உலக மறுபங்கீட்டிற்கான பனிப்போர் நிலைமைகளை தீவிரப்படுத்தும் குவாட்

(QUAD)

உலக மறுபங்கீட்டிற்கான பனிப்போர் நிலைமைகளை தீவிரப்படுத்தும் குவாட்
US-Japan-India-Australia

ஏகாதிபத்தியங்கள் உலகில் நீடிக்கும் வரை யுத்தங்களும் நீடிக்கும் என்ற உண்மையை பாட்டாளி வர்க்க ஆசான்கள் லெனின், ஸ்டாலின், மாவோ தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.

புதியதாக வளர்ச்சியடைகின்ற ஏகாதிபத்தியம், தனது ஏகாதிபத்திய நலன்களை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு, ஏற்கனவே நீடிக்கின்ற ஏகாதிபத்தியங்களுடன் காலனி மறுபங்கீட்டிற்காக மோதும். அமெரிக்காவுடன் போட்டி போடும் அளவுக்கு சீனா ஒரு வளர்ச்சியடைந்து வரும் ஏகாதிபத்திய நாடாக மாறிவிட்டது. அது இன்று உலக மறுபங்கீட்டில் இரு பெரும் முகாம்களை தோற்றுவித்துள்ளது. அமெரிக்கா தலைமையில் அமெரிக்க-நேட்டோ முகாம் மற்றும் சீன-ரஷ்ய ஏகாதிபத்திய முகாம். இவற்றிற்கிடையேயான உலக மறுபங்கீட்டிற்கான பனிப்போர் நிலைமைகள் தீவிரம் பெற்று வருகின்றன. (பனிப்போர் (Cold War) என்பது உலகப் போருக்கான தயாரிப்பு கட்டம், இது உலகப்போராக மாறலாம், மாறாமலும் போகலாம். இது புதிய காலனிய மறுபங்கீட்டிற்கான போர், ஆகவே பனிப்போர் என்பது சில பிராந்தியங்களில் மறைமுகமாகவும் சில பிராந்தியங்களில் நேரடியாகவும் உள்ளது).

சீனாவுக்கு எதிராக அதன் தெற்காசிய மேலாதிக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக, அமெரிக்காவின் தெற்காசிய மேலாதிக்கத்திற்கான ஒரு அடிவருடி அமைப்பாக மாறியுள்ளது குவாட் கூட்டமைப்பு. இந்த குவாட் கூட்டமைப்பு குறித்து இக்கட்டுரையில் சுருக்கமாக காண்போம்.

குவாட் கூட்டமைப்பு என்றால் என்ன?

QUAD (குவாட்) என்பது நாற்கர பாதுகாப்பு உரையாடல் (Quadrilateral Security Dialogue) என்பதன் சுருக்கம். அமெரிக்கா (தலைமையில்), ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவை நான்கு கரங்களாக (பக்கங்களாக) கொண்டு உருவாக்காப்பட்ட முறைசாரா போர்த்தந்திர கூட்டு (Informal Strategic Association). இது பொருளாதார ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் வளர்ந்து வரும் சீனாவை எதிர்கொள்ள (கட்டுப்படுத்த) அமைக்கப்பட்ட கூட்டு ஆகும்.

குவாட் டின் தோற்றம்

2007-ம் ஆண்டில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஒரு ஜனநாயக அமைதி என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட நாற்கர பாதுகாப்பு உரையாடலை (குவாட்) முன் மொழிந்தார். (பொதுவாக அமைதி பிரச்சாரம் செய்வது தொழிலாளி வர்க்கத்தை ஏமாற்றும் முறையாகும். ஏகாதிபத்திய கட்டத்தில் யுத்தங்கள் தவிர்க்க முடியாதவை. இருப்பினும் இந்த முதலாளித்துவ ஏகாதிபத்தியங்கள் அமைதி, மக்கள் நலன், உலக நலன் என்று பிரச்சாரம் செய்து அரிதாரம் பூசி அலைகின்றன). இந்த நாற்கார அமைப்பின் உறுப்பு நாடுகள் கிட்டதட்ட சீனாவின் எல்லையில் உள்ளன. ஆகையால் இதனை சிலர் சீன எதிர்ப்பு நடவடிக்கை என்று பார்க்கின்றனர். மேலும் இதனை ஆசிய நேட்டோ (Asian NATO)” என்று வரையறுக்கின்றனர். அமெரிக்காவின் ஜேர்மன் மார்ஷல் நிதியத்தின் டேனியல் ட்வினிங், இந்த ஏற்பாடு “இராணுவ மோதலுக்கு வழி வகுக்கும்” அல்லது சீனா ஆசியாவில் ஒரு ஜனநாயக தலைவராக மாறினால் “அமைதிக்கு நீடித்த அடித்தளத்தை அமைக்கலாம்” என்று எழுதியுள்ளார்.

இந்தியப்பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் மீதான தனது மேலாதிக்கத்தை நிறுவ (பரந்த ஆசியா என்பதை கட்டமைக்க) ஜப்பான் மேற்கொண்ட முயற்சியாக, ஜப்பான் பிரதமரின் இந்த முன்மொழிவு இருந்தாலும் இதற்கு முன்னரே ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது, ஆக இது ஜார்ஜ் புஷ் நிர்வாகத்தின் முன் முயற்சி ஆகும், அதாவது அமெரிக்காவின் தெற்காசிய மேலாதிக்கத்திற்கான முயற்சி ஆகும்.

குவாட்டின் அரசியல் பின்னணி

2004 இந்தியப் பெருங்கடல் பூகம்பம் மற்றும் சுனாமி பாதிப்புகளிலிருந்து ஒத்துழைப்பு மேற்கொண்டு சீர்செய்வது என்ற நோக்கத்துடன் இந்த குவாட் குழு உருவாகி இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் இது அமெரிக்காவின் தெற்காசிய மேலாதிக்கத்திற்காக சீனாவை சுற்றி வளைக்கும் (Pivot China) முயற்சியாக அமைந்துள்ளது. ஆசிய-பசிபிக் (Asian-Pacific) பகுதியில் சுதந்திரம் மற்றும் செழிப்பை” நிலைநிறுத்த (என்ற ஏமாற்று ஜாலத்தால்) அதாவது சீனாவின் வற்புறுத்தும் நடத்தையை சவால் செய்ய இந்த அமைப்பை உருவாக்கினர். 2007ல் ஓரு சுற்று உரையாடல் மற்றும் கூட்டு இராணுவ பயிற்சிகள் நடந்தது.

குவாட்டின் செயற்பாடுகள் நிறுத்தம் (2009)

2008ம் ஆண்டு தோன்றிய முதலாளித்துவ மிகு உற்பத்தி நெருக்கடியிலிருத்து மீள முடியாமல் திணறிக் கொண்டிருந்த சூழலில், சீனாவின் எதிர்ப்பாலும், ஆஸ்திரேலியாவின் கெவின் ரூட் சீனாவுடன் பேணிய நெருக்கமான உறவு மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களின் காரணமாகவும் குவாட்டிலிருந்து ஆஸ்திரேலியா வெளியேறியது. (முன்னதாக, சீனாவின் இராணுவச் செலவு மற்றும் ஏவுகனைத் திறன் குறித்த அச்சங்களால் ஆஸ்திரேலியா அமெரிக்காவுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை நோக்கி சென்றிருந்தது.)

கெவின் ரூட் பிரதமரானதும், சீனா ஆஸ்திரேலியாவின் முதன்மை பொருளாதாரப் பங்காளியாக மாறியது. சீனாவை நேசப்படுத்தும் முயற்சியில் ரூட் அமெரிக்காவிடம் ஆலோசிக்காமலே குவாட் அமைப்பிலிருந்து வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் முயற்சியால் அதன் இளையப் பங்காளியாக செயல்படும் இந்தியாவுடன் ஆழமான இராணுவ கூட்டணி 2009-ல் ஏற்படுத்தப்பட்டது. இது ஆசிய-பசிபிக் கூட்டமைப்பு ஆக உருவெடுத்தது. இதன் நோக்கம் பிராந்திய விரிவாக்கம் மற்றும் தெற்காசியாவில் சீனாவின் மேலாதிக்கத்தை முறியடிப்பது என்பதாக இருந்தது. (சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான குறிப்பிடத்தக்க எல்லைப்பிரச்னைகளை அதாவது அருணாச்சல பிரதேசம் தொடர்பான பிரச்சனையில் திபெத்தில் சீனா அணு ஆயுதங்களை நிலை நிறுத்தியது உள்ளிட்ட பதட்டமான சூழலை அமெரிக்கா தனக்கு சாதகமாகவும் சீனாவுக்கு எதிராகவும் இந்தியாவை பயன்படுத்தியது.)

இதனால் ஆஸ்திரேலியாவின் குவாட் பங்கெடுப்பு ரூட்டை சங்கடப்படுத்தியது. ஆகையால் ஆஸ்திரேலியா குவாட்டில் இருந்து வெளியேறவும்,  இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா பங்கு கொண்ட குவாட் அமைப்பு சரிவடைந்தது.

தொடர்ந்த கடற்படை மற்றும் இராணுவ பயிற்சிகள்

குவாட்நிறுத்தப்பட்டதற்கும், மறு தொடக்கம் செய்வதற்கும் இடையிலான ஆண்டுகளில் (2009 - 2017 வரை) குவாட் உறுப்பினர்கள் இருதரப்பு (Bilateral) அல்லது முத்தரப்பு (Trilateral) அளவில் கூட்டு இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டன. சில சமயங்களில் குவாட்டில் உறுப்பினராய் இல்லாத நாடுகளும் கூட கலந்து கொண்டன.

1)   2008 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் முறையே ஆஸ்திரேலிய சுகாடு மற்றும் நிச்சி ட்ரூ ட்ரைடெண்ட் கடற்படைப் பயிற்சிகளில் ஜப்பான் இணைந்தது

2)   ஜப்பான் மற்றும் இந்தியா முதன்முறையாக 2012-ல் கூட்டு கடற்படைப் பயிற்சியை நடத்தியது

3)   ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா 2015-ம் ஆண்டிலும் ஜப்பான் 2017-ம் ஆண்டிலும் ஆஸ்திரேலியா 2014-ம் ஆண்டில் முதல் முறையாகவும் அமெரிக்க-பிலிப்பைன்ஸ் பாலிகாத்தான் பயிற்சியில் ஈடுபட்டன.

4)   ஜப்பான் முதன்முறையாக இந்தியா மலபார் பயிற்சியில் 2015-ல் இணைந்தது.

5)   ஜப்பான் முதன்முறையாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா கூட்டு கடற்படை பயிற்சி 2015-ல் தாலிஸ்மேன் சாபரில் மேற்கொண்டது.

 

அமெரிக்காவின் அழுத்தத்தால் ஆஸ்திரேலியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம்

ரூட் டிற்கு பிறகு 2018-ல் ஜூலியா கில்லர்ட் ஆஸ்திரேலியாவின் பிரதமராக பதவியேற்றார். இவர் சீனாவிடமிருந்து விலகி அமெரிக்காவுடன் நெருக்கமான உறவைப் பேணினார், அவரால் அமெரிக்க-ஆஸ்திரேலிய இராணுவ ஒத்துழைப்பை அதிகரித்தது, “இந்தியாவிற்கு யுரேனியத்தை விற்க வேண்டாம் என்ற ஆஸ்திரேலியாவின் முடிவு குவாட்டை பலவீனப்படுத்தியது இந்த நடவடிக்கை கில்லார்ட்டின் லிபரல் கட்சியால் விமர்சிக்கப்பட்டது. மேலும் அமெரிக்காவின் வற்புறுத்தலாலும், அதன் ஆதரவுடனும் தன்னுடைய வெளியுறவு கொள்கையை மாற்றியமைத்து, கில்லர்ட் அரசு யுரேனியத்தை  இந்தியாவுக்கு விற்பனை செய்வதை ஆதரித்தது. பிறகு 2019ல் ஆஸ்திரேலிய பிரதமரான டோனி அபோட் யுரேனியத்தை இந்தியாவுக்கு விற்க ஒப்புக்கொண்டார்.

அமெரிக்காவின் ஆசிய சுற்றி வளைப்பு

ஒபாமா ஆட்சி காலத்தில் ஆசியாவை சுற்றி வளைப்பது (Pivot Asia) என்பது அமெரிக்காவின் யுத்த தந்திரமாக அமைந்தது. ஐரோப்பிய / மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சற்று விலகி கணிசமான வளங்களையும் முன்னுரிமைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி அமெரிக்கா கிழக்கு ஆசிய நாடுகளில் அதிக முதலீடு செய்யத் தொடங்கியது. அவற்றில் சில சீன மக்கள் குடியரசிற்கு அருகிலேயே அமைந்தது. டிரான்ஸ்-பசிபிக் கூட்டு (Trans-Pacific Partnership) வர்த்தக ஒப்பந்தத்தில் முன்னிலை வகிப்பதும், தென்சீனக் கடலில் உள்ள தீவுகளில் சீனாவின் உரிமையை மறுப்பதுமாக இந்த நடவடிக்கை அமைந்தது. மேலும், இது இந்த பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்ப்பதற்கான நடவடிக்கையாக அமைந்தது.

2013-ம் ஆண்டில் ஷி-ஜின்பிங் சீனாவின் தலைவரான பின் சீனாவுக்கும் குவாட் நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்தன. ஷி-யின் தலைமையின் கீழ், மக்கள் சீனக் குடியரசு (PRC) ஸ்ப்ராட்லி தீவுகள் மற்றும் பாராசெல் தீவுகளில் தங்களது மேலாதிக்கத்தை நிறுவ முயன்றது. வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் பல தசாப்தங்களாக இவற்றில் செயற்கை தீவுகளை உருவாக்குவதிலும் அதன் கட்டுமானங்களிலும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் 2014-2016 இடைவெளிக்குள் சீனா மற்ற எல்லா நாடுகளும் வரலாற்றில் கட்டியெழுப்பியதைவிட புதிய தளங்களை உருவாக்கி அதில் இராணுவ உபகரணங்களை நிறுவியது. ஐ.நா. சபையின் சர்வதேச கடல் சட்டம் இணைப்பு VIIன் கீழ் அமைக்கப்பட்ட ஒரு நடுவர் தீர்ப்பாயம், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் இவற்றின் கடல்சார் உரிமைகோரல்களுக்கு எதிராக தீர்ப்பளித்தது. தீர்ப்பாயம் தீவுகளில் உரிமையை தீர்மானிக்கவில்லை, கடல் எல்லைகளை வரையறுக்கவில்லை என்றும் கூறி மக்கள் சீனக் குடியரசு மற்றும் சீனக் குடியரசு (தைவான்) இந்த தீர்ப்பாயத்தை அங்கீகரிக்கவில்லை. உரிமைக் கோருபவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் இந்த விவகாரத்தை தீர்ப்பதாக தெரிவித்தன. இந்த நடவடிக்கைகள் தென் சீனக்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை நிலைநாட்டியது.

2014-ம் ஆண்டில் ரஷ்ய ஏகாதிபாத்தியம் ஷாங்காய் ஒத்துழைப்பு (Shangai Co-operation) மூலம் சீனாவுடன் இணைந்து அமெரிக்காவின் உலக மேலாதிக்க முயற்சிகளுக்கு தடையினை ஏற்படுத்தும் வலிமையான போட்டி முகாமாக பிரகடனம் செய்தது.

குவாட் கூட்டமைப்பும் இந்தியாவும்

இந்தியாவைப் பொறுத்தவரை அது பெரயரளவில் அணி சேராக் கொள்கை என்பதைக் கொண்டிருந்தாலும் அது எப்போதும் சோவியத் சமூக ஏகாதிபத்தியம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் இளையப் பங்காளியாகவே, தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு அடியாள் படையாகவே இருந்து வந்துள்ளது. 

1991-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலைத் தொடர்ந்து 2005-ல் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் எச். ரம்ஸ்பீல்ட், மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்திப்பு அமெரிக்க – இந்திய இராணுவ ஒத்துழைப்பை விரிவடைய செய்தது. 90ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் தொடங்கிய இந்த இராணுவ ஒத்துழைப்பினால், 2001-ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு இந்தியா தனது எல்லைக்குள் அமெரிக்காவிற்கு இராணுவ வசதிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

2005-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமை வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் கீழ் இந்தியா – அமெரிக்கா பாதுகாப்புக்கான புதிய கட்டமைப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இது இராணுவ உறவுகள், பாதுகாப்புத் தொழில்நுட்ப பகிர்வு தொடர்பான ஒத்துழைப்பை அதிகரித்தல், கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான கட்டமைப்பு இவற்றை உள்ளடக்கிய ஒரு அடிமைசாசனமாக அமைந்தது.

குவாட்டின் வளர்ச்சிக்கு முந்தைய ஆண்டுகளிலும் கூட டஜன் கணக்கான கூட்டு இராணுவ பயிற்சிகளை இந்தியாவும் அமெரிக்காவும் மேற்கொண்டன. இது சீனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக விளங்கியது.

இது அமெரிக்காவின் சிறந்த நகர்வாக ஆசியாவில் அமைந்தது. அமெரிக்காவின் இந்தியாவுடனான இந்த இராஜ தந்திர நடவடிக்கை ஆசிய நூற்றாண்டு என்பதை ‘’ஆசியாவில் அமெரிக்க நூற்றாண்டு என்பதாக அமைத்தது.

அமெரிக்க-இந்திய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் அமெரிக்காவின் பாதுகாப்புத் தொழில்களுக்கு லாபகரமானாதாக அமைந்ததுடன், அமெரிக்காவின் நெருக்கடிகளை இந்தியாவின் மீது சுமத்தியது. அணு சக்தி திறன்களை கொண்ட அமெரிக்க போர்க்கப்பல்களை தென்னிந்தியாவின் கடற்கரை, கோவா அல்லது கொச்சியில் நிரந்தரமாக நிறுவ அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

ஈராக்கில் அமெரிக்க இருப்பு, ஈரானுக்கு எதிரான விரோதப் போக்கு மற்றும் சீனாவை சுற்றி வளைக்கும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு இந்தியா இளைய அடிமைப் பங்காளியாக உள்ளது. இவ்வாறு இந்தியா அமெரிக்காவின் புதிய காலனியாக தன்னை அதன் சேவகனாக மாற்றிக் கொண்டுள்ளது.

2020 ஏப்ரல்-மே மாதங்களில் லடாக்கில் கள்வான் பள்ளதாக்கு பகுதியில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும்இடையே எல்லை மோதல்கள் ஏற்பட்டதற்குப் பின்னர், இந்தியாவின் பாதுகாப்பு நலன்களைப் பாதுகாத்திட, சீனாவிற்கு ஒரு வலுவான எதிர்சக்கியாக விளங்க குவாட் அவசியம் என்று பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டாலும், இதற்கு முன்பே கூட 2017-லிலேயே, இந்தியா, அமெரிக்காவுடன் இந்தோ-பசிபிக் இராணுவ கூட்டணியில் அதன் அடியாளாக இணைந்து செயல்படுகிறது. இந்த மோதல்களுக்கு முன்பே குவாட் புதுப்பிக்கபட்டுவிட்டது. சீனாவுடனான எல்லைப் பிரச்சனைகளை பேசித்தீர்க்காமல் மோடி அரசு அமெரிக்காவின் காலடியில் அதன் இராணுவ முகாமில் வீழ்ந்துள்ளது.

குவாட் உயிர்த்தெழுதல்

2017 ஆசியான் (ASEAN) உச்சி மாநாட்டின்போது கூட்டு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அமெரிக்க டிரம்ப் மற்றும் ஜப்பான் அபே சந்திப்பு சுதந்திர மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் போர்தந்திரம் என்று பெயர் மாற்றி அமைத்தது. இந்த ஒப்பந்தம் சீனாவின் இணைப்பு மற்றும் சாலை (Belt and Road) முயற்சியின்  எதிர்விளைவாக அமைந்தது. (ஆசியான் கூட்டமைப்பின் உருவாக்கமே  கம்யூனிசம் மற்றும் சோசலிச நாடுகளின் பரவலின் மீதான பொதுவான அச்சத்தால் தூண்டப்பட்ட ஒரு எதிர்புரட்சிகர நடவடிக்கையாகும்)

2017 நவம்பரில் ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டிற்கு முன்னதாக இராணுவ ஒத்துழைப்பைத் தொடர ஜப்பானிய, இந்திய, ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் நடத்திய கூட்டத்துடன் இந்த சந்திப்பு ஒத்துப்போனது. இந்த சந்திப்பில் தென் சீனக்கடலில் சீனாவின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் ஒரு முறையான குவாட்டினை புதுப்பிக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தினார்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியாவிலிருந்து கடற்படைக் கப்பல்கள் 2020ம் ஆண்டில் பலதரப்பு பயிற்சிகளில் பங்கேற்றன. 2017-2019-ம் ஆண்டில் குவாட் கூட்டமைப்பு 5 முறை சந்தித்துள்ளது. இது குவாட் கூட்டமைப்பின் மறுமலர்ச்சியை அறிவுறுத்தியது. 2019-ம் ஆண்டில் நான்கு அமைச்சர்கள் நியூயார்க் நகரில் குவாட் சீர்திருத்ததைப் பற்றி விவாதித்தனர். பின்னர் மீண்டும் பாங்காக்கில் அடுத்த கோடையில், இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவை மலபாரில் ஒருங்கிணைந்த கடற்படை பயிற்சிக்கு ஆஸ்திரேலியாவை அழைத்தன. கொரோனா வைரஸ் பெருவெடிப்பின் காரணமாக பயிற்சிகள் தாமதமாகின.

கொரோனா காலகட்டத்தில் குவாட் பிளஸ்திட்டம்

மார்ச் 2020ல், அமெரிக்காவால் தூண்டப்பட்ட குவாட் உறுப்பினர்கள் குவாட் பிளஸ்ஸின் முதல் கூட்டத்தை நடத்தினர். இது நியூசிலாந்து, தென் கொரியா மற்றும் வியட்நாமின் பிரதிநிதிகள் உட்பட்ட தற்போதுள்ள குவாட்டின் விரிவாக்கப்பட்ட வடிவமாகும். இது பிரதான இந்தோ – பசிபிக் நாடுகளை ஒன்றிணைத்து விவாதித்தது. இது ‘Covid-19’ தொற்றுக்கான அணுகுமுறைகள் குறித்து விவாதித்தது என கூறப்படலாம். ஆனால் இதை சீனாவின் வர்த்தக கூட்டமைப்பில் (RCEP), இந்த நாடுகள் இணைவதை தடுக்கும் அமெரிக்காவின் முயற்சியாக பார்க்க வேண்டும்.

RCEP (VS) QUAD

1997 ஆசிய பொருளாதார நெருக்கடியின்போது, ஆசியான் (ASEAN) நாடுகளுக்கு ஏராளமான சவால்கள் இருந்தன. இவை 2008 ம் ஆண்டில் உலகளாவிய நிதி நெருக்கடியின்போது மேலும் வலுபடுத்தப்பட்டன. ஆசியாவின் ஆளும் வர்க்கங்களைப் பொறுத்துவரை, சீனாவின் பெல்ட் ரோடு முயற்சியானது இணைப்பை மேம்படுத்தும், வர்த்தகத்தை மேம்படுத்தும் ஒரு வரப்பிரசாதமாக காட்சியளித்தது.

ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதாரக் கூட்டமைப்பு (RCEP – Regional Comprehensive Economic Partnership) திட்டம் 2012-ம் ஆண்டில் சீனாவால் முன்வைக்கப்பட்டது. இருப்பினும், பிராந்தியத்தில் பெரும் அமெரிக்க முதலீடுகள் மற்றும் அமெரிக்கா தலைமையிலான டிரான்ஸ்-பசிபிக் கூட்டு (TPP) ஆகியவையால் இது செயலற்றதாகவே இருந்தது. 2017-ம் ஆண்டில் டிரம்ப் TPPல் இருந்து விலகி இந்தோ-பசிபிக் கூட்டமைப்பை (Indo Pacific Partnership forum) உருவாக்கினார். ஆனாலும் TPP ஆனது அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனாவைத் தவிர்த்துவிட்டு “ஒருங்கிணைந்த முன்னேறிய டிரான்ஸ் பசிபிக் கூட்டமைப்பு (CPTPP)” எனும் பெயரில் ஜப்பான், ஆஸ்திரேலியா தலைமையில் செயல்பட்டு வருகிறது. இதில் புருனே, கனடா, சிலி, மலேசியா, மெக்ஸிகோ, பெரு, நியூசிலாந்து, சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. TPP குறித்த டிரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாடு 2017-ம் ஆண்டில் சீனாவில் 15 உறுப்பினர்களுடன் RCEP மூலம் முன்னிலை வகிக்க ஒரு வாய்ப்பை வழங்கியது. 2019-ல் சீனா தலைமையிலான RCEP - ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் 10 ஆசியான் நாடுகளுடன் உலகின் மிகப்பெரிய வர்த்தக முகாமாக உருவெடுத்தது.

குவாட் தலைமையிலான மலபார் கடற்படைப் பயிற்சிகளின் உச்சத்தின்போது ஆஸ்திரேலியா, ஆர்‌சி‌இ‌பியில் சேர விரைந்தது என்பது தனிப்பட்ட உறுப்பு நாடுகளின் முன்னுரிமைக்கான வாய்ப்பு என கருதப்படுகிறது. இருப்பினும் ஆஸ்திரேலியா ஒரு ஊசலாட்ட நிலையிலேயே இதுவரை இருந்து வந்துள்ளது. உதாரணமாக சென்ற ஆண்டு, பெய்ஜிங் (சீனாவின் தலைநகர்) ஆஸ்திரேலியா மீதான வர்த்தக தடைகளை குறைத்தது. ஆனால், கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த விசாரணையை கான்பெர்ரா (ஆஸ்திரேலியாவின் தலைநகர்) ஆதரித்த பின்னர், மீண்டும் சீனா தந்திரமாக சில மாட்டிறைச்சி இறக்குமதியை நிறுத்தியது, ஆஸ்திரேலிய தானியங்களுக்கு பெரும் கட்டணங்களை விதிப்பதன் மூலம் பார்லி இறக்குமதியை திறம்பட தடுத்தது. ஆஸ்திரேலிய வர்த்தகர்கள் இப்போது ஆஸ்திரேலிய ஒயின், மரம், மற்றும் நண்டுகள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் அதிக தடைகளை எதிர்கொள்கின்றனர். எனவே குவாட் ஆஸ்திரேலியாவை மீண்டும் உள்ளிழுத்துக்கொண்டது.

இந்தியாவின் மோடி கும்பல் சீனாவின் வர்த்தக கூட்டமைப்பில் இணைய கீழ்கண்ட நிபந்தனைகளை விதித்தது

1)   பால்வளத்துறை, மோட்டார் வாகனத்துறை மற்றும் ஜவுளித்துறை இறக்குமதியில் கட்டுப்பாடு

2)   2014 வரி விதிப்பு முறைகளுக்கு பதிலாக 2019 வரி விதிப்பு முறைகளை அமல்படுத்த வேண்டும்

3)   இறக்குமதி கட்டுப்பாடு மற்றும், இறக்குமதி அதிகரிக்கும் போது வரிகளை அதிகப்படுத்தும் சுய தூண்டல் (Auto-triggering mechanism) முறை தேவை

4)   முதலீட்டாளர்களின் நட்டத்தை அரசே ஏற்கும் விதிகளை தளர்த்த வேண்டும்.

5)   ஆன்லைன் வர்த்தக விதிகளில் தளர்வு தேவை

6)   ஜவுளி பொருட்கள், மோட்டார் வாகனங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் மீதான மறைமுக இறக்குமதி வரிகளில் தளர்வு தேவை

என்ற நிபந்தனைகளை ஏற்கும் பட்சத்தில் இதில் இணைய வாய்ப்புள்ளதாக தெரிவித்தது. ஏற்கனவே இந்தியா அதன் தரகு வர்க்க கும்பல்களின் நெருக்கடிகளை தற்காலிகமாகவேனும் போக்கவும், சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையை போக்கவும் இதில் இணைவதற்கான வாய்ப்பைகக் கொண்டு இருந்தது. ஆனால் பிறகு இந்த நிபந்தனைகள் விதிப்பதன் பின்புலத்தில் அமெரிக்காவின் தலையீடு காரணமாக இருந்தது.

அமெரிக்க-இந்திய போர்த்தந்திரம் மற்றும் கூட்டமைப்பு மன்றத்தின் (US-India Strategic and Partnership Forum) இரண்டாவது ஆண்டு கூட்டம் புதுதில்லியில் 2019 அக்டோபரில் 'வளர்ச்சிக்கான கூட்டணி நாடுகள்' என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் அமெரிக்கா-இந்தியாவிற்கிடையில் பல்வேறு இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவது என்று உடன்பாடு ஏற்பட்டது. இதன் பிறகு மோடி கும்பல் சீனாவின் வர்த்தக கூட்டமைப்பில் இணைவதில்லை என்று முடிவெடுத்தது. ஆகவே மோடி கும்பலின் முடிவு சுயச்சையானதல்ல.

இதனைத் தொடர்ந்து சென்ற வருட எல்லை பிரச்சினையின் போது இந்தியா-சீனாவுடனான வர்த்தக உறவில் சில தடைகளை விதித்தது. சீனாவின் பல மொபைல் ஆப் (Mobile App) களை இந்தியாவில் தடை செய்தது. இந்தப் போக்கு இந்தியாவை 'குவாட்' அமைப்புக்குள் தீவிரப்படுத்தியது.

இந்தச் சூழலில், 2022 ஜனவரிக்கு முன் சீனா RCEPயை ஒரு யதார்த்தமாக்குவதற்கு தயாராகி வருகிறது. அது முடிந்ததும் சீனாவின் ஏற்றுமதி 248 பில்லியன் டாலராக உயரும். ஜப்பான் கூடுதலாக 128 பில்லியன் டாலர்கள், தென் கொரியா 63 பில்லியன் டாலர்கள் என ஏற்றுமதியை எதிர்பார்க்கின்றன.

தென்சீனக் கடலில் சீனாவுடன் தகராறுகளைக் கொண்ட ஆசிய நாடுகளுக்கு ஆர்சிஇபி அதன் உறுப்பினர்களின் தேசிய பொருளாதாரங்களை நிலை நிறுத்துவதன் அவசியம் அதிகமானதாக உள்ளது. ஆசியானுக்கு வெளியே இவை சேருவதற்கான காரணம் 'சுதந்திர மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் ஒழுங்கு' என்கிற ராணுவக் கூட்டு என்பதாக மட்டுமே உள்ளது. இத்தகைய நிலைமைகளின் கீழ், 'குவாட்' அது முன்வைக்கும் புவிசார் அரசியல் சவால்களை மையமாகக் கொண்டு ஆர்சிஇபியின் சந்தை பொருளாதார சோதனையை மீறி ஆசியானின்  மந்தைகளை (உறுப்பு நாடுகளை) கட்டுப்படுத்துகிறது.

குவாட்டோ அல்லது ஆர்சிஇபி திட்டமோ உலக நாடுகளின் நெருக்கடிகளை தீர்க்காது. அது அமெரிக்காவின் 'வெள்ளை' நிதி மூலதனமாக இருந்தாலும் சரி, சீனாவின் 'சிவப்பு' நிதி மூலதனமாக இருந்தாலும் சரி, ஒரே பண்பு தான். நிதி மூலதனம் என்பது புல்லுருவித்தனமானது; அழுகல் தன்மை கொண்டது. நிதி மூலதனம் சுதந்திரத்தை விரும்புவதில்லை, அடிமைத்தனத்தையே விரும்பும்.

'ஆசியாவின் நேட்டோ' வாக 'குவாட்'

2020 மலபார் கடற்கரைப் பயிற்சிகளைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரும் முன்னாள் சிஐஏ இயக்குனருமான மைக் பாம்பியோ குவாட்உறுப்பினர்களை சந்தித்து பாதுகாப்பு ஏற்பாட்டை 'ஆசிய நேட்டோ' ஆக மாற்றுவது குறித்து 'பாதுகாப்பு பகிர்தல் மற்றும் புவிசார் அரசியல் இலக்குகளுடன்' விவாதித்தார். இதனை சீனா கடுமையாக எதிர்த்தது.

பனிப்போர் நிலைமைகளை கூர்தீட்டுவதும், முகாம்களுக்கிடையே மோதலை தூண்டுவதும், உலக மறு பங்கீட்டிற்கான போட்டியை தூண்டுவதுமாக அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு சேவை செய்வதுமாக இந்த 'குவாட்' அமைந்துள்ளது.

1)   இலங்கையின் வெளியுறவு செயலாளர் 2020 அக்டோபரில் இந்தியப் பெருங்கடலில் ராணுவமயமாக்கல் குறித்து கவலை தெரிவித்தார்.

2)   ஜப்பான், அமெரிக்கா மற்றும் கனடா ஆகியவை அக்டோபர் மாதம் கீன் ஸ்வார்டு (Keen Sword) என்று அழைக்கப்படும் கூட்டு கடற்படைப் பயிற்சியை நடத்தியதானது தைவான் ஜலசந்தியில் நடந்த பல கனடாவின் கடற்படைப்  பயிற்சிகளுள் முக்கியமான ஒன்றாகும். இருப்பினும் டோக்கியோவில் நடைபெற்ற இராஜதந்திர ரீதியான சந்திப்பில் இந்த கூட்டு குறித்து எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

3)   டோக்கியாவில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட்டி மோரிசன் சந்தித்தவுடன் ஆஸ்திரேலியாவும் ஜப்பான் ராணுவ உறவுகளை அதிகரிக்கும் பாதுகாப்பு உடன்படிக்கைக்கு ஒப்புக் கொண்டன.

4)   இந்தியப் பெருங்கடலின் செஷல்ஸ் தீவில் சீனா ராணுவ தளம் சில ஆண்டுகளாக அமைத்துள்ளது.

இவ்வாறு இருக்கையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் 'ஆசிய நேட்டோ' என்ற சொல்லாக்கம் அதிகப்படியானது முற்றிலும் தவறானது என்றும் ராணுவ கூட்டணியில் இந்தியாவுக்கு உடன்பாடு இல்லை எனவும் பொய் பேசி ஏமாற்றுகிறார். மேலும் அவர் பேசுகையில் 'இந்தோ-பசிபிக் பிராந்தியம்' சமீபத்திய காலங்களில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்றும் இந்த கட்டமைப்பு பனிப்போர் நிலைமைகளை வலுப்படுத்துவதாக அமையாது, மாறாக அதிலிருந்து மீளும் ஒரு முயற்சியாக அமையும் என்று தெரிவித்தார். அதாவது 'குவாட்' கூட்டமைப்பு தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவி சீனாவின் மேலாதிக்க முயற்சிகளை வீழ்த்தும் இதன் மூலம் பனிப்போர் நிலைமைகள் இல்லாமல் ஆகிவிடும் என்று பொருள்படுத்துகிறார். உண்மையில் 'குவாட்' அமைப்பு சீனாவின் மேலாதிக்க முயற்சிகளை ஒடுக்குவதற்கு பதிலாக இரண்டு முகாம்களுக்கிடையே பனிப்போர் நிலைமைகளை தீவிரப்படுத்தி ஒரு நேரடி யுத்தத்திற்க்கான தயாரிப்பாக மாறும் போக்கு நிலவுகிறது. ஆகவே 'குவாட்' கூட்டமைப்பு தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு சேவை செய்யும் 'ஆசிய நேட்டோ' வாகவே உருவாகியுள்ளது.

'குவாட்'-2021 அமெரிக்காவின் நோக்கத்தை விரிவுபடுத்தும் களமாக அமைந்தது

மார்ச் 3 2021 அன்று, இப்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் (2007ல் குவாட் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அமெரிக்க துணை ஜனாதிபதியாக அங்கம் வகித்தவர்) கீழ் உள்ள வெள்ளை மாளிகை, "இடைக்கால தேசிய பாதுகாப்பு போர்த்தந்திர வழிகாட்டுதல்களை" வெளியிட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன், குவாட் தலைவர்கள் தங்கள் முதல் சந்திப்பை நடத்துவார்கள் என்று கூறினார். சமீபத்திய வாரங்களில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோருடன் ஏற்பாடுகள் குறித்து விவாதித்ததாக ஆஸ்திரேலிய மோரிசன் கூறினார்.

மார்ச் 12 அன்று, முதல் உச்சி மாநாடு அமெரிக்க ஜனாதிபதி பைடனின் தலைமையில் (ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பில்)   நடைபெற்றது. இதில் கொரோனா தடுப்பு ஊசி, பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும் அதற்கான அர்ப்பணிப்பு பணிகளை 'குவாட்' அமைப்பு மேற்கொள்ளும் என்ற அறிவிப்பு குவாட்டின் முன்னேறிய வெர்சனாக அமைந்துள்ளது. இது சீனாவின் செல்வாக்கை எதிர்ப்பதற்கான ஒரு பரந்த போர்த்தந்திரத்தின் ஒரு பகுதியாகவே ஆசியாவில் உள்ள நாடுகளுக்கு கொரோனா தடுப்பு ஊசிகளை விநியோகிக்கும் திட்டத்தையும், 5ஜி தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் சீனாவை வீழ்த்த அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து இந்தியாவும் ஜப்பானும் 5ஜி மற்றும் அதனினும் முன்னேறிய தொழில் நுட்பங்களை கண்டுபிடிக்கவும் வடிவமைக்கவும் ஒருங்கிணைந்து பணிபுரிய ஒப்புக்கொண்டுள்ளன. இஸ்ரேலிடம் இருந்தும் கூட இதற்கான உதவிகள் பெறப்படுகிறது.

சீனாவின் RCEPக்கு போட்டியாக 'குவாட்' தற்போது அரசியல்-பொருளாதார இராணுவ கூட்டமைப்பாக வளர்ந்துள்ளது. இந்திய கப்பற்படையுடன் இணைந்து அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பலான நிமிட்ஜ் (Nimitz) அந்தமான் நிக்கோபார் தீவு கடற்பகுதிகளில் கப்பற்படை பயிற்சிகளில் 2019 முதலே ஈடுபட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் 'ஜான் பால் ஜோன்ஸ்' (USS John Paul Jones ) எனும் ஏவுகணை அழிப்பு போர்க்கப்பல் ஏப்ரல் 2021-லிருந்து லட்சத்தீவுகளில்  இயங்கத் தொடங்கியுள்ளது. பிரிட்டனின் புதிய விமானம் தாங்கி போர்க் கப்பலான 65 ஆயிரம் டன் எடையுள்ள எச் எம் எஸ் குயின் எலிசபெத் (HMS Queen Elizabeth) போர்க்கப்பல் இந்தியப் பெருங்கடலில் ஏப்ரல் மாதத்திலிருந்து இயங்க துவங்கியுள்ளது. பிரான்சின் விமானம் தாங்கிக் கப்பலான 42,500 டன் எடையுள்ள சார்லஸ் டி கேண்டில்  (Charles 'de Gandle) இந்தியாவின் விக்ரமாதித்யா கப்பலுடன் அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கான ஆயத்தப் பணிகள் துவங்கியுள்ளன.

ஜோ பைடன் கும்பலின் 'சுதந்திரமான குவாட் கூட்டமைப்பு' (Free and Open IPP - QUAD) செயல்பாடுகளுக்கு இந்தியா எடுபிடியாக செயல்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு மோடி கும்பல் தலையாட்டிவிட்டது. ஆனால் மோடி பேசுகையில் "நண்பர்களுடன் நிகழ்ச்சியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, இந்த முயற்சிக்காக அமெரிக்க அதிபர்களுக்கு நன்றி கூறுகிறேன். 'சுதந்திரமான திறந்த மற்றும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக்' மீதான எங்கள் உறுதிபாட்டினாலும் ஒன்றுபட்டுள்ளது, 'குவாட்' அமைப்பு உலகளாவிய நன்மைக்கான சக்தியாக அமைந்தது, இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையின் முக்கியமான தூணாக இருக்கும். இந்தியாவின் பாரம்பரிய கொள்கை வாசுதேவ குடும்பம்என்பதுதான் அதாவது உலகத்தையே ஒரே குடும்பமாக கருதுவது இந்திய பண்பாட்டின் பாரம்பரியம் எனவே நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து முன்பை விடவும் நெருக்கமாக பணியாற்ற வேண்டும்" என்று தனது அமெரிக்க சேவையை மண்டியிட்டு வெளிப்படுத்தினார். மோடி கும்பலின் சுயசார்பு என்பது இவ்வாறாக இந்தியாவை அமெரிக்காவின் அடியாள் படையாக - யுத்தக் களமாக மாற்றுவதே ஆகும்.

அமெரிக்காவின் 7வது கப்பற்படை குழு அறிக்கை (7th Navy fleet Statement)  கூறுவதாவது:

1.    இந்தியாவின் அனுமதி இல்லாமல் சுதந்திரமாக இயங்கும் கப்பற்படை.

2.    இந்தியா அமெரிக்காவிடம் முன் அனுமதி பெற்றே இந்தியாவிற்குரிய பொருளாதார மண்டலத்தில் இராணுவப் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

3.    தென்சீனக் கடல், அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அமெரிக்கா தனது விமானம் மற்றும் கப்பற்படை மூலம் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு இயங்கும்.

4.    சுதந்திரமான அமெரிக்க பாதுகாப்பு படை இயக்கம் (Freedom of Navigation Operation  மற்றும் சுதந்திரமான வெளிப்படையான குவாட் (Free and open Indo Pacific) நடவடிக்கைகளுக்கு இந்தியா அமெரிக்காவின் 21ஆம் நூற்றாண்டின் முக்கிய போர்த்தந்திரக் கூட்டாளி எனும் அடிப்படையில் அதன் நலன்களுக்கு இடையூறாக இருக்ககவும் கூடாது மற்றும் வேறு எவ்வித அழுத்தமும் தரக் கூடாது என்பதாகும்.

இவ்வாறு அமெரிக்காவின் போர் வெறிக்கு இந்தியாவை பலியிட்டுள்ளது இந்த மோடி கும்பல்.

குவாட்டின் எதிர்கால விரிவாக்கம்

வளர்ந்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க இன்னும் சில ஐரோப்பிய நாடுகளும் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, இங்கிலாந்து ஆகியவையும் இந்த உலக மறுபங்கீடு போட்டியில் குவாட் அமைப்பின் கீழ் அணி சேரலாம் என எதிர்பார்க்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதில் சில பிளவுகளும் ஏற்பட வாய்ப்புகளும் உள்ளது, உதாரணமாக தற்போது கூட மியான்மர் விவகாரத்தில் இந்த அணிகளுக்கிடையே இருவிதமான போக்குகள் உள்ளது இருப்பினும் இந்த போக்குகள் மியான்மரில் அமைதியை ஏற்படுத்தவல்லதல்ல மாறாக இது இந்த கூட்டமைப்பு நாடுகளுக்கிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கலாம்.

இருப்பினும் இந்த குவாட்கூட்டமைப்பு உலகமகா கொள்ளையர்களிடையே ஒரு விதமான வேலைப் பிரிவினைதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அமைப்பின் பிரதானக் காவலன் அமெரிக்க ஏகாதிபத்தியம்தான் எனினும் மற்ற ஏகாதிபத்திய கொள்ளையர்களும் இந்த ஏற்பாட்டின்கீழ் தற்காலிகமாக பெருமளவில் பயனடைந்து வருகின்றன. இதில் பங்கேற்கும் இந்தியா போன்ற புதிய காலனிய நாடுகள் அதன் இறையாண்மையை பலி கொடுத்து வருகின்றன.  

ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளும் நெருக்கடியும் உலகச்சந்தையை மறுபங்கீடு செய்வதற்கான போட்டியும், போரும் தீவிரம் பெற்று வருவதையும்அவை காலனிய நாடுகள் மீதான சுரண்டலை தீவிரப்படுத்துகின்றன என்பதையுமே இவை காட்டுகின்றன. இந்தப் போர் சூழ்நிலையானது ஏகாதிபத்தியவாதிகள் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பலவீனமாக்கிக் கொள்வதற்கு இழுத்துச் செல்கிறது; பாட்டாளி வர்க்கப் புரட்சியின் வருகையை விரைவுபடுத்துகிறது.