கடற்கரைகளை கார்ப்பரேட்களுக்கு கைமாற்றும் திட்டம்!

அறம் இணைய இதழ்

கடற்கரைகளை கார்ப்பரேட்களுக்கு கைமாற்றும் திட்டம்!

இதோ மெரீனா கடற்கரை புதிய கோலம் கொண்டுள்ளது. பல கோடிகளில் பணத்தை கொட்டி புதுப் புது ஜோடனைகள் செய்கிறார்கள். இயற்கையான கடற்கரையின் அழகை செயற்கை அழகூட்டி அமர்க்களப்படுத்துவது எதற்காக..? சிறு கடைகளுக்கு அனுமதி மறுப்பு எதற்காக? இனி காற்று வாங்க கடற்கரை போனால் கூட காசு தான்;

டென்​மார்க்கை சேர்ந்த சுற்​றுச்​சூழல் நிறு​வனம், உலகம் முழு​வதும் உள்ள பல்​வேறு கடற்​கரைகளின் பல்​வேறு அம்​சங்​களை ஆராய்ந்து சர்​வ​தேச அங்கீ​காரத்​துக்​கான நீலக்​கொடி சான்​றிதழை அளித்து வரு​கிறதாம்…!

தமிழகத்​தில் ஏற்​கெனவே கோவளம் கடற்​கரைக்கு அந்த சான்​றிதழ் கிடைத்​துள்​ளது. இந்​நிலை​யில், உலகின் 2-​வது பெரிய கடற்​கரை​ மற்றும் இந்​தி​யா​வின் மிக நீள​மான சுமார் 13 கிமீ தூர​முடைய மெரினா, திரு​வான்​மியூர் உள்​ளிட்ட 6 கடற்​கரைக்​கும் நீலக்​கொடி சான்​றிதழ் பெற தமிழக அரசு முயற்​சிகளை மேற்​கொண்டு வரு​கிறதாம்!

இதற்​காக மெரினா கடற்​கரை​யில் பல கோடிகளில் இரும்பு நடை​பாதை, சைக்​கிள் தடங்​கள், விளை​யாட்டு பகு​தி, மாற்​றுத் திற​னாளி​களுக்​கான சக்கர நாற்​காலி பாதை, மூங்கில் நிழற்​குடைகள், அதன் கீழே இரு சாய்வு இருக்கைகள், விளை​யாட்டு சாதனங்​கள், திறந்​தவெளி உடற்​ப​யிற்சி கூடங்​கள், சுழலும் கண்​காணிப்பு கேம​ராக்​கள், கடற்​கரைக்கு மெரு​கூட்​டும் மரங்​கள், இருக்​கைகள், குப்பை தொட்​டிகள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன. ..!

இதன் ஒரு பகு​தி​யில் மெரினாவில் உள்ள நடை​பாதை கடைகளை சீரமைக்​கிறோம் என்று சொல்லி நடக்கும் நிகழ்வுகளை நாம் சற்று பார்ப்போம்.

மெரீனா கடற்கரைக்கு மக்கள் லட்சக்கணக்கில் வருகிறார்கள். காற்று வாங்கவும், காதல் செய்யவும், நடப்போடு பேசி கலந்துரையாடவும், குடும்ப சகிதமாக வந்து குதூகலமாக மகிழவுமாக இவ்விடம் சென்னைவாசிகளுக்கு ஒரு பெரும் வரப் பிரசாதமாக இருக்கிறது.

இங்கே ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன?

சுகாதாரமான சூழலை உறுதிபடுத்த குப்பைகளை தினசரி அள்ளவும், கழிப்பறை வசதிகளை செய்வதும், குடிநீர் கிடைப்பதற்கும் வழிவகை செய்ய  வேண்டும். அத்துடன் திருடர்கள், ரவுடிகள், சமுக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணித்து மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்.

அங்குள்ள சின்னச் சின்ன கடைகள் மக்களின் பசி மற்றும் தாகத்தை தீர்ப்பதோடு மகிழ்ச்சிக்கும் ஊற்றுக் கண்ணாகத் திகழ்கின்றது. இந்த கடைகள் இல்லாவிட்டால்  மெரீனாவே சோபையிழந்துவிடும். மக்கள் யாரும் சீண்டவில்லை என்றால், இங்கு யாரும் கடை போட முடியாது.

அரசாங்கம் இந்தக் கடைகளை முறைப்படுத்தட்டும். அதற்காக ஒரு மாதந்திரக் கட்டணத்தையும் நிர்ணயித்து பெறட்டும். மாமூல் வாங்கும் ரவுடிகளிடம் இருந்து பாதுகாப்புத் தரட்டும். மகிழ்ச்சி.

ஆனால், இதற்கு மாறாக தற்போது அங்கு இருக்கும் கடைகளை நடத்திக் கொண்டிருக்கும் ஏழைகளின் வாழ்வாதாரத்தின் மீது தாக்குதல் நடத்துவது ஏன்? இத்தனை வருடங்களில் இல்லாமல் இங்கே இத்தனை கடைகள்  எதற்கு? இவ்வளவு இருந்தாலே போதுமே தூக்கி எறியுங்கள் இவர்களை… .என்றால் எப்படி சரியாகும் ?

மக்களின் தேவையாக இருப்பதால் இந்தக் கடைகள் தவிர்க்க முடியாமல் அங்கு தழைத்தோங்குகின்றன.  தேவைக்கு அதிகமாக கடைகள் இருந்தால் அங்கு யாருமே லாபம் பார்க்க முடியாது. நஷ்டத்திற்கு யாரும் வியாபாரம் செய்யவும் மாட்டார்கள்.

முதலில் ஒரு நீதிபதி, ”300 கடைகளுக்கு தான் அனுமதி” என்கிறார். அடுத்து  இரு நீதிபதிகள் சேர்ந்து, ”900 கடைகள் போதுமானது” என்கிறார்கள். அங்கிருக்கும் எளிய வியாபாரிகளோ, ”நாங்கள் ஆயிரத்து நானூற்று சொச்சம் பேர் உள்ளோம். யாரையும் இழக்க விரும்பவில்லை. அனைவருக்குமே அனுமதியை உறுதி செய்யுங்கள்” என்கிறார்கள்.

உடனே இந்தப் பகுதிகளுக்கு நீதிபதிகள் நேரடியாக விசிட் செய்கிறார்கள். ”இந்த கடைகளின் பின்னணியில் மாபியா கூட்டம் உள்ளது” என ஒரு வார்த்தையைப் போடுகிறார்கள்.  சரி, அப்படியென்றால் அவர்களை கைது செய்து சிறையில் தள்ள வேண்டியது தானே முதன்மை பணியாக இருக்க முடியும்?

வெறுமனே இப்படி ஒரு கமெண்டை உதிர்த்து கடப்பது எப்படி சரியாகும்?

இந்தக் கடைக்காரர்களிடம் மாமூல் வாங்குகின்ற அரசியல் செல்வாக்குள்ள பிரமுகர்களை அடையாளம் காட்டி கைது செய்வார்களா?

செய்யமாட்டார்கள்..! ஏன் செய்யமாட்டார்கள்…!

அவர்கள் பெறுகிற மாமுல் என்பது காவல் துறை மற்றும் கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு பங்கு தராமல் சாத்தியமில்லை. சிஸ்டமே  ஊழல்மயமாக உள்ளது.

சரி இந்த நீலக் கொடி அங்கீகாரம் பெற்ற கடற்கரைகள் எல்லாம் தூய்மையாக உள்ளதா? சுற்றுச் சூழலுக்கு இசைந்ததாக உள்ளதா? என்றால், அதுவுமில்லை. சுற்றுச் சூழலுக்கு இடர்பாடாகத் தான் உள்ளது. எத்தனையெத்தனை சிறு கன்ஸ்ட்ரக்‌ஷன் செய்கிறார்கள்.  மெரினா மணற்பரப்பை கெடுக்கிறார்கள்! குறிப்பிட்ட பாதைகளின் வழி மட்டுமே இனி மெரினாவிற்குள் நுழைய முடியுமாம்.  அப்படி கடற்கரையில் காற்று வாங்க வருபவர்களிடம் கட்டணம் வசூலிக்கபடுமாம்.

ஏற்கனவே கோவளம் கடற்கரை பகுதி நீலக் கொடி சான்றிதழ் பெற்ற பிறகு அந்த கடற்பரப்பிற்குள் நுழைந்து காற்று வாங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மிக விரைவில் இனி மெரினா கடற்கரைக்குள் நுழைவோரிடம் ரூ 30 முதல் ரூ 50 வரை வசூலிக்க உள்ளார்கள்! இதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. கடற்கரைக்குள் இத்தனை அலப்பறைகள் செய்து கோடிக் கணக்கில் இவர்கள் பணத்தை கொட்டுவது என்பது பல மடங்கு அதை திருப்பி அள்ளுவதற்குத் தான். ஏற்கனவே நெடுஞ்சாலையில் பயணப்படும் வாகனங்களிடம் பணம் வசூலிக்கும் சுங்கச் சாவடிகளை நாம் அனுமதித்து தற்போது அவதிப்படுகிறோம்.

காரணம், இந்த நீலக் கொடி என்பது கார்ப்பரேட்களின் ஆதிக்கக் கொடியாகும். இது போன்ற வெகுமக்கள் கூடுகின்ற இயற்கை ஆதாரங்களை கார்ப்பரேட்களின் மொத்த குத்தகைக்கு விட்டு பெரும் பணம் ஈட்டுவதே இந்த நீலக் கொடியின் பின்னுள்ள தந்திரமாகும். 1,400 சிறு வியாபாரிகள் அடைய வேண்டிய லாபத்தை ஒரு ஒற்றை கார்ப்பரேட் நிறுவனம் அடைவதற்காகவே இல்லாத அழிச்சாட்டியங்களை அரங்கேற்றுகிறார்கள்!

என்னென்ன செய்கிறார்கள் என்று பார்ப்போமா?

மெரீனாவை சார்ந்துள்ள மீனவ குப்பங்களில் உள்ள மக்கள் அங்கு கடற்கரையில் படகுகளை நிறுத்த முடியாதாம். வலைகளை காய வைக்க முடியாதாம். எல்லா படகுகளையும் வலைகளையும் தூக்கி ஒரு மூலையில் கிடத்திவிட்டார்கள், கடற்கரையில் படகுகள் இருப்பதும் இயற்கை சார்ந்த அழகு தோற்றம் தருவது தானே.

நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் திட்டம்,மீனவமக்களின் மீன்பிடித்தொழில்,மீன் வியாபாரம் மற்றும் வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதிப்பது குறித்த எந்த குற்றவுணர்வும் இவர்களுக்கு இல்லையே!

எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்காதே எனப் போராடும் மீனவர்கள்!

சென்னை மாவட்டத்திற்குள் மெரினாவில் நொச்சிக்குப்பம் முதல் விவேகானந்தர் இல்லம் வரை ரூ. 6,22,78,496 கோடி திட்டமாம்!  அடுத்து திருவான்மியூர் கடற்கரையில் ரூ. 6,01,60,244 கோடி திட்டமாம். மேலும் பாலவாக்கத்தில் ரூ. 6,01,60,244 கோடி திட்டமாம். இறுதியாக  உத்தண்டியில் ரூ. 6,01,60,244 கோடி திட்டமாம்! ஆக, இ.சி.ஆர் எனப்படும் கிழக்கு கடற்கரை சாலை முழுவதையுமே ஒன்லி வி.இ.பிக்கள் வெளி நாட்டு சுற்றுலாவாசிகளுக்கானதாக மாற்றும் திட்டத்தை தான் செயல்படுத்த உள்ளார்கள்.

இந்தப்பகுதிகளில் பாரம்பரியமாக பல்லாண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கும்  மீனவர்களிடம் கலந்து பேசவில்லை. தகவல் தெரிவிக்கவில்லை. இவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து வயிற்றில் அடிக்கிறோமே..என்ற எண்ணமே இவர்களுக்கு இல்லையே

இந்த நான்கு பகுதிகளில் நீலக்கொடி கடற்கரை திட்டம் அமைய உள்ள இடங்களின் வரைபடங்களை கூட இணைய தளத்தில் வெளியிடாமல் ரகசியமாக இத்திட்டத்தை முன்னெடுக்கிறார்கள் என்பது தான் மீனவர்களின் வேதனையாகும். இது மீனவர்களாகிய தங்களின் மரபான உரிமைகளை மறுப்பது மட்டுமின்றி, கடற்கரையை பாரம்பரிய மீனவ மக்களிடம் இருந்து பறித்து கார்ர்ப்பரேட்களுக்கு மடைமாற்றுவதே என்று மீனவ மக்கள் வேதனையை வெளிப்படுத்துகிறார்கள்.

வல்லான் வகுத்ததே சட்டம் – இனி

எல்லாம் வசதி படைத்தோர்க்கே வாழ்க்கையென்று

பொல்லாத சதி திட்டம் தீட்டுகிறார்.

இல்லாதோருக்கு இல்லை, இனி வாழ்க்கை!

இது உலக பெருமுதலாளிகளோடு சேர்ந்து ஒன்றிய அரசு தீட்டிய திட்டம். இதற்கு முழு ஒத்துழைப்பை நல்குவது நம் மாநில அரசின் குற்றம்.

(சாவித்திரி கண்ணன்)

அறம் இணைய இதழ்

https://aramonline.in/24169/merina-beach-corporate-plans/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு