‘வேண்டாம், இந்த விபரீதச் சட்டங்கள்’- பி.யு.சி.எல்

அறம் இணைய இதழ்

‘வேண்டாம், இந்த விபரீதச் சட்டங்கள்’- பி.யு.சி.எல்

‘புதிய குற்றவியல் சட்டங்கள் ஆபத்தானவை! காவல் துறைக்கு கட்டற்ற அதிகாரம், மனித உரிமைகளை நசுக்கும் கூறுகள், அதிகாரத்தில் உள்ள குற்றவாளிகளை பாதுகாப்பது ஆகிய அம்சங்களோடு தடா, பொடா, ஊபா சட்டங்களின் கலவையாக உள்ளன, புதிய சட்டங்கள் ‘ என அம்பலப்படுத்தியது பியூசிஎல்;

மோடி 2.0 ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மக்கள் சிவில் உரிமைக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. புதிய குற்றவியல் சட்டங்கள் மொழி பெயர்க்கப்படவில்லை, தடா,பொடா, ஊபா சட்டப் பிரிவுகள் புதிய குற்றவியல் சட்டங்களில் இடம் பெற்றுள்ளன. மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தவில்லை. இதனால் காவல் சித்திரவதைகள் அதிகமாகும். குடிமக்களின் உரிமைகள் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

சென்னையில் மக்கள் சிவில் உரிமைக் கழகம் ஜூன் 27 அன்று ‘புதிய கிரிமினல் சட்டங்கள் என்ன சொல்கிறது ?’ என்ற கருத்தரங்கை நடத்தியது. பேராசிரியர் எஸ்.சங்கரலிங்கம் தலைமையில் நடந்த இந்த கருத்தரங்கில் மூத்த வழ்க்கறிஞரும் பி.யு.சி.எல்லின் தேசிய செயலாளருமான வி.சுரேஷ், மூத்த வழக்கறிஞர்கள் நாகசைலா, சத்யசந்திரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். ஊடகவியலாளர் மணி நிகழ்வை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்வில் பல வழக்கறிஞர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

பேராசிரியர் சங்கரலிங்கம்; ‘எதிர்கட்சி உறுப்பினர்களை ஒட்டு மொத்தமாக வெளியேற்றிவிட்டு, விவாதமின்றி கடந்த பாராளுமன்றத்தில்  இச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இச்சட்டங்களை மாநில மொழிகளில் இன்னமும்  மொழி பெயர்க்கவில்லை. ஆனால் ஜூலை 1 முதல் அமலாக்கப் போவதாக மோடி அரசு அறிவித்துள்ளது. இச் சட்டங்களினால் ஜனநாயக சக்திகள், எளியோர், சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர்’ என்றார்.

வழக்கறிஞர் நாகசைலா;. ‘ இந்த மூன்று சட்டங்களின் பெயர்களும் சமஸ்கிருதத்தில் உள்ளன. நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவர் இந்தப் புதிய மூன்று சட்டங்களின் பெயரை இந்த அவையில் உள்ள யாரேனும் ஒருவர் சொல்லுங்க பார்ப்போம் என்றார். ஆனால், அங்கே பரவலாக இருந்த அரசு வழக்கறிஞர் உட்பட யார் ஒருவராலும் கூட சொல்ல முடியவில்லை. உடனே, நீதிபதி நான் பழைய முறைப்படியே இந்த சட்டப் பெயர்களை சொல்லுவேன் என அவையிலேயே சொன்னார். இது தான் யதார்த்தம்.

அரசியல் அமைப்புச் சட்டம் உறுப்பு 348 – இயற்றப்படும் சட்டங்கள் ஆங்கிலத்திலேயே இருக்க வேண்டும் அல்லது இந்தி- தேவநகரி வடிவத்தில் இருக்க வேண்டும். அரசு மொழிச் சட்டப்படி இந்தி பேசாத மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளும் வரை சட்டங்கள் ஆங்கிலத்திலேயே இருக்க வேண்டும். ஆனால், புதிய சட்டங்கள் சமஸ்கிருத உச்சரிப்பில் ஆங்கில எழுத்துகளில், இந்திப் பெயர்களில் உள்ளன. இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. இதற்கான மொழி பெயர்ப்பு வர ஆறு மாதங்களாவது ஆகும். ஏற்கெனவே ஐ.பி.சி, சி.ஆர்.பி.சி சாட்சியச் சட்டம் என்று பழகிய வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும், நீதிமன்றங்களுக்கும் இதனை புரிந்து கொள்ள தாமதமாகும். ஏற்கெனவே உள்ள சட்டங்களில் 90 % மேலாக அப்படியே உள்ளன. புதிய சட்டங்களின் பிரிவுகள் பழைய சட்டங்களில் உள்ளதைப் போன்ற ஒழுங்குமுறையில் அமைக்கப்படவில்லை. எனவே, சட்டத்தின் எந்தப் பிரிவு எங்கு உள்ளது எனபதைக் கண்டு பிடிக்கவே சிரமப்பட வேண்டும்.

இந்திய தண்டனைச் சட்டம், எது குற்றம் ? அதற்கான வரையறை என்ன ? தண்டனைக் காலம் என்ன என்பதைக் கூறுகிறது. இச் சட்டம் வெளிவந்து 160 ஆண்டுகள் (1860)  ஆகின்றன. இது, இப்போது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) என்ற பெயரில் வருகிறது. காவல் துறை நாம் தொடுக்கும் வழக்குகளின் மீது எடுத்த நடவடிக்கை குறித்து பதில் சொல்லலாம் என இருக்கிறது. ஆனால், புதிய சட்டம் அவ்வாறு பதில் அளிப்பது கட்டாயம் இல்லை என்கிறது. பதில் அளிக்கலாம் என்ற பிரிவு இருக்கும் போதே காவல் துறையிடம் பதில் வாங்குவது கடினம். பதில் அளிக்கத் தேவையில்லை என்று சட்டத்திலேயே இருந்து விட்டால் குடிமக்கள்  நிலை என்னவாகும் !

# ஒரு அரசாங்க ஊழியர் மீது நீதிமன்றத்தில் புகார் கொடுத்தால் அவரை விசாரிக்க முடியும். ஆனால் புது சட்டத்தில் அந்த அரசு ஊழியரின் மேல் அதிகாரி ஒப்புதல் தர வேண்டும், அதோடு சம்மந்தப்பட்டவரின் பதிலையும் வாங்க வேண்டும். இது தவறிழைக்கும் அரசு ஊழியரை பாதுகாக்கும் அம்சமாகும்.

# தவறிழைத்த குற்றவாளிக்கு கைவிலங்கு போடுவது மனித கண்ணியத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தேவைப்பட்டால் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று கைவிலங்கு போடலாம். இதற்கு ஒவ்வொரு முறையும் அனுமதி வாங்க வேண்டும். மனித நாகரிகத்திற்கு இசைந்த விதி இது. ஆனால், புதிய சட்டத்தில் போலீசே கைவிலங்கு இடலாம். புதிய சட்டங்கள் உருவானால் கண்ணியத்தையும், நாகரிகத்தையும் செழுமைப்படுத்தும் அம்சங்கள் இருக்க வேண்டும். ஆனால் இதில் இல்லை.

# ஒருவரை கைது செய்தவுடன் அவரது குடும்பத்தினருக்கு சொல்ல வேண்டும். மாவட்ட தலைமையகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என பழைய சட்டம் சொல்கிறது. ஆனால், புதிய சட்டத்தில் அவரது தனிப்பட்ட விபரங்கள் போன்றவைகளை அந்தந்த காவல்நிலையத்தில் அறிவிப்பு பலகையில், இணையத்தில் சொல்ல வேண்டும் என்கிறது. மேம்போக்காக பார்க்கும் போது இது நல்ல அம்சமாகத் தெரியும். ஆனால்,  ஒருவரது தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவது தனியுரிமைக்கு எதிரானது. ஆணவக் கொலை நடக்கும் காலங்களில், முகவரி போன்ற விபரங்களை வைத்து எதிராளிகளை, அவர்களது உறவினர்களை தாக்குவது அதிகரிக்கும். கைது மெமோ போடுவதற்கு முன்பு தான் காவல் சித்தரவதை நடக்கும். எனவே காவல் நிலைய மட்டத்தில் அறிவிப்புப் பலகையில் தெரிவிப்பதாக இருந்தால் காவல் சித்ரவதை அதிகரிக்கும்.

# பழைய சட்டத்தில் ஒருவரை 15 நாட்கள் வரைதான் போலீஸ் காவலில் வைக்க முடியும். அதுவும்  கைது செய்த முதல் 15 நாட்களுக்குள் மட்டுமே போலீஸ் காவலில் எடுக்க நீதிமன்றத்தை அணுகமுடியும். நீதிமன்றம் இரண்டு நாள், மூன்று நாள் என கொஞ்சம் கொஞ்சமாக அனுமதி வழங்கும். ஏனெனில் காவல் சித்திரவதையை குறைப்பதற்காக நீதிமன்றம் எடுக்கும் நடவடிக்கை இது. ஆனால் புதிய சட்டத்தில் ஒருசில குற்றங்களுக்கு 45 நாள்வரையும், ஒருசிலவைகளுக்கு 60 நாள்வரையும் போலிஸ் காவலில் கேட்கலாம். அதனையும் முதலில் சில நாட்கள் பிறகு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி விட்டு மேலும் சில நாட்கள் என போலீஸ் காவலைக் கேட்க முடியும். இதனால் காவல் சித்ரவதை அதிகரிக்கும். புதிய சட்டம் காவல் துறைக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கியுள்ளது. குடிமகன் பார்வையில் புதிய சட்டம் உருவாகவில்லை.

# பழைய சட்டத்தில் விசாரணை முடிந்தபிறகு அசையும் சொத்துகளை இணைத்துக்கொள்ளலாம் ( attachment of property). ஆனால் புதிய சட்டத்தி்ல் விசாரணையின்போதே அசையும் சொத்து, அசையாச் சொத்து என இரண்டையும் இணைத்துக்கொள்ள முடியும். அதாவது ‘குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி’ என்ற கொள்கை இதில் நிராகரிக்கப்படுகிறது. பிடிக்காதவர்களை பழிவாங்க முடியும்.

# புதிய சட்டம் காணொளி வாயிலாக, குற்றவாளி இல்லாமலே விசாரணை நடத்தலாம் என்று கூறுகிறது. வழக்கறிஞரும் – குற்றவாளியும் சேர்ந்து இருந்து விசாரிக்கும்போது, சில விடுபட்ட விவரங்களை குற்றவாளியே மறந்து போன வழக்கறிஞருக்குச் சொல்வார்கள். காவல்துறையில் தங்கள் பட்ட சித்ரவதைகளைச் சொல்வார்கள். புதிய சட்டம், வழக்கறிஞர்- குற்றவாளிக்கு உள்ள புரிதலை தடுக்கிறது.

# பழைய சட்டத்தில் குற்றவாளியின் விவரங்களைப் பெறலாம். ஆனால் புதிய சட்டத்தில் யாருடைய விவரத்தை வேண்டுமானாலும் – மாதிரி கையொப்பம், கையெழுத்து, குரல் மாதிரி, கைரேகை பெறலாம்.

# ஒருசில வழக்குகளில் பிணைக்காக ‘சமூகசேவை’ செய்ய விதமாக நீதிபதிகள் கூறுவர்கள்.  சமூகசேவை என்ன என்பதை புதிய சட்டமும் வரையறுக்கவில்லை.

# பழைய சட்டத்தில் ஒன்றிய அரசு-மாநில அரசு இணைந்த வழக்குகளில்  தண்டனைக் குற்றவாளிகளை முன்விடுதலை செய்ய ஒன்றிய அரசிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் ( உ-ம் : ராஜீவ் காந்தி கொலை வழக்கு). ஆனால், புதிய சட்டத்தில் ஒன்றிய அரசின் ஒப்புதல் வேண்டும். இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகும்.

# புதிய சட்டத்தில் கலவரத்தை அடக்க இராணுவத்தை மாவட்ட நீதிபதி அழைக்கலாம். இராணுவம் விரும்பியபடி நடவடிக்கைகளை எடுக்கலாம். உள்நாட்டு விவகாரத்தில் கடந்த காலங்களில் இராணுவம் தலையிடாது” இவ்வாறு வழக்கறிஞர் நாகசைலா விவரித்தார்.

மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் பொதுச் செயலாளர் வி.சுரேஷ்;  புதிய குற்றவியல் சட்டங்கள் ‘ஏற்கெனவே நடைமுறையில் இருந்த காவல் அரசை, சட்டப்பூர்வமான காவல் அரசாக (de jure police state) ‘ மாற்றி உள்ளதாக கூறினார். நீதிக்கு ஆதரவாக ,  பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக சட்டங்கள் இருக்க வேண்டும். புதிய சட்டம் ‘நீ நிரபராதி என்று நிரூபிக்கப்படும் வரை குற்றவாளி’ என்று சொல்கிறது. தடா, போடா, ஊபா போன்றவை சிறப்புச் சட்டங்கள். அது குறிப்பிட்ட காலத்திற்கு, குறிப்பிட்ட சூழலில் உருவான சட்டங்கள். அதன் கீழ் ஒருவர் மீது வழக்குப் போட வேண்டுமானால், அரசிடம் அனுமதி  வாங்க வேண்டும். உயர்மட்ட அதிகாரியிடம் கொடுக்கும் சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்படும்.

ஆனால், புதிய சட்டத்தில் ‘பொருளாதார இறையாண்மைக்கு’ எதிராக ஒருவர் பேசினால் அவர்மீது வழக்குப்போடமுடியும். பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்தால், சிப்காட் ஆலைகளை எதிர்த்தால், ஜி எஸ்டி வரியை எதிர்த்தால் ஒருவர் மீது தடா,பொடா,ஊபாவில் உள்ள பிரிவுகளைக் கொண்ட புதிய சட்டத்தில் வழக்குப்போட முடியும். அதிலுள்ள பிரிவுகள், புதிய குற்றவியல் சட்டத்தில் உள்ளடக்கி உள்ளன. மனித உரிமை ஆணையம், உச்சநீதிமன்றம், பாராளுமன்றம், குடிமைக் கழகங்களின் ஆய்வு போன்றவைகளின் அடிப்படையில்தான் தடா, பொடா போன்ற சட்டங்கள் திரும்ப்ப பெறப்பட்டன. அதனைக் கணக்கில் கொள்ளாமல், அந்த சட்டங்களில் இருந்த பாதுகாப்பு அம்சங்களையும் நீக்கி (உயர் காவர் அதிகாரி முன்பு  வாக்குமூலம் பெறப்பட வேண்டும், அரசு அனுமதி வேண்டும் என்பது போன்ற) புதிய குற்றவியல் சட்டத்தில் சாதாரண பிரிவில் வைத்துள்ளனர். ‘தேசத்துரோக’ குற்றத்தை நீக்கி விட்டோம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகிறார். ஆனால் இறையாண்மைக்கு எதிரான குற்றம் என அதை பெயர் மாற்றி உள்ளனர். அதற்கு தெளிவற்ற விளக்கம் கொடுத்துள்ளனர்.

# ஏற்கனவே, ‘தற்கொலை முயற்சி குற்றமல்ல’ என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அந்தக் குற்றம் புதிய சட்டத்தில் இல்லை. ஆனால், ‘அரசை நிர்ப்பந்த வைக்கும் முயற்சி குற்றம்’ என உள்ளது. அதாவது, உண்ணா நோன்பை குற்றம் என சொல்ல முடியும்.

# ‘மனைவியை கட்டாயப்படுத்தி உறவு கொள்வது குற்றமல்ல’ என புதிய சட்டம் கூறுகிறது. அதாவது பழைய மதிப்பீடுகளை உள்வாங்கிய ஆண் ஆதிக்க மனோபாவமுள்ளதாக புதிய சட்டம் உள்ளது.

புதிய சட்டமானது காவல்துறைக்கு கட்டற்ற அதிகாரத்தை வழங்குகிறது. ஏற்கெனவே குடிமக்களுக்கு ஆதரவாக இருந்த பாதுகாப்பு அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளன’ என்றார்.

“காலனி ஆதிக்கக் காலத்தில் பொதுமக்களை நபராகப் (subject) பார்த்தார்கள். நவீன காலத்தில் பொதுமக்கள் குடிமக்கள் (citizen) ஆவார்கள். சட்டங்கள் அவர்களுக்கு உரிமைகளை உறுதிசெய்யும் வகையில் இயற்றப்பட வேண்டும். புதிய சட்டத்தின் வரையறைகள் தெளிவற்று உள்ளன. அரசியல் அமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள சங்கம் வைக்கும் உரிமை, கருத்துச் சுதந்திரம் போன்றவைகளை மறுதலிக்கும் விதமாக உள்ளன.  சட்டம் இயற்றுவதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய விவாதங்களை நடத்தவில்லை.

பாராளுமன்ற நிலைக் குழு கொடுத்த பரிந்துரைகள் பொது வெளியில் வைக்கப்படவில்லை. பார் கவுன்சில், வழக்கறிஞர்களிடம் ஆலோசனை கேட்கவில்லை. சட்டம்- ஒழுங்கு மாநில அரசின் பொறுப்பாகும்.  சாட்சிகளை பாதுகாக்கும் திட்டம், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு போன்றவைகளை மேற்கொள்ள வேண்டியவை மாநில அரசுகள். இவை பற்றிய தெளிவுகள் சட்டத்தில் இல்லை. மாநில அரசுகளிடம் ஆலோசிக்கவில்லை. அரசு தனது அதிகாரத்தை காவல்துறையிடம் கொடுத்துள்ளது” என்றார் வழக்கறிஞர் சத்தியசந்திரன்.

ஜூலை ஒன்றாம் நாள் இந்த மூன்று சட்டங்களும் அமலாகும். இந்த அமலாக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் பிரதம மந்திரி மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேற்கு வங்க பார் கவுன்சில் ஜூலை ஒன்றாம் நாளை கறுப்புநாளாக அறிவித்து போராட்டம் நடத்த உள்ளது.

தொகுப்பு: பீட்டர் துரைராஜ்

- அறம் இணைய இதழ்

https://aramonline.in/18361/new-criminal-laws-is-danger-pucl/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு