இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான காரணமும் தீர்வும்

சமரன்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான காரணமும் தீர்வும்

இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாகவே நீடித்து வந்த பொருளாதார மந்தநிலையானது (Recession), அண்மையில் ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியாக வெடித்துள்ளது. கடந்த ஆண்டு (2021) செப்டம்பர் மாதம் பொருளாதார அவசர நிலையை (Economic Emergency) கோத்தபயா - மகிந்த ராஜபக்சே கும்பல் அறிவித்ததிலிருந்து சிங்கள மக்கள் போராடத் துவங்கி விட்டனர். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத அளவிற்கு இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு வற்றிவிட்டது. ஆகவே அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளது. 13 முதல் 15 மணிநேரம் வரை மின்வெட்டால் பொதுமக்கள் மட்டுமின்றி, சிறு குறு தொழில்களும், பெரும் தொழில்களும், தொலைத்தொடர்பு மற்றும் வணிக நிறுவனங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. அடித்தட்டு வர்க்கம், நடுத்தர வர்க்கம் மட்டுமின்றி சிங்கள மேல்தட்டு வர்க்கம் கூட லட்சக்கணக்கில் திரண்டு பக்சே கும்பலைப் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் கொழும்பு வாழ் தமிழர்கள், முஸ்லீம்கள், பௌத்த பிக்குகளும் போராடுகின்றார்கள். உணவு கலகங்கள் (Food riots) வெடிக்கும் அளவிற்கு நிலைமைகள் உருவாகியுள்ளன. மக்கள் போராட்டங்களை நசுக்குவதற்குப் பாசிச பக்சே கும்பல் ஏப்ரல்-1, 2022 முதல் முழு எமர்ஜென்சி நிலையை அறிவித்துள்ளது. பக்சே கும்பலின் அடக்குமுறைகளையும், தடுப்பரண்களையும் கால்களால் எட்டி உதைத்து விட்டு மக்கள் போராடி வருகின்றனர்.

 

கோத்தபயா - மகிந்த ராஜபக்சே கும்பல் ஆட்சியில் பதவி வகித்து வந்த பெரும்பாலான அமைச்சர்கள் பதவி விலகி விட்டனர். தேசிய அரசு அமைக்க வருமாறு பக்சே கும்பல் விடுத்த கோரிக்கையை எதிர்க்கட்சிகள் நிராகரித்து விட்டன. அக்கட்சிகள் நெருக்கடியைப் பயன்படுத்தி தமது ஆட்சியை நிறுவத் திட்டமிட்டு வருகின்றன. நெருக்கடிக்குப் பொறுப்பேற்று பதவி விலகுமாறு மக்கள் விடுத்த எச்சரிக்கையை பக்சே கும்பல் மதிக்க தயாரில்லை. ஆட்சியைத் தக்கவைக்க எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் சதிகளில் இறங்கியுள்ளது. பக்சே கும்பல் ஆட்சியை அகற்றாமல் வீடு திரும்ப போவதில்லை என வீதிகளில் சிங்கள மக்கள் முழங்குகின்றனர். வீட்டில் மின்சாரம் இல்லை; சமையல் செய்ய எரிவாயு இல்லை; வீட்டிற்குச் சென்று என்ன செய்யப்போகிறோம்? என்கின்றனர். கொழும்பில் வசிக்கும் பெண்மணி ஒருவர் இவ்வாறு கூறுகிறார் "சமையல் பொருட்கள் சரிவரக் கடைகளில் கிடைப்பதில்லை. அவ்வாறு கிடைத்தாலும் அவற்றை வாங்கி சமைக்க எரிவாயு இல்லை. இருக்கும் எரிவாயுவில் சமைத்து வைத்துச் சாப்பிடலாம் என்றாலும் அவற்றைக் கெடாமல் வைப்பதற்கு 13 மணி நேர மின்வெட்டு காரணமாக குளிர்சாதனப்பெட்டி வேலை செய்யவில்லை" என்கிறார். கொழும்பில் வசிக்கும் நடுத்தர, மேல் நடுத்தர வர்க்க குடும்பங்களின் நிலைமையே இதுதான் எனும்போது உழைக்கும் வர்க்கத்தின் துயரம் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. மண்ணெண்ணெய் இல்லாததால் சிங்கள மீனவர்கள் படகுகளை இயக்க முடியாமல்; வருமானம் இல்லாமல் பட்டினியில் வாடுகின்றனர். பெட்ரோல், டீசல், எரிவாயு வாங்க நீண்ட வரிசையில் நின்ற பலர் மாண்டு விட்டனர். பட்டினிச் சாவுகள், தற்கொலைகள் பெருகிவிட்டன. ஆனால் ஆளும் வர்க்கக் கட்சிகளை (ஆளும் கட்சி, எதிர்க்கட்சி) சேர்ந்த அரசியல்வாதிகள், அமைச்சர்கள், சிங்கள ஆளும் தரகு வர்க்க கட்சிகளை அண்டிப்பிழைக்கும் பாராளுமன்றவாத தமிழ்த் தேசிய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் பெரும் தரகு முதலாளிகளின் வீடுகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் மின்வெட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து அவர்களுக்கு மட்டும் உத்தரவாதப்படுத்தப் பட்டுள்ளது.

 

கடந்த சில ஆண்டுகளாகவே நீடித்து வந்த பொருளாதார மந்த நிலை குறித்து எவ்வித அக்கறையும் காட்டாமல், நெருக்கடியே இல்லை என்று மறுத்து வந்த கோத்தபயா ஆட்சி, 2021 செப்டம்பர் மாதம் தான் பொருளாதார எமர்ஜென்சியை அறிவித்தது. தமது ஏகாதிபத்திய ஆதரவு அரசியல் பொருளாதார கொள்கைகளால் உருவான நெருக்கடியை மூடி மறைத்துவிட்டு கோவிட் பொதுமுடக்கம்தான் நெருக்கடிக்குக் காரணம் என கோத்தபயா ராஜபக்சே கும்பல் கூறிவருகிறது. அண்மையில் நாடு திவால் நிலைக்குச் சென்று விட்டதை ஒப்புக் கொள்ளும் விதமாக அந்நிய கடன்களை தற்போது கட்ட முடியாது (Default) என்று அறிவித்துள்ளது.

 

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு காரணங்கள் என்ன?

 

இலங்கை பொருளாதார நெருக்கடி என்பது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சீனா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் ஏகபோக நலன்களையும், சிங்கள ஆளும் தரகு வர்க்க முதலாளிகள் நலன்களையும் பாதுகாக்கும் புதிய காலனிய அரசியல் பொருளாதார கொள்கைகளால் உருவான முதலாளித்துவ நெருக்கடி ஆகும். ஆகவே நெருக்கடிக்கான காரணங்களாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்:

 

1. அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் நலன்களுக்கான புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தியது;

2. புலிகளின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்காக இலங்கை பொருளாதாரம் இராணுவ பொருளாதாரமாக மாற்றியமைக்கப்பட்டது;

3. 2000ம் ஆண்டுகளுக்குப் பிறகு சீன நிதி மூலதனத்தை உள்கட்டமைப்பு, வேளாண்மை, வர்த்தகம் மற்றும் ஜவுளி துறைகளில் அனுமதித்தது;

4. நியூயார்க் பங்குச் சந்தை, ஜப்பான் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேச மூலதனச் சந்தையின் கடன் பொறியிலும், சீனாவின் கடன் பொறியிலும் சிக்கியது;

 

மேற்கூறிய காரணங்கள் தனித்தனியான நிகழ்வு போக்குகள் அல்ல. அவற்றிற்குள் நெருக்கமான வலைப்பின்னலைப் போன்று நிகழ்வு போக்குகளின் பிணைப்பு உள்ளது. அதாவது ஏகாதிபத்திய சிலந்தி வலையின் பற்பல முடிச்சுகளில் இலங்கை பொருளாதாரம் சிக்கியுள்ளது எனலாம். இந்த நெருக்கடியை இலங்கை மட்டுமல்லாமல் பாகிஸ்தான், இந்தியா, நேபாளம் மற்றும் வெனிசுலா உள்ளிட்ட அனைத்து புதிய காலனிய, அரைக் காலனிய, ஒடுக்கப்பட்ட நாடுகளும் எதிர்நோக்கியுள்ளன. இந்தப் பொதுப் போக்கின் அபாயச் சங்காகவே இலங்கை நெருக்கடியைக் காண வேண்டியுள்ளது.

 

சமூகநல பொருளாதாரத்திலிருந்து அமெரிக்க நலன்களுக்கான சந்தை பொருளாதாரத்திற்கு இலங்கை மாறுதல்

 

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இலங்கையின் உற்பத்தி முறையானது ஐரோப்பியச் சந்தை நலன்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டது. தேயிலை, ரப்பர் உற்பத்தியை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அறிமுகப்படுத்தியது. இந்த பின்தங்கிய உற்பத்தி முறை இலங்கை மீதான அமெரிக்காவின் புதிய காலனிய கட்டத்திலும் தொடர்ந்து இன்றுவரை நீடிக்கிறது. சுயேச்சையான உள்நாட்டு தேவைகளுக்கான உற்பத்தியை ஏகாதிபத்திய நாடுகள் அனுமதிக்கவில்லை. ஆகவே இலங்கை தனது அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான தேவையை அந்நிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது. உணவு தானியங்கள், பருப்பு வகைகள், பால் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு இன்றுவரை அந்நிய நாடுகளையே நம்பியுள்ளது. இதுவே நெருக்கடிக்கான ஆணிவேராக உள்ளது. இது இலங்கை மட்டுமல்லாது இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து புதிய காலனிய நாடுகளும் எதிர்நோக்கி வரும் பிரச்சனை ஆகும்.

 

1950களின் பிற்பகுதிகளில், பிற புதிய காலனிய நாடுகளைப் போலவே இலங்கையிலும் சமூகநல அரசு கோட்பாட்டிலிருந்து இலங்கை பொருளாதாரம் சற்று மாற்றி அமைக்கப்பட்டது. இலவச கல்வி மற்றும் மருத்துவம், பொதுவிநியோக திட்டம் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன. 1970களில் சமூகநல அரசு கொள்கைகளை தூக்கியெறிந்து சந்தை பொருளாதாரத்தை (தாராளமயமாக்கல்) ஏகாதிபத்திய நாடுகள் அறிமுகப்படுத்தின. அதன் ஒரு பகுதியாகவே, தெற்காசியாவில் முதன்முதலாக இலங்கையில் 1977ல் தாராளமயமாக்கல் கொள்கையை ஜெயவர்தனே அரசு அமல்படுத்தியது. இதன்பொருட்டு ஐ.எம்.எப். (IMF) எனப்படும் சர்வதேச நாணய நிதியத்திடம் மூன்று தவணைகளில் முறையே 1977-78,  1979-82, மற்றும் 1983-84ம் ஆண்டுகளில் பெரும் தொகையைக் கடனாகப் பெற்றது. இது இலங்கை மீதான அமெரிக்காவின் புதிய காலனியத்தை மேலும் இறுக்கியது. வேளாண்மை, தொலைத்தொடர்பு மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்டத் துறைகளில் அமெரிக்க மூலதனம் அனுமதிக்கப்பட்டது.  கடனுக்கு மாற்றீடாக ஐ.எம்.எப்.பின் நிபந்தனைகளான பரிவர்த்தனை விகிதத்தில் தாராளமயமாக்கல்; விலை கட்டுப்பாடுகளை நீக்குதல்; உணவு மானியங்களை வெட்டுதல்; சம்பள வெட்டு; அந்நிய நிதி மூலதனத்திற்கான கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டு தனியார்மயம் - தாராளமயம் - வணிகமயத்தை ஊக்குவித்தல் போன்றவற்றை ஜெயவர்தனே அரசு அமல்படுத்தியது.  1970 - 77 ஆண்டுகளில் தொடங்கிய வருமான ஏற்றத்தாழ்வு அதன் பிறகு அதிகரிக்கத் தொடங்கியது. 40 சதவீத அடித்தட்டு மக்களின் வருமானம் 1973ல் 19.3% சதமாக இருந்தது; அது 1981-82ல் 15.3% குறைந்தது. மொத்த செலவினத்தில் சமூக நலத் திட்டங்களுக்கான செலவினம் 33%லிருந்து (1977) 22%மாக (1983) குறைக்கப்பட்டது. சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 13% சதவீதமாக வீழ்ந்தது. 20% சத அடித்தட்டு மக்களின் தினசரி தனிநபர் கலோரி உட்கொள்ளும் அளவானது 1500 கலோரியிலிருந்து (1978-79), 1370 கலோரியாக குறைந்தது (1981-82). ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாடு 6.1% சதவீதத்திலிருந்து 9.4% சதவீதமாக உயர்ந்தது. 5-14 வயதிற்கிடையிலான மாணவர்களின் கல்வி அறிவு பெறும் விகிதம் 88% சதவீதத்திலிருந்து 86% சதவீதமாகக் குறைந்தது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் இடைநிற்றல் 12.2% சதவீதத்திலிருந்து 13.5% சதவீதமாக உயர்ந்தது.

 

ஜெயவர்தனே அரசு அமல்படுத்திய புதிய பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட நெருக்கடியின் சுமைகள் சிங்கள மக்கள் மீது சுமத்தப்பட்டன. சிங்கள மக்கள் ஆளும் ஜெயவர்தனே அரசிற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டனர். சிங்கள மக்களின் கோபத்தை தமிழ்மக்கள் மீது திருப்பும் பொருட்டும் சிங்களப் பேரினவாத பாசிசத்தை ஜெயவர்தனே அரசு கட்டியமைத்தது. தமிழ் சிறுபான்மை தேசிய இனத்தின் மீது ஏவப்பட்ட சிங்களப் பேரினவாத பாசிச ஒடுக்குமுறைக்கு எதிர்வினையாக புலிகள் அமைப்பு தோற்றம் பெற்றது. புலிகளின் தலைமையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் முன்னுக்கு வந்தது. தமிழ் இன ஒடுக்குமுறையைத் தனது அரசியல் அடித்தளமாக சிங்கள ஆளும் வர்க்கங்கள் மாற்றியமைத்தன. இது மட்டுமன்றி புதிய பொருளாதாரக் கொள்கையை எதிர்த்த இடதுசாரி இயக்கங்கள், தொழிற்சங்கங்கள் கடுமையாக நசுக்கப்பட்டன. பாராளுமன்ற முறையை தூக்கியெறிந்து 'நிறைவேற்று அதிகாரம்' (executive power)  கொண்ட ஜனாதிபதி முறை (Presidential system) எனும் பாசிச முறை அமல்படுத்தப்பட்டது. "யானை தனது தும்பிக்கையை மட்டுமே அசைத்து உள்ளது; இன்னும் அது தனது முழு பலத்தையும் பயன்படுத்தவில்லை" என்று ஜெயவர்தனே (அவரது கட்சியின் சின்னம் - யானை)  கொக்கரித்தார்.

 

தாராளமயமாக்கலுக்கெதிரான போராட்டங்களை நசுக்குவதற்கு ஜெயவர்தனே கும்பல் 1980ல் எமர்ஜென்சி ஆட்சியைக் கொண்டு வந்தது. கருப்பு ஜூலை (1983) கலவரத்தை ஜெயவர்தனே அரசு கட்டி அமைத்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கு இலங்கை பொருளாதாரம் ராணுவ பொருளாதாரமாக மாற்றியமைக்கப்பட்டது. 1983ல் துவங்கி இன்று வரை புலிகளை அழிப்பதற்கும்; தமிழீழ மக்களைக் கொன்று குவிப்பதற்கும்; வடக்கு - கிழக்குப் பகுதிகளில் இராணுவ மயமாக்கல் - சிங்கள மயமாக்கலை தொடர்ந்து நிலை நிறுத்துவதற்கும் (6 தமிழர்களுக்கு ஒரு இராணுவ வீரர்), சிங்கள ஆளும் வர்க்கங்கள் சுமார் 200 பில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளது. இன்றைய தேதியில் இலங்கையின் அந்நியக் கடன் இதில் நான்கில் ஒரு பகுதிதான் (51 பில்லியன் டாலர்) என்பது குறிப்பிடத்தக்கது. 1983ல் துவங்கி 2008 இறுதியுத்தக் காலம் வரையிலும் ராணுவ பொருளாதாரத்தை ஈடு கட்ட பற்றாக்குறை பட்ஜெட்டுகளையே இலங்கை ஆளும் வர்க்கங்கள் தாக்கல் செய்து வந்தன. 1980-90களில் ஐ.எம்.எப். பிடம் வாங்கிய கடன்கள் மூலம் இலங்கை அரசு தனது நாட்டுச் சந்தையை அமெரிக்காவிற்கு திறந்து விட்டது மட்டுமின்றி, அந்த நிதியைக் கொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்கும் பயன்படுத்தியது. அமெரிக்கா புலிகள் அமைப்பை ஒடுக்குவதற்கு ஏராளமான இராணுவ உதவிகளையும் செய்தது. ராணுவப் பயிற்சி, தளவாடங்கள், தொழில்நுட்ப உதவி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சிறப்புப் பயிற்சி போன்றவற்றை அமெரிக்காவின் பசிபிக் கமாண்ட் (United States Pacific Command) வழங்கியது. க்ளஸ்டர் (Cluster) வெடிகுண்டுகள், SLNS சமுத்திரா போர்க்கப்பல், கேபிர் (Kefir) மற்றும் எம்ஐ-24 போன்ற நவீன ரக போர் விமானங்களையும் அமெரிக்கா வழங்கியது. அமெரிக்காவுடன் இணைந்து இந்திய ஆளும் வர்க்கங்களும் தமது விஸ்தரிப்புவாத நலன்களிலிருந்து இலங்கை சந்தையைக் கைப்பற்ற தமிழ் இன ஒடுக்குமுறைக்குத் துணை போயின; ஏராளமான பொருளாதார - இராணுவ உதவிகளை வழங்கத் துவங்கின. திரிகோணமலையில் அமெரிக்கா இராணுவம் தளம் அமைக்கவும் இலங்கை அனுமதி அளித்தது. அமெரிக்கா இந்தியாவுடனான வர்த்தக உறவுகளால் இலங்கையின் உற்பத்தி வளர்ச்சி தடுக்கப்பட்டு அந்நாட்டில் தொடர் வர்த்தகப் பற்றாக்குறை நிலவி வந்தது.

 

2008 இறுதி யுத்தத்திற்கு பிறகு, 2009ம் ஆண்டு யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட இலங்கைப் பொருளாதாரத்தை மீட்பது எனும் பெயரில் ஐ.எம்.எப். இலங்கைக்கு கடன் தந்தது. மகிந்த ராஜபக்சே கும்பல் ஐ.எம்.எப். விதித்த நிபந்தனைகளை ஏற்று (உதாரணமாக 2011க்குள் ஜிடிபியை 5% சதமாக கட்டுப்படுத்த வேண்டும், அந்நிய முதலீட்டை உயர்த்த வேண்டும்) சுமார் 2.6 பில்லியன் டாலர்கள் கடனாகப் பெற்றது. ஆகவே மாற்றுப் பொருளாதார நடவடிக்கைகளை பக்சேவால் எடுக்க முடியவில்லை. 2016ல் அமெரிக்க எடுபிடி மைத்ரிபாலா ஸ்ரீசேனா ஆட்சி மீண்டும் ஐ.எம்.எப்.பிடமே 1.5 பில்லியன் டாலர்களை ஜிடிபி 3.5% சதமாக கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் கடனாகப் பெற்றது. இதன் காரணமாகவும், சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை காரணமாகவும் 2015ல் 5% சதமாக இருந்த ஜிடிபி 2019ல் 2.9% சதமாகவும், முதலீட்டு விகிதம் 31.2% சதத்திலிருந்து 26.8% சதமாகவும், சேமிப்பு விகிதம் 28.8% சதத்திலிருந்து 24.6% சதமாகவும், அரசின் வருவாய் ஜிடிபியில் 14%லிருந்து 12.6% சதமாகவும் குறைந்தது. கடன் ஜிடிபியில் 70%லிருந்து 88% சதமாக உயர்ந்தது.

 

 சீனாவின் புதிய காலனியாதிக்கம்

 

2005-06ம் ஆண்டுகளில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் துவங்கிய பொருளாதார மந்தநிலை 2008ஆம் ஆண்டு உலக முதலாளித்துவ நெருக்கடியாகப் பரிணமித்தது. அக்காலகட்டத்தில் இலங்கை, இந்தியா போன்ற காலனிய நாடுகளில் அமெரிக்காவின் அந்நிய மூலதனம் குறைந்தது மட்டுமின்றி, ஏற்கனவே இருந்த முதலீடுகளும் வெளியேறத் துவங்கின. இதே காலகட்டத்தில் அமெரிக்காவிற்குப் போட்டியாக உருவான சீனா-ரஷ்யா நாடுகள் தலைமையிலான ஷாங்காய் கூட்டமைப்பு அமெரிக்காவின் பலவீனமான பொருளாதார நிலைமைகளைப் பயன்படுத்திக்கொண்டு இலங்கை உள்ளிட்ட புதிய காலனிய நாடுகளில் முதலீடுகள் செய்யத் துவங்கின. 2005 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ராஜபக்சே கும்பல் சீனா-ரஷ்யாவுடனான உறவுகளைப் பலப்படுத்தத் துவங்கியது. அமெரிக்கா தனது பொருளாதார நெருக்கடி காரணமாக இராணுவ உதவிகளைக் குறைத்துக் கொண்டதால், சீனா-ரஷ்யாவிடமிருந்து அதிகளவு ராணுவ உதவிகளைப் பெற்று புலிகள் தலைமையிலான தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ராஜபக்சே கும்பல் நசுக்கியது. சீனாவுடனான இலங்கையின் உறவு அமெரிக்காவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதால் ராஜபக்சே அரசின் மீது மனித உரிமை மீறல் பிரச்சனைகளை (இனப்படு கொலை என்றுக் கூறத் தயாரில்லை) ஐ.நா. சபையில் கிளப்பி 2007ல் அமெரிக்கா ஆயுத உதவிகளை நிறுத்திக் கொண்டது. ராஜபக்சே கும்பல் சீனாவிடமிருந்து இராணுவ உதவிகளைப் பெறுவதற்கான 'இலங்கை - சீன ராணுவ ஒப்பந்தம்' ஒன்றில் 2007இல் கையெழுத்திட்டது. இது மட்டுமின்றி சீனாவுடனான வர்த்தக உறவுகளையும் அதிகரித்துக் கொண்டது. உள்கட்டமைப்பு, ஜவுளித் துறைகளில் சீனாவின் மூலதனத்தை அனுமதித்தது. எனவே ஏற்கனவே நிலவிவந்த வர்த்தகப் பற்றாக்குறை மேலும் அதிகரித்து அந்நிய செலாவணி கையிருப்பு வற்றத் துவங்கியது. நெருக்கடியைச் சமாளிக்க 2007 முதல் சர்வதேச பங்குச் சந்தையில் தன்னாட்சி பத்திரங்கள் (International Sovereign Bond) மூலமும், ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்தும், சீனாவிடமிருந்தும் அதிகளவு கடன் பெறத் துவங்கியது.

 

ஏப்ரல் 2007ல் புலிகள் தலைமையிலான விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கு இலங்கை சீனாவிடமிருந்து 37.6 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான இராணுவத் தளவாடங்களைப் பெற்றது. மிகவும் அதிநவீன முப்பரிமாண ரேடார் கருவிகளை (3D Radars) இலங்கைக்கு சீனா வழங்கியது; மட்டுமின்றி எப்-7 போர் விமானங்களையும் (F-7 Fighter Jets) வழங்கியது. சிங்களப் பேரினவாத பாசிச பக்சே கும்பல் இலங்கையின் இராணுவ துருப்புகளின் எண்ணிக்கையை 1,16,000லிருந்து 1,80,000 வரை பலப்படுத்தியது. சீனாவுடன் ரஷ்யாவும் இணைந்து சிங்கள ராணுவத்திற்கு ராணுவ பயிற்சிகளை அளித்தது. ரசியா 300 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களையும், 17 வகை போர் விமானம், பீரங்கிகள் மற்றும் இராணுவ வாகனங்களையும், 158.5 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான விரைவு போர்க் கப்பல்களையும் ராஜபக்சே அரசுக்கு வழங்கியது. சீனா ஒரு பில்லியன் டாலருக்கும் மேலான மதிப்பில் இராணுவ உதவிகளைச் செய்தது. சீனா வழங்கிய முப்பரிமாண ரேடார்கள், எப்-7 ஜெட் விமானங்களைக் கொண்டு விடுதலைப் புலிகளின் முக்கியமான மூன்று விமான தளங்களை ராஜபக்சே அரசு அழித்தது. சீனா, ரஷ்யா மட்டுமின்றி இந்தியாவும் இராணுவ உதவிகளைச் செய்தே வந்தது. அமெரிக்கா தனது பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும், சீன இலங்கை உறவுகள் பலப்பட்டதன் காரணமாகவுமே இராணுவ உதவியை 2007-இல் நிறுத்தியது. அமெரிக்காவுடன் ஐரோப்பிய யூனியனும் இணைந்து இதே காரணங்களால் ஐநாவில் மனித உரிமை மீறல் பிரச்சினைகளைக் கிளப்பி இலங்கை அரசை பணிய வைக்க முயன்றன. ஐநாவில் ரஷ்யாவும் சீனாவும் தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அவற்றைத் தடுத்து ராஜபக்சே கும்பலைக் காப்பாற்றின. பாகிஸ்தான், வெனிசுலா, கியூபா போன்ற ரசிய-சீன எடுபிடி நாடுகளும் ராஜபக்சே கும்பலுக்கு ஆதரவாக வாக்களித்தன.

 

2008 இறுதி யுத்தத்தில், புலிகள் அமைப்பை மொத்தமாக அழித்தொழிக்கவும், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யவும் சீனாவும், ரசியாவும் ராஜபக்சே கும்பலுக்கு அனைத்து இராணுவ உதவிகளையும் செய்தன. இந்திய அமைதிப்படையில் இராணுவ உளவுப் பிரிவின் தலைவராகப் பதவி வகித்த ஆர். ஹரிஹரன் "விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதற்கு சீனா விலைமதிப்பற்ற இராணுவ உதவிகளை இலங்கை அரசுக்குச் செய்துள்ளது" என்று யுத்தம் முடிந்த பிறகு தெரிவித்தார். இலங்கை இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் (Spokeperson) உதயா நானயக்கரா (Udaya Nanayakkara) "கடந்த 3 ஆண்டுகளில் சீனாதான் எமக்கு அதிகளவு இரானுவ உதவிகளைச் செய்தது" என்று 2009-ல் யுத்தம் முடிந்த பிறகு தெரிவித்தார். ராஜபக்சே கும்பலும் இந்தியாவின் உதவிகளை (மன்மோகன் - சோனியா கும்பலின் உதவிகளை) புகழ்ந்து பேசியது. யுத்தம் முடிந்த பிறகு அதாவது புலிகள் அமைப்பின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் போராட்டம் கருவறுக்கப்பட்ட பிறகு, அமெரிக்கா ராஜபக்சே அரசைப் பணிய வைக்கும் பொருட்டு, மீண்டும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வந்த மனித உரிமை மீறல் - ஜெனிவா தீர்மானங்களை சீனா - ரசியா நாடுகள் வீட்டோ அதிகாரத்தின் மூலம் முறியடித்தன. வெனிசுலா, கியூபா போன்ற நாடுகள் சீனா-ரசியாவின் பக்கம் நின்று மாபெரும் இனப்படுகொலை செய்த போர்க் குற்றவாளிகளான ராஜபக்சே கும்பலை காப்பாற்றின. அதற்கு நன்றிக் கடனாகவே இலங்கையை சீனாவிற்கு ராஜபக்சே கும்பல் திறந்துவிட்டது. தெற்காசிய பிராந்தியத்தில் இராணுவம் மற்றும் கடல்வழி வர்த்தகத் துறைகளில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தீவாகத் திகழும் இலங்கை சீனாவிற்கு மிகவும் அவசியமாக தேவைப்பட்டது. அதற்காகவே ராஜபக்சே கும்பலுக்கு அனைத்து உதவிகளையும் செய்தது. இவ்வாறாக, அமெரிக்க - இந்தியா மற்றும் சீனா - ரசியாவின் செல்வாக்கு மண்டலங்களுக்கான போட்டிக்களமாக, வேட்டைக்காடாக இலங்கையை சிங்கள ஆளும் வர்க்கங்கள் மாற்றியமைத்தன. இன்றைய பொருளாதார நெருக்கடிக்கான மையமான காரணம் இதுவே ஆகும்.

 

சீனா,

1) கடுவட்டிக்கு கடன் தருவது;

2) உள்கட்டமைப்பு திட்டங்களுக்குக் கடன் தருவதன் மூலம் அவற்றைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவது;

3) ஜவுளி துறை, வேளாண்மைத் துறையைத் தனது மூலதனத்தை சார்ந்து இயங்குமாறு மாற்றியமைப்பது;

4) வர்த்தக துறையில் ஆதிக்கம் செலுத்துவது;

 

போன்ற புதிய காலனிய முறைகளின் மூலம் இலங்கையைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதன் பொருள் அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதல்ல. மாறாக அமெரிக்கா, சீனா இரண்டின் புதிய காலனியாகவும் இலங்கை நீடித்து வருகிறது என்பதே.

 

அமெரிக்காவின் புதிய காலனியாதிக்கத்தின் கீழ் சூறையாடப்பட்ட இலங்கை, சீனாவின் புதிய காலனியாதிக்கத்தால் 2000ம் ஆண்டுகளுக்குப் பிறகு (குறிப்பாக 2005க்குப் பிறகு) மேலும் சூறையாடப்பட்டது. 1980 - 2008 ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இலங்கை தனது மொத்த தேசிய உற்பத்தியில் 40% வரை இராணுவத்திற்கு செலவிட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் இலங்கையின் அந்நியக் கடன் மொத்த தேசிய உற்பத்தியில் 50% சதத்திற்கும் மேல் இருந்துள்ளது. அமெரிக்காவுடனான இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறை எதிர்மறை மதிப்புகளில் 1985ல் -209 மில்லியன் டாலர்களாகவும், 1995-ல் -980.6 மில்லியன் டாலர்களாகவும், 2005-ல் -1,885.3 மில்லியன் டாலர்களாகவும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தது. அதாவது இறக்குமதி அதிகரித்து ஏற்றுமதி குறைந்து கொண்டே சென்றதால் வர்த்தகப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.

 

இந்திய தரகு முதலாளிகள் இலங்கையின் தேயிலைத் தொழில், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகள், தொலைத் தொடர்புத் துறைகளில் முதலீடு செய்து வருகின்றனர். ஒன்றுப்பட்ட இலங்கையின் சந்தை நலன்களிலிருந்துதான் ராஜீவ் அரசு அமைதிப்படையை அனுப்பி தமிழீழ மக்கள் மீது ஒடுக்குமுறையை நிகழ்த்தியது. புலிகளிடம் படுத்தோல்வி அடைந்து அமைதிப்படை   பின்வாங்கி ஓடியது. இந்தியாவுடன் இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FDA 1998) மூலம் வர்த்தகம் செய்து வருகிறது. ஆயத்த ஆடைகள், மோட்டார் வாகனம், மின்னாற்றல் சாதனங்கள், பெட்ரோல், டீசல் போன்றவற்றை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்கிறது. டாட்டா நிறுவனம் தேயிலைத் துறையிலும், ரிலையன்ஸ் எண்ணெய், எரிவாயுத் துறையிலும் முதலீடு செய்து வருகின்றன.  இந்தியாவுடனான இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறை 1999ல் (மைனஸ்)-463 மில்லியன் டாலர்களாகவும், 2005ல் (மைனஸ்)-879 மில்லியன் டாலர்களாகவும் 2010 (மைனஸ்)-2074 மில்லியன் டாலர்களாகவும், 2020ல் (மைனஸ்)-2404 மில்லியன் டாலர்களாகவும் இருந்தது.  

 

அமெரிக்கா, இந்தியாவுடனான இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறை இலங்கை - சீன வர்த்தக உறவுகளால் மேலும் அதிகரித்தது.

 

2007-ம் ஆண்டு ராஜபக்சே சீனாவிற்கு சென்ற பொழுது சீனாவுடன் இரண்டு இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். 1) பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை (Economical and Technical Co-operation agreement) 2) சீனாவின் குவாங்யூ மற்றும் இலங்கையின் ஹம்பந்தோடா நகரங்களுக்கு இடையிலான நட்புறவு நகர உடன்படிக்கை (Friendship City relationship agreement). இவை தவிர சீனாவின் கட்டுமான அமைச்சகம், வர்த்தக அமைச்சகம், ஒலிபரப்பு அமைச்சகம், செஞ்சிலுவைச் சங்கம், வேளாண் அறிவியல் கழகம் மற்றும் அயல்நாட்டுக் கல்விக்கான பல்கலைக் கழங்கள் போன்ற நிறுவனங்களுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ராஜபக்சே கையெழுத்திட்டார்.

 

இலங்கை - சீன வர்த்தக உறவுகள்:

 

ராஜபக்சே அரசு சீனாவுடன் கையெழுத்திட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் இலங்கையின் வர்த்தக பற்றாக்குறையை மேலும் அதிகரித்தது. இறுதி யுத்த காலத்திற்குப் பிறகு 2009 - 2012 வரை சற்றே அந்நிய முதலீடும், உள்நாட்டு உற்பத்தியும் அதிகரித்தன. ஆனால் 2012க்குப் பிறகு ஜி.டி.பி சரியத் தொடங்கியது. இதற்குக் காரணம், இலங்கையில் உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்பட்டு அதிகளவு வருமானம் ஈட்டிய ஜவுளித்துறை, ரப்பர் உற்பத்தியை முடக்கும் விதமாக சீனாவிலிருந்து ஆயத்த ஆடைகள், ரப்பர் முதலியவற்றை ராஜபக்சே அரசு இறக்குமதி செய்யத் துவங்கியது. மட்டுமின்றி, ஜவுளி (Textiles) மற்றும் ஆயத்த ஆடைகள் (Garments, Readymades) உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களான துணி நார் (Fibre), துணி வகைகள் (Fabric), சாயப்பொருட்கள் (dyes), போன்றவற்றை இந்தியாவை விட விலை குறைவாக சீனா தர முன்வந்ததால் இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு சீனாவிடமிருந்து இறக்குமதி செய்ய துவங்கியது இலங்கை. நாட்டின் மொத்த வருமானத்தில் 45% வரை வருமானம் ஈட்டிய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை தொழில்கள் நசிந்து உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. ஏற்கனவே வேளாண்துறையில் அமெரிக்காவின் மூலதனம், இரசாயன உரங்கள், இடுபொருட்கள் இறக்குமதி மூலம் ஆதிக்கம் செலுத்தி வந்தது.  வேளாண்துறையில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை குறைக்க சீனாவின் இயற்கை வேளாண்மைத் திட்டத்திற்குச் (Organic farming) சேவை செய்யும் வகையில், சீனாவிடமிருந்து இயற்கை உரங்கள், இடுபொருட்களை இலங்கை அரசு இறக்குமதி செய்யத் துவங்கியது. இதனால் வேளாண் உற்பத்தி வீழ்ச்சியடையத் துவங்கியது. 2012ல் ஜி.டி.பி. 9.1% சதமாக இருந்தது. அதன் பிறகு 2013ல் 3.39%, 2014ல் 4.49%, 2015-16ல் 3.5%, 2017ல் 3.0%, 2018ல் 3.2%, 2019ல் 2.2%, 2020ல் (மைனஸ்) -3.5% என்ற விகிதங்களில் வீழ்ச்சியடைந்தது.

 

மேலும், சீனாவிலிருந்து மின் ஆற்றல் (electrical) மற்றும் மின்னணு சாதனங்கள் (Electronics), எந்திரங்கள், அணு உலைகள், கொதிகலன்கள், இரும்பு, பருத்தி, வேளாண்மைக்கு தேவையான பூச்சிக் கொல்லி மருந்துகள், இயற்கை உரங்கள், மோட்டார் வாகனம், மருத்துவ உபகரணங்கள், மருந்துப் பொருட்கள், எண்ணெய், உள்ளிட்ட பல பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. சீனாவிற்கு இலங்கையின் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரித்தது. 2000ம் ஆண்டில் இலங்கையின் மொத்த இறக்குமதியில் சீனாவின் பங்கு 3.5% சதமாக இருந்தது; 2017-ம் ஆண்டு 20% சதமாக உயர்ந்தது. ஆனால் இலங்கை சீனாவிற்கு ஏற்றுமதி செய்த விகிதம் 4 மடங்கு  சுமார் 25% சதமாக குறைந்தது. இந்த வர்த்தகப் பற்றாக்குறை அந்நிய செலாவணி கையிருப்பை உறிஞ்சத் துவங்கியது. சீனப் பொருட்களைச் சீனாவின் யென் நாணய மதிப்பில் வாங்க வேண்டியிருந்ததால் இலங்கை ரூபாய் மதிப்பிழந்து பண வீக்கம் அதிகமானது. அமெரிக்காவுடனான வர்த்தகப் பற்றாக் குறைக்கும் டாலர் வர்த்தகமே காரணமாக இருந்தது. 2005-ல் வர்த்தகப் பற்றாக்குறை ஜி.டி.பி யில் 2.5% சதமாக இருந்தது; ஆனால் 2018-ல் அது ஜி.டி.பி யில் 4.44% சதமாக உயர்ந்துவிட்டது. 2017-18ல் மொத்த வர்த்தகப் பற்றாக்குறையில் சீனாவின் பங்கு 40% சதம் ஆகும். அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், யு.ஏ.இ (UAE) போன்ற நாடுகள் மீதமுள்ள 60% சத வர்த்தகப் பற்றாக்குறைக்கு காரணமாக இருந்தன. 2000ம் ஆண்டு துவங்கி 2015 வரை சீனாவிற்கு இலங்கை செய்த ஏற்றுமதியின் மதிப்பு 115.25 மில்லியன் டாலர்களை தாண்டவில்லை. 2000ம் ஆண்டு 39% சதமாக இருந்த ஜி.டி.பி - ஏற்றுமதி விகிதம் 2017ம் ஆண்டு 20% சதமாகக் குறைந்துவிட்டது. ஆனால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதிப்பு 2000ம் ஆண்டில் சுமார்  (மைனஸ்)-800 மில்லியன் டாலர்களாக இருந்தது; 2015ம் ஆண்டில் அதன் மதிப்பு (மைனஸ்)-2463.71 டாலர்களாக உயர்ந்தது. ஆகவே சீனாவுடன் வர்த்தக பற்றாக்குறை 2000ம் ஆண்டில் (மைனஸ்)-300 மில்லியன் டாலர்களாக இருந்ததது; அது 2015ம் ஆண்டில் (மைனஸ்)-2348.46 மில்லியன் டாலர்களாக அதிகரித்தது. அமெரிக்கா, சீனா, இந்தியாவுடனான இந்த வர்த்தகப் பற்றாக்குறையே இன்றைய நெருக்கடிக்கு முக்கிய காரணமாக மாறியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் (2018-22) இந்தியா, அமெரிக்காவுடனான வர்த்தக உறவு பலவீனமடைந்து, சீனாவுடனான வர்த்தக உறவு பலமடைந்து முதல் நிலைக்கு வந்துள்ளது.  அதாவது சீனாவுடனான இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறை 60% க்கு மேல் உயர்ந்துள்ளது. அமெரிக்கா இந்தியாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை 40% சதமாக குறைந்துள்ளது.

 

உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் சீனாவின் ஆதிக்கம்

 

சீன ஏகாதிபத்தியம் உலக மேலாதிக்க நலன்களுக்காக 2013-ல் ஒரு இணைப்பு ஒரு சாலை(BRI) திட்டத்தை துவங்கியது. சீனாவின் சந்தையை உலக நாடுகளுடன் தரைவழி (ரயில்வே, சாலை), கடல்வழி மற்றும் வான்வழியாக இத்திட்டம் இணைக்கிறது. துறைமுகங்கள், விமானநிலையங்கள், ரயில் நிலையங்கள், எட்டுவழிச்சாலைகள் போன்றவற்றை நிறுவி தொழில் மற்றும் வர்த்தக இணைப்பு முனையங்களை உருவாக்கி இணைத்து வருகிறது. இது மூன்று திட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

1) சாலைகள் வழியாக ஆசியாவில் உள்ள 90% நாடுகளை சீனாவுடன் இணைக்கும் பட்டுச்சாலை பொருளாதார இணைப்புத் திட்டம் (Silk Road Economic Belt project)

2) கிழக்கு ஆசியாவிலிருந்து மேற்காசியா வழியாக ஆப்பிரிக்க நாடுகளைக் கடந்து ஐரோப்பிய நாடுகளையும் சீனாவுடன் கடல் போக்குவரத்து மூலம் இணைக்கும் கடல்வழி பட்டுச் சாலை திட்டம் (Maritime silk road project)

3) ரசியா வழியாக ஆர்க்டிக் கடல் பகுதியில் இருக்கும் நாடுகளை சீனாவுடன் இணைக்கும் பனி பட்டுச்சாலை திட்டம் (Ice silk road project)

 

இதில் கடல்வழி பட்டுச்சாலை திட்டத்தின் அங்கமாக, இந்தியப் பெருங்கடலின் முத்து நகரம் (Pearl City) என்று அழைக்கப்படும் இலங்கையில் ஹம்பந்தோடா துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரம் எனப்படும் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற இரு முக்கியமான திட்டங்களை சீனா துவக்கியது. இதன் மூலம் இலங்கையை மையமாக கொண்டு "முத்துகள் இணைப்பு" திட்டத்தை (String of pearls) நிறைவேற்றுவதும் சீனாவின் நோக்கம் ஆகும். பாகிஸ்தானில் க்வாடர் (Gwadar) துறைமுகம், பங்களாதேஷில் சிட்டகாங் துறைமுக முனையம், மியான்மரில் சீட்வி (Sitwe) துறைமுகம், இலங்கையில் ஹம்பந்தோடா துறைமுகம், மாலத்தீவில் மராவோ (Maravo) துறைமுகம் போன்ற கடல் வர்த்தக மையங்களை நிறுவி அவற்றை இணைப்பதே 'முத்துகள் இணைப்பு' திட்டமாகும். இதன் மூலம் இந்தியப் பெருங்கடல், தென்சீனக் கடலில் கடல் வழிகளை உருவாக்கி தனது பாதுகாப்பு மற்றும் வர்த்தக நலன்களைப் பாதுகாத்து தெற்காசிய மேலாதிக்கத்தை நிறுவுவதை சீனா விரும்புகிறது. ஏற்கனவே தென் சீனக் கடல் வழியாக நடக்கும் எண்ணெய் வர்த்தகமானது (சுமார் 80%), மலாக்கா நீர்முனையை அமெரிக்கா ஆதரவு சிங்கப்பூர் அரசு அடிக்கடி மூடிவிடுவதால் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த  "முத்துகள் இணைப்பு" திட்டத்தை முக்கியமான மாற்று திட்டமாக சீனா கருதுகிறது. இந்நாடுகளுக்கு தங்கப்பத்திரங்கள் மூலம் அதிக வட்டிக்கு கடன் தந்து, குறுகிய கால தவணைகளில் திருப்பிச் செலுத்துமாறு நிர்ப்பந்தித்து, கடன் கட்ட முடியாத நிலைமைக்குத் தள்ளி இந்த துறைமுகங்களைத் தானே கைப்பற்றிக் கொண்டது சீனா.

 

தெற்காசிய மேலாதிக்கத்திற்கான கேந்திர மையமாக இலங்கையை மாற்றும் பொருட்டு, மேற்கூறிய யுத்ததந்திர, வர்த்தக நலன்களைப் பாதுகாப்பதற்காக சீனா இலங்கையில் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. 2008 லிருந்து அமெரிக்கா, ஜப்பான், இந்தியாவின் முதலீடுகள் குறையத் துவங்கி சீனாவின் முதலீடுகள் (FDI) அதிகரிக்க துவங்கியது. சீன ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக ராஜபக்சே கும்பல் மாறியதன் விளைவே இது. 2007ல் கையெழுத்திட்ட பொருளாதார ஒப்பந்தத்தை நிறைவேற்ற ராஜபக்சே கும்பல் இலங்கை - சீன வர்த்தக ஒத்துழைப்பு கழகத்தை உருவாக்கியது. குறைந்தது 25 மில்லியன் டாலர் மதிப்பில் முதலீடு செய்யும் எந்தவொரு சீன முதலாளியும் இலங்கையை 2-வது வீடாக கருதிக் கொள்ளும் வகையில் 'இரண்டாவது இல்ல கடவுச்சீட்டு'(Second Home passport) வசதியை ராஜபக்சே கும்பல் ஏற்படுத்தித் தந்தது. 2010 -2014ம் ஆண்டுகளில் சீனா இலங்கையில் முதலீடு செய்யும் முதல் நாடாகத் திகழ்ந்தது. உதாரணமாக, 2010 -14ம் ஆண்டுக் கால கட்டத்தில் சீனாவின் முதலீடு 828 மில்லியன் டாலர்களாகவும், பிரிட்டனின் முதலீடு  542 மில்லியன் டாலர்களாகவும், அமெரிக்காவின் முதலீடு 190 மில்லியன் டாலர்களாகவும் இருந்தது. முன்பு கூறியவாறு ஜி.டி.பி 2012-ல் லிருந்து வீழ்ச்சியடையத் துவங்கியதை இத்துடன் இணைத்துக் காண வேண்டியுள்ளது. 2013-ல் 3.39% சதமாக வீழ்ச்சியடையத் துவங்கிய ஜி.டி.பி 2020-ல் -3.5% (மைனஸ்) சதமாக வீழ்ந்தது. இதே காலகட்டத்தில் சீனாவிடமிருந்து பெற்ற அன்னியக் கடன் மொத்தக் கடனில் 37.2% சதம் இருந்தது. ஐ.எம்.எப், ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து பெற்ற கடன் 15.8% சதமாக இருந்தது.

 

பின்வரும் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் அந்நிய முதலீட்டில் சீனா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

 

1) நோரோச் சோலை (Norochcholai) ஆற்றல் நிலையம் (1400 மில்லியன் டாலர்)

2) மிரிகமாவில் (Mirigama) சிறப்புப் பொருளாதார மண்டலம் (28 மில்லியன் டாலர்)

3) உயர்நீதிமன்ற வளாகம் (3.58 மில்லியன் டாலர்)

4) கொழும்பு - கதுநாயக விரைவுச்சாலை (248.2 மில்லியன் டாலர்)

5) தாமரை கோபுரம் (30 மில்லியன் டாலர்)

6) மத்தாளா சர்வதேச விமான நிலையம் (210 மில்லியன் டாலர்)

7) போலோன்நருவா (Polonnaruwa) நீர் விநியோகம் மற்றும் சுகாதாரத் திட்டம் (32.93 மில்லியன் டாலர்)

8) ஹம்பந்தோடா துறைமுக திட்டம் (461 பில்லியன் டாலர்)

9) மொரகஹகன்டா (Moragahakanda) நீர்த்தேக்கத் திட்டம் (370 மில்லியன் டாலர்)

 

இவற்றில் ஹம்பந்தோடா துறைமுகத்தில் சீனாவின் முதலீடு சுமார் 2.6 பில்லியன் டாலர் அளவிற்கு தற்போது உயர்ந்துள்ளது. இத்திட்டங்களை அடுத்து கொழும்பு துறைமுக நகர் திட்டம் சுமார் 14 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் துவங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. ஆக இன்றைய தேதியில் இலங்கையில் முதலீடு செய்யும் நாடுகளில் சீனா முதல் இடத்தில் உள்ளது. மேற்கூறிய திட்டங்கள் ராஜபக்சே ஆட்சியில் துவங்கப்பட்ட திட்டங்களாகும். இதுதவிர தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு பகுதியிலும் சுரங்கத் திட்டம், எட்டுவழிச்சாலை திட்டத்தையும் சீனா அமல்படுத்தி வருகிறது.

 

2009-ம் ஆண்டு மகிந்த ராஜபக்சே தனது சொந்த தொகுதியான ஹம்பந்தோடாவில் துறைமுகம், விமானநிலையங்களை துவங்க (சீன முதலீட்டில்) அடிக்கல் நாட்டினார். 2014-ல் கொழும்பு துறைமுக நகர் திட்டத்தை துவக்கினார். இவ்விரு திட்டங்களையும் அமெரிக்க-இந்திய ஆதரவு ரணில் விக்ரம் சிங்கே , ஸ்ரீசேனா உள்ளிட்ட ஆளும் வர்க்க கட்சிகள் எதிர்த்தன. இவ்விரு திட்டங்களும் சீனாவின் ஒரு இணைப்பு ஒரு சாலை திட்டத்தின் அங்கமாக இருந்ததால் அவற்றில் அமெரிக்காவும் இந்தியாவும் முதலீடு செய்ய விரும்பவில்லை. எனவே தமது எடுபிடிகள் மூலம் இத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட அமெரிக்கா விரும்பியது. ராஜபக்சே கும்பல் பெரும்பான்மை பலத்தில் ஆட்சி செய்ததால் இத்திட்டங்கள் துவக்கப்பட்டன.

 

2010ம் ஆண்டில் 361 மில்லியன் டாலர் தொகையை தொடக்க மூலதனமாக கொண்டு துவங்கப்பட்ட ஹம்பந்தோட்டா துறைமுக திட்டத்திற்கு சீனாவின் எக்சிம் (Exim) வங்கியானது 85% பணத்தை அதாவது 306 மில்லியன் டாலரை 6.5% சத வட்டிக்கு கடனாக வழங்கியது. 2012க்குப் பின்னர் இரு தவணைகளாக 300, 600 மில்லியன் டாலர்களை கடனாக தந்தது. 2015ல் ராஜபக்சே கும்பல் தேர்தலில் தோல்வி அடைந்து ரணில் விக்ரம் சிங்கே - ஸ்ரீ சேனா கும்பல் ஆட்சிக்கு வந்தது. 2017ம் ஆண்டு நாட்டின் ஜி.டி.பியில் அந்நியக் கடன் 50% இருந்தது. எனவே சீனாவின் கடனை கட்டமுடியாமல் சீனாவின் கார்ப்பரேட் நிறுவனமான சீனா மெர்ச்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் (China Merchants Port Holdings) என்ற நிறுவனத்திடம் 1.6 பில்லியன் டாலர்களைப் பெற்றுக்கொண்டு ஹம்பந்தோட்டா துறைமுகத்தையும் அதைச் சுற்றியுள்ள 15,000 ஏக்கர் நிலபரப்பையும் 99 ஆண்டுகளுக்கு ரணில் அரசு சீனாவிற்கே குத்தகைக்கு விட்டது. ஆசிய-ஐரோப்பிய சர்வதேச கடல் வர்த்தகத்தின் வர்த்தக மையமாக இலங்கையை மாற்றும் பொருட்டு, ஹம்பந்தோட்டா துறைமுகத்தை சர்வதேச துறைமுகமாக கட்டமைக்கும் சீனாவின் தெற்காசிய மேலாதிக்க திட்டத்திற்கு இலங்கை ஆளும் வர்க்கங்கள் இலங்கையை இவ்வாறு கூறுபோட்டு விற்றுவிட்டன. வர்த்தகப் பற்றாக்குறையை போக்கவும், வாங்கிய கடன்களை அடைக்கவும் துவங்குவதாக சொல்லப்பட்ட இத்திட்டத்தால் கிடைத்த வர்த்தக மற்றும் பொருளாதார பலன்களை சீனாவே அனுபவித்து வருகிறது. எனவே இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கவே செய்தது. இத் துறைமுகம் வழியாக ஆண்டிற்கு 36000 வர்த்தக கப்பல்கள் (4500 எண்ணெய் டாங்கிகளையும் சேர்த்து) பயணிக்கின்றன. மேலும் 3 நாட்கள் கடல் பயணம் மற்றும் எரிபொருள் (முந்தைய வழிகளான சூயஸ் கால்வாய், மலாக்கா நீர்முனையை விட) மிச்சமாகிறது. இதன்மூலம் கடல் வர்த்தகம் 136% அதிகரித்தாலும் சீனாவிற்கே அதன் பலன் சென்று சேர்கிறது. மேலும் ஹம்பந்தோட்டாவில் தனது இராணுவ தளத்தையும் (Naval base) நிறுவியுள்ளது சீனா.

 

அடுத்து, ராஜபக்சே -ஜிங்பிங் கையெழுத்திட்டு துவக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர் (சிறப்பு பொருளாதார மண்டலம்) திட்டம் ரணில் விக்ரம் சிங்கே ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் 2019ல் ஆட்சிக்கு வந்த கோத்தபய ராஜபக்சே கும்பல் மீண்டும் இத்திட்டத்தை செயல்படுத்த துவங்கியது. 14 பில்லியன் டாலர் மதிப்பிலான இத்திட்டத்தை சீனா 1.4 பில்லியன் டாலரை தொடக்க மூலதனமாகக் கொண்டு துவங்கியது. இலங்கையின் தலைநகரமான கொழும்புவின் கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில், 269 ஹெக்டேர் (660 ஏக்கர்) நிலப்பரப்பை மீட்டமைத்து (land reclamation - அதாவது கடலை நிலமாக்கி) அதில் வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள், வங்கிகள், பங்குச்சந்தை நிறுவனங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள் போன்றவற்றை உள்ளடக்கி ஒரு பிரம்மாண்டமான சிறப்பு பொருளாதார மண்டலத்தை (SEZ) நிறுவ சீனா திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் 2040ல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனத் துறைமுகப் பொறியமைப்பு நிறுவனம் (China Harbour Engineering Company - CHEC) எனும் சீன நிறுவனம் இந்த நிலமீட்டமைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. "இந்த சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்தால் ஆண்டிற்கு 11 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும்; இலங்கையின் கடன்கள் அடைக்கப்பட்டு நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்கும்; துபாய், சிங்கப்பூர், ஹாங்காங் போல தெற்காசியாவின் மாபெரும் வணிக நகரமாக இலங்கை மாறி ஒரு இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும்" என்றெல்லாம் கோத்தபய அரசு வாய்ச்சவடால் அடித்து இதற்கு அனுமதி அளித்தது. ஆனால் இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் (இந்தியாவில் செயல்படும் மண்டலம் போல) இலங்கையின் அரசியல் சட்டம் செல்லுபடியாகாத, சீனாவின் அரசியல் சட்டத்திற்குட்பட்டு செயல்படும் காலனியப் பிரதேசமாக- செல்வாக்கு மண்டலமாகவே இருக்கும்.

 

ஏற்கனவே நிலவி வந்த பொருளாதார நெருக்கடி கோவிட் முடக்கத்திற்கு பிறகு அதிகமானதால், நெருக்கடியை (ஜி.டி.பியில் 80% கடன்) காரணம் காட்டி, சீனாவின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து பக்சே கும்பல் இத்திட்டத்தையும் சீனாவிற்கே தாரை வார்க்க முடிவெடுத்தது. அதற்காக மார்ச்-2021ல் 'கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைய மசோதா'வை பாராளுமன்றத்தில் கோத்தபய ராஜபக்சே கொண்டு வந்தார். ரணில் உள்ளிட்ட எதிர் கட்சிகள் இதற்கு பொது வாக்கெடுப்பு கோரின. அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு உச்ச நீதிமன்றத்தால் சரிபார்க்கப்பட வேண்டும். உச்சநீதி மன்றம் 1. பொது வாக்கெடுப்பு 2. மசோதாவிலுள்ள சில குறைகளை திருத்தி மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் சட்டமாக்கலாம் என்ற இரண்டு பரிந்துரைகளை முன்வைத்தது. கோத்தபயா இரண்டாவது பரிந்துரையை ஏற்று பெரும்பான்மையுடன் (149/225) மசோதாவை மேமாதம் சட்டமாக்கினார். இச்சட்டத்தின்படி 'கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணையம்' நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் தலைவராக உள்ள அதிபர், இதன் உறுப்பினர்களாக சீன முதலாளிகளை அனுமதிக்கவும், கொழும்பு துறைமுக நகரில் சீனாவின் யென் (Yen) நாணயமே புழக்கத்தில் இருக்கவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது. இலங்கை அரசியலமைப்பின் மிக முக்கியமான 25 சட்டப்பிரிவுகளிலிருந்து இந்த ஆணையத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதுடன் நாடாளுமன்றத்தால் இந்த ஆணையத்தை கேள்வி கேட்க முடியாது. இந்த துறைமுக நகருக்குள் இலங்கை குடிமகன் ஒருவர் செல்வதற்கு விசாவை ஒத்த சிறப்பு அடையாள அட்டை இந்த ஆணையத்திடம் பெற வேண்டும் எனவும், அவர் அங்கு சென்று வர கட்டணம் நிர்ணயிக்கப்படவுள்ளதாகவும் இலங்கை சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த திட்டத்தை கடன் நெருக்கடியை காரணம் காட்டி 2020ல் (ஜிடிபியில் 80% சதம் கடனாக இருந்தது) குத்தகைக்கு கோரியது சீனா. பக்சே கும்பலும் 99 ஆண்டுகளுக்கு கொழும்பு துறைமுக நகர் திட்டத்தை சீனாவிற்கே தாரை வார்த்துவிட்டது.

 

இவ்வாறு, வர்த்தகப்பற்றாக்குறையால் உருவான அந்நியச் செலாவணி பற்றாக்குறையை தீர்க்கும் பொருட்டு, சீனாவின் அந்நிய முதலீட்டை மேற்கூறிய உள்கட்டமைப்பு திட்டங்களில் அனுமதிப்பதாக கூறி சிங்கள ஆளும் வர்க்கங்கள் நெருக்கடியை மேலும் ஆழப்படுத்திவிட்டன. அந்நியச் செலாவனியை உயர்த்த சீனா, சர்வதேச பங்குச்சந்தை மற்றும் ஐ.எம்.எப் பிடம் மேலும் கடன் வாங்கி நாட்டை திவாலாக்கின.

'கடன்பொறியில்' இலங்கை

 

முதலாளித்துவ பத்திரிக்கைகளும், திருத்தல்வாதிகளும் இலங்கை நெருக்கடியை வெறும் 'கடன்' பிரச்சனையாக சுருக்குகின்றன. அமெரிக்கா, சீனாவின் ஏகாதிபத்திய நிதிமூலதன ஆதிக்கம் அந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை அழித்ததால் உருவான வர்த்தகப்பற்றாக்குறைதான் அந்நியச் செலாவணி நெருக்கடியை ஏற்படுத்தியது எனவும், இதை ஈடுகட்டவே கடன் பெற்று நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ளது எனவும் பேச மறுக்கின்றன. இலங்கை பொருளாதார நெருக்கடி என்பது, ஏகாதிபத்திய நாடுகள் உருவாக்கிய முதலாளித்துவ மிகு உற்பத்தி நெருக்கடியே.  

ஐ.எம்.எப், உலக வங்கியிடம் கடன் வாங்கும் இலங்கை அரசின் கடன் கொள்கை, 2000ம் ஆண்டுகளுக்குப் பிறகு குறிப்பாக 2007ம் ஆண்டிலிருந்து ராஜபக்சே கும்பல் ஆட்சி காலத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அமெரிக்கா, ஐரோப்பிய ஆதிக்கத்தை தவிர்ப்பதற்காக ஐ.எம்.எப் பிடம் கடன் வாங்குவதை குறைத்து, சீனா மற்றும் சர்வதேச பங்குச்சந்தையிடம் கடன் பெற ராஜபக்சே ஆட்சி துவங்கியது. அதன் மூலம் ஐ.எம்.எப், உலக வங்கி கடன்களை அடைக்க துவங்கியது.

 

சர்வதேச மூலதனச் சந்தையில் கடன் பத்திரங்கள் மூலம் (சர்வதேச தன்னாட்சி பத்திரம் – International soverign bonds) இலங்கை 2007முதல் கடன் பெற துவங்கியது. மொத்தக் கடனில் 2.5% சதமாக இருந்த இந்த கடன் மதிப்பு 2019ல் 56% சதமாக உயர்ந்துள்ளது. 2019க்குப் பிறகு இந்த முறையில் இலங்கை அரசு கடன் பெறவில்லை. இந்த சர்வதேச மூலதனச் சந்தை என்பது அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ரசியா மற்றும் சீனா உள்ளிட்ட ஏகாதிபத்திய ஊகமூலதன கும்பல்களின் பங்குச்சந்தையை குறிக்கிறது. ஐ.எம்.எப்., உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்கள் அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளின் ஏகபோக நலன்களுக்குச் சேவை செய்யும் வகையில் பல்வேறு நிபந்தனைகளுடன் ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு (அதிக வட்டி விகிதத்தில் 2-4% வரை, திருப்பிச் செலுத்தும் காலம் 15-20 ஆண்டுகள் வரை) கடன் தந்து அந்நாடுகளை அவற்றின் சந்தையாக மாற்றுகின்றன. ஆகவே இதை தவிர்க்கவே இலங்கை போன்ற நாடுகள் சர்வதேச ஊகமூலதன கும்பல்களின் சந்தையில் கடன் பெறுகின்றன. இவற்றில் ஐ.எம்.எப்.பை விட அதிக வட்டி விதிக்கப்பட்டாலும் (6-8% வரை) திருப்பிச் செலுத்தும் காலம் (ஆண்டிற்கு 5-10 ஆண்டும் வரை) குறைவாக இருந்தாலும், வாங்கிய கடனை சுதந்திரமாக பயன்படுத்தும் வசதி இருப்பதால் ஒடுக்கப்பட்ட நாடுகள் அதிகளவில் இச்சந்தையில் கடன் பெறுகின்றன. இதில் நிதி தன்னாட்சி உரிமை இருப்பதால் இதற்காக வழங்கப்படும் கடன் பத்திரம் தன்னாட்சி பத்திரங்கள் எனப்படுகின்றன.  மேலும் எவ்வித நிபந்தனையும் (அதாவது ஐ.எம்.எப். நிபந்தனைகளைப் போன்று) அவை விதிப்பதில்லை. கந்துவட்டி நிறுவனத்திடம் கடன் வாங்குவதைப் போன்றதுதான் இது. அதாவது, ஏகாதிபத்திய நாடுகளிலுள்ள ஊகவணிக முதலாளிகளிடம் கடன் பத்திரங்கள் மூலம் நேரடியாக கடன் வாங்கும் முறையாகும். நாட்டிலுள்ள சொத்துகள், வருங்கால வைப்புநிதி, ஓய்வூதிய கையிருப்பு போன்றவற்றை அடமானம் வைக்கும் விதத்தில் கடன் பத்திரங்கள் தந்து இவ்வகை கடன்கள் பெறப்படுகின்றன. ஆனால், ஆண்டுதோறும் கடன் முதிர்வுத் தொகையும், வட்டித் தொகையும் கட்டி நாடு திவாலாக நேரிடும். கடன் கட்ட தவறும்போது வருங்கால வைப்புநிதி, ஓய்வூதிய கையிருப்புகளிலிருந்து கடன் பிடித்தம் செய்யப்படும். இவ்வாறுதான் இலங்கை கடன் பெற்று விழிபிதுங்கி நிற்கிறது. சர்வதேச மூலதனச் சந்தைக்கு இலங்கை ஆண்டுதோறும் 6.5 - 7 பில்லியன் டாலர் வரை கடன் முதிர்வு தொகையும் வட்டியும் கட்ட வேண்டியுள்ளது.  உற்பத்தி வீழ்ச்சியால் உருவான வர்த்தகப் பற்றாக்குறையை அனுமதித்துக் கொண்டே இவ்வாறு கடன் பெறுவது மிகவும் ஆபத்தானது என ராஜபக்சே கும்பல் உணரவில்லை. தற்போதுள்ள மொத்த அந்நியக் கடனில் (51பில்லியன் டாலர்) இதன் பங்கு 56% ஆகும். ஏற்றுமதியும் குறைந்து கொண்டே போக, இறக்குமதி செய்ய வேண்டிய அத்தியாவசியப் பொருட்களை வாங்க பணம் இல்லாமல் இவ்வாறு கடன் வாங்குவதாக கூறியது. இதனால் அந்நியச் செலாவணி பற்றாக்குறை மேலும் அதிகமடைந்தது. காரணம், வாங்கிய கடனில் பெருமளவு சுருட்டிக் கொண்டு வயிறு வளர்த்ததால் ஒரு கட்டத்தில் கடன் முதிர்வு, வட்டி செலுத்தவே மேலும் மேலும் கடன் வாங்க வேண்டியிருந்தது. அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்யவும் கூட நிதி கையிருப்பு வற்றியது. எனவே நிதி நெருக்கடியைச் சமாளிக்க 2018லிருந்து சீனாவிடம் கடன் பெற துவங்கியது.

 

உலக வங்கி, ஐ.எம்.எப். நிறுவனங்களுக்குப் போட்டியாக, சீனா ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியை (AIIB – Asian Infrastructure Investment Bank) துவக்கியது. இது சீனாவின் 'உலக வங்கி' என்று அழைக்கப்படுகிறது. 4 - 6% வட்டி விகிதத்தில் குறுகிய கால திருப்பிச் செலுத்தும் கால அளவுகளில் (3-8 ஆண்டுகள்) கடன் தந்து ஒடுக்கப்பட்ட நாடுகளை திவாலாக்குகின்றது சீனா. இந்த வங்கியுடன் சீன வளர்ச்சி வங்கி (CDB – China Development Bank), மக்கள் சீன வங்கியும் (PCB – Peoples China Bank) இணைந்து ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு கடன் தந்து வருகின்றன.

 

சர்வதேச மூலதனச் சந்தையில் வாங்கிய கடனை அடைக்கவும், அந்நியச் செலாவணியை உயர்த்தவும் சீனாவிடமிருந்து இலங்கை 2018முதல் கடன் பெற்றது. 2018ல் சீன வளர்ச்சி வங்கியிடமிருந்து 'அந்நிய கடன் வசதி' எனப்படும் எப்.சி.டி.எப்.எப். முறை மூலம் (FCTFF – Foreign Currency Term financing facility) 1 பில்லியன் டாலர் மதிப்பில் கடன் பெற்றது. இதே முறையில் 2019-20ல் 500 மில்லியன் டாலர் மதிப்பில் கடன் பெற்றது. அதே ஆண்டு மக்கள் சீன வங்கியிடம் 1.5 பில்லியன் டாலர் கடன் பெற்றது. 2018ல் வாங்கிய கடனை சரிப்படுத்த இந்த கடன் வாங்கப்படுவதாக இலங்கை அரசு கூறியது. 2021ம் ஆண்டு இதே கடன் முறையில் 2 தவணைகள் கடன் பெற்றது. ஏப்ரல் 2021-ல் 500 மில்லியன் டாலரும், ஆகஸ்ட் 2021ல் 2பில்லியன் யென் (yen) மதிப்பிலும்  கடன் பெற்றது. யென் மதிப்பில் பெற்ற கடன்களை கொண்டு டாலரில் பெற்ற கடன்களை முழுவதும் அடைக்க முடியவில்லை. காரணம் டாலருக்கும் யென்னுக்கும் இடையிலான நாணய மதிப்பிலிருந்த வேறுபாடு மட்டுமின்றி இவற்றுடனான இலங்கை ரூபாய் மதிப்பும் பணவீக்கம் காரணமாக பணமதிப்பிழப்பு அடைந்து வந்ததது.  இந்த கடன் மூலம் அந்நியச் செலாவணியை உயர்த்த முடியவில்லை. கடன், வட்டி இரண்டும் சேர்த்து சீனாவிற்கு தர வேண்டிய கடன் 8 பில்லியன் டாலர்களாக இன்று உயர்ந்துள்ளது. மொத்தக் கடன் 51பில்லியன் டாலரில் 14% ஆக (2017ல்) இருந்த சீனக் கடன் இன்று 20% வரை உயர்ந்துவிட்டது. இது தவிர ஆசிய வளர்ச்சி வங்கியிடம் வாங்கியுள்ள கடன் மதிப்பு மொத்தக் கடனில் 24% சதமாக உயர்ந்துள்ளது.

 

2019ல் ஆட்சிக்கு வந்த ராஜபக்சே கும்பலின் பொருளாதார நடவடிக்கைகள்

 

ராஜபக்சே கும்பல் ஆட்சிக்கு வந்ததும் பொருளாதார நெருக்கடி பற்றிய அக்கறையின்றி மேலும் பொறுப்பற்று செயல்பட்டது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு வாட் வரிவிகிதக் குறைப்பு போன்ற சலுகைகளை வழங்கியது. வாட் வரி (VAT) விகிதம் 15%லிருந்து 8% ஆக குறைக்கப்பட்டது. மேலும் தேசிய வளர்ச்சி வரி, வருவாய் பெறும்போதே வரி செலுத்தும் திட்டம், பொருளாதார சேவைகளுக்கான வரி ஆகியவற்றை மொத்தமாக இரத்து செய்தது. இதன் மூலம் நடுத்தர வர்க்கம், மேல் நடுத்தர வர்க்கம் சில சலுகைகளைப் பெற்றாலும் கார்ப்பரேட்டுகள்தான் அதிகளவில் பயன் பெற்றனர்.   இதனால் ஜிடிபியில் 2% வருவாய் இழப்பு ஏற்பட்டது. தவிர ஜிஎஸ்டி வரி வருவாயும் 2020ல் பாதியாக குறைந்துவிட்டது. 2019 ஏப்ரல் மாதம் ஈஸ்டர் குண்டு வெடிப்பால் 269 பேர் கொல்லப்பட்டதையடுத்து முக்கிய வருவாய் ஈட்டிய சுற்றுலாவும் முடங்கியது. சுற்றுலா மூலம் ஆண்டுதோறும் 4 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டி வந்தது. இந்த வருவாயும் குறைந்து விட்டது. கோவிட் பொது முடக்கத்திற்கு பிறகு நெருக்கடி ஆழப்பட்டது. மொத்த ஜிடிபியில் கோவிட் நிவாரணத்திற்கு 2% வரை செலவிட வேண்டியிருந்தது. ஜிடிபியில் கடன் தொகை 2019ல் 94% ஆக இருந்தது; 2020ல் 119% ஆக உயர்ந்தது. கோவிட் பொதுமுடக்கம்தான் நெருக்கடிக்கு காரணமென ராஜபக்சே கும்பல் கூறுவது மோசடியான பொய்ப்பிரச்சாரம் என்பது பற்றி முன்பே பார்த்தோம். உண்மையில், கோவிட் பொதுமுடக்கம் இலங்கை பொருளாதார நெருக்கடியை அம்பலப்படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

 

ஏற்கனவே, வேளாண் துறையில் சீனாவின் இயற்கை உரங்களை பயன்படுத்தி வந்த இலங்கை அரசு 2021ம் ஆண்டு மே மாதம் வேளாண் துறை முழுவதிலும் சீனாவின் உரங்களை மட்டுமே பயன்படுத்துவது என்று முடிவெடுத்தது. அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் ரசாயன உரங்களுக்கு ஆகும் செலவான 26 கோடி டாலர்களை மிச்சப்படுத்தி அந்நியச் செலாவணியை அதிகப்படுத்தவும், சீனாவின் நிர்ப்பந்தங்களுக்கு பணிந்தும் இரசாயன உர இறக்குமதியை முற்றிலும் ராஜபக்சே அரசு தடை செய்தது. இயற்கை வேளாண்மைக்கு ஒரே நாளில் மாற வேண்டுமென்ற ராஜபக்சே அரசின் முடிவு அறிவியலற்ற முடிவு என வேளாண் விஞ்ஞானிகள் கூறியதையும் ராஜபக்சே அரசு பொருட்படுத்தவில்லை. ஒரே நாளில் வேளாண்மைத் துறை இனி சீனாவிடமிருந்து இறக்குமதி செய்யும் இயற்கை உரங்கள் மூலம் இயற்கை வேளாண்மைக்கு மாறுவதற்கான உத்தரவை  ராஜபக்சே அரசு பிறப்பித்தது. இதை வந்தனா சிவா போன்றவர்கள் ஆதரித்தார்கள். சீனாவின் குயிங்டோ சீவின் பயோ டெக் (Quingdo seawin Biotech) நிறுவனத்திடமிருந்து 99000 டன் இயற்கை உரங்கள் இறக்குமதி செய்ய சீனாவுடன் ஒப்பந்தம் போட்டது. முதல் கட்டமாக 20000 டன்கள் இறக்குமதி செய்ய 6.7மில்லியன் டாலர்களை அந்நிறுவனத்திற்கு வழங்கியது. சீனாவின் உரத்தில் எர்வீனியா (Erwinia) என்ற நச்சுத் தன்மை வாய்ந்த பாக்டீரியா கலந்துள்ளதாக இலங்கையின் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்தது. இது தவறான தகவல் என சீனா அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளது. பிறகு இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டாலும் அது வேளாண்துறை உற்பத்தியை முற்றிலுமாக முடக்கிவிட்டது. நெல் சாகுபடி 25%, தேயிலை 35%, தென்னைச் சாகுபடி 30% அளவுகளில் உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. ஜவுளித்துறைக்குப் பிறகு தேயிலை தொழில் அதிக வருவாய் ஈட்டி வந்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே ஜிடிபி எதிர்மறையில் அதாவது -16% என்றளவில் 2022ல் வீழ்ந்துபோனதால், இறக்குமதியை அதிகப்படுத்த வேண்டியிருந்தது. அந்நியச் செலாவணி வற்றிப் போனதால் இறக்குமதியும் செய்ய முடியவில்லை. இதனால் பணவீக்கம் நவம்பர் 2021ல் 11.10%, டிசம்பர் 2021ல் 14%, ஜனவரி22 ல் 16.8%, பிப்ரவரி22ல் 17.5% என உயர்ந்து கொண்டே சென்றது. இதனால் அத்தியாவசியப் பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை திவால் நிலைக்குச் சென்றுள்ளது.

 

கடந்த மார்ச் மாதம் நிதிநெருக்கடியை தீர்க்க ஐ.எம்.எப். உதவியை நாடலாம் என்று ரணில் கூறியதை ஏற்க மறுத்துவிட்டது பக்சே ஆட்சி. மீண்டும் அமெரிக்க மேலாதிக்கத்தின் கீழ் நாட்டைக் கொண்டு செல்ல முடியாது என்று பக்சே கும்பல் கூறியது. மேலும் ஸ்ரீசேனா - ரணில் ஆட்சியில் 2019ம் ஆண்டு, இலங்கை - ஜப்பான் - இந்திய முதலீட்டில் கொழும்பு துறைமுகத்தில் 'கிழக்கு சரக்குப் பெட்டக முனையம்' அமைக்கத் திட்டம் துவங்கப்பட்டது. அதையும் பக்சே கும்பல் ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்தது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா இலங்கை வர்த்தகப் பொருட்களுக்கு வழங்கி வந்த ஜி.எஸ்.பி (GSP) எனப்படும் பொது விருப்பத் தேர்வு ஒழுங்கமைப்பு வரிச் சலுகையை ரத்து செய்தது மட்டுமின்றி ஐரோப்பிய யூனியன் வழங்கி வந்த 66% சலுகையும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.

 

நெருக்கடி முற்றி போராட்டங்கள் வெடித்த பிறகு, சீனாவிடம் கடன் மற்றும் வட்டி முறையை மாற்றியமைக்க கோரியது பக்சே கும்பல். ஆனால் சீனா அதற்கு மறுத்துவிட்டது. அவசரக்கால கடனாக சுமார் 1.5 பில்லியன் டாலர் அளித்துள்ளதே தவிர கடன் முறையை மாற்றியமைக்க மறுத்துவிட்டது. இந்தியாவும் 1.5 பில்லியன் டாலர் மதிப்பில் கடன் தந்துள்ளது. இதற்குப் பதிலீடாக கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் சரக்கு பெட்டகத்தை அமைக்க அதானி குழுமத்துடன் பக்சே ஆட்சி ஒப்பந்தம் போட்டுள்ளது. சீனா உதவி செய்ய மறுத்துவிட்ட நிலையில் வேறு வழியின்றி மீண்டும் ஐ.எம்.எப்.பிடம் உதவி கோரியுள்ளது பக்சே ஆட்சி. ஆனால் ஐ.எம்.எப். அவசரக்கால கடன் உதவி (Bailout) வழங்க முந்தைய கடன்களை மறுசீரமைக்க நிபந்தனை விதித்துள்ளது. இலங்கை அரசு ஐ.எம்.எப். உதவியை நாடியதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நெருக்கடி நிலையிலும் கூட அமெரிக்காவும் சீனாவும் இலங்கையின் மீது தமது காலனியாதிக்கப் பிடியை மேலும் அதிகப்படுத்தவே போட்டியிடுகின்றன. திருத்தல்வாதிகள் சீனா-ரஷ்யாவின் பல்துருவ ஒழுங்கமைப்பு ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு அரை ஜனநாயகம், அரைக்கால் ஜனநாயகம் வழங்கும் என்று கூறி வருகின்றனர். 15 ஆண்டுகளுக்கும் மேலாக சீன மூலதனத்தை அனுமதித்த இலங்கையில் எந்த ஜனநாயகமும் உருவாகவில்லை. மாறாக, நெருக்கடி முற்றி பட்டினிச்சாவுகளும் தற்கொலைகளும்தான் பெருகியுள்ளது.

 

இன்றைய தேதியில், இலங்கையின் மொத்தக் கடன் 51 பில்லியன் டாலர்கள் ஆகும். இதில் ஆண்டுதோறும் சர்வதேச மூலதனச் சந்தை மற்றும் சீனாவிற்குச் செலுத்த வேண்டிய (கடன் முதிர்வு மற்றும் வட்டித் தொகை சேர்த்து) கடன் தொகை 6.5 முதல் 7 பில்லியன் டாலர்கள் ஆகும். இறக்குமதிக்கு 20பில்லியன் டாலர் தேவைப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தி - ஏற்றுமதி (கோவிட் பொதுமுடக்க நீக்கத்திற்குப் பிறகு) 2 - 3 பில்லியன் டாலர் மதிப்பில் மட்டுமே நடக்கிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு 1 பில்லியன் டாலருக்கும் கீழே வற்றிவிட்டது. இராணுவத்திற்கு ஆண்டுதோறும் 1.5 - 2 பில்லியன் டாலர்கள் செலவிடுகிறது. ஜிடிபியில் கடன் விகிதம் 119% ஆக உள்ளது. அதாவது வருவாயை விட 119% சதம் அதிகமாக கடன் உள்ளது. ஆகவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, உணவுப்பொருட்கள், மருந்துகள் போன்றவற்றைக் கூட இறக்குமதி செய்யமுடியாத நிலைமைகள் நீடிப்பதாலேயே பெருமளவில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. பக்சே ஆட்சி கடன் தொகை முழுவதையும் தற்காலிகமாகக் கட்டமுடியாது (Default) என அறிவித்துள்ளது. இதனால் முதலீடுகள் வெளியேறுவது மட்டுமின்றி புதிய முதலீடுகள் வருவதும் நின்றுவிடும். பக்சே கும்பல் நெருக்கடியை உற்பத்தி செய்த ஏகாதிபத்திய ஓநாய்களிடமே சரணடைந்து உதவி கேட்டு வருகிறது.

 

தொகுத்துக் கூறுவதெனில் நெருக்கடிக்கு காரணமாக,

 

அமெரிக்காவின் புதிய பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட நெருக்கடி; நெருக்கடியை எதிர்த்த போராட்டத்தை ஒடுக்கவும், தமிழின ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடவும் சிங்களப் பேரினவாத பாசிசம் கட்டியமைக்கப்படுதல்; புலிகள் தலைமையிலான தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் பொருட்டு இலங்கைப் பொருளாதாரம் இராணுவப் பொருளாதாரமாக மாற்றியமைக்கப்படுதல்; சீனாவின் புதிய காலனியாதிக்கத்திற்கு இலங்கை திறந்துவிடப்படுதல்; அமெரிக்க-இந்திய, சீன-ரசியாவின் செல்வாக்கு மண்டலங்கள்-மறுபங்கீட்டிற்கான போட்டிக் களமாக இலங்கை மாற்றப்படுதல்; அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை நெருக்கடியிலிருந்து மீள சர்வதேச ஊகமூலதனப் பங்குச் சந்தை மற்றும் சீனாவின் கடன் பொறியில் இலங்கை சிக்குதல்; கழுத்தை நெறிக்கும் கடன் தொகையால் அந்நியச் செலாவணி வற்றி அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்படுதல்; கோவிட்டிற்கு பிறகு நெருக்கடி தீவிரமடைதல்; வேளாண்துறையை சீனாவின் இயற்கை வேளாண்மை திட்டத்திற்காக சீரழித்தல்; முற்றிலும் திவால் அடைதல்; போன்றவற்றைக் கூறலாம்.

 

நெருக்கடிக்கு தீர்வு என்ன?

 

1. அநியாய அந்நியக் கடன்களை ரத்து செய்து ஒடுக்கப்பட்ட நாடுகளிடம் கடன் பெறுவது;

2. ரணில், ஸ்ரீசேனா, பக்சே கும்பல் மற்றும் தமிழின துரோக நாடாளுமன்றவாத தமிழ்த்தேசிய கட்சித் தலைவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்தல்;

3. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ரத்து செய்வது;

4. பயங்கரவாத தடைச் சட்டம் உள்ளிட்ட பாசிச சட்டங்களை ரத்து செய்வது;

5. பக்சே கும்பலின் எமர்ஜென்சி ஆட்சியை அகற்றுவது

 

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்துவதன் மூலம் உடனடி நிவாரணங்கள் பெறமுடியும். ஆனால் அமெரிக்க-சீனாவின் புதிய காலனியாதிக்கத்திற்குச் சேவை செய்யும் இலங்கை தரகு முதலாளிய வர்க்கங்களை தூக்கியெறிந்து அந்நிய நிதி மூலதனம் சாராத ஒரு சுதேசியப் பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதே நிரந்தர தீர்வாக இருக்கும்.

 

ஆனால் இலங்கையில் நடந்துவரும் போராட்டங்கள் ஊழல் மலிந்த கோத்தபயா - மகிந்த ராஜபக்சே கும்பலின் குடும்ப ஆட்சியை அகற்றுவது என்ற கோரிக்கைகளோடு நிற்கின்றன. இவற்றை பிற ஆளும் வர்க்க எதிர்க்கட்சிகள் பயன்படுத்தி ஆட்சியமைக்க முயன்று வருகின்றன. அமெரிக்க - இந்திய ஆதரவு ரணில் - ஸ்ரீசேனா கும்பலின் ஆட்சியானது, ரசிய-சீன ஆதரவு பக்சே கும்பலின் ஆட்சிக்கு மாற்றாக இருக்காது. ஏனெனில் இவ்விரு கட்சிகள்தான் இலங்கையை இரு ஏகாதிபத்திய நாடுகளின் வேட்டைக்காடாக மாற்றியமைத்தன. எனவே இலங்கை மக்கள் நடத்தி வரும் போராட்டங்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

 

இலங்கையில் உள்ள சிங்கள மக்களோடு, இசுலாமியர்கள், பௌத்த பிக்குகள் இணைந்து போராடுகின்றனர். இலங்கை வாழ் தமிழர்கள் குறைந்த அளவில்தான் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். வடக்கு - கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் ஈழத்து மக்கள், மலையகத் தமிழர்கள் இப்போராட்டங்களிலிருந்து விலகியே உள்ளனர். காரணம் கடந்த 15 ஆண்டுகளாகவே இந்த பொருளாதார நெருக்கடியில்தான் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் அவர்கள் இன ஒடுக்குமுறையையே பிரதானமாக கருதுகின்றனர். சிங்களர்களோடு தமிழர்கள் இணக்கமாக இணைந்து போராடும் சூழல் இன்னும் உருவாகவில்லை. தமிழினப் படுகொலையை நிகழ்த்திய ராஜபக்சே கும்பல் மற்றும் அதற்கு உதவிய அமெரிக்க-இந்திய, சீன - ரசிய நாடுகள் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டனை பெறாமல், இராணுவமயமாக்கல் - சிங்களமயமாக்கல் - பௌத்தமயமாக்கலை திரும்பபெறாமல், பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழ் ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாமல் தமிழர் - சிங்களர் ஒற்றுமை என்பது சாத்தியமே இல்லை. எனவே இதற்கான கோரிக்கைகள் சிங்கள மக்களிடையே தோன்ற வேண்டும். இலங்கையில் ஒரு தேசிய விடுதலை இயக்கமோ அல்லது பாட்டாளி வர்க்க இயக்கமோ உருவாகி தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்குக் குரல் கொடுக்கும்போதுதான், தமிழினப் படுகொலைக்கு நியாயம் கோரும்போதுதான் தமிழர்களிடமிருந்து ஒற்றுமைக்கான குரல் ஒலிக்கும். எனவே, சிங்கள மக்கள் பக்சே கும்பலின் ஆட்சி நீக்கத்திற்குப் போராடும் அதே வேளையில், தமிழின ஒடுக்குமுறைக்காக இலங்கைப் பொருளாதாரம் இராணுவப் பொருளாதாரமாக மாற்றியமைக்கப்பட்டதும் நிலவி வரும் நெருக்கடிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று என்பதை உணர வேண்டும். சிங்கள பௌத்த பேரினவாத பாசிசம் தமிழீழ மக்களுக்கு மட்டுமின்றி சிங்கள உழைக்கும் மக்களுக்கும் எதிரானதே என்பதை தற்போது வரலாறு நிரூபித்துவிட்டது. எனவே தமிழ் ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு சிங்கள மக்கள் குரல் கொடுக்க வேண்டியது இன்றைய போராட்ட வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதாகும். தமிழின ஒடுக்குமுறையை தனது அரசியல் அடித்தளமாக கொண்டு செயல்படும் இலங்கை ஆளும் வர்க்கங்களின் பாசிச ஆட்சியை வீழ்த்துவதற்கு அது ஒரு முக்கிய துவக்கப் புள்ளியாக அமையும்.

- சமரன்

(ஏப்ரல் -மே 2022 இதழில்)