யாருக்கு சுதந்திரம்?: குடிக்கும் தண்ணீரிலும், கொடிக் கம்பத்திலும் கூட சாதிய வன்மம்

தமிழில்: விஜயன்

யாருக்கு சுதந்திரம்?: குடிக்கும் தண்ணீரிலும், கொடிக் கம்பத்திலும் கூட சாதிய வன்மம்

75 வது சுதந்திர தினம் என இந்திய ஆளும் வர்க்கங்களால் கொண்டாடப்பட்டு வரும் சூழலிலும் தொடரும் சாதிய வன்மம் மற்றும் சாதிய படுகொலைகள்.

நாசவேலை சம்பவம் நடந்ததை பற்றி கூறிய போது சாதி மற்றும் பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாக தலித் பஞ்சாயத்து தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஆத்திப்பாடியில் புதிதாக கட்டப்பட்ட கொடித்தளத்தை பாமக நிர்வாகிகளும், திமுக பிரமுகர்களும் சேர்ந்து சேதப்படுத்தியுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சிறுவன் தாகத்திற்கு தண்ணீர் குடிக்க உயர் சாதியினருக்காக வைக்கப்பட்ட பானையைத் தொட்டதற்காக ஆசிரியாரால் கடுமையாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். 75 வருடங்களாகியும், சாதிய வன்மமும், தீண்டாமைக் கொடுமையும் தீர்ந்தபாடில்லை.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஆத்திப்பாடி ஊராட்சியில் சாதிய ஆதிக்கமும் பெண்கள் மீதான வன்மமும் இருப்பதாகக் கூறப்படும் சம்பவத்தில், ஆளும் திமுக பிரமுகரின் தூண்டுதலின் பேரில், கொடிக் கம்பத்துக்காக புதிதாக கட்டப்பட்ட கான்கிரீட் தளம் பாமகவினரால் சனிக்கிழமை சேதப்படுத்தப்பட்டது. இழிவுபடுத்தும் வகையில் சேதப்படுத்தப்பட்ட தளம், சிமெண்டின் ஈரம் கூட இன்னமும் உலராமல் இருந்தது என்றும், பட்டியல் சாதியைச் சேர்ந்த முதல் பெண் பஞ்சாயத்து தலைவியான சுதா குமாரின் பெயர் பொறிக்கப்பட்ட ஒரு தகடு தாங்கி இருந்தது என்றும் தெரிய வருகிறது.

கொடித்தளம் கட்டப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகே இந்த காலித்தனமான நாசவேலை நடந்தேறியுள்ளதாக கூறப்படுகிறது. தேசியக் கொடியை ஏற்றிவைத்த பிறகு, சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய திருமதி சுதா, அனைவரின் ஒப்புதலுக்குப் பிறகே கொடித்தளம் கட்டப்பட்டதாக தி இந்து நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.

“பழைய கம்பம் துருப்பிடித்துவிட்டது, கொடியைக் கட்டுவதற்காக சிறுவர்கள் அதில் ஏறு வேண்டியுள்ளது. 75வது ஆண்டு சுதந்திரக் கொண்டாட்டம் என்பதால், ஒரு புதிய கம்பம் [கான்கிரீட் அடித்தளத்துடன்] இருந்தால் நன்றாக இருக்கும் என்று உணர்ந்தேன். ஊர் கவுண்டரும் (தேர்வு செய்யப்படாத பெயரளவிலான கிராமத் தலைவர்) மற்ற பலரும் இதற்கு ஒப்புக்கொண்டனர், சனிக்கிழமை கட்டுமானம் தொடங்கியது. அதே நாள் இரவன்று, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மூர்த்தியும் (திமுக) சில பாமக குண்டர்களும் சேர்ந்துகொண்டு கொடித்தளத்தை சேதப்படுத்துவதாக எங்களுக்கு தகவல் வந்தது,”என்று அவர் தி இந்து நாளிதழ் கண்ட பேட்டியில் கூறியுள்ளார்.

“இது எப்போதும் நட்பிணக்கமான பஞ்சாயத்தாகவே இருந்து வந்துள்ளது. இதற்கு முன் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததில்லை. ஒரு பட்டியல் சாதியைச் சேர்ந்த பெண்  தலைவரின் பெயர் நிரந்தரமாக சிமென்ட் மற்றும் கல்லில் பொறிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை என்பது இந்த சம்பவம் மூலம் தெளிவாக தெரிகிறது,” என்று திருமதி சுதா தொடர்ந்து கூறியுள்ளார்.

தி.மு.க.வின் உள்ளூர் செயலாளரான திரு. மூர்த்தியை தொடர்பு கொண்டு பேசிய இந்து பத்திரிகை நிருபரிடம், "ஏற்கனவே பழைய கொடித்தளம் இருந்ததால் புதிய கொடித்தளம் "தேவையற்றது" என்று கருதி ஆட்சேபனைகளை தெரிவித்ததாக கூறினார். எனினும் இந்த பஞ்சாயத்தின் முதல் பட்டியலின பெண் தலைவர் என்று பதாகை மூலம் குறிப்பிடுவதனால் என்ன பிரச்சினை ஏற்படப்போகிறது? சமூக நீதி, சமத்துவம் பேசும் திமுக அரசே இதை எதிர்க்கலாமா என்று அவரிடம் கேட்டதற்கு, திரு. மூர்த்தி தனது ஆட்சேபனை "சாதி மேலாதிக்கம்" எனும் திரை கொண்டு மழுங்கடிக்கப்படுவதாக கூறி இந்த விமர்சனத்தை மறுத்தார்.

ஆனால், திருமதி.சுதாவின் கணவர் குமார், “தலித் பஞ்சாயத்துத் தலைவரின் பெயரை எப்படி  எழுத முடியும்” என்று கேட்டு, இரண்டு திமுகவினர் பாமகவினருடன் சேர்ந்து கொடித்தளத்தை சேதப்படுத்தயதாக கூறினார்.

பாமக உடனான நட்புறவு பற்றி கேட்டதற்கு, திரு. மூர்த்தி, அது சேதப்படுத்தப்பட்ட பின்னரே அந்த இடத்திற்கு சென்றதாக கூறினார். "நான் அவர்களை தடுத்த நிறுத்தினேன். நாங்கள் அனைவரும் வன்னியர்கள். நாங்கள் வெவ்வேறு கட்சிகளாக இருக்கலாம், ஆனால் நாங்கள்அனைவரும் சொந்தங்களே,” என்று அவர்  மேலும் கூறினார்.

புதிய கொடிக் கம்பம் கட்டுவதற்கு குறைந்த அளவான இடமே தேவைப்படும் என்று அதிமுக நிர்வாகி பி.குமார் கூறினார்.

சாதிய வன்மத்தில் நடந்த காலித்தனத்தை அடுத்து, ஊத்தங்கரை துணைக் காவல் கண்காணிப்பாளர் மூலம், "சட்டம் ஒழுங்கு" பிரச்சினையைத் தவிர்க்க இரு குழுக்களிடையே "அமைதிப் பேச்சுவார்தை குழு" கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

புதிய கொடி தளம் கட்டப்படவதற்கு எதிராக சாதிய - பாலின அடிப்படையிலான பாகுபாடு இருப்பதாக கூறப்படும் நிலையில், "அமைதி பேச்சுவார்த்தைக்கான குழு" கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று கிருஷ்ணகிரி ஆட்சியர் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டியிடம் 'தி இந்து' கேட்டபோது,  "வழக்கமாக கொடிக்கம்பங்களில் பெயர்ப் பலகை ஏதும் இல்லாமலும், ஒன்றும் எழுதப்படாமல் காலியாகவே விடப்பட்டிருக்கும். எனினும் அது இப்போது தேவையற்றது. இந்த பிரச்சினையில் சாதியப் பாகுபாடு நோக்கமாக இருக்குமேயானால் அதை சரிபார்த்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு எனது அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்குவேன்" என்று ஆட்சியர் கூறியுள்ளார்.

இரண்டு நாள்களுக்கு முன்பு தான், பட்டியல் சாதியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் கொடி ஏற்றுவது தடைபடக் கூடாது என்று மாநிலத்திலுள்ள அனைத்து ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் வெ.இறை அன்பு கடிதம் எழுதினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பின்னணியில் இந்த கடிதம், பட்டியல் சாதி பஞ்சாயத்து தலைவர்கள், குறிப்பாக பெண்கள், சாதி மற்றும் பாலினம் ஆகிய இரட்டை வன்கொடுமையால் பாதிக்கப்படும் பல்வேறு வகையான பாகுபாடுகள் குறித்தும் கள ஆய்வு செய்யப்பட்டு அந்த அறிக்எகையில் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை - thehindu.com