உள்ளூர் அரிசிக்கும் புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்பு
அத்தியாவசிய உணவு பொருட்கள் விலையேற்றத்திற்கும் பசி-பட்டினி கொடுமைகளுக்கும் இட்டுச் செல்லும் புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்பு
தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம் பேக்கிங் செய்யப்பட்ட அரிசி மற்றும் பருப்பு பொருட்களுக்கு GST யிலிருந்து விலக்கு அளிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் முறையீடு செய்துள்ளனர்.
பேக்கிங் செய்யப்பட்ட அரிசி மற்றும் பருப்பு பொருட்களை GST வரையைக்குள் கொண்டு வருவது அனாவசிய விலை ஏற்றத்தை உருவாக்கும் எனவும், ஏற்கனவே பெட்ரோல் விலை உயர்ந்துகொண்டே செல்வதால் அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவு உயரும் என்றும் தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் திரு. துளசிலிங்கம் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை சாமானியர்கள் குடும்ப செலவில் பெரும் சுமையை உருவாக்கும் எனவும் கூறினார்.
இதுவரை சில குறிப்பிட்ட பதியப்பட்ட பாசுமதி அரிசி பிராண்டுகளுக்கு மட்டுமே 5% GST வசூலிக்கப்பட்டது, தமிழ்நாட்டிற்கு மட்டுமே விற்பனை செய்யபடும் உள்ளூர் அரிசி மற்றும் பருப்பு பிராண்டுகளுக்கு GST விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது நடைபெற்ற GST கூட்டமைப்பில் GST வரம்பிற்குள் கொண்டுவரப்பட்ட பல அத்தியாவசிய பொருட்களுள் பேக்கிங் செய்யப்பட்ட அரிசி மற்றும் பருப்பு ஆகியவை இடம்பெற்றது வியாபாரிகள் மற்றும் நுகர்வாளர்கள் இரு தரப்பினருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
- செந்தளம் செய்திப் பிரிவு