இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி: புதிய காலனிய வடிவில் ஒட்டச் சுரண்டப்படும் செல்வ வளங்கள் பழைய காலனியாதிக்கத்தை விட மிகக் கொடியது

பி.ஜே.ஜேம்ஸ்

இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி: புதிய காலனிய வடிவில் ஒட்டச் சுரண்டப்படும் செல்வ வளங்கள் பழைய காலனியாதிக்கத்தை விட மிகக் கொடியது

“பொற் காலம்”, “வளர்ந்த பாரதம்” என்று வாய்ச்சவடால் அடிப்பதை மோடி ஆட்சி நிறுத்திய பாடில்லை; இரண்டாம் உலகப் போருக்கு பின்பு புதிய காலனியாதிக்கத்தின் பொருளாதார பிரிவாக செயல்பட்டு வரும் ஐ.எம்.எஃப். அமைப்பும், பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு ஆலோசனை வழங்கும் புளூம்பர்க் போன்ற ஏஜென்சிகளும் எதிர் வருகிற நாள்களில் இந்தியாவின் ஜிடிபி கடுமையாக சரிவடையும் என்று கணித்துள்ளன.  குறிப்பாக தற்போதைய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியுடன் தொடர்புப்படுத்திக் கூறப்படுகிறது; இது போன்றதொரு ஜிடிபி வீழ்ச்சி கொரோனா பெருந்தொற்று காலத்தில்தான் பார்க்க முடிந்தது, ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 86 என்ற நிலைக்கு சரிந்திருப்பது வரலாறு காணாத வீழ்ச்சியாக கருதப்படுகிறது. அடுத்தடுத்த மாதங்களில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 90க்கு கீழ் சரிவதற்கும் வாய்ப்புள்ளது என்று ஹாங்காங்கில் உள்ள கேவக்கல் ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. இந்தாண்டில் இன்னும் அதிகமாக சரிந்து ஒரு டாலர் 95 ரூபாய் என்ற நிலைக்கு வருவதற்குகூட வாய்ப்புள்ளது என்று கருத்துரைத்துள்ளதோடு, “அவ்வாறு நடக்க வாய்ப்பே இல்லை” என்று மறுக்க முடியாது என்பதே கேவக்கல் ஆராய்ச்சி மையத்தின் கருத்தாக இருக்கிறது.

2025, ஜனவரி 15 அன்று, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 86.63 என்ற நிலைக்கு சரிந்தது. உண்மையான சந்தை மதிப்பிற்கேற்ப நாணயங்களின் மதிப்பை மாற்றயமைப்பதென்ற தவிர்க்க முடியாத நடவடிக்கையின் காரணமாக, இந்தியாவின் ஏற்றுமதியை ஊக்குவிப்பது, ஏற்றுமதியை சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு சேவை செய்வது போன்ற இன்றியமையாத நடவடிக்கையின் காரணமாகத்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைகிறது என்று அரசின் கொள்கை வகுப்பாளர்களும், அறிவாளர்கள் குழுவும் நியாயப்படுத்தி வருவதென்பது மன்மோகன் சிங் ஆட்சியில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்த போது மோடி முன்வைத்த விமர்சனத்திற்கு நேர் எதிராக உள்ளது. “அதிகமாக வீழ்வது யார் என்பதுதான் போட்டி” என்று ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியையும், காங்கிரசின் வீழ்ச்சியையும் ஒப்புமைப்படுத்தி நக்கலாக விமர்சித்திருந்தார் அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி. “டெல்லியிலுள்ள ஆட்சியாளர்கள் நாட்டின் பாதுகாப்பு பற்றியும், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி பற்றியும் கவலை கொள்ளாமல் இருப்பது நம் நாட்டின் சாபக்கேடு,” என்றுகூட பேசியிருந்தார். ஆகஸ்ட் 2013ல், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 64 என்ற நிலைக்கு சரிந்த போது, நாணய வீதத்தில் ஸ்திரத்தன்மையை கொண்டு வருவதற்கு உண்டான நடவடிக்கையை எடுப்பதற்கு “வக்கற்ற” மத்திய அரசாங்கம் என்று விமர்சித்திருந்தார். “கடந்த மூன்று மாதத்தில் மட்டும் ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. ஆனால், கடந்த மூன்று மாதங்களில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்துவதற்கு வேண்டிய எந்த முயற்சியையும் இந்த அரசாங்கம் செய்யவில்லை. இதேபோல் ரூபாய் மதிப்பு சரிந்து கொண்டே போனால், இந்தியாவின் பலவீனத்தை மற்ற நாடுகள் பயன்படுத்திக் கொள்வர்,” என்று மோடி விமர்சித்திருந்தார்.

ஆனால், இப்போது இருப்பது போலல்லாமல், மன்மோகன் சிங் ஆட்சியில் சில சாதகமான நிதிக்கூறுகள் இருந்துள்ளன, இதைப் பயன்படுத்தி அந்நிய செலாவணி சந்தையில் ஆர்.பி.ஐ. தலையிட்டு ரூபாய் மதிப்பு சரிவடைவதை தடுப்பதற்கான வாய்ப்புகளும் அப்போது இருந்தன என்பதால் 2014ல், மோடி பிரதமராக பதவிக்கு வரும் பொழுது ரூபாய்–டாலர் நாணய மாற்று விகிதம் ஒரு டாலருக்கு 58.58 ரூபாயாக கட்டுப்படுத்தப்பட்டது. எனினும், தற்போது ரூபாய் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து, 86.63 என்ற நிலைக்கு வந்துள்ளது. மோடி கும்பலின் பொருளாதாரக் கொள்கைகளும், ஒட்டுமொத்த பாசிச ஆட்சியுமைப்புமே முன்னிலும் அதிகமாக “ஆளுவதற்கு தகுதியற்ற நிலையை” வெளிப்படுத்தி வருவதோடு, மன்மோகன் சிங் கும்பலின் கொள்கைகளைவிட பல மடங்கு தீவிர வலதுசாரிய, புதிய தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தி வருவதைப் பார்க்க முடிகிறது. ஒருபுறம் இந்து ராஜ்ஜிய பிரச்சாரத்தை கட்டமைப்பதன் மூலம் அனைத்து பிரச்சனைகளையும் மடைமாற்றம் செய்யும் வேலையை கார்ப்பரேட்–காவி ஊடகங்கள் செய்து வருகிற வேளையில் அரசாங்கத்தின் பிரதிநிதிகள்கூட “ஏற்றுமதியை சார்ந்த” பொருளாதார வளர்ச்சி மாடலில் ரூபாய் மதிப்பு சரிவடைவதால் என்னென்ன நன்மைகளெல்லாம் கிடைக்கக்கூடும் என்றுகூட தொடர்ச்சியாக வலியுறுத்தி  வருகின்றனர். இந்தப் பின்னணியை கவனத்தில் எடுத்துக் கொண்டு, வரலாறு காணாத அளவிற்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதற்கு வழிவகுத்த மோடி ஆட்சியின் நாணய மாற்று விகிதக் கொள்கை பற்றி சிலத் தெளிவான விளக்கங்களை அறிந்து கொள்வது சரியாக இருக்கும்.

நாணய மாற்று விகிதங்கள் மீது அதிக கட்டுப்பாடுகள் வைத்திருப்பது உட்பட நேருவின் அரசுத் துறையைச் சார்ந்த பொருளாதார வளர்ச்சி மாடல் ஒழிக்கப்பட்டப் பிறகும், மன்மோகன் சிங் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்த்திருத்தங்கள், பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறையில் இருந்த பொழுதுகூட நாணய மாற்று விகிதங்களில் உள்ள நிலையான மற்றும் நெகிழ்வான அம்சங்களை உள்ளடக்கிய “தவழும் மாறாச் செலாவணி விகித முறையே”(crawling peg system) இந்தியாவில் பின்பற்றப்பட்டு வந்தது. ஆர்.பி.ஐ.யால் முன்னரே தீர்மாணிக்கப்பட்ட விகித எல்லைக்குள்ளாக ரூபாயின் மதிப்பு ஏறி இறங்குவதற்கு இந்த முறையில் வழிவகை செய்யப்படுகிறது. திடீர் ஏற்ற இறக்கங்களை எதிர் கொள்வதற்கு பதிலாக காலப்போக்கில் மெல்ல மெல்ல நாணய மதிப்பை அராசங்கம் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பும் இந்த முறையில் உள்ளது. நேரு வளர்ச்சி மாடலில் நிலையான நாணய மாற்று விகிதம் இருந்தபோது பணமதிப்பை குறைக்கும் நடைமுறை(devaluation) இருந்ததற்கு மாறாக நாணய மதிப்பை உயர்த்துவதற்கோ அல்லது குறைப்பதற்கோ இதில் வாய்ப்பிருக்கிறது. அவ்வகையில், ‘தவளும் மாறாச் செலாவணி விகித’ முறை இருந்த காரணத்தால் ஓரளவிற்கு ரூபாயின் மதிப்பை கட்டுப்படுத்துவதற்கு வாய்ப்பிருந்தது. இதன் மூலமாகத்தான், 2013ல், ரூபாயின் மதிப்பு அதல பாதாளத்திற்கு செல்வதை தடுக்க முடிந்ததோடு, 2014ல் மோடி பிரதமராக வருவதற்கு முன்பு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை 58.58 என்ற அளவில் கட்டுப்படுத்த முடிந்தது. தற்போதுள்ள மோடி ஆட்சியில், அமெரிக்க டாலரை அளவிற்கு அதிகமாக சார்ந்து நிற்பதோடு, இந்திய ரூபாய் மீதான கட்டுப்பாடுகளை ஒட்டுமொத்தமாக தாரைவார்த்த காரணத்தால் ரூபாய் மதிப்பு அதல பாதாளத்திற்கு செல்வதை தடுப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை.

பாசிச மோடி கும்பலின் தீவிர வலதுசாரி அரசாங்கம் 2014ல் ஆட்சிக்கு வந்தவுடன் 65 ஆண்டு காலமாக இருந்து வந்த திட்டக் குழுவை கலைப்பது போன்ற பாரதூரமான நடவடிக்கைகளை முன்னெடுத்தது. கார்ப்பரேட் மூலதனத்துடன் அரசு ஒன்றிணைவதற்கு ஏற்ப சட்ட விதிமுறைகளை தளர்த்துவது, தாராளமயக் கொள்கைகளை புகுத்துவதன் ஒரு பகுதியாகத்தான் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. நாணய மாற்று விகிதம் தாறுமாறாக அல்லது தொடர்ச்சியாக ஏற்ற இறக்கங்களை சந்திக்கும்போதுகூட கைகட்டி வேடிக்கை பார்க்கும் அமைப்பாக இந்திய ரிசர்வ் வங்கியை(ஆர்.பி.ஐ.) மாற்றும் வகையில் முற்றிலும் நெகிழ்வான அல்லது மாறுநிலை நாணய விகித முறையும் மோடி ஆட்சிக்கு வந்தபோதுதான் புகுத்தப்பட்டது. இது அமெரிக்காவிலிருக்கும் நாணய சூதாடிகளுக்கும், ஊக வணிகர்களுக்கும்(அதானி, அம்பானி போன்ற அவர்களின் இளைய பங்காளிகளுக்கும்) கொள்ளை இலாபம் பார்ப்பதற்கான அரிய வாய்ப்பை வழங்கியதோடு, பன்னாட்டு நிதிச் சந்தை, பன்னாட்டு வர்த்தககத்தில் திடீரென்று ஏற்படும் எந்தவொரு மாற்றமும் இந்தியாவை நேரடியாக பாதிக்கும் நிலைக்கு தள்ளியது. ரூபாய் மதிப்பு தொடர்ந்து கடுமையான சரிவை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதோடு, அந்நிய நாடுகளின் சந்தைகளை சார்ந்திருக்கும் உற்பத்தித் துறைகள் தீவிரமான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு கணிக்கவே முடியாத கடும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் நிலை உருவானது. “தவளும் மாறாச் செலாவணி முறை”யை மோடி அரசாங்கம் மொத்தமாக உதறித்தள்ளிய காரணத்தால் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு திடீர் வீழ்ச்சியை சந்திப்பதோடு, அடுத்தடுத்த பாதிப்புகளையும் எதிர்கொண்டு வருகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எவ்வளவுதான் குறைகள் இருந்தபோதிலும், தற்போது, மோடி ஆட்சியில் திடீரென்று, பெரும் சரிவை சந்திப்பது போன்ற நிகழ்வை தடுப்பதற்கு நாணய மாற்று விகிதத்தில் அவ்வப்போது சிற்சில மாற்றங்களை செய்வதற்குண்டான வாய்ப்பை அப்போதைய மன்மோகன் சிங் ஆட்சிக்கு இந்த செலாவணி முறைதான் வழங்கியது .

இப்படிப்பட்ட சூழலில்தான், சர்வதேச நாணயமாக புகுத்தப்பட்டிருக்கும் அமெரிக்க டாலருடன் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்காவிலுள்ள புதிய காலனிய சார்பு நாடுளின் நாணயங்களை பிணைத்து வைப்பதன் மூலமாக எவ்வாறு இரண்டாம் உலகப் போருக்கு பின்பு அமெரிக்கா தலைமையில் புதிய காலனியாதிக்கம் தொடர்கிறது என்பதை உலகத் தொழிலாளர்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் புரிந்து கொள்வது அவசியமானதாகிறது. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வருகிற தருவாயில் ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவிலுள்ள இந்தியாவும், இன்னப் பிற புதிய காலனிய நாடுகள் மீதும் வலுக்கட்டாயமாக சுமத்தப்பட்ட டாலர் மேலாதிக்கம் இன்றளவும் தொடர்கிற நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள ஏகாதிபத்திய நாடுகள், சீனா, ரஷ்ய ஏகாதிபத்தியங்கள் இத்தளையிலிருந்து முன்னமே தங்களை விடுவித்துக் கொண்டன. மேலும், பன்னாட்டு நிதிப் பரிவர்த்தனைகளிலும், வர்த்தகத்திலும் டாலரின் பயன்பாட்டை கணிசமான அளவிற்கு குறைப்பது – உதாரணத்திற்கு எண்ணெய் வர்த்தகத்தில் அமெரிக்க டாலர் அல்லாத நாணயங்களை பயன்படுத்துவது – டாலரின் மேலாதிக்கத்திற்கு மாற்றாக பன்னாட்டு நாணய முறையை தோற்றுவிப்பது போன்ற விவாதங்கள் ஏற்கனவே தீவிரமாக பிரிக்ஸ் போன்ற கூட்டமைப்புகளில் நடந்து வருகிற போதிலும், உள்ளிருந்து கொண்டே குழிபறிக்கும் வேலையை மோடி ஆட்சி அடிக்கடி செய்வதை பார்க்க முடிகிறது.

பன்னாட்டு வர்த்தகத்திற்காகவும், மதிப்பளவை செய்வதற்கான தரநிலையாகவும் புதிய காலனிய நாடுகள் அமெரிக்க டாலரை கையிருப்பு நாணயமாக பயன்படுத்துவது எத்தனை காலத்திற்கு தொடர்கிறதோ, அவ்வளவு காலத்திற்கு சார்பு நாடுகள் மீது பல்வேறு வழிகளில் டாலரையே ஒரு பொருளாதாரப் பேராயுமதமாக அமெரிக்க நிதித் துறையால் பயன்படுத்த முடியும். 1944ல் பிரிட்டன் வுட்ஸ் ஒப்பந்தம் நிறைவேறியது முதல், உலகின் முதன்மையான கையிருப்பு நாணயமாக அமெரிக்க டாலர் ஏற்கப்பட்டது முதல் மேற்சொன்னவைதான் நடந்தேறி வருகிறது. இவற்றில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா போன்ற சார்பு நாடுகளின் நாணயங்களை வலுக்கட்டாயமாக மதிப்புக் குறைப்பு/மதிப்பிறக்கம் செய்வெதன்ற மிகப் பயங்கரமான ஆயுதத்தைத்தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் அடிக்கடி பயன்படுத்தி வருகிறது; இந்த உத்தியின் மூலமாகத்தான் புதிய காலனிய நாடுகளின் செல்வ வளங்கள் ஈவு இரக்கமின்றி அமெரிக்காவால் ஒட்டச் சுரண்டப்பட்டு, சூறையாடப்படுவதற்கு வழிவகுக்கிறது. குறிப்பிட்ட நாட்டின் நாணய மதிப்பு வலுக்கட்டாயமாக குறைக்கப்படும்போது/மதிப்பிறங்கும் போது புதிய காலனிய வழியில் செல்வ வளங்களை பெருமளவில் உடடினயாக இழக்கும் நிலைக்கு அந்நாடு தள்ளப்படுகிறது. 

உதாரணமாக, நாட்டின் பொருளாதாரத்தில் அரசின் தலையீடும், பொதுத்துறை நிறுவனங்களை அதிகமாக உருவாக்கப்படுவதும் உலகளவில் பொதுப் போக்காக இருந்த ‘முதலாளித்துவத்தின் பொற்காலம்’ என்று சொல்லப்பட்ட காலக்கட்டத்தில் அதாவது  உலகளவில் கீன்சிய பொருளாதாரக் கொள்கைகள் கால் நூற்றாண்டு காலமாக அமல்பபடுத்தப்பட்ட காலக்கட்டத்தில்கூட, நிலையான நாணய மாற்று விகித முறை பொதுவிதியாக இருந்தபோதுகூட, புதிய காலனிய சார்பு நாடுகளின் ஆட்சியாளர்களை பலவந்தப்படுத்தி வலுக்கட்டாயமாக நாணய மதிப்புகளை ஒரேயடியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் குறைக்கச் செய்ய முடிந்தது. இதற்கு 1966ம் ஆண்டு இந்திய ரூபாயின் மதிப்பு 57.5 சதவீதம் அளவிற்கு குறைக்கப்பட்ட போது நடந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வை உதாரணமாகச் சொல்லாம். ரூபாய் மதிப்பு குறைக்கப்பட்ட அக்கணமே ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 4.75 ரூபாயிலிருந்து 7.50 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அமெரிக்காவின் கட்டளைக்கு இணங்க உலக வங்கியால் நியமிக்கப்பட்ட பெல் தூதுக் குழு (Bell Mission) 1965ம் ஆண்டு வழங்கிய அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே இந்த மதிப்புக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் இயற்கை வளங்கள், மனித வளங்களின் விலையை மலிவாக்குவதன் மூலம் (அதாவது, இந்திய ரூபாயின் மதிப்பு குறையும்போது, குறைவான அமெரிக்க டாலரை கொடுத்து அதிகமான இந்திய சரக்குகளையும், வளங்களையும் விலைக்கு வாங்க முடியும்.)  அமெரிக்க மூலதனம் தங்குதடையின்றி இந்தியாவிற்குள் நுழைவதற்கு வழியமைத்து தருவதற்காகவே மதிப்பு குறைப்பு செய்யப்பட்டது. “மதிப்பு குறைப்பு நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் அகலத் திறக்கப்படும், இதன் மூலம் வீரியமிக்க அந்நிய மூலதனங்கள் உள்நுழைந்து பாரத மாதா விருத்தியடைவாள்”, என்று அப்போது திட்டக் குழுவின் துணைத் தலைவராக இருந்த  அசோக் மேஹ்தா கூறிய போது, “பாரதத் மாதா வன்புணர்வு செய்யப்படுவதாக” நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க் கட்சி கூறியிருந்தன.

1991ல் நரசிம்ம ராவ் – மன்மோகன் சிங் கும்பல் ஆட்சியில் புதிய பொருளாதார கொள்கைகள் ஏற்கப்பட்டு, நேருவின் அரசுத் துறையைச் சார்ந்த பொருளாதார வளர்ச்சி மாடலை முற்றிலுமாக கைவிட்ட பொழுது, அடுத்த மிகப் பெரிய மதிப்பு குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த முறையும், ரூபாய் மதிப்பை குறைப்பதற்கான கட்டளை ஐ.எம்.எஃப், உலக வங்கி மற்றும் புதிய பொருளாதாரக் கொள்கைகளை ஆதரிக்கக்கூடிய அமெரிக்க மையங்கள்தான் வழங்கியுள்ளன.  பேரின அளவிலும், சிற்றின அளவிலும், கட்டமைப்பு மற்றும் துறை சார்ந்த அளவிலும் ஒட்டுமொத்த பொருளாதாரமே மறசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்பதுடன், ரூபாய் மதிப்பை 22 சதவீதம் குறைப்பதற்கும் கட்டளையிட்டார்கள். இது குறுகிய கால லாபத்தை நோக்கமாகக் கொண்டு இரு நாடுகளுக்கிடையில் விரைவான பணப் புழக்கத்திற்கு வழிவகுத்ததால் நாணயச் சூதாடிகளின் இலாபம் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்தது; கூடவே, இந்தியாவின் மனித வளமும், இயற்கை வளமும் மலிவாக்கப்பட்டதால் இந்தியப் பொருளாதாரம் முன்னிலும் அதிகத் தீவிரத்தோடு ஒட்டச் சுரண்டப்பட்டது. இந்தியப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தோடு இணைக்கப்படுவதன், தாராளமயமாக்கப்படுவதன் ஒரு பகுதியாக நிலையான செலாவணி முறை ஒழிக்கப்பட்டு ‘தவளும் மாறாச் செலாவணி’ முறை புகுத்தப்பட்டது. முன்னமே குறிப்பிட்டது போல், இந்த முறையின்கீழ் ஆர்.பி.ஐ. அமைப்பால் ஓரளவிற்கு மட்டுமே கட்டுப்பாடுகளை கொண்டு வர முடியும்.

எனினும், தீவிர, வலதுசாரி மோடி கும்பலின் புதிய பாசிச ஆட்சியில் இன்று பண்பு வகைப்பட்ட மாற்றம் நடந்தேறியுள்ளது. கொள்கை முடிவுகள் எல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்வாக அறையில் எடுக்கப்படுவதும், முன்னிலும் அதிகமாக வெறுமனே கைகட்டி வாய்மூடி வேடிக்கை பார்க்கும் அமைப்பாக நாடாளுமன்றம் மாற்றப்பட்டிருப்பதென்பது கார்ப்பரேட் மூலதனத்திற்கும், புதிய தாராளமய அரசிற்கும் இடையில் மிக நெருக்கமான ஒன்றிணைவு இந்தியாவில் உருவாகியிருப்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. உற்பத்தி மூலதனத்திற்கு பதிலாக ஊக மூலதனமே பொருளாதாரத்தின் பிரதான கூறாகவும், கார்ப்பரேட்டுகளுக்கு சேவையாற்றுவதே அரசின் பணியாகவும் மாறியுள்ளது. செலாவணி துறையும் இந்த பொதுபோக்கிலிருந்து மாறி நிற்கவில்லை. முன்பு மத்தியிலிருந்த ஆட்சிகளோடு ஒப்பிடும்போது, அதாவது ‘தவளும் மாறாச் செலாவணி முறை’யின் கீழ் பெயரளவிற்காவது மத்திய வங்கி கட்டுப்பாடுகளை கொண்டு வர முடிந்த பழைய நடைமுறையுடன்  ஒப்பிடும்போது, 2014க்குப் பிறகிருந்து, அதிலும் குறிப்பாக மூன்றாவது முறையாக மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அதாவது இன்று, பன்னாட்டு கார்ப்பேரட்டு ஊக மூலதன சக்திளால் நிர்ணயிக்கப்படும் முற்றிலும் நெகிழ்வான அல்லது மாறுநிலை செலாவணி முறையையே இந்தியா கடைப்பிடித்து வருகிறது.

இதன் விளைவாக, முந்தைய கட்டுப்படுத்தப்பட்ட செலாவணி முறை இருந்த போது அரசாங்கமே அவ்வப்போது நாணய மதிப்புக் குறைப்பு நடடிவக்கையை எடுத்து வந்த நடைமுறையுடன் ஒப்பிட்டால், இன்று, எவ்வித அறிவிக்கப்பட்ட மதிப்புக் குறைப்பும் இல்லாமல், சந்தை சக்திகளால் தீர்மானிக்கப்படக்கூடிய மதிப்பு குறைப்பு நிகழ்வு என்பது தங்குதடையின்றி, தொடர்ந்து நடந்தேறி வருகிறது. இதன் வெளிப்பாடாகத்தான், 2014ல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 58.58 என்பதாக இருந்த நிலையிலிருந்து பாய்ச்சல் வேகத்தில் சரிந்து தற்போது 86.63 என்ற நிலைக்கு வீழ்ந்திருக்கிறது. இன்றும், டாலரின் நுகத்டியின்கீழ் கட்டுண்டு கிடக்கும் இந்திய ரூபாயின் மதிப்பு வழக்கத்திற்கு மாறான பலவீனமான நிலையில் இருக்கிறதென்று பன்னாட்டு முதலீட்டு ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள்கூட கணித்து வரும் நிலையில், பாசிச ஆட்சியை நடத்தி வரும் மோடி அன்று குஜராத் முதல்வராக இருந்த போது நாணயத்தின் மதிப்பே நாட்டின் மதிப்பு என்று கூறிவந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியமைத்த பிறகு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ந்துவிட்டதென்று அடிப்படையற்ற வாதத்தை முன்வைத்து பிரச்சனையை மடைமாற்றம் செய்து வருகிறார். கடந்தகாலங்களில், ஒரெயடியாக நாணய மதிப்புக் குறைப்பு செய்யப்பட்ட நிகழ்வோடு ஒப்பிடும்போது, அறிவிக்கப்படாத மதிப்புக் குறைப்பு நடந்து வரும் மோடி ஆட்சியில் பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் சொந்த நாட்டிற்கு இலாபத்தை திருப்பி எடுத்துச் செல்வது கடுமையாக அதிகரித்திருப்பதும், இறக்கமதி செய்யப்பட்ட சரக்குகள் மற்றும் சேவையின் அளவைவிட அதிமான அளவிற்கு சரக்குகளையும், சேவைகளையும் ஏற்றுமதி செய்ய வேண்டிய சுமை அதிகரிப்பதும், அந்நியக் கடன்களை திரும்பச் செலுத்துவதற்கான சுமை அதிகரிப்பதும் என அந்நிய செலாவணி செலுத்துகைக்கான சுமை ஒட்டுமொத்தமாக அதிகரிப்பதோடு, நாட்டின் அசல் செல்வ வளங்கள் இடைவிடாது தொடர்ச்சியாக வெளியேறுவதால் இந்திய செல்வ வளம் ஒட்டச் சுரண்டப்படும்  நிகழ்வுப் போக்கு என்பது புரையோடிப் போயிருப்பதோடு, கட்டமைப்பு சார்ந்ததாகவும் மாறியிருக்கிறது என்பது பெரிதும் கண்டுகொள்ளப் படுவதில்லை. 1867ம் ஆண்டில் பிரசித்திபெற்ற “வடித்தெடுக்கும் கோட்பாடு” என்ற பெயரில் தாதாபாய் நௌரோஜி அவர்களால் விவரிக்கப்பட்ட காலனிய கொள்ளையைவிட பல மடங்கு கொடூரமானதாகவும், பலமுகங்கள் கொண்டதாகவும், மிகவும் சிக்கலான நடைமுறைகள் கொண்டதாகவும் புதிய தாராளமய, புதிய காலனிய கொள்ளை இருக்கிறது.

இந்தியாவின் ‘அசாத்திய வளர்ச்சி’ பற்றி ஆட்சிக் கட்டிலிருப்பவர்களும், காவி ஊடுகங்களும் இன்று ஊதிப் பெருக்கி வரும் வேளையில்தான், அமெரிக்க பங்கு சந்தை மோசடி, அமெரிக்க ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைகள், இந்தியாவிலிருந்து பறந்தோடும் ஊக மூலதனம், மலைபோல் குவிந்து வரும் இந்தியாவின் கடன் சுமை, அதிகரித்துவரும் வர்த்தக பற்றாக்குறை போன்ற எண்ணற்ற காரணிகளால் இந்திய ரூபாயின் மதிப்பு அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. யூரோ, ஜப்பானிய யென் போன்ற நாணயங்களுடன் ஒப்பிடும்பொழுது அமெரிக்க டாலரின் மதிப்பே ஒருபக்கம் சரிந்து கொண்டிருப்பதுதான் நகைப்புரிக்குரிய விசயமாக இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில், அதிலும் குறிப்பாக 2016க்கு பிறகு உலகளவில் அந்நிய செலாவணியாக அமெரிக்க டாலரை பயன்படுத்துவது 10 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது என்றும், பல நாடுகள் இனி வரக்கூடிய காலங்களில் டிஜிட்டல் நாணயம் உட்பட பல்வேறு மாற்று செலாவணி முறைக்கு மாறுவது குறித்து திட்டமிட்டு வருவதாக பல்வேறு ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதுபோன்றதொரு ஆபத்தான சூழலில், அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு கட்டமைப்பு ரீதியாகவே வீழ்ந்து கொண்டு வரும் நிலையில், மதிப்பிழந்து வரும் அமெரிக்க டாலரின் நுகத்தடியிலிருந்தும், கட்டளைகளிலிருந்தும் ஒட்டுமொத்தமாக விடுவித்துக் கொள்வதற்கு ஆகவேண்டிய நடவடிக்கைகளை எடுப்பது அவசர அவசியமான கடமையாக மாறியிருக்கிறது.

ஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய போர்தந்திர கூட்டாளியாக சேவையாற்றத் துடிக்கும் மோடி ஆட்சியோ, விடுவித்துக் கொள்வது பற்றி யோசிப்பதற்குக்கூட அஞ்சி நடுங்குகிறது. டாலர் நீக்க நடைமுறைக்கு அதாவது அமெரிக்க டாலரின் மேலாதிக்கத்திற்கு எதிராக வேறொரு பொதுவான நாணயத்தை பயன்படுத்தும் திட்டத்திற்கு ஆதரவாக பிரிக்ஸ் கூட்டமைப்பில் முன்மொழியப்பட்ட தீர்மானத்திற்கு மோடி அரசாங்கம் ஆற்றிய எதிர்வினையின் மூலம் அம்பலப்பட்டுப் போயுள்ளது. அவ்வகையில், டாலரைக் கைவிடும் நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 100 சதவீதம் காப்பு வரி விதிக்கப்படும் என்ற டிரம்ப்–ன் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்த மோடி அரசாங்கம் டாலரைக் கைவிடுவதென்ற பேச்சுக்கே தங்களது செயல்திட்டத்தில் இல்லை என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது. எனவே, அமெரிக்கா டாலரின் புதிய காலனிய நுகத்தடியின் கீழ் அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்திய ரூபாயை கூடிய விரைவில் விடுவிப்பதற்கான தீர்வை அரசியல் ரீதியாக முன்னெடுக்காத வரையில், நாணய மதிப்பு குறைப்பின் மூலமாக இந்திய உழைக்கும் மக்களின் கடைசிச் சொட்டு இரத்தம் இருக்கும் வரை ஒட்டச் சுரண்டப்படுவது தங்குதடையின்றி தொடரவே செய்யும்.

இது சிபிஐ(எம்.எல்) ரெட் ஸ்டார் கட்சியின் பொதுச் செயலாளர் பி.ஜே.ஜேம்ஸ் எழுதிய கட்டுரை.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://countercurrents.org/2025/01/plunge-of-indian-rupee-neocolonial-drain-of-wealth-being-more-ruthless-than-under-colonialism/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு