அமெரிக்காவின் 'கோல்டன் டோம்' திட்டத்தைப் போன்ற உலகளாவிய பாதுகாப்பு அமைப்பை நிறுவியுள்ள சீனா
வெண்பா (தமிழில்)

அமெரிக்காவின் 'கோல்டன் டோம்' (Golden Dome) திட்டத்தைப் போன்ற உலகளாவிய பாதுகாப்பு அமைப்பின் முன்மாதிரியை நிறுவியுள்ளதாக சீனாவும் அறிவித்துள்ளது. உலகளாவிய அச்சுறுத்தல் மேலாண்மைக்கான தரவு செயலாக்கத்தில் இது ஒரு திருப்புமுனை என்று இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் விவரித்துள்ளனர் என 'சவுத் சைனா மார்னிங் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.
இன்னும் வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களில் இருந்தாலும், 'அபாயங்களை முன்கூட்டியே பரவலாக கண்டறியும் பெரிய தரவு தளம்' ('distributed early warning detection big data platform') என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு, உலகின் எங்கிருந்தும் சீனாவை நோக்கி ஏவப்படும் ஆயிரம் ஏவுகணைகளை ஒரே நேரத்தில் கண்காணிக்கும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.
உலகளாவிய பாதுகாப்பு மற்றும் நிகழ்நேர நுண்ணறிவு
விண்வெளி, கடல், வான் மற்றும் தரை ஆகியவற்றில் அமைந்துள்ள பலதரப்பட்ட சென்சார்களை ஒருங்கிணைத்து இந்த அமைப்பு அனைத்துவிதமான அச்சுறுத்தல்களையும் நிகழ்நேரத்தில் அடையாளம் கண்டு பகுப்பாய்வு செய்யும். இதில், பறக்கும் பாதைகள், ஆயுதத்தின் வகை, ஏவுகணை உண்மையான போர்க்கருவியா அல்லது போலியா என்பது போன்ற அத்தியாவசிய விவரங்களைப் பெறுவதும் அடங்கும், இதன் மூலம் தடுப்பு அமைப்புகள் துல்லியமாகச் செயல்பட உதவுகிறது.
"இந்த அமைப்பால், பல்வேறு சக்திகளால் உருவாக்கப்பட்ட, வெவ்வேறு பிராந்தியங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் நிறுவப்பட்ட, பல்வேறு வகையான இராணுவ தளங்களிலிருந்து வரும் அனைத்து தரவுகளை ஒருங்கிணைக்க இயலும் - குறுக்கீடு அல்லது இடையூறுக்கு உட்பட்டாலும், மிகவும் பாதுகாப்பான வரையறுக்கப்பட்ட அலைவரிசை கொண்ட இராணுவ வலைப்பின்னல்கள் மூலம் அதிக வேகத்தில் பாரிய அளவிலான தரவை அனுப்பவும் பகுப்பாய்வு செய்யவும் முடியும்" என்று திட்டக்குழு கூறியது.
இது, உலகுதழுவிய பாதுகாப்பை நிறுவும் முதல் ஏவுகணை தடுப்பு அமைப்பாகும் என்று அந்த செய்தி நிறுவனம் கூறுகிறது.
'கோல்டன் டோம்' ஏவுகணை பாதுகாப்புக் கவசம்?
மே மாதம், டிரம்ப், புவியியல் தடைகளை உடைத்து, உலகளாவிய தகவல் பகிர்வுக்கானதொரு அமைப்பை உருவாக்க 'கோல்டன் டோம்' திட்டத்தை முன்மொழிந்தார். டிரம்ப் தனது 'கோல்டன் டோம்' ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்கானதொரு வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்து, 175 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த இலட்சிய பாதுகாப்புத் திட்டத்திற்கு ஒரு தலைவரையும் நியமித்தார்.
ஆகஸ்ட் மாதம் பென்டகனால் தொழில்துறைக்கு வழங்கப்பட்டு, முதன்முதலில் ராய்ட்டர்ஸால் வெளியிடப்பட்ட இந்தத் திட்டம், வான்தடுப்பு அடுக்குடன் மட்டுமல்லாமல் மூன்று தரைவழித் தாக்குதல் தடுப்பு அடுக்குகளையும் கொண்டிருக்கும் என்று கோடிட்டுக் காட்டியது.
ஆகஸ்டில் வெளியிடப்பட்ட இந்த திட்டத்தில், தாக்க வரும் ஏவுகணைகள் விண்வெளியில் இருக்கும்போதே இடைமறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஐந்து ஏவுதளங்களைக் கொண்ட மூன்றாவது அடுக்கையும் உள்ளடக்கியதாகும். இந்தத் தளங்களில் மூன்று அமெரிக்காவிற்குள்ளும், மற்ற இரண்டும் ஹவாய் மற்றும் அலாஸ்காவில் நிறுவப்படும். கலிபோர்னியா மற்றும் அலாஸ்காவில் நிறுவப்பட்டுள்ள தரைவழி தடுப்பான்களைப் பயன்படுத்தும் 'தரைவழி நடுப் பாதுகாப்பு அமைப்பு' (Ground-Based Midcourse Defense system) என்ற தற்போதைய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு, இரண்டாவது அடுக்கை உருவாக்க மேம்படுத்தப்படும் என்று பென்டகனின் விளக்கக்காட்சி தெரிவிக்கிறது.
நான்காவது தடுப்பு அடுக்கு, மக்கள் தொகை மையங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் 'வரையறுக்கப்பட்ட பகுதி பாதுகாப்பு'க்காக (Limited Area Defense) இருக்கும். இந்த திட்டத்தில் புதிய ரேடார்கள், தற்போதைய மற்றும் எதிர்கால தடுப்புகளை ஏவக்கூடிய புத்தம் புதிய 'பொது' ஏவுகருவி ஆகியவை அடங்கும், மேலும் தற்போதுள்ள 'பேட்ரியாட்' (Patriot) ஏவுகணை பாதுகாப்பு அமைப்பையும் இது உள்ளடக்கக்கூடும். ஹைப்பர்சோனிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் போன்ற அனைத்து வகையான அச்சுறுத்தல்களையும் முறியடிக்க இவை ஒருங்கிணைந்து செயல்படும் என்று பென்டகன் கூறியது.
- வெண்பா (தமிழில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு