வேங்கைவயல்: இந்த பொய்யைச் சொல்லவா இத்தனை மெனக்கிடல்கள்!
சாவித்திரி கண்ணன் - சுகிர்தா ராணி - மனோஜ்

சபாஷ்! இந்த பொய்யைச் சொல்லவா இத்தனை மெனக்கிடல்கள்!
வேங்கை வயலில் பட்டியலின மக்கள் பகுதியின் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் அரும்பாடுபட்டு நீதியை நிலை நாட்டியுள்ளார்களாம்!
# 737 நாட்களாக தொடர் விசாரணை.
# 300-க்கும் மேற்பட்ட நேரடி சாட்சியங்கள்!
# 31 நபர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை!
# ஐந்து பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை!
# சுமார் 12 தலித் இளைஞர்களை பிடித்துச் சென்று ஆசைகாட்டி குற்றவாளியாக்கும் பகிரத பிரயத்தனம்.
இவ்வளவுக்கும் பிறகு இன்று நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருப்பது இதயம் நொறுங்க வைத்துள்ளது.
குடிநீரில் மலம் கலக்கப்பட்ட சில நாட்களுக்குப் பின் தமிழக பாஜகவின் ஐடி பிரிவு வெளியிட்ட வீடியோ பதிவில் சொல்லப்பட்டுள்ளதையே திமுக அரசு வழக்கறிஞரும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
வேங்கை வயல் ஆதிதிராவிட குடியிருப்பின் மேல்நிலை குடிநீர் தொட்டியின் மீது ஏறி அந்த குடிநீர் தொட்டியில் மலம் கலந்திருப்பதை அம்பலபடுத்தியவர்களே குற்றவாளிகள் என்றது அந்த விஷுவல்.
பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்குவது இந்த ஜனநாயக யுகத்திலும் தொடர்வதா?
தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது திராவிட மாடல் ஆட்சியா? ஆர்.எஸ்.எஸ் வழி நடத்தும் பாஜக ஆட்சியா?
சாவித்திரி கண்ணன்
=====================================================================
எனக்குப் பொழுதே போகமாட்டேங்குது..வேற வேலையும் இல்ல..நானே மலத்தைக் கழிச்சேன்..நானே மலத்தை அள்ளினேன்..நானே மலத்தை எடுத்துட்டுப்போய் டேங்க் தண்ணியில கரைச்சேன்.. நானே மலம் கலந்த தண்ணியைக் குடிச்சேன்..நானே புகார் கொடுத்தேன்.நானே விசாரிக்கப்பட்டேன்..நானே குற்றவாளியாயிட்டேன்.அவ்ளோதான்.
Sukirtha Rani
======================================================================
வெளியூரில் தங்கி காவல்துறையில் பணிபுரியும் முரளிராஜா தொடர் பணி முடிந்து விடுப்பில் வேங்கைவயலில் உள்ள தனது வீட்டிற்கு காலையில் வந்து மலம் கலந்த தண்ணீரில் கைகால் கழுவி, அதே தண்ணீரை பருகையிலும் கடும் துர்நாற்றம் வீசுவது குறித்து தனது அம்மாவிடம் விசாரிக்க, தண்ணீர் ஒரு வாரமாக துர்நாற்றம் வீசுவதாகவும் தண்ணீரை பயன்படுத்தியவர்களுக்கு வாந்தி பேதி வந்திருப்பதாகவும் தெரிவிக்க, முத்துகிருஷ்ணனையும் சுதர்சனையும் கூட்டிக்கொண்டு ஊரார் பார்க்க தண்ணீர் தொட்டியில் ஏறி பார்த்த பொழுது, கட்டி கட்டியாக மஞ்சள் நிறத்தில் மிதந்து கொண்டிருப்பதை பார்த்து, வாலியை கொண்டுவந்து அள்ளி பார்த்த போது தான் தெரிகிறது அது மலம் என்று.
இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாறிய பிறகு, சென்னை எக்மோர் பேன்தியன் சாலையில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் முரளிதரன் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டு காலை முதல் இரவு வரை முரளிதரன் விசாரணையில் இருந்தார்.
இரவு வெளியே வந்த முரளிதரன் என்னிடம் தொலைபேசியில் பேசினார். விசாரணையில், உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தலித்துகளே தண்ணீரில் மலம் கலந்ததாக ஒப்புக் கொள்ளுமாறும் இல்லையென்றால் காவல்துறையில் பணிபுரியும் முரளிதரன் கடுமையான இடையூறுக்கு உள்ளாக நேரிடும் என்றும் காவல்துறையினர் அச்சுறுத்தியதாக தெரிவித்தார்.
தண்ணீரில் மலம் கலந்த சில நாட்களுக்குப் பின்னரே ஊருக்குச் சென்று மலம் கலந்த அந்த தண்ணீரை பருகியும், அதில் கைகால் கழுவியும் பாதிக்கப்பட்ட முரளிதரணையே முதல் குற்றவாளியாக சேர்த்திருக்கிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.
இதன் மூலம் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தனது தலித் விரோதப் போக்கை உறுதி செய்திருக்கிறது.
- Adv Manoj Liyonzon
==================================