அமெரிக்காவில் சீனாவுக்கு சொந்தமாக உண்மையில் எவ்வளவு விவசாய நிலங்கள் உள்ளன?
பில்கேட்ஸிடமிருப்பதை விட அதிகம் - மற்ற 17 நாடுகளிடமிருப்பதை விட குறைவு. தமிழில் : விஜயன்
அமெரிக்க விவசாய நிலத்தை சீன முதலீட்டாளர்கள் வாங்குவது குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள இரு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் கேள்வி எழுப்பியிருந்தனர். இதுவொருபுறமிருக்க, சீனாவை விஞ்சுமளவிற்கு அதிகமான அமெரிக்க விவசாய நிலங்களை இன்னபிற 18 நாடுகள் குவித்து வைத்துள்ளன.
முக்கிய விவரங்கள்:
வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக்க விவசாய நிலத்தை வாங்கும் போது, அவர்கள் வாங்கிய விவரங்களை வெளிப்படுத்தும் வகையில், 90 நாட்களுக்குள் ஒரு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று விவசாயத் துறை கோருகிறது.
பணியாளர்கள் பற்றாக்குறையை காரணம்காட்டி, 2015 முதல் 2018 வரையிலான காலக்கட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யாமல் விதிமீறல்களில் ஈடுபட்ட வெளிநாட்டினருக்கு அபராதம் விதிக்க முடியவில்லை என விவசாயத் துறை தெரிவித்திருந்தது. இம்முடிவும் கூட 28 நாடாளுமன்ற உறுப்பினர்களின் விமர்சனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
மக்களவை மற்றும் மாநிலங்களவை (செனட் அவை) இரண்டிலும் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு மசோதாக்கள், அமெரிக்க விவசாய நிலத்தில் வெளிநாட்டு சக்திகளின் அதிகரித்துவரும் செல்வாக்கினால் என்னென்ன மாதிரியான விளைவுகள் உருவாகக்கூடும் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. இந்த ஆதிக்கம் அமெரிக்காவின் பொருளாதாரம், உணவு வழங்கல் மற்றும் தேசிய பாதுகாப்பை எவ்வாறு பாதிக்கலாம் என்பது குறித்து முக்கியமாக பரீசிலிக்கிறது.
சீனாவை தளமாகக் கொண்ட ஃபுஃபெங் குரூப் லிமிடெட், வடக்கு டகோட்டா விமானப்படை தளத்திற்கு அருகில் ஒரு மக்காச்சோள ஆலையை நிர்மானிப்பதென்பது தேசப் பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று அதிகாரிகள் கருதியதால் முடக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க விவசாய நிலத்தை சீனா வாங்கிக் குவிப்பதாக எழுந்த சர்ச்சை ஜனவரி பிற்பகுதியில் தீவிரமடைந்தது என்றெ சொல்லலாம்.
வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிக்கையின் கூற்றுப்படி, பிப்ரவரி 4 அன்று சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு சர்ச்சை மேலதிகமாக ஊதிப்பெருக்கப்பட்டன. அமெரிக்க நிலத்தை பிற நாட்டு அரசுகள் உளவு நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என்பன போன்ற சர்ச்சையை இந்த நிகழ்வு கிளப்பியது எனலாம்.
முக்கிய பின்னணி தகவல் இங்கே:
2021 ஆம் ஆண்டு வேளாண் துறை அறிக்கையின்படி, சுமார் 3,84,000 ஏக்கர் அமெரிக்க விவசாய நிலத்தை சீனா வைத்திருக்கிறது. இதில், 85 சீன முதலீட்டாளர்கள்—தனிநபர்கள், நிறுவனங்கள் அல்லது அரசாங்கம் உள்பட—1,95,000 ஏக்கரைச் சொந்தமாக வைத்துள்ளனர் என்றும், இதன் அசல் மதிப்பு கிட்டத்தட்ட $2 பில்லியன் டாலர்கள் மதிப்புடையது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
சீனாவின் பிடியிலுள்ள மொத்த நிலத்தில், $235 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள, மீதமிருக்கும் 1,89,000 ஏக்கர் நிலங்கள், சீன முதலீட்டாளர்களை பங்குதாரர்களாகக் கொண்ட 62 அமெரிக்க நிறுவனங்களின் கைகளில் உள்ளது. 2015 முதல் 2019 வரையில் பார்த்தோமானால், மொத்தமாகவே 550 ஏக்கர் விவசாய நிலங்கள் மட்டுமே சீன முதலீட்டாளர்களால் வாங்கி பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தாண்டிலேயே அதாவது, 2019-2020ம் ஆண்டிலேயே, சீனாவின் பிடியிலிருந்த மொத்த விவசாய நிலத்தின் அளவென்பது 30 சதவீதம் அதிகரித்து(2,47,000 ஏக்கரிலிருந்து) தோராயமாக 3,52,000 ஏக்கராக அதிகரித்துள்ளது. அதே ஆண்டில், சீன முதலீட்டாளர்களை பங்குதார்ர்களாகக் கொண்டுள்ள அமெரிக்க கம்பெனிகளின் நிலவுடைமை என்பது இரண்டு மடங்கு அதிகரித்து, 1,02,000 ஏக்கர்கள் என்ற அளவிற்கு பெருகியுள்ளது. 2020ல் இருந்த அளவிற்கு இல்லையென்றாலும், 2021 ஆம் ஆண்டில் 32,000 ஏக்கர் விவசாய நிலங்களை சீன முதலீட்டாளர்கள் வாங்கிக் குவித்துள்ளனர், இது 2015 முதல் 2019 வரையிலான நிலவுடைமை திரட்சியுடன் ஒப்பிடும்போது 98 சதவீதம் அதிகமாகும்.
மற்றொரு அதிர்ச்சிகரமான தகவல்
அமெரிக்க விவசாய நிலங்களை வாங்கிக் குவித்துள்ள 109 நாடுகளின் பட்டியலை ஆராயும் போது, சீனா 18-வது இடத்தில்தான் உள்ளது என்றாலும், முதலிடத்தில் கனடா(12.8 மில்லியன் ஏக்கர்கள்) உள்ளது. ஏன், கேமன் தீவுகள் என்ற தீவுப் பிரதசத்தின் பேரில் கூட 6,72,000 ஏக்கர் நிலம் உள்ளது.
அமெரிக்க விவசாய நிலங்களை அதிகமாக வாங்கிக் குவித்துள்ள முதல் 10 நாடுகள்
கனடா (12,845,000 ஏக்கர்)
நெதர்லாந்து (4,875,000)
இத்தாலி (2,703,000)
யுனைடெட் கிங்டம் (2,538,000)
ஜெர்மனி (2,269,000)
போர்ச்சுகல் (1,483,000)
பிரான்ஸ் (1,316,000)
டென்மார்க் (856,000)
லக்சம்பர்க் (802,000)
அயர்லாந்து (760,000)
சீனா எந்தளவிற்கான விவசாய நிலங்களை வாங்கிக் குவித்துள்ளதாக கூறப்படுகிறதோ, அதற்கு இணையான அளவிற்கான நிலங்களை அமெரிக்காவிலுள்ள பெருங்கோடீஸ்வரான பில்கேட்ஸிடம் உள்ளது என்று லேண்ட ரிப்போர்ட் என்ற இணைய இதழின் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜனவரி 2021-ல்,இந்த இதழ் நடத்திய ஆய்வின்படி, அமெரிக்காவில் பிரம்மாண்டமான அளவிற்கு நிலங்களை வாங்கிக் குவித்துள்ள தனியார் முதலாளிகளின் தரவரிசையில் பில்கேட்ஸிற்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொருபுறமிருக்க, 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில், அமெரிக்காவில் உள்ள வடக்கு டகோட்டா மாகாணத்தில் 2,100 ஏக்கர் நிலங்களை வாங்குவதற்கு மைக்ரோசாஃப்ட்’ன் நிறுவனர் பில் கேட்ஸிற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சையும், விமர்சனங்களும் வெடித்தது. வைரலாக பரவும் வதந்திச் செய்திகள் உண்மையா பொய்யா என்பது குறித்து ஆராயும் ஸ்னோப்ஸ் என்ற செய்தி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை பில்கேட்ஸ் வாங்கிக் குவிப்பதற்கு பின்னால் நாசகரமான இரகசியத் திட்டம் மறைந்திருப்பதாகவும், அதிலும், சில கட்டுக்கதைகள் பரப்புவோர் அமெரிக்காவிலுள்ள மொத்த விவசாய நிலங்களில் 80 சதவீதம் பில்கேட்ஸிடமே உள்ளது என்றெல்லாம்கூட கூறியுள்ளனர் என்று ஸ்னோப்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது. ஐனவரி 2022-ல் எந்தத் திட்டமிட்ட உள்நோக்கமும் தனக்கில்லை என்று கூறப்பட்ட அனைத்தையும் ரெட்டிட் சமூக ஊடகத்தில் பில் கேட்ஸ் மறுத்து எழுதியுள்ளார். மேலும், அமெரிக்காவிலுள்ள மொத்த விவசாய நிலத்தில் நான்காயிரத்தில் ஒரு பங்கு மட்டுமே தன்னிடமிருப்பதாகவும், உற்பத்தியை அதிகரிப்பதற்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக மட்டுமே தான் முதலீடு செய்வதாகவும் அவர் கூறியிருந்தார்.
அதிர்ச்சியூட்டும் தகவல் இதோ
அமெரிக்காவில் அதிக விவசாய நிலங்களை வாங்கிக் குவித்துள்ளவர்களின் பட்டியலை 2022-ல் லேண்ட் ரிப்போர்ட் இதழ் வெளியிட்டபோது பில் கேட்ஸ் 41-வது இடத்திலிருப்பது தெரிய வந்தது. 4,20,000 ஏக்கர் விவசாய நிலங்களை வைத்துள்ள அமேசான் நிறுவனர் ஜெஃப் பிஜோஸ் 24-வது இடம் பிடித்திருக்கிறார். மனிதர்களை விண்வெளிச் சுற்றுலாவுக்கு அதாவது, வளிமண்டலத்துக்கு மேலாக, அதே நேரத்தில் பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு கீழாக ஆகாயச் சுற்றுலாவுக்கு கூட்டிச் செல்வதை இலக்காக வைத்து செயல்பட்டு வரும் ஃபுளு ஆரிஜின் என்ற ஜெஃப் பிஜோஸின் கம்பெனி இந்த இடத்தில்தான் அமைந்துள்ளது.
நாம் கவனிக்க வேண்டியது என்ன
தேசப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் அந்நிய முதலீடுகளை கண்காணிப்பதற்காகவே, 2023 ஜனவரி 25-வாக்கில் FARM—Foreign Adversary Risk Management—act என்றவொரு மசோதா அமெரிக்காவின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம், அமெரிக்க விவசாயத் துறையில் அந்நிய நாடுகளின் ஆதிக்கம் குறித்து விசாரிப்பதற்கான அதிகாரம் கூட அமெரிக்க வேளாண் துறைக்கும், இருக்கட்சிக்கும் பொதுவாக செயல்பட்டு வரும் அமெரிக்கத் கணக்குத் தணிக்கை துறைக்கும் கிடைத்துவிடுகிறது. மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதவை நிதிச் சேவைகளுக்கான நாடாளுமன்றக் குழுவும், வேளாண் துறைக்கான நாடாளுமன்றக் குழுவும் இதன் நிறைகுறைகளை ஆராய்ந்து வருகிறது. அதேபோல, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவை, வங்கி, வீட்டு வசதி மற்றும் நகர விவகாரங்களுக்கான குழு ஆராய்ந்து வருகிறது.
- விஜயன் (தமிழில்)