டாலர் மேலாதிக்கத்திற்கெதிராக பிரிக்ஸ் நாடுகளின் சர்வதேச நாணயம்

14-வது BRICS உச்சி மாநாட்டில் புதியதொரு சர்வதேச இருப்பு நாணயம் ஒன்றை உருவாக்குவது பற்றிய கலந்துரையாடல்

டாலர் மேலாதிக்கத்திற்கெதிராக பிரிக்ஸ் நாடுகளின் சர்வதேச நாணயம்

அமெரிக்க டாலருக்கு போட்டியாக புதிய சர்வதேச இருப்பு நாணயத்தை உருவாக்க BRICS நாடுகள் திட்டம்.

கடந்த மாதம் முதலே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வரலாறு காணாத பணவீக்கம், கச்சா எண்ணெய் விலையுயர்வால் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து கொண்டிருக்கின்றன. இதற்கு உக்ரைன் போர் மற்றும் கொரோனா தொற்று என பல்வேறு காரணங்களை அடுக்குகின்றன அந்நாட்டின் ஆளும் வர்க்கங்கள். இந்த நிலை நீடித்தால் விரைவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம் இருக்கிறது என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்நிலையில் ஜூன் மாத இறுதியில் சீனாவில் நடைபெற்ற 14-வது BRICS உச்சி மாநாட்டில் அமெரிக்க டாலருக்கு மாற்றாகவும் போட்டியாகவும் BRICS-ன் ஐந்து நாட்டு நாணயங்களின் மதிப்பின் அடிப்படையில் புதியதொரு சர்வதேச இருப்பு நாணயம் ஒன்றை உருவாக்குவது பற்றிய கலந்துரையாடல் நடந்துள்ளது.

இதற்கு துருக்கி, எகிப்து, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன.

”இது ஐஎம்எப்பில் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு ஈடுகொடுக்கும் நகர்வு” என்றும்  "பிரிக்ஸ் தங்கள் சொந்த செல்வாக்கு மண்டலத்தையும் அதற்கான நாணயத்தையும் உருவாக்க இது அனுமதிக்கும்." என்றும் INGன் சந்தைகளுக்கான சர்வதேச தலைவர் கிரிஸ் டர்னர் தெரிவித்தார்.  

”ரஷ்யாவுக்கும் பிரிக்ஸ் நாடுகளுக்குமிடையிலான வணிக தொடர்புகள் தீவிரமடைந்துள்ளன. இந்திய சில்லறை வர்த்தகமும் சீன கார்கள் மற்றும் உதிரிபாகங்கள் இறக்குமதியும் தொடர்ந்து நடக்கும்” என்றும் “அமெரிக்க டாலர் மேலாதிக்கத்தை குறித்து எதுவும் நிரந்தரமில்லை” என்றும்  புதின் தெரிவித்தார். மேலும் அவர் ”(பொருளாதார) நெருக்கடியின் விளைவாக தொழில்மயமான நாடுகளில் மோசமாகிவிட்ட உள்நாட்டு சமூக-பொருளாதாரப் பிரச்சனைகள் மேற்குலகின் இதுவரையிலான மேலாதிக்கப் பாத்திரத்தை பலவீனப்படுத்துகின்றன” என்றும் குறிப்பிட்டார்.

"உலக நிதி அமைப்பில் ஒரு மேலாதிக்க நிலையைப் பயன்படுத்தி உலகப் பொருளாதாரத்தை அரசியலாக்குவது, கருவியாக்குவது மற்றும் ஆயுதமாக்குவது பொருளாதாரத் தடைகளை வேண்டுமென்றே சுமத்துவது மற்றவர்களை காயப்படுத்துவதுடன் தன்னையும் காயப்படுத்தி, உலகெங்கிலும் உள்ள மக்களைத் துன்புறுத்துகிறது அமெரிக்கா." என்றும் "வலிமையின் நிலையைப் பற்றிக் கவலைப்படுபவர்கள், தங்கள் இராணுவக் கூட்டணியை விரிவுபடுத்தி, மற்றவர்களின் செலவில் தங்கள் பாதுகாப்பைத் தேடுபவர்கள் ஒரு பாதுகாப்பு சிக்கலுக்குள் வீழ்வார்கள்." என்றும் ஜிங்பிங் தெரிவித்தார்.

மாற்று கட்டண செலுத்துமுறைகள், தங்கத்தை சேமித்து வைப்பது, டாலர் மற்றும் ரூபிள்களுக்கிடையேயான மோதல்கள் நிதி உலகத்தை இரண்டாக பிரிக்கிறது. ஜப்பானிய யென், யூரோ, பெசோ, ரூபிள் போன்ற நாணயங்கள் அவ்வபோது டாலருக்கு உலகளவில் போட்டியாக வளர்ந்தாலும் டாலரின் மேலாதிக்கம் வீழ்வதற்கு இன்னும் காலம் எடுக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

-செந்தளம் செய்திப் பிரிவு