சாதி, அரசியல் மற்றும் அதிகாரம்: திராவிட மாடலில் ஆதி திராவிடர்கள்
டி. ரவிக்குமார் - தமிழில்: வெண்பா
இராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்க (RSS) நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதில் தேசிய ஊடகங்கள் மூழ்கியுள்ளன, ஆனால் RSS-க்கு சித்தாந்த ரீதியாக எதிரான தமிழ்நாட்டின் நூற்றாண்டு கால திராவிட இயக்கத்தைப் பற்றி விவாதிக்க அவை போதிய இடமளிப்பதில்லை. திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக் கட்சி (Justice Party) 1920 இல் மதராஸ் மாகாணத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஈ.வெ.ரா. பெரியாரால் நிறுவப்பட்ட சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் மற்றும் திராவிடர் கழகத்தின் கிளை இயக்கமாக சி.என். அண்ணாதுரையால் நிறுவப்பட்ட திமுக ஆகியவை திராவிட மரபின் ஒரு பகுதியாகும்.
ஆரம்பத்தில், திராவிட இயக்கம் தலித்துகள் மற்றும் பிற விளிம்புநிலை குழுக்களை உள்ளடக்குவது பற்றிப் பேசியது. பின்னர் அது இந்த பார்வையை கைவிட்டு, தலித்துகளை ஒடுக்கத் தொடங்கியது. திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் உள்ள சாதிப் பெரும்பான்மையின் அரசியல் கருவியாக மாறியதால் இந்த மாற்றம் நிகழ்ந்தது. “இந்தியாவில், பெரும்பான்மை என்பது அரசியல் பெரும்பான்மை அல்ல. இந்தியாவில் பெரும்பான்மை பிறக்கிறது; அது உருவாக்கப்படுவதில்லை. அதுவே வகுப்புவாத பெரும்பான்மைக்கும் அரசியல் பெரும்பான்மைக்கும் உள்ள வேறுபாடு. ஒரு அரசியல் பெரும்பான்மை என்பது நிலையானதோ அல்லது நிரந்தரமானதோ அல்ல. அது எப்போதும் உருவாக்கப்பட்டு, கலைக்கப்பட்டு, மீண்டும் உருவாக்கப்படும் பெரும்பான்மை. ஒரு வகுப்புவாத பெரும்பான்மை என்பது அதன் மனப்பான்மையில் நிலையாக உள்ள நிரந்தர பெரும்பான்மை ஆகும். அதை அழிக்க முடியுமே தவிர, அதை மாற்ற முடியாது,” என்று அம்பேத்கர் கூறினார்.
தமிழ்நாட்டில் இந்து சமூகத்தில் பிராமணர்கள் எண்ணிக்கை ரீதியாக சிறுபான்மையினராக இருந்ததால், அவர்களின் வன்முறை பெரும்பாலும் குறியீட்டுத் தன்மையுடையதாகவே இருந்தது; மாறாக, எண்ணிக்கை ரீதியாக பெரும்பான்மையாக உள்ள சாதிகளால் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை இயல்பில் உடல் ரீதியானது. எண்ணிக்கை பலம் கொண்ட இந்த சாதிகளின் கைகளில் குவிந்துள்ள அதிகாரம் அவர்களின் அதிகாரத்தை எல்லையற்றதாக ஆக்கியுள்ளது. இன்று நாம் வைத்திருக்கும் பாராளுமன்ற ஜனநாயகம், வகுப்புவாத பெரும்பான்மைக்கு வழி வகுத்தது மட்டுமல்லாமல், சாதிப் பெரும்பான்மைக்கும் வழி வகுத்துள்ளது. இத்தகைய சூழ்நிலையைத் தடுக்க அம்பேத்கர் அறிமுகப்படுத்த முயன்ற கட்டுப்பாடுகளான – தனித் தொகுதிகள் மற்றும் இரட்டை வாக்களிப்பு முறை – அரசியல் நிர்ணய சபையால் நிராகரிக்கப்பட்டன. தலித்துகளுக்கு ஒரு சில சலுகைகளைப் பெறுவதைத் தவிர வேறு எதையும் அம்பேத்கரால் செய்ய முடியவில்லை.
சாதிப் பெரும்பான்மைக்கு ஆதரவாக எழுந்த முதல் வலுவான குரல் தமிழ்நாட்டிலிருந்து வந்தது. பிராமணர் அல்லாதோர் மற்றும் சுயமரியாதை இயக்கங்களின் தயவால், இந்த விழிப்புணர்வு இங்கு மிக விரைவில் தோன்றியதால், இந்தியாவின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் சாதிப் பெரும்பான்மையின் தாக்கமும் விரைவாக வெளிப்பட்டது. கடந்த 100 ஆண்டுகளாக தமிழ்நாட்டு தலித்துகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட வன்முறையின் தீவிரம், இந்த ‘பிராமணர் அல்லாதோரின் இயக்கத்துக்கு’ விடப்பட்ட கடுமையான சவாலாகும். 1912 இல் டாக்டர் சி. நடேசன் முதலியாரால் திராவிட சங்கம் நிறுவப்பட்டதும், 1916 இல் மதராஸில் பிராமணர் அல்லாதோர் அறிக்கை (Non-Brahmin Manifesto) வெளியிடப்பட்டதும் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க தருணங்கள். இந்த வளர்ச்சிகளால், ‘பிராமணர் அல்லாதவர்’ என்ற கற்பனையான ஒரு வகைப்பாடு கட்டமைக்கப்பட்டது. 1917 இல் தொடங்கப்பட்ட நீதிக் கட்சி, 1920 மாகாண சட்டமன்றத் தேர்தல்களில் பிராமணர் அல்லாதோர் தலைமையிலான முதல் அமைச்சரவையை அமைத்தது.
பிரிட்டிஷ் நிர்வாகம் இந்திய அரசு சட்டம் 1919 இன் கீழ் இரட்டை ஆட்சிமுறையை (Dyarchy) அறிமுகப்படுத்தியபோது, பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்திய தேசிய காங்கிரஸ் எதிர்ப்பின் காரணமாக தேர்தலைப் புறக்கணித்தது. நீதிக் கட்சி, இரட்டை ஆட்சித் திட்டத்தை ஏற்று, தேர்தலில் போட்டியிட்டு, எதிர்ப்பின்றி வெற்றி பெற்று, டிசம்பர் 1920 இல் ஒருங்கிணைந்த மதராஸ் மாகாணத்தின் அமைச்சரவையை அமைத்தது. நீதிக் கட்சி அமைச்சரவை 1921 இல் பல்வேறு பிராமணர் அல்லாத சமூகங்களுக்கு வேலைகளில் இட ஒதுக்கீடு அளிக்கும் வகுப்புவாரி அரசாணையை (Communal G.O.) வெளியிட்டது. இருப்பினும், பிராமணர் அல்லாதோர் நலன் குறித்த நீதிக் கட்சி அமைச்சரவையின் கொள்கை அனைத்து பிராமணர் அல்லாத சாதிகளையும் உள்ளடக்கவில்லை. இந்த கொள்கை நடைமுறையில் தலித்துகள் மற்றும் பிற மத சிறுபான்மையினரை விலக்கியது. 1920 இல் அமைக்கப்பட்ட முதல் நீதிக் கட்சி அமைச்சரவையின் அமைப்பு இந்த சமூக யதார்த்தத்தை பிரதிபலித்தது. இதன் விளைவாக, எண்ணிக்கை பலம் இருந்தும் அரசியல் அதிகாரத்தில் தங்கள் பங்கை உறுதிப்படுத்த முடியாத சமூகங்கள் தங்கள் உரிமைகோரல்களை முன்வைக்கத் தொடங்கின. தலித்துகளின் அரசியல் அணிதிரட்டல் இந்தச் சூழலில் இருந்துதான் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
1923 இல், முன்னோடி தலித் தலைவர்களில் ஒருவரான எம்.சி. ராஜா தலைமையில், தலித் பிரதிநிதிகள் குழுவினர் ஆளுநரைச் சந்தித்து, நீதிக் கட்சி அமைச்சரவையால் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு (Depressed Classes) இழைக்கப்பட்ட அநீதியை எடுத்துரைக்கும் மனுவைச் சமர்ப்பித்தனர். அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு கோரியும், தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் தலித் பிரதிநிதித்துவம் தேர்தலில் வெற்றி பெறுவதை மட்டுமே சார்ந்து இருக்கக்கூடாது என்று வாதிட்டும், தலித் நலனுக்காக ஒரு தனித் துறையை உருவாக்க வேண்டும் என்றும் அக்குழு கோரியது. சுதந்திரத்திற்குப் பிறகு, சட்டமன்றத்திலும் நீதித்துறையிலும் இடஒதுக்கீடு கோரி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBCs) போராட்டம் தீவிரமடைந்தது. இது 1967 இல் திராவிட முன்னேற்றக் கழகம் அதிகாரத்திற்கு வருவதற்கு ஒரு பின்னணியாக அமைந்தது — இது சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் அமைந்த முதல் காங்கிரஸ் அல்லாத அரசு ஆகும்.
தமிழ்நாட்டில் அரசியல் அதிகாரம் சாதிப் பெரும்பான்மையினரிடம் உள்ளதானது, தலித்துகளுக்கு எதிரான சமூக வன்முறை மற்றும் அரசு வன்முறை இரண்டையும் எளிதாக்கியுள்ளது. இது 1957 இன் முதுகுளத்தூர் கலவரங்கள் தொடங்கி, தாமிரபரணி படுகொலை (1999) வரை பல்வேறு சம்பவங்களில் தெளிவாகத் தெரிகிறது. மேலும் 2023 இன் 'கிரைம் இன் இந்தியா' (Crime in India) அறிக்கை மிகச் சமீபத்திய சாட்சியத்தை அளிக்கிறது. பாராளுமன்ற ஜனநாயகம் தலித்துகளுக்கு ஏட்டளவில் சில பாதுகாப்புகளை வழங்கியுள்ளது. இருப்பினும், இந்த சட்டப் பாதுகாப்புகள் சிவில் சமூகத்தால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு மீறப்படுகின்றன. பெரும்பான்மை ஆட்சியைக் 'சாதிப் பெரும்பான்மை ஆட்சியாய்' மாற்றிய ஆதிக்க சாதியினர், ஜனநாயகத்தின் மற்றொரு தூணான சமத்துவத்தை குப்பைக் கூடைக்கு அனுப்பியுள்ளனர். கிராமங்களில் காணப்படும் சாதிப் பஞ்சாயத்துகளின் விரிவாக்கப்பட்ட வடிவமாக சட்டமன்றங்களும் பாராளுமன்றமும் மாறியது போலவே, காவல்துறையும் சாதி இந்துக்களின் கூலிப்படையாக (Mercenaries) மாறியுள்ளது. 1957 முதுகுளத்தூர் கலவரங்களுக்குப் பிறகு, காமராஜ் அரசால் முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்டார்; மேலும் சில காவல்துறை நடவடிக்கைகள் கலவரங்களைக் கட்டுப்படுத்த உதவியது. இருப்பினும், கீழ்வெண்மணி (1968), விழுப்புரம் (1978), கொடியன்குளம் (1995), மேலவளவு (1997), குண்டுபட்டி (1998), தாமிரபரணி (1999) ஆகிய இடங்களில் தலித் விரோத வன்முறைகள் வெடித்தபோது, காவல்துறை குற்றங்களைத் தடுப்பதற்குப் பதிலாக அவர்களுக்குத் துணை நின்றது.
