பொதுத் துறை போக்குவரத்தை கைவிடுகிறது தமிழக அரசு!
அறம் இணைய இதழ்
aramonline.in /23336/transport-privation-dmk-govt/
பொதுத் துறைகளை தனியார்மயமாக்கியே தீருவது என்ற தணியாத தாகத்தில் செயல்பட்டு வரும் கட்சி பாஜக மட்டுமே என இது வரை நாம் நம்பியது தப்பாகி விட்டது. இதோ, பாஜக காட்டிய வழியில் தப்பாமல் நடைபோடுகிறது திமுக அரசு. போக்குவரத்து கழகத்தில் தனியார் ஆதிக்கம் தழைத்தோங்க வழி சமைத்த தமிழக அரசு;
தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்புகளையும் , போராட்டங்களையும் மீறி போக்குவரத்து துறையை படிப்படியாக தனியார்மயமாக்கி வருவதில் முன்னேறிக் கொண்டிருக்கிறது திமுக அரசு.
தமிழகத்தில், எட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம், 20 ஆயிரத்து 634 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும், ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்களில் பயணிக்கின்றனர். தமிழக போக்குவரத்துதுறை நஷ்டத்தில் இயங்குகிறதாம். ஆகவே அதை சுமார் 40 சதவிகிதம் தனியார்மயமாக்குவது என முடிவெடுத்து மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, திமுக அரசு.
இருப்பதிலேயே மிகவும் லாபகரமானது டிரான்ஸ்போர்ட் . எந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனமும் நஷடப்படுவதில்லை. ஆனால், அரசு பொதுத் துறையை லாபமாக நடத்துவதற்கு அரசியல் குறுக்கீடுகள் இருக்கக் கூடாது. அதை அரசியல் ஆதாயங்களுக்காகவும் பயன்படுத்தக் கூடாது. திமுகவின் அரசியல் ஆதாயத்திற்காக கட்சிக்காரர்களுக்கு வேலை போட்டுத் தரவும், பெண்களுக்கு இலவச பயணம் என அறிவித்து ஓட்டு அறுவடை செய்வதற்கும் மட்டும் பொதுத் துறை தேவை. ஆனால், அதை கமிஷன் அடிக்க முடியுமென்றால், தனியாருக்கு தாரை வார்ப்போம் என்றால் எப்படி?
தனியாருக்கு தாரை வார்த்தால் பெண்களுக்கு என இயக்கப்படும் விடியல் பேருந்துகள் விடை பெற்று சென்றுவிடும். முன்னைக் காட்டிலும் அதிக கட்டணம் தந்து மகளிர் பயணப்பட வேண்டும்
மத்திய, மாநில அரசுகளுக்கு, போக்குவரத்து கழகங்கள், டீசலுக்கு பல நூறு கோடிகள் வரி செலுத்து கிறது. மேலும் மோட்டர் வாகன வரியாகவும், தேசிய நெடுஞ்சாலை நுழைவு வரியாகவும், ஆண்டு தோறும், வரியென ஆயிரம் கோடிகளுக்கும் அதிகமாக அள்ளித் தருகிறது, இவை எல்லாம் தொழிலாளர்கள் உழைப்பால் தான் சாத்தியமானது. ஆனால், அந்த தொழிலாளர்களை பாதுகாக்க விரும்பவில்லை திமுக அரசு.
தனியாரிடம் இருந்த பொதுத் துறையை பொதுத் துறையாக மாற்றியவர் கருணாநிதி. அதன் மூலம் கிராமப் புறங்களுக்கு கூட பேருந்து சர்வீஸ் கிடைத்தது . கல்வி முன்னேற்றத்திற்கும், சமூக வளர்ச்சிக்கும் இது உதவியது. ஆனால், ஸ்டாலின் அரசு பொறுப்பேற்ற இந்த நான்கு வருடங்களில் போக்குவரத்து துறையில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட பேருந்துகள் குறைக்கப்பட்டன. இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட வழித்தடங்களில் பேருந்துகள் செல்வது நிறுத்தப்பட்டுள்ளன.. ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களின் வேலை பறிபோய் உள்ளது. இதெல்லாம் பொதுத் துறை போக்குவரத்தை தனியார்மயமாக்க படிப்படியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் என ஏ.ஐ.டி.யு.சி மற்றும் சி.ஐ.டி.யு போன்ற அமைப்புகள் போர்க் குரல் கொடுத்து போராடி வருகின்றன. ஆனால், இதை கொஞ்சமும் சட்டை செய்யாமல் செய்வதை செய்து கொண்டே போகிறது, ஸ்டாலின் அரசு.
முதலில் புறநகர் பகுதிகளில் மினி பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி என்பது வளர்ந்து, தற்போது சென்னை நகருக்குள்ளேயே மின்சார பேருந்துகளை தனியார் இயக்க அனுமதிக்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு வருமானத்தை விட இழப்புகளே அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. காரணம், ஒரு கி.மீ இயங்க தனியாருக்கு அரசு தரக்கூடிய பணம் ரூபாய் 77.16 பைசாவாகும். இதுவே குளிர்பதன பேருந்து என்றால், ரூபாய் 86.86 பைசாவாகும். அதிக எண்ணிக்கையில் பயணிகள் ஏறினால் தான் இதற்கு மேல் வருமானம் கிடைக்கும். குறைந்த பயணிகளுக்காக இயக்கப்படும் போது நஷ்டமாகும். எனவே, அந்த நஷ்டத்தை தவிர்க்க, அந்த பேருந்தை அதிக பயணிகள் வராத நேரங்களில் விட வேண்டாம் என முடிவுக்கு வர வாய்ப்புள்ளது.
பொதுதுறை நிறுவனங்களில் நேரடியாக வேலை கிடைக்கும் போது சமூக நீதி அங்கே அரங்கேறும். இனி தனியார் கைகளுக்கு போய்விட்டதனால், அதெல்லாம் செல்லுபடியாகாது. அதுவும் அத்துக் கூலிக்கு தான் ஒப்பந்தபணி தருகிறார்கள் தனியார்கள். இப்படி தனியாரின் உழைப்பு சுரண்டலுக்கு தோள் கொடுப்பதா சமூக நீதி?
மின்சாரப் பேருந்துகளுக்கு நகரும் போது, அதை ஏன் தமிழக போக்குவரத்து துறையே செய்யக் கூடாது? தற்போது இருக்கும் ஊழியர்களுக்கு அதை இயக்கத் தெரியாது என்ற பொருத்தமில்லாத காரணத்தை சொல்கிறார், அமைச்சர். மின்சாரப் பேருந்துகளை இயக்கும் பயிற்சியை ஏற்கனவே இருக்கும் ஓட்டுனர்கள் ஓரிரு நாளில் கற்றுக் கொண்டு அசத்தி விடுவார்கள். இது ஒன்றும் கம்ப சூத்திரமல்ல.
தீபாவளி, பொங்கல் காலகட்டத்திலும் முக்கியமான விஷேச தினங்களிலும் தனியாரிடம் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து மக்கள் சம்பாதிப்பதை எல்லாம் தனியார் முதலாளிகளுக்கு சமர்ப்பணம் செய்வது 50 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சும் தமிழக போக்குவரத்து கழகத்திற்கு இழிவல்லவா?
இப்படித் தான் தனியாரிடம் மின்சாரக் கொள்முதல், தனியாரிடம் மின்சார விநியோகம் எனக் கொடுத்து மின்சாரத் துறையை மீள முடியாத பெரும் நட்டத்திற்கு தள்ளிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. அதே நிலையை போக்குவரத் துறைக்கும் ஏற்படுத்தவே தனியார்மயமாக்கம் துணை போகும்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
https://aramonline.in/23336/transport-privation-dmk-govt/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு