தென் சீனக் கடல் : பனிப்போர் மற்றும் யுத்த தயாரிப்புகளின் குவிமையம்

"ஒரு உலக யுத்தத்தின் போது சர்வதேசியப் பாட்டாளி வர்க்கத்தின் செயல் தந்திரமானது அந்த யுத்தத்தை ஒரு உள்நாட்டு யுத்தமாக மாற்றுவதாக இருக்க வேண்டும். யுத்தம் பற்றிய பாட்டாளி வர்க்கத்தின் செயல் தந்திரமானது யுத்தத்தின் வர்க்கத் தன்மையால் தீர்மானிக்கப் படுகிறது" என்கிறது லெனினியம்

தென் சீனக் கடல் : பனிப்போர் மற்றும் யுத்த தயாரிப்புகளின் குவிமையம்

உலக பொருளாதார நெருக்கடி உலகின் எல்லா அடிப்படை முரண்பாடுகளையும் கூர்மையடைய செய்கிறது. 2008 ம் ஆண்டில் அமெரிக்காவில் வெளிப்பட்ட நெருக்கடி உலக முதலாளித்துவ அமைப்புகள் அனைத்திலும் பரவியது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பூர்ஷ்வா வரக்கம் பின்வருமாறு முயற்சி செய்யுமென்று ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்:

"இரண்டு திசை வழியில், மிகப்பிற்போக்கான பாசிச சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதின் மூலம், தங்களுடைய சொந்த நாட்டிலுள்ள பாட்டாளி வர்க்கத்தையும் இதர உழைப்பாளிகளையும் ஒடுக்குவது மற்றும் பாதுகாப்பு பலகீனமாக இருக்கும் நாடுகளின் செலவில் காலனிகளையும், செல்வாக்கு மண்டலங்களையும் மறுபங்கீடு செய்வதற்காக யுத்தத்தை தூண்டி விடுவதாலும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண்பதற்கு பூர்ஷ்வா வர்க்கம் முயற்சிக்கும்".

இந்த உலக மறுபங்கீட்டிற்கான போட்டியானது உலகில் இரண்டு கடல்களை மையம் கொண்டுள்ளது அவை கருங்கடல் மற்றும் தென் சீனக் கடல். இந்த இரண்டு மையங்களிலும் அமெரிக்க-நேட்டோ மற்றும்  சீன-ரஷ்ய ஏகாதிபத்திய முகாம்களின் பனிப்போர் மற்றும் யுத்த தயாரிப்புக்கான நிலைமைகளும் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதற்கான இராணுவ நடவடிக்கைகளும் உக்கிரமடைந்து வருகின்றன. அதன் ஒரு அங்கமாக நாம் இங்கு தென் சீனக் கடல் பகுதி குறித்து  பார்ப்போம்

தென் சீனக் கடல் பகுதி குறித்து 

தென் சீனக் கடல், மேற்கு பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாகும். இந்த கடலை சுற்றி  சீனா, தைவான், வியட்நாம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இந்த கடலுக்குள் சுமார் 250க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன அவை பாராசெல் தீவுகள் மற்றும் ஸ்பாராட்லி தீவுகள் (Paracel and Spratly Islands) என்று தொகுக்கப்பட்டுள்ளன. சுமார் 35லட்சம் சதுர கிமீ  பரப்பளவு கொண்ட இந்த கடலில்  ஆண்டிற்கு  5.3 ட்ரில்லியன் டாலர் அளவிற்கான வர்த்தகம் நடைபெறுகிறது (அதாவது உலக அளவில் கடல் சார் வர்த்தகங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்த கடலின் பரப்பிற்குள் மட்டும் நடைபெறுகிறது). இது உலகிலேயே அதிகம் பயன்படுத்தப்படும் இரண்டாவது கடல் வழியாகவும் உள்ளது. இதன் வழியாக ஆண்டுதோறும் 1கோடி பேரல்கள் அளவிற்கு  கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது.

மேலும் இந்த கடலின் பகுதியில் 2800 கோடி பேரல்கள் அளவிற்கு எண்ணெய் வளமும், 266 ட்ரில்லியன் கன அடி அளவிற்கு இயற்கை எரிவாயு வளமும், உலகின் 10% மீன் வளமும் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த கடல் பகுதி உலக புவிசார் அரசியலில் மிக முக்கியமான நீர்ப்பகுதியாகும்.  இந்த நீர் அமைப்பு உலகின் மொத்த கடல் பல்லுயிரியலில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது மேலும் கனிம வளங்களும் இந்த கடல் பகுதிகளில் கொட்டிக்கிடப்பதால் இந்த கடலை மையப்படுத்தி தெற்காசிய மேலாதிக்க முயற்சிகளும், யுத்த தயாரிப்புகளும் நடந்து வருகின்றன.

தென் சீனக் கடல் எல்லை மீதான உரிமைக் கோரல்கள்  

தென் சீனக் கடல் பகுதிகளின் மீது அதில் அமைந்துள்ள தீவுகள் மீது  சீனா, தைவான், வியட்நாம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், புருனே, ஆகிய நாடுகள் ஒவ்வொன்றும் எதிரெதிராக எல்லை உரிமைகளை கோருகின்றன. குறிப்பாக

1. நதுனா தீவுகளின் வடகிழக்கு கடல்பகுதி மீது இந்தோனேசியா, சீனா, மற்றும் தைவான்

2. மலம்பாயா மற்றும் கமாகோ எரிவாயு களம் (Gas Field) மீது பிலிப்பைன்ஸ், சீனா மற்றும் தைவான்

3. ஸ்கார்பரோ திட்டு குறித்து பிலிப்பைன்ஸ், சீனா மற்றும் தைவான்

4. ஸ்பிராட்லி தீவுகளின் மேற்கு கடல்பகுதி மீது வியட்நாம், சீனா மற்றும் தைவான்

5. பராசெல் தீவுகள் மீது சீனா, தைவான் மற்றும் வியட்நாம் இடையே

6. சில அல்லது அனைத்துத் தீவுகளுக்காகவும் வியட்நாம், சீனா, தைவான், புருனே, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கிடையே மோதல்கள் உண்டு.

7. தாய்லாந்து வளைகுடா பகுதிகள் மீது மலேசியா, கம்போடியா, தாய்லாந்து,வியட்நாம்

8. சிங்கப்பூர் நீரிணைப்பு, யோகோர் நீரிணைப்பு மீது சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும்

இவ்வாறாக ஒவ்வொன்றும் தென் சீனக் கடலை பங்கிட்டுக் கொள்வதில் போட்டிப் போடுகின்றன. இவை அனைத்திற்கும் மேலான ஒன்றாக தென்  சீனக் கடல் முழுவதற்கும் சீனா உரிமை கோருகிறது. (அதாவது, பரவளைய (Parabolic) வடிவிலான ஒன்பது புள்ளி எல்லைக்கோடு (9 dash line) என்பதை நிர்ணயித்து அதற்கு உள்ளடங்கிய கடல் பகுதி முழுவதற்கும் சீனா சொந்தம் கொண்டாடுகிறது. இதில் பிரதான அனைத்து தீவுகளும் அடங்கும்).  இந்த மோதல்கள் தென் சீனக் கடல் பகுதி எப்போதும் பதட்ட நிலையிலே இருப்பதற்கான காரணங்களில் ஒன்றாகும்.   

சுருக்கமான வரலாறு

1. கிமு 1000 ஆண்டுகளின் வாக்கில் வியட்நாமில் ஷா ஹுய்ன்க் நாகரீகம் (Sa Huynh civilization) தென் சீனக் கடற்கரைப் பகுதிகளில்  தோன்றியதாக கருதப்படுகிறது.

2. ஸ்பிராட்லி தீவுகளை கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து சீன மீனவர்கள் பயன்படுத்துவதாகக் கூறி அதன் மீது சீனா உரிமைக் கோருகிறது.

3. கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கிபி. பதினாறாம் நூற்றாண்டு வரை   ஜின் சாம்ராஜ்ஜியம், லியு சாங்க் சாம்ராஜ்ஜியம், டங் சாம்ராஜ்ஜியம், சுய் சாம்ராஜ்ஜியம், யூவான் சாம்ராஜ்ஜியம், மிங் சாம்ராஜ்ஜியம் போன்றவை வரிசையாக தென் சீனக் கடல் மீதும் அதன் தீவு பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தன.

4. 16 ம் நூற்றாண்டு வாக்கில் ஸ்பானிஷ் காலனிய அரசாங்கம் இந்த தீவுகளை தாங்கள் கண்டுபிடித்ததாக கூறி அதன் மீது உரிமை கோரின. 

5. 1877 ல் பிரிட்டிஷ்  ஏகாதிபத்தியம், ஸ்பிராட்லி தீவுகள் மீது முதன் முதலில் நவீன சட்ட ரீதியான கோரிக்கையை தொடுத்தது.  

6. 1883 ல் ஜெர்மனி இந்த தீவுகளில் அளவீட்டு ஆய்வு (Survey) மேற்கொண்டது, இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது.

7. இதனைத் தொடர்ந்து வியட்நாமின் மூலம்  பிரான்சும், பிலிப்பைன்ஸ் மூலம் ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவும் இந்த பகுதிகளில் 19ம் நூற்றாண்டில் ஆதிக்கம் செலுத்த முயன்றன. சில போர்களிலும் ஈடுபட்டன.

8. 1917 ல் ஸ்பிராட்லி தீவுகளில் பாஸ்பேட் கனிம குவியல்களை (Phosphate deposits) ஜப்பான் சுரண்டியது மட்டுமில்லாமல் 1927 ல் அதன் உரிமையை ஆவணப்படுத்தியது.

9. 1939 ல்  இரண்டாம் உலகப்  போர் சமயத்தில் ஜப்பான் ஏகாதிபத்தியம்,  சீனா மீது ஆதிக்கம் செலுத்தியதுடன் தென் சீனக் கடலையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதனால் இந்த தீவுகளில் வாழ்ந்த ஆட்சியாளர்களும், குடிவாசிகளும் ஆஸ்திரேலியாவிற்கு இடம் பெயர்ந்தனர். வூடி மற்றும் பட்லே தீவுகளில் (Woody and Pattle islands) ஜப்பான் இராணுவ தளங்களை நிறுவியது மட்டுமல்லாமல் தைவான் மற்றும் ஹைனான் தேசங்களின் மூலம் ஸ்பிராட்லி மற்றும் பாராசெல் தீவுகளில் தனது அதிகாரத்தை நிலை நிறுத்தியது.

10. 1945 ல் அமெரிக்கா தாக்குதலின் காரணமாக ஜப்பான் வூடி தீவை அதனிடம் இழந்து அங்கிருந்து வெளியேறியது.

மக்கள் சீனக் குடியரசின் தோற்றமும் அமெரிக்க, ரஷ்ய ஏகாதிபத்தியங்களின் சூழ்ச்சியும் 

உள்நாட்டு ஆளும் வர்க்கங்களுக்கு எதிராகவும், ஜப்பானிய அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராகவும் பல பத்தாண்டுகள் கடுமையாகப் போராடி 1949-ல் மாவோ தலைமையில் மக்கள் சீனக் குடியரசு உருவானது. அண்டை நாடுகளுடன் எல்லைப் பிரச்சனைகளை விரைவாக தீர்த்துக்கொண்டது. இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனையையும் தீர்க்க மாவோ பலமுறை முயற்சித்தும், அமெரிக்கா நலனிலிருந்து நேரு அரசு அதை மறுத்துவிட்டது.   யாருடைய பிரதேசத்தின் மீதும் சீனா நாட்டம் கொள்ளவில்லை. இதற்குப் பதிலாக, நிலவுகின்ற ஒடுக்குமுறை சமூக அரசியல் கட்டமைப்பை சீனா தலைகீழாக மாற்றியது. ஏகாதிபத்திய- தரகு அதிகார மூலதனங்களை பறிமுதல் செய்தது மட்டுமில்லாமல் தேசிய முதலாளிகளின் தொழில்களும் படிப்படியாக மக்கள் உடைமைகளாக்கப்பட்டன, நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு நிலத்தில் தனியுடைமை ஒழிக்கப்பட்டு கம்யூன்கள் அமைக்கப்பட்டன, பொருளாதாரக் கட்டுமானத்தில் இங்கிலாந்து, ஜப்பான், பிரான்சைக் காட்டிலும்  குறிப்பிடத்தக்கப் பெரும் வெற்றிகளை சாதித்தது இவ்வாறாக கம்யூனிசத்தை கொண்டுவரும் பெருமளவு உத்வேகத்துடன் மாவோ தலைமையிலான மக்கள் சீனக் குடியரசு வளர்ச்சியடைந்தது.

சீனாவின் இந்த விரைவான வளர்ச்சியும் வெற்றியும் ஒரு  முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் அது அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அவர்களால் பேணி வளர்க்கப்பட்ட பிற்போக்கு ஆட்சிகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்தது. ஏழ்மையால் அவதிப்படும் நாடுகள் முதலாளிய- ஏகாதிபத்திய கட்டமைப்பை விட்டு வெளியேறி அவற்றில் கம்யூனிசம் பரவுவதைத் தடுக்க வேண்டுமானால், சோசலிச சீனாவை அழித்து விடுவது அவர்களுக்கு அவசியமாகியது. ஸ்டாலினுக்குப் பிறகு "சமாதான சகவாழ்வு, சமாதான போட்டி, சமாதான மாற்றம்" என்று கூறி வந்த குருசேவ் கும்பல் அமெரிக்காவுடன் கள்ளக் கூட்டு சேர்ந்தது.

மறுபுறம், அமெரிக்க தூண்டலினால் சீனாவின் உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட சர்வாதிகாரி சியாங்கே ஷேக் தோற்கடிக்கப்பட்டு தைவானில் அடைக்கலம் புகுந்து அமெரிக்க ஆசியுடன் அங்கு தனது பொம்மை அரசை நிறுவினான்.  இவ்வாறாக உள்நாட்டு எதிரிகளை தூண்டி விடுவது மற்றும் அமெரிக்க சார்பு நாடுகளான ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ், இந்தியா இன்னும் பிறவற்றை அணி திரட்டி சீனாவை இராணுவ ரீதியில் தோற்கடிக்க முயற்சித்தது. ரஷ்ய ஏகாதிபத்தியமும் இதன் கூட்டாளியாக சீனாவைச் சுற்றி வளைத்து அணு ஆயுத அச்சுறுத்தலை தொடுத்தது.

1947ல் தைவானின் கோமிண்டாங்க் அரசாங்கம் தென் சீனக் கடலில் பதினொரு  புள்ளி எல்லைக்கோடு (Eleven dashed line) என்பதை உருவாக்கி அதற்கு உரிமை  கொண்டாடியது. அதன் பிறகு ஒன்பது புள்ளி எல்லைக்கோடாக (nine-dash line) மாற்றியமைக்கப்பட்டது.  சோசலிச சீனா தென் சீனக் கடலின் மீது தனது போட்டியை முன்னிறுத்தவில்லை. 1958ம் ஆண்டில் சீனாவை, குருச்சேவ் கும்பல்  தலைமையிலான முதலாளித்துவ ரஷ்யாவின் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் திட்டத்துடன் தென் சீனக் கடலின் - ஒன்பது புள்ளி எல்லைக்கோடு வரைபட ரீதியிலான பகுதிகளை கட்டுப்படுத்தவும் முற்றுகையிடவும் முயற்சித்தது.

இவ்வாறாக, அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கைக்கருவிகளாக இருந்த உலக வங்கி, ஐ.எம்.எஃப் மூலம் ஊட்டி வளர்க்கப்பட்ட அடிவருடி நாடுகளின் ஆட்சியாளர்களும், ரஷ்ய சமூக ஏகாதிபத்தியமும் சேர்ந்து மக்கள் சீனக் குடியரசை எல்லாப் பக்கங்களிலிருந்தும் சுற்றி வளைத்து 1970ம் ஆண்டுகளின் மத்தியில் சீனாவில் சோசலிசத்தை துடைத்தொழித்தனர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் செல்வாக்கு செலுத்திய உள்நாட்டு எதிரிகள் மூலமாக முதலாளித்துவ மீட்சியை ஏற்படுத்தினர். இது குறித்து மாவோ முன்னரே எச்சரித்திருந்தார்.           

ஏகாதிபத்தியமாக சீனா

1970 ம் ஆண்டுகளின் இறுதியில் ஏற்பட்ட  முதலாளித்துவ நெருக்கடியின் தொடர்ச்சியாக, 90களில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற ஏகாதிபத்திய புதிய காலனியக் கொள்கைகள் மூலம் தங்கள் நெருக்கடிகளைத் தீர்த்துக்கொள்ள ஏகாதிபத்திய நாடுகள் முயன்றன. சீனத்தில் டெங் கும்பலின் எதிர் புரட்சி காரணமாக முதலாளித்துவம் மீட்டெடுக்கப்பட்டு உலக முதலாளித்துவத்துடன் பின்னிப் பிணைக்கப்பட்டது. மற்ற ஏகாதிபத்திய நாடுகளுடன் சேர்ந்து கொண்டு சீனமும் தனது பொருளாதார ஆதிக்க வளர்ச்சி, மலிவாகக் கிடைக்கும் உழைப்பைச் சுரண்டுவது, மற்ற நாடுகளிலிருந்து குறைவான விலையில் கச்சாப் பொருள்களை வாங்குவது, முதலீடுகள் செய்வது, தனக்கு ஆதரவாக சந்தைகள், செல்வாக்கு மண்டலங்கள் உருவாக்குதல், கேந்திரமான இடங்களைக் கைப்பற்றுதல் ஆகிய நடவடிக்கைகளின் மூலமாக தன்னை ஒரு ஏகாதிபத்திய நாடாக மாற்றிக் கொண்டது. அமெரிக்காவில் 2008ல் தொடங்கி வெடித்த மிகு உற்பத்தி நெருக்கடியால் அதன் உலக மேலாதிக்க கனவு நொறுங்கியது, மறுபுறம் சீன-ரஷ்ய ஏகாதிபத்திய நிதியாதிக்க கும்பலின் கூட்டணி உருவாகி  அது அமெரிக்க-நேட்டோ முகாமுக்கு வலிமையான போட்டியாக  உருவெடுத்துள்ளது. அமெரிக்கா சீனாவின் மீது தொடுத்த வர்த்தகப் போரால் சீனாவும் நெருக்கடியை சந்தித்தது. அதன் நெருக்கடியிலிருந்து மீள மூலதன திரட்டல்  வேட்கை கொண்டு அது புதிய பட்டுச் சாலை - ஒரு இணைப்பு ஒரு சாலை (Belt and Road Initiative (BRI) – New Silk Road (NSR) – One Belt One Road (OBOR)) திட்டங்கள், ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதாரக் கூட்டமைப்பு (RCEP), மற்றும் தென் சீனக் கடலை முழுவதையும் ஆக்கிரமித்து, 'ஆசிய நேட்டோ'வான குவாட்(QUAD)க்கு எதிராகப் போர்க்கப்பல்களையும், இராணுவ தளங்களையும் அமைத்து தெற்காசியப் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிறுவ நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.           

இணைப்பு மற்றும் சாலை திட்டம் - ஆர்‌சி‌இ‌பி (Belt and Road Initiative  – RCEP)

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்து  சீன பட்டு வணிகர்கள் தெற்காசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தரை வழியாகவும் மற்றும் நீர் மார்க்கமாகவும் பயணித்த பாதையே பட்டு பாதை (Silk Road) என்று அழைக்கப்பட்டது. 2013-ம் ஆண்டுக்கு பிறகு ஷி-ஜிங்பிங் தலைமையிலான அரசு அதை மீட்டுருவாக்கம் செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியது. இதன் மூலம் 70 க்கும் மேற்பட்ட நாடுகளுடன் (உலக மக்கள் தொகையில் 65% க்கும் மேல் மக்களையும் 75%க்கும் மேலான வளங்களையும் கொண்டுள்ளவை) பொருளாதார, அரசியல், பண்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்த (உண்மையில் புதிய காலனிய முயற்சிகளுக்கு) இந்த திட்டத்தை ஒரு இணைப்பு ஒரு சாலை (One Belt One Road (OBOR)) என்று முன் வைத்தது. இது 6 தடங்களில் சுமார் 4 லிருந்து  8 ட்ரில்லியன் டாலர் மதிப்பீடு செய்து ஏற்கனவே 40 பில்லியன் டாலர்கள் ஒதுக்கி 2049 க்குள் இதனை முடிக்கும் முனைப்புடன் உள்ளது. இதன் மூலம் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், மலேசியா, தஜிகிஸ்தான், நைஜீரியா, உகாண்டா, செர்பியா உள்ளிட்ட பல நாடுகளை தனது புதிய காலனிய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவற்றில் கட்டுமானங்கள், சாலைகள், ரயில் பாதைகள், கடல் வழிப் பாதைகள், துறைமுகங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய் தடங்கள், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், பவர் பிளாண்ட்கள், இராணுவ தளங்கள் அமைத்து வருகிறது. இதற்கு ஆசிய வங்கி மூலம் கடன்களை வாரி வழங்கி அந்த நாடுகளை ஏழ்மையிலும் நெருக்கடியிலும் தள்ளி வருகிறது.

அமெரிக்காவின் காப்புக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும், ஆசியான் (ASEAN) நாடுகளும், பிற இந்தோ-பசிபிக் நாடுகளும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தன. இந்த நெருக்கடியிலிருந்து மீள விரும்பி சீனாவின் கூட்டமைப்பில் (RCEP) இணைந்தன. கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவைத் துறைகளை கார்ப்பரேட் மயமாக்குதல்,  தொழிலாளர்களைக் கொத்தடிமையாக்குதல், நிலம், மூலப் பொருட்கள் மற்றும் இயற்கை வளங்கள் மீதான கார்ப்பரேட்டுகளின் உரிமையை உறுதி செய்தல், உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கியது இக்கூட்டமைப்பு. இதன் மூலம் அந்த நாடுகளின் சுயசார்பும் இறையாண்மையும் ஒழித்துக்கட்டப்பட்டு வேட்டையாடப் படுகிறது. அமெரிக்க- நேட்டோவின் டங்கல் திட்டம் போல் சீனாவின் மேலாதிக்க நலன்களுக்கு சேவை செய்ய மேற்கண்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுகின்றன.

இதனைத் தொடர்ந்து, தென் சீனக் கடல் பகுதியில் உரிமைக் கோரல்களும்  ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் சர்வதேச நீதி மன்றத்தின் தீர்ப்புகளை மீறியும் தீவிரமடைந்து வருகின்றன.        

ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட வரையறைகளும், மீறல்களும் 

1994 -ல்  இறுதி செய்யப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டம் (United Nations Convention on the Law of the Sea – UNCLOS) கடல் சார் ஆட்சி எல்லைகள் குறித்து சில வரையறைகளை கொடுத்தது:

1. ஒரு நாட்டின் நிலப்பரப்பிலிருந்து அல்லது கடற்கரையிலிருந்து (Base line) 12 நேட்டிக்கல் மைல் (Nautical Mile) தொலைவிற்கு அதன் நீர் அதிகார எல்லை (Territorail waters) - இதற்கு வெளியில் அமைந்த பகுதி சர்வதேச நீர் அதிகார எல்லை (International waters) (சர்வதேச கடல் எல்லையை போக்குவரத்திற்காக எந்த நாடும் பயன்படுத்தலாம். ஆனால் 200 நேட்டிக்கல் மைல்  தொலைவிற்குள்ளாக அந்தந்த நாடுகளின் கடல் வளங்களை உரிமை கோர முடியாது) ஆகும்.  

2. 24 நேட்டிக்கல் மைல் தொலைவிற்கு அதன் தொடர்ச்சியான மண்டலம் (Contiguous zone) - இந்த பகுதிக்குள் பிறர் மீன் பிடித்தல், அத்துமீறி உள்நுழைதல் போன்றவை சட்ட ரீதியான தண்டனைக்கு உட்பட்டதாகும் 

3. 200 நேட்டிக்கல் மைல் தொலைவிற்கு அதன் பிரத்தியேக பொருளாதார மண்டலம் (Exclusive Economic Zone) - இதில் மீன் பிடித்தல், எண்ணெய் வளங்கள்  உள்ளிட்ட  வளங்கள் அந்தந்த நாட்டின் உரிமைக்குட்ப்பட்டதாகும்.

இந்த வரையறைகளின்படி பார்த்தால் தென் சீனக் கடலின் பெரும்பகுதி வியட்நாமையே சேரும். சீனாவுக்கும் தைவானுக்கும் சொற்பமே மிஞ்சும். மேலும் சீனாவின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் 40% இந்த தென் சீனக் கடலை சார்ந்தே உள்ளது. மற்றும் இதற்கு உரிமை கோரும் நாடுகள் பெரும்பான்மை அமெரிக்காவின் செல்லப் பிராணிகளாகவே இருந்து வருகின்றன.  சீனா  தென் சீனக் கடலுக்கு முழுவதுமாக உரிமை கோருகிறது. இதனை எதிர்த்து பிற நாடுகள் சர்வதேச நீதி மன்றத்தை அனுகின. அது சீனாவின் உரிமை கோரலை கடல் சட்ட வரையறைகளை காட்டி மறுத்துவிட்டது. சீனாவும் தைவானும் நிரந்தர நடுவர் மன்றத்தின் (Permanent court of Arbitration)  தீர்ப்பை ஏற்கவில்லை, அதற்கு அவைகள் முன்வைத்த காரணம்:

1. ஸ்பிராட்லி மற்றும் பாராசெல் தீவுகள் மீதான உரிமையை வரையறுக்கவில்லை

2. இதனையொட்டிய கடல் எல்லைகளை வரையறுக்கவில்லை

என்று கூறி நிராகரித்ததோடு அந்தந்த நாடுகளுடன் இருதரப்பு உடன்படிக்கை மூலம் தாங்களே தீர்த்துக் கொள்வதாகவும் தெரிவித்தன. சில இரு தரப்பு ஒப்பந்தங்களையும் ஏற்படுத்தின, அவையும் தொடர்ந்து அந்த நாடுகளாலே மீறப்பட்டன.  

இதனையொட்டியே, ஸ்பிராட்லி மற்றும் பாராசெல் தீவுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதிலிருந்து கடல் எல்லைகளை கணக்கிடுவதன் மூலமாக தென் சீனக் கடல் முழுவதையும் (ஒன்பது கோடு எல்லைக்குட்பட்ட, கிட்டத்தட்ட 90% அளவிற்கு) தனது மேலாதிக்கத்தின்கீழ் கொண்டு வர முயற்சிக்கிறது. இதற்கு தங்கள் மன்னர்களின் ஆட்சியின் கீழே இத்தீவுகள் இருந்ததாக வரலாற்று ரீதியான வரைபடங்கள் மற்றும் காரணங்கள் கூறி நியாயம் தேடுகிறது.

வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் பல பத்தாண்டுகளாக உருவாக்கியதைவிட மிக அதிகமான செயற்கைத் தீவுகளையும், கட்டுமானங்களையும், இராணுவ தளங்களையும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் உருவாக்கி அதில் இராணுவ உபகரணங்களை சீனா நிறுவியது.

தென் சீனக் கடலில் சீனாவின் கட்டுமானங்கள்

ஸ்பிராட்லி, பாராசெல் தீவுகளில் மற்றும் ஏழு செயற்கைத் தீவுகளிலும் சீனா கட்டமைப்புகளை நிறுவியுள்ளது குறிப்பாக: 

1. பாராசெல் தீவு தொகுப்பில் உள்ள வூடி தீவில் (Woody Island) சான்ஷா நகரம் (Sansha city), இதில் மீனவர்கள் சிலர் குடியமர்த்தப்பட்டு பள்ளிக்கூடங்கள், வங்கிகள், மருத்துவமனைகள், தொலைத் தொடர்பு சாதனங்கள் போன்றவை நிறுவி உள்ளதுடன் சுற்றுலா தளமாகவும் மாற்றியுள்ளது.

2. சூஃபி ரீஃப் (Subi Reef) தீவில் 3000m விமான ஓடுதளம், கடற்படை தளங்கள், விமானக் கொட்டகைகள், செறிவூட்டப்பட்ட வெடிமருந்து பதுங்கு குழிகள், ஏவுகணை குழிகள், ரேடார் தளங்கள், இராணுவ கண்காணிப்பு மையங்கள்  உள்ளடக்கிய இராணுவ வசதிகள், தங்குமிடங்கள், நிர்வாக கட்டிடங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு அரங்குகள், பழத் தோட்டங்கள், மற்றும் பன்றி, கோழி, மீன் பண்ணைகள் போன்றவற்றை உருவாக்கியுள்ளது.

3. மிஸ்சீஃப் ரீஃப் (Mischief Reef) தீவில் கடல் சார் ஆராய்ச்சி மையம் நிறுவியுள்ளது.

4. ஃபியரி கிராஸ் ரீஃப் (Fiery Cross Reef) தீவின் எல்லைகள் விரிவாக்கப்பட்டு அதில் மீன்பிடி துறைமுகங்களும், இராணுவ தளங்களும் நிறுவப்பட்டு அங்கு பழங்களும், காய்கறிகளும் எளிதாக கிடைக்கும் வசதியும் 5நி தகவல் தொழில்நுட்ப வசதிகளும் கிடைக்கும்படியான கட்டமைப்புகளும் நிறுவப்பட்டுள்ளது.

5. சீனாவின் தை மலைகளிலிருந்து பாறைகளை கொண்டு சென்று ஸ்பிராட்லி தீவுகளில் சீனாவின் வரலாறு மற்றும் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையிலான பிரமாண்டமான நினைவுச் சின்னங்களை உருவாக்கியுள்ளது.       

6. பாராசெல் தீவுகளில் யுலின் கப்பற்படைத் தளம் (Yulin Naval base) எனும் இராணுவ தளத்தை அமைத்துள்ளது.

உலகமே கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த கால கட்டத்திலும் கூட சீனா இந்த கட்டுமானங்களை தொடர்ந்து உருவாக்குவதில் குறியாக இருந்தது. இவ்வாறாக தென் சீனக் கடல் பகுதியிலும் தெற்காசியப் பிராந்தியத்திலும் தனது மேலாதிக்க முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 

தென் சீனக் கடலில் சீன - அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள்

தென் சீனக் கடல் பகுதி முழுவதும் இராணுவமயமாக்கப்பட்டதன் விளைவாக ஒரு கொந்தளிப்பு நிலையை அடைந்துள்ளது. இராணுவ நடவடிக்கைகளுள் சில:     

1. 30 மாதிரி O54A ஏவுகணை தாங்கிகளையும், 42 மாதிரி O56 போர்க்கப்பல்களையும் தென் சீனக் கடலில் சீனா இயக்கி வருகிறது.  

2. தென் சீனக் கடல் பகுதிகளில் அந்நிய கப்பல்களை கண்டதும் தகர்க்க சீனா உத்தரவிட்டதால், ஏப்ரல் 2020ல் பாராசெல் தீவுகளுக்கு அருகில் சீனாவின் கடலோர காவல் படை கப்பல் ஒன்று வியட்நாமின் மீன்பிடிக் கப்பலுடன் மோதியது (வியட்நாமின் மீனவர்கள் கூட சில சமயங்களில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது).

3. பின்னர், போர்னியோ கடற்கரையில் சீனாவின் ஹையாங் திஜி-8 கடல் ஆய்வு கப்பல் மலேசியாவின் எண்ணெய் ஆய்வு திட்டத்தை சீர்குலைத்தது. இதன் விளைவாக, அமெரிக்க நீர் மூழ்கி கப்பலும் ஆஸ்திரேலிய போர் கப்பலும் இந்த பகுதிக்கு அனுப்பப்பட்டது.

4. ஜூன் 2020ல் யு.எஸ்.எஸ் பங்கர் ஹில் மற்றும் யு.எஸ்.எஸ் பாரி எனும் ஏவுகணை அழிப்பான்கள் முறையே பாராசெல் மற்றும் ஸ்பிராட்லி தீவுகளுக்கு அனுப்பப்பட்டது. சீனாவின் தென் சீனக் கடலின் உரிமைக் கோரலை முறியடிக்கும் நோக்கில் சுதந்திர ஊடுருவல் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டது.

5. பாராசெல் தீவுகளை சுற்றியுள்ள நீர்ப்பரப்பில் கடற்படைப் பயிற்சிகளை மேற்கொள்ள சீனா கடல் பாதைகளை மூடியது, இதனை அமெரிக்கா கடுமையாக எதிர்த்தது.

6. இதற்கிடையில் அமெரிக்கா நிமிட்ஸ் மற்றும் ரொனால்ட் ரீகன் விமானந்தாங்கி போர்க்கப்பல்களை இப்பிராந்தியத்தில் கூட்டு கப்பற்படை பயிற்சி நடவடிக்கைகளுக்கு அனுப்பியது.

7. அமெரிக்க யு.எஸ்.எஸ். கேப்ரெலே கிபோர்ட்ஸ், ஜப்பானின் ஜெ.எஸ். கேசிம், ஷிம யூகி போன்ற போர்க்கப்பல்களும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளை தென் சீனக் கடலில் மேற்கொண்டன.

8. ஆளில்லா தானியங்கி  நீர்மூழ்கி உளவுக் கப்பல்கள் இரண்டை  அமெரிக்கா இந்த பகுதிக்கு அனுப்பியது. சீனா ஏ.எஸ்.ஆர் 510 கப்பல் மூலம் கண்டறிந்து இதைக் கைப்பற்றியது.

9. இராணுவத் துருப்புகளின் ரோந்துகள் மற்றும் கூட்டுப் பயிற்சிகளில் சீனாவும் ஈடுபட்டு வருகிறது.

10. சீனா, லியோனிங் எனும் விமானந்தாங்கி கப்பல் தென் சீனக் கடல் வழியாக தைவான் நீரிணைப்புக்கு அனுப்பியது. மறுநாள் ஜப்பானின்  யோகோசுகாவை தளமாக கொண்ட அமெரிக்காவின் விமானம் அப்பகுதியில் நிறுத்தப்பட்டது.

11. ஜோ பைடன் அதிபரான பின், அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். தியோடர் ரூஸ்வெல்ட் எனும் போர்க் கப்பலும் தென் சீனக் கடல் பகுதியில் கடந்து சென்றுள்ளது. 

12. தைவான், வியட்நாம், பிலிப்பைன்ஸ் நாடுகளும் சீனாவுடன் அவ்வப்போது சில கப்பற்படை, விமானப் படை மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன. 

13. குவாட் கூட்டமைப்பு மூலமாக இந்தியாவும் இந்தப் பிராந்தியத்தில் கூட்டு இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

சீனாவின் ஆக்கிரமிப்பிலிருந்து தைவான், வியட்நாம், பிலிப்பைன்ஸ் நாடுகளை மீட்பது எனும் பெயரில் அமெரிக்கா தென் சீனக் கடலை ஆக்கிரமிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது (ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுதுச்சாம்). தென் சீனக் கடலின் வளங்களைக் கொள்ளையடிக்கவும் தங்களின் நெருக்கடிகளைத் தீர்த்துக் கொள்ளவும் இதன் மூலம் தெற்காசியப் பிராந்தியத்தில் தங்களது மேலாதிக்கத்தை நிறுவவும் இரண்டு முகாம்களும் போட்டிப் போடுகின்றன. இவ்வாறாக, தென் சீனக் கடல் பகுதியானது இரண்டு முகாம்களுக்கிடையே பனிப்போர் மற்றும் யுத்த தயாரிப்புகளின் குவிமையமாக மாறி வருகிறது. 

படிக்க:

உலக மறுபங்கீட்டிற்கான பனிப்போர் நிலைமைகளை தீவிரப்படுத்தும் குவாட் (QUAD)

பனிப்போரின் குவிமையமாக மாற்றப்படும் இந்தோ-பசிபிக் பிராந்தியம் பகுதி -1

பனிப்போரின் குவிமையமாக மாற்றப்படும் இந்தோ-பசிபிக் பிராந்தியம் பகுதி - 2

பனிப்போரின் குவிமையமாக மாற்றப்படும் இந்தோ-பசிபிக் பிராந்தியம் பகுதி -3

தென் சீனக் கடல் பகுதியும் இந்தியாவும்

2011ல், சீனாவும் வியட்நாமும் தென்சீனக் கடல் தொடர்பாக ஒரு உடன்படிக்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சிறிது நேரத்திலேயே, இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ஓ.என்.ஜி.சி) வெளிநாட்டு முதலீட்டுக் குழு ஓ.என்.ஜி.சி விதேஷ் லிமிடெட், எண்ணெய் துறையில் நீண்டகால ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக பெட்ரோ வியட்நாமுடன் மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தோ-வியட்நாம் ஒப்பந்தத்தின் பின் புலத்தில் அமெரிக்க நலன்களும் வழிகாட்டலுமிருந்தது. இதனை சீனா கடுமையாக கண்டித்தது.

தென் சீனக் கடல்  குறித்து நிலைபாடு எடுக்கையில் அமெரிக்காவின் நிலைபாட்டையே தனது நிலைபாடாக இந்தியா தெரிவிக்கிறது. சர்வதேச கடல்சார் சட்டங்களின் படி எல்லையை வரையறுத்தல், தென் சீனக் கடல் பகுதியில் சுதந்திர கப்பல் மற்றும் விமான வர்த்தக மற்றும் இராணுவ செயல்பாடுகள் போன்ற இவை பெரும்பாலும் அமெரிக்க நிலைப்பாட்டை ஆதரிப்பதாகவே உள்ளது. அமெரிக்காவின் அடியாள் படையாக இருக்கும் இந்தியா தரகு வர்க்க ஆளும் கும்பல் வேறு என்ன நிலை எடுக்கும்.      

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லை மோதல்களை காரணம் காட்டி, இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாத்திட, சீனாவிற்கு ஒரு வலுவான எதிர் சக்தியாக விளங்க அமெரிக்காவோடு அணி சேர்வது அவசியம் என்று பொய்ப் பிரச்சாரம் செய்கிறது. உண்மையில் இந்தியாவின் இறையாண்மையை அமெரிக்காவின் காலடியில் கிடத்தி இந்திய மக்களை வறுமையிலும் நோயிலும் கொன்றுக் குவித்துக் கொண்டுள்ளது.

"ஒரு உலக யுத்தத்தின் போது சர்வதேசியப் பாட்டாளி வர்க்கத்தின் செயல் தந்திரமானது அந்த யுத்தத்தை ஒரு உள்நாட்டு யுத்தமாக மாற்றுவதாக இருக்க வேண்டும். யுத்தம் பற்றிய பாட்டாளி வர்க்கத்தின் செயல் தந்திரமானது யுத்தத்தின் வர்க்கத் தன்மையால் தீர்மானிக்கப் படுகிறது" என்கிறது லெனினியம்

ஏகாதிபத்தியங்களும் காலனிய நாடுகளின் ஆளும் தரகு வர்க்க கும்பலும் ஈடுபடும்  இந்த பனிப்போர் மற்றும் யுத்த தயாரிப்பு முயற்சிகளில் நாம்  எந்த ஏகாதிபத்திய முகாமையும் ஆதரிக்காமல் உலகப் போரை உள்நாட்டுப் போராக மாற்றுவோம் என முழங்குவதே சரியானதாகும்.

 

சமரன்

(செப்டம்பர் – அக்டோபர் 2022 மாத இதழிலிருந்து)