தமிழ்நாட்டில் இப்போது புதிய வகையான கொடுமைகள் (Atrocities) வெளிப்படுகின்றன. வேங்கைவயலில் (2022), தலித்துகளுக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கத்தில் மனித மலம் கலக்கப்பட்டது. நாங்குநேரியில் (2023), அதிக மதிப்பெண்களைப் பெற்றதற்காக தலித் மாணவன் அவனது ஆதிக்க சாதி இந்து வகுப்புத் தோழனால் வெட்டப்பட்டான். இன்றும் கூட, நூற்றுக்கணக்கான அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தலித்துகள் வழிபட அனுமதி மறுக்கப்படுகிறார்கள். கலையரசன் ஏ. மற்றும் விஜயபாஸ்கர் எம். ஆகியோர் 'தி திராவிடன் மாடல்' (2021) என்ற நூலில் குறிப்பிடுவது போல, “ஒரு நூற்றாண்டு கால அணிதிரட்டலும், அரை நூற்றாண்டுக்கும் மேலான நிறுவனமயமாக்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்களும் வாய்ப்புகளையும், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற பொதுச் சேவைகளுக்கான அணுகலையும் கணிசமான அளவில் ஜனநாயகமயமாக்க வழிவகுத்தாலும், திராவிட அரசியலில் மிகப்பெரிய விரிசல் இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. குறிப்பிட்ட சாதி குழுக்கள், குறிப்பாக தலித்துகள், மற்றவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் அளவுக்குத் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதைக் காண இயலவில்லை, அதே சமயம் உறுதிப்படுத்தப்பட்ட நடவடிக்கை (Affirmative Action) கொள்கைகளும் செயலற்று வருகின்றன.”
திராவிட மாடலில் தலித்துகளை புறக்கணிப்பது இன்றும் தொடர்கிறது. தற்போதைய திமுக அரசாங்கம் தலித்துகளின் உண்மையான கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய தயக்கம் காட்டுகிறது. அரசு வேலைகளில் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான சட்டத்தை அல்லது ஆணவக் கொலைகளைத் (Honour Crimes) தடுப்பதற்கான சட்டத்தை தலித்துகள் கோரும்போதெல்லாம், அரசாங்கம் ஆணையங்களை நியமிக்கிறது — இது இந்தக் கோரிக்கைகளை ஒத்திவைக்கவோ அல்லது நீர்த்துப்போகச் செய்யவோ பயன்படுத்தப்படும் பழைய தந்திரமாகும். பறையர் மற்றும் பஞ்சமர் ஆகிய வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்து, அதற்குப் பதிலாக அவர்களை திராவிடர் அல்லது ஆதி திராவிடர் என்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பதிவு செய்யுமாறு தலித்துகள் நீதிக் கட்சி அரசாங்கத்தைக் கேட்டபோது, நீதிக் கட்சி மிகுந்த தயக்கத்துடனேயே அக்கோரிக்கையை ஏற்றது. ‘பண்டைய திராவிடர்கள்’ என்று பொருள்படும் “ஆதி திராவிடர்” என்று தலித்துகளை அழைக்க அவர்கள் விரும்பவில்லை. இந்தத் தயக்கம் இன்றும் நீடிக்கிறது. அதனால்தான், ஆதி திராவிடர் அரசாணை (G.O.) வந்து 100 ஆண்டுகளுக்குப் பிறகும், அரசுப் பதிவுகளில் இன்னும் ‘பறையர்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது — இது ஆதி திராவிட மக்களை அடையாளம் காணப் பயன்படுத்தப்படும் இழிவானதொரு சொல். இது திராவிட இயக்கத்திற்குள் பதிந்துள்ள ஆழமான மனப்பான்மையைப் பிரதிபலிக்கிறது.
(டி. ரவிக்குமார், MP)
- வெண்பா (தமிழில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு