மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் மத்திய ஆராய்ச்சி குழுமம் தேசிய நிறுவனங்கள் அமெரிக்கா, பிரிட்டன் உட்பட 29 நாடுகளுடன் 50 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளன. இவற்றில் சித்த மருத்துவம் சார்ந்த எந்த ஒப்பந்தமும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் அல்லது தேசிய மருத்துவ நிறுவனத்தால் செய்யப்படவில்லை.
தமிழக சித்த மருத்துவ மனைகள், கிளினிக் சங்க மாநிலத் தலைவர் ஜெய வெங்கடேஷ், செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது: பிரதமர் மோடியால் காசி தமிழ்ச் சங்கமம் மூல மாக அகத்தியர் விழா கொண்டாடப்பட்டு சித்த மருத்துவ பெருமை வட மாநில மக்களிடம் சென்றடைந்தது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த சித்த மருத்துவத்திற்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் முக்கியத்துவம் அளிக்கவில்லை.
மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் மற்றும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திற்கு தெரியாமல் இவ்வாறு நடக்க வாய்ப்பு இல்லை. 50 புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கான இலக்கு முடிக்கப்பட்டு மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டதா என்பதும் தெரியவில்லை.
இலங்கை, மலேசியா பல்கலை, சுகாதார அமைச்சகங்கள் சித்த மருத்துவ படிப்புகளை வழங்கினாலும், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடாவில் தமிழ்ச் சங்கங்கள் இயங்கி வந்தாலும் சித்த மருத்துவம் சார்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படவில்லை. இது சித்த மருத்துவத்தை ஒதுக்கும் செயல்.
மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் மற்றும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திற்கு அறிவுரை வழங்க வேண்டிய மத்திய ஆயுஷ் அமைச்சகமும் நடவடிக்கை எடுக்காதது சித்த மருத்துவத்தின் மேல் அக்கறையில்லை என்பதை காட்டுகிறது. இந்திய மருத்துவ முறையான சித்த மருத்துவத்திற்கும் சம உரிமை வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றனர்.
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு