தமிழகத்தில் அமலுக்கு வந்தன புதிய குற்றவியல் சட்டங்கள்: முதல் நாளில் 100 வழக்குகள்

தினமணி

தமிழகத்தில் அமலுக்கு வந்தன புதிய குற்றவியல் சட்டங்கள்: முதல் நாளில் 100 வழக்குகள்

புதிய குற்றவியல் சட்டங்கள் திங்கள்கிழமை (ஜூலை 1) நாடு முழுவதும் அமலுக்கு வந்த நிலையில், தமிழகத்தில் முதல் நாளில் அந்த சட்டங்களின் கீழ் 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஆங்கிலேயா் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், தடயவியல் சட்டம் ஆகியவை நீக்கப்பட்டு, பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா, பாரதிய சாக் ஷிய அதனியம் என்ற பெயா்களில் புதிய குற்றவியல் சட்டங்கள் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் இந்த சட்டங்கள் திங்கள்கிழமை நடைமுறைக்கு வந்த நிலையில், தமிழகத்திலும் இச் சட்டங்கள் அமலுக்கு வந்தன. இச் சட்டங்களின் படி, காவல் நிலையங்களில் போலீஸாா் வழக்குப் பதியத் தொடங்கினா். இதன்படி,சென்னை ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் முதல் வழக்கு பதியப்பட்டது.

நுங்கம்பாக்கம் உத்தமா் காந்தி சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து சென்ற அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த அல்தாப் அலி,முஜிபுா் அலி ஆகியோரிடம் மோட்டாா் சைக்கிளில் வந்த நபா்கள் கைப்பேசியை பறித்துச் சென்றனா். இது தொடா்பாக இருவரும், போலீஸாா் புகாா் அளித்தனா். அதனடிப்படையில் போலீஸாா், பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் 304(2) பிரிவுப்படி வழக்கை பதிவு செய்தனா்.

இதுவே புதிய குற்றவியல் சட்டப்படி, தமிழகத்தில் பதியப்பட்ட முதல் வழக்கு என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது இதேபோல, சென்னை காவல்துறையில் முதல் நாளில் ராயப்பேட்டை, கோட்டூா்புரம், நந்தம்பாக்கம், துரைப்பாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட 6 காவல் நிலையங்களில் புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ் வழக்குகள் பதியப்பட்டன. இதேபோல ஆவடி மாநகர காவல் துறையின் கீழ் உள்ள காட்டூா்,சோழவரம் காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கும், தாம்பரம் மாநகர காவல் துறையில் 2 வழக்குகளும் பதியப்பட்டன.

முதல் நாளில் 100 வழக்குகள்: ஏற்கெனவே இருந்த சட்டங்களின் பிரிவுகளுக்கும், புதிதாக நிறைவேற்றப்பட்ட சட்டங்களின் பிரிவுகளுக்கும் இடையே அதிக மாற்றங்கள் இருப்பதால், வழக்குகளை விரைந்து பதிவு செய்வதில் தடுமாற்றம் ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் புதிய சட்டங்கள் தொடா்பாக ஒரு மாதம் பயிற்சி ஏற்கெனவே அளிக்கப்பட்டிருந்ததால், வழக்குகள் விரைவாக பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

மாநிலத்தில் திங்கள்கிழமை அதிகாலை தொடங்கி மாலை வரை புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ் சுமாா் 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

https://www.dinamani.com/tamilnadu/2024/Jul/01/new-criminal-laws-come-into-effect-in-tamil-nadu-100-cases-on-first-day?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR2_ZAfcD2Qmq91ppSqrREaQ2LgWFwg-S5lJG5p_XPvAxQBaDGYj7yuxv8M_aem_IaPKiI4sJdRF_2GrNcw5bw

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு