ஜே.வி.பியின் வெற்றியும் சமூகத்தின் தோல்வியும்

தமிழரங்கம்

ஜே.வி.பியின் வெற்றியும் சமூகத்தின் தோல்வியும்

ஒரு முதலாளித்துவக் கட்சியால், முதலாளித்துவ தேர்தல் ஜனநாயகம் மூலம் ஆட்சியைப் -பதவியைப் பிடிக்கும் ஜே.வி.பி.யால் என்ன செய்ய முடியும்?  

ஏகாதிபத்திய உலகவொழுங்கில் முதலாளித்துவத் தேர்தல் ஜனநாயகம் என்பது, மூலதனத்தை குவிக்கின்ற தனியார் நலனுக்கானதே. இதன் அடிப்படையில் தான் ஐ.எம்.எவ் இயங்குகின்றது. 

மக்களைச் சுரண்டிக் கொழுப்பது உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டு மூலதனங்களும், நிதி மூலதனங்களும் சுரண்டுவதற்கான கொள்கைகளைக் கொண்டதே முதலாளித்துவ ஆட்சியமைப்பு முறை. இதைத்தான் ஜே.வி.பி. இன்று முன்வைத்திருக்கின்றது. இதற்கு எதிராகவல்ல.

ஜே.வி.பி. எதைச் செய்து மக்களை ஏமாற்றும். 

ஐ.எம்.எவ். முன்வைக்கும் ஊழல் ஒழிப்பு மூலம் ஜே.வி.பி. தன்னை புரட்சிகரமான சக்தியாக காட்டிக்கொள்ளும். ஊழல் ஓழிப்பு என்பது ஐ.எம்.எவ். இன் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. இது தான் மக்களை ஏமாற்றும் ஜே.வி.பி. யின் அச்சாணியும் கூட. 

1.ஐ.எம்.எவ். இன் ஊழல் ஒழிப்பின் நோக்கம் மிகத்தெளிவானது. கல்வி, மருத்துவம், அரசு துறையில் வேலை செய்யாமலிருப்பது ,..  தொடங்கி பொது நிர்வாக சிவில் கட்டமைப்பு வரை நிலவும் ஊழல் என்பது, ஐ.எம்.எவ். பாதுகாக்கும் நிதி மூலதனக் கடனையும் - வட்டியையும் அறவிடுவதற்கு எதிரானதாக மாறி இருக்கின்றது. 

மக்கள் சார்ந்த செயற்திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதியில் நடக்கும் மோசடியானது, மக்களுக்கு ஒதுக்கும் நிதியில் பெரும் பகுதியை தின்று தீர்க்கின்றது. அதேநேரம்; கையூட்டு என்பது, மக்களை வங்குரோத்தாக்குகின்றது. 

இதனால் சமூகத்தில் கொந்தளிப்புகள் ஏற்படுகின்றது. சமூகக் கொந்தளிப்புக்களை குறைக்கவும், ஒதுக்கும் நிதி மக்களுக்கு சென்றடைய வைப்பதன் மூலம், கடன் - வட்டியை செலுத்தும் திறனை அதிகரிக்க முடியம். இது தான் ஐ.எம்.எவ். இன் ஊழல் ஒழிப்புத் திட்டம். கையூட்டைப் பெறுவதைத் தடுப்பதன் நோக்கமும் இதுதான். இதை இன்று செய்ய ஜே.வி.பி. யை விட, வேறு யாரையும் ஐ.எம்.எவ். நம்பவில்லை. ஜே.வி.பி. துணிச்சலாக செய்யும் தகுதியே, ஏகாதிபத்திய அங்கீகாரம் பெற்ற ஆட்சியாளராக ஜே.வி.பி. மாறியிருக்கின்றது. 

மக்களின் அன்றாட வாழ்வுடன் முரண்படும் ஊழல், கையூட்டுக்கு.. எதிரான செயற்பாடுகள் மூலம், தன்னை புரட்சிகர சக்தியாக நிறுவவும் அதேநேரம் ஏகாதிபத்திய முதலாளித்துவ பொது நலன்களைப் பாதுகாக்கவே ஜே.வி.பி. முனையும்;. 

2. இந்த முதலாளித்துவ அமைப்பில் சாத்தியமான முரணற்ற முதலாளித்துவ அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குமா? இந்தக் கேள்வி இனவாதம் மதவாதத்திற்கு எதிரான பொதுச் சட்ட அமைப்பாக அமையும். 

இந்த வகையில்  எடுத்துக்காட்டாக 

1.    ஒரு மொழியை முதன்மையாகக் கொண்ட அரசியல் அமைப்புச் சட்டத்தை இல்லாதாக்குமா?

2.    மதத்தை முதன்மையாக கொண்ட அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குமா?

3.    மதத்தை தனிமனித நம்பிக்கை அடிப்படையில் முன்னிறுத்தி, அரசு அதிலிருந்து விலகி இருக்குமா? 

4.    மதத்தை அடிப்படையாகக் கொண்ட அரச நிகழ்வுகளை அரசியல் சட்டம் மூலம் தடைசெய்யுமா?

5.    பாடசாலைகளில், பல்கலைக்கழகங்களில் கோயில்களை இல்லாதாக்குமா? மூடநம்பிக்கைப் பிரச்சாரங்களை தடைசெய்யுமா? 

6.    பாடசாலைகளில் குறித்ததொரு மதக் கல்வியைத் தடை செய்து,  மதங்களைப்; பற்றிய பொதுப் பாடங்களை உருவாக்குமா? 

7.    பாடசாலைகளில் அடிமை முறைகளை (காலில் விழுவது தொடங்கி அதிகாரத்தைத் துதிக்கும் சேர் நடைமுறை வரை) நீக்குமா?. 

8.    பொது வெளிகளில் மதப் பிரசார ஒலிகளைத் தடைசெய்யுமா? 

9.    இப்படி பற்பல         

இப்படி இன்று கேள்விகளை எழுப்புவது, ஜே.வி.பி.யின் கடந்தகால வரலாற்றில் இருந்துதான். ஜே.வி.பி.யின் வரலாறு என்பது உலகளவில் கம்யூனிசத்தை கைவிட்டு முதலாளித்துவ மீட்சியுடன் 1960 களில் நடந்த உலகளாவிய பிளவுடன் உருவான சண் தலைமையிலான கட்சியின் வரலாறுடன் தொடர்புடையது. சண் தலைமையிலான கட்சியின் இளைஞர் அணியை வழிநடத்திய ரோகண வீஜயவீர தலைமையில் பிரிந்து சென்ற அணி தான் ஜே.வி.பி.

1971 இல் ஜே.வி.பி. ஆயுதப் போராட்டத்தை நடத்தி ஆட்சியைக் கைப்பற்ற முற்பட்டு தோல்வியில் முடிவடைந்தது. மக்கள் திரள் வர்க்க கட்சியாக தன்னை அணிதிரட்டுவதற்குப் பதில், மத்தியதர வர்க்க குட்டி பூர்சுவாக நலன்களை முன்னிறுத்தி நடத்திய ஆயுதப்போராட்டமானது, கியூபா பணியில் ஆட்சியை அமைக்க முற்பட்டது. 

இது போன்று மீண்டும் 1989 இல் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் சமாதானப் படை என்ற வேசத்தில் இலங்கையில் காலூன்றிய போது, அதைப் பயன்படுத்தி மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்தியது. அரசியல் ரீதியாக மத்தியதர வர்க்க அதே குட்டிபூர்சுவாக் கனவுகளுடன் தோல்வி பெற்றது.

இலங்கையில் தேர்தல் மூலம் அதிகாரத்தை தீர்மானித்த இனவாதம், மதவாதம் .. நிலவிய காலத்தில் அரசியல்ரீதியாகவும் நடைமுறைரீதியாகவும் எதிர் செயற்பாட்டை முன்வைக்காத ஜே.வி.பி., இனவாதத்துடன் சமரசத்தை கொண்டு செயற்பட்டதன் மூலம் அதிகாரத்திலிருந்த இனவாத ஆட்சியாளர்களுடன் சமரசத்தைக் கொண்டிருந்தனர். 

இந்தச் சமரசவாத அரசியலானது 2004 இல் இனவாத அரசியலில் ஒரு அங்கமாக மாறியதுடன், பல்வேறு இனவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அரசின் இனவாதத்தை முன்வைக்கும் முன்னணிப் பேச்சாளாராக வீரவன்ச மாறியதுடன், இனவாத அரசின் படைகளுக்கும் ஆட்களைத் திரட்டிக் கொடுக்கும் கூலிப்படையாக மாறியது.  

இதன் விளைவாக  ஜே.வி.பி.யின் அக முரண்பாடுகள் கூர்மையடைந்ததுடன், வர்க்கப் போராட்டத்தை முன்வைத்து கட்சியில் ஏற்பட்ட விவாதம் மூன்று அணிகளை உருவாக்கியது. 

1.    வீரவன்ச தலைமையிலான இனவாத அணி. விமல் வீரவன்ச 2008 மார்ச் 21 இல் ஜே.வி.பி. கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகியதையடுத்த, 2008 மே 14 இல் தேசிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் புதிய கட்சியை வீரவன்ச ஆரம்பித்தார். 

2.    குமார் குணரட்ணம் தலைமையிலான வர்க்கப் போராட்டத்தை முன்வைத்த அணியானது  ஜே.வி.பியில் இருந்து லிலகி, முன்னிலை சோசலிசக் கட்சி என்ற அமைப்பை 2012 ஏப்ரல் 9ம் திகதி தொடங்கினர்.

3.    சோமவன்ச தமையிலான ஜே.வி.பி. இனவாதம் மற்றும் முதலாளித்துவ சமரசவாதத்தை முன்வைத்தது. 2014 இல் சோமவன்சவை வெளியேற்றிய ஜே.வி.பி.யானது, அநுர குமார தலைமையில் முதலாளித்துவத்தை ஏற்றுக்கொள்ளும் கட்சியாக தன்னை மாற்றியது. சோமவன்ச புதிய கட்சியை உருவாக்கியதுடன், அவரின் மரணத்துடன் அது முடிவுற்றது. அநுர குமார தலைமையில் முதலாளித்துமானது, ஏகாதிபத்திய உலக ஒழுங்கை அங்கீகரித்துக் கொண்டதன் மூலம், ஆளும் வர்க்கக் கட்சியாக மாறியிருக்கின்றது.                      

இந்த வரலாற்றுப் பின்னணியில் தான் இன்றைய தேர்தலும், தேர்தல் முடிவுகளும், அதன் பின்னான அரசின் செயற்பாடுகளும் அமையும்.

- தமிழரங்கம்

https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=12766%3Anpp-jvp-election2024&catid=794%3Api-irayakaran-2024&Itemid=237&lang=ta&fbclid=IwY2xjawFd5iNleHRuA2FlbQIxMQABHUe2rFiHrigN9jkBE7wZGcX4cPs1Nsf03bR7zsGDyw_sW1KoXACHuE8YIQ_aem_UG41z4SdtZshRY385lU6Jg&sfnsn=wiwspwa

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு