இந்தியப் பாசிச வடிவங்களின் சித்தாந்த வேர்

இந்திய பாசிசம் மற்றும் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணிக்கான செயல்தந்திரம் - பகுதி - 3

இந்தியப் பாசிச வடிவங்களின் சித்தாந்த வேர்

III

இந்தியப் பாசிச வடிவங்களின் சித்தாந்த வேர்

இந்திய பாசிசம் மற்றும் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணிக்கான செயல்தந்திரம் - பகுதி - 2 

மோடி கும்பலின் இந்துத்துவப் பாசிசம், ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளால் முன்வைக்கப்பட்டு ஹிட்லர் கும்பலால் ஏற்றுக்கொள்ளப்பட்ட "தூய ஆரிய இன மேன்மைவாதக் கோட்பாட்டின்" அடிப்படையிலேயே கட்டி அமைக்கப்படுகிறது. இந்துத்துவத்தை ஏற்றுக்கொண்ட காங்கிரசு கும்பலின் பெருந் தேசிய வெறி பாசிசம் 'ஆரிய இன மேன்மைவாதக் கோட்பாட்டிலிருந்து' கட்டி அமைக்கப்படுகிறது. இக்கோட்பாடுகள் ஐரோப்பிய காலனி ஆதிக்கக் கும்பல்களால் காலனிய நலன்களிலிருந்து உருவாக்கப்பட்ட கற்பனையான எண்ணமுதல்வாத கோட்பாடுகளாகும். ஆகவே இக்கோட்பாடுகள் இயல்பாகவே ஏகாதிபத்திய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்கின்றன. இதன் காரணமாகவே காங்கிரசின் பெருந்தேசிய வெறி பாசிசமும், பாஜகவின் இந்துத்துவ பாசிசமும் ஏகாதிபத்திய நிதி மூலதன சர்வாதிகாரத்திற்கு சேவை செய்கின்றன. பாசிசத்தையும் ஏகாதிபத்தியத்தையும் ஒன்றிலிருந்து ஒன்றை பிரிப்பது எவ்வளவு தவறானதோ, காங்கிரசையும் பாஜகவையும் இந்தியப் பாசிசத்திலிருந்து வேறுபடுத்தி பிரித்துப் பார்ப்பது அவ்வளவு தவறானதாகும். ஏனெனில் மேற்கூறிய காலனிய இனவியல் கோட்பாடுகளுக்கு பிறந்தவையே காங்கிரஸ் - பாஜக கட்சிகள் ஆகும்.

பிரம்மஞான சங்கத்தைச் சேர்ந்த (Theosophical society- தியோசோபிகல் சொசைட்டி) ஏ.ஒ.ஹியூம் என்ற பிரிட்டிஷ் காலனி ஆதிக்கவாதியால் 1885ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி முதலில் நிறுவப்பட்டது. தியோசோபிகல் சொசைட்டி (அ) பிரம்ம ஞான சங்கம் என்பது நவீன இந்து மதவாதம் (Neo-Hinduism) மற்றும் 'ஆரிய இன மேன்மையை' அடிப்படையாகக்கொண்டு இயங்கிய ஏகாதிபத்திய ஆதரவு அமைப்பாகும். எனவே காங்கிரஸ் கட்சி இயல்பாகவே பிரிட்டிஷ் விசுவாசத்தைப் பேணியது. 'நவீன இந்து மதவாதத்தை' காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டதால்தான் அது ஆர்.எஸ்.எஸ்.இன் 'நவீன இந்துத்துவத்தையும்' (இந்துவாக வாழ்வது) காரியக் கமிட்டி தீர்மானமாக நிறைவேற்றி ஏற்றுக்கொண்டது.

இந்தியாவில் 1857இல் சிப்பாய் புரட்சி வெடித்தது. இது பிரிட்டிஷ் ஆட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. மார்க்ஸ் கூறியது போல "இந்துக்களும் முசல்மான்களும் ஒற்றுமையாய் இருக்கும் இடங்களிலெல்லாம் உண்மையில் ஒரு சதித்திட்டம் நடந்து கொண்டிருக்கிறது; ஏதோ ஒன்று 'உள்ளூர உருவாகி வருவதை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிந்துள்ளது..." என்பதுதான் அன்றைய நிலை.  அதனால், இந்திய காலனியாதிக்க விடுதலை உணர்வைத்  திசைதிருப்பவும், மட்டுப்படுத்தவும் ஒரு மாற்று வடிகால் அவசியப்பட்டது. அந்நிலையில்தான் ஹியூம் இங்கிலாந்துத்துக்குச் சென்று பிரிட்டிஷ் டஃபரின், டல்ஹௌவுசி, ரிப்பன் பிரபு ஆகியோரின் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே காங்கிரசு இயக்கத்தை 1885ல் ஆரம்பித்தார். ஹீயூம் "நம் சொந்த நடவடிக்கைகளால் உருவாக்கப்பட்டதும், வளர்ந்துவருவதுமான மிகப் பெரிய சக்திகளிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்கான ஒரு பாதுகாப்புத் திறப்பு (ஷிணீயீமீ௴ஹ்-ஸ்ணீறீஸ்மீ) அவசரமாகத் தேவைப்படுகிறது; நம் காங்கிரஸ் இயக்கத்தால் வடிவமைக்க முடிகிற பாதுகாப்புத் திறப்பைவிடவும் திறமானது வேறெதுவுமில்லை" என்று கூறியே காங்கிரசு இயக்கத்தை ஆரம்பித்தார். பிரிட்டிஷாருக்கு நம்பிக்கைக்கு உரியவர்களான தாதாபாய் நௌரோஜி (இவர் 1867ல் லண்டனில் கிழக்கு இந்திய சங்கம் தோற்றுவித்தவர்), சுரேந்திரநாத் பானர்ஜி (1882ல் ரிப்பன் கல்லூரியை தொடங்கியவர்) மற்றும் வில்லியம் வெட்டர்பர்ன் (இவர் ஆரியர்களில் கிழக்கு-மேற்கு என்ற இரண்டு பெரும் பிரிவுகளும் இணக்கம் காணமுடியும் என்றும் இந்த இனவியல் கோட்பாட்டின் மூலம் பிரிட்டிஷ் ஆட்சியை காக்க முடியும் என்றும் கூறியவர்) ஆகியோரால் உருவாக்கப்பட்டதுதான் இந்த காங்கிரஸ் இயக்கம். அனைவரும் இனவியலை ஏற்றுக்கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

அன்று காங்கிரஸ் தலைவர்கள் கல்வி கற்ற பல்கலைக் கழகங்கள் எல்லாம் இந்த பிரிட்டிஷ் காலனிய இனவியல்வாதிகளால் உருவாக்கப்பட்ட இனவியலைத்தான் போதித்தது. இதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு ஆசியவியல் மையம், ஆக்ஸ்போர்டின் இந்திய கல்வியகம், ஆங்கிலோ ஓரியண்டல் பல்கலைக் கழகம் (பின்பு 1920ல் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றப்பட்டது). இந்த பல்கலைக்கழகங்களால் பயிற்றுவிக்கப்பட்ட பெரும்பாலனவர்கள் இனவியல் கொள்கையின் செல்வாக்கிற்கு உட்பட்வர்களாகத்தான் இருந்தார்கள்.

காலனியவாதிகள், ஆரியர்கள் படையெடுத்துவந்து இங்குள்ள பூர்வகுடிகளை வென்று அடிமைப் படுத்தினார்கள் என்ற ஒரு கோட்பாடும்; இஸ்லாமியர்கள் படையெடுத்துவந்து இங்குள்ள இந்துக்களை வென்று அடிமைப்படுத்தினார்கள் என்ற மற்றொரு  கோட்பாடும் கட்டியமைத்தனர். இந்த இருகோட்பாட்டிலும் அடிமைத்தளையை விடுவிக்கவே தாங்கள் இங்கு பாடுபடுகிறோம் என்று கூறி பிரிட்டிஷ் ஆதிக்கத்தை நியாயப் படுத்தினார்கள். இந்த காலத்தில்தான் கல்வியில் நிறுவனமயப்படுத்தப்பட்ட இனவியல் வரலாற்றை நிறுவுவதில் ரிஸ்லே பிரபு (1851-1911) பெரும் பங்காற்றினார். மாக்ஸ் முல்லரின் சீடரான இவரின் வரையறையே அன்று எல்லா அரசு உறுப்புகளிலும் நிறுவனமயமாக்கி செயல்படுத்தப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்திட்டத்தின் தலைவரான இவர் மதத்தின் அடிப்படையிலும், சாதியின் அடிப்படையிலும் கணக்கெடுப்பை தொடங்கியவர். சாதியை இனமாக வரையறுத்து இனவாதத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர். இதனடிப்படையிலேயே பூலே இயக்கம் போல் பல்வேறு இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

காங்கிரஸ் இயக்கம் கட்டியமைத்த பின்புதான் மதத்தின் அடிப்படையில் வங்காளப் பிரிவினையை ரிஸ்லேவும் அன்றைய கவர்னர் ஜெனரல்களும் திட்டமிட்டு பிளவுப்படுத்தினர். வங்காளப் பிரிவினையைக் காரணம் காட்டி பெருந்தேசிய வெறியும், இந்து மதவாதக் கருத்துகளை பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும் ஆழப்படுத்தினர்.

தாதாபாய் நௌரோஜியின் சீடரான பாலகங்காதர திலகர் "ஆர்க்டிக் பகுதியே ஆரியர்களின் தாய் நிலம். அத்தாய் நிலத்திருந்து ஆரியர்களின் இரண்டு குழுக்கள் புலம் பெயர்ந்தது. ...அதில் ஒரு குழு இந்தியாவிற்கு கடைசியாக வந்து சேர்ந்தது. அவர்களே இந்திய ஆரியர்களாக அறியப்படுகிறவர்கள். தங்களின் கலாச்சார மேல்நிலையைத் தக்கவைத்துக் கொண்டவர்கள். மேலும் ஆரியரல்லாதவர்களை வெற்றி கொண்டவர்கள்" என்று கூறினார்.

பிரிட்டிஷ் காலனியவாதிகள் இனவியல் கோட்பாட்டின் அடிப்படையில் கூறிய ஆரிய மேன்மையை ஏற்றுக்கொண்ட இவர்கள், ஆரிய தூய்மையை இந்திய ஆரியர்கள் இழந்துவிட்டதால் ஆளும் தகுதியையும் இழந்துவிட்டதாகக் கூறியதை மட்டுமே ஏற்கவில்லை. அதற்காக அவர்கள் வேதத்தையும், மனுதர்மத்தையும் உயர்த்திப் பிடித்து அதுமட்டுமே இந்திய கலாச்சாராம் என்று எழுதி நவீன இந்து மதவாதத்தையும் தொடங்கி வைத்தவர்களே காங்கிரசு இயக்கத்தவர்கள்தான்.

வில்லியம் ஜோன்ஸ் எனும் பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதி Third Anniversary Discourse Asiatic Researches (Vol-1, 1788, ð‚è‹ 415-431) எனும் தனது நூலில் வேர்ச்சொல், மூல சொற்கள் என்ற ஆய்வு செய்து, ஒரே வேர்ச்சொல், மூல சொற்களைக் கொண்டவைகளை எல்லாம் ஒரே மொழிக் குடும்பம் என வரையறுத்தார். அந்த வரையறையின்படி இந்தோ-ஆரிய மொழிகளை (Indo-Aryan Languages) ஒரே மொழிக் குடும்பமாக வகைப்படுத்தினார். அவர் பைபிளில் உள்ள 'பேபல் கோபுர கதைகளை' அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு வகைப்படுத்தினார். விவிலியத்தின் (பைபிள்) பேபல் கோபுர கதையின்படி, ஆண்டவருக்கு எதிராக பாபிலோனியர்கள் பேபல் கோபுரத்தை கட்டியதாகவும், அங்கு ஒரே மொழியை பேசியவர்கள் மத்தியில் பல மொழிகளை ஏற்படுத்தி குழப்பம் விளைவித்து அவர்களை உலகப் பகுதிகளுக்கு பிரிந்து செல்லுமாறு ஆண்டவர் செய்ததாகவும் விவிலியத்தின் இந்த ஐதீகக் கதை கூறுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டே மூல மொழிக்கொள்கை மற்றும் மொழிக்குடும்பக் கொள்கையை உருவாக்கினார். இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தின் மூலமொழி சமஸ்கிருதம் என்று கூறினார்.

இந்தோ ஆரிய மொழிகளைப் பேசுவோர் இந்தோ ஆரிய இனம் என்று மாக்ஸ் முல்லர் என்பவர் தனது “The Languages of the Seat of war in the east London - William Norgate 1855 என்ற நூலில் வரையறுத்தார். இவ்வாறு இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்பது ஆரிய மொழி குடும்பமாக வகைப்படுத்தப்படுகிறது. வேர் சொற்களின் ஒற்றுமை என்ற அடிப்படையில் ஆரிய மொழிக் குடும்பத்தை வரையறை செய்வதோடு மட்டுமின்றி, காலனியாதிக்கத்தை திணிப்பதற்கும், நியாயப்படுத்துவதற்கும் ஆரிய மேன்மைக் கோட்பாடு முன்வைக்கப்படுகிறது. அதாவது ஆரியர்கள்தான் உயர்ந்தவர்கள்; ஆளப் பிறந்தவர்கள்; அவர்கள்தான் உலகத்தில் நாகரிகத்தையும் பண்பாட்டையும் கொண்டுவந்தவர்கள் என்ற கோட்பாடு முன்வைக்கப்படுகிறது. இங்ஙனம் ஐரோப்பிய காலனிய மேலாதிக்கத்திற்கு ஆரிய இன மேன்மை என்ற கோட்பாடு உருவாக்கப்பட்டது. ஆரிய மொழிக் குடும்பத்தின் மூலமொழி தேடலின் போது, சமஸ்கிருதமே மூலமொழி என்று கூறி இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தில் சமஸ்கிருதத்தையும் இணைத்துக்கொண்டு, இந்தியாவிலிருந்த பார்ப்பனர்களையும் ஆரியர்கள் என இணைத்துக்கொண்டு ஆரிய மேன்மை பேசினர்.

பின்பு காலனி ஆதிக்கமும் - காலனிய ஆட்சியும் தோன்றிய பிறகு, இனத்தூய்மை பேசி, ஜெர்மானிய இனம்தான் உண்மையான ஆரிய இனம் என்று கூறி, இந்தியாவிலுள்ள பார்ப்பனர்களை ஆரியர்களாக காலனிய ஆதிக்கவாதிகள் கருதவில்லை. ஏனென்றால், பார்ப்பனர்கள் இடையே சாதி முறையும், உருவ வழிபாடும் தோன்றி எல்லாவித பிற்போக்கும் வந்துவிட்டதால் ஆரியர்களாக ஏற்க முடியாது என்றனர். அதாவது ஆரிய இனத் தூய்மையை இழந்து விட்டனர் என இவர்களை கீழ்நிலைக்கு தள்ளி இவர்கள் மீதும் ஆதிக்கம் செலுத்த துவங்கினர். ஜெர்மனியில்தான் ஆரியத் தூய்மை நிலவுகிறது; எனவே உலகத்தை ஆளப்பிறந்த இனம் ஜெர்மானிய இனம்தான் எனும் 'தூய ஆரிய இனவாத'க் கோட்பாட்டை நிறுவினர். ஆரிய மொழி இல்லாத பிற மொழிகளையும், பிறமொழிக் குடும்பங்களையும் இந்தியாவைச் சார்ந்த பார்ப்பனர்களையும் ஆரியர்களுக்கு அடிமைகளாகவே பார்த்தனர். ஆனால் பார்ப்பனர்களோ தாங்களும் ஆரியர்கள்தான் என்று உரிமை கோரி பெருமை கொண்டாடுகிறார்கள். ஏகாதிபத்தியவாதிகள் இவர்களை எட்டி உதைத்தாலும் உதைத்த காலை நக்கி பிழைக்கிறார்கள். காலனியாதிக்கத்தின் நுகத்தடிக்குள் பார்ப்பனர்களை கொண்டுவந்து அடிமைப்படுத்த வேண்டும் என்பதால் அவர்களை ஆரியர்களாகக் கருதவில்லை. காலனி ஆதிக்கவாதிகள் இவர்களை கீழ்நிலைக்கு தள்ளினாலும் தாங்களும் ஆரியர்கள்தான் என உரிமை கோருவது இவர்களிடம் உருவான தரகு சித்தாந்தத்தையே காட்டுகிறது. பார்ப்பனர்கள் உயர்மட்டத்தில் இருந்த நிலை என்பது போய் அவர்கள் ஆரியர்கள் இல்லை என ஏகாதிபத்தியவாதிகள் இழிவுபடுத்தினாலும் நாங்களும் ஆரியர்கள்தான் என இவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். ஆனால் ஆரியர் என்றால் அது ஐரோப்பிய ஆரியர்களைத்தான் குறிக்கும்; பார்ப்பனர்களை அல்ல.

இந்த தூய இனவாதத்தை கோபினியூ என்பவர் தனது "மனித இனங்களின் சமத்துவமின்மை குறித்த கட்டுரைகள் (1853-55)" என்ற நூலில் முன்வைத்தார். அவர் கூறுவதாவது "வெள்ளை இனம் தான் அனைத்து பண்டைய நாகரிகங்களுக்கும் ஆதாரமானது. வெள்ளை இனத்துடன் பிற இனங்கள் கலந்ததே அனைத்து நாகரிகங்களும் அழிவதற்கு காரணம். இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் ஜெர்மானிய இனம் மட்டுமே தூய்மையானது" என்கிறார். இந்த கோட்பாடே நாஜி கட்சி உருவானதற்கு காரணம் ஆனது. இதை வரித்துக் கொண்டே கோல்வால்கர் இந்தியாவில் இந்து இனத் (ஆரியத் தூய்மையை) தூய்மையைப் பாதுகாக்க இஸ்லாமியர்களை அழிக்க வேண்டும் என்ற இந்துத்துவம் - இந்து ராஷ்டிரத்தை முன்வைத்தார். இந்து மதத்தினரை இந்து இனத்தார் என வரையறுத்து இந்து மதவழி தேசியத்தை முன்வைத்தார்.

காங்கிரஸ் கட்சியும் இந்த ஆரிய இன வாதத்தை ஏற்றுக் கொண்டே தரகு முதலாளித்துவ கும்பலாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அடிமைச் சேவகம் செய்தது. காங்கிரசின் இந்திய தேசியம் (காந்தியமும்) தரகு முதலாளிய தேசியமே ஆகும். சமஸ்கிருத மொழிதான் இந்திய மொழிகளின் மூலமொழி எனும் இந்தோ-ஆரிய மொழிக் குடும்பக் கோட்பாட்டை - ஆரிய இனமேன்மைக் கோட்பாட்டை பிரம்மஞான சபை ஏற்றிருந்தது. பிரம்ம ஞான சபைக்குப் பிறந்த காங்கிரசு கட்சியும் இதை ஏற்றது. இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்திலிருந்தே பெருந்தேசிய வெறியை தனது கொள்கையாக மாற