அமெரிக்க - சீன தொழில்நுட்ப போர் – (பகுதி 2)

நவீன தொழில்நுட்பம் மற்றும் அதன் மூலப் பொருட்களின் ஆதிக்கத்திற்கான அமெரிக்க - சீன தொழில்நுட்ப போர்

அமெரிக்க - சீன தொழில்நுட்ப போர்  – (பகுதி 2)

முந்தைய பகுதியை படிக்க: சிறப்பு கட்டுரை: அமெரிக்க - சீன தொழில்நுட்ப போர் – (பகுதி 1)

5ஜி / 6ஜி தொழில்நுட்பம்:

5G புதிய பயன்பாடு என்பது 4Gயின் வேகத்தை விட நூறு மடங்கும், நம்பகத்தன்மையில் ஐம்பது மடங்கும் சாதன இணைப்புகளில் பத்து மடங்கும் சிறப்பாக செயல்படுவதாக சோதனை முடிவுகள் காட்டுகின்றன.

இன்று கற்பனை கூட செய்ய முடியாத அளவிற்கு குவால்காம் நிறுவனத்தின் பொருளாதார வியூகக் குழுவின் மதிப்பீடுகள் படி அடுத்த 15 ஆண்டுகளில், 5Gயின் பொருளாதாரமானது "இந்தியாவின் பொருளாதார சந்தை அளவுக்கு உலகளவில் 5G தொழில்நுட்ப சந்தையின் அளவு பெருகி இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளது.

ஜிஎஸ்எம்ஏ என்கிற தொழில் கூட்டமைப்பு சீனாவை பற்றி குறிப்பிட்டு, "சீனா 5G சேவையில் உலகத்தின் மிகப் பெரிய சந்தையைக் கொண்டிருக்கிறது. உலகச் சந்தையில் 87% 5G சேவையை 2020 இறுதிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும்" என்று ஏற்கனவே கூறியிருந்தது.

கடந்த இரு தசாப்தங்களில் சீன நிறுவனமான ஹுவாவேய் நிறுவனம், உலக தொலைத் தொடர்பு சந்தையில் 0% லிருந்து 28% வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் அமெரிக்காவில் முன் கோலோச்சிய நிறுவனங்களான லூசெண்ட் மற்றும் மோடோரோலா நிறுவனங்கள் 25% லிருந்து 0%மாக வீழ்ந்துள்ளது. இன்று 5ஜி தொழில் நுட்பம் கொடுக்கும் முன்னணி ஐந்து நிறுவனங்களில் இரண்டு சீன நிறுவனங்கள். ஆனால் மற்றொரு பக்கத்தில் ஒன்றுகூட அமெரிக்க நிறுவனங்கள் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

நிலைமைகள் இப்படி இருக்க, 5ஜி தொழில் நுட்பத்தில் சீனாவின் வளர்ச்சியைத் தடுக்க ஹூவாவேய் நிறுவனத்தை அழிக்க, முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆட்சியில் பல தடைகள் கொண்டுவரப்பட்டது. உலகளவில் பல நாடுகளை லாபி செய்து ஹூவாவேய் நிறுவனத்தின் 5ஜி சேவைக்கான ஒப்பந்தங்களை இரத்து செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு வெற்றியும் கண்டது. இதன் மூலம் ஹூவாவேய் நிறுவனப் பங்குகள் வீழ்ச்சியடைந்தது மட்டுமல்லாமல் உலகளவில் அதன் விரிவாதிக்கம் தடுக்கப்பட்டது.  அதனால் அந்த தடைகளை எதிர்கொள்வதற்கு ஹூவாவேய் நிறுவனம் மாற்று நிறுவனத்தை ஹானர் என்ற பெயரில் சந்தைக்குள் புகுந்து சீனாவில் திறன்பேசி (ஸ்மார்ட் போன்) தயாரிப்பில் முதல் ஐந்து நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது.

சீனா, அமெரிக்காவின் தாக்குதலை முறியடிப்பதற்காக ஜி ஜிங்பிங் தலைமையிலான அரசானது 5ஜி உட்கட்டமைப்பை ஏற்படுத்துவதை மிக முக்கிய குறிக்கோளாக அறிவித்து 1.4 டிரில்லியன் டாலர்கள் ஒதுக்கியுள்ளது. சீனா நாடு முழுக்க 5ஜி தொழில் நுட்பத்தை அமல்படுத்த அனைத்து வகை உட்கட்டமைப்பும் தயார் நிலையில் உள்ளதாக தரவுகள் காட்டுகின்றன. இந்த கட்டமைப்பு அன்றாட வாழ்வின் பயன்பாட்டுக்கான செயற்கை நுண்ணறிவையும் மற்றும் இணையம் சார்ந்த பொருட்களின் சந்தையையும் மேலும் விரிவாக்க பெரிதும் பயன்படும். உதாரணமாக செயற்கை நுண்ணறிவு பிரிவில் உலகின் முன்னணி நிறுவனங்களின் ஒன்றான சீனாவின் பைடு நிறுவனம் கடந்த மே மாதம் ஓட்டுநர் இல்லாத தானியங்கி வாடகை கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சாத்தியப்படுவதற்கு மிக முக்கிய காரணங்களுள் ஒன்று இந்த 5ஜி சேவையின் கட்டமைப்புதான்.

அதே நேரத்தில் அமெரிக்காவும் 5ஜி பந்தயத்தில் மற்றொரு பிரிவில் குறிப்பாக 5ஜி தொழில் நுட்ப ஆராய்ச்சி, தர நிலைகள் தீர்மானிப்பது மற்றும் செயலிகள் போன்ற பிரிவில் முன்னணியில் உள்ளது. இதை புரிந்துகொண்ட சீன நிறுவனங்களும் இந்த துறைகளில் தனது செல்வாக்கைத் தீவிரமாக விரிவாக்கி வருகிறது.  மட்டுமல்லாமல் அமெரிக்காவின் செல்வாக்கையும் தொடர்ந்து குறைத்து வருகிறது. இந்த தொழில் நுட்பத்தில், சீர்செய்யும் அமைப்பான 3ஜிபிபி (3GPP) என்ற அமைப்பு வழங்கும் காப்புரிமைகளில் சீனாவின் நிறுவனமான ஹூவாவேய் நிறுவனத்தின் பங்கு, மற்ற நாடுகளைக் காட்டிலும் முன்னிலையில் உள்ளது. அது மட்டுமல்லாமல் சீனா ஏற்கெனவே இத்துறையில் அடுத்த வளர்ச்சியான 6ஜி தொழில் நுட்பத்தில் ஒட்டுமொத்த உலக காப்புரிமைகளில் 35% காப்புரிமைகள் பெற்று அமெரிக்காவைக் காட்டிலும் (18%) இரு மடங்கு அதிகம் பெற்று முன்னணியில் உள்ளது.

5ஜி தொழில்நுட்ப செயலிகளில், அமெரிக்க பகாசுர தொழில் நுட்ப நிறுவனங்களின் உலக தொழில்நுட்ப மையப்படுத்தலினாலும், 5ஜி சிப் வடிவமைப்பில் தலைமையாய் இருப்பதாலும், கிளவுட் (Cloud) கட்டமைப்பு போன்ற துறைகளில் ஆதிக்கம் செலுத்துவதாலும் அமெரிக்காவிற்கு பலத்த சாதக நிலை உள்ளது. ஆனால் மற்றொரு பக்கம், அமெரிக்காவில் வலுவான 5ஜி தொழில் நுட்ப உட்கட்டமைப்பு நாடு முழுக்க பரந்து விரிந்த 5ஜி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை கொண்டிருக்காமல் அடுத்த கட்ட ஆதிக்கத்தை ஏற்படுத்தும் 5ஜி தொழில் நுட்ப செயலிகளை உருவாக்குவதில் பாதக நிலைமையை ஏற்படுத்தி வருகிறது. உண்மையான 5ஜி திறன்கொண்ட பரந்து விரிந்த 5ஜி தொடர்புகளை அமெரிக்காவில் ஏற்படுத்துவதில் சீனாவைக் காட்டிலும் அமெரிக்கா இரண்டு ஆண்டு பின் தங்கியுள்ளது. அமெரிக்காவின் முக்கிய கட்டமைப்பு தீர்வாக கருதப்படும் ஓரான் (சீனாவின் 5ஜி தொழில் நுட்ப ஹூவாவேய் கட்டமைப்புக்கு மாற்றாக கருதப்படும் அமெரிக்க நிறுவன கட்டமைப்பு) காலதாமதமாகவே செயல்பட உள்ளது. இதற்கு நேரதிராக, கூகுளின் முன்னாள் அதிகாரியான ஸ்மிட்த் எச்சரித்தபடி "சீனா மிக விரைவில் ஒரு நொடிக்கு 1 ஜிகா பிட் வேகமுள்ள உள்நாட்டு தொலைத் தொடர்பு கட்டமைப்பை ஏற்படுத்தி அடுத்த தலைமுறைக்கான தொழில் நுட்பத்தில் முன்னோடியாக திகழப்போகிறது. அது மட்டுமில்லாமல் 5ஜி தொழில் நுட்ப சேவைகளையும் அதற்குத் தேவைப்படும் பாகங்களையும் கொண்டு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து முன்னிலைப் பெறப் போகிறது." என்று கூறியுள்ளார்.

4ஜி தொழில் நுட்பத்தைக் கொண்டு ஆப்பிள் ஐபோன்களிலும், கூகுளின் ஆண்டராய்ட் இயக்கு முறையிலும் மைக்ரோ சாப்ட் ஹோலோ லென்ஸ் போன்றவற்றின் மூலம் பயனாளர்களை தொழில் நுட்ப சூழல் அமைப்புக்குள் கட்டிப்போட்டதை நம்மால் பார்க்க முடிந்தது. அதேபோல் சீனா 5ஜி தொழில் நுட்ப நவீன செயலிகளை பயன்படுத்துவதில் முன்னோடியாக திகழ்கிறது. குறிப்பாக திறன்மிக்க தொழிற்சாலை கட்டமைப்பு; தொழிற்சாலை நடைமுறையில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை புகுத்துதல்; உலகத்தின் முதல் 5ஜி தொழில் நுட்பத்தைக் கொண்டு இயந்திர அறுவைசிகிச்சை போன்று பல விடயங்களில் நடைமுறைப் படுத்துவதில் முன்னோடியாக உள்ளதை நாம் காண முடிகிறது. ஹூவாவேய் நிறுவனம் 5ஜி சேவையைக் கொண்டு சியோமி திறன் கைப்பேசிகளுக்கு, டென்செண்ட்டின் திறன் நகர (ஸ்மாாட்் சிட்டி) தீர்விற்கும், பைடுவின் இயந்திர வாடகை கார்களுக்கும்  தடையற்ற தொலைத்தொடர்பு சேவையளித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

மற்றொரு பக்கம் 5ஜி தொழில் நுட்பம் இராணுவ மேலாதிக்கத்திற்கும் மிக முக்கிய பங்காற்றுவதாக பார்க்கப்படுகிறது. 5ஜி துறையின் வளர்ச்சி உளவு, கண்காணிப்பு, வேவுபார்த்தல் (intelligence, surveillance and reconnaissance (ISR)), துரிதமான பாதுகாப்பான கட்டளை மற்றும் கட்டுப்பாடுகளை செலுத்த அடுத்தக் கட்டத்துக்கு முன்னேற்றி செல்ல அவசிய கட்டமைப்பாக உள்ளது. எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு, PLA வின் அதிகாரப்பூர்வ சீன இராணுவ வலைத்தளம், இந்தியா மற்றும் பூட்டான் எல்லைகளுக்கு அருகிலுள்ள திபெத்தில் கன்பாலா ரேடார் நிலையத்தில் 5G சேவைகளை செயல்படுத்துவது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 17,000 அடி (5,182 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ள கன்பாலா ரேடார் நிலையம், வடகிழக்கு இந்தியாவின் சிக்கிம் அருகில் உள்ள திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் (TAR) உள்ள சிகேஸ் (Xigase) மாகாணத்தின் யாடோங் கவுண்டியில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கையால் இயக்கப்படும் ரேடார் நிலையமாகும். இந்த 5G நிலையம் சீனாவின் கண்காணிப்பு திறன்களையும் PLAவின் இராணுவ தகவல்தொடர்புகளையும் கணிசமாக மேம்படுத்தியுள்ளது, இராணுவம் மற்றும் ஆயுதங்களை விரைவாக பயன்படுத்துவதையும் உறுதி செய்கிறது, இதன் மூலம் ஒரு முக்கியமான எல்லைப் பகுதியில் சீனாவின் சக்தி அதிகரித்துள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனாவில் 5G தரைக் கட்டுப்பாட்டு நிலையங்களின் எண்ணிக்கை 1.615 மில்லியனை எட்டியுள்ளது, மேலும் 5G கைப்பேசி பயனர்களின் எண்ணிக்கை 400 மில்லியனைத் தாண்டியுள்ளது. (ஜூன் 2020 வரை)

5G தொழில் நுட்பத்தில் மட்டுமல்லாமல் அடுத்தகட்ட வளர்ச்சியான 6G தொழில் நுட்பத்தில் இப்போதே ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது சீனா.  2020 ஆம் ஆண்டில், விண்வெளியில் அதிவேக தகவல்தொடர்பு சோதனைகளை நடத்துவதற்காக உலகின் முதல் 6G டெரா ஹெர்ட்ஸ் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியதாக சீனா அறிவித்துள்ளது. அப்போதிலிருந்து இன்றுவரை சீன  விஞ்ஞானிகள் தரையிலிருந்து 6G தரவு பரிமாற்ற சோதனைகளை நடத்தி வருகின்றனர். இது வினாடிக்கு பல நூறு டெராபைட் வேகத்தில் சோதனை தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டு வருவதாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவின் நெருக்குதலின் காரணமாக நேட்டோ நாடுகளும், பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் ஹுவாவேய் நிறுவனத்தின் தொலைத் தொடர்பு பாகங்களின் விற்பனையையும், சேவைகளையும் நிறுத்தியுள்ளன. ஏற்கெனவே உடன்பாடு எட்டப்பட்ட உட்கட்டமைப்பு திட்டங்களையும் திரும்ப பெற்றுள்ளன. இதற்கு அமெரிக்க தரப்பில் கூறப்பட்ட காரணம், சீன நிறுவனங்கள் இந்த சேவைகள் மூலம் நாடுகளின் கேந்திர முக்கிய தகவல்களை உளவு பார்க்கிறது என்றும் மற்ற நாடுகளின் காப்புரிமை பெறப்பட்ட உற்பத்தி தகவல்களையும் தொழில் நுட்பங்களையும் களவாடுகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளது. இதற்காக பல்வேறு நிறுவனங்களும் சீனாவை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கையும் நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் கூகுள் தலைமை நிறுவரான எரிக் ஷ்மித் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியரான கிரஹாம் அலிசன் ஆகியோர் PCMag லிருந்து புள்ளிவிவரங்களை கீழ்க்கண்டவாறு மேற்கோள் காட்டியுள்ளனர். சீன அரசாங்கம் 5G தொழில் நுட்ப தொலைதொடர்பு கட்டமைப்பில் மொத்தம் 50 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாகவும், ஆனால் அமெரிக்கா இதுவரை 1.5 பில்லியன் டாலர் மட்டுமே ஒதுக்கியுள்ளது என்றும் அவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்.

மறுபுறம், அமெரிக்க அதிபர் பைடன் 2021 இறுதியில்தான் அமெரிக்காவில் அகண்ட அலைவரிசைக்கு (பிராட்பேண்ட்)65 பில்லியன் டாலர்களை வழங்கும் சட்டத்தில் கையெழுத்து இட்டு இருக்கிறார். இது வயர்லெஸ் மற்றும் பிராட்பேண்ட் நெட்வொர்க்குகளுக்குப் பயன்படுத்தக்கூடிய தொகையாக அமையப் போகிறது என்று அறிவிப்புகள் காட்டுகின்றன.

எப்படியிருப்பினும் இத்துறையில் சீனாவின் கையே ஓங்கியுள்ளதாக தகவல்கள் காட்டுகின்றன. அமெரிக்கா சீனாவை ஒப்பிடும்போது சில ஆண்டுகள் பின்தங்கியே உள்ளது. எதிர்கால தொழில்நுட்பமாக கருதப்படும் 6ஜி தொழில்நுட்பத்திலும் சீனாவே முந்தி நிற்கிறது. ஆனால் உலக மேலாதிக்கத்தில் இந்த இரு நாடுகளின் அணி சேர்ப்பை பொறுத்தே இதன் வெற்றியிருக்கிறது.

குவாண்டம் அறிவியல் தொழில்நுட்பம்:

பேன் ஜியான்வேய், சீன குவாண்டம் அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர். அவர், "நாமெல்லாம் (சீனர்கள்) நவீன தகவல் தொழில்நுட்ப அறிவியல் பிறந்தபோது அதை கற்பவர்களாகவும், வழிபடுபவர்களாகவுமே இருந்து வந்தோம். ஆனால் இப்பொழுது அத்துறையில் தலைமை ஏற்க நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது" என்று கூறியுள்ளார். 2014ல், குவாண்டம் தொடர்பான காப்புரிமைகளின் எண்ணிக்கையில் அமெரிக்காவும் சீனாவும் சமன் செய்தன. 2015ல் குவாண்டம் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான வருடாந்திர செலவில் அமெரிக்காவிற்கு அடுத்து சீனா இரண்டாவது இடத்தில் இருந்தது.

சீனா 2030ம் ஆண்டிற்குள் QIS இல் முன்னேற்றங்களை உருவாக்கும் நோக்கில் "மெகாபிராஜெக்ட்" ஒன்றை அறிமுகப்படுத்திய இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 2018 ஆம் ஆண்டில் சீனா அமெரிக்காவை கடந்து, இரண்டு மடங்கிற்கு அதிகமான காப்புரிமைகளை தாக்கல் செய்து மொத்த குவாண்டம் காப்புரிமைகளில் 52% பெற்றுள்ளது. இன்று குவாண்டம் தகவல் அறிவியலில் அமெரிக்காவை விட சீனா நான்கு மடங்கு அதிகமாகச் செலவிடுகிறது.

அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான கூகுள், ஐபிஎம், இண்டெல் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள், குவாண்டம் தொழில் நுட்பத்தில் முதல் மைல் கல்லை எட்டுவதில் பெரும் பங்காற்றி இருந்தன. இந்த மைல் கல்தான் குவாண்டம் அறிவியலில் அமெரிக்காவினுடைய மேலாதிக்கத்தை முதலில் நிறுவியது. இதை கிளவுட் (cloud) தொழில்நுட்ப கணினி சேவைகள் மூலமாக தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி குவாண்டம் கணினிகளை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர். இன்னொரு பக்கத்தில் அனைத்து எதிர்கால தொழில் நுட்பத்துறைகளிலும் தனது மேலாதிக்கத்தை கட்டியமைக்க போராடும் சீனா, அமெரிக்காவின் இந்த முன்னேற்றத்தை எட்டிப்பிடிக்க முயல்கின்றது. அதனால் 2017ம் ஆண்டு "கேந்திர முக்கியத்துவ தொழில் நுட்பம்" என்று அறிவித்து அதற்கு முதலீடுகளை அதிகரித்துள்ளது. அதன் விளவாக, சீன நிறுவனமான ஹார்பின் பொறியியல் குவாண்டம் கணினி, மென்பொருள் சார்பான காப்புரிமைகளில் ஏற்கெனவே முதல் ஐந்து இடத்தில் தங்களை தக்க வைத்துக் கொண்டிருந்தது. 2019ல் கூகுள் நிறுவனம் 53 க்யூபிட் சக்தி படைத்த சைக்கோமோர் என்ற குவாண்டம் கணினியைப் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தது. அதற்கு அடுத்த ஒரு வருடத்திலேயே சீனா தனது ஆராய்ச்சி முடிவுகளை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது. சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் டிசம்பர் 2020ல் போட்டோனிக் குவாண்டம் கணினியை உருவாக்கி சாதனைப் படைத்தது. இது கூகுள் நிறுவனம் உருவாக்கிய சைக்கோமோர் குவாண்டம் கணினியைவிட 10 பில்லியன் மடங்கு வேகமாக செயல்படக்கூடிய திறன் படைத்ததாகும். அடுத்த ஆறு மாதத்தில் பேன் ஜியாங்வேயால் வழி நடத்தப்பட்ட குழு மீண்டும் ஒரு தலைப்பு செய்தியை கொடுத்தனர். அதாவது புதிய குவாண்டம் ப்ராசசர், "சூசாங்சி" கூகுள் நிறுவனத்தின் சைக்கோமோரால் ஆராயப்படும் வேகத்தைவிட 100 மடங்கு அதிக ஆற்றலுடன் கடினமான வேலையை செய்து முடிக்கும் வல்லமை பெற்றது என்று அறிவித்தனர். சீனா 113 போட்டோனிக் க்யூபிட் உடன் போட்டியில் முதல் நிலையில் உள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க - சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு ஒரு அறிக்கையில் "சீனா குவாண்டம் தொலைத்தொடர்பில் உலகத் தலைமையாக மாறி அமெரிக்காவை விஞ்சி விட்டது" என்று கூறியது. சீனாவின் குவாண்டம் தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. 2016ல் சீனா மிசியஸ் என்ற முதல் குவாண்டம் தொழில் நுட்ப செயற்கைக்கோளை ஏவியது. இந்த வருடம் ஜனவரி மாதம் 2800 மைல் தூரத்திற்கு இந்த குவாண்டம் தொழில் நுட்பம் மூலம் தகவல் பரிமாற்றம் நடத்தப்பட்டதாக சீனா அறிவித்துள்ளது. இதுகுறித்து ஒரு இராணுவ வல்லுநர், சீனாவின் இந்த குவாண்டம் தொழில் நுட்ப வளர்ச்சி இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் சீன அரசு மற்றும் இராணுவம் சார்ந்த தகவல் பரிமாற்றத்தில் குவாண்டம் தொழில் நுட்பத்தை பயன்படுத்தப்பட போகிறதென்றும், இதன்மூலம் இந்த தகவல்களை யாரும் இடைமறிக்க முடியாத அளவுக்கு இரகசியமாக சென்று விடும் என்றும்; பிறகு அமெரிக்காவால் சீனாவின் தகவல் பரிமாற்றத்தை எள்ளளவும் உளவு பார்க்க முடியாது என்று குறிப்பிடுகிறார்.

இந்த தொழில் நுட்பமானது தடமறியா தொழில் நுட்பத்திற்கும் (Stealth Technology) மற்றும் ரேடார் கண்காணிப்பை செயலற்றதாக்குதல் போன்ற இன்றைய அதிநவீன தொழில் நுட்பங்களை ஒன்றுமில்லாமல் செய்யும் அளவுக்கு வலிமை படைத்தது. அதனால் இது இராணுவ ரீதியாகவும் மிக உயரிய அல்லது அடுத்த தலைமுறைக்கான ஆயுத வல்லமையைக் கொடுக்கக் கூடியதாகவும் உள்ளது.

குறைகடத்திகள் (Semi conductors):

இன்றைய நவீன தொழில்நுட்ப மின்னணு பொருட்களின் மிக முக்கிய தவிர்க்கமுடியாத உபகரணமாகத் திகழ்வது இந்த குறைக்கடத்திகள்தான். சாதாரண கைப்பேசியில் ஆரம்பித்து, தொலைக் காட்சி, கணினி, கார் முதற்கொண்டு வானூர்தி மற்றும் இராணுவ போர் விமானங்கள், செயற்கைக்கோள்கள் என்று எந்த மின்னணு பொருட்களை எடுத்தாலும், இந்த குறைகடத்திகள் இல்லாமல் உலகம் இயங்காது எனும் அளவிற்கு நவீன தொழில்நுட்ப அத்தியாவசிய சரக்குப் பொருளாக மாறிவிட்டது. இதனாலேயே இன்று சீன-அமெரிக்க தொழில்நுட்ப போட்டியில் குறைகடத்திகள் முக்கிய உந்துசக்தியாக மாறிவிட்டது. இந்த குறைகடத்தி உற்பத்தியில் அறை நூற்றாண்டுக்கு மேல் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை செலுத்திவந்த நிலையில், உள்நாட்டில் தொடர்ந்து குறைந்த முதலீடுகளே செய்யப்பட்டதன் காரணமாகவும், மற்ற நாடுகளின் போட்டியின் காரணமாகவும் 1990களில் 37% இருந்த அமெரிக்க உற்பத்தி இன்று 12% உற்பத்தியாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனாலும் அமெரிக்கா இன்னமும் சிப் வடிவமைப்பிலும், குறைகடத்திகள் உற்பத்தி ஆலோசனைகளை வழங்கும் தொழில்களிலும் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறனர்.

சீனாவோ கடந்த பத்தாண்டுகளில் பெரும் முதலீடுகள் செய்து குறைகடத்தி உற்பத்தியில் பெரும் முன்னேற்றங்களை கண்டு வருகிறது. இப்போது சீனா, உலகத்தின் முன்னோடி நிறுவனமான தைவானின் TSMC நிறுவனத்தை ஒப்பிடும்போது ஓரிரு  தலைமுறைகள் மட்டுமே பின் தங்கியுள்ளது. அதாவது TSMC நிறுவனம் 4nm (நேனோ மீட்டர்) அளவில் உற்பத்தி செய்யும் ஆற்றல் பெற்றுள்ளது. ஆனால் சீனாவின் SMIC நிறுவனம் இப்போது 7nm அளவிற்கு உற்பத்தி செய்யும் ஆற்றலை பெற்றுள்ளது. இத்துறையில் எவ்வளவு குறைவான நேனோ மீட்டர் தொழில் நுட்பம் பயன்படுத்தப் படுகிறதோ, அந்தளவுக்கு அது முன்னேறியதாகவும் நவீனமாகவும் கருதப்படும். குறைகடத்திகளை தயாரிக்கும் லிதோகிராஃபி இயந்திரங்களை தயாரிக்கும் உலகின் முன்னணி நிறுவனமான ASMLன் முதன்மை அதிகாரியான பீட்டர் வென்னிக்கின் அனுமானப்படி அடுத்த பத்தாண்டுகளில் சீன நிறுவனங்கள் குறைகடத்தி துறையில் தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் அவர்களே தயாரித்துக் கொள்ளும் அளவிற்கு தன்னிறைவை பெற்றுவிடுவர் என்று கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் சீனா உலகத்தின் மிக அதிகளவு அதி நவீன குறைகடத்திகளை தயாரிக்கும் நாடாக மாறும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார். சீனா குறைகடத்திகளை நுகர்வதில் கடந்து இரு பத்தாண்டுகளாக மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது 2000ம் ஆண்டு உலகச் சந்தையின் மொத்த நுகர்வில்  20%திற்கும் குறைவாக இருந்த சீனாவின் நுகர்வு 2019ல் 60% அளவுக்கு உயர்ந்துள்ளது. சீனா இத்தொழில் நுட்பத்தில் இரு பெரும் முக்கிய மைல் கல்களை தாண்டியுள்ளது. முதலில் குறைகடத்தி கட்டுருவாக்கத்தில் (Fabrication) சீனாவின் ஒட்டுமொத்த உலக குறைகடத்தி உற்பத்தியில் அமெரிக்காவின் 12% விஞ்சி சீனா 15% வளர்ச்சி பெற்றுள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் இன்னும் 40% வளர்ச்சி கண்டு உலகத்தின் பெரிய குறைகடத்தி உற்பத்தியாளராக மாறி 24% சந்தையை கைப்பற்றும் என்றும் அனுமானிக்கப் படுகிறது. குறைகடத்தி கட்டுருவாக்கத்தில் சீனாவின் பொதுத்துறையாகவும் முன்னணி நிறுவனமாகவும் திகழும் SMIC நிறுவனம் கடந்த பத்தாண்டாக முதல் ஐந்து இடத்தை தக்கவைத்துக் கொண்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் 7nm அளவிற்கு நவீன தொழில் நுட்பத்தை மேற்கொண்டு குறைகடத்தி கட்டுருவாக்கத்தை உற்பத்தி செய்து அமெரிக்காவின் இண்டெல் நிறுவனத்தை விஞ்சியுள்ளது.

இரண்டாவதாக சிப் வடிவமைப்பு பிரிவில் ஹுவாவேய் நிறுவனத்தின் துணை நிறுவனமான 'ஹை சிலிகன்' நிறுவனம் 'ஒருங்கிணைந்த மின்சுற்று' (Integrated Circuit) வடிவமைப்பில் சக்திவாய்ந்த நிறுவனமாக வளர்ந்துள்ளது. 2020ல் இந்த நிறுவனம் தலைசிறந்த 10 நிறுவனங்களில் ஒன்றாக குறைந்த காலத்தில் வளர்ந்துள்ளது. அமெரிக்காவின் குவால்காம் நிறுவனமானது சீனாவின் முன்னணி நிறுவனங்களுக்கு திறன் கைப்பேசிகளின் (Smart Phone) ப்ராசசர் (Processor)களை வடிவமைத்து கொடுத்து வந்தது. இதை முறியடித்து ஹை-சிலிக்கன் நிறுவனம் வளர்ந்து தற்சார்பை நிலைநிறுத்தியிருக்கிறது. இருப்பினும் குறைகடத்திகளில் இன்னும் 85% உள்நாட்டு தேவைகளை வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்து வருகிறது. TSMC நிறுவனரான மோரிஸ் சாங்கின் அனுமானப்படி, "அமெரிக்கா மற்றும் தைவானின் வடிவமைப்பு மற்றும் குறைகடத்தி கட்டுருவாக்கத்தின் முன்னேறிய தொழில்நுட்பத்தை எட்டுவதற்கு இன்னும் ஒரு சில ஆண்டுகளே சீனா பின் தங்கியுள்ளது" என்று கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த தொழிற்துறை சந்தையில் 48% அமெரிக்கா கையில் வைத்துக்கொண்டு குறைகடத்தியில் உலக தலைமையை வசப்படுத்தி வருகிறது. இருப்பினும் வடிவமைப்பிலும், கட்டுருவாக்கத்திலும் அதன் திறன்களை பார்க்கும்போது கடந்த பத்தாண்டில் கடுமையாக சரிவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க நிறுவனங்களான குவால்காம் மற்றும் என்வீடியா போன்ற குறைகடத்தி நிறுவனங்கள் முதல் பத்து இடத்தில் 7ம் இடங்களை பெற்றுள்ளது. இருப்பினும் வருமான அடிப்படை வரிசையில் பெரும் கடன்களால் கட்டுண்டு இருப்பதால் அதன் எதிர்காலத்திற்கான தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக குறைகடத்தி திறன்களின் போதாமை பெருகி வருகிறது. அமெரிக்க நிறுவனங்களின் இலாபத்தின் பெரும்பகுதி சீன நிறுவனங்களை தொடர்ந்து சார்ந்திருப்பது என்பது போன்ற பல பலவீனங்களுடன் அமெரிக்க நிறுவனங்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவின் இண்டெல் மற்றும் க்ளோபல் பௌண்ட்ரீஸ் நிறுவனங்கள் அடுத்த தலைமுறை தொழில் நுட்ப குறைகடத்தி உற்பத்தியில் பின் தங்கியுள்ளது. இண்டெல் நிறுவனத்தின் முதன்மை அதிகாரியான பேட் ஜெல்சிங்கர், "இதன் மூலம் நமது அன்றாட பொருளாதார கட்டமைப்பையும் மனித சமூகத்தின் ஏனைய பிரிவுகளையும் கட்டமைக்கும் மிக முக்கிய பகுதி நம் கையிலிருந்து விலகி செல்வது அதிகரித்துள்ளது" என்று கூறியுள்ளார். ஆனால் மிக முக்கிய இரண்டு துறைகளில் அமெரிக்கா தனது செல்வாக்கை நிலை நிறுத்தி வருகிறது. அமெரிக்க நிறுவனமான அப்லைட் மெட்டீரியல்ஸ், லாம் ரிசர்ச் போன்ற நிறுவனங்கள் மூலம் ஒன்று குறைகடத்தி உற்பத்தி உள்ளீடுகள் மற்றும் முக்கிய விநியோக சங்கிலியின் தடைப் புள்ளிகள் (Choke points) மூலம் 55% குறைகடத்தி உற்பத்தி உபகரணங்களிலும் 85% மின்னணு வடிவமைப்பு இயந்திர மென்பொருளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது அமெரிக்கா.

இந்த தொடர் நிகழ்வுகளை கவனிக்கும்போது அடுத்த சில காலத்திற்கு இத்துறையில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்குமான போட்டி தீவிரமாக இருக்கப்போகிறது என்பதில் மாறுபடுவதற்கில்லை.  ஆனால் சீனாவின் வளர்ச்சியானது முக்கிய மூன்று துறைகளில் இரண்டு துறைகளில் மிகச் சிறந்த முன்னேற்றத்தை கண்டுள்ளது. இது நிலைப்பெற்றால், சீனாவின் குறைகடத்தி தொழிற்துறை அடுத்த பத்தாண்டில் மிகத் துரித வளர்ச்சியை காணும் என்று வல்லுநர்கள் கணிக்கின்றனர். அதனால்தான் அமெரிக்கா சீனாவிற்கு இந்த தொழில் நுட்பம் உற்பத்தியை எட்டாக் கனியாக மாற்ற முயற்சிக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்தில் ASML என்ற நிறுவனம்தான் உலகளவில் சில்லுகளைத் தயாரிக்கும் லித்தோகிராஃபி இயந்திரத்தைத் தயாரிக்கும் துறையில் மேலாதிக்க செலுத்திவரும் நிறுவனமாகும். ASMLதான் உலகளவில் லித்தோகிராஃபி சந்தையில் 90% க்கும் அதிகமாக கட்டுப்படுத்துகிறது. ASMLன் அதிநவீன உச்சபட்ச அல்ட்ரா வயலட் லித்தோகிராஃபி இயந்திரம்தான் சில்லுகளைத் தயாரிக்கத் தேவைப்படும் மிகவும் சமீபத்திய, மிகவும் சக்தி வாய்ந்த நவீன இயந்திரமாகும். அமெரிக்காவின் அழுத்தத்தின் காரணமாக, 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து சீனாவின் சில்லு தயாரிப்பில் முன்னோடியாக திகழும் செமிகண்டக்டர் மேனுஃபேக்ச்சரிங் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷனுக்கு (SMIC) நவீன லித்தோகிராஃபி இயந்திரங்களை விற்பதற்கு ASML நிறுவனத்திற்கு அமெரிக்க லாபி செய்து தடையை அமல்படுத்தியுள்ளது. இந்த தடையின் காரணமாக SMIC நிறுவனத்தால் அதி நவீன குறைக்கடத்திகளை தயாரிக்க இயலவில்லை. இருந்தாலும் அத்தடைகளை தகர்த்து சிறிது சிறிதாக துரிதமாக முன்னேறி வருகிறது. ஆனால் இதில் இறுதி வெற்றி யாருக்கு என்பதை மற்ற தொழில் நுட்ப வெற்றிகளும், உலக அளவில் நாடுகளின் அணிதிரட்டல்களுமே எதிர்காலத்தில் முடிவு செய்யும்.

அமெரிக்கா புதியதாக கொண்டுவந்துள்ள சிப் மற்றும் அறிவியல் சட்டத்தின் மூலம் தனது ஆதரவு நாடுகளை ஒருங்கிணைத்து சிப்-4 (Chip-4 Alliance) கூட்டமைப்பை உருவாக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறது. இந்த கூட்டமைப்பில் அமெரிக்க தலைமையில் தைவான், தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளை இணைத்து சில்லு துறையில் தனது மேலாதிக்கத்திற்காக ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் சில்லு துறையில் முன்னணியில் இருக்கும் அந்த நாடுகளை தங்கள் நாட்டில் தொழில் துவங்கவும், தொழில் நுட்பத்தை பரிமாறிக்கொள்ளவும் நிர்ப்பந்திக்கிறது. இன்னொரு பக்கம் இந்த தொழில் நுட்பத்தில் சீனா முன்னேறுவதை தடுக்கவும் இந்த கூட்டமைப்பின் மூலம் முயற்சிக்கிறது. சீனாவிற்கு இந்த நான்கு நாடுகளும் தொழில் துவங்குவதற்கும், நவீன சில்லுகளை வர்த்தகம் செய்வதற்கும் அமெரிக்கா தடை செய்ய முயன்று கொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் சீனாவின் வளர்ச்சி சற்று தாமதித்தாலும், சீனாவை அதி நவீன குறைகடத்தி நுகர்விலிருந்து பிரிப்பது தனக்கு தானே ஏற்படுத்திக்கொள்ளும் அழிவு போக்காகும் என்று அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்க அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏனென்றால் அமெரிக்க சிப் நிறுவனங்கள் 36% சீன சந்தையை மட்டுமே நம்பியுள்ளது. அது மட்டுமல்லாமல் அமெரிக்க அரசு சீனா மீது தொடர்ந்து வர்த்தக தடையும், தொழில்நுட்ப தடையும் விதித்து வருவதால், சீனா அத்துறைகளில் தொடர்ந்து சுயச்சார்பையும், புதிய தொழில் நுட்பங்களையும் பிடித்துக் கொண்டு மேலும் வளர்ந்து வருவதாக அமெரிக்க வல்லுநர்கள் அமெரிக்க அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது இன்னும் முழுமையாக அமெரிக்க மேலாதிக்கத்திற்கு கடும் பிரச்சனையாகிவிடும் என்று எச்சரித்துள்ளனர்.

ஆனால் இன்றைய நிலையில் சீனா அமெரிக்காவின் வளர்ச்சியை எட்டி பிடித்திருந்தாலும், இன்னும் இரு நாடுகளும் இதில் தன்னிறைவை அடையவில்லை. உண்மையில் இத்துறையில் தைவான் மற்றும் தென் கொரியாவே பிரதான சந்தையை கையில் வைத்துள்ளனர். அமெரிக்க நிறுவனங்கள் குறைகடத்திகள் தயாரிக்க தேவையான வடிவமைப்பு மற்றும் ஆலோசனை துறைகளின் ஆதிக்கம் செலுத்தி வருவதும், தைவான் மற்றும் தென்கொரிய நாடுகளை தங்களின் ஆதிக்கத்தின் கீழ் தொடர்ந்து மேலாண்மை செய்து வருவதால், சீனாவின் குறைகடத்தி தொழில் நுட்ப உற்பத்தி மற்றும் வடிவமைப்பில் தன்னிறைவு எய்துவதை பலத்த முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி வருகிறது அமெரிக்க அரசு. அதற்குத்தான் அமெரிக்க சிப்-4 கூட்டணி மற்றும் சிப் மற்றும் அறிவியல் சட்டத்தை கையிலெடுத்துள்ளது. இப்போதைக்கு இத்துறையில் அமெரிக்காவின் கையே சீனாவைவிட மேலோங்கியுள்ளது.

அமெரிக்காவின் சிப் மற்றும் அறிவியல் சட்டம்:

இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் சிப் மற்றும் அறிவியல் சட்டத்தை அமெரிக்கா தனது செனட் சபையில் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் குறைகடத்தி மற்றும் இதர கேந்திர முக்கிய அறிவியல் துறைகளில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிறுவ முயற்சி மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 52.7 பில்லியன் டாலர் தொகையை குறைகடத்திகள் சார்ந்த ஆராய்ச்சி, மேம்பாடு, உற்பத்தி மற்றும் தொழிலாளர் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் $39 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையாக கொடுக்கப்படுகிறது. பிறகு ஆட்டோமொபைல்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் பயன்படுத்தப்படும் குறைகடத்திகளுக்காக 2 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. R&D மற்றும் பணியாளர்கள் மேம்பாட்டில் 13.2 பில்லியன் டாலர்கள் மற்றும் சர்வதேச தகவல் தொடர்பு தொழில்நுட்ப பாதுகாப்பு மற்றும் குறைக்கடத்தி விநியோகச் சங்கிலி நடவடிக்கைகளுக்கு 500 மில்லியன் டாலர் ஆகியவையும் அடங்கும். செமிகண்டக்டர்கள் மற்றும் தொடர்புடைய உபகரணங்களை உற்பத்தி செய்வதற்கான மூலதனச் செலவுகளுக்கு 25% முதலீட்டு வரிச் சலுகையையும் வழங்கியிருக்கிறது.

இந்த நிதிகள் வலுவான கட்டுப்பாட்டு விதிகளையும் கொண்டிருப்பதாக வெள்ளை மாளிகை அறிவிக்கிறது. இந்த சட்டம் அமெரிக்காவின் தொழில்நுட்ப உற்பத்தியில் முன்னேறி செல்வது மட்டுமல்லாமல், இந்த தொழில்நுட்பங்களில் பிரதான போட்டியாளரான சீனாவையும் அமெரிக்க நலனுக்கு எதிரான நாடுகளையும் தொழில்நுட்ப ரீதியாக பல தடைகளை ஏற்படுத்தி தனது மேலாதிக்க போட்டியிலிருந்து விலக்கி வைக்கும் சரத்துகளை அதில் கொண்டுள்ளது. இதன் மூலம் நிதியுதவி பெறும் அமெரிக்க நிறுவனங்கள் சீனாவிலும் அல்லது அமெரிக்க நலனுக்கு எதிராக செயல்படும் நாடுகளிலும் அந்நிறுவனங்களின் மூலதனங்களை இட 10 ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நிதி பெறும் நிறுவனங்கள் சீனாவில் எவ்விதமான கட்டுமானத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த கோருகிறது. இதுபோல் அமெரிக்க நிறுவனங்கள் தொழில்நுட்பத்தை சீனாவுக்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்கா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமெரிக்க சிப் வடிவமைப்பு நிறுவனமான 'என்விடியா' கடந்த வாரம் அமெரிக்க அதிகாரிகளால் செயற்கை நுண்ணறிவு வேலைக்கு தேவைப்படும் இரண்டு சிறந்த கம்ப்யூட்டிங் சில்லுகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்துமாறு கட்டளையிட்டுள்ளது. இந்த சட்டம் மற்றும் சிப்-4 கூட்டமைப்பின் நோக்கம் இரண்டு விசயங்களை முதன்மையாக கொண்டுள்ளது. 1. அமெரிக்க நிறுவனங்கள் மேலாதிக்கம் பெறுவது; 2. தனது உலக ஒழுங்கமைவுக்கு எதிரியாக கருதப்படும் முக்கிய நாடுகளை முடக்குவதாகும்.

ஹைபர்சோனிக் தொழில் நுட்பம்:

"நாங்கள் ஹைப்பர்சோனிக் திட்டங்களை பொறுத்தவரையில் சீனாவையும் ரசியாவையும் போல இன்னும் முன்னேறவில்லை" என்று அமெரிக்க விண்வெளி செயல்பாட்டு துறையின் துணைத் தலைவர் ஜெனரல் டேவிட் தாம்சன்,  ஹாலிஃபாக்ஸ் சர்வதேச பாதுகாப்பு மன்றத்தில் பேசியுள்ளார்.

பின்னர், அமெரிக்காவின் ஆயுத உற்பத்தி நிறுவனமான ரேதியோனின் தலைமை நிர்வாக அதிகாரி, "ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை உருவாக்குவதில் பெய்ஜிங்கை விட வாஷிங்டன் பல ஆண்டுகள் பின்தங்கியிருப்பதாகக் கூறியுள்ளார். "இருப்பினும், அமெரிக்காவை விட சீனா முன்னிலையில் இருப்பது இந்த ஒரு தளத்தில் மட்டுமல்ல என்றுதான் தோன்றுகிறது" என்றும் கூறியுள்ளார்.

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியின் வேகத்தைவிட குறைந்தது ஐந்து மடங்கு அதிக வேகத்துடன் பறக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றது. ஆனால் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் ஏவுகணைகளானது அந்த வேகத்திலும் தன்னுடைய திசையை தீர்மானிக்க முடியாதபடி, பல்வேறு வழித்தட திசைகளை மாற்றி பறந்து சென்று இலக்கை தாக்கும். இந்த திறனால் அதாவது மற்ற ஏவுகணைகளைப் போல நேராக சென்று தாக்காமல், பல்வேறு வழித்தடங்களையும் திசை வழிகளையும் மேற்கொள்வதாலும், மிக வேகமாக சீறிப் பாய்வதாலும் நடைமுறையில் உள்ள ரேடார்களால் இதை கண்காணிக்கவும் அழிக்கவும் கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்குகிறது.

மேக் 6 என்ற அதாவது ஒலியைவிட ஆறு மடங்கு வேகத்தில், சிங்காங்-2 வேவ்ரைடர் (waverider) ஹைப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை (HCM) வடமேற்கு சீனாவின் மேல் வானத்தில் அதன் சொந்த வழித்தடம் மற்றும் திசையின் ஊடாக வளிமண்டலத்திற்கு மேலாக சென்று இலக்கை தாக்கியது என்று ஆகஸ்டு 2018ல் நடந்த சோதனையின்போது சீன அகாடமி ஆஃப் ஏரோ ஸ்பேஸ் ஏரோடைனமிக்ஸ் இப்படித்தான் விவரித்துள்ளது. HCMன் வேகம் மற்றும் பாய்ச்சல் திறனைப் பற்றி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம், "இந்த வகை ஹைப்பர்சோனிக் ஏவுகணை தற்போதைய தலைமுறை ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பை உடைக்க வல்லது" என்று இந்த புதிய ஆயுதத்தை பற்றி கூறியுள்ளது.

'சவுத் சீனா மார்னிங் போஸ்ட்' என்ற சீன செய்தி நிறுவனம், ஒலியை விட ஐந்து மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் செல்லும்போது சில தகவல் தொடர்பு சிக்கல்கள் இருந்ததாகவும் அது இப்போது 6G தொழில் நுட்பத்தில் நீக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் 6G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலக்குகளைத் தொடர்புகொள்ளவும் கண்டறியவும் முடியும் என்பதை ஜனவரி 2022ல் சீனா கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் அமெரிக்காவானது, விமானத்தில் உள்ள முக்கிய தொடர்பு கருவிகளும், 5ஜி தொழில்நுட்ப தொடர்பு கருவிகளின் அலைவரிசையும் இரண்டும் ஒரே அலைக்கற்றையைப் பயன்படுத்துவதால், சில குறுக்கீடுகள் ஏற்படுவதாகவும், அதனால் 5G தொழில் நுட்பத்தை அதன் உள்நாட்டுப் போக்குவரத்து விமானங்கள் மற்றும் போர் விமானங்களில் பயன்படுத்துவதில் அமெரிக்கா சிரமப்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. யூரேசியன் டைம்ஸ் என்ற செய்தி நிறுவனம் அமெரிக்கா ஹைப்பர்சோனிக் ஆயுதச் சோதனையில் இதுவரை மூன்று தொடர்ச்சியான சோதனைகளில் தோல்வியடைந்ததை சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்து.

"உலகின் இராணுவ வல்லரசுகள் எல்லாம் தற்போது ஹைப்பர்சோனிக் கிளைடு தொழில்நுட்பத்தை சுற்றி கடுமையான ஆயுதப் போட்டியில் ஈடுபட்டு வருகின்றன; இது வான் மற்றும் விண்வெளி பாதுகாப்பிற்கு புதிய மற்றும் கடுமையான சவால்களைக் கொண்டுவந்துள்ளது" என்று வுஹானில் உள்ள விமானப்படையின் முன்னெச்சரிக்கை புலனாய்வு அகாடமி பிரிவின் கணினி விஞ்ஞானி ஜாங் ஜுன்பியாவோ கூறியுள்ளார்.

ஏப்ரல் 30 அன்று சீன ஆஸ்ட்ரோநாட்டிக்ஸ் சொசைட்டியால் நடத்தப்படும் ஜர்னல் ஆஃப் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் ஜாங் மற்றும் அவரது குழுவினர் "ஏவுகணை வழித்தட கணிப்புதான் போரின் இலக்கை அனுமானிப்பதிலும் வான்வழி பாதுகாப்பு இடைமறிப்புகளுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்" என்று கூறியுள்ளார்.

ஒரு ஹைப்பர்சோனிக் ஆயுதம் விண்வெளியில் இருந்தோ, நிலத்தில் இருந்தோ தனது தாக்குதலைத் தொடங்குகிறது. வழக்கமான பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஒரே நேர் பாதையில் பயணிப்பது போலல்லாமல், வளிமண்டலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு சிறுவன் சிறு கல்லை தண்ணீரின் மேற்பரப்பில் எறியும்போது அந்த கல் தண்ணீரின் உள்ளேயும் மேலேயும் தாவித் தாவி செல்வதைப்போல இந்த ஹைபர்சோனிக் ஆயுதம் அதன் பாதையில் இடது வலதாகவும் பயணிக்க முடியும். இதன் வேகத்தில் இந்த தாக்குதல் வழித்தடத்தை அறிந்துகொள்வதுதான் இந்த ஹைபர்சோனிக் ஆயுத தடுப்பு அமைப்பை ஏற்படுத்துவதில் உள்ள சிக்கலாகும். மேக் 5 அல்லது அதற்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கும் இந்த தொழில்நுட்ப ஏவுகணைகளை அறிந்து வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து செயல்பட மிகக் குறுகிய காலத்திற்குள் பதில் நடவடிக்கைக்கு இறங்க வேண்டும். அதனால் தற்போதுள்ள தொழில்நுட்பங்கள், இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையை நிறுத்த முடியாது என்பது நிதர்சனமான உண்மையாகியுள்ளது. இதை முறியடிக்க அதாவது இதுபோன்ற நிச்சயமற்ற பணிகளை கையாள செயற்கை நுண்ணறிவு (AI) போன்றவற்றால் முடியும் என்று ஜாங் கூறுகிறார். அப்படித்தான் மே மாதம் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு ஹபர்சோனிக் ஏவுகணைகளை தடுக்கும் வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியிருப்பதாக சீன ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

சீனா ஹைபர்சோனிக் ஏவுகணைகளை சோதனை மட்டும் செய்து முடிக்கவில்லை. தயாரிக்கவும் அனுமதி அளித்து தயாரித்தும் வருகிறது. தயாரித்த ஏவுகணை இரு பிரிவுகளாக இராணுவத்திலும் இணைத்து நிர்மாணிக்கப்பட்டும் விட்டது. சீனா தயாரித்த ஏவுகணைக்கு பெயர் DF-17 (டாங் ஃபெங்) அதாவது கிழக்கு காற்று என்று பொருள்படும்.

அமெரிக்காவின் முதல் ஹைபர்சோனிக் ஏவுகணைக்கு பெயர் ARRW (Air-Launched Rapid Response Weapon). ஆனால் பல சோதனைகளும் தோல்வியில்தான் முடிந்துள்ளது. ஹைபர்சோனிக் தொழில்நுட்ப பரிசோதனைக்கு மிக முக்கிய கருவியாக இருப்பது காற்று சுரங்கம் (Wind Tunnel). இதை வைத்துத்தான் அவர்களுக்கு தேவையான வேகத்தை ஏற்படுத்தி வழித்தடங்களை உருவாக்கி பரிசோதிக்க முடியும். இந்தப் பிரிவில்தான் சீனா அமெரிக்காவையும் மிஞ்சி நிற்கிறது. 2017ல் சீனா உலகத்தின் மிகப் பெரிய காற்று சுரங்கத்தை நிர்மாணித்துள்ளதாக உலகிற்கு அறிவித்துள்ளது. இந்த நிர்மாணத்தைக் கொண்டு முழு அளவு ஏவுகணையை பரிசோதிக்க முடியும் என்று அறிவித்துள்ளது. இன்னொரு புதிய வகை காற்று சுரங்கத்தை நிர்மாணித்து வருவதாக அறிவித்துள்ளது. இந்த சுரங்கத்தில் காற்றைவிட 30 மடங்கு அதிவேகத்தில் செல்லக்கூடிய ஏவுகணையை பரிசோதிக்க முடியும் என்றும் கூறியுள்ளது.

ஆனால் அமெரிக்கா இதில் மிகவும் பின்தங்கியுள்ளது. அமெரிக்க நாசாவின் காற்று சுரங்கம் மற்றும் அமெரிக்க விமானப் படையின் AEDC-9 சுரங்கம் எனப் பல கட்டுமானங்கள் 1950 லிருந்து 70கள் வரை கட்டமைக்கப்பட்டதாகும். இன்றைய நவீன தேவைகளுக்கும் புதிய ஆய்வுகளுக்கும் பல பத்தாண்டுகளாக பெரும் முதலீடுகள் இல்லாமல் இத்துறையில் முன்னேற்றமடையாமல் இருந்து வருகிறது. இந்த வருடம்தான் ஹைபர்சோனிக் தொழில்நுட்பத்திற்கான அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் 3.8 பில்லியன் டாலர்கள் ஒதுக்க கோரியுள்ளது. இரு பெரும் அமெரிக்க இராணுவ ஒப்பந்தக்காரர்கள் புதிய தேவைகளுக்கான காற்று சுரங்கங்கள் இல்லாதிருப்பது இந்த தொழில்நுட்பத்தில் சாதிப்பதற்கு பெரும் முட்டுக் கட்டையாக இருப்பதாக கூறியிருக்கின்றனர். சீனாவோ 6 மாதத்திற்கு ஒரு காற்று சுரங்கத்தை அமைப்பதாக அமெரிக்க இராணுவ வல்லுநர் ஒருவர் கூறுகிறார். ஆனால் அமெரிக்காவோ காற்று சுரங்கத்தை அமைக்க 5லிருந்து 10 வருடங்கள் வரை பிடிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இப்படி அமெரிக்காவை சீனா ஏற்கெனவே ஆய்வில்  முந்தியது மட்டுமில்லாமல் உற்பத்தி செய்யும் அளவிற்கு முன்னேறி விட்டது. அமெரிக்கா இன்னும் இந்த தொழில் நுட்பத்தில் சோதனை களத்திலேயே உள்ளது. 

(தொடரும்)

- சமரன், டிசம்பர் 2022 இதழ்