பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பதாக அச்சுறுத்திய ட்ரம்ப்: சீனா எதிர்வினை

இந்துதமிழ் திசை

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பதாக அச்சுறுத்திய ட்ரம்ப்: சீனா எதிர்வினை

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ள நிலையில், ‘பிரிக்ஸ் நாடுகள் மோதலை விரும்பவில்லை’ என்று சீனா எதிர்வினையாற்றியுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கூடுதல் வரி அச்சுறுத்தலுக்கு பதிலளித்துள்ள சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், “வர்த்தகம் மற்றும் வரிவிதிப்பு போர்களில் வெற்றியாளர்கள் இல்லை. அதிகளவில் வரி விதிக்கும் போக்கு முன்னேற்றத்துக்கான எந்த வழியையும் வழங்காது என்று சீனா தனது நிலைப்பாட்டை மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வருகிறது.” என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த நிங், “அதிகளவு வரிகளை விதிப்பது யாருக்கும் பலனளிக்காது” என்று கூறினார்

 

முன்னதாக, பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்திருந்தார். அவர், “பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும். இதில் எந்தவொரு மாற்றத்துக்கும் இடமில்லை. இந்த எச்சரிக்கை மீது கவனம் செலுத்துவோர்க்கு நன்றி.” என்று பதிவிட்டிருந்தார். இருப்பினும், எந்த மாதிரியான செயல்களை / முடிவுகளை அமெரிக்க விரோதக் கொள்கைகள் என்று கருதுகிறார் என ட்ரம்ப் தெளிவுபடுத்தவில்லை.

இந்நிலையில், பிரிக்ஸ் நாடுகள் மோதலை விரும்பவில்லை என்று சீனா பதிலளித்துள்ளது கவனம் பெறுகிறது.

அமெரிக்கா, ட்ரம்ப் பெயரில்லாது கண்டனம்! பிரிக்ஸ் கூட்​டமைப்​பின் 2 நாள் உச்சி மாநாடு பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் நேற்று தொடங்கியது. பிரிக்ஸ் தலைவர்கள் இணைந்து ரியோ டி ஜெனிரோ பிரகடனத்தை வெளியிட்டனர். அதில், கட்டற்ற வரிவிதிப்பு சர்வதேச வர்த்தகத்துக்கு ஆபத்தானது என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்தப் பிரகடனத்தில் வரி விதிப்புடன் தொடர்புபடுத்தி அமெரிக்கா, டொனால்டு ட்ரம்ப் என்று வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

.

மேலும், பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், ஈரானிய அணுசக்தி மற்றும் ராணுவ தளங்கள் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களைக் கண்டித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இந்த தாக்குதல்கள் “சட்டவிரோதமானது” என்றும், சர்வதேச சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

 

பிரிக்ஸ் கூட்​டமைப்பு 2009-ம் ஆண்​டில் தொடங்​கப்​பட்​டது. இதில் பிரேசில், ரஷ்​யா, இந்​தி​யா, சீனா, தென் ஆப்​பிரிக்​கா, எகிப்​து, எத்​தி​யோப்​பி​யா, ஈரான், ஐக்​கிய அரபு அமீரகம், இந்​தோ​னேசியா ஆகிய நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்ளன.

(வெற்றி மயிலோன்)

இந்து தமிழ் திசை

https://www.hindutamil.in/news/world/1368491-trump-threatens-to-impose-additional-tariffs-on-brics-member-countries-china-reacts.html

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு