பள்ளியின் அடியாள் பலமும்! குற்றப் பின்னணியும்!
அறம் இணைய இதழ்
அதிகாரத்தின் ஆதரவு இருந்தால் எத்தனை கொலையும் செய்யலாம்! எவ்வளவு வன்முறையிலும் இறங்கலாம், ஜாமீனில் வந்து விடலாம் என்ற நம்பிக்கையே தாக்குதலுக்கு அடித்தளமாகும்! இவர்களின் குற்றப் பின்னணியைப் பார்த்தால் அதிபயங்கரமானது. திமுக அரசு, தன் திசை வழியை மாற்றிக் கொள்ளுமா?
கனியாமுத்தூர் சக்தி மெட்டிரிகுலேஷன் பள்ளி நிர்வாகி ரவி எப்படிப்பட்ட வன்முறையாளர் என்பது தற்போது மீண்டும் நிருபணமாகியுள்ளது! அவர் மீது மட்டுமல்ல, அவர் மனைவி மீதும் கொலை வழக்கு நடந்து கொண்டுள்ள நிலையில் – ஜாமீனில் வெளி வந்த நிலையில் – தனது தம்பி சுபாஷையும், ஆருயிர் நண்பர் ராஜசேகரனையும் நேரடியாக களத்திற்கு அனுப்பி நக்கீரன் பத்திரிகையாளர்களை தாக்குகிறார் என்றால், அவர் எதற்குத் தான் துணியமாட்டார்?
கோகுல்ராஜை கொலை செய்த யுவராஜையும், அவரது அடியாள் கூட்டத்தையும் வளர்த்து விட்டவர் மட்டுமல்ல, இன்று வரை அந்த வன்முறை கும்பலை போஷித்து வருபவர் தான் சக்தி பள்ளி முதலாளி ரவி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சாதி பலம், அடியாள் பலம், பண பலம், அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆதரவு பலம் இருக்கும் போது எதையும் செய்து தப்பித்துவிடலாம் என்பது தான் இது வரையிலான ரவியின் அனுபவமாகும். இதுவே இன்று வரை அவரைக் காப்பாற்றி வருகிறது!
ஏற்கனவே சில மாணவர்கள் அந்த பள்ளியில் மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பாக அம்பலப்பட்டுள்ள நிலையில், மீண்டும், மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் பள்ளியை திறந்து தொடர்ந்து அவர்களின் கல்வி வியாபாரத்திற்கு உதவ அரசு அமைப்புகள் காட்டும் ஆர்வத்தை புரிந்து கொள்ள முடியவில்லை! மீண்டும் இதே போன்ற அசம்பாவிதம் அங்கு நடக்காது என்பதற்கு யார் உத்திரவாதம் தந்தார்கள்?
தற்போது சுமார் ஆயிரம் மாணவர்கள் டி.சியை பெற்றுக் கொண்டு மாற்று பள்ளியில் சேர்ந்துள்ளனர். இந்தச் சூழலில் அந்தப் பள்ளியை அரசே நடத்த முன் வருவதில் என்ன சிக்கல் இருக்க முடியும் எனத் தெரியவில்லை.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்தில் களத்தில் இறங்கி அரிய தகவல்களை நக்கீரன் இதழ் வெளிக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது என்பதால் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. நக்கீரன் தலைமை நிருபர் பிரகாஷும், போட்டோகிராபர் அஜித்தும் கொலை வெறியுடன் தாக்கப்பட்டுள்ள விவகாரத்தில் நேரடியாக 10 நபர்கள் களத்தில் இருந்த நிலையில், ஐந்து பேர் மாத்திரமே கைதாகியுள்ளனர்! ராஜசேகர், பாலகிருஷ்ணன், தீபன் சக்கரவர்த்தி, செல்வகுமார், செல்வராஜ் ஆகியோர் மட்டுமே கைதாகியுள்ளனர். இதில் இருவர் பள்ளி முதலாளி ரவியின் சகோதரர் மகன்கள் என சொல்லப் படுகிறது. மற்றவர்கள் மீது வழக்கு மட்டும் போடப்பட்டுள்ளது. இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
களத்தில் கைதாகியுள்ள ராஜசேகர் என்ற நபர் தான் மாணவி ஸ்ரீமதி மரணத்தில் ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து நிர்வாகம் சார்பாக அடாவடிச் செயல்களில் ஈடுபட்டு வருபவர். இவர் மீது நிறைய குற்றப் பின்னணி உள்ளது.
மிகப் பெரிய கலவரம் வெடித்த நாளன்று பள்ளி கட்டிடத்திற்குள் நிறைய ரவுடி கூட்டத்தை இவர் தங்க வைத்திருந்தார் என உள்ளூர் மக்கள் ஊடகத்தினரிடம் தெரிவித்தனர். கலவரத்தை பயன்படுத்தி பள்ளியில் இருந்த அனைத்து தடயங்களையும் அழித்ததில் ராஜசேகரனின் அடியாட்கள் துரிதமாக செயல்பட்டுள்ளனர். அத்துடன் போராட்டத்திற்கு வந்தவர்களின் ஏராளமான இரு சக்கர வாகனங்களை எரித்து சாம்பலாக்கியதும் ராஜசேகர் கும்பல் தான்! இவ்வளவையும் செய்துவிட்டு, அன்றைக்கு தங்கள் கண்ணில் பட்ட அப்பாவி தாழ்த்தப்பட்ட இளைஞர்களாகப் பார்த்து அடித்து உதைத்து போலீசார் வசம் ஒப்படைத்ததும் இவர் தான்!
அதிமுகவின் ஒன்றியச் செயலாளராக இருக்கும் ராஜசேகர் ஒரு சாதி வெறியராக அப்பகுதி மக்களால் அறியப்பட்டவர். தீரன் சின்னமலை பேரவை என்ற அமைப்பின் தலைவரான – தற்போது சிறையில் உள்ள – யுவராஜின் கூட்டாளியாகவும் உள்ளார். இவரை அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்காவிட்டால், அதிமுகவிற்கு மற்ற சமூகத்தவரின் வாக்கு கிடைப்பது அரிதாகி விடும். அதிமுக என்பது ஏழை, எளிய கொங்கு வாழ் மக்களின் கட்சியா? அல்லது பணக்கார அடாவடி பள்ளிக் கூட நிர்வாகிகளின் கட்சியா? என்பதை எடப்பாடி பழனிசாமி எடுக்கப் போகும் நடவடிக்கை தான் சொல்லும்.
இவை ஒருபுறமிருக்க, கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே, அரசை மீறிய ஒரு ‘பவர்புல் அதிகார மையமாக’ அந்தப் பள்ளிக்கூடம் செயல்படுகிறதோ, என மக்களின் சந்தேகம் வலுத்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கான பயிற்சி களமாக விளங்கிய அந்தப் பள்ளியை காப்பாற்ற ஒன்றிய பாஜக அரசானது திமுகவிற்கு அழுத்தம் தந்திருக்க கூடும் என அனைத்து தரப்பு மக்களுக்கும் சந்தேகம் வரும் வகையில், அந்தப் பள்ளிக்கு ஆதரவாக மாநில அரசின் அதிகார மையங்கள் செயல்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம்.
அதனால், பத்திரிக்கையாளர்களை வன்முறையால் அடிபணிய வைக்கலாம் என அந்த பள்ளி நிர்வாகம் களத்தில் இறங்கி இருப்பது அப்பட்டமாக வெளிப்பட்டுவிட்டது. அந்தப் பள்ளி நிர்வாகத்திடம் உண்மை இல்லை. உண்மை உள்ளவர்கள் வன்முறையை நம்பமாட்டார்கள்! சம்பவம் நடந்தவுடன் டெல்லிக்கு ஓடிப் போய் ‘அரசியல் லாபி’ செய்ய மாட்டார்கள்! காவல் துறையினருக்கு கொங்கு திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து தினசரி ‘பிரியாணி சப்ளை’ செய்யும் தேவை அவர்களுக்கு ஏற்பட்டு இருக்காது.
தமிழக ஆட்சித் தலைமை இந்த சம்பவத்தில் எந்த பக்கம் நிற்கிறது என்பதைப் பொறுத்தே காவல்துறையின் செயல்பாடும் இருக்கும். நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞரின் செயல்பாடும் இருக்கும். இது வரை பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாகவே மாநில ஆட்சித் தலைமை இருந்து கொண்டுள்ளது என்பதே ஒட்டுமொத்த ஊடகம் மற்றும் தமிழக மக்களின் புரிதலாக உள்ளது!
முதலமைச்சர் ஸ்டாலின் வாய் திறக்க வேண்டும். ‘பணக்கார, செல்வாக்குள்ள பள்ளி நிர்வாகம் பக்கம் இந்த அரசு நிற்காது. நீதியை வேண்டும் மக்கள் பக்கம் தான் நிற்கிறோம்’ என்பதை நிருபிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டால், சரிந்து விழக்கூடிய அரசின் இமேஜை எவ்வளவு பாடுபட்டாலும் ஒரு போதும் தூக்கி நிறுத்த முடியாது.
பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும். சி.பி.சி.ஐ.டி போலீசார் சமரசமின்றி விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும். கலவரம் தொடர்பான வழக்கில் ராஜசேகரன் மற்றும் அவரது கூட்டாளிகளை கூண்டோடு கைது செய்ய வேண்டும். கலவரத்தில் சம்பந்தமில்லாமல் சாதிய வன்மத்துடன் கைது செய்யப்பட்ட ஏழை, எளிய இளைஞர்களை விடுவிக்க வேண்டும். கள்ளக்குறிச்சி இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். ‘ஒன்றிய அரசின் அழுத்தங்களுக்கு பணியாமல் நியாய உணர்வோடு தமிழக அரசு செயல்பட்டது’ என தமிழக மக்கள் திமுக அரசை கொண்டாடும் நிலை உருவாக வேண்டும். அனைத்தும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மனத் திட்பத்தை பொறுத்தே உள்ளது.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
கட்டுரையாளரின் பக்கத்திற்கு செல்ல கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்
https://aramonline.in/10580/attack-on-nakkeeran-prakash/
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு