சூடானின் கொடூரமான உள்நாட்டுப் போர் – எல் ஃபாஷரில் என்ன நடக்கிறது?
தமிழில்: வெண்பா
சூடானின் கொடூரமான உள்நாட்டுப் போரில் மற்றொரு பேரழிவு அத்தியாயம் அரங்கேறியுள்ளது. டார்பூரில் உள்ள எல்ஃபாஷர் நகரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் 18 மாத காலமாக சூடானிய இராணுவ அரசின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், மற்றொரு துணை இராணுவப் படையான (paramilitary) RSF எனப்படும் விரைவு ஆதரவுப் படை (Rapid Support Forces) அந்நகரைக் கைப்பற்றியது. தற்போது டார்பூரில் உள்ள அனைத்து முக்கிய நகர மையங்களையும் RSF தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றம், நாடு பிளவுபடும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் நிலையை உருவாக்கியுள்ளது.
இந்த வாரம் எல் ஃபாஷரில் என்ன நடந்தது?
26.10.2025 அன்று RSF வெளியிட்ட அறிக்கையில், “கூலிப்படைகள் மற்றும் போராளிக் குழுக்களின் பிடியில் இருந்து எல் ஃபாஷர் நகரின் மீது கட்டுப்பாட்டை விரிவுபடுத்தியுள்ளதாகக்” கூறியது. மறுநாள், சூடானிய இராணுவத் தளபதி, ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான், தனது படைகள் நகரிலிருந்து “பாதுகாப்பான இடத்திற்கு” நகர்ந்ததாக உறுதிப்படுத்தினார், இது அந்நகரின் இழப்பை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது.
இனவெறியால் நூற்றுக்கணக்கான நிராயுதபாணியான பொதுமக்களைக் கொன்றதாக RSF குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது, பொதுமக்களைக் கைது செய்வது, பிணைத் தொகையைப் பெற்ற பின்னரே அவர்களை விடுவிப்பது போன்ற குற்றச்சாட்டுகளும் இந்த துணை இராணுவ அமைப்பு மீது சுமத்தப்பட்டுள்ளன – இவை RSF மற்ற முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய பின் நடந்த சம்பவங்களுடன் ஒத்ததொரு நடைமுறையாகும்.
யேல் பல்கலைக்கழகத்தின் மனிதாபிமான ஆராய்ச்சிக் கூடம் (Humanitarian Research Lab) இந்த வன்முறையின் அளவானது ருவாண்டா இனப்படுகொலையின் முதல் 24 மணி நேர வன்முறைக்கு ஒத்ததாக இருப்பதாகக் கூறியுள்ளது.
அங்கு என்ன நடக்கிறது என்பதை நாம் எப்படி அறிந்துகொள்கிறோம்?
டார்பூரில் சர்வதேசப் பத்திரிகையாளர்கள் களத்தில் இல்லை, மேலும் எல் ஃபாஷரில் உள்ள மக்களைச் செய்தி நிறுவனங்களால் அணுக முடியவில்லை. சூடானியப் பத்திரிகையாளர் சங்கம் (Sudanese Journalists’ Syndicate) ஊடகத் தடையினால் (media blackout) தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கொடூரங்களைப் பற்றித் தெரியவந்த பெரும்பாலான தகவல்கள் காணொளிப் பதிவுகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன – அவற்றில் பெரும்பாலானவை RSF ஆல் சுயமாகப் பதிவு செய்யப்பட்டவை. பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமைகள் ஆய்வாளர்களால் அவை பதிவு செய்யப்பட்ட இடம் (geolocated) அடையாளம் காணப்பட்டன. அருகிலுள்ள தவிலா (Tawila) நகரத்திற்குத் தப்பிச் சென்ற உயிர் பிழைத்தவர்களின் சாட்சியங்கள், யேல் ஆய்வுக்கூடத்தால் நடத்தப்பட்ட செயற்கைக்கோள் படங்களின் பகுப்பாய்வு ஆகியவற்றின் மூலமும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
ஐ.நா.வின் கூற்றுப்படி, “RSF படைகளால் சூழப்பட்ட டஜன் கணக்கான நிராயுதபாணியான ஆண்கள் சுடப்படுவதையும் - இறந்து கிடப்பதையும்” காட்டும் காணொளிகள் வெளியாகியுள்ளன. ஜனநாயக ஆர்வலர்களால் தனிப்பட்ட முறையில் பகிரப்பட்ட காணொளிகள், எரிந்துபோன வாகனங்களுக்கு அருகில் உடல்கள் தரையில் சிதறிக் கிடப்பதைக் காட்டுகின்றன.
28.10.2025 அன்று வெளியிடப்பட்ட யேல் ஆய்வுக் கூட அறிக்கையில், எல் ஃபாஷர் நகரமானது “ஃபுர், சகாலா மற்றும் பெர்டி ஆகிய உள்நாட்டு அரபு அல்லாத மக்கள் கட்டாய இடப்பெயர்வு, உடனடி மரண தண்டனைகள் ஆகியவற்றின் மூலம் இனச் சுத்திகரிப்பு (ethnic cleansing) நடவடிக்கைகளுக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிகிறது” என்று கூறியது. மேலும் நகரமெங்கும் “வீடு வீடாகச் சென்று இத்தகைய சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டதாகவும்” ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
யேல் ஆய்வுக்குழு, செயற்கைக்கோள் படங்கள் பெரிய பெரிய “குவியல்களை” (clusters) காட்டுவதாகவும், அவை மனித உடல்கள் மற்றும் தரை முழுவதும் சிவப்புக் கறை படிந்த நிறமாற்றத்துடன் ஒத்திருப்பதாகவும் கூறியது.
RSF என்றால் யார்? சூடானின் உள்நாட்டுப் போரின் தோற்றம் என்ன?
RSF ஆனது அதிகாரப்பூர்வமாக 2013 ஆம் ஆண்டில், சூடானின் முன்னாள் சர்வாதிகாரத் தலைவர் ஒமர் அல்-பஷீரால், டார்பூர் பகுதியில் உள்ள பழங்குடி கிளர்ச்சியை ஒடுக்க நியமிக்கப்பட்ட ஜன்ஜவீத் படைகளின் (Janjaweed militia) எஞ்சியவர்களிடமிருந்து உருவாக்கப்பட்டது. அந்த நடவடிக்கை சுமார் 300,000 பேர் இனப்படுகொலையுடன் முடிந்தது. இந்த இரு படைகளுக்கும் இடையேயான அதிகாரப் போராட்டத்தைத் தொடர்ந்து, RSF-க்கும் சூடானிய இராணுவ அரசுக்கும் இடையே 2023 ஏப்ரலில் உள்நாட்டுப் போர் தொடங்கியது, மேலும் இந்த மோதல் நாடு முழுவதும் விரைவாகப் பரவியது.
இரு தரப்பினரும் பொதுமக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை (war crimes) செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டார்பூரில் உள்ள மசாலிட் மற்றும் அரபு அல்லாத சமூகங்களுக்கு எதிராக RSF இனப்படுகொலை மற்றும் கூட்டுப் பாலியல் வல்லுறவுகளைச் செய்துள்ளது என்று அமெரிக்கா, ஐ.நா மற்றும் மற்றவர்களும் தீர்மானித்துள்ளனர். அதே ஆண்டு ஆகஸ்டில், எல் ஃபாஷருக்குத் தெற்கே உள்ள சம்சம் (Zamzam) இடம்பெயர்ந்தோர் முகாமில் பஞ்சம் (famine) அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம், RSF இந்த முகாமை கைப்பற்றும்போது, அதில் இருந்த 500,000 பேரில் சுமார் 2,000 பேரைக் கொன்றது.
சர்வதேச சமூகம் என்ன பங்கை வகிக்கிறது?
இந்த ஆண்டு தொடக்கத்தில் லண்டனில் நடைபெற்ற ஒரு மாநாட்டில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் உட்பட 17 நாடுகள் இந்த மோதலைப் பற்றி விவாதிக்க ஒன்று கூடியபோது, சூடான் மீது உலகம் சில கவனத்தைச் செலுத்துவதாகத் தெரிந்தது. அதனுடன் சில புதிய உதவிகளுக்கான உறுதிமொழிகளும் இருந்தன, மேலும் இது புதியதொரு ஒருமித்த கருத்தை (consensus) உருவாக்குவதற்கான முயற்சியாகவும் கருதப்பட்டது. ஆனால், மாநாட்டில் பங்கேற்ற சில நாடுகளே, குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), மோதலில் ஈடுபட்டதாக பரவலான விமர்சனங்கள் எழுந்தன. RSF-க்கு ஆயுதங்களை வழங்கியதாக சூடானின் இராணுவ அரசாங்கம் ஐக்கிய அரபு எமிரேட்ஸைக் குற்றம் சாட்டியது, இதனை எமிரேட்ஸ் மறுத்துள்ளது. ஏப்ரல் மாதம், ஐ.நா. நிபுணர்களின் அறிக்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து “பல” விமானங்கள் சென்றதைக் கண்டறிந்தது. டார்பூருக்குள் எல்லையைக் கடந்து ஆயுதங்கள் கடத்தப்படுவது கண்காணிக்கப்படும் சாட் (Chad) நாட்டில் உள்ள தளங்கள் மூலமாக அவை உறுதிப்படுத்தப்பட்டன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் RSF க்கு இடையேயான உறவானது 2015 ஏமன் போருக்கு முந்தையது. சவுதி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் படைகளுக்காகப் போராட ஏமனுக்கு அனுப்பப்பட்ட போராளிகளைச் சேர்ப்பதற்கு RSF பயன்படுத்தப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆர்வம் சூடானில் உள்ள தங்கத்தின் மீது குவிந்துள்ளது, அவற்றில் பெரும்பாலானவை சமீபத்திய ஆண்டுகளில் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு கடத்தப்பட்டுள்ளன.
வெண்பா (தமிழில்)
மூலக்கட்டுரை: https://www.theguardian.com/world/2025/oct/31/sudan-civil-war-el-fasher-explained
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு