ஏஎம்கே நினைவுநாள் தலையங்க கட்டுரை: பாலஸ்தீன பிரச்சினையில் ஐ.நா. தீர்மானமும் ஏகாதிபத்திய நாடுகளின் சந்தர்ப்பவாதமும்
சமரன்
2023 நவம்பர் 25 ஆம் நாள் ஏஎம்கே வின் 5 வது நினைவு நாளாகும். தலைச்சிறந்த மார்க்சிய லெனினியவாதியும் தன்னிகரற்ற புரட்சியாளரும் போல்ஷ்விக் கட்சி மற்றும் சமரன் இதழின் நிறுவனருமான ஏஎம்கே விற்கு சமரன் குழு தனது சிவப்பு அஞ்சலியைச் செலுத்துகிறது.
சமரன் ஏஎம்கேவின் மா-லெ வழிகாட்டுதலில்தான் தொடர்ந்து இயங்கி வருகிறது. இன்றைய இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினையிலும் கூட அவரது சித்தாந்த தெளிவு நமக்கு வழிகாட்டுகிறது. இலங்கை - ஈழம் குறித்த தேசிய இனச் சிக்கலில் அவரது தீர்க்கமான மார்க்சியக் கண்ணோட்டம் பாலஸ்தீன தேசிய இனச் சிக்கலுக்கு தீர்வு காண வழி காட்டுகிறது. சுதந்திர பாலஸ்தீன தனி நாடே உடனடி தீர்வு என்ற முடிவிற்கு அவரது வழி காட்டுதலில் இருந்தே வந்தடைந்தோம். அது குறித்த சிறப்புக் கட்டுரை இந்த இதழில் வெளிவந்துள்ளது. அக்கட்டுரை எழுதப்பட்ட பிறகு வந்துள்ள தகவல்களில் இருந்து குறிப்பாக ஐ.நா தீர்மானத்திலிருந்து இஸ்ரேல், ஹமாஸ் குறித்த ஏகாதிபத்தியங்களின் அணுகுமுறை குறித்து வந்தடைந்த அரசியல் நிலைபாடு பற்றி சுருக்கமாக காண்போம்.
அமெரிக்க - நேட்டோ - இஸ்ரேல் அணி மத்திய கிழக்கில் இழந்து வரும் தனது செல்வாக்கிலிருந்து மீண்டு அங்கு மேலாதிக்கம் செய்யவும் எண்ணெய் - எரிவாயு வளங்களை கொள்ளையடிக்கும் பொருட்டு அங்குள்ள காலனிகளை மறு பங்கீடு செய்யவும் அகண்ட இஸ்ரேல் திட்டத்தை முன்னெடுத்துவருகிறது. அகண்ட இஸ்ரேல் கொள்கையில் இருந்துதான் பாலஸ்தீனம் இல்லாத இஸ்ரேல் எனும் ஒரு தேசக் கொள்கையை முன்வைத்துள்ளது. பாலஸ்தீனம் மட்டுமின்றி அண்டை நாடுகளையும் ஆக்கிரமிக்கும் இந்த திட்டத்திற்கு ஜியோனிசம் எனும் பெயரில் பாசிச மரபினவாத - மதவாத தேசியத்தை முன்வைத்து சமூக அடித்தளத்தை நிறுவி நியாயம் சேர்க்கப் பார்க்கிறது. நியோ நாஜிச கும்பலான இஸ்ரேல் ஆளும் வர்க்கம் அமெரிக்க - நேட்டோவின் வேட்டை நாயாக, ஒரு துணை மேலாதிக்க சக்தியாக, யுத்த தந்திர கூட்டாளியாக செயல்பட்டு வருகிறது.
அமெரிக்க காங்கிரசிடம் உக்ரேன்-இஸ்ரேலுக்கு பில்லியன் கணக்கில் உதவி கோரி ஜோ பைடன் கூறியதாவது "உக்ரைன், இஸ்ரேலில் இப்போது இன்வெஸ்ட் செய்தால் நமக்குப் பிற்பாடு நல்ல டிவிடன்ட் கிடைக்கும். அது நம் பொருளாதாரத்திற்கும் பாதுகாப்பிற்கும் நல்லது" என்றார். அதாவது உக்ரைன் போரும் காசா மீதான போரும் வால்ஸ்ட்ரீட் பங்குச்சந்தைக்கான நற்செய்தி என்கிறார். இஸ்ரேல்-காசா போரினால் அமெரிக்க ஆயுத உற்பத்தி அதிகரித்து அமெரிக்கப் பொருளாதாரம் 7 சதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்கப் பொருளாதாரம் இராணுவ மற்றும் ஆயுதப் பொருளாதாரம் என நாம் அறிந்ததே.
ஜியோனிச இஸ்ரேல் அரசு ஹமாஸ் நடத்திய தாக்குதலை சாக்காக கொண்டு காசா மீது தரைவழி தாக்குதலை இரத்த வெறியுடன் தீவிரப்படுத்தி வருகிறது. இதுவரை 9061 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 3760 குழந்தைகளும், 2326 பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர். நேட்டோ - இஸ்ரேல் யுத்தவெறி கும்பல் பிள்ளைக்கறி உண்ணும் நரமாமிச கும்பலாக உள்ளது. வெண்பாஸ்பரஸ் குண்டுகளை வீசி கொத்து கொத்தாக கொலை செய்கிறது. எண்ணெய் எரிவாயுவிற்காக பாலஸ்தீனத்தின் இரத்தம் குடிக்கும் இக்கும்பலை மத்திய தரைக்கடலில் தூக்கியெறிவது பாட்டாளி வர்க்கத்தின் முக்கியமான சர்வதேசிய கடமையாகும்.
இஸ்ரேல் ஆதரவு, ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன விடுதலை எதிர்ப்பில் ஒன்றுபடும் ஏகாதிபத்திய நாடுகள்
சீன-ரசிய அணி அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்ப்பதன் பேரில் மத்திய கிழக்கில் வளர்ந்து வரும் தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்த இஸ்ரேலின் இன ஒடுக்குமுறைப் பாசிசத்தை அங்கீகரித்துக் கொண்டே பாலஸ்தீன சுயாட்சி என பச்சோந்தித்தனமாக பேசி வருகிறது. பாலஸ்தீனம் என்றால் இந்நாடுகளுக்கு மேற்கு கரை மட்டும்தான். மேற்கு கரையில் ஆட்சியிலுள்ள தரகு பாலஸ்தீன அதிகார சபையை (பி.எல்.ஓ) சீன - ரசிய ஏகாதிபத்திய நாடுகள் ஆதரிக்கின்றன. ஆனால் ஹமாசை புறக்கணிக்கின்றன. மேற்கு கரை, காசா என்ற இரு பாலஸ்தீனப் பகுதிகளிலும் முதலாளித்துவ வளர்ச்சியின்மை காரணமாக இன்னும் ஒரு பலமான தரகு முதலாளித்துவ ஆளும் வர்க்கம் (அமெரிக்காவிற்கு உக்ரைன் அரசு, ரசியா-சீனாவிற்கு தாலிபான் அரசு போல) உருவாகவில்லை. ஏகாதிபத்தியங்களிடமிருந்து உள் ஒப்பந்தங்கள் பெற்றும், அந்நிய மூலதனத்தை அனுமதித்து பெற்ற லஞ்ச பணத்திலும், ஊழல் மூலமாகவும் பாலஸ்தீன அதிகார சபை ஒப்பீட்டளவில் (ஹமாஸ் ஆட்சியுடன் ஒப்பிடும்போது) ஒரு தரகு முதலாளித்துவ கும்பலாக வளர்ந்துள்ளது. ரசிய - சீன முகாமின் பாலஸ்தீனம் குறித்த நிலைப்பாட்டை புரிந்து கொள்வதற்கான அரசியல் அடிப்படை இதில்தான் அமைந்துள்ளது. அப்பகுதி ஏற்கனவே அமெரிக்க - நேட்டோவின் நிதிமூலதன ஆக்கிரமிப்பிற்கு ஆட்பட்டு வந்தது. தற்போது ரசிய-சீன நிதிமூலதன ஆக்கிரமிப்பிற்கும் ஆளாகி வருகிறது. அதாவது பாலஸ்தீன அதிகார சபை (Palestine Authority) இரு ஏகாதிபத்திய முகாம்களின் எடுபிடி சபையாக செயல்பட்டுவருகிறது. தற்போது சீனா - ரசியாவுடன் கூடுதலாக நெருக்கம் காட்டி வருகிறது. ஆக மேற்கு கரை அதிகார சபை குறித்த கருத்தில் இவ்விரு முகாம்களுக்கும் இன்றைய தேதியில் பெரிதாக பிரச்சினை இல்லை. நேட்டோ இதை உடனடி பிரச்சினையாக கருதவில்லை. ஏனெனில் அச்சபை சுத்தமாக வலது சந்தர்ப்பவாத தரகு முதலாளித்துவ சபையாக மாறிவிட்டது. ஆகவே ஹமாசை கணக்கு தீர்த்த பிறகு மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைத்துக் கொள்ளலாம் எனும் திட்டத்தில் அமெரிக்கா உள்ளது.
இன்றைய பிரச்சினை ஹமாஸ் குறித்த ஏகாதிபத்திய முகாம்களின் அணுகுமுறைதான். அதில் அவற்றின் நரித்தனத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நேட்டோ - இஸ்ரேல் அணி ஹமாசையும் காசாவையும் முற்றாக அழிப்பது என அறிவித்து செயல்பட்டு வருகிறது. அதன் மீது முழு யுத்தத்தை அறிவித்துள்ளது. அதை அழித்த பின்பு மேற்கு கரையை அமைதி வழியில் தன்னுடன் இணைத்துவிடலாம் என கருதுகிறது. பி.எல்.ஓ தலைவர் அப்பாஸ் ஹமாசின் தாக்குதலையும் இஸ்ரேலையும் சமப்படுத்தியும் ஹமாசுக்கும் அதிகார சபைக்கும் தொடர்பில்லை என்றும் பேசியுள்ளளார். இது அதிகார சபையின் ஏகாதிபத்தியங்களுடன் சமரசப் போக்கிற்கும் தரகுத்தன்மைக்கும் நல்ல உதாரணம்.
மேற்கு கரையின் பரப்பளவில் மொத்தமுள்ள 5860 சதுர கி.மீஇல் பி.எல்.ஓ (Area A) 18% ஐ மட்டுமே முழுதும் கட்டுப்படுத்துகிறது. அடுத்து 22% சதமுள்ள Area B மீது சிவிலியன் அதிகாரம் மட்டுமே அதிகார சபைக்கு உள்ளது. இராணுவ அதிகாரம் இஸ்ரேலிடம் உள்ளது. அத்துடன் ஒப்பிடுகையில் காசா மிக குறைந்த நிலப்பரப்பில் (365 சதுர கிலோ மீட்டர்) அமைந்துள்ளது. இஸ்ரேல் கடல், கடற்கரையை ஒட்டிய வளமான பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. அதாவது கடல் வர்த்தகம், துறைமுகம், பொருளாதார மண்டலங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை கைப்பற்றிக் கொண்டது. அதன்மூலம், பெரும்தரகு முதலாளித்துவ கும்பலாக வளர்ந்துள்ளது. இஸ்ரேல் ஆதரவு, ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன விடுதலை எதிர்ப்பில் இரு ஏகாதிபத்திய முகாம்களும் ஒன்றுபடுவதற்கான பொருளியல் அடிப்படை இதில்தான் அடங்கியுள்ளது.
மேற்கு கரையில் ஆட்சியில் உள்ள அதிகார சபைக்கு எண்ணெய் எரிவாயு வளங்கள் மீது எவ்வித அதிகாரமும் இல்லை. ஓஸ்லோவில் வழங்கப்பட்ட வளங்கள் மீதான சில சலுகைகள் கூட இன்னமும் நடைமுறைப்படுத்த முடியவில்லை. சீன-ரசிய முகாம் ஓஸ்லோவின் இரு தேசக் கொள்கையை பேச இதுவும் ஒரு காரணம் ஆகும். மேற்கு கரையில் உள்ள எரிவாயு வயல்கள் தமக்கு கிட்டுமா என அலைகின்றன. ஹமாஸ் ஆட்சி பற்றி சொல்லவே தேவையில்லை. அது ஈரான் - லெபனான் உதவியில்தான் இயங்குகிறது. அதற்கு சந்தை இல்லை. வளங்கள் மீது எவ்வித அதிகாரமும் இல்லை. ஆகவே சந்தையையும் வளங்களையும் முழுதாக கட்டுப்படுத்தும் இஸ்ரேல் அரசுடன் சந்தை பேரங்களை - எண்ணெய் எரிவாயு வயல்களை கோரி பெறுவதற்கான ஒரு பேரம் பேசும் பொருளாகவே ஹமாஸ் பிரச்சினையை ரசிய-சீன முகாம் பயன்படுத்த பார்க்கிறது; இஸ்ரேலுக்கு அழுத்தம் தரும் கருவியாக (Pressure group) ஹமாசை பயன்படுத்த பார்க்கிறது. ஈரான் லெபனானின் உதவிகளை இந்த நோக்கில் இருந்துதான் இவை அனுமதிக்கின்றன; நடு நிலை வேடம் போடுகின்றன. பாலஸ்தீனம் இஸ்ரேல் இருவரும் நண்பர்கள் என சீனாவும் ரசியாவும் குறிப்படுவதன் காரனமும் இதுதான். இவர்கள் பாலஸ்தீனம் என குறிப்பிடுவது ஐ.நாவில் பார்வையாளர் தகுதி பெற்ற பி.எல்.ஓ அதிகார சபையை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஹமாஸ் ஆட்சி இன்னமும் ஐ.நாவில் அங்கீகாரம் பெறவில்லை. ஹமாசை தனிமைப்படுத்தும் திட்டத்துடன் அவை செயல்படுகின்றன.
மேலும் ஹமாசிற்கு நேரடியாக எவ்வித ஆக்கப்பூர்வமான உதவிகளையும் சீன-ரசிய நாடுகள் இதுவரை செய்யவில்லை. ஹமாசின் அக்டோபர் 7 தாக்குதலை ரசியா மறைமுகமாக கண்டித்தது. வன்முறை எந்த வடிவிலும் ஏற்புடையதல்ல என்றும் இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என்றும் கூறியது. சீனா அதை ஆதரிக்கவும் இல்லை. கண்டிக்கவும் இல்லை. பொதுவாக வன்முறை கூடாது என அமைதிவாதம் பேசியது. இஸ்ரேல் தன்னை தற்காத்து கொள்ளும் நிலையில் இருந்து தாண்டிச் செல்கிறது என்றும், ஹமாஸ் செய்த தவறுக்கு காசா மக்களை தண்டிக்கும் அதன் செயல்பாட்டை ஏற்க முடியாது என்றும் கூறியது. அதாவது, ஹமாசை தண்டிக்கலாம்; ஆனால் மக்களை தண்டிக்க கூடாது என்றது. ஆக ஹமாசை கண்டிப்பதிலும் இஸ்ரேல் போர் தற்காப்பு போர் என்பதிலும் சீன-ரசிய முகாமும் அமெரிக்காவும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளன என்பது தெளிவு. அமெரிக்கா ஹமாசை அழிக்க துடிக்கிறது. சீன-ரசிய நாடுகள் ஹமாசை தனிமைப்படுத்தும் நோக்கில் செயல்படுகின்றன. அவ்வளவுதான் வேறுபாடு. இலங்கையில் புலிகள் விசயத்தில் அமெரிக்கா மேற்கொண்ட அணுகுமுறையைத்தான் இஸ்ரேலில் ஹமாஸ் விசயத்தில் சீன-ரசிய முகாம் மேற்கொள்கிறது.
இலங்கையில் சீன-ரசிய முகாம் புலிகளை முற்றாக அழிக்கும் நோக்கில் செயல்பட்டது. ராஜபக்சே கும்பலுக்கு அளவற்ற அரசியல் பொருளாதார இராணுவ உதவிகளை செய்தது. ஆனால் அமெரிக்காவோ புலிகளுக்கு வரவேண்டிய அனைத்து உதவிகளையும் முடக்கியது. தனிமைப்படுத்தி அதன் முதுகெலும்பை உடைத்தது. ஜெனீவா தீர்மானம் மூலம் சீனாவை அப்புறப்படுத்த ராஜபக்சே அரசுக்கு அழுத்தம் தந்தது.
பாலஸ்தீன பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண எந்த முயற்சியும் சீன- ரசிய முகாம் எடுக்கவில்லை. இஸ்ரேலை இன ஒடுக்குமுறை அரசு என்று சொல்ல துப்பில்லை. ஹமாசிற்கான ஐ.நா அங்கீகாரம் குறித்தும் பேசவில்லை. அவற்றிற்கு காசா பிரச்சினை என்பது மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்ற அகதிகள் மறு வாழ்வு குறித்த பிரச்சினை மட்டுமே; ஒருநாளும் அந்நாடுகளுக்கு அது ஒரு தேசிய இனப் பிரச்சினை அல்ல. இஸ்ரேலை இன ஒடுக்குமுறை அரசு என சொன்னால் இஸ்ரேலின் வளமான எண்ணெய் எரிவாயு வயல்களும் இரு தரப்பு வர்த்தக இராணுவ ஒப்பந்தங்களும் என்னவாகும்?? கைவிட்டு போகும். ஆகவேதான் இஸ்ரேலுடன் அரசியல், பொருளாதார, ஆயுத உதவி மற்றும் இராணுவ வர்த்தக உறவுகளை பேணி பாதுகாத்துக் கொண்டே காசாவிற்கு உதவி என்று நாடகமாடுகின்றன.
ஹமாஸ் குறித்த இவ்விரு முகாம்களின் அணுகுமுறை ஐ.நா தீர்மானங்கள் மீதான வாதங்களிலும் தெளிவாக வெளிப்பட்டது.
ஐ.நா. தீர்மானமும் ஏகாதிபத்திய நாடுகளின் சந்தர்ப்பவாதமும்
இரு வாரங்களுக்கு முன்பு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தது. அதில் (1) காசாவிற்கு வழங்கப்படும் மனிதாபிமான உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் (2) இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள ஹமாசை அழித்தொழிக்க வேண்டும். (3) போர் நிறுத்தம் கூடாது; அது ஹமாசை பலப்படுத்தும் என்ற அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. இதை மனிதாபிமான உதவிகள் செய்யக்கூடாது என்ற அம்சத்தை காரணம் காட்டி சீனாவும் ரசியாவும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இரத்து செய்துவிட்டன. இந்த தீர்மானம் அமெரிக்கா - இஸ்ரேல் அணியின் போர் வெறியை, மேலாதிக்க கனவை அப்பட்டமாக காட்டுகிறது.
ரசியா, மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் தேவை என்று ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தது. சீனா அதை ஆதரித்தது. போர் நிறுத்தம் தேவையென்ற கோரிக்கையும் கூட உலகெங்கும் வெடித்துள்ள மக்கள் போராட்டங்களின் விளைவாக வைக்கப்பட்ட கோரிக்கையே ஆகும். நாம் முன்பே கூறியவாறு இது அவர்களுக்கு மனிதாபிமான உதவி வேண்டுகின்ற பிரச்சினை மட்டுமே. இந்த தீர்மானம் இஸ்ரேலை கண்டிக்கவோ, தேசிய இனச் சிக்கலுக்கு தீர்வு குறித்தோ பேசவில்லை. துவக்கத்தில் தீர்வாக முன்வைத்த ஓஸ்லோவின் இருதேசக் கொள்கையைக் கூட இதில் பேசவில்லை. இத்தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோவை பயன்படுத்தி இரத்து செய்துவிட்டது.
இறுதியில் பாதுகாப்பு கவுன்சில் முன்மொழிந்த தீர்மானம் வருமாறு:
1) இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதல் கண்டனத்துக்குரியது
2) போர் நிறுத்தம் தேவை
3) காசாவிற்கு மனிதாபிமான உதவி தேவை
என்ற அம்சங்களுடன் அந்த தீர்மானம் முன்மொழியப்பட்டது.
இந்த தீர்மானம் இஸ்ரேலை கண்டிக்கவில்லை; மாறாக ஹமாசை கண்டிக்கிறது. இஸ்ரேலின் பாசிச இன ஒடுக்குமுறையை கேள்வி எழுப்பவில்லை; இனப்படுகொலை குறித்து பேசவில்லை. போரை நடத்தும் இஸ்ரேலை ஆதரித்துக் கொண்டே போர் நிறுத்தம் பேசி நாடகமாடுகிறது. இதில் போர் நிறுத்தம், காசாவிற்கு உதவி என்பதை உடனடி தீர்வாக வரவேற்கலாம். மற்றபடி எந்தவொரு அரசியல் தீர்வும் இல்லை.
இந்த தீர்மானத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் எதிர்த்ததில் வியப்பேதும் இல்லை. அவை போர் நிறுத்தம் கூடாது என்று பேசியதை முன்பே பார்த்தோம். ஆகவே இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள இதில் உத்திரவாதம் இல்லை என்று கூறி வீட்டோ அதிகாரம் மூலம் தீர்மானத்தை அமெரிக்கா தோற்கடித்துவிட்டது. காசாவிற்கு உதவிகள் வழங்கக்கூடாது என்று கூறிய அமெரிக்கா உள்நாட்டில் பெரும் போராட்டங்கள் வெடித்தப் பிறகு இரு நாட்களுக்கு முன்பு உதவி வழங்கலாம் என்று கூறியுள்ளது.
இந்த தீர்மானத்தை சீனா, பிரான்ஸ், ஜப்பான் ஆதரித்து வாக்களித்தன.
ரசியாவும், பிரிட்டனும் வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தன.
போர் நிறுத்தம் என்பதை தாண்டி ஹமாஸ் மீதான கண்டனத் தீர்மானத்தை சீனா நேரடியாக ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ரசியா வெளி நடப்பு செய்ததன் மூலம் ஹமாஸ் மீதான கண்டன தீர்மானத்தை மறைமுகமாக ஆதரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதலுக்குப் பிறகு சீனாவும் ரசியாவும் ஹமாசை ஆதரிக்கவும் இல்லை; கண்டிக்கவும் இல்லை. ஆனால் தற்போது ஹமாசை கண்டிக்கவும் - தண்டிக்கவும் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை நேரடியாக ஆதரிக்கும் நிலைபாட்டிற்கு வந்தடைந்துள்ளன.
ரசியாவும் சீனாவும் ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு தீர்வாக முன் வைத்த ஓஸ்லோவின் இரு தேசக் கொள்கையை தீர்மானத்தின் மீதான வாதத்தில் வலியுறுத்தவில்லை. இஸ்ரேலை இன ஒடுக்குமுறை அரசு என்றோ இனப்படுகொலையாளன் என்றோ சொல்லவில்லை. குறைந்த பட்சம் இஸ்ரேலை கண்டிக்க கூட இல்லை. ஹமாசைத்தான் கண்டித்துள்ளன.ஹமாசின் பக்கம் உள்ள நியாயங்களை பேசவில்லை. ஹமாஸிற்கு எந்தவித ஆக்கப்பூர்வமான உதவிகளையும் செய்ததாக தகவல் இல்லை. ஆனால் ஹமாசிற்கு இந்த நாடுகள் உதவி செய்துவருவதாக சொல்லிய திருத்தல்வாதிகள் இன்று சீனா - ரசியாவிடம் உதவி செய்! உதவி செய்! என பிச்சை எடுக்கின்றனர். ஏகாதிபத்தியத்தின் காலை நக்கியாவது ஹமாசிற்கு உதவி கேட்கலாம் என அவற்றின் கால்களுக்காய் காத்துக்கிடக்கிறார்கள். ஆனால் சீன-ரசிய ஏகாதிபத்தியங்கள் அவர்களுக்கு காலை நீட்ட தயாரில்லை என்பதைத்தான் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் குறித்த வாதங்களில் அவற்றின் நிலைப்பாடு தெளிவாக காட்டுகிறது. எட்டி உதைத்தாலும் ஏகாதிபத்தியங்களின் காலை நக்கிப் பிழைக்க காத்துக் கிடக்கின்றனர். கொள்கையை அறிவாலயத்தில் அடகு வைத்த கும்பலுக்கு மான வெட்கம் ஏது?
இவ்வாறாக பாதுகாப்பு கவுன்சிலில் இரு ஏகாதிபத்திய முகாம்களும் மாறி மாறி பாலஸ்தீனப் பிரச்சினையை வீட்டோ அதிகாரத்தை வைத்து சதுரங்கம் ஆடி வருகின்றன. உருப்படியான எந்தவொரு தீர்மானத்தையும் சீன - ரசிய நாடுகள் முன்வைக்கவில்லை. ஏகாதிபத்திய நாடுகள் வீட்டோ அதிகாரத்தை உலக மேலாதிக்க நலன்களுக்கு உட்பட்டுத்தான் பயன்படுத்துகின்றன. முதலில் இந்த நாடுகளின் வீட்டோ அதிகாரம் பறிக்கப்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் தரப்பட வேண்டும். இல்லை எனில் ஐ.நா ஏகாதிபத்தியங்களின் கைப்பாவையாகவே இருக்கும்.
பாதுகாப்பு கவுன்சிலில் தீர்வு எட்ட முடியாததை அடுத்து ஐ.நா பொதுச்சபை கூடியது. அதில் ஒரு தீர்மானம் முன் மொழியப்பட்டது.
1) உடனடி போர் நிறுத்தம்
2) காசாவிற்கு உதவி
என்ற இரு அம்சங்களை அது கொண்டிருந்தது. இதில் இஸ்ரேலை கண்டிக்கும் அம்சங்களோ, ஹமாசை கண்டிக்கும் அம்சங்களோ இடம் பெறவில்லை.
இதை அமெரிக்காவும் இஸ்ரேலும் எதிர்த்து வாக்களித்தன. சீனாவும் ரசியாவும் ஆதரித்து வாக்களித்தன. இந்தியா வாக்களிக்காமல் வெளி நடப்பு செய்து தனது பாசிசக் கூட்டாளியான இஸ்ரேலுக்கு சாதகமாக செயல்பட்டது. 120 நாடுகள் ஆதரவாக வாக்களித்ததால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு வாரம் ஆகியும் இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் நிற்கவில்லை. தீர்மானத்தை பின்பற்றவில்லை எனில் இஸ்ரேல் மீது 120 நாடுகளும் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற அம்சம் தீர்மானத்தில் இல்லை. சீனாவும் ரசியாவும் அதை கோரவும் இல்லை. பிறகு எவ்வாறு இஸ்ரேல் கட்டுப்படும்? இவை எல்லாம் வெறும் கண்துடைப்பு; கேலிக்கூத்து. இதை பாட்டாளி வர்க்க இயக்கங்கள் நம்பாது.
தொகுத்துக் கூறுவதெனில்,
அமெரிக்க - நேட்டோ முகாமும் சீன-ரசிய முகாமும் பின் வரும் விசயங்களில் ஒன்றுபடுகின்றன.
1. இஸ்ரேலுக்கு அரசியல்-பொருளாதார-இராணுவம்-ஆயுத ஏற்றுமதி மற்றும் வர்த்தகத் துறைகளில் முழு ஒத்துழைப்பு தருவது.
2. பாலஸ்தீன விடுதலைப் போரை நசுக்குவது
3. இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதலை கண்டிப்பது; ஹமாசை தண்டிப்பது
4. ஒருபுறம், காசா மக்களை கொல்வதற்கு ஆயுத சப்ளை செய்து கொண்டே, மறுபுறம் அம்மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்வது (அதாவது, ஒரு கையில் ஆயுதம்; மறு கையில் ரொட்டித் துண்டு என்ற ஏகாதிபத்தியங்களின் பாரம்பரிய பச்சோந்தித் தனம்)
5. பாலஸ்தீன அதிகார சபைக்கு ஆதரவு
6. ஹமாசை தனிமைப்படுத்துவது (ரசிய-சீன நிலைபாடு) அல்லது அழிப்பது (அமெரிக்க நிலைபாடு)
இவ்விரு ஏகாதிபத்தியங்களும் பின்வரும் விசயங்களில் முரண்படுகின்றன.
1. மத்திய கிழக்கில் மேலாதிக்கம் மற்றும் மறுபங்கீட்டிற்கான போட்டியில் முரண்பாடு (இதற்கு தடையாக உள்ள பாலஸ்தீன விடுதலைப் போரை நசுக்குவதில் ஒற்றுமை)
2. இஸ்ரேலின் சந்தை, எண்ணெய் எரிவாயு வயல்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட பொருளாதார மண்டலங்கள் மற்றும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை (திகி) பங்கிட்டுக் கொள்வதில் முரண்பாடு
ஐ.நா. தீர்மானங்கள் ஏகாதிபத்தியங்களின் கழிவறைக் காகிதங்களே! எனவே, அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் நடந்து வரும் மக்கள் போராட்டங்களே போர் நிறுத்தத்திற்கும் நேட்டோ - இஸ்ரேலை தண்டிக்கவும் வழி வகுக்கும்.
பாலஸ்தீனத்தின் மீதான நேட்டோ இஸ்ரேலின் இன அழிப்பு போரை எதிர்ப்பதும் இரு ஏகாதிபத்திய முகாம்களின் மறுபங்கீட்டிற்கான பனிப்போரில் பாலஸ்தீன விடுதலை பலியிடப்படுவதை எதிர்ப்பதும் நமது சர்வதேசியக் கடமை எனில் இதற்கு துணை போகும் மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவது நமது தேசியக் கடமையாகும். இவ்விரு கடமைகளுக்காக போராட ஏஎம்கே நினைவு நாளில் சமரன் உறுதி ஏற்கிறது. மேலும் போராட வருமாறு உழைக்கும் மக்களையும் ஜனநாயக சக்திகளையும் அறை கூவி அழைக்கிறது.
- சமரன் (அக்டோபர் -நவம்பர் 2023 இதழில்)