''திராவிட மொழிக்குடும்பம்" ஆய்வும் ஆங்கிலேயர் ஆட்சியும்
தெய்வ சுந்தரம்

2022 ஜூன் மாதம் நான் முகநூலில் பதிந்த ஒரு கருத்து
--------------------------------------------------------------------------
''திராவிட மொழிக்குடும்பம்" ஆய்வும் ஆங்கிலேயர் ஆட்சியும்
---------------------------------------------------------------------
மேலும் ''திராவிடமொழிக்குடும்பம்'' என்ற ஒரு கருத்தைத் திட்டமிட்டு வைத்தது ஆங்கிலேய ஏகாதிபத்தியம் என்ற ஒரு கருத்தும் உண்டு. தமிழினம், மலையாளயினம், தெலுங்கினம், கன்னடவினம் என்று தென்னகத்தில் உண்மையான இன அடிப்படையிலான இனப் போராட்டங்கள் (struggles of nationalities) தோன்றிவிடக்கூடாது என்பதற்காக .... ''திராவிட இனம் (Race)'' என்ற கருத்தை ... மேற்கூறிய நான்கு பெரும் தேசிய இனங்களையும் அதில் திணித்து... ஆங்கிலே ஏகாதிபத்தியம் முன்வைத்தது என்பது ஒரு கருத்து. இது திட்டமிட்டுத் திணிக்கப்பட்ட ஒன்றே!
"திராவிட மொழிக் குடும்பம்'' ''தொல்திராவிடம்'' ''மூலதிராவிடம்'' போன்றவை மொழிகளிடையே நிலவுகிற ஒற்றுமைக்கூறுகளைப் பற்றிய ஆய்வைத் தவறாகப் பயன்படுத்தும் திட்டமிட்ட ஒரு முயற்சியே! "Language Typology" என்ற ஒரு மொழியாய்வுப் பிரிவை "Language Families" என்ற அடிப்படையில் தவறாகத் திசை திருப்புவதே ஆகும்.
மேற்கூறிய வாதம், ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தாகவும் எனக்குத் தோன்றுகிறது. Race என்பதே ஏகாதிபத்தியவாதிகள் ''உருவாக்கிய'' ஒரு கற்பனையே. உயிரியல் அடிப்படையில் அதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது! ''தேசிய இனங்கள் (Nationalities) '' என்பதுதான் மனித குல வரலாற்றில் தோன்றிய ஒரு வரலாற்று விளைபொருள் (a historical product) . மார்க்சிய அறிஞர் தோழர் ஏ.எம். கோதண்டராமன் அவர்கள் இதுபற்றி ஒரு விரிவான ஆய்வையே தந்துள்ளார். மேலும் வட இந்திய மொழிகளையும் இந்தோ-ஆரியமொழிகள்- இந்தோ ஐரோப்பிய மொழிகள் என்று கூறி, இதற்கும் திராவிடமொழிக்குடும்பத்திற்கும் மூதாதையர்கள் மேலைநாட்டுமொழிகளே - ஐரோப்பிய மொழிகளே என்று ஒரு கருத்தும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் முன்வைக்கப்பட்டது என்று அவர் கூறுகிறார்.
-------------------------------------------------------------------------
ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சி
-----------------------------------------------------------------------
''மேற்கத்திய'' என்ற தொடருக்குப்பதிலாக ''ஏகாதிபத்திய'' அல்லது ''காலனியாதிக்க'' கூட்டத்தின் ஆய்வு என்றுகூட கூறலாம். மொழியிலும் ஏகாதிபத்தியத்தின் செல்வாக்கு உண்டு அல்லவா? ''இனம்'' என்பதற்கு நிற அடிப்படையிலான 'race" என்பதை ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்துகின்றன. ஆனால் அது தவறு. "nationality" என்பதே சரியானது என்பது முற்போக்குச் சிந்தனையாளர்களின் முடிபு. எனவே ''மேற்கத்திய '' என்ற பொதுவான தொடருக்குப்பதில், அரசியல் பொருளாதார அடிப்படையிலான தொடரைப் பயன்படுத்தலாம் என்பது எனது கருத்து. இல்லையென்றால், முற்போக்குச் சிந்தனையாளரான நோம் சாம்ஸ்கியின் மொழியியல் கோட்பாட்டையும் ''மேற்கத்திய கோட்பாடு'' என்று கூறி, அந்தக் கோட்பாடு சரியாக இருந்தாலும், அதைப் புறக்கணிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். முதலாளித்துவத்தின் வளர்ச்சி தொடக்கத்தில் மேற்கத்திய நாடுகளில் அதிகம் இருந்ததால், 17-20 நூற்றாண்டுகளில் பல அறிவியல் கோட்பாடுகள் அங்குதான் தோன்றின. அதனாலேயே நாம் அவற்றைப் புறக்கணித்திவிடமுடியாது அல்லவா? நியூட்டன், ஐன்ஸ்டீன் கோட்பாடுகள் அங்கே தோன்றியதால், நாம் அவற்றை'' மேற்கத்திய'' அறிவியல் என்று புறக்கணிக்கக்கூடாது அல்லவா? காரல்மார்க்ஸ்-இன் அரசியல் பொருளாதாரக் கோட்பாடுகளும் அங்கே தோன்றியதுதானே! எனவேதான் நான் இதைக் கூறுகிறேன்.
தெய்வ சுந்தரம்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு