அமெரிக்க - சீன ஏகாதிபத்தியங்களின் தெற்காசிய மேலாதிக்கப் போட்டியில் பலியிடப்பட்ட வங்கதேசம்

சமரன்

அமெரிக்க - சீன ஏகாதிபத்தியங்களின் தெற்காசிய மேலாதிக்கப் போட்டியில் பலியிடப்பட்ட வங்கதேசம்

வங்கதேச நெருக்கடி

மத்திய கிழக்கு நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட திவால்நிலை தற்போது தெற்காசிய நாடுகளையும் ஆட்டிப் படைத்து வருகிறது. இலங்கை, பாகிஸ்தான், நேபாளத்தைத் தொடர்ந்து இன்று பங்களாதேசும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. 2022ம் ஆண்டில் இலங்கையில் என்ன நடந்ததோ அதையொத்த காட்சிகள் அப்படியே பங்களாதேசத்திலும் தற்போது அரங்கேறியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே பங்களாதேசத்தில் பொருளாதார மந்தநிலை நீடிப்பதாக எச்சரிக்கப்பட்டது. பங்களாதேச அரசு அதில் இருந்து மீள்வதற்கு எந்த முயற்சிகளும் செய்யாமல் மென்மேலும் ஏகாதிபத்திய - தரகுமுதலாளித்துவ கும்பலில் சேவைக்கு முக்கியத்துவம் அளித்ததே, இன்றைய நெருக்கடிக்கும், திவால் நிலைக்கும் காரணமாகும்.  

மாணவர்கள் போராட்டமும் சேக் ஹசீனா தப்பியோட்டமும்

வங்கதேச விடுதலைப் போரில் பங்கெடுத்தவர்களின் சந்ததியினருக்கு  இடஒதுக்கீட்டில் 30% சதவிகிகதம் ஒதுக்கும் முறை முன்னர் அமலில் இருந்து வந்தது. அது 2018ம் ஆண்டில் நீக்கப்பட்டிருந்தது. 4 வது முறையாக சேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு பதவியேற்றபின் இந்தாண்டு ஜூன் மாதத்தில் மேற்குறிப்பிட்ட இடஒதுக்கீட்டை மீண்டும் அமலுக்கு கொண்டு வந்தது. இந்த இடஒதுக்கீட்டு முறையை எதிர்த்து 2024 ஜூலை 14ல் மாணவர்கள் போராட்டத்தைத் துவங்கினர். அவர்கள் பாகுபாட்டிற்கு எதிரான மாணவர்கள் இயக்கம் (Students movement against Discrimination) என்ற பெயரில் ஒன்று திரண்டனர். இந்த இடஒதுக்கீடு முறை அவாமிலீக் கட்சிக்கு ஆதரவானவர்களை மட்டும் அரசுப்பணிகளில் நியமிக்கும் நோக்கம் கொண்டதாக கருதி மாணவர்கள் எதிர்த்தனர். அதனால் இடஒதுக்கீட்டில் சீர்திருத்தம் செய்வதற்கான அவசரச் சட்டம் நிறைவேற்ற வேண்டி, ஜனாதிபதி முகமது ஷஹாபுதினிடம் கோரிக்கை மனுவை சமர்ப்பித்தனர். இந்த மனுவை சேக் ஹசீனா அரசு நிராகரித்தது. இதனால் மறுநாள் போராட்டம் தீவிரமடைந்தது.

மாணவர்களின் இப்போராட்டத்தை சேக் ஹசீனா அரசு பாசிச முறையில் அடக்க துவங்கியது.  ஜூலை15ல், பங்களாதேஷ் எல்லைக் காவல்படை மற்றும் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பான சத்ரா லீக் அமைப்பினரை மாணவர்களின் போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் ஈடுபட செய்தது. இக்கும்பல் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது கற்களை வீசியதோடு, இரும்புக் கம்பிகள் கொண்டும் தாக்குதலில் ஈடுபட்டது. இது கலவரமாக வெடித்தது. இந்த தருணத்தை எதிர்பார்த்திருந்த அரசு ஜூலை 16 முதல் மாணவர்களின் போராட்டத்தை தீவிரமாக ஒடுக்கத் துவங்கியது. துப்பாக்கிச் சூட்டை நடத்தியது; அதில் 7 பேர் பலியாகினர். சுமார் 12000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தரப்பில் தயாராக இல்லை. மாறாக அவர்களை "ரசாக்கர்ஸ் (razakars) - பாகிஸ்தான் ஆதரவு தேச துரோகிகள்" என்று முத்திரைக் குத்தி நெருப்பைத் தூண்டிவிட்டார். இதனால் போராட்டம் நாடு முழுவதும் தீப்பற்றியது. ஜூலை21ல், உச்ச நீதிமன்றம் இடஒதுக்கீடு முறையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. மாணவர்களின் சட்ட சீர்திருத்த கோரிக்கை நிறைவேறாததாலும், சேக் ஹசீனா அரசின் அடக்குமுறையாலும் மாணவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை;போராட்டம் மேலும் தீவிரமடைந்தது; அது ஆட்சியைத் தூக்கியெறிவதற்கான போராட்டமாக எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பால் வளர்த்தெடுக்கப்பட்டது.

சேக் ஹசீனா அரசும் துப்பாக்கிச் சூட்டையும் அடக்குமுறையையும் மேலும் அதிகரித்தது. 450க்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கியது. சேக் ஹசீனாவை ஆட்சியிலிருந்து விரட்டியடிக்க ஆகஸ்ட் 5 அன்று மாபெரும் பேரணியும் பிரதமர் அலுவலக முற்றுக்கைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. சேக் ஹசீனாவின் உயிருக்கு ஆபத்து எனும் உளவுத்துறையின் எச்சரிக்கையிலிருந்தும் இலங்கை அனுபவத்திலிருந்தும் சேக் ஹசீனா ரகசிய விமானத்தில் நாட்டை விட்டு தப்பியோடினார். இந்திய மோடி அரசின் ஒத்துழைப்புடன் டெல்லியில் தஞ்சம் புகுந்தார். அவரின் இருப்பிடம் ரகசியமாக பாதுகாக்கப்பட்டது. இன்று வரைகூட அவர் இந்தியாவில் உள்ளாரா அல்லது வளைகுடா நாடுகளுக்கு சென்றுவிட்டாரா என்பது குறித்த தகவல் ரகசியமாகவே உள்ளது.

இது இடஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல, அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டமே!

இந்த இட ஒதுக்கீடு தொடர்பான போராட்டத்திற்கு உடனடி காரணமாக அமைந்தது நாட்டில் நிலவிய வேலையின்மை அதிகரிப்பு, வறுமை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகளின் வெளிப்பாடே ஆகும்.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 5.1% சதவிகிதம் குடும்பங்கள் நாளொன்றுக்கு 2.15 டாலருக்கும் (ரூ.175) குறைவான வருமானத்துடனும் 29.4% சதவிகிதம் குடும்பங்கள் 3.65 டாலருக்கும் (ரூ.300) குறைவான வருமானத்துடனுமே வறுமையில் உழல்கின்றனர். கடந்த ஆண்டுகளை விட வறுமை விகிதம் உயர்ந்துள்ளதாக ஆசிய வளர்ச்சி வங்கியே தெரிவிக்கிறது. மேலும், இவர்களின் வருமானத்தில் பாதிக்கு மேல் உணவுக்காகவே செலவிடும் அளவிற்கு விலைவாசி உயர்வு பன்மடங்கு உயர்ந்துள்ளது. அதன் மூலம் அவர்களின் அத்தியாவசிய உணவுத் தேவை கூட பூர்த்தியாகாத நிலையே நீடிக்கிறது.

20 ஆண்டுகளுக்கு முன்பு 1 டாலருக்கு நிகரான பங்களாதேஷ் நாணய மதிப்பு 57 டாக்காவாக இருந்தது; தற்போது அது 120 டாக்காவாக மாறி பங்களாதேஷ் நாணய மதிப்பு படுமோசமான வீழ்ச்சியடைந்துவிட்டது. 2021ம் ஆண்டில் 48 பில்லியன் டாலர்களாக இருந்த அந்நிய செலாவணி கையிருப்பானது, 2024ல் பாதிக்கு மேல் குறைந்து வெறும் 19 பில்லியன் டாலர்களாக மாறியது; அந்நியக் கடன்சுமையாலும், வர்த்தகப் பற்றாக்குறையாலும் கையிருப்பு சூறையாடப்பட்டுள்ளது. நாணய வீழ்ச்சியும் அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சியும் - எண்ணெய், எரிவாயுக்களை விலைகொடுத்து பெறுவதில் தட்டுப்பாட்டை உருவாக்கியது. அவை, விலையேற்றத்தின் சுமைகளை மக்கள் தலையில் மேலும் சுமத்துவதற்கு வித்திட்டது. 

2021ம் ஆண்டில் பணவீக்கம் வெறும் 5.6% சதவிகிதமாக இருந்தது. 2024ல் அது வரலாறு காணாத அளவிற்கு 9.6% சதவிகிதமாக உயர்ந்தது. இதனால், அனைத்து அத்திவாசியப் பொருட்களின் விலையும் விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டன. உணவுப் பொருட்களின் விலைவாசி 59% சதவிகிதம் அளவிற்கும், வீட்டு வாடகை, பெட்ரோல், மின்சாரம் தொடர்பான விலைவாசி 17% சதவிகிதம் அளவிற்கும், உடைகளின் விலைவாசி 7% சதவிகிதம் அளவிற்கும் உயர்ந்துள்ளது. மறுபுறம், சென்ற ஆண்டு 3.41% சதவிகிதமாக இருந்த வேலையின்மை நடப்பாண்டில் 5.6% சதவிகிதமாக உயர்ந்தது. இதனால், மக்களிடம் வாங்கும் சக்தியின்மையும் வறுமையும் அதிகரித்துள்ளது.

17 கோடிக்கும் அதிகமான மக்கள் அடர்த்தியாக வாழும் ஒரு சின்னஞ்சிறிய நாடுதான் பங்களாதேஷ். 2000ம் ஆண்டுகளுக்கு பிறகு இதன் ஒட்டுமொத்த உற்பத்தி (ஜிடிபி) 20 மடங்கு அதிகரித்து 460 பில்லியன் டாலர்களாகவும், மக்கள் தொகை அடிப்படையிலான ஜிடிபி பெர்கேபிட்டா 2690 டாலர்களாகவும் உயர்ந்திருந்தாலும் (இந்தியாவை விட அதிகம்) மக்கள் தொகையில் 3ல் 1 பங்கினர் நாளொன்றுக்கு 3 டாலர் கூட சம்பாதிக்க முடியாத அவலநிலையே நீடிக்கிறது எனில் இந்த உற்பத்தி யாருக்கானது என்பது வெள்ளிடைமலை.

விதிவிலக்கில்லாமல், பங்களாதேஷிலும் ஏழை - பணக்காரர்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  மேல்தட்டு 10% சதவிகிதம் பணக்கார நபர்களிடம் மொத்த சொத்தில் 41% சதவிகிதம் குவிந்திருக்கும் அதேவேளையில் அடிமட்ட 10% சதவிகிதம் ஏழைகள் வெறும் 1.31% சதவிகிதம் மட்டுமே பெற்றுள்ளனர். மேலும், 90% சதவிகிதம் மக்கள் சராசரியாக 1 டாலர் சம்பாதிக்கும் சமநேரத்தில் முதல் 10% சதவிகிதம் பில்லியனர்கள் 1.7 மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கின்றனர். அவர்களின் சொத்து மதிப்பு சராசரியாக நாளொன்றுக்கு 2.7 பில்லியன் டாலர் அளவுக்கு குவிந்து வருகிறது. மூசா பின் சம்சீர், சல்மான் ரஹ்மான், முகமது ஆசிஷ் கான் உள்ளிட்ட பில்லியனர்கள் உலக பணக்காரர்கள் பட்டியலில் போட்டியிடும் அளவுக்கு தங்களது சொத்து மதிப்புகளை உயர்த்தியுள்ளனர். இந்த தரகுமுதலாளித்துவ கும்பல்களின் நலன்களுக்காகத்தான் மக்களை ஓட்டாண்டிகளாக்கி பாசிச காட்டாட்சியை நடத்தி வந்தது சேக் ஹசீனா அரசு. பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்களுக்கு வரிச் சலுகைகளை வாரி வழங்கி அந்த சுமைகளைகளையும் மக்கள் தலையில் சுமத்தியது.

அதோடு மட்டுமில்லாமல்,

·       பங்களாதேஷ் தொழிலாளர் சட்டத் திருத்தம் 2023

·       பங்களாதேஷ் பொருளாதார மண்டலங்களுக்கான சட்டத் திருத்தம் 2023

·       பொது பென்சன் மேலான்மை சட்டம் 2023

·       வங்கி நிறுவன சட்டத் திருத்தம் 2023

·       நிலம் கையகப்படுத்துதல் மற்றும் குத்தகைச் சட்ட திருத்தம் 2023

·       சுங்கச் சட்டம் 2023

·       வருமான வரிச் சட்டம் 2023

·       சைபர் பாதுகாப்புச் சட்டம் 2023

·       பதிப்புரிமைச் சட்டம் 2023

·       அறிவுசார் சொத்துரிமைச் சட்டம் 2023

·       நிதிநிறுவனச் சட்டம் 2023

உள்ளிட்ட 66 பாசிச சட்டங்களை கடந்த ஆண்டில் மட்டும் அவசரகதியில் நிறைவேற்றியுள்ளது. தொடர்ச்சியாக இதுபோன்ற பாசிச சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்து மக்களை ஒட்டச்சுரண்டியும் ஒடுக்கியும் வந்தது. மேலும், பாசிச ஆட்சியை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ப பங்களாதேஷ் அரசியலமைப்புச் சட்டத்திலும் கூட 2018ம் ஆண்டுக்கு பிறகு, அதிகார குவிப்புக்கான திருத்தங்களை 17 முறை கொண்டு வந்துள்ளது அவாமிலீக் அரசு.

வறுமை, வேலையின்மை, விலைவாசி உள்ளிட்ட நெருக்கடிகளும் இத்தகைய பாசிச ஆட்சிக்கு எதிரான போராட்டங்களுமே இட ஒதுக்கீடுக்கு எதிரான போராட்டமாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் அரசை தூக்கியெறிவதற்கான போராட்டமாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் நெருக்கடிக்கான காரணங்கள் என்ன?

பங்களாதேசின் நெருக்கடியானது இலங்கையைப் போலவே ஏகாதிபத்திய நாடுகளின் ஏகபோக நலன்களையும் வங்கதேச ஆளும் தரகுமுதலாளி வர்க்க நலன்களையும் பாதுகாக்கும் வகையில் புதிய காலனிய அரசியல் பொருளாதார - இராணுவ கொள்கைகளை அமல்படுத்தியதால் உருவான முதலாளித்துவ நெருக்கடியே ஆகும். அது குறித்து சுருக்கமாக பார்க்கலாம்.

ரஷ்யாவின் மேலாதிக்க நலன்களிலிருந்து உருவாக்கப்பட்ட பங்களாதேஷ்

1971ல் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து பங்களாதேஷ் தனி நாடாக உருவானது. அப்போது பாகிஸ்தான் அமெரிக்காவின் புதிய காலனியாக இருந்தது. வங்காள மொழிவழி தேசிய கோரிக்கைகள் பங்களாதேஷ் (அன்றைய கிழக்கு பாகிஸ்தான்) மக்களிடம் ஆங்காங்கே இருந்தாலும் அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த தேசிய இன விடுதலைப் போராட்டமாக வடிவம் எடுக்கவில்லை. பாகிஸ்தானில் மறுபங்கீடு போட்டியில் இறங்கிய ரஷ்ய சமூக ஏகாதிபத்தியம் பாகிஸ்தானை உடைத்து பங்களாதேஷை உருவாக்கியது. அன்றைய கட்டத்தில் ரஷ்ய சார்பு நிலையிலிருந்த இந்திரா அரசும் தனது துணை மேலாதிக்க நலன்களிலிருந்து பாகிஸ்தானை உடைக்கும் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு துணை நின்றது. இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டது. முஜிபுர் ரகுமான் தலைமையில் அமைந்த தரகு கும்பலின் ஆட்சி ரஷ்யாவின் புதிய காலனிய நலன்களுக்குச் சேவை செய்தது.

அமெரிக்க மேலாதிக்கத்தின் கீழ் பங்களாதேஷ்

முஜிபுர் ரகுமான் ஆட்சி தொடக்கத்தில் (இந்தியாவை போன்றே) சமூக நல பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தி வந்தது. உலகளவில் ஏற்பட்ட பொது நெருக்கடி, ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தின் தோல்வி முகம், இந்தியாவில் எமர்ஜென்சி காலத்திற்கு முந்தைய நெருக்கடி ஆகியவை பங்களாதேஷிலும் எதிரொலித்தது. 1972லிருந்தே அமெரிக்கா தனது நிதிமூலதனக் கட்டுப்பாட்டில் பங்களாதேஷைக் கொண்டு வர முயற்சித்தாலும் ரஷ்யாவின் மேலாதிக்கம் இருந்ததால் அது சாத்தியப்படவில்லை. 1975ல் ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்த முஜிபுர் ரகுமானை இராணுவம் மூலம் சதி செய்து கொலை செய்தது அமெரிக்கா. அது முதல், வங்காளதேசத்தை தனது மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.   300 மில்லியன் டாலர்களை அப்போதே உதவி எனும் பெயரில் கடனாக வழங்கி தனது ஆதிக்கத்தின் பிடியில் கொண்டு வந்தது. 1983ல் வங்கதேச சந்தையை அமெரிக்காவின் மூலதனத்திற்கு திறந்துவிட்டது ஹுசைன் முகமது எர்சத் தலைமையிலான இராணுவ அரசு. சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் அந்திம காலத்தில் வங்கதேசத்தையும் இந்தியாவையும் தனது பிடியில் கொண்டு வந்தது அமெரிக்கா. சார்க் (SAARC) கூட்டமைப்புகள் மூலம் தெற்காசிய நாடுகள் மீது தனது புதிய காலனிய பிடியை மேலும் இறுக்கிக் கொண்டது.  

2014 வரை உள்கட்டமைப்பு திட்டங்கள், அணு ஆற்றல் திட்டங்கள் உள்ளிட்ட திட்டங்கள் மற்றும் இருதரப்பு வர்த்தகங்களுக்கு 6பில்லியன் டாலர் வரை முதலீடு செய்திருந்தது. சோயா, கோதுமை, பருத்தி போன்ற விளைப் பொருட்களையும் இரும்புத் தளவாடங்கள், இயந்திரங்கள், விமானங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்து வங்கதேச சந்தையில் கொட்டிக் குவித்தது. உள்நாட்டு உற்பத்தியையும் விவசாயத்தையும் தனது நலன்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்தது. அமெரிக்காவின் செவ்ரான் (Chevron) நிறுவனம் பங்களாதேசின் இயற்கை எரிவாயுத் தேவையை 50% சதவிகிதம் அளவுக்கு வழங்கியது. 2022 புள்ளிவிவரப்படி, பங்காளதேசின் தகவல்-தொடர்பு தொழில்நுட்பத் துறைகள் 34% சதவிகிதம் அளவுக்கு அமெரிக்காவைச் சார்ந்தே இயங்கி வருகிறது.

ஸ்வாட்ஸ் (SWADS) எனும் சிறப்பு கடற்படையை இந்தோ-பசிபிக் யுத்ததந்திர நலன்களுக்கு சேவை செய்யும் விதமாக 2009ல் உருவாக்கியது. இந்த படை அமெரிக்காவின் கண்காணிப்பில் பல்வேறு இராணுவ பயிற்சிகளில் வங்காள விரிகுடா பகுதிகளில் ஈடுபட்டது.

இராணுவ அரசு, பேகம் கலீதா ஷியா தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் (BNP) அரசு, சேக் ஹசீனா தலைமையிலான அவாமிலீக் அரசு ஆகியவை மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு 2010ம் ஆண்டு வரை கூட பங்களாதேச கதவுகளை அகல திறந்தே வைத்திருந்தன.

சீனாவின் புதிய காலனியாதிக்க முயற்சிகள்

ஒருபக்கம் அமெரிக்காவின் நிதிமூலதனம் பங்களாதேசை தனது செல்வாக்கு மண்டலமாக உருவாக்கி வைத்திருந்த போதிலும் புதிதாக - மிக வேகமாக வளர்ந்து வந்த சீன ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பங்களாதேஷ் மாறத் துவங்கியது. 2001ம் ஆண்டில் ஷாங்காய் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அக்கூட்டமைப்பு மறுபங்கீட்டு போட்டியில் ஈடுபட ஆரம்பித்தது. இதன் பிறகு அமெரிக்காவின் யுத்தத்தந்திரமே மாறியது; அது வரை இருந்த இசுலாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான உலகு தழுவியப் போர் என்பதை கைவிட்டு, சீன சுற்றிவளைப்பை மையப்படுத்தியது. அந்த அளவிற்கு சீனா போட்டி சக்தியாக வளர்ந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. 2002ம் ஆண்டிலிருந்து சீனாவின் நிதிமூலதனம் மெல்ல மெல்ல பங்களாதேசத்துக்குள் நுழைய ஆரம்பித்தது. 1பில்லியன் டாலர் அளவுக்கு தொடங்கிய இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் நாளடைவில் பங்களாதேசத்தின் பிரதான அந்நிய முதலீட்டாளராக சீனாவை மாற்றியது. 2001ல் சேக் ஹசீனா ஆட்சி தோற்கடிக்கப்பட்ட பின் 2009ல் அவர் இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராகிறார். அதன் பின்னர் சீனா - பங்களாதேஷ் அரசியல் பொருளாதார உறவுகள் மேலும் ஆழப்பட்டன. 2011 ம் ஆண்டுக்கு பின்னர் சீனா பங்களாதேசின் தவிர்க்க முடியாத பங்காளனாக வளர்ந்து வந்தது. 2011லிருந்து 2019ம் ஆண்டுக்குள் அதன் முதலீடுகள் 11 மடங்கும்; கடந்த 20 வருடங்களிலிருந்து தற்போது வரை அதன் நிதியாதிக்கம் 20 மடங்குகளுக்கு மேலும் உயர்ந்து விட்டது. பங்களாதேசின் விவசாயம், ஜவுளி, சேவைத் துறைகள், புதிய ஆற்றல் துறைகள், உள்கட்டமைப்பு திட்டங்கள், பாதுகாப்புத்துறை என அனைத்திலும் சீனாவின் ஆதிக்கம் வளர்ந்துள்ளதை விவரங்கள் மூலம் அறியமுடிகிறது.

2023ன் படி, 700க்கும் மேற்பட்ட சீன கார்ப்பரேட் நிறுவனங்கள் பங்களாதேசில் கிளைகளை பரப்பி அம்மக்களின் உழைப்பை மலிவான விலைக்கு சுரண்டி வருகின்றன. அவை 1.4பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு பங்குகள் (investment stocks) செய்துள்ளன. சீனாவின் மொத்த வர்த்தக முதலீடுகள் சுமார் 20பில்லியன் டாலருக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் பங்களாதேசில் அமெரிக்காஇந்தியாவின் முதலீடுகளை பின்னுக்குத் தள்ளி சீனா முதலிடம் வகிக்கிறது. அதேபோல், 24.1 பில்லியன் டாலர் அளவுக்கு சீனப் பொருட்கள் பங்களாதேஷ் சந்தையில் கொட்டிக் குவிக்கப்பட்டு வருகின்றன. அதேசமயத்தில் 0.69பில்லியன் டாலர் அளவுக்குதான் ரெடிமேட் ஜவுளி உள்ளிட்ட பங்களாதேச பொருட்கள் சீனாவால் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 8500க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு 99% சதவிகிதம் வரிதள்ளுபடி என்ற மோசடி ஏமாற்றுகளையும் தாண்டி, சீன- பங்களாதேஷ் வர்த்தகப் பற்றாக்குறை தொடர்ச்சியாக அதிகரித்து பங்களாதேசை சீனாவின் கடன் வலைக்குள் சிக்க வைத்துள்ளது. சீனா- பங்களாதேஷ் இடையேயான இரு தரப்பு வர்த்தகங்கள் பகுதியளவில் சீனாவின் யுவான் நாணயத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை ஒழித்து யுவான் வர்த்தகத்தை முழு அளவில் கொண்டுவர சீனா, வங்கி நிர்வாகம் மற்றும் வர்த்தக கட்டமைப்புகளில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. 

மேலும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு உதவி எனும் பெயரில் சீனாவின் பெல்ட் அன்ட் ரோடு திட்டம் (Belt and Road initiative), முத்துச்சரத் திட்டம் (String of Pearls) ஆகிய தனது தெற்காசிய பிராந்திய மேலாதிக்கத்திற்கான - புவிசார் யுத்தத்தந்திர திட்டங்களுக்கு பங்களாதேசிற்கு கடன்களை வழங்கி வருகிறது.

பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தின் கீழ் பங்களாதேசில் மட்டும் 35 முக்கியமான திட்டங்களுக்கு 25பில்லியன் டாலர் நிதியை சீனா ஒதுக்கியுள்ளது. அதில்,

·       3.9பில்லியன் டாலர் மதிப்பில் 6.2 கி.மீ நீளமான பத்மா பாலத் திட்டம்,

·    பில்லியன் டாலர் மதிப்பில் சுமார் 10கி.மீ நீளமுள்ள பாகபந்து சேக் முஜிபூர் ரகுமான் சுரங்கப் பாதை திட்டம்,

·  15பில்லியன் டாலர் மதிப்பில் டாக்கா- சிட்டகாங் உயர்மட்ட விரைவுச் சாலை உள்ளிட்ட பல்வேறு நெடுஞ்சாலை போக்குவரத்துத் திட்டங்கள்,

·       4.63 பில்லியன் டாலர் மதிப்பில் 169கி.மீ. நீளமுள்ள பத்மா ரயில்வே திட்டம்,

·       1.6பில்லியன் டாலர் மதிப்புள்ள பாகபந்து ரயில்வே பாலத் திட்டம்,

·       500மில்லியன் டாலர் மதிப்பிலான ருப்சா ரயில்வே பாலத் திட்டம்,

·       சட்டோகிராம்-காக்ஸ் பஜார் ரயில்வே இணைப்பு உள்ளிட்ட ரயில்வே திட்டங்கள்

·       மெட்ரோ ரயில் திட்டங்கள்,

·       பங்களாதேஷ்-சீனா-இந்தியா-மியான்மர் பொருளாதார வழித்தடம் (Bangladesh-China-India-Myanmar (BCIM) economic corridor)

·       கடலுக்குள் மிதவை துறைமுகத் திட்டம் (Single point mooring with double buoy mooring),

·       பைரா துறைமுகத் திட்டம்

·       மட்டர்பால் மற்றும் ராம்பால் அனல்மின் நிலைய திட்டம்

·       145 மில்லியன் கிலோவாட் திறன் கொண்ட காக்ஸ் பஜார் (Cox’s Bazar) மின் ஆற்றல் கட்டுமானங்கள்,

·       5ஜி நெட்வொர்க் கட்டுமானங்கள்

·       ஹஜ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டம்

என பல்வேறு உட்கட்டமைப்பு, ஆற்றல் மற்றும் தொடர்பு கட்டுமானங்களுக்கு இவை செலவிடப்பட்டு வருகின்றன. இந்த கட்டுமானங்கள் அனைத்தும் உச்சபட்ச கண்காணிப்புக்காக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.

முத்துச்சரத் திட்டமானது (String of pearls) இந்தியப் பெருங்கடல் முழுவதையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர சீனாவால் உருவாக்கப்பட்ட துறைமுகங்கள் இணைப்பு திட்டமாகும். கடல் மார்க்கமான புதிய பட்டுச்சாலை திட்டத்தின் பகுதியளவிலான அங்கமே இத்திட்டம். இதன் முதல் சங்கிலி, மலாக்கா நீரிணைப்பிலிருந்து தொடங்கி மியான்மர், பங்களாதேஷ், இலங்கை, பாகிஸ்தான் வரையும் அதன் தொடர்ச்சி ஆப்பிரிக்காவின் சூடான் வரையும் நீள்கிறது. இத்திட்டம் இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க மேலாதிக்கத்தையும் - இந்தியாவின் துணை மேலாதிக்கத்தையும் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது. பங்களாதேசில் சிட்டகாங்கில் இதற்கென்ற துறைமுகம் உருவாக்கப்பட்டு இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இத்துறைமுகம், BCIM பொருளாதார வழித்தடம் உள்ளிட்ட பங்களாதேசில் உள்ள சீனாவின் பெல்ட் அன்ட் ரோடு கட்டமைப்பு திட்டங்களுடன் இணைக்கப் பட்டுள்ளது. சிட்டகாங்க் துறைமுகத்தை மையப்படுத்தி மட்டுமே 1 லட்சம் ச.கிமீ பரப்பளவுக்கு கடல் எல்லையில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான (Exclusive Economic Zone) உரிமையை கோருகிறது சீனா. மேலும், காக்ஸ் பஜார் (Cox’s Bazar)-ல் 1.21 பில்லியன் டாலர் மதிப்பில் சீனாவின் கப்பற்படை தளமும் அமைக்கப்பட்டுள்ளது. இது 6 நீர் மூழ்கி கப்பல்களையும், 8 போர் விமான தாங்கி கப்பல்களையும் நிலைநிறுத்த இயலும் அளவிற்கான கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

2002ம் ஆண்டிலேயே பேகம் கலீதா ஆட்சியில் சீனா -பங்களாதேஷ் பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருந்தன. அது சேக் ஹசீனா ஆட்சியில் யுத்தத்தந்திர ரீதியான ஒத்துழைப்பில் கூட்டு (Strategeic partnership of cooperation) ஆக வளர்த்தெடுக்கப்பட்டது. தள்ளுபடி விலை எனும் பெயரில் 205மில்லியன் டாலர் மதிப்புள்ள இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புத்துறை தளவாடங்களை சீனா பங்களாதேசிற்கு விற்றுள்ளது.  சீனாவின் ஆயுத தளவாடங்களை 17% சதவிகிதம் வங்கதேசம் மட்டுமே கொள்முதல் செய்கிறது. (38% சதவிகிதத்துடன் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது). போரில்லா இராணுவ நடவடிக்கைகள் (non-war military operations) எனும் பெயரில் பல்வேறு இருதரப்பு பலதரப்பு இராணுவ - யுத்த ஒத்திகை பயிற்சிகளிலும் இவை கூட்டாக ஈடுபட்டு வருகின்றன.

இவ்வாறு சீனாவின் புதிய காலனிய ஆதிக்கத்தின் பிடியில் பங்களாதேஷ் கட்டுண்டுள்ளது.

இந்தியாவின் துணை மேலாதிக்க முயற்சிகள்

1975ல் தகர்ந்த வங்கதேசத்தின் மீதான இந்தியாவின் துணை மேலாதிக்க முயற்சிகள் 2011ல் மீண்டும் துளிர் விட ஆரம்பித்தன. இந்தியாவை தெற்காசிய பிராந்தியத்தின் நம்பகமான இளையப் பங்காளியாக மாற்றியுள்ள அமெரிக்கா, அப்பிராந்தியத்தில் சீனாவுக்கு போட்டியாக தனது அடியாளாக இந்தியாவை நிறுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் அம்பானி அதானி நலன்களிலிருந்து இந்தியா பங்களாதேஷ் மீது தனது மேலாதிக்க முயற்சிகளை திணித்து வருகிறது.

·       அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் திட்டத்தின் பகுதியாக கிழக்கில் செயல்படுதல் திட்டத்தின் (Act East policy) அடிப்படையில் பங்களாதேசத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிப்பது

·       தெற்காசிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (South Asian Free Trade Area agreement - SAFTA) மூலம் 30% சதவிகிதம் வரை வரிக் குறைப்பு செய்து வர்த்தகத்தில் ஈடுபடுத்துவது

·       பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா திட்டம் (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation - BIMSTEC) மூலம் 14 முக்கிய துறைகளில் சுமார் 5.3 டிரில்லியன் டாலர் மதிப்பிலான தடையற்ற வர்த்தக ஒத்துழைப்பு, கடல்சார் போக்குவரத்து ஒத்துழைப்பு, துறைமுக இணைப்பு ஆகிய கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது

·       14 பில்லியன் டாலர் மதிப்பில் இந்தியா - பங்களாதேஷ் இடையே இரு தரப்பு வர்த்தகத்தில் ஈடுபடுத்துவது

·       வங்கதேசத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை நிறுவுவது

·       58971 மெகா வாட் திறன் மின்சாரத்தை இந்திய வடகிழக்கு மாகாணங்களில் இருந்து விநியோகிப்பதற்கான மின் வழித்தடங்களை அமைத்தது

·       ரிலையன்ஸ் நிறுவனம், 3 பில்லியன் டாலர் மதிப்பில் 3000 மெகாவாட் திறன் கொண்ட (இயற்கை எரிவாயுவை அடிப்படையாக கொண்ட) மின் உற்பத்தி நிலையத்தை பங்களாதேஷிலேயே உருவாக்கியது

·       அதானி பவர் நிறுவனம், 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான 1600 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையத்தை பங்களாதேஷிலேயே நிறுவியது

·       4லட்சம் டன் டீசலை விநியோகிக்கும் திறன் கொண்ட 130கி.மீ நீளமுள்ள பைப்லைனை இந்தியாவிற்கு வங்கதேசத்திற்கு இடையில் அமைத்தது

·       நதிநீர் பங்கீடு கட்டுப்பாடு மற்றும் அது சார்ந்த பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களிலும் ஆதிக்கம் செலுத்துவது

·       பல்வேறு போக்குவரத்து, ஆற்றல், டிஜிட்டல் திட்டங்களிலும் ஈடுபடுவது

·       கடற்படை ராடார் கண்காணிப்பில் கூட்டு ஒத்துழைப்பு

என இந்திய அரசு தனது துணை மேலாதிக்க முயற்சிகளை பங்களாதேஷின் மீது நிறுவி வருகிறது.

அமெரிக்கா, சீனா அல்லாமல் ஜப்பான், ரஷ்யா போன்ற ஏகாதிபத்தியங்களும் மேலாதிக்க முயற்சிகளில் தன் பங்கிற்கு சிறிய அளவில் ஈடுபட்டு வருகின்றன. ரஷ்யா, ரூப்பூர் அணு உலைத் திட்டத்தை நிறுவ தொழில்நுட்ப ரீதியாகவும் கடன் ரீதியாகவும் பங்களித்தது, போர் விமானங்களை பங்களாதேஷிற்கு விற்பது ஆகியவை மூலம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. ஜப்பான் இரு தரப்பு வர்த்தகத்திலும் கடன் அளிப்பதிலும் குறிப்பிட்ட அளவிலான பங்கு வகிக்கிறது.

கடன் பொறியில் பங்களாதேஷ்

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்க முயற்சிகள் - இந்தியாவின் துணை மேலாதிக்க முயற்சிகள் மற்றும் இந்த நாடுகளின் பொருளாதர நெருக்கடிகளின் சுமைகள் பங்களாதேஷின் தலையில் சுமத்தப்பட்டதால் பங்களாதேஷ் மிகப்பெரிய கடன் சுமையில் சிக்கியது. அதன் அந்நியக் கடன் மட்டும் 100 பில்லியன் டாலர்களை தாண்டியது. ஆண்டுக்கு சுமார் 300 மில்லியன் டாலர் அளவுக்கு வட்டியாகவே செலுத்த வேண்டிய நிலை உள்ளது. பங்களாதேசின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தில் சுமார் 4ல் 1 பங்கு கடனாகவே உள்ளது. இதில் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (JICA), சீனா ஆகியவை முதல் 4 இடத்தில் முறையே உள்ளன. அதற்கு அடுத்த இடங்களில ரஷ்யா, இந்தியா, அமெரிக்கா ஆகியவை உள்ளன. சீனாவை தவிர இதர நாடுகளில் வாங்கப்பட்ட கடன்கள் நீண்ட கால கடன்களாகும் 30 வருடங்களுக்கு மேல் திருப்பி செலுத்த வேண்டிய அவகாசம் உள்ளவை. சென்ற ஆண்டு வரை சீனாவில் வாங்கப்பட்டுள்ள கடனான 6.1 பில்லியன் டாலர் கடன்கள் 5 முதல் 15 ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டிய கடு வட்டி கடன்களாகும். மேலும், பங்களாதேசில் இருந்து ஏற்றுமதி செய்யும் அளவைவிட 20 மடங்கு அதிகமாக இறக்குமதி செய்வதால், சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை ஆண்டுதோறும் பன்மடங்கு அதிகரித்தே வருகிறது. சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை 15.5பில்லியன் டாலர்களாகவும் (அமெரிக்காவுடனான வர்த்தகப் பற்றாக்குறை 6பில்லியன் டாலர்களாகவும்) உள்ளது. அவையும் கடன் சுமைகளாகவே மாற்றப்படுகிறது. இதனால் அந்நிய செலாவனி கையிருப்பும் வெகுவாக குறைந்துள்ளது. இதை நிவர்த்தி செய்ய இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சேக் ஹசீனா அரசு சீனாவிடமிருந்து கூடுதலாக 5 பில்லியன் டாலர் (சுமார் 36.5 பில்லியன் யுவான்) மென் கடனையும் (Soft loan) கோரியிருந்தது. நிபந்தனைகள் குறைவான அதிக வட்டி கடன்களுக்கு பெயர் மென் கடனாம்?! கொடுமை!! உண்மையில் அவை கடன் வலையில் சிக்க வைக்கும் நாட்டின் உற்பத்தியை சீர்குலைக்கும் சீரழிவு கடன்களே ஆகும். டாக்கா நாணய மதிப்பின் வீழ்ச்சியும் இப்படியான கடுவட்டி கடன்களும் பங்களாதேசத்திற்கு மிகப் பெரிய சுமையாக மாறி பொருளாதார நெருக்கடியை மேலும் ஆழப்படுத்தியது.   

இவையே பங்களாதேசின் இன்றைய அரசியல்-பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படையான காரணங்களாகும்.

அமெரிக்காவின் சதி

2009ல் சேக் ஹசீனா இரண்டாவது முறையாக ஆட்சி பிடித்ததிலிருந்தது அவர் சீன சார்பு நிலையே எடுத்து செயல் பட்டு வந்தார். பங்களாதேஷ் மீதான அமெரிக்காவின் செல்வாக்கு மெல்ல மெல்ல குறைய தொடங்கியதோடு சீனாவின் புதிய காலனிய ஆதிக்க முயற்சிகள் நிறைவேறி வந்தன. 2002ம் ஆண்டிலேயே சீனா பங்களாதேசத்துடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும் அது சேக் ஹசீனா ஆட்சியில்தான் பிணைப்புகள் வலுப்படுத்தப்பட்டன. தெற்காசிய பிராந்தியத்தில் பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, மியான்மர் உள்ளிட்ட நாடுகளை போலவே பங்களாதேசமும் சீனாவின் ஆதிக்கப் பிடிக்குள் வந்தன. இந்தப்போக்கு அமெரிக்க -பங்களாதேஷ் அரசுகளுக்கிடையேயான முரண்பாடுகளை அதிகரித்தது.

·       அமெரிக்கா, குவாட் கூட்டமைப்பில் பங்களாதேஷையும் இணைக்க முயற்சி எடுத்தது. அம்முயற்சிக்கு சேக் ஹசீனா அரசு ஒத்துழைக்கவில்லை;

·       2021ல் பைடன் நடத்திய ஜனநாயகத்திற்கான மாநாட்டில் கலந்து கொள்ளாமல் அதை புறக்கணித்தது;

·       உக்ரைன் போரின் போது ரஷ்யா மீது விதித்த பொருளாதார தடைக்கு பங்களாதேஷ் ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை - எதிர்நிலை எடுத்தது;

·       2022 ல் அமெரிக்கா-பங்களாதேஷ் இடையே இராணுவ தகவல் பொது பாதுகாப்பு ஒப்பந்தம் (General Security of Military information Agreement - GSOMIA), கையகப்படுத்துதல் மற்றும் பரிமாற்றச் சேவை ஒப்பந்தம் (Acquisition and Cross-Servicing Agreement - ACSA) ஆகிய இரு அடிப்படை பாதுகாப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி வந்தது (அதற்கான வரைவு ஒப்பந்த தயாரிப்பிலும் ஈடுபட்டது) - ஆனால் அது கடைசியாக சேக் ஹசீனா அரசால் நிராகரிக்கப்பட்டது (சீனாவுடன் மட்டுமே இதுவரை பங்களாதேஷ் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது); 

இவை போன்ற அமெரிக்காவின் புதிய காலனியாதிக்க முயற்சிகள் சேக் ஹசீனா அரசின் சீன சார்பு நிலையால் முறியடிக்கப்பட்டன.

இதன் காரணமாக, தொடர்ச்சியாக பங்களாதேஷ் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டு வந்தது.

·       பங்களாதேஷிற்கு முதலீடுகளை வழங்குவதில் சேக் ஹசீனா அரசுக்கு நிபந்தனைகளை கடுமையாக்கியது; 

·       2023 ஜனவரியில் பங்களாதேசின் ரூப்பர் அணு உலைக்குத் தேவையான மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு மோங்லா துறைமுகத்தை நோக்கி வந்த உர்சா மேஜர் என்ற ரஷ்ய கப்பலை அனுமதிக்க மறுத்தது அமெரிக்கா; 

·       சேக் ஹசீனா அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகவும், ஜனநாயகத்திற்கு குழிபறிப்பதாகவும் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி பிரச்சாரம் செய்து வந்தது;

·       அவாமி லீக் தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்டு ஒற்றைக் கட்சி ஆட்சி முறையை கொண்டுவரப் போவதாகவும் குற்றஞ்சாட்டியதோடு சேக் ஹசீனாவிற்கு விசா மறுக்கப்படும் என்றும் அச்சுறுத்தியது

இவ்வாறு அமெரிக்கா சேக் ஹசீனா ஆட்சிக்கு பல்வேறு அழுத்தங்களையும் எதிர்பிரச்சாரங்களையும் செய்து வந்தது.

பங்காளாதேஷில் அமெரிக்கா ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சதித்திட்டம் தீட்டுவதாக சேக் ஹசீனாவே சென்ற ஆண்டின் இறுதியிலேயே கூட பேசினார்.

லத்தீன் அமெரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பொருட்டு அமெரிக்கா வண்ணப் புரட்சிகள், மலர் புரட்சிகள் மூலம் தனது பொம்மை ஆட்சியை நிறுவுவதை சென்ற தசாப்தத்தில் செய்தது. அதே நடவடிக்கைகளை இப்போது தெற்காசிய பிராந்தியத்திலும் விரிவுபடுத்தியுள்ளது. பாகிஸ்தானில் சீன ஆதரவு இம்ரான்கான் ஆட்சியை கவிழ்த்து ஷெரிப் ஆட்சியை கொண்டு வந்தது; பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்ரான் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ள செய்து - எதிர்க் கட்சிகளைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்திலேயே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து ஆட்சியைக் கவிழ்த்தது. அதேபோல நேபாளத்திலும், கூட்டணி கட்சிகளுக்கு இடையேயும் உட்கட்சி முரண்பாடுகளையும் உருவாக்கி - நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து சீன ஆதரவு கே.பி.சர்மா ஒலியின் ஆட்சியை கவிழ்த்து தியூபா ஆட்சியை கொண்டு வந்தது. ஆட்சிக் கவிழ்ப்பில் இது ஒரு யுத்தி என்றால்,  இலங்கையில் வேறொரு உத்தியைக் கையாண்டது. இலங்கையின் உள்நாட்டு நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட ராஜபக்சே ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. தொண்டு நிறுவனங்கள் மூலம் நிதியுதவிகள் அளித்து ராஜபக்சே ஆட்சிக்கு எதிரான போராட்டமாக வளர்த்துவிட்டது; சீன ஆதரவு ராஜபக்சே ஆட்சியை கவிழ்த்து ரணில் விக்ரமசிங்கே ஆட்சியை கொண்டு வந்தது. இவ்வாறு தெற்காசிய பிராந்தியத்திலும் தொடர் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே ஜனநாயக காவலன் வேடம் தரித்த அமெரிக்கா, பங்களாதேஷிலும் இலங்கை மாதிரி ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்தியுள்ளது. 

பங்களாதேஷில் நெருக்கடிக்கு எதிரான மாணவர்களின் -மக்களின் போராட்டங்களை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா. ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டு முகமது யூனுசின் பொறுப்பில் பொம்மை அரசை கொண்டு வந்துள்ளது.

சேக் ஹசீனா இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்தார். உக்ரைன் விசயத்தில் மோடி அரசு ரஷ்ய ஆதரவு நிலை எடுத்ததால் அமெரிக்காவுக்கும் மோடி அரசுக்கும் ஏற்பட்ட முரண்பாடு; அம்பானி அதானியின் முதலீடுகள் மற்றும் வர்த்தக உறவுகளின் காரணமாக மோடி - சேக் ஹசீனா அரசுகள் பொருளாதார ரீதியாக நெருக்கமாக இருந்தது; தீஸ்தா நதி நீர் திட்டத்தில் சீனாவின் முதலீட்டை ஹசீனா அரசு எதிர்பார்த்திருந்தாலும் அத்திட்டத்தை மேற்கொள்வதற்கு இந்தியாவுக்கு சாதகமாகவே செயல்பட்டது போன்ற காரணங்களால் மோடி -சேக் ஹசீனா கும்பல் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்புடன் செயல்பட்டன. இதன் காரணமாகவே மோடி அரசு சேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது.

ஆட்சி மாற்றத்தால் நெருக்கடி தீராது!

எந்த வண்ணப் புரட்சிகளோ, அரபு வசந்தமோ மக்களின் வாழ்நிலையை மாற்றவும் இல்லை, நெருக்கடியை தீர்க்கவுமில்லை; அவற்றால் தீர்க்கவும் முடியாது. மத்திய கிழக்கில், லத்தீன் அமெரிக்காவில், இலங்கையில், பாகிஸ்தானில், நேபாளத்தில் என எண்ணற்ற ஆட்சி மாற்றங்கள் இந்த இரு தசாப்தங்களில் நடந்துள்ளது. அவை ஒரு நிதிமூலதனக் கும்பலின் பிடியில் இருந்து மற்றொரு நிதிமூலதனக் கும்பலின் பிடியில் சென்றுள்ளது. நாம் ஏற்கனவே பலமுறை கூறியுள்ளவாறு அது வெள்ளை நிதிமூலதனமாக இருந்தாலும் சரி சிவப்பு நிதிமூலதனமாக இருந்தாலும் சரி; அது மிகவும் பிற்போக்கானதே; புல்லுருவித் தனமானதே; அது அழுகல் தன்மைக் கொண்டதே ஆகும்.

ஒரு ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு மற்றொரு ஏகாதிபத்தியத்தை ஆதரிப்பதும் அதன் தரகு முதலாளித்துவ கும்பலுக்கு வால் பிடித்து செல்வதும் நெருக்கடிகளை தீர்க்காது. அது ஏகாதிபத்திய தொண்டு நிறுவன அரசியல் வழி ஆகும்.   

பங்களாதேஷில் சேக் ஹசீனா ஆட்சி ஜனநாயக விரோத பாசிச ஆட்சி எனக் கூறி ஆட்சி கவிழ்ப்பு செய்யப்பட்டுள்ளது. ஆம், சேக் ஹசீனா அரசு பாசிச பயங்கரவாத அரசுதான். அது நிச்சயமாக அழித்தொழிக்கப்பட வேண்டிய அரசுதான். இன்று மாற்றாக நிறுத்தப்பட்டிருக்கும் முகமது யூனுஸ் யார்? இந்த ஆட்சிக் கவிழ்ப்பில் பங்குபற்றிய ஜமாத்-ஈ-இஸ்லாமி எத்தகைய அமைப்பு? யூனுஸ், அமெரிக்காவால் நோபல் பரிசு உள்ளிட்ட பல்வேறு விருதுகள் கொடுத்து வளர்த்தெடுக்கப்பட்ட அமெரிக்க வளர்ப்புப் பிராணி. கிராமின் கோட்டா மைக்ரோ ஃபைனான்ஸ் மூலம் ஏழை எளிய மக்களை தற்கொலைப் பாதைக்குத் தள்ளிய நரமாமிச வேட்டை நாய். இத்தகைய தரகு முதலாளியைத்தான் சேக் ஹசீனாவுக்கு மாற்றாக நிறுத்தியுள்ளது தொண்டு நிறுவன மாணவர் அமைப்பு. ஜமாத்-ஈ-இஸ்லாமி, அமெரிக்காவால் ஆயுதங்கள், நிதியுதவி அளித்து வளர்க்கப்பட்ட தீவிர இசுலாமிய மதவாத  - பயங்கரவாத அமைப்பு. (கடந்த காலத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பின் பிடியில் ஒரு பங்களாதேஷ் பெண் சிக்கியபோது அவரிடம், "நீ முஸ்லீமா, பங்காளியா" எனக் கேட்டுள்ளனர், அதற்கு அப்பெண், "இரண்டுமேதான், ஆனால் முதலில் பங்காளி" என பதிலுரைத்துள்ளார், அதன் காரணமாகவே அப்பெண்ணைக் கொன்றுள்ளனர்.  எந்தளவிற்கு பங்களாதேச மக்கள் தேசிய உணர்வு மிக்கவர்களாக உள்ளனர் என்பதற்கு இது ஒரு சான்று.) இத்தகைய வங்க தேசிய இன உணர்வை தீவிரமாக மழுங்கடித்து மத பயங்கரவாதத்தை கட்டியமைப்பதை நோக்கமாக கொண்டதே ஜமாத்-ஈ-இஸ்லாமி அமைப்பு. அந்த அமைப்பிற்கு தேச விடுதலை உணர்வும், ஏகாதிபத்திய எதிர்ப்புக் கண்ணோட்டமும் இது வரை துளியும் இல்லை. எனவே, இன்று மாற்றாக வைக்கப்படும் அரசு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைப்பாவையாகவே செயல்படும்; சீனாவின் கடன் பொறியால் அது சீன ஏகாதிபத்தியத்திற்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய சூழலே உள்ளது. எனவே, இந்த ஆட்சி மாற்றங்கள் நிதிமூலதன ஆக்கிரமிப்புகளில் சமநிலையை பேணுவதற்கான முயற்சியாகவே இருக்குமே ஒழிய அது வங்கதேச மக்களின் நெருக்கடியை நிச்சயம் தீர்க்காது; மேலும் அந்நெருக்கடியை தீவிரப்படுத்தவே செய்யும்.

இந்த ஆட்சி மாற்றங்கள், அமெரிக்க-நேட்டோ முகாம் மற்றும் சீன-ரஷ்ய முகாம்களுக்கிடையே உலகளவில் நடைபெற்று வரும் மறுபங்கீட்டுப் போரின் ஒரு அங்கமே ஆகும். பங்களாதேசத்தை, நிதிமூலதன ஆக்கிரமிப்பு மூலம் அமெரிக்காவும் -சீனாவும் தங்களுக்குள் மறுபங்கீடு செய்துகொள்வதற்கான போட்டியே ஆகும்.

அமெரிக்க-நேட்டோ ரஷ்ய-சீன முகாம்கள் தங்களது நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ள காலனி நாடுகளை மறுபங்கீடு செய்யும் போட்டியில் தீவிர பனிப்போரில் கடந்த சில ஆண்டுகளாகவே ஈடுபட்டு வருகின்றன. ஏகாதிபத்திய நாடுகள் தங்களது நெருக்கடிகளை காலனிய நாடுகள் / சார்பு நாடுகள் மீது சுமத்துகின்றன. அவற்றை நவீன ஆதிதிரட்டல் வடிவிலும், புதிய காலனிய முறையிலும் முன்னிலும் தீவிரமாக சுரண்டி வருகின்றன. ஏகாதிபத்திய நலன்சார் கட்டமைப்புகளை காலனிய நாடுகளில் உருவாக்குவதற்கு அவற்றுக்கு கடன்களை வாரி வழங்குகின்றன. அவைகளை கடன்பொறியில் சிக்க வைப்பது; நாணயத்தை மதிப்பிழக்கச் செய்வது; ஏற்றுமதி இறக்குமதியில் பற்றாக்குறையை உருவாக்குவது; பங்குச்சந்தை சூதாட்டம் மூலம் நட்டத்தை ஏற்படுத்துவது; பொதுத்துறை சொத்துக்களை சூறையாடுவது; அடிமை ஒப்பந்தங்கள் மூலம் வரிச்சலுகைகள் பெறுவது, கனிம வளங்கள், மனித வளங்களை சுரண்டுவது என பல வழிகளில் காலனிய நாடுகளை திவாலடைய செய்கின்றன.

சரியான பாட்டளி வர்க்க தலைமை இல்லாததால், இந்த நெருக்கடியை எதிர்த்த வங்காள தேச மக்களின் தீரமிக்கப் போராட்டங்கள் தொண்டு நிறுவன அரசியலால் காயடிக்கப்பட்டுள்ளது. தன்னெழுச்சியான போராட்டங்கள் பெரும்பாலும் இவ்வாறே மடைமாற்றப்பட்டு மற்றொரு ஏகாதிபத்திய முகாமுக்கும் அதன் சேவகர்களுக்கும் வால் பிடிப்பதில் கொண்டுபோய் நிறுத்தியுள்ளது. வினவு போன்ற தளங்கள், தொடர்ச்சியாக இத்தகைய தன்னியல்பான போராட்டத்தையே விடுதலைக்கான புரட்சி போல சித்தரிக்கின்றன. அவை ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் பாட்டாளி வர்க்கத் தலைமை பற்றிய தவறான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளன என்பதையே அவர்களின் நிலைபாடு காட்டுகிறது.  அது விமர்சனத்திற்கு உரியது.  

எனவே, அமெரிக்கா, சீனா இரு ஏகாதிபத்தியங்களையும் அதன் புதிய காலனிய நலன்களுக்குச் சேவை செய்யும் தரகுமுதலாளித்துவ வர்க்கங்களையும் தூக்கியெறிந்து அந்நிய நிதிமூலதனம் சாராத சுதேசிய பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதன் மூலம்தான் மக்கள் இந்த நெருக்கடியின் சுமைகளில் இருந்து தப்பிக்க முடியும். அதற்கு வங்காளதேச பாட்டாளி வர்க்கம் தமக்கான கம்யூனிஸ்ட் கட்சியை கட்டியமைப்பதும் அதன் தலைமையில் அனைத்து உழைக்கும் மக்களையும், ஜனநாயக சக்திகளையும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரட்டுவதே நிரந்தர தீர்வாக அமையும்.

-    - சமரன்

(நவம்பர் 2024 இதழில்)