நேரடி வெளிநாட்டு முதலீட்டு (FDI) விதிகளை சீனாவுக்காக தளர்த்தியுள்ளது மோடி அரசு

அரசின் அனுமதியே இல்லாமல் 10% வரையிலான பங்குகளை வைத்திருக்க அனுமதி - இந்தியா டுடே

நேரடி வெளிநாட்டு முதலீட்டு (FDI) விதிகளை சீனாவுக்காக தளர்த்தியுள்ளது மோடி அரசு

சீனா உள்ளிட்ட எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் அண்டை நாட்டு நிறுவனங்களுக்கான நேரடி வெளிநாட்டு முதலீட்டு (FDI) விதிகளைத் தளர்த்தியுள்ளது இந்தியா. இதன் மூலம் அரசின் முன் அனுமதியின்றியும் கூட குறிப்பிட்ட அளவிலான முதலீடுகளை செய்ய முடியும். இந்தியாவுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளில் சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூடான், மியான்மர் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை அடங்கும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாயன்று (10.03.2026) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மாற்றப்பட்ட கொள்கையின் கீழ், இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளிலிருந்து 10% வரை பயனடைவு உரிமை (beneficial ownership) கொண்ட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரம்புக்குட்பட்டு தானியங்கி வழிமுறை (automatic route) மூலம் முதலீடு செய்ய இனி அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு முன்பு, இத்தகைய நாடுகளின் ஒரு பங்கு முதலீட்டிற்கு கூட அரசின் கட்டாய அனுமதி தேவைப்பட்டது. அண்டை நாடுகளின் முதலீட்டாளர்கள் இந்திய நிறுவனங்களைச் சந்தர்ப்பவாதமாக கையகப்படுத்துவதைத் தடுப்பதற்காக, கோவிட்-19 பெருந்தொற்றின் போது 2020-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 'பிரஸ் நோட் 3' (Press Note 3) விதியை இந்த கொள்கை மாற்றம் காலாவதியாக்குகிறது.

புதிய விதிகள் கூறுவது என்ன?

இக்கொள்கையானது,

"பயனடைவு உரிமை" (beneficial ownership) — அதாவது ஒரு முதலீட்டை உண்மையாக வைத்திருக்கும் அல்லது கட்டுப்படுத்தும் நபர் அல்லது நிறுவனம் — என்பதற்குத் தெளிவான விளக்கத்தை அறிமுகப்படுத்துகிறது; இது இந்தியாவின் பணமோசடி தடுப்பு விதிகளின் கீழ் பயன்படுத்தப்படும் அளவுகோல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. 

எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளின் முதலீட்டாளர்களில் 10% வரை கட்டுப்பாடற்ற பங்குகளை (non-controlling stakes) வைத்திருப்பவர்களின் முதலீடுகள் இப்போதும் கூட அப்படியே தொடரும். இருப்பினும், முதலீட்டைப் பெறும் இந்திய நிறுவனம் இது தொடர்பான விவரங்களை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையிடம் (DPIIT) தெரிவிக்க வேண்டும்.

குறிப்பிட்ட மூலோபாய உற்பத்தித் துறைகளில் அனுமதி தேவைப்படும் முதலீடுகளுக்கு விரைவான அனுமதிகளையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. மூலதனப் பொருட்கள், மின்னணு மூலதனப் பொருட்கள், மின்னணு பாகங்கள், பாலிசிலிக்கான் மற்றும் இங்காட்-வேஃபர் (ingot-wafer) உற்பத்தி போன்ற துறைகளில் இந்த அண்டை நாடுகளின் முதலீடுகளை உள்ளடக்கிய திட்டங்கள் இப்போது 60 நாட்களுக்குள் பரிசீலிக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. நிறுவனங்கள் கூட்டுத் திட்டங்களை (joint ventures) உருவாக்கவும், புதிய தொழில்நுட்பங்களைப் பெறவும், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் விரைவாக இணையவும் இந்த விரைவான அனுமதி உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சந்தர்ப்பங்களிலும் கூட, இந்திய நிறுவனத்தின் பெரும்பான்மை உரிமையும் கட்டுப்பாடும் இந்தியக் குடிமக்கள் அல்லது அவர்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களிடமே இருக்க வேண்டும்.

விதிகள் ஏன் மாற்றப்பட்டன?

அண்டை நாட்டு முதலீட்டாளர்கள் சிறிய அளவிலான கட்டுப்பாடற்ற பங்குகளை வைத்திருக்கும் உலகளாவிய நிதியங்களிலிருந்து (குறிப்பாக தனியார் ஈக்விட்டி மற்றும் துணிகர மூலதன நிதிகள்) வரும் முதலீடுகளை முந்தைய கட்டுப்பாடுகள் பெருமளவு பாதித்ததாக அரசு தெரிவித்துள்ளது. விதிகளைத் தளர்த்துவதன் மூலம், வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்கவும், தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை ஊக்குவிக்கவும், இந்தியாவில் உற்பத்தி வளர்ச்சியை அதிகரிக்கவும் முடியும் என அரசு நம்புகிறது.

இந்த நடவடிக்கை அரசின் 'தொழில் செய்வதை எளிதாக்குதல்' (ease of doing business) நிகழ்ச்சி நிரலுக்கும், உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துவதையும் இறக்குமதி சார்ந்திருப்பைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்ட விரிவான 'ஆத்மநிர்பர் பாரத்' (Atmanirbhar Bharat) திட்டத்திற்கு உதவும் என்றும் அரசு எதிர்பார்க்கிறது.

2020 இராணுவ மோதல்களுக்குப் பிறகு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்

கடந்த பத்தாண்டில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மிகக் கடுமையான இராணுவ மோதலான கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு, சீனாவுடனான பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து 2020 ஏப்ரலில் இந்தியா FDI விதிகளைக் கடுமையாக்கியது. முந்தைய விதியின்படி, அண்டை நாடுகளிலிருந்து வரும் எந்தவொரு முதலீடும் (அல்லது பயனடைவு உரிமையாளர் அத்தகைய நாடுகளில் கொண்டிருக்கும் முதலீடுகள்) அரசின் அனுமதியைப் பெற வேண்டியிருந்தது. பெருந்தொற்றின் போது நலிவடைந்த இந்திய நிறுவனங்கள் கையகப்படுத்தப்படுவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக இருந்தது.

விமர்சகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்

இந்த நடவடிக்கையின் மூலஉத்தி ரீதியான தாக்கங்கள் குறித்து ஆய்வாளர்கள் கவலை எழுப்பியுள்ளனர். மூலஉத்தி விவகார நிபுணர் பிரம்மா செல்லானி கூறுகையில், முதலீட்டு விதிகளைத் தளர்த்துவது என்பது 2020-இல் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெறுவதற்குச் சமம் என்றார். எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட செல்லானி, இந்த நடவடிக்கை பெரும்பாலும் சீனாவைக் குறிவைத்தே எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கானதொரு பாரிய மாற்றத்தை இது குறிப்பதாகவும் கூறினார்.

விசா வழங்குவதை எளிதாக்குவது, ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு நேரடி பயணிகள் விமானங்களை மீண்டும் தொடங்குவது, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த சில எல்லை வர்த்தகப் பாதைகளை மீண்டும் திறப்பது உள்ளிட்ட கடந்த சில மாதங்களில் அரசு எடுத்த பிற நடவடிக்கைகள் இந்திய-சீன உறவுகளில் படிப்படியான முன்னேற்றத்தைக் காட்டுவதாக அவர் வாதிட்டார்.

"மின்சாரக் கட்டமைப்பு முதல் மின்னணு வாகன (EV) கட்டமைப்புகள் வரையிலான உணர்திறன் வாய்ந்த துறைகளில் அதிகப்படியான முதலீடானது சீன அரசுக்கு இந்திய கொள்கைகள் மீது புதிய பொருளாதார செல்வாக்கை கொண்ட 'கில் ஸ்விட்சுகளை' (kill switches) வழங்கக்கூடும்," என்று செல்லானி எச்சரித்தார். விநியோகச் சங்கிலிகள், முக்கியமான உள்கட்டமைப்புகள் மூலம் ஆழமான பொருளாதார ஒருங்கிணைப்பு சீன அரசுக்கு இந்தியாவின் மீது கூடுதல் செல்வாக்கை வழங்கும் என்றும் அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், "முரண்பாடு அப்பட்டமாகத் தெரிகிறது; 2020 ஊடுருவல்களுக்குப் பிறகு, சீனாவிடமிருந்து விலகி இருக்க (decouple) இந்தியா முயன்றது; அதற்குப் பதிலாக, இப்போது சீன விநியோகச் சங்கிலிகளைச் சார்ந்து இருக்கும் நிலை அதிகரித்துள்ளது, இது சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப்பற்றாக்குறையை மேலும் அதிகரிக்க செய்கிறது — இந்த வர்த்தகப் பற்றாக்குறை ஏற்கனவே இந்தியாவின் மொத்த பாதுகாப்புத் துறை பட்ஜெட்டை தாண்டிவிட்டது" என்றார்.

இந்தியா-சீனா வர்த்தக உறவுகள்

2020-க்குப் பிறகு முதலீடுகள் மீதான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகம் தொடர்ந்து வேகமாக வளர்ந்தே வருகிறது. சீனா தற்போது இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக உள்ளது. 2024-25-இல் இருதரப்பு வர்த்தகம் 127.7 பில்லியன் டாலர்களை எட்டியது. இருப்பினும், இந்த உறவு சீனாவுக்கு சாதகமாகவே பெரிதும்  உள்ளது.

2024-25-இல் சீனாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி 113.45 பில்லியன் டாலர்களாக இருந்த நிலையில், ஏற்றுமதி 14.25 பில்லியன் டாலர்களாக மட்டுமே இருந்தது, இதனால் 99.2 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டது. நடப்பு நிதியாண்டின் (2025-26) ஏப்ரல்-ஜனவரி காலப்பகுதியில், சீனாவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி 15.88 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது, அதே சமயம் இறக்குமதி 108.18 பில்லியன் டாலர்களாக அதிகரித்து, 92.3 பில்லியன் டாலர் பற்றாக்குறையை ஏற்படுத்தியது.

இந்திய FDI-இல் சீனாவின் பங்கு

வலுவான வர்த்தக உறவுகள் இருந்தபோதிலும், இந்தியாவில் சீனாவின் நேரடி முதலீடு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. ஏப்ரல் 2000 முதல் டிசம்பர் 2025 வரை மொத்த FDI வரத்தில் சீனாவின் பங்கு 0.32% மட்டுமே. அதாவது சுமார் 2.51 பில்லியன் டாலர் மட்டுமே ஆகும். இந்தியாவில் முதலீடு செய்யும் நாடுகளின் வரிசையில் சீனா 23-வது இடத்தில் இருப்பதாக அரசு புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.indiatoday.in/business/story/india-eases-fdi-rules-china-border-nations-10-percent-stake-without-approval-2880027-2026-03-10