ஒற்றுமைக்கான கூக்குரல்களின் போர்வையின் கீழ் ஒற்றுமையை உடைத்தல்

லெனின்

ஒற்றுமைக்கான கூக்குரல்களின் போர்வையின் கீழ் ஒற்றுமையை உடைத்தல்

இன்றைய தொழிலாளி வர்க்க இயக்கத்தின் பிரச்சினைகள், இந்த இயக்கத்தின் அண்மைக் கடந்த காலத்தின் (அதாவது வரலாற்று ரீதியாக இப்போதுதான் முடிவடைந்த கட்டத்தின்) பிரதிநிதிகளுக்குக் குறிப்பாகப் பல வழிகளில் தொந்தரவான பிரச்சினைகளாகும். இது முதன்மையாயும் கோஷ்டி மனப்பான்மை, பிளவுகள் இத்தியாதி பிரச்சினைகளுக்குப் பொருந்தும். இந்தத் தொந்தரவான பிரச்சினைகளை எழுப்ப வேண்டாம் என்று தொழிலாளி வர்க்க இயக்கத்திலுள்ள படிப்பாளிகள் அமைதியிழந்த முறையில் ஜுர வேகமான உணர்ச்சி வெறியுடன் வேண்டுகோள்கள் விடுப்பதை அடிக்கடி கேட்கிறோம். உதாரணமாக, 1900-1901 ஆண்டுகளுக்குப் பிறகு மார்க்சியவாதிகளிடையே பல்வேறு போக்குகளுக்கிடையிலான நீண்ட பல ஆண்டுப் போராட்டத்தினை அனுபவித்தவர்கள், இந்தத் தொந்தரவான பிரச்சினைகள் பற்றிய உரைபொருள் மீது பல வாதங்களை திரும்பவும் கூறுவது பயனற்றது என்று இயல்பாகவே நினைப்பார்கள்.

ஆனால் மார்க்சியவாதிகளிடையே நடைபெற்ற பதினான்காண்டு மோதலில் பங்குபற்றிய பலர் இன்று இல்லை ("பொருளாதாரவாதத்தின் முதல் குறிகள் தோற்றமளித்த தருணத்திலிருந்து கணக்கிட்டு பதினெட்டு அல்லது பத்தொன்பது ஆண்டுக் கால மோதல்களைப் பற்றி இங்கு பேசவில்லை). மார்க்சியவாதிகளின் அணிகளில் இன்று திரண்டுள்ள மிகப் பெரும்பாலான தொழிலாளர்கள் இந்தப் பழைய மோதலை நினைவு கூரவில்லை அல்லது அது பற்றிக் கேள்விப்பட்டதே கிடையாது. மிகப் பெருமளவிலான பெரும்பான்மையோருக்கு (இதற்கிடையே எமது பத்திரிகை101 நடத்திய கருத்து வாக்கெடுப்பு காட்டியபடி) இந்தத் தொந்தரவான பிரச்சினைகள் மட்டுமிஞ்சிய மாபெரும் அக்கறைக்குரிய விவகாரங்களாகும். எனவே திரோத்ஸ்கியின் "கோஷ்டிச் சார்பற்ற தொழிலாளர் பத்திரிகையான" பொரிபா102, ஒரு விதத்தில் புதிதாக (தொழிலாளர்களின் இளம் தலைமுறைக்கு இவை மெய்யாகவே புதியவை) எழுப்பியுள்ள இந்தப் பிரச்சினைகளை வாதிட்டு விளக்க உத்தேசித்துள்ளோம். 

1."கோஷ்டி மனப்பான்மை"

திரோத்ஸ்கி தமது புதிய பத்திரிகையினை "கோஷ்டி மனப்பான்மையற்றது" என்று அழைக்கிறார். தமது விளம்பரங்களில் மேல் வரிசையில் இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறார். ஒவ்வொரு கருத்துத் தொனியிலும், பொரிபா ஆசிரியர் பகுதிக் கட்டுரைகளில், பொரிபா வெளியீடு தொடங்கு முன்பு பொரிபா பற்றி திரோத்ஸ்கி கலைப்புவாதிகள் பத்திரிகையான செவெர்னயா ரபோச்சயா கஸேத்தாவில்103 எழுதிய கட்டுரையில் இந்தச் சொல் அவரால் வலியுறுத்தப் படுகிறது. 

இந்த கோஷ்டி மனப்பான்மை இன்மை என்பது என்ன? திரோத்ஸ்கியின் தொழிலாளர் பத்திரிகை, தொழிலாளர்களுக்கு ஆன திரோத்ஸ்கியின் பத்திரிகையாகும். ஏனெனில் அதில் தொழிலாளர் முன்முயற்சி அல்லது தொழிலாளி வர்க்க அமைப்புகளுடனான எந்தவொரு தொடர்பின் சுவடோ கிடையாது. ஜனரஞ்சக நடையில் எழுத வேண்டும் என்று விரும்பிய திரோத்ஸ்கி தொழிலாளருக்கான தனது பத்திரிகையில் வாசகர் உபயோகத்திற்காக "பிரதேசம்" "காரணி" போன்ற இத்தகைய அன்னியச் சொற்களின் அர்த்தத்தை விளக்குகிறார்.

மிகவும் நல்லது. ஆனால் தொழிலாளருக்கு "கோஷ்டி மனப்பான்மை இன்மை" என்ற சொல்லின் அர்த்தத்தையும் ஏன் விளக்கக் கூடாது? அந்தச் சொல் "பிரதேசம்" மற்றும் "காரணி" என்ற சொற்களை விட அதிக எளிதில் விளங்குவதாக இருக்கிறதா?

இல்லை. காரணம் இதுவல்ல. "கோஷ்டி மனப்பான்மை இன்மை" என்ற முத்திரை தொழிலாளரின் இளந் தலைமுறையினை தப்பு வழியில் இட்டுச் செல்ல, கோஷ்டி மனப்பான்மையின் ஆகப்படு மோசமான மீதமிச்சங்களின் ஆகப்படு மோசமான பிரதிநிதிகளால் பயன்படுத்தப்படுகிறது. இதை விளக்குவதற்குச் சிறிது காலத்தைச் செலவழிப்பது பயனுடையதாகும்.

ஒரு திட்டவட்டமான வரலாற்று காலப் பகுதியில் கோஷ்டிப் பிரிவு சமூக-ஜனநாயகக் கட்சியின் பிரதானமான தனிப்பட்ட சிறப்புக் கூறாக இருந்தது. எந்த காலப் பகுதியில்? 1903 முதல் 1911 வரை. இந்தத் தன்மையை மேலும் தெளிவாக விளக்க வேண்டுமானால், நாம் 1906-07 கட்டத்தில் நிலவிய ஸ்தூலமான நிலைமைகளை நினைவூட்ட வேண்டும். அந்த சமயம் கட்சி ஒன்றுபட்டிருந்தது, பிளவு இல்லை, ஆனால் கோஷ்டி இருந்தது. அதாவது ஒன்றுபட்டிருந்த கட்சியில் உள்ளபடியே இரண்டு கோஷ்டிகள், உள்ளபடியே இரு தனி அமைப்புகள் இருந்தன. உள்ளூர் தொழிலாளர் அமைப்புகள் ஒன்றுபட்டிருந்தன, ஆனால் முக்கியமான பிரச்சினை ஒவ்வொன்றிலும் இரு கோஷ்டிகளும் இரண்டு வகைப் போர்த்தந்திரங்களை வகுத்தன. இருவகைப்பட்ட போர்த்தந்திரங்களின் ஆதரவாளர்களும் ஒன்றுபட்ட தொழிலாளர் அமைப்புகளில் (உதாரணமாக, டூமா அல்லது கடேட்டு அமைச்சரவை பற்றிய கோஷங்கள் மீது நடந்த விவாதத்தின் போது 1906லும், 1907ல் லண்டன் காங்கிரசுக்குப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும்) தம்மிடையே வாதாடினர் பிரச்சினைகள் பெரும்பான்மை வாக்குகளால் முடிவு செய்யப்பட்டன. ஒரு கோஷ்டி ஸ்டாக்ஹோம் ஒற்றுமை காங்கிரசில் (1906) தோற்கடிக்கப்பட்டது, இன்னொரு கோஷ்டி லண்டன் ஒற்றுமை காங்கிரசில் (1907)104 தோற்கடிக்கப்பட்டது.

இவை ருஷ்யாவில் ஒழுங்கமைப்புள்ள மார்க்சியத்தின் வரலாற்றின் பொதுவாக அறியப்பட்டதான மெய் விவரங்களாகும்.

இந்தப் பொதுவாக அறியப்பட்டதான மெய் விவரங்களை நினைவுக்குக் கொண்டு வந்தாலே போதும், திரோத்ஸ்கி எத்தகைய பச்சையான பொய்யுரைகளைப் பரப்பி வருகிறார் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

1912க்குப் பிறகு105 இரண்டாண்டுகளுக்கும் அதிகமாக ருஷ்யாவிலிருந்த ஒழுங்கமைப்புள்ள மார்க்சியவாதிகளிடை கோஷ்டி மனப்பான்மை இல்லை, ஒன்றுபட்ட மாநாடுகள் காங்கிரசுகளில் ஒன்றுபட்ட அமைப்புகளாலான போர்த்தந்திரங்கள் மீது தகராறுகள் எதுவும் இல்லை. 1912 ஜனவரியில் கட்சி, கலைப்புவாதிகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று சம்பிரதாயமாக அறிவித்ததோடு கட்சிக்கும் கலைப்புவாதிகளுக்கும் இடையே முழுமையான முறிவு ஏற்பட்டது. இத்தகைய நிலைமைகளை திரோத்ஸ்கி அடிக்கடி "பிளவு" என்று அழைக்கிறார். இந்த இடுபெயர் பற்றி நாம் பின்னால் தனியாகக் கவனிப்போம். ஆனால் "கோஷ்டி மனப்பான்மை" என்ற சொல் மெய்மையிலிருந்து வழுவிச் செல்கிறது என்பது சந்தேகமற்ற உண்மையாக உள்ளது.

நாம் கூறியுள்ள படியே இந்தச் சொல் ஒரு கூறியது கூறல் ஆகும், விமர்சனமற்ற, நியாயமற்ற, அர்த்தமற்ற நேற்று அதாவது ஏற்கெனவே கடந்து சென்றுவிட்ட காலப் பகுதியில் - மெய்யாக இருந்த ஒன்றின், கூறியது கூறல் ஆகும். திரோத்ஸ்கி நம்மிடம் கோஷ்டிச் சண்டையின் குழப்பம் பற்றி (இதழ் 1, பக்கம் 5,6 இன்னும் பல காண்க) பேசும் பொழுது அவரது சொற்கள் கடந்த காலத்தின் எந்த கட்டத்தை எதிரொலிக்கின்றன என்பதை நாம் உடனடியாக உணர்கிறோம்.

ருஷ்யாவில் ஒழுங்கமைப்புள்ள மார்க்சியவாதிகளில் பத்தில் ஒன்பது விகிதம் அமைந்துள்ள இளம் ருஷ்யன் தொழிலாளர்களின் கருத்துக் கோணத்திலிருந்து இன்றைய நிலைமைகளை ஆழ்ந்து ஆராய்வோம். தொழிலாளி வர்க்க இயக்கத்தில் பல்வேறு கருத்துக்கள் அல்லது போக்குகளின் மூன்று வெகுஜன வெளிப்பாடுகளை அவர்கள் காண்கிறார்கள்:

40,000 பிரதிகள் விற்பனையாகும் ஒரு பத்திரிகையைச் சுற்றித் திரண்டுள்ள "பிராவ்தாவாதிகள்"106 "கலைப்புவாதிகள்" (15, 000 பிரதிகள் விற்பனை) இடதுசாரி நரோதியவாதிகள்107 (10,000 பிரதிகள் விற்பனை). விற்பனை எண்ணிக்கைகள் வாசகருக்கு ஒரு குறிப்பிட்ட தத்துவக் கூறின் வெகுஜனத் தன்மையினை வெளியிடுகின்றன. 

"குழப்பத்துக்கும்" இதற்கும் என்ன சம்பந்தம், என்ற கேள்வி எழுகிறது. திரோத்ஸ்கிக்கு பகட்டோசையுடைய வெற்றுச் சொற்றொடர்களில் விருப்பம் அதிகம் என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆனால் "குழப்பம்" என்ற சுலோகம் சொற் ஜாலம் மட்டுமல்ல, வெளிநாட்டில் ஒரு கடந்து போன காலப் பகுதியில் நிலவிய உறவுகளை ருஷ்யன் மண்ணில் மறுநடவு செய்யும் அல்லது மறுநடவு செய்ய நடத்தும் ஒரு வீண் முயற்சியினையும் கூட. இது பொருள்படுத்துகிறது. இதுவே இதன் முழு அம்சமுமாகும்.

மார்க்சியவாதிகளுக்கும் நரோதியவாதிகளுக்கும் இடையிலான போராட்டத்தில் "குழப்பம்" எதுவும் இல்லை. இதை திரோத்ஸ்கியும் கூட மறுக்கத் துணியமாட்டார் என்று நாம் நம்புகிறோம். மார்க்சியம் தோன்றிய நாள் முதலாக முப்பதாண்டுகளுக்கும் அதிகமாக மார்க்சியவாதிகளுக்கும் நரோதியவாதிகளுக்கும் இடையிலான போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்துக்குக் காரணம், பாட்டாளி வர்க்கம் மற்றும் விவசாயி வர்க்கம் என்ற இரு வெவ்வேறு வர்க்கங்களின் நலன்கள் மற்றும் கருத்துக் கோணங்கள் அடிப்படையாக வேறுபட்டிருப்பதேயாகும். எங்கேயாவது ஏதாவது குழப்பம் இருக்குமானால் அது இதைப் புரிந்து கொள்ளத் தவறும் கிறுக்கர்களின் மண்டைகளில் மட்டுமே.

பிறகு மீதம் இருப்பது என்ன? மார்க்சியவாதிகளுக்கும் கலைப்புவாதிகளுக்கும் இடையிலான போராட்டத்திலுள்ள "குழப்பமா?" அப்படிச் சொல்வதும் தவறு, ஏனெனில் கட்சி முழுவதும் ஒரு போக்கு என்று இனங்கண்டு கொண்டு, 1908 ஆம் ஆண்டிலேயே கண்டனம் செய்திருந்த ஒரு போக்கை எதிர்த்த ஒரு போராட்டத்தை குழப்பம் என்று அழைக்க முடியாது. ருஷ்யாவில் மார்க்சியத்தின் வரலாறு குறித்துக் கிஞ்சிற்றேனும் அக்கறையுள்ள அனைவருக்கும் கலைப்புவாதம் தலைவர்கள், ஆதரவாளர்கள் சம்பந்தமாயும் கூட "மென்ஷிவிசத்தோடும்" (1903-08) "பொருளாதாரவாதத்தோடும்" (1894-1903) மிகவும் நெருக்கமாயும் பிரிக்கவொண்ணாத வகையிலும் தொடர்புடையது என்பது தெரியவரும். இதன் விளைவாக இங்கும் கூட கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கு மேல் விரிந்து செல்லும் வரலாறு உள்ளது. ஒருவர் தமது சொந்தக் கட்சியின் வரலாற்றையே "குழப்பம்" என்று கருதுவது அவரது மன்னிக்க முடியாத வெற்று மூளையையே காட்டுகிறது.

பாரிஸ் அல்லது வியென்னாவின் கருத்துக் கோணத்தில் இருந்து இன்றைய நிலைமையைப் பரிசீலிப்போம். உடனே முழுச் சித்திரமும் மாறுகிறது. "பிராவ்தாவாதிகள்" மற்றும் "கலைப்புவாதிகள்" தவிர, ஐந்துக்குக் குறையாத ருஷ்யன் "கோஷ்டிகள்" அதே ஒரே சமூக-ஜனநாயகக் கட்சியில் அங்கத்துவம் கோருவதைப் பார்க்கிறோம்: திரோத்ஸ்கியின் குழு, வ்பெரியோத்108 குழுக்கள் இரண்டு, "கட்சி ஆதரிப்பு போல்ஷிவிக்குகள்" "கட்சி ஆதரிப்பு மென்ஷிவிக்குகள்"109. பாரிஸிலும் வியென்னாவலும் (உதாரணத்திற்காக இரு ஆகப் பெரிய மையங்களை எடுத்துக் கொண்டிருக்கிறேன்) இருக்கும் மார்க்சியவாதிகள் இதை முற்றிலும் நன்றாக அறிவார்கள்.

இங்கு ஏதோ ஒரு பொருளில் திரோத்ஸ்கி சரியாகவே கூறியுள்ளார்; இது மெய்யாகவே கோஷ்டி மனப்பான்மை, மெய்யாகவே குழப்பம்!

கட்சிக்குள் குழுக்கள் அதாவது பெயரளவில் ஒற்றுமை (எல்லாக் குழுக்களும் ஒரு கட்சியைச் சேர்ந்தவை என்று உரிமை பாராட்டுகின்றன) மற்றும் உள்ளபடியே ஒற்றுமையின்மை (ஏனெனில், உண்மையில் எல்லாக் குழுக்களும் ஒன்றுக்கொன்று சுயேச்சையானவை, சர்வசுதந்திரத் தலைமையிடம் என்ற முறையில் பரஸ்பரம் ஒப்பந்தங்களும் உடன்பாடுகளும் செய்து கொள்கின்றன).

"குழப்பம்" அதாவது (1) இந்தக் குழுக்கள் ருஷ்யாவில் தொழிலாளி வர்க்க இயக்கத்துடன் இணைந்துள்ளன என்பதற்கான புறநிலையான மற்றும் மெய்ப்பிக்கத்தக்கதான சரியான சான்று இல்லாமை, (2) இந்தக் குழுக்களின் சித்தாந்த மற்றும் அரசியல் முகத்தோற்றத்தைத் தீர்மானிப்பதற்கு உதவும் எவ்விதப் புள்ளி விவரங்களும் இல்லாமை. இரு முழு ஆண்டுகளின் 1912 மற்றும் 1913ன் காலப் பகுதியை எடுத்துக் கொள்வோம். இது, தொழிலாளி வர்க்க இயக்கத்தின் மறு மலர்ச்சியின் மற்றும் உயர் வீச்சின் காலப் பகுதி யாகும். இந்தக் கட்டத்தில் ஏறத்தாழ வெகுஜனத் தன்மை வாய்ந்த (அரசியலில் இந்த வெகுஜனத் தன்மைக்கே மதிப்புள்ளது) ஒவ்வொரு போக்கும் திசையும் நான்காம் டூமா தேர்தல்கள், வேலைநிறுத்த இயக்கம், சட்டபூர்வ செய்திப் பத்திரிகைகள், தொழிற்சங்கங்கள், காப்புறுதிதேர்தல் இயக்கம் ஆகியவற்றின் மீது ஓரளவு செல்வாக்குச் செலுத்தாமல் இருக்க முடியவில்லை. இந்த இரண்டாண்டுகள் முழுவதிலும் இந்த ஐந்து குழுக்களில் ஒன்றுகூட இப்போது வரிசைப் படுத்திக் கூறப்பட்ட ருஷ்யாவின் வெகுஜனத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் எந்தவொரு நடவடிக்கைகளிலும் அறவே சிறிதளவு கூடத் தன்னை உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை! 

இந்த மெய் விவரத்தை யார் வேண்டுமாயினும் எளிதில் சரிபார்க்க முடியும்.

திரோத்ஸ்கியை "கோஷ்டி மனப்பான்மையின் ஆகமோசமான மீதமிச்சங்களின்" பிரதிநிதி என்று நாம் அழைத்தது சரியே என்பதை இந்த மெய்விவரம் நிரூபிக்கிறது. 

தாம் கோஷ்டி மனப்பான்மையற்றவர் என்று அவர் உரிமை பாராட்டிய போதிலும், ருஷ்யாவில் தொழிலாளி வர்க்க இயக்கம் பற்றிச் சிறிதேனும் பரிச்சயமுள்ள அனைவருக்கும் திரோத்ஸ்கி "திரோத்ஸ்கி கோஷ்டியின்" பிரதிநிதி என்பது தெரியும். இங்கு கோஷ்டி உள்ளது, காரணம் நாம் அதன் இரு முக்கியமான அடையாளங்களைப் பார்க்கிறோம்: 

1)பெயரளவில் ஒற்றுமையை அங்கீகரிப்பது மற்றும் 2) நடைமுறையில் குழு ஒதுக்கல். இங்கு இவை கோஷ்டியின் மீதமிச்சங்களாக உள்ளன, ஏனெனில் ருஷ்யாவின் வெகுஜன தொழிலாளி வர்க்க இயக்கத்துடனான ஏதேனும் மெய்யான தொடர்புக்குரிய எவ்விதச் சான்றும் கிடையாது.

 

இறுதியாக, இது கோஷ்டியின் ஆகமோசமான வடிவமாகும் ஏனெனில் இதில் சிந்தாந்த மற்றும் அரசியல் நிர்ணயத் தன்மை இல்லை. இந்த நிர்ணயத் தன்மை பிராவ்தாவாதிகளின் (எல்லாப் பிரச்சினைகளிலும் அனைவருக்கும் தெரிந்த சகஜமான முடிவுகளைச் சுற்றி நாம் "உறுதியாகவும் கட்டுப்பாட்டோடும்" நிற்கிறோம், என்பதை நமது உறுதியான எதிராளியான எல். மார்த்தவே ஒப்புக் கொள்கிறார்) மற்றும் கலைப்புவாதிகளின் (அவர்கள், எப்படி இருந்தாலும் அவர்களில் ஆகப் பிரதானமானவர்கள் திட்டவட்டமான கூறுகளை உடையவர்கள், அதாவது மிதவாதக் கூறுகளை மார்க்சியக் கூறுகளை அல்ல.) சிறப்பம்சமாக உள்ளது.

திரோத்ஸ்கியின் கோஷ்டி போன்ற சில கோஷ்டிகள் வியென்னா -பாரிஸ் கருத்துக் கோணத்திலிருந்து தனிமுழுமையாக, ஆனால் ருஷ்யாவின் கருத்துக் கோணத்திலிருந்து எவ்வகையிலும் தனிமுழுமையின்றி மெய்யாகவே நிலவுகின்றன, இவை ஓரளவு நிர்ணயத் தன்மையை உடையனவாக உள்ளன. உதாரணமாக, மாஹிய வ்பெரியோத் குழுவின் மாஹியத் தத்துவங்கள்110 நிர்ணயமானவை; இந்தத் தத்துவங்களை அழுத்தமாக மறுதலிப்பதும், மார்க்சியத்தைத் தாங்கி ஆதரிப்பதும், கலைப்புவாதத்தைத் தத்துவார்த்த முறையில் "கட்சி ஆதரிப்பு மென்ஷிவிக்குகள்" கண்டனம் செய்வதுடன் சேர்ந்து நிர்ணயமாக உள்ளன.

ஆனால் திரோத்ஸ்கி எவ்வித சித்தாந்த மற்றும் அரசியல் நிர்ணயத் தன்மை கொண்டிருக்கவில்லை, ஏனெனில் (நாம் விரைவில் மேலதிக விவரமாகக் காணவிருக்கும்) "கோஷ்டித் தன்மை இன்மைக்கான அவரது தனிச்சின்னம் இங்குமங்கும், ஒரு குழுவிலிருந்து இன்னொன்றுக்கு இஷ்டப்படி பறந்து செல்வதற்கான தனிச்சின்னம் மட்டுமே.

தொகுத்துக் கூறுவோம்:

1) பல்வேறு மார்க்சிய போக்குகள் மற்றும் குழுக்களுக்கிடையே சித்தாந்த வேறுபாடுகள் சமூக-ஜனநாயகத்தின் இருபதாண்டுக் கால வரலாறு முழுதிலும் ஊடுருவி நிற்கின்றன. இவை இன்றைய அடிப்படைப் பிரச்சினைகள் சம்பந்தப்பட்டனவுமாகும் (இதை நாம் பின்னால் காட்டுவோம்) இந்த தத்துவார்த்த வேறுபாடுகளின் வரலாற்று உட்பொருளை திரோத்ஸ்கி விளக்கவில்லை, அவற்றைப் புரிந்து கொள்ளவும் இல்லை;

2) "கோஷ்டியின்" பிரதான சிறப்புக் கூறுகள் ஒற்றுமையைப் பெயரளவில் அங்கீகரித்தலும்; உள்ளபடியே ஒற்றுமையின்மையும் என்பதை திரோத்ஸ்கி புரிந்து கொள்ளவில்லை; 

3) "கோஷ்டித்தன்மை இன்மை" என்ற போர்வையின் கீழ் திரோத்ஸ்கி வெளிநாட்டிலுள்ள ஒரு குழுவின் நலன்களைப் பரிந்து ஆதரிக்கிறார். இக்குழு குறிப்பாயும் நிர்ணயமான கோட்பாடுகள் இல்லாதது, ருஷ்யாவிலுள்ள தொழிலாளி வர்க்க இயக்கத்தில் இதற்கு அடித்தளம் எதுவும் கிடையாது. 

"மின்னுவதெல்லாம் பொன்னல்ல" திரோத்ஸ்கியின் சொற்றொடர்களில் மிகையான மினுமினுப்பும் ஓசையும் உள்ளன, ஆனால் அவை பொருளற்றவை.

2. பிளவு

"பிராவ்தாவாதிகளே உங்களிடையே கோஷ்டி மனப்பான்மை, அதாவது, பெயரளவில் ஒற்றுமை அங்கீகாரம், ஆனால் உண்மையில் ஒற்றுமையின்மை இல்லாவிடினும் மிகவும் மோசமான ஒன்று அதாவது பிளவுறுத்தும் போர்த்தந் திரங்கள் உள்ளன" என்று எம்மிடம் கூறப்படுகிறது. துல்லியமாயும் இவ்வாறுதான் திரோத்ஸ்கி கூறுகிறார். தமது கருத்துக்களைப் பற்றிச் சிந்திக்க முடியாமலும், தமது வாதங்களைக் கோர்வைப்படுத்த இயலாமலும் அவர் ஒரு சமயம் கோஷ்டி மனப்பான்மையை எதிர்த்து வசைமாரி பொழிகிறார், அடுத்த தருணம் "பிளவுறுத்தும் போர்த்தந்திரங்கள் ஒரு தற்கொலை வெற்றிக்குப் பின் இன்னொன்றாக வெற்றி பெற்று வருகின்றன" என்று கூக்குரலிடுகிறார் (இதழ் 1, பக்கம் 6).

இந்த அறிவிப்புக்கு ஒரே ஒரு அர்த்தம் தான் இருக்க முடியும்: "பிராவ்தாவாதிகள் ஒரு வெற்றிக்குப் பின் இன்னொரு வெற்றியை அடைந்து வருகிறார்கள்" (இது, 1912 மற்றும் 1913 ஆம் ஆண்டுகளின் போது ருஷ்யாவின் வெகுஜன தொழிலாளி வர்க்க இயக்கம் பற்றிய ஆய்வு நிலைநாட்டியுள்ள எதார்த்தமான மெய்ப்படுத்திக் காட்டக்கூடிய மெய் விவரமாகும்), ஆனால் நான், திரோத்ஸ்கி பிராவ்தாவாதிகளை 

(1) பிளவுவாதிகள் (2) தற்கொலை அரசியல்வாதிகள் என்று கண்டனம் செய்கிறேன்.

 

இதை நாம் பரிசீலிப்போம். 

முதன் முதலாக திரோத்ஸ்கிக்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும். சில கால முன்பு (1912 ஆகஸ்ட் முதல் 1914 பிப்ரவரி வரை) அவர் எஃப்.டான் என்பவருடன் சேர்ந்து ஒன்றாக இருந்தார். டான் கலைப்பு வாத எதிர்ப்பைக் "கொன்றுவிடுவதாக" அச்சுறுத்தி மற்றவர்களையும் அவ்வாறே செய்யுமாறு வேண்டிக் கொண்டார். இப்போது திரோத்ஸ்கி நமது போக்கை (நமது கட்சியை-கோபப்படாதீர் திருவாளர் திரோத்ஸ்கி-இது உண்மை) "கொன்றுவிடுவதாக" அச்சுறுத்தவில்லை, அது தன்னைத் தானே கொன்று கொண்டுவிடும் என்று மட்டுமே முன்னறிந்து கூறுகிறார்.

இது மிகவும் மென்மையானது அல்லவா? இது கிட்டத்தட்ட "கோஷ்டி மனப்பான்மையற்றது" அல்லவா? வேடிக்கைப் பேச்சு ஒரு புறம் இருக்கட்டும் (திரோத்ஸ்கியின் சகிக்க முடியாத சொற் ஜாலத்திற்கு மென்மையாகப் பதிலடி தருவதற்கு வேடிக்கைப் பேச்சு மட்டுமே வழி). 

"தற்கொலை" என்பது கேவலம் வெற்றுச் சொல், கேவலம், "திரோத்ஸ்கிவாதம்".

பிளவுறுத்தும் போர்த்தந்திரங்கள் என்பவை கடுமையான அரசியல் குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டு எமக்கு எதிராக ஆயிரம் வகையான தொனிகளில் கலைப்புவாதிகளாலும் மேலே வரிசைப்படுத்திக் கூறப்பட்டுள்ள எல்லாக் குழுக்களாலும் திரும்பத் திரும்பக் கூறப்படுகின்றன, பாரிஸ் மற்றும் வியென்னா கருத்துக் கோணத்தின் படி இக்குழுக்கள் உண்மையில் இருக்கின்றன.

அவர்கள் அனைவரும் இந்தக் கடுமையான அரசியல் குற்றச்சாட்டை மலைப்புறச்செய்யும் வகையில் விளையாட்டுத் தனமான வழியில் திரும்பத் திரும்பக் கூறுகிறார்கள். திரோத்ஸ்கியைப் பாருங்கள், "பிளவுறுத்தும் போர்த்தந்திரங்கள் ஒரு தற்கொலை வெற்றிக்குப் பின் இன்னொன்றாக வெற்றி (பிராவ்தாவாதிகள் வெற்றி பெற்று வருகின்றனர் என்று படிக்கவும்) பெற்று வருகின்றன" என்று திரோத்ஸ்கி ஒப்புக் கொண்டார். இதோடு அவர் சேர்த்துக் கொண்டதாவது: 

"அறமோசமான அரசியல் தடுமாற்ற நிலையிலுள்ள எண்ணற்ற பல முன்னேற்றமடைந்த தொழிலாளர்களே பெரும்பாலும் பிளவின் தீவிரக் கையாள்களாகிறார்கள்" (இதழ் 1, பக்கம் 6).

இந்தச் சொற்கள் இந்தப் பிரச்சினை மீதான பொறுப்பின்மைக்கு ஒரு முனைப்பான உதாரணமல்லவா?

ருஷ்யாவில் தொழிலாளி வர்க்க இயக்க அரங்கத்தில் எம்முன்னே காண்பது எல்லாம் கலைப்புவாதமே. அப்படியிருக்கும் பொழுது எங்களைப் பிளவுவாதிகள் என்று நீர் குற்றம் சாட்டுகிறீர். கலைப்புவாதத்தின் பாலான எங்களது கண்ணோட்டம் தவறு என்று நினைக்கிறீர்களா? மேலே நாம் வரிசைப்படுத்திக் கூறியுள்ள வெளிநாட்டிலுள்ள எல்லாக் குழுக்களும், அவை ஒன்றுக்கொன்று எந்தளவுக்கு வேறுபட்ட போதிலும் சரி கலைப்புவாதம் சம்பந்தமான எமது கண்ணோட்டம் தவறு, அது "பிளவுவாதிகளின்" கண்ணோட்டம் என்று கருதுவதில் ஒரு மனப்பட்டுள்ளன என்பது கண்கூடு. இதுவும் இந்தக் குழுக்கள் அனைத்துக்கும் கலைப்புவாதிகளுக்கும் இடையிலான ஒத்த தன்மையை (பெருமளவு நெருக்கமான அரசியல் உறவை) வெளிப்படுத்துகிறது.

கலைப்புவாதம் பற்றிய எமது கண்ணோட்டம் தத்துவ ரீதியாகவும் கோட்பாடு பூர்வமாயும் தவறாக இருக்குமானால் அப்பொழுது திரோத்ஸ்கி அவ்வாறே என்று ஒளிவுமறைவின்றி சொல்ல வேண்டும், திட்டவட்டமாயும் ஐயப்பாட்டுக்கு இடம் இன்றியும் அது தவறு என்று ஏன் அவர் கருதுகிறார் என்பதையும் சொல்ல வேண்டும். இந்த மிகமிக முக்கியமான அம்சத்தை பல ஆண்டுகளாக திரோத்ஸ்கி சொல்லாமல் தவிர்த்து வருகிறார். 

கலைப்புவாதம் பற்றிய எமது கண்ணோட்டம் நடைமுறையில், இயக்கத்தின் அனுபவம் மூலம் தவறு என்று நிரூபிக்கப் பட்டிருக்குமானால் பிறகு இந்த அனுபவம் ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆனால் திரோத்ஸ்கி இதையும் செய்யத் தவறுகிறார். "எண்ணற்ற பல முன்னேற்றமடைந்த தொழிலாளர்கள் பிளவின் தீவிரக் கையாள்களாகின்றார்கள்" என்பதை அவர் ஒப்புக் கொள்கிறார் (பிராவ்தா ஆதரவாளர் கொள்கை, போர்த்தந்திரங்கள் முறை மற்றும் அமைப்பின் தீவிரக் கையாட்களாகிறார்கள் என்று படிக்கவும்).

முன்னேற்றமடைந்த தொழிலாளர் அதிலும் எண்ணற்ற பல முன்னேற்றமடைந்த தொழிலாளர் பிராவ்தாவை ஆதரித்து நிற்கின்றனர், இதை அனுபவம் ஊர்ஜிதம் செய்துள்ளது என்பதை திரோத்ஸ்கியே ஒப்புக் கொள்கிறார். இந்த வருந்தத்தக்க மெய்நிகழ்வுக்குக் காரணம் என்ன? 

இந்த முன்னேற்றமடைந்த தொழிலாளர்களின் "அறமோசமான அரசியல் தடுமாற்றமே" என்று பதிலிறுக்கிறார் திரோத்ஸ்கி.

இந்த விளக்கம் திரோத்ஸ்கி, வெளிநாட்டிலுள்ள அனைத்து ஐந்து கோஷ்டிகள் மற்றும் கலைப்புவாதிகளுக்கு மிகையான தற்புகழ்ச்சிக்கு வகை செய்யும் என்பதைக் கூறத் தேவையில்லை. திரோத்ஸ்கி, தனக்குத் தற்புகழ்ச்சி தேடித் தரும் ஒரு வழியில், வரலாற்றுப் புலப்பாடுகளை ஆடம்பரமான பகட்டோசையுள்ள சொற்றொடர்களைப் பயன்படுத்தி, விளக்குவதை "ஒரு நிபுணரின் படித்த பந்தாவுடன்" விளக்குவதை மிகவும் விரும்புவது வழக்கம். "எண்ணற்ற பல முன்னேற்றமான தொழிலாளர்கள்" திரோத்ஸ்கியின் கொள்கையுடன் பொருந்தாத ஓர் அரசியல் மற்றும் கட்சிக் கொள்கையின் "தீவிரமான கையாட்களாக" இருப்பதால் இந்த முன்னேற்றமடைந்த தொழிலாளர்கள் "அறமோசமான அரசியல் தடுமாற்ற நிலையில் இருக்கிறார்கள்" என்று கூறி, இப்பிரச்சினையைத் தயக்கமின்றி அக்கணமே தீர்த்து விடுகிறார் திரோத்ஸ்கி. அப்படியிருக்க அவர், திரோத்ஸ்கி, அரசியல் உறுதிமற்றும் தெளிவு "நிலையில்" இருக்கிறார், சரியான கொள்கையில் நிற்கிறார் போலும்! இதே திரோத்ஸ்கி தான் மாரடித்துக் கொண்டு கோஷ்டி மனப்பான்மை, உட்குழுவாதம், தொழிலாளர்கள் மீது தமது சித்தத்தைத் திணிப்பதற்கான அறிவுஜீவிகளின் முயற்சிகள் ஆகியவற்றை எதிர்த்துக் கண்டனம் முழக்குகிறார்.

இவை போன்ற விவரங்களைப் படிக்கும் எவரும் இத்தகைய குரல்கள் வருவது பைத்தியக்காரர் விடுதியிலிருந்தா? என்று கேட்காமல் இருக்க முடியாது. 

வெகு முன்பாகவே, 1908ஆம் ஆண்டிலேயே, கட்சி கலைப்புவாதம், மற்றும் அதைக் கண்டனம் செய்ய வேண்டிய அவசியம் பற்றிய பிரச்சினையை, "முன்னேற்றமடைந்த தொழிலாளர்கள் முன் வைத்தது. அதே பொழுதில் மிகவும் திட்ட வட்டமான கலைப்புவாதிகள் குழுவிலிருந்து (அதாவது நாஷாஸார்யா111 குழு) "பிளவுறுத்தி" வெளியேறுவது என்ற பிரச்சினை, அதாவது கட்சியைக் கட்டுவதற்கான ஒரே வழி இந்தக் குழு இல்லாமலும் இதனை எதிர்த்தும் செயல்படுவதே என்ற பிரச்சினை இரண்டாண்டுகளுக்கு முன்னால் 1912ல் எழுப்பப்பட்டது. முன்னேற்றமடைந்த தொழிலாளர்களில் மிகப்பெரும் பெரும்பான்மையினர் "ஜனவரி (1912) கொள்கை நெறியை" ஆதரிப்பதற்குச் சாதகமாக உறுதிப் பிரகடனம் செய்தனர். "வெற்றிகள்" பற்றியும் "எண்ணற்ற பல முன்னேற்றமடைந்த தொழிலாளர்கள்" பற்றியும் பேசும்போது திரோத்ஸ்கி தாமே இந்த உண்மையை ஒப்புக் கொள்கிறார். ஆனால் முன்னேற்றமடைந்த தொழிலாளர்கள் மீது நேரடியாக அவதூறு பொழிந்தும் அவர்களைப் "பிளவுவாதிகள்" "அரசியல் ரீதியில் தடுமாற்றத்தில் இருப்போர்!'' என்று கூறியும் திரோத்ஸ்கி இதிலிருந்து பிடிகொடாது தப்பிக் கொள்கிறார்.

இந்த மெய் விவரங்களிலிருந்து தெளிந்த அறிவு நிலையில் இருப்போர் வேறு ஒரு முடிவுக்கு வருவார்கள். எங்கு பெரும்பான்மையான வர்க்க உணர்வுடைய தொழிலாளர்கள் துல்லியமான திட்டவட்டமான முடிவுகளைத் தழுவித் திரண்டு நிற்கிறார்களோ அங்கு நாம் கருத்து மற்றும் செயல் ஒற்றுமையைக் காண முடியும், அங்கு கட்சி உணர்வை மற்றும் கட்சியைக் காண முடியும்.

எங்கு, தொழிலாளர்களால் "பதவியிலிருந்து அகற்றப்பட்ட' கலைப்புவாதிகளை அல்லது கடந்த இரண்டாண்டுகளாக ருஷ்யாவில் வெகுஜன தொழிலாளி வர்க்க இயக்கத்துடன் தொடர்பு பூண்டிருப்பதாக முன்வைக்கத்தக்க சான்று எதுவும் இல்லாத ருஷ்யாவுக்கு வெளியே இருக்கும் அரை டஜன் குழுக்களை காண்கிறோமோ அங்கு நிச்சயமாயும் தடுமாற்றத்தையும் பிளவுகளையும் காண்போம். மார்க்சிய பிராவ்தாவாதிகள் அங்கீகரிக்கும் அந்த "ஒன்றுபட்ட முழுமையின்" முடிவுகளைச் செயல்படுத்த வேண்டாம் என்று தொழிலாளர்களை இப்போது வற்புறுத்த முயல்வது மூலம், திரோத்ஸ்கி இயக்கத்தை உடைத்துப் பிளவை ஏற்படுத்த முயல்கிறார்.

இந்த முயற்சிகள் பயனற்றவை, ஆனால் நாம் அறிவுஜீவிகளியல்பான குழுக்களின் இறுமாப்பான வீண்பெருமை கொண்ட தலைவர்களை அம்பலப்படுத்த வேண்டும். அவர்கள் தாமே பிளவுகளை ஏற்படுத்தி விட்டு அதே பொழுதில் மற்றவர்கள் பிளவுகளை ஏற்படுத்துவதாகக் கூக்குரலிடுகிறார்கள். கடந்த இரண்டாண்டுகளுக்கும் அதிகமாக, "முன்னேற்றமடைந்த தொழிலாளர்கள்" கரங்களில் படுதோல்வி அடைந்து விட்ட பிறகு நம்பற்கரிய திமிருடன் இந்த முன்னேற்றமடைந்த தொழிலாளர்களின் முடிவுகளையும் சித்தத்தையும் இழித்து அவமதிக்கிறார்கள், அவர்கள் "அரசியல் ரீதியில் தடுமாற்றத்தில்" இருப்பதாகக் கூறுகிறார்கள். இவை முற்றிலும் நொஸ்திரியோவ் அல்லது ஜூடாஸ் கொலவ்லியோவின்112 வழிமுறைகளே.

திரும்பத் திரும்ப எழும் இந்தக் கூக்குரல்களுக்குப் பதில் என்ற முறையிலும், ஒரு பொதுவிவகார எழுத்தாளர் என்ற வகையில் எனது கடமையை நிறைவேற்றும் முறையிலும் நான் துல்லியமான மறுக்கப்படாத, மறுக்கவியலாத புள்ளி விவரங்களை ஓயாது திரும்பத் திரும்பத் தந்து கொண்டே இருப்பேன். இரண்டாவது டூமாவில் தொழிலாளர் தொகுதியால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில் 47 சதவிகிதம் பேர் போல்ஷிவிக்குகள், மூன்றாவது டூமாவில்-50 சதவிகிதம், நாலாவது டூமாவில் இவர்கள் 67 சதவிகிதமாவர்.

அங்கு பெரும்பான்மையான "முன்னேற்றமடைந்த தொழிலாளர்கள்" இருக்கிறார்கள், அங்கு கட்சி இருக்கிறது; அங்கு பெரும்பான்மையான வர்க்க உணர்வுடைய தொழிலாளர்களின் கருத்து மற்றும் செயலின் ஒற்றுமை காணப்படுகிறது. ஸ்தாலீபின் தொகுதிகளின் மீது நமது வாதங்களை அடிப்படையாக்கி இருப்பதாக இதற்கு மறுமொழியாக கலைப்புவாதிகள் கூறுகிறார்கள் (நாஷா ஸார்யா, இதழ் 3ல், எல். எம். புல்கின் எழுதியுள்ளதைப் பார்க்கவும்). இது ஒரு முட்டாள்தனமான நேர்மையற்ற வாதமாகும். மகளிரை உரிமையின்றி ஒதுக்கி வைக்கும் பிஸ்மார்க்கின் தேர்தல் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட தேர்தல்களின் முடிவுகள் மூலம் ஜெர்மானியர்கள் தமது வெற்றியை அளவிடுகிறார்கள். நடப்பில் நிலவும் தேர்தல் சட்டத்தின் பிற்போக்கான தடை வரையறைகளைச் சற்றும் நியாயப்படுத்தாமல் அதன் கீழிலான தமது வெற்றிகளை அளவிடுவதற்காக ஜெர்மன் மார்க்சியவாதிகளை அறிவிழந்து போன பேர்கள் மட்டுமே குற்றஞ் சாட்டுவார்கள்.

நாமும் கூட, தொகுதிகள் அல்லது தொகுதி அமைப்பினை நியாயப்படுத்தாமல் நடப்பில் நிலவும் தேர்தல் சட்டத்தின் கீழ் நமது வெற்றிகளை அளவிட்டோம். டூமாவுக்கு நடைபெற்ற மூன்று (இரண்டாவது, மூன்றாவது, மற்றும் நாலாவது) தேர்தல்களிலும் தொகுதிகள் இருந்தன; தொழிலாளர் தொகுதியின் உள்ளே, சமூக- ஜனநாயக அணிகளின் உள்ளே கலைப்பு வாதிகளை எதிர்த்து முழுமையான வீச்சுப் போக்கு காணப்பட்டது. தம்மைத்தாமேயும் மற்றவர்களையும் ஏமாற்ற விரும்பாதவர்கள் இந்தப் புற நிலை மெய்மையை, அதாவது கலைப்புவாதிகள் மீது தொழிலாளி வர்க்க ஒற்றுமை வெற்றியடைந்ததைக் கட்டாயம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இன்னொரு வாதமும் இதே போன்று "சூழ்ச்சிநயம்" வாய்ந்தது: "மென்ஷிவிக்குகளும் கலைப்புவாதிகளும் இன்னின்ன போல்ஷிவிக்குகளுக்கு வாக்களித்தார்கள் (அல்லது அவர்களது தேர்வில் பங்கு பற்றினார்கள்)". அற்புதம்! ஆனால் இதே நிலைமை இரண்டாவது டூமாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 53 சதவிகிதம் போல்ஷிவிக் அல்லாதாருக்கும்; மூன்றாம் டூமாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 சதவிகிதத்தினருக்கும், நாலாவது டூமாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 33 சதவிகிதத்தினருக்கும் பொருந்தாதா? 

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பற்றிய புள்ளி விவரங்களுக்குப் பதில் வாக்காளர்கள் அல்லது தொழிலாளர் பிரதிநிதிகள் பற்றிய புள்ளிவிவரங்களை நாம் பெற முடியுமானால் அவற்றை நாம் மகிழ்ச்சியுடன் மேற்கோள் காட்டுவோம். ஆனால் இந்த அதிகப்படியான இனம் இனமான புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை, இதன் விளைவாக இந்த "வழக்கிடுவோர்" மக்கள் கண்களில் நேரடியாகப் புழுதியைத் தூவுகின்றனர்.

பல்வேறு போக்குகளின் செய்திப் பத்திரிகைகளுக்கு உதவி புரிந்த தொழிலாளர் குழுக்களின் புள்ளி விவரங்கள் என்னவாயின? இரண்டு ஆண்டுகளில் (1912 மற்றும் 1913) 2,801 குழுக்கள் பிராவ்தாவுக்கு உதவின, 750 குழுக்கள் லூச்சிற்கு113 உதவின.* (*1914 ஏப்ரல் வரை நடத்தப்பட்ட பூர்வாங்க கணக்கீடு பிராவ்தாவுக்கு (1912 ஜனவரி 1 துவக்கம்) 4.000 குழுக்களும், கலைப்புவாதிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கும் சேர்த்து 1,000 குழுக்களும் இருந்ததாகக் காட்டியது.). இந்தப் புள்ளிவிவரங்கள் மெய்ப்பிக்கத் தக்கவை, இவற்றைச் சரியல்ல என்று மறுக்க எவரும் முயலவில்லை.

"முன்னேற்றமடைந்த தொழிலாளர்களின்" பெரும்பான்மையின் செயல் மற்றும் சித்தத்தின் ஒற்றுமை எங்கே இருக்கிறது, பெரும்பான்மையினரின் சித்தத்தை இகழ்ந்து அவமதிப்பது எங்கே நடக்கிறது?

திரோத்ஸ்கியின் "கோஷ்டி மனப்பான்மை இன்மை" பெரும்பாலான தொழிலாளர்களின் சித்தத்தை வெட்கமின்றி இகழ்ந்து அவமதிப்பதன் காரணமாக உள்ளபடியே பிளவுறுத்தும் போர்த்தந்திரமாகும்.

3. ஆகஸ்ட் கூட்டின் உடைப்பு

பிளவுறுத்தும் போர்த்தந்திரங்கள் பற்றிய திரோத்ஸ்கியின் குற்றச் சாட்டுகள் சரியா மெய்யா என்பதை தெளிவுபடுத்துவதற்கான இன்னொரு முறை, மிகவும் முக்கியமான ஒரு முறை இருக்கிறது.

"லெனினியவாதிகள்" தான் பிளவுறுத்துவோர் என்று நீங்கள் கருதுகிறீர்களா? நல்லது, உங்கள் கூற்றுச் சரி என்று வைத்துக் கொள்வோம்.

அது சரியாக இருக்குமானால், இதர பிரிவுகள் மற்றும் குழுக்கள் அனைத்தும் "லெனினியவாதிகள்" இல்லாமல்,  "பிளவுறுத்துவோரை" எதிர்த்து கலைப்புவாதிகளுடன் ஒற்றுமை சாத்தியம் என்பதை ஏன் நிரூபித்துக் காட்டவில்லை? நாங்கள் பிளவுவாதிகளானால், ஒற்றுமைவாதிகளான நீங்கள் உங்களிடையேயும் மற்றும் கலைப்புவாதிகளுடனும் ஏன் ஒன்று சேரவில்லை? அதை நீங்கள் செய்திருப்பீர்களாயின் ஒற்றுமை சாத்தியமானது, மற்றும் அனுகூலமானது என்பதைத் தொழிலாளர்களுக்குச் செயலின் மூலம் நிரூபித்துக் காட்டியிருப்பீர்கள்!

நிகழ்ச்சிகளின் காலவரிசைக்குச் செல்வோம்:

1912 ஜனவரியில் "லெனினியப்" "பிளவுவாதிகள்" தம்மை கலைப்புவாதிகள் இல்லாத மற்றும் அவர்களுக்கு எதிரான ஒரு கட்சி என்று பிரகடனம் செய்து கொண்டார்கள். 1912 மார்ச்சில், அனைத்து குழுக்கள் மற்றும் "கோஷ்டிகள்": கலைப்புவாதிகள், திரோத்ஸ்கிவாதிகள், வ்பெரியோத் வாதிகள், "கட்சி ஆதரிப்பு போல்ஷிவிக்குகள்" மற்றும் "கட்சி ஆதரிப்பு மென்ஷிவிக்குகள்" தமது ருஷ்யன் செய்தித்தாள்களிலும் ஜெர்மன் சமூக-ஜனநாயக செய்தி ஏடான Vorwarts114 இலும் இந்தப் "பிளவுவாதிகளுக்கு" எதிராக ஒன்று சேர்ந்தார்கள். அவர்கள் அனைவரும் கூட்டிசையாக, ஒத்திசைவுடன் மற்றும் ஒரே குரலில் எம்மைப் பழிதூற்றி "அடாவழிப்பற்றாளர்", "மருட்டுவோர்" என்பது போன்று சற்றும் குறையாத அன்பான மற்றும் பூப்போன்ற பெயர்களால் அழைக்கலாயினர்.

மிக்க நன்று, கனவான்களே! ஆனால் உங்களுக்கு "அடாவழிப் பற்றாளர்களை" எதிர்த்து ஒன்று சேர்ந்து "முன்னேற்றமடைந்த தொழிலாளர்களுக்கு" ஒற்றுமைக்கான ஓர் உதாரணத்தை நிலைநாட்டுவதை விட அதிக எளிதானது வேறேது? முன்னேற்றமடைந்த தொழிலாளர்கள் ஒரு புறம் அடாவழிப் பற்றாளர்களை எதிர்த்த அனைவரின் ஒற்றுமையை, கலைப்புவாதிகள் கலைப்புவாதிகளல்லாதாரின் ஒற்றுமையையும், மறுபுறம் தனிப்படுத்தப்பட்ட "அடாவழிப் பற்றாளர்கள்", "பிளவுவாதிகள்" இத்தியாதிகளையும் பார்த்திருப்பார்களானால் அவர்கள் முந்தியவர்களை ஆதரித்திருக்க மாட்டார்கள் என்று நீங்கள் கூறுகிறீர்களா?

வேறுபாடுகள் "லெனினியவாதிகளால்" புனையப்பட்டு, மிகைப்படுத்தப்பட்டு இவ்வாறெல்லாம் செய்யப்படுமானால், கலைப்புவாதிகள், பிளெஹானவ்வாதிகள், வ்பெரியோத்வாதிகள், திரோத்ஸ்கிவாதிகள் ஆகியோரிடையிலான ஒற்றுமை மெய்யாகவே சாத்தியம் என்றால் நீங்கள் உங்களது சொந்த உதாரணம் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏன் நிரூபித்துக் காட்டவில்லை?

1912 ஆகஸ்டில் "ஒற்றுமையாளர்" மாநாடு115 ஒன்று கூட்டப்பட்டது. ஒற்றுமையின்மை உடனே தொடங்கியது: பிளெஹானவ்வாதிகள் கலந்து கொள்ள மறுத்து விட்டார்கள்: வ்பெரியோத்வாதிகள் கலந்து கொண்டார்கள், ஆனால் இந்த அலுவல் முழுவதன் போலியான தன்மையினை எதிர்த்து ஆட்சேபித்தும் அதை அம்பலப்படுத்தியும் விட்டு வெளி நடப்புச் செய்தார்கள்.

கலைப்புவாதிகள், லாத்வியர்கள், திரோத்ஸ்கிவாதிகள் (திரோத்ஸ்கியும் ஸெம்கோவ்ஸ்கியும்), காக்கேஷியர்கள் மற்றும் ஏழு பிரதிநிதிகள்116 "ஒன்றுசேர்ந்தார்கள்". ஆனால் அவர்கள் ஒன்றுசேர்ந்தார்களா? அந்த சமயத்தில் அவர்கள் ஒன்றுசேரவில்லை என்றும் அது கேவலம் கலைப்புவாதத்தை மூடிமறைப்பதற்கான ஒரு திரையே என்றும் நாம் கூறினோம். நிகழ்ச்சிகள் எமது அறிவிப்பை தவறென்று நிரூபித்தனவா? சரியாகப் பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு 1914 பிப்ரவரியில் நாம் கண்டதாவது:

1) எழுவர் குழு உடைந்து வருகிறது- புரியானவ் அதை விட்டு விலகிவிட்டார்.

2) மீதமுள்ள புதிய "அறுவரில்" செஹெயீத்ஸே, துலியக்கோவ் அல்லது வேறுயாரோ ஒருவர் பிளெஹானவுக்கு விடுக்கப்பட்ட பதிலை ஒப்புக்கொள்ளவில்லை. தாம் அவருக்குப் பதிலளிக்கப் போவதாகப் பத்திரிகைகளில் அறிவித்தார்கள் ஆனால் அவர்களால் முடியவில்லை.

3) லூச் பத்திரிகையின் பத்திகளில் இருந்து பல மாதங்களாக உண்மையிலேயே மறைந்து விட்ட திரோத்ஸ்கி உடைத்துக் கொண்டு வெளியேறி தமது சொந்த ஏடான பொரிபாவைத் துவக்கிவிட்டார். இந்த ஏட்டை "கோஷ்டித் தன்மையற்றது" என்று குறிப்பிடுவதன் மூலம் திரோத்ஸ்கி தனது - திரோத்ஸ்கியின் கருத்துப்படி நாஷா ஸார்யா மற்றும் லூச் ஏடுகள் "கோஷ்டிமனப்பான்மையுடைவை" அதாவது மோசமான ஒற்றுமையாளர்களாக மெய்ப்பித்துக் கொண்டு விட்டதாக தெளிவாக (இந்த விஷயம் குறித்துப் பரிச்சயம் உள்ளவர்களுக்கு தெளிவாக) தெரிவிக்கிறார்.

என தருமை திரோத்ஸ்கியே, நீர் ஒற்றுமையாளராக இருந்தால் கலைப்புவாதிகளுடன் ஒன்றுசேருவது சாத்தியம் என்று நீர் கூறினால், நீரும் அவர்களும் "1912 ஆகஸ்டில் வரையறுக்கப்பட்ட அடிப்படைக் கருத்துக்களை" ஆதரித்து நிற்பதாக இருந்தால் (பொரிபா, இதழ் 1, பக்கம் 6, "தலையங்கக் குறிப்பு") நீர் உம்மையே ஏன் நாஷா ஸார்யா மற்றும் லூச் ஏடுகளில் கலைப்புவாதிகளுடன் ஒற்றுமைப்படுத்திக் கொள்ளவில்லை?

திரோத்ஸ்கியின் பத்திரிகை வெளியாவதற்கு முன்னால் செவெர்னயா ரபோச்சயா கஸேத்தா இந்தப் பத்திரிகையின் முகத்தோற்றம் "தெளிவாக இல்லை" என்றும், இந்தப் பத்திரிகை பற்றி மார்க்சிய வட்டங்களில் பெருமளவு பேச்சு நடந்திருக்கிறது" எனவும் கூறிப் புண்படுத்தும் விமர்சனத்தை வெளியிட்டது, அப்பொழுது புட் பிராவ்தி117 (இதழ் 37) இந்தப் பொய்க் கூற்றை இயல்பாகவே அம்பலப்படுத்த வேண்டியிருந்தது. லூச் குழுவுக்கு எதிராக திரோத்ஸ்கியால் எழுதப்பட்டதான ஓர் இரகசியப் பொது அறிக்கை பற்றி "மார்க்சிய வட்டங்களில் பேச்சு இருந்தது". திரோத்ஸ்கியின் முகத்தோற்றமும் ஆகஸ்ட் கூட்டில் இருந்து அவர் முறித்துக் கொண்டு வெளியேறியதும் முற்றிலும் "தெளிவாகிவிட்டன".

4) எல்.ஸெதோவைத் தாக்கி எழுதிய திரு. அன் (இதற்காக அவர் எஃப். டான் மற்றும் அவரது கூட்டாளிகளால் பகிரங்கமாகக் கடிந்துரைக்கப்பட்டார்) காக்கேஷிய கலைப்புவாதிகளின் நன்கறியப்பட்ட தலைவர்களில் ஒருவர். அவர் எழுதிய கட்டுரைகள் இப்பொழுது பொரிபாவில் வெளியாயின. காக்கேஷியர்கள் திரோத்ஸ்கியுடன் சேர விரும்புகிறார்களா அல்லது டானுடன் சேர விரும்புகிறார்களா என்பது இன்னும் "தெளிவின்றி" இருக்கிறது.

5) "ஆகஸ்ட் கூட்டில்" ஒரே மெய்யான அமைப்பாக இருந்த லாத்விய மார்க்சியவாதிகள் அதிலிருந்து சம்பிரதாயமாக விலகிக் கொண்டு விட்டார்கள். இது குறித்து (1914ல்) அவர்களது கடைச காங்கிரசின் தீர்மானத்தில் கூறப்பட்டதாவது:

"கலைப்புவாதிகளுடன் (1912 ஆகஸ்ட் மாநாடு எப்பாடுபட்டும் ஒன்று சேர்ந்துவிட வேண்டும் என்று சமரசவாதிகள் நடத்திய முயற்சி  பலனளிக்கவில்லை, ஒற்றுமையாளர்களே சித்தாந்த ரீதியிலும் நடைமுறையிலும் கலைப்புவாதிகளைச் சார்ந்து நின்றார்கள்"

இந்த அறிக்கையானது பதினெட்டு மாத அனுபவத்திற்குப் பிறகு, இரண்டு மத்திய அமைப்புகள் எதனுடனும் தொடர்பை நிறுவிக்கொள்ள விரும்பாத தானே நடு நிலைமை ஆகவிருந்த ஓர் அமைப்பினால் வெளியிடப்பட்டது. நடுநிலைமையாளர்களின் இந்த முடிவு திரோத்ஸ்கி சம்பந்தப்பட்ட வரை அதிகச் செல்வாக்குச் செலுத்தியிருக்க வேண்டும். இது போதுமானது, அல்லவா?

நாம் பிளவுவாதிகளாக இருப்பதாயும் கலைப்புவாதிகளுடன் ஒத்துப்போக விருப்பமின்றியும் அல்லது முடியாமலும் இருப்பதாகவும் எம் மீது குற்றம் சாட்டியவர்கள் தாமே அவர்களுடன் ஒத்துப்போக முடியவில்லை. ஆகஸ்ட் கூட்டு வெறும் கற்பனைப்புனைவு என்பது நிரூபணமாகி அது உடைந்தது.

இந்த உடைப்பைத் தமது வாசகர்களிடமிருந்து மறைப்பதன் மூலம் திரோத்ஸ்கி அவர்களை ஏமாற்றுகிறார்.

நமது எதிராளிகளின் அனுபவம் நமது நிலை சரியானது என்பதை நிரூபித்தது. கலைப்புவாதிகளுடன் ஒத்துழைக்க முடியாது என்பதை நிரூபித்தது.

4. "எழுவர்" குழுவுக்கு ஒரு சமரசவாதியின் அறிவுரை

"டூமா குழுவில் பிளவு" என்ற தலைப்பில் பொரிபா, இதழ் 1ல் வெளியான தலையங்கப் பகுதிக் கட்டுரையில், ஒரு சமரசவாதி ஏழு கலைப்புவாத ஆதரவாளர்களான (அல்லது கலைப்புவாதத்தை நோக்கிச் சரிந்தவர்களான) டூமா உறுப்பினர்களுக்கு வழங்கிய அறிவுரை இடம் பெற்றிருந்தது. இந்த அறிவுரையின் சாரம் பின்வரும் சொற்களில் அடங்கும்:

"இதர குழுக்களுடன் எப்பொழுதெல்லாம் உடன்பாடு எட்ட வேண்டிய வேண்டிய அவசியம் ஏற்படுகிறதோ அப்பொழுது முதன் முதலாக அறுவரைக்118 கலந்தாலோசியுங்கள்" (பக். 29).

இதர விஷயங்களோடு கூடவே, லூச் கலைப்புவாதிகளுடனான திரோத்ஸ்கியின் வேறுபாட்டுக்குத் தெளிவாயும் காரணமாக இருந்த அறிவார்ந்த கருத்துரை இதுவே. டூமாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல் வெடித்த நாள் முதற் கொண்டு, கோடைக்கால (1913) மாநாட்டின் தீர்மானம்119 ஏற்கப்பட்டது முதற் கொண்டு எப்போதும் பிராவ்தாவாதிகள் மேற்கொண்டிருந்த கருத்து இதுவே. பிளவுக்குப் பிறகும், "எழுவர்" குழு மீண்டும் மீண்டும் மறுதலித்துவிட்ட போதிலும் இந்த நிலைப்பாட்டையே தான் தொடர்ந்து பின்பற்றி வருவதாக டூமாவில் உள்ள ருஷ்யாவின் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் குழு பத்திரிகைகளில் வற்புறுத்திக் கூறியுள்ளது.

துவக்கம் முதலே, கோடை மாநாட்டுத் தீர்மானம் ஏற்கப்பட்ட காலம் முதற்கொண்டு, டூமாவின் நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மீது உடன்பாடுகள் விரும்பத் தக்கவை மற்றும் சாத்தியமானவை என்ற கருத்தை நாம் கொண்டிருந்தோம், இன்னும் கொண்டிருக்கிறோம். இத்தகைய உடன்பாடுகள் குட்டி முதலாளித்துவ வகைப்பட்ட விவசாயி ஜனநாயகவாதிகளுடன் (துருதொவிக்குகள்) மீண்டும் மீண்டும் ஏற்பட முடியுமானால் அவை குட்டி முதலாளித்துவ வகைப்பட்ட மிதவாதத் தொழிலாளர் அரசியல்வாதிகளுடன் ஏற்படுவது மேலும் அதிக சாத்தியமானது, அவசியமானது. 

வேறுபாடுகளை நாம் மிகைப்படுத்தக் கூடாது, ஆனால் உண்மைகளை நாம் எதிர் கொள்ள வேண்டும்: "எழுவர்" கலைப்புவாதத்தின் திசையில் சாய்ந்து வரும் மனிதர்களாவர், இவர்கள் நேற்று திரு.டானின் தலைமையை முழுமையாகப் பின்பற்றினார்கள், இன்றோ அவர்களது கண்கள் டானிடமிருந்து திரோத்ஸ்கிக்கும் மீண்டும் டானிடமும் ஆர்வத்துடன் பயணம் செய்கின்றன. கலைப்புவாதிகள் கட்சியிலிருந்து முறித்துக்கொண்டு வெளியேறி ஒரு மிதவாத தொழிலாளர் கொள்கையைப் பின்பற்றிவரும் சட்டவாதிகளின் குழுவாகும். "தலைமறைவு" அமைப்பை அவர்கள் மறுதலிப்பதால், கட்சி அமைப்பு மற்றும் தொழிலாளி வர்க்க இயக்கம் சம்பந்தமான விவகாரங்களில் அவர்களுடன் ஒன்று சேரும் பிரச்சினைக்கே இடமில்லை. இதை வேறுவிதமாக நினைக்கும் எவரும் மோசமான தவறிழைத்தவர்கள் ஆவர், 1908க்குப் பிறகு ஏற்பட்டுள்ள மாறுதல்களின் ஆழமான தன்மையினைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறியவராவர்.

கட்சிக்கு வெளியிலோ அல்லது கட்சியின் விளிம்பிலோ நிற்கும் இந்தக் குழுவுடன் சில பிரச்சினைகள் மீது உடன்பாடுகள் மேற்கொள்வது அனுமதிக்கக் கூடியதே என்பது தெளிவு: துருதொவிக்குகளைப் போலவே இந்தக் குழுவையும் தொழிலாளர் (பிராவ்தாவாதி) கொள்கைக்கும் மிதவாதக் கொள்கைக்கும் இடையே ஒன்றைத் தேர்ந்து கொள்ளுமாறு எப்போதும் கட்டாயப்படுத்த வேண்டும். உதாரணமாக, பத்திரிகை சுதந்திரத்திற்காகப் போராடும் பிரச்சினையில் கலைப்புவாதிகள், சட்டவிரோதப் பத்திரிகைகளை மறுதலிக்கும் அல்லது அசட்டை செய்யும் இப்பிரச்சினை குறித்த மிதவாத வரையறுப்புக்கும் இதற்கு எதிரான கொள்கையான தொழிலாளர் கொள்கைக்கும் இடையேயான தமது ஊசலாட்டத்தைத் தெளிவாக வெளிப்படுத்தினார்கள்.

டூமாவுக்குப் புறம்பான ஆக முக்கியமான பிரச்சினைகள் நேரடியாக எழுப்பப்படாத டூமா கொள்கையின் பரப்பெல்லைக்குள், ஏழு மிதவாத தொழிலாளர் பிரதிநிதிகளுடன் உடன்பாடுகள் மேற்கொள்வது சாத்தியம் மற்றும் விரும்பத் தக்கதுமாகும். இந்த அம்சத்தில் திரோத்ஸ்கி தனது வாதப் போக்கைக் கலைப்புவாதிகள் நிலையில் இருந்து கட்சியின் கோடை (1913) மாநாட்டின் நிலை நோக்கி மாற்றிக் கொண்டு விட்டார்.

எனினும், கட்சிக்கு வெளியே நிற்கும் ஒரு குழுவுக்கு, உடன்பாடு, என்பது கட்சி நபர்கள் இந்தச் சொல்லை வழக்கமாகப் புரிந்து கொள்வதிலிருந்து முற்றிலும் வேறான சிலதாகப் பொருள் தருவதாகும் என்பதை மறந்துவிடக் கூடாது. டூமாவில் "உடன்பாடு" என்பதை கட்சியில் இல்லாத பேர்கள் ஒரு போர்த்தந்திரத் தீர்மானம் அல்லது கொள்கை நெறியை வரைந்து உருவாக்குவது" என்று பொருள் கொள்கின்றனர். கட்சி நபர்களுக்கு, உடன்பாடு என்பது கட்சிக் கொள்கை நெறியைச் செயல்படுத்தும் பணியில் மற்றவர்களை சேர்த்துக் கொள்ளும் முயற்சியாகும்.

உதாரணமாக, துருதொவிக்குகளுக்கு கட்சி இல்லை. உடன்பாடு என்பது இன்று கடேட்டுகளுடனும் நாளை சமூக-ஜனநாயகவாதிகளுடனும் ஒரு கொள்கை நெறியை இப்படிச் சொல்லலாம் என்றால் "சுயவிருப்பமாக" "வரைந்து உருவாக்குவது" என்ற முறையில் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் துருதொவிக்குகளுடன் உடன்பாடு என்பதை நாம் முற்றிலும் வேறுபட்ட சிலவாகப் புரிந்து கொள்கிறோம். போர்த்தந்திரங்கள் பற்றிய எல்லா முக்கியப் பிரச்சினைகள் மீதும் நமக்கு கட்சி முடிவுகள் உள்ளன. இந்த முடிவுகளிலிருந்து நாம் என்றுமே நெறி திறம்ப மாட்டோம். துருதொவிக்குகளுடன் உடன்பாடு என்றால் நமது கொள்கை சரியானது என்று அவர்களுக்கு மெய்ப்பித்துக் காட்டி, அவர்களை நமது பக்கம் வென்று சேர்த்துக் கொள்வது, கருப்பு நூற்றுவர்களை எதிர்த்தும் மிதவாதிகளை எதிர்த்தும் சேர்ந்து போராடுவதை நிராகரிப்பதல்ல என்றே நாம் பொருள் கொள்கிறோம்.

உடன்பாடுகள் சம்பந்தமான கட்சிக் கருத்துக்கும் கட்சி சார்பில்லாக் கருத்துக்கும் இடையிலான இந்த ஆதாரமான மாறுபாட்டை எந்தளவுக்கு திரோத்ஸ்கி மறந்து விட்டார் (அவர் கலைப்புவாதிகளுடன் சேர்ந்தது ஒன்றும் இல்லாமல் அல்ல) என்பதை அவரது பின்வரும் வாதத்திலிருந்து காணலாம்:

"அகிலத்தின் பிரதிநிதிகள் பிரிந்து கிடக்கும் நமது நாடாளுமன்றக் குழுவின் இரு பகுதிகளையும் ஒன்று சேர்த்து, அவற்றுடன் சேர்ந்து உடன்பாட்டு அம்சங்களையும் மாறுபாட்டு அம்சங்களையும் உறுதியாய் அறிய வேண்டும். நாடாளுமன்றப் போர்த்தந்திரங்களின் கோட்பாடுகளை வரையறுக்கும் விரிவான போர்த்தந்திரங்கள் பற்றிய ஒரு தீர்மானம் வரையப்படலாம்" (இதழ் 1, பக்கங்கள் 29-30).

இங்கு இப்பிரச்சினை கலைப்புவாதிகள் பாணியில் முன் வைக்கப்பட்டிருப்பதன் தன்மைக்குறிப்பான தனிமாதிரி உதாரணத்தைக் காணலாம்! திரோத்ஸ்கியின் பத்திரிகை கட்சியைப் பற்றி மறந்து விடுகிறது; இதைப்போன்ற அற்ப விஷயத்தை நினைவில் வைத்திருப்பதால் சிறிதும் பயனில்லையே!

ஐரோப்பாவிலுள்ள வெவ்வேறு கட்சிகள் (ஐரோப்பியவாதம் பற்றிப் பொருத்தமில்லாமல் பேசுவதில் திரோத்ஸ்கி விருப்பமுடையவர்) உடன்பாட்டுக்கு வந்தால் அல்லது ஒன்று சேர்ந்தால் அப்போழுது அவை செய்வது இதுதான்: அவற்றின் முறையான பிரதிநிதிகள் கூடி மாறுபாட்டு அம்சங்களை முதன் முதலாக உறுதியாக அறிந்து கொள்வர் (ருஷ்யா சம்பந்தமாக அகிலம் துல்லியமாக முன்வைத்தது என்ன என்பதை அறிந்துகொள்வர், இதில் "பழைய கட்சி இனி மேலால் இருக்காது"120 என்ற காவுத்ஸ்கியின் கவனயீனமான அறிக்கை இத்தீர்மானத்தில் உட்படுத்தப்படாது). மாறுபாட்டு அம்சங்களை உறுதியாக அறிந்துகொண்டபிறகு, போர்த்தந்திரங்கள், ஸ்தாபனம் ஆகிய பிரச்சினைகளில் என்ன முடிவுகள் (தீர்மானங்கள், நிபந்தனைகள் இத்தியாதி) இரு கட்சிகளின் காங்கிரசுகளிலும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதை இப்பிரதிநிதிகள் செய்வார்கள். ஒருமனதான முடிவுகளை உருவாக்குவதில் அவர்கள் வெற்றிபெறுவார்களானால் அவற்றை ஏற்பதா இல்லையா என்பதை இந்தக் காங்கிரசுகள் முடிவு செய்யும்; மாறுபட்டதான யோசனைகள் உருவாக்கப்படுமானால் அவை இரண்டு காங்கிரசுகளின் இறுதி முடிவுக்குச் சமர்ப்பிக்கப்படும்.

கலைப்புவாதிகளுக்கும் திரோத்ஸ்கிக்கும் கவர்ச்சியாகத் தெரிவது சந்தர்ப்பவாதத்தின் ஐரோப்பிய மாதிரி வடிவங்களே, நிச்சயமாயும் ஐரோப்பிய சார்புத்தன்மையின் மாதிரி வடிவங்கள் அல்ல.

டூமா உறுப்பினர்களால் ஒரு "விரிவான போர்த்தந்திரத் தீர்மானம்" வரையப்படும்! இந்த உதாரணம் ருஷ்யாவின் "முன்னேற்றமான தொழிலாளர்களுக்கும்" வியென்னா மற்றும் பாரிஸில் இருக்கும் குழுக்கள் தமது கேலிக்கூத்தான திட்ட ஜாலத்தில் எந்தளவுக்குச் செல்வார்கள் என்பதை முனைப்பாக எடுத்துக் காட்டும். முன்னேற்றமடைந்த தொழிலாளர்களிடம் திரோத்ஸ்கி அதிருப்திப்படுவதற்கு நியாயமான காரணமுண்டு. வியென்னா, பாரிஸ் குழுக்கள் காவுத்ஸ்கியைக் கூட ருஷ்யாவில் "கட்சி இல்லை" என்று நம்பவைத்தார்கள். இந்தக் காரியத்தில் வெளிநாட்டவர்களை ஏமாற்றுவது சில சமயம் சாத்தியமாகலாம். ஆனால் ருஷ்யாவின் "முன்னேற்றமான தொழிலாளர்" (பயங்கர திரோத்ஸ்கியை இன்னொருமுறை அதிருப்தியால் வெடிக்குமாறு தூண்டும் அபாயம் இருப்பினும்) இந்தத் திட்ட ஜாலக்காரர்களை எதிர்த்து நகையாடுவர் என்பது திண்ணம்.

"விரிவான போர்த்தந்திரத் தீர்மானங்கள் எம்மிடையே (கட்சி சார்பற்ற நபர்களிடை இது எவ்வாறு செய்யப்படுகிறதோ நாம் அறியோம்) கட்சிக் காங்கிரசுகள் மற்றும் மாநாடுகளால், உதாரணமாக 1907, 1908, 1910, 1912 மற்றும் 1913ல் நடந்தவை மூலம் வரையப்படுகின்றன" என்று அவர்கள் அவர்களுக்குச் சொல்வார்கள். "விவரம் தெரியாத வெளிநாட்டவருக்கும் மறதிமிக்க ருஷ்யர்களுக்கும் நமது கட்சி முடிவுகளை மகிழ்ச்சியுடன் பரிசயப்படுத்துவோம். "எழுவர் பிரதிநிதிகள்", அல்லது "ஆகஸ்ட் கூட்டின் உறுப்பினர்கள்", அல்லது "இடது சாரிகள்"121 அல்லது வேறு எவரையும் அவர்களது காங்கிரசுகள் மாநாடுகளின் தீர்மானங்களை எமக்குப் பரிசயப்படுத்தும்படி மேலும் அதிக மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொள்வோம். அவர்களது அடுத்த காங்கிரசில் எமது தீர்மானங்கள் அல்லது 1914ல் நடந்த நடுநிலை லாத்வியக் காங்கிரஸ் தீர்மானத்தின் பாலான அவர்களது கண்ணோட்டம் பற்றிய திட்டவட்டமான பிரச்சினையை எழுப்புமாறு அவர்களைக் கேட்டுக் கொள்வோம். பல்வேறு திட்ட ஜாலக்காரர்களிடம் ருஷ்யாவின் "முன்னேற்றமடைந்த தொழிலாளர்கள்" இதைத்தான் கூறுவார்கள். மார்க்சியப் பத்திரிகைகள், உதாரணமாக, செயிண்ட் பீடர்ஸ்பர்க்கின் அமைப்புத் திரட்சியுள்ள மார்க்சியவாதிகள் இதை ஏற்கெனவே கூறியுள்ளனர். கலைப்புவாதிகளிடம் முன்வைக்கப்பட்டுள்ள இந்தப் பிரசுரிக்கப்பட்ட நிபந்தனைகளை திரோத்ஸ்கி புறக்கணிக்க முனைகிறாரா? அப்படியானால் திரோத்ஸ்கிக்கு அந்தளவு கேடே விளையும். ருஷ்யாவின் பெரும்பான்மையான வர்க்க உணர்வுடைய தொழிலாளர்களின் சித்தத்தைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள மறுக்கும் "ஒற்றுமை" (ஆகஸ்ட் மாதிரி "ஒற்றுமை"?) திட்ட ஜாலம் எத்துணை கேலிக்கூத்தானது என்பது குறித்து எமது வாசகர்களை எச்சரிக்க வேண்டுவது எமது கடமையாகும்.

5. திரோத்ஸ்கியின் கலைப்புவாதக் கருத்துக்கள்

தனது சொந்தக் கருத்துக்களின் அடக்கப்பொருளைப் பொருத்தவரை திரோத்ஸ்கி தனது புதிய பத்திரிகையில் எவ்வளவு குறைவாக முடியுமோ அந்தளவு மட்டுமே கூறத் திட்டமிட்டார். புட் பிராவ்தி (இதழ் 37) தலைமறைவு பிரச்சினை மீதோ அல்லது சட்ட பூர்வமான கட்சிக்காகப் பாடுபடுவது என்ற முழக்கம் பற்றியோ இத்தியாதிகளில் திரோத்ஸ்கி ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை என்று ஏற்கெனவே கூறிவிட்டது. இதனால்தான் வேறு காரியங்களோடு கூடவே, சித்தாந்த மற்றும் அரசியல் முகத்தோற்றம் இல்லாத ஒரு தனி அமைப்பை உருவாக்க முயற்சிகள் செய்வது, கோஷ்டி மனப்பான்மையின் படுமோசமான வடிவமாகும் என்று நாம் கூறுகிறோம். 

திரோத்ஸ்கி தமது கருத்துக்களைப் பகிரங்கமாக விளக்குவதைத் தவிர்த்திருந்த போதிலும், அவர் எத்தகைய கருத்துக்களைப் புகுத்த முயல்கிறார் என்பதை பத்திரிகையில் வெளிவந்த அவரது வாசகங்கள் காட்டுகின்றன. 

அவரது பத்திரிகையின் முதல் இதழில் வெளியான ஆக முதல் தலையங்கக் கட்டுரையில் பின்வருவனவற்றை நாம் படிக்கிறோம்:

"நமது நாட்டில் நிலவிய புரட்சிக்கு முந்திய சமூக-ஜனநாயகக் கட்சி கருத்துக்கள் மற்றும் நோக்கங்களில் மட்டுமே ஒரு தொழிலாளர்களின் கட்சியாக இருந்தது. வாஸ்தவத்தில் அது விழிப்படைந்த தொழிலாளி வர்க்கத்திற்குத் தலைமை தாங்கிய மார்க்சிய படிப்பாளிகள் பகுதியின் ஓர் அமைப்பாக இருந்தது"

உள்ளபடியே கட்சியை மறுதலிக்கும் பீடிகையாக இருந்த பழைய மிதவாத மற்றும் கலைப்புவாதச் சுதியே இது. இது வரலாற்று மெய்விவரங்கள் புரட்டப்படுவதை அடிப்படையாக்கியதாகும். 1895-96 ஆம் ஆண்டுகளின் வேலைநிறுத்தங்கள் ஏற்கெனவே வெகுஜன தொழிலாளிவர்க்க இயக்கத்தைத் தோற்றுவித்தன. இது கருத்துக்களிலும் ஸ்தாபனத்திலும் சமூக-ஜனநாயக இயக்கத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. இந்த வேலைநிறுத்தங்களில், இந்தப் பொருளாதார மற்றும் பொருளாதாரத்தன்மை அற்ற போராட்டங்களில் படிப்பாளிகள் பகுதி தொழிலாளி வர்க்கத்திற்குத் தலைமை தாங்கியது"!?

முந்திய காலப் பகுதியுடன் ஒப்புநோக்கிப் பார்க்கும் போது 1901-03 ஆண்டுகளில் நிகழ்ந்த அரசியல் குற்றங்கள் குறித்த பின்வரும் துல்லியமான புள்ளிவிவரங்களை எடுத்துக் கொள்வோம்:

அரசியல் குற்றங்களுக்காக வழக்குத் தொடரப்பட்ட விடுதலை இயக்கத்தில் கலந்து கொண்டவர்களின் சொந்தத் தொழில்கள்:

காலப்பகுதி (சதவிகிதம்)
விவசாயம் தொழில் துறை, வாணிகம் படிப்பாளி தொழில்கள், மாணவர் திட்டமான வேலை இன்மை, வேலை இல்லாமை
1884-1890 7.1 15.1 53.3 19.9
1901-1903 9.0 46.1 28.7 8.0

ருஷ்யாவில் இன்னும் சமூக-ஜனநாயக கட்சி ஏற்படாத எண்பதாம் ஆண்டுகளில், இயக்கம் "நரோதியத் தன்மையதாக" இருந்த பொழுது படிப்பாளிப் பகுதிகள் மேலாதிக்கம் செலுத்தின: பங்குபற்றியவர்களில் பாதிக்கு மேல் வகை செய்தன, என்பதைக் காண்கிறோம்.

ஆனால் 1901-03 ஆண்டுகளில் இந்த சித்திரம் முழுமையான மாற்றம் அடைந்தது, அப்பொழுது ஒரு சமூக-ஜனநாயகக் கட்சி ஏற்கெனவே இருந்தது, பழைய இஸ்க்ரா தனது பணிகளை ஆற்றிக் கொண்டிருந்தது. இயக்கத்தில் கலந்து கொண்டவர்களில் படிப்பாளிப் பகுதி இப்போது சிறுபான்மையாக இருந்தது. தொழிலாளர்கள் ("தொழிற் துறை மற்றும் வாணிகத் துறை") படிப்பாளிகள் பகுதியை விட மிகப் பெருமளவில் இருந்தார்கள்; தொழிலாளரும் விவசாயிகளும் சேர்ந்து மொத்தத்தில் பாதிக்கு மேல் இருந்தனர்.

மார்க்சிய இயக்கத்தின் உள்ளே ஏற்பட்ட போக்குகளிடையிலான மோதலில் தான் குறிப்பாயும் சமூக-ஜனநாயகத்தின் குட்டி - முதலாளித்துவ வகைப்பட்ட அறிவுஜீவிகளியல்பான சாரி தன்னை உணர்த்திக் கொண்டது. இது "பொருளாதாரவாதம்" (1895-1903) ஆகத் தொடங்கி, "மென்ஷிவிசம்" (1903-08) ஆகவும் மற்றும் "கலைப்புவாதம்" (1908-14) ஆகவும் தொடர்ந்து நீடித்தது. கட்சிக்கு எதிரான கலைப்புவாத அவதூறை திரோத்ஸ்கி திரும்பத் திரும்பக் கூறுகிறார், கட்சிக்குள் போக்குகளின் மோதல் இருபதாண்டுகளாக இருந்து வந்ததன் வரலாற்றைக் குறிப்பிட அஞ்சுகிறார்.

இதோ இன்னொரு உதாரணம்:

"நாடாளுமன்றவாதத்தின் திசையிலான தனது உறவு நிலையில் ருஷ்யாவின் சமூக-ஜனநாயகக் கட்சி (இதர நாடுகள் போலவே) அதே மூன்று கட்டங்களைக் கடந்து சென்றது... முதலில் "பகிஷ்காரப் போக்கு"... பிறகு நாடாளுமன்றப் போர்த்தந்திரத்தைக் கோட்பாட்டளவில் ஒத்துக் கொள்வது. ஆனால் (அந்த அற்புதமான "ஆனால்" இந்த "ஆனால்" ஷெட்ரினால் பின்வருமாறு மொழிபெயர்க்கப் பட்டது: காதுகள் நெற்றியை விட அதிகமாக வளர்வதில்லை என்றுமே வளர்வதில்லை!)... மற்றும் கிளர்ச்சி நோக்கங்களுக்காக மட்டுமே.... இறுதியாக டூமா மேடையில்... நடப்புக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன..." (இதழ் 1, பக்கம் 34).

இதுவும் கலைப்புவாத சரித்திரப் புரட்டுத்தான். சீர்திருத்தவாதம் மற்றும் சந்தர்ப்பவாதத்தை ஆதரிக்கும் போக்கை நுழைப்பதற்காக இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டங்களுக்கு இடையிலான வேறுபாடு புனைவுசெய்யப்பட்டது. "நாடாளுமன்றவாதத்தின் பாலான சமூக-ஜனநாயகத்தின் உறவுநிலையில்" ஒரு கட்டம் என்ற முறையில் பகிஷ்கரிப்பு வாதம் ஒன்று ஐரோப்பாவில் (இங்கு அராஜகவாதம் இருந்தது தொடர்ந்து இருக்கிறது) அல்லது; ருஷ்யாவில் இருந்ததே கிடையாது. உதாரணமாக, ருஷ்யாவில் புலீகின் டூமா பகிஷ்காரம் செய்யப்பட்டது. ஒரு திட்டவட்டமான நிறுவனத்துக்கு மட்டுமே பொருந்தும், அது "நாடாளுமன்றவாதத்தோடு" என்றுமே இணைக்கப்படவில்லை. மற்றும் இது தாக்குதலைத் தொடர்ந்து நீடிப்பதற்காக மிதவாதத்திற்கும் மார்க்சியத்திற்கும் இடையில் நடந்த போராட்டத்தின் பிரத்தியேகமான இயல்பில் இருந்து தோற்றுவிக்கப் பட்டதாகும். மார்க்சியத்தின் இரு போக்குகளின் இடையிலான மோதலை இந்தப் போராட்டம் எந்த வழியில் பாதித்தது என்பதைப் பற்றி திரோத்ஸ்கி ஒரு வார்த்தைகூட மூச்சு விடவில்லை!

வரலாற்றை எடுத்து விளக்கும் போது எவரும் ஸ்தூலமான பிரச்சினைகளையும் வெவ்வேறு போக்குகளின் வர்க்க வேர்களையும் புரியும்படி எடுத்துச் சொல்ல வேண்டும். புலீகின் டூமாவில் பங்கு பற்றும் பிரச்சினை மீதான வர்க்கங்கள் மற்றும் போக்குகளின் போராட்டம் பற்றிய ஒரு மார்க்சிய ஆய்வினைப் புரிய விரும்பும் எவரும் அங்கே மிதவாத தொழிலாளர் கொள்கையின் வேர்களைப் பார்க்க முடியும். ஆனால் திரோத்ஸ்கியோ ஸ்தூலமான பிரச்சினைகளைத் தட்டிக் கழிக்கவும் இன்றைய சந்தர்ப்பவாதிகளுக்கு ஒரு நியாயத்தை, நியாயம் போலத் தோன்றும் ஒன்றை புனைந்து தரவுமே வரலாற்றை "எடுத்து விளக்குகிறார்!"

அவர் எழுதுகிறார்: "உள்ளபடியே எல்லாப் போக்குகளும் அதே போராட்ட முறைகளை, ஸ்தாபன முறைகளைப் பயன்படுத்துகின்றன. நமது தொழிலாளி வர்க்க இயக்கத்தில் மிதவாத அபாயம் பற்றிக் கூக்குரல் போடுவது எதார்த்தத்தை முரடான மற்றும் செக்டேரியன் முறையில் கேலிக்கிடமான வகையில் போலித்தனப்படுத்துவதாகும்" (இதழ் 1, பக்கங்கள் 5,35).

இது கலைப்புவாதிகளை மிகவும் தெட்டத்தெளிவாயும் வன்மையோடும் தாங்கி வாதிடுவதாகும். ஆனால் நாம் குறைந்த பட்சம் ஒரு சிறு மெய்விவரத்தை மிகவும் அணித்தான மெய் விவரம் ஒன்றை மேற்கோள் காட்ட உரிமை எடுத்துக் கொள்கிறோம். திரோத்ஸ்கி வெறுமே சொற்களை வாரிவீசுகிறார்; தொழிலாளர்கள் இந்த மெய் விவரங்கள் பற்றித் தீர எண்ணிப்பார்ப்பார்களாக.

பின்வருவனவற்றை மார்ச் 13ந் தேதிய செவெர்னயா ரபோச்சயா கஸேத்தா எழுதியது உண்மை:

தொழிலாளி வர்க்கத்தை எதிரிடும் திட்டவட்டமான மற்றும் ஸ்தூலமான பணியினை அதாவது, (பத்திரிகைகள் மீதான) மசோதாவை நிராகரிக்கும்படி டூமாவைக் கட்டாயப்படுத்தும் பணியினை வலியுறுத்துவதற்கு பதில், "குறுக்கப்படாத முழக்கங்களுக்குப் போராடுவது என்ற தெளிவற்ற சூத்திரம் முன்மொழியப்படுகிறது. அதேசமயம் சட்ட விரோதமான பத்திரிகைகள் விரிவாக விளம்பரப்படுத்தப் பெறுகின்றன, இது தமது சட்டபூர்வமான பத்திரிகைகளுக்காகத் தொழிலாளர்கள் நடத்தும் போராட்டத்தைத் தணிப்பதற்கு இட்டுச் செல்லும்"

இது, கலைப்புவாதக் கொள்கையை தெளிவாயும் துல்லியமாயும் ஆவணமூலமும் தாங்கி ஆதரிப்பதும், பிராவ்தா கொள்கையைக் கண்டன விமர்சனம் செய்வதுமாகும். நல்லது, இந்தப் பிரச்சினையில் இரு போக்குகளும் "ஒரே மாதிரியான போராட்ட முறைகளையும் ஸ்தாபனமுறைகளையும்" பயன்படுத்துகின்றன என்று படித்த எந்த நபராவது கூறுவாரா? இந்தப் பிரச்சினையில் கலைப்புவாதிகள் மிதவாத தொழிலாளர் கொள்கையைப் பின்பற்றவில்லை என்றும், தொழிலாளி வர்க்கத்துக்கு மிதவாத அபாயம் என்பது முற்றிலும் கற்பனையானது என்றும் படித்த எந்த நபராவது கூறுவாரா?

மெய்விவரங்களையும் ஸ்தூலமான குறிப்புக்களையும் திரோத்ஸ்கி தவிர்ப்பதற்குக் காரணம் அவை அவரது கோபாவேசக் கூக்குரல்களையும் படாடோபச் சொற்றொடர்களையும் ஈவிரக்கமின்றி மறுதலித்து விடுகின்றன என்பதே. ஒரு சாயல் காட்டி "முரடான செக்டேரியன் கேலித்தனமான போலித்தனம்" என்று கூறுவது எளிது. அல்லது, "பழைமைவாதக் கோஷ்டி மனப்பான்மையிலிருந்து விடுதலை" என்பது போன்ற மேலும் கடுகடுப்பான படாடோபமான கவர்ச்சிச் சொற்களைச் சேர்ப்பதும் எளிது. 

ஆனால் இது மிகவும் தாழ்ந்த தரமுடையதல்லவா? உயர் பள்ளி மாணவரடங்கிய கூட்டத்தின் முன் திரோத்ஸ்கி தனது தனிப்பகட்டுடன் பாவனை செய்த காலப் பகுதியின் ஆயுத சாலையிலிருந்து கடன் வாங்கிய ஆயுதமல்லவா? இருந்த போதிலும், யாரிடம் திரோத்ஸ்கி மிகவும் ஆத்திரப்படுகிறாரோ அந்த "முன்னேற்றமான தொழிலாளர்கள்" யாவும் நேருக்கு நேராகவும் தெளிவாகவும் சொல்லப் பட்டுவிட வேண்டும் என்று விரும்புகிறார்கள்: ஒரு திட்ட வட்டமான அரசியல் இயக்கம் குறித்து மேலே மேற்கோள் காட்டப்பட்ட மதிப்பீடில் திட்டவட்டமாக வெளியிடப்பட்டுள்ள "போராட்ட மற்றும் ஸ்தாபன முறையினை" நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா, இல்லையா? ஒப்புக் கொள்வீர்களானால் பிறகு நீங்கள் ஒரு மிதவாத தொழிலாளர் கொள்கையைப் பின்பற்றுகிறீர்கள், மார்க்சியத்திற்கும் கட்சிக்கும் துரோகம் செய்கிறீர்கள் என்பதாகும். இத்தகைய கொள்கையுடன் அல்லது இத்தகைய கொள்கையைப் பின்பற்றும் குழுக்களுடன் "சமாதானம்" அல்லது "ஒற்றுமை" பற்றிப் பேசுவது உங்களையும் மற்றவர்களையும் ஒருங்கே ஏமாற்றுவது என்றே அர்த்தமாகும். 

இல்லாவிடில் நேருக்கு நேராகச் சொல்லுங்கள். இன்றைய தொழிலாளர்களை சொல்லடுக்குகளால் வியப்பூட்டவோ, திருப்தி செய்யவோ அல்லது அச்சுறுத்தவோ முடியாது.

 

மேலே மேற்கோள் காட்டப்பட்ட வாசகத்தில் கலைப்புவாதிகள் ஆதரித்துள்ள கொள்கை மிதவாதியின் கருத்துக் கோணத்தில் இருந்துங்கூட முட்டாள்தனமானது; ஏனெனில் டூமாவில் ஒரு மசோதாவின் நிறைவேற்றம் பென்னிக்சன் மாதிரியான "ஸெம்ஸ்த்வோ-அக்டோபர்வாதிகளை" சார்ந்திருக்கிறது. அவர் இந்தக் கமிட்டியில் தனது உள்ளெண்ணங்களை வெளிக் காட்டி விட்டார்.

***

ருஷ்யாவில் மார்க்சிய இயக்கத்தில் பங்குபற்றிய பழைய ஆட்கள் திரோத்ஸ்கியை நன்றாக அறிவார்கள். அவர்களது நன்மைக்காக அவரைப் பற்றி விவாதிக்கத் தேவையில்லை. ஆனால் தொழிலாளர்களின் இளந் தலைமுறையினருக்கு அவரைத் தெரியாது. எனவே அவரைப் பற்றி விவாதிப்பது அவசியம். காரணம், அவர் மெய்யாகவே கலைப்புவாதிகளுக்கும் கட்சிக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கும் வெளிநாட்டிலுள்ள ஐந்து குழுக்கள் அனைத்தின் முன் மாதிரி ஆவார். பழைய இஸ்க்ரா (1901-03) நாட்களில் "பொருளாதாரவாதிகளிடமிருந்து" "இஸ்க்ராவாதிகளிடமும்"  பிறகு மீண்டும் "பொருளாதாரவாதிகளிடமும்" தாவிப் பறந்த இந்த ஊசலாட்டக்காரர்கள் "தூஷினோ அங்கிமாறிகள்" (ருஷ்யாவில் தொல்லை நிறைந்த காலத்தில்122 ஒரு முகாமிலிருந்து இன்னொன்றுக்கு மாறிச் சென்ற போரிடும் நபர்களுக்கு அளித்த பெயர்) என்று பெயர் சூட்டப்பட்டனர்.

 

கலைப்புவாதம் பற்றிப் பேசும் போது நாம் ஒரு திட்ட வட்டமான சித்தாந்தப் போக்குப் பற்றியே பேசுகிறோம். இது பல ஆண்டு காலமாக வளர்ந்து வந்த போக்கு. மார்க்சியத்தின் இருபதாண்டு கால வரலாற்றில் "மென்ஷிவிசம்" மற்றும் "பொருளாதாரவாதத்திடமிருந்து" கிளைத்தது. திட்டவட்டமான வர்க்கமான மிதவாத முதலாளித்துவ வர்க்கத்துடன் தொடர்புடையது.

இந்த "தூஷினோ அங்கிமாறிகள்" தாம் குழுக்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று உரிமை பாராட்டிக் கொள்வதற்கான ஒரே ஆதாரம் அவர்கள் தமது கருத்துக்களை ஒரு நாள் ஒரு குழுவிடமிருந்தும், மறு நாள் இன்னொரு குழுவிடமிருந்தும் "கடன்வாங்குகிறார்கள்" என்பதேயாகும். 1901-03ல் திரோத்ஸ்கி ஆர்வமிகுந்த இஸ்க்ராவாதியாக இருந்தார். 1903ம் ஆண்டுக் காங்கிரசில் ரியாஸானவ் அவரது பாத்திரத்தை "லெனினது குறுந்தடி" என்று வருணித்தார். 1903 முடிவில் திரோத்ஸ்கி ஓர் ஆர்வமிகுந்த மென்ஷிவிக் ஆக இருந்தார். அதாவது அவர் இஸ்க்ராவாதிகளைக் கைவிட்டு "பொருளாதாரவாதிகள்" பக்கம் சேர்ந்தார்; "பழைய இஸ்க்ராவுக்கும் புதியதற்கும் இடையே ஓர் அகழி கிடக்கிறது" என்று அவர் கூறினார். 1904-05ல் அவர் மென்ஷிவிக்குகளைக் கைவிட்டு ஓர் ஊசலாட்டமான நிலையை மேற்கொண்டார். மார்த்தீனவுடன் ("பொருளாதாரவாதி") ஒத்துழைத்தார் மற்றும் தமது அபத்தமான இடதுசாரி "நிரந்தரப் புரட்சி" தத்துவத்தைப்123 பிரகடனம் செய்தார். 1906-07ல் அவர் போல்ஷிவிக்குகளை அணுகினார்.

 

1907 வசந்தத்தில் தமக்கு ரோஸா லுக்சம்பர்க்குடன் உடன்பாடு இருப்பதாகக் கூறினார்.

சீர்குலைவு காலப் பகுதியில், நீண்ட கால "கோஷ்டி மனப்பான்மையற்ற" ஊசலாட்டத்திற்குப் பிறகு அவர் மீண்டும் வலதுசாரிப் பக்கம் சென்றார். 1912 ஆகஸ்டில் கலைப்புவாதிகளுடன் ஒரு கூட்டணியில் சேர்ந்தார். தற்போது அவர் மீண்டும் அவர்களைக் கைவிட்டு விட்டார், எனினும் சாரத்தில் அவர்களது கீழ்த்தரமான கருத்துக்களையே மீண்டும் வலியுறுத்துகிறார்.

இத்தகைய மாதிரிகள் பழைய வரலாற்று உருவாக்கத்தின் மூழ்காது மீந்தவற்றின் தன்மைக் குறிகள். அந்தக் காலப் பகுதியில் ருஷ்யாவில் வெகுஜன தொழிலாளி வர்க்க இயக்கம் உறக்க நிலையில் இருந்தது, ஒவ்வொரு குழுவுக்கும் போக்காக, ஒரு குழுவாக கோஷ்டியாக சுருங்கக் கூறின் மற்றவர்களுடன் இணைவுக்குப் பேரம் பேசும் ஒரு "சக்தியாக" பாவனை செய்வதற்கு... "ஏராளமான இடம்" இருந்தது.

கட்சி 1908க்குப் பிறகு கலைப்புவாதிகள் பற்றிய நமது உறவுநிலையை வரையறுத்து நிலைநாட்டிவிட்டது. ருஷ்யாவில் உள்ள தொழிலாளி வர்க்க இயக்கமோ முன்னே கூறப்பட்ட முடிவுகளை முழுமையாக அங்கீகரிக்கும் அடிப்படையில் பெரும்பான்மையின் ஒற்றுமையை மெய்யாகவே நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது. எனவே ஒன்று கட்சியின் முடிவுகளை கவனத்தில் எடுத்துக்கொள்ள அறவே மறுத்தும், அல்லது ருஷ்யாவின் இன்றைய தொழிலாளிவர்க்க இயக்கத்தின் அனுபவத்தை மறுத்தும் தனிநபர்கள் நம்பமுடியாத போலி உரிமை பாராட்டல்களுடன் தம் முன் வரும்போது, யாருடன் வாதிடுகிறோம் என்பதை இளந்தலைமுறையினைச் சேர்ந்த தொழிலாளர்கள் துல்லியமாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.

1914 மே மாதம் புரோஸ்வெஷேனியே, சஞ்சிகை இதழ் 5 பிரசுரிக்கப்பட்டது

நூல் திரட்டு, தொகுதி 25, பக்கங்கள் 183-206

================================

அடிக்குறிப்புகள்

101 இங்கு குறிப்பிடப்படுவது "புரோஸ்வெஷேனியே"  ("அறிவொளி") என்னும் போல்ஷிவிக் சட்ட பூர்வ தத்துவார்த்த மாத இதழ். புரோஸ்வெஷேனியே ("அறிவொளி")- இது 1911 டிசம்பர் முதல் 1914 ஜூன் வரையில் செயிண்ட் பீடர்ஸ்பர்க்கில் இருந்து வெளியிடப்பட்டுவந்த ஒரு போல்ஷிவிக் தத்துவார்த்த மாத இதழ். இதன் விற்பனை 5000 பிரதிகளை எட்டியது. லெனின் வெளிநாட்டிலிருந்து இந்த சஞ்சிகையின் வேலைகளை நெறியாக்கம் செய்தார். முதலில் பாரிசிலிருந்தும், பிறகு கிராக்கவ் மற்றும் பொரோனினோவில் இருந்து இதைச் செய்தார். கட்டுரைகளைச் சரிபார்த்தும் ஆசிரியர்களுடன் முறையான கடிதத் தொடர்பு கொண்டும் செயல்பட்டார். முதல் உலகப் போரின் தறுவாயில் ஜார் அரசாங்கம் இந்த சஞ்கிகையை மூடிவிட்டது. 1917 இலையுதிர் காலத்திற்குப் பிறகு வெளியீடு மீண்டும் துவக்கப்பட்டது ஆனால் ஒரே ஒரு இதழ் (இரட்டை மலர்) மட்டுமே வெளியாயிற்று.

102 பொரிபா ("போராட்டம்") 1914 பிப்ரவரி முதல் ஜூலை வரை செயிண்ட் பீடர்ஸ்பர்கில் வெளியிடப்பட்ட திரோத்ஸ்கியின் பத்திரிகை. "கோஷ்டிமனப் பான்மை இன்மை" என்ற போர்வையின் கீழ் திரோத்ஸ்கி லெனினையும் போல்ஷிவிக் கட்சியையும் எதிர்த்துப் போராட்டம் நடத்தினார். 

103 செவெர்னயா ரபோச்சயா கஸேத்தா ("வடக்கத்தி தொழிலாளர் பத்திரிகை") - மென்ஷிவிக் கலைப்புவாதிகளின் தினசரிப் பத்திரிகை. 1914 ஜனவரி 30 (பிப்ரவரி 12) முதல் மே 1 (14) வரையில் இது செயிண்ட் பீடர்ஸ்பர்கில் இருந்து வெளிவந்தது. அதற்குப் பிறகு நாஷா ரபோச்சயா கஸேத்தா ("எங்கள் தொழிலாளர் பத்திரிகை") என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

104 ஸ்டாக்ஹோம் காங்கிரஸ் (ரு.ச.ஜ.தொ. கட்சியின் நாலாவது ஒற்றுமைக் காங்கிரஸ்) 1906 ஏப்ரல் 10 முதல் 25 (ஏப்ரல் 23- -மே8) வரை நடைபெற்றது. மென்ஷிவிக்குகளே பெரும்பான்மையாக இருந்தார்கள், காரணம் புரட்சி எழுச்சிக்குத் தலைமை தாங்கிய பல போல்ஷிவிக் கட்சி அமைப்புகள் நசுக்கப்பட்டதால் காங்கிரசுக்கு அவை தமது பிரதிநிதிகளை அனுப்ப முடியவில்லை. மக்கள் திரளின் புரட்சிகரப் போராட் டம் இல்லாத தொழில்துறையல்லாத பகுதிகளில் ஆகப் பெருமளவான அமைப்புகளை வைத்திருந்த மென்ஷிவிக்குகள் அதிகமான பிரதிநிதிகளை அனுப்பிவைக்க முடிந்தது. காங்கிரசில் விவாதிக்கப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு மென்ஷிவிக்குகளின் தீர்மானங்கள் பெறப்பட்டன.

105 1912 ஜனவரியில் பிராகில் கட்சியின் அகில ருஷ்ய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைப்பு ரீதியாக போல்ஷிவிக் கட்சி ஒரு சுதந்திரமான கட்சியாக நிறுவப்பட்டது. பிராக் மாநாடு மென்ஷிவிக் கலைப்புவாதிகளை கட்சியிலிருந்து வெளியேற்றியது.  

106 பிராவ்தா ("உண்மை")- சட்டபூர்வமான போல்ஷிவிக் நாளேடு. இதன் முதல் இதழ் 1912 ஏப்ரல் 22ல் (மே 5) பீடர்ஸ்பர்கில் வெளிவந்தது. இதற்கு வேண்டிய நிதிகளைத் தொழிலாளர்கள் தம்மிடமிருந்து வசூலித்துத் தந்தனர். இதன் வினியோகம் 40,000 பிரதிகளாயின; சில இதழ்கள் 60,000 பிரதிகள் வரை வினியோகமாயின. தொழிலாளர்களது  நாளேட்டை வெளியிடுவதானது பீடர்ஸ்பர்க் தொழிலாளர்களது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனையாகுமென்று லெனின் எடுத்துரைத்தார். கட்சியானது மக்கட் பெருந் திரளினருடன் இடையறாத தொடர்பு கொண்டிருப்பதற்குப் "பிராவ்தா" வகை செய்தது. தொழிலாளர்-நிருபர்களது பெரும் படை ஒன்று "பிராவ்தா"வுக்காக வேலை செய்தது. லெனின் இச்செய்தியேட்டுக்குத் தலைமை தாங்கி நெறியாண்மை புரிந்தார், அனேகமாய் நாள்தோறும் இதற்கு எழுதினார், இதன் ஆசிரியர் குழுவின் வேலைகளுக்கு வழிகாட்டினார், இதன் போர்க் குணம் படைத்த புரட்சி மனப்பாங்கு நிலைத்து இயங்கும்படிச் செய்தார்.

"பிராவ்தா" போலீஸாரின் விடாப்பிடியான தாக்குதல்களுக்கு இலக்காகி வந்தது. 1914 ஜூலை 8ல் (21ல்) மூடப்பட்டது. 1917ஆம் ஆண்டு பிப்ரவரி முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சிக்குப் பிற்பாடுதான் இது திரும்பவும் வெளிவரத் தொடங்கிற்று. முதலாளித்துவ இடைக்கால அரசாங்கம் அடக்குமுறையின் மூலம் இதை நசுக்க முயன்றது. இதனால் மீண்டும் மீண்டும் இது தனது பெயரை மாற்றிக் கொண்டு வெளிவர வேண்டியதாயிற்று. 1917 அக்டோபர் 27 (நவம்பர் 7) முதலாய் இது தனது பழைய பெயரில் திரும்பவும் வெளிவர ஆரம்பித்தது. 

107 இங்கு குறிப்பிடப்படுவது சோஷலிஸ்டு-புரட்சியாளர்கள் கட்சியாகும். குறிப்பு 6 பார்க்க. 

108 "வ்பெரியோத்'' குழு - 1909ல் அமைக்கப்பட்டதான கட்சி விரோதக் குழு. பிராக் மாநாட்டுக்குப் பிறகு "வ்பெரியோத்" குழுவினர் மாநாட்டின் முடிவுகளுக்கு எதிராக மென்ஷிவிக்குகளுடனும் திரோத்ஸ்கிவாதிகளுடனும் ஒன்று சேர்ந்தார்கள்.

109 கட்சி ஆதரிப்பு போல்ஷிவிக்குகள் - சமரசவாதிகள், கலைப்புவாதிகள் பக்கம் சார்பு மனப்பான்மை கொண்டவர்கள்.

கட்சி ஆதரிப்பு மென்ஷிவிக்குகள் - கி. வ. பிளெஹானவ் தலைமையில் பிற்போக்குக் காலப் பகுதியில் கலைப்பு வாதிகளை எதிர்த்து முன்வந்தார்கள். ஒரு மென்ஷிவிக் நிலைப்பாட்டை மேற்கொண்ட அதே பொழுதில் பிளெஹானவ் வாதிகள் சட்டவிரோத கட்சி அமைப்பைப் பேணிவைத்திருக்கவும் வலுப்படுத்தவும் விரும்பினார்கள். எனவே போல்ஷிவிக்குகளுடன் ஒரு கூட்டணி அமைத்துக் கொண்டார்கள். 1911ஆம் ஆண்டு இறுதியில் பிளெஹானவ் போல்ஷிவிக்குகளுடனான கூட்டணியை உடைத்தார். கோஷ்டி மனப்பான்மையையும் ரு.ச.ஜ.தொ. கட்சியிலான பிளவையும் எதிர்த்துப் போராடும் பாவனையில் அவர் போல்ஷிவிக்குகளை சந்தர்ப்பவாதிகளுடன் சமரசப்படுத்த முயற்சி செய்தார். 1912ல் பிளெஹானவ்வாதிகள், திரோத்ஸ்கிவாதிகள், புந்த்வாதிகள் மற்றும் கலைப்புவாதிகளுடன் சேர்ந்து கொண்டு ரு.ச.ஜ.தொ. கட்சியின் பிராக் மாநாட்டு முடிவுகளை எதிர்த்தனர். 

110 மாஹியத் தத்துவம் - மாஹியம்--19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் மேற்கு ஐரோப்பாவில் விரிவாகப் பரவியிருந்த ஒரு பிற்போக்கு அகநிலைவாதக் கருத்துமுதல்வாத தத்துவவியல் போக்கு. இதன் நிறுவகர்கள் ஆஸ்திரிய பௌதிகவியலாளரும் தத்துவவியலாளருமான மாஹ் மற்றும் ஜெர்மன் தத்துவவியலாளரான அவெனாரியசும் ஆவர். 

ருஷ்யாவில் புரட்சி தோல்வி அடைந்ததன் பின்னான பிற்போக்கு ஆண்டுகளில்(1905-1907)சமூக-ஜனநாயகவாதிகளின் அறிவொளிப் பகுதி ஒன்று இந்த மாஹியத் தத்துவத்தின் செல்வாக்கின் கீழ் வந்தது. ருஷ்யன் மாஹியவாதிகள் மார்க்சியம் பற்றிப் பேசிக் கொண்டே மார்க்சியத் தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைத் திருத்தலாயினர்.

"( வ்பெரியோத்" ("முன்னோக்கு") குழுவின் தலைவருள் ஒருவரான பக்தானவ் தனது சொந்த தத்துவவியல் முறையான "அனுபவவாத ஒருமைவாதம்" [empiriomonism) என்பதை நிறுவ முயன்றார். இது மாஹியத் தத்துவத்தின் ஒரு வகையாகும். "பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்" என்ற தமது நூலில் லெனின் இந்த அனுபவவாத தத்துவவியலைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

111 நாஷா ஸார்யா ("நமது உதயம்")-மென்ஷிவிக் கலைப்புவாதிகளின் சட்டபூர்வமான மாத இதழ். இது 1910 ஜனவரி முதல் 1914 செப்டம்பர் வரை செயிண்ட் பீடர்ஸ்பர்க்கில் இருந்து வெளியிடப்பட்டது. இந்தப் பத்திரிகையைச் சுற்றியே ருஷ்யாவில் கலைப்புவாதிகள் மையம் உருவாயிற்று.

112 நொஸ்திரியோவ் நி.வ.கோகல் எழுதிய "இறந்த ஆன்மாக்கள்" எனும் நாவலில் வர்ணிக்கப்படும் ஒரு வகையான நிலச்சொந்தக்காரன், தொந்தரவு கொடுக்கும் போக்கிரி. ஜூடாஸ் கொலவ்லியோவ் ஸால்த் திக்கோவ்-ஷெட்ரினது "கொலவ்லியோவ் குடும்பம்" என்ற நூலில் வரும் ஒரு பாத்திரம் இந்த நபர் அவரது புறவேடப் பகட்டு பாசாங்கு மற்றும் சொறணையின்மை ஆகியவற்றின் காரணமாக ஜூடாஸ் என்று நிந்தைப் பெயர் சூட்டப்பட்டார். இந்தக் கருத்துக்களைச் சுட்டிக்காட்ட ஜூடாஸ் கொலவ்லியோவ் என்ற பெயர் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

113 லூச் ("ஒளிக் கதிர்") - மென்ஷிவிக் சட்ட பூர்வமான தினசரிப் கலைப்புவாதிகளின் பத்திரிகை. 1912 செப்டம்பர் 16 (29) முதல் 1913 ஜூலை 5 (18) வரை இது செயிண்ட் பீடர்ஸ்பர்க்கில் இருந்து வெளி வந்தது. மொத்தம் 237 இதழ்கள் பிரசுரமாயின. மிதவாதிகளிடம் நிதியுதவி பெற்று இப்பத்திரிகை நடத்தப்பட்டது.

114 Vorwarts ('முன்னேற்றம்'') - நாளேடு; ஜெர்மன் சமூகஜனநாயகக் கட்சியின் மத்தியப் பத்திரிகை, 1876ல் நிறுவப்பெற்றது. அதன் முதல் ஆசிரியர் வில்ஹேல்ம் லீப்க்னெஹ்ட். சந்தர்ப்பவாதத்தின் எல்லா வெளிப்பாடு களையும் எதிர்த்து அதில் எங்கெல்ஸ் எழுதினார். 1890 களின் பிற்பகுதியில், எங்கெல்ஸ் மறைந்தபின், கட்சி யின் வலது சாரிப் பிரிவின் கையில் Vorwarts சிக்கி, சந்தர்ப்பவாதிகளின் கட்டுரைகளை முறையாக வெளியிடத் தொடங்கியது; அவர்கள் ஜெர்மன் சமூக-ஜனநாயகக் கட்சியிலும் இரண்டாம் அகிலத்திலும் ஆதிக்கம் பெற்றிருந்தார்கள். முதல் உலகப் போர் நடந்த காலத்தில் Vorwarts சமூக-தெசியவேறிக் கொள்கை நிலை வகித்தது. 1933ல் அது நின்றுவிட்டது.

115 இங்கு குறிப்பிடப்படுவது 1912 ஆகஸ்டில் வியென்னாவில் நடைபெற்ற கலைப்புவாதிகள் மாநாடு ஆகும். இங்கு திரோத்ஸ்கியால் நிறுவப்பட்டதான ஆகஸ்ட் கூட்டு உருவாயிற்று. இது லெனினுக்கு விரோதமான எல்லாக் குழுக்களையும் போக்குகளையும் கொண்டதாக இருந்தது. சமூக-ஜனநாயகப் போர்த்தந்திரங்கள் பற்றிக் கட்சி விரோத கலைப்புவாதத் தீர்மானங்களை இந்த மாநாடு ஏற்றுக் கொண்டது. சட்ட விரோதமான சோஷலிஸ்ட் கட்சி நிலவுவதை இம்மாநாடு எதிர்த்தது. 

பலப்பட்டறையான நபர்களைக் கொண்டதான இந்த போல்ஷிவிக் - எதிர்ப்பு கூட்டு அமைக்கப்பட்டதே இந்த மாநாட்டின் பிரதான பணியாகும். போல்ஷிவிக்குகளின் தாக்குதலின் கீழ் இந்தக் கூட்டு சிதறுண்டது. போல்ஷிவிக்குகள் பாட்டாளி வர்க்கக் கட்சியை மெய்ப் பித்துக் காட்டினார்கள்.

116 ஏழு பிரதிநிதிகள்- நாலாவது அரசாங்க டூமாவில் இருந்த சமூக-ஜனநாயகவாதிகள் கோஷ்டியில் இடம் பெற்றிருந்த மென்ஷிவிக் பிரதிநிதிகள்.

117 போல்ஷிவிக் செய்திப் பத்திரிகையான "பிராவ்தாவின்" பெயர்களில் ஒன்று.

118 அறுவர்- நாலாவது அரசாங்க டூமாவில் சமூக-ஜனநாயகவாதிகள் கோஷ்டியில் இடம் பெற்றிருந்த போல்ஷிவிக் பிரதிநிதிகள்.

119 ரு.ச.ஜ.தொ.கட்சியின் மத்தியக் கமிட்டி மற்றும் கட்சி அலுவலர்களின் கூட்டு மாநாடு (இரகசியமாக வைக்க வேண்டும் என்ற நோக்கத்தால் இது "கோடை" மாநாடு என்று அறியப்பட்டது.) - 1913 செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 1 (அக்டோபர் 6-14) வரையில் நடைபெற்றது. அந்த சமயத்தில் லெனின் தங்கியிருந்த பொரோனினோ (கிராக்கவுக்கு அருகில்) என்ற கிராமத்தில் நடைபெற்றது. 

ருஷ்யாவின் சமுதாய வாழ்க்கையிலான இதர பிரச்சினைகளின் இடையே அப்போது மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருந்த தேசியப் பிரச்சினை மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் பிரதான இனங்களில் ஒன்றாக இருந்தது. தேசியப் பிரச்சினை பற்றி லெனின் ஓர் அறிக்கை செய்தார். கட்சியின் வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மாநாடு மென்ஷிவிக்குகளும் புந்த்வாதிகளும் முன்வைத்த "கலாசார- தேசிய சுயாட்சி" கோரிக்கைக்கு எதிராக வாக்களித்து உறுதியாக நிராகரித்தது. லெனின் வகுத்தளித்த தேசியப் பிரச்சினை பற்றிய வேலைத்திட்டக் கருத்துரைகளை ஏற்றுக் கொண்டது. அடுத்து நடைபெறவிருக்கும் கட்சிக் காங்கிரஸ் நிகழ்ச்சி நிரலில் தேசிய பிரச்சினையை வேலைத்திட்டப் சேர்த்துக் கொள்வது என்ற ஒரு தீர்மானத்தையும் ஒப்புக் கொண்டது. 

சமூக-ஜனநாயக டூமா குழு பற்றிய அதன் தீர்மானத்தில் இந்த மாநாடு குழுவின் போல்ஷிவிக் மற்றும் மென்ஷிவிக் உறுப்பினர்கள் சம உரிமைகளை அனுபவிக்க வேண்டும் என்று கோரியது, அதோடு தற்செயலாகக் கிடைத்த ஒரு வாக்கு பெரும்பான்மையைப் பயன்படுத்தி மென்ஷிவிக்குகள், ருஷ்யாவில் மிகப் பெரும்பாலான தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போல்ஷிவிக் பிரதிநிதிகளின் ஆதார உரிமைகளை மீறி மேற்கொண்ட நடவடிக்கைகளை உறுதியாகக் கண்டித்தது. லெனினதும் போல்ஷிவிக் கட்சியின் மத்தியக் கமிட்டியினதும் நெறிமுறைகளை அனுசரித்து போல்ஷிவிக்கு பிரதிநிதிகள் 1913 அக்டோபரில் கூட்டு சமூக-ஜனநாயக டூமா குழுவை விட்டு விலகி சுதந்திரமான போல்ஷிவிக் குழுவை (ருஷ்ய சமூக-ஜன நாயகத் தொழிலாளர் குழு) நிறுவினார்கள். 

120 "சர்வதேச சோஷலிஸ்டு குழுமத்தின்" அமர்வு 1913 டிசம்பர் 13-14 தேதிகளில் லண்டனில் நடைபெற்றது. அதில் ருஷ்யாவிலுள்ள ருஷ்யப் போலந்து உள்ளிட்ட தொழிலாளர் இயக்கத்தின் எல்லாக் குழுக்களின் பிரதிநிதிகளும் கொண்ட ஒரு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று சர்வதேச சோஷலிஸ்ட் குழுமத்தின் நிர்வாகக் கமிட்டியைப் பணித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தப் பிரதிநிதிகள் கட்சி வேலைத்திட்டத்தையோ அல்லது சமூக ஜனநாயக வேலைத்திட்டத்தோடு ஒத்ததான ஒரு திட்டத்தையோ ஒத்துக் கொண்டுள்ளவர்களாக இருக்க வேண்டும். விவாதத்தில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படும். 

இந்தத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய காவுத்ஸ்கி தமது டிசம்பர் 17ந் தேதி உரையில் ருஷ்யாவின் பழைய சமூக - ஜனநாயகக் கட்சி மறைந்து விட்டது என்றார். ருஷ்யத் தொழிலாளர்களின் ஒற்றுமை அபிலாஷைகளைச் சார்ந்து நின்று அதை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் இந்தத் தீர்மானத்தின் என்றார். தமது கட்டுரையில் உள்ளடக்கத்தை வெளிப்படுத்திய லெனின், "நல்ல தீர்மானம் ஆனால் மோசமான பேச்சு" என்று கூறினார். காவுத்ஸ்கியின் உரையை "படுகோரம்" என்று சித்திரித்தார். 

121 போ. தொ. க. இடது சாரிப் பிரிவு - போலந்து தொழிலாளர் கட்சி.  போலந்து சோஷலிஸ்டுக் கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக 1906ல் இக்கட்சி நிறுவப்பட்டது. போ. சோ. கட்சி (Polska Partia Socjalistyczna) 1892ல் நிறுவப்பட்ட ஒரு சீர்திருத்தவாத தேசியவாத அமைப்பு. 

122 தொல்லை நிறைந்த காலம் - இச்சொல் புரட்சிக்கு முற்பட்ட ருஷ்யாவின் முதலாளித்துவ வரலாற்று எழுத்தாண்மையால் பயன்படுத்தப்பட்டது. விவசாயிகள் போர், பதினேழாம் நூற்றாண்டின் துவக்கத்தில் போலந்து மற்றும் ஸ்வீடன் நாட்டின் தலையீட்டை எதிர்த்து ருஷ்ய மக்கள் போராடியது ஆகியவற்றின் காலப்பகுதியைக் குறிக்க இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டது.

1608ல் போலந்து நாட்டு நிலப்பிரபுக்களின் கையாளும் ருஷ்யாவின் ஜாரான பயங்கர இவானின் இளைய புதல்வன் என்று பாவனை செய்தவனுமான போலி இரண்டாம் திமீத்ரியின் கீழ் போலந்துப் படைகள் ருஷ்யா மீது படையெடுத்து மாஸ்கோவின் புற எல்லையை அடைந்து தூஷினோ என்னும் கிராமத்தில் முகாமடித்தன. மாஸ்கோ அரசாங்கத்துக்கு எதிராக போலி திமீத்ரியின் தலைமையில் தூஷினோவில் ஓர் அரசாங்கம் உருவாக்கப்பட்டது. எப்போதும் ஜெயிக்கும் பக்கமே இருக்கும் முயற்சியில் சில ருஷ்யப் பிரபுக்களும் "போயாரி" பிரபுக் குலமும் ஒரு முகாமை விட்டு இன்னொன்றுக்கு ஓடிச் சென்றனர். இந்த விட்டோடும் நபர்கள் "தூஷினோ அங்கி மாறிகள்" என்று அழைக்கப் பட்டார்கள்.

123 திரோத்ஸ்கியின் "நிரந்தரப் புரட்சி'' என்ற கொள்கையின் உள்ளடக்கம், அது புரட்சியில் பாட்டாளி வர்க்கம் தலைமைப் பாத்திரம் வகிக்கும் என்ற லெனினது கருத்தை நிராகரிப்பதும்; பாட்டாளி வர்க்கத்தின் நேச சக்தி என்ற முறையில் விவசாயிகளின் பாத்திரத்தை நிராகரிப்பதும் புரட்சிகர மற்றும் ஒரு தனிநாட்டில் சோஷலிசத்தைக் கட்ட முடியாது என்று அறிவித்ததும் ஆகும்.

- லெனின் தேர்வு நூல்கள் , தொகுதி 3, பக்கங்கள் 199-226 (வெளியீடு: செந்தளம் பதிப்பகம்)