சிதம்பரம் பிள்ளை பெரிய ராஜத்துரோகி - அவர் எலும்புக் கூடும் ராஜ விசுவாசத்திற்கு விரோதமானது
Subbaraj V
“சிதம்பரம் பிள்ளை பெரிய ராஜத்துரோகி. அவர் எலும்புக் கூடும் ராஜ விசுவாசத்திற்கு விரோதமானது. சுப்பிரமணிய சிவா, சிதம்பரம் பிள்ளையின் கையில் அகப்பட்ட ஒரு கோல். திருநெல்வேலி கலவரத்திற்குக் காரணம் இந்த இரண்டு பேர்கள்தான். பிள்ளையின் மேடைச் சொற்பொழிவு முழக்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால், செத்த பிணம் கூட உயிர் பெற்று எழும், புரட்சி ஓங்கும்”
அரண்டு போய் சொன்னான் அந்த பரங்கி நீதிபதி.
சிதம்பரனாருக்கு நாற்பது ஆண்டுகள் தீவாந்தரத் தண்டனை! அரசுக்கு விரோதமாக நடந்ததற்காக இருபது வருடம், சுப்பிரமணிய சிவாவுக்கு உடந்தையாக இருந்தார் என்பதற்காக இருபது ஆண்டு தண்டனை. சுப்பிரமணிய சிவாவுக்கு அரசு விரோதி என்று பத்தாண்டுகள் தீவாந்தரத் தண்டனை விதிக்கப்பட்டது.
கலெக்டர் விஞ்ச் துரையால் கைது செய்யப்பட்ட சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா... இருவர் மீதும் தொடுக்கப்பட்ட வழக்கில் தான், இப்படியொரு கொடூரமான தீர்ப்பு. தீர்ப்பை அளித்தவன் பரங்கி நீதிபதி பின்ஹே.
நெல்லை நீதிமன்றத்தில், இந்த வழக்கில் சிதம்பரனாருக்கு ஆதரவாக நேரடி சாட்சியம் அளித்த மகாகவி பாரதியார், தீர்ப்பு வந்தவுடன் இப்படி பாடினார்,
“வேளாளன் சிறை புகுந்தான். தமிழகத்தார்
மன்னனென மீண்டான் என்றே
கேளாத கதை விரைவிற் கேட்பாய் நீ
வருந்தலைஎன் கேண்மைக் கோவே!
தாளாண்மை சிறிதுகொலோ யாம்புரிவேம்
நீ இறைக்குத் தவங்கள் ஆற்றி,
வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே
வாழ்த்துதி நீவாழ்தி வாழ்தி!”
தீர்ப்புக்கு எதிராக இந்தியா முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. வங்காளி, அமிர்தபஜார், சுதேசமித்திரன், ஸ்டேட்ஸ்மன், ஸ்டாண்டர்டு, சுயராஜ்யா போன்ற பத்திரிகைகள் பின்ஹேயின் சிறுமைத் தீர்ப்பை மிகக் காரசாரமாகக் கண்டித்தன. ஆந்திர தெலுங்குப் பத்திரிக்கையான ‘சுயராஜ்யா’ அலுவலகத்தையே பூட்டி சீல் வைத்துவிட்டார்கள் வெள்ளை போலீஸ் அதிகாரிகள். அதன் ஆசிரியரும் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்.
பாரதியார் ஆசிரியராக இருந்த ‘இந்தியா’ என்ற தமிழ் வார இதழ், நீதிபதி பின்ஹேயை கண்டனம் செய்து எழுதியது. அத்துடனில்லாமல், சிதம்பரம் பிள்ளை எதற்காகத் தண்டனை பெற்றாரோ அதனையே பொதுமக்களும் பின்பற்ற வேண்டும் என்றும் எழுதியது. ‘இந்தியா’ பத்திரிக்கையின் வெளியிட்டாளர், ஸ்ரீநிவாசய்யங்கார் தண்டிக்கப்பட்டார், பத்திரிகை அலுவலகமும் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டது.
இந்திய மந்திரியாக அப்போது இருந்த மார்லி என்ற ஆங்கிலேயருக்கு, இந்த கொடுமைத் தீர்ப்பு ஏற்புடையதாக இல்லை. அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் ராஜப்பிரதிநிதியாகப் பணியாற்றிய லார்டு மிண்டோவிற்கு, சிதம்பரனாருக்கும், சிவாவுக்கும் விதிக்கப்பட்டுள்ள தண்டனையைத் தன்னால் ஆதரிக்க முடியாது என்று பகிரங்கமாகக் கண்டித்து எழுதினார்.
சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்த பின். “ராஜத் துரோகத் தண்டனை”க்காக விதிக்கப்பட்ட 20 ஆண்டு தண்டனையை நான்கு ஆண்டுகள் என்றும், சிவாவுடன் உடந்தையாக சிதம்பரனார் இருந்தார் என்பதற்காக விதிக்கப்பட்ட 20 ஆண்டுத் தண்டனையை ஆறு ஆண்டுகளாகவும் குறைக்கப்பட்டது. அதாவது, 40 ஆண்டுகளுக்குப் பதிலாக 10 ஆண்டுகள் தண்டனை.
சிதம்பரனார் நண்பர்களது அரிய முயற்சியால், உயர்நீதி மன்றம் அளித்த 10 ஆண்டுகள் தண்டனையை எதிர்த்து லண்டன் பிரிவிகெளன்சில் நீதிமன்றத்துக்கு மீண்டும் மேல் முறையீடு செய்யப்பட்ட போது, அங்கு அந்தமான் சிறைவாசத் தண்டனை ஆறு வருடம் கடுங்காவல் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
Subbaraj V
https://www.facebook.com/100015552703806/posts/2444019466126453/?rdid=y6hecrCBkFNNv6f6
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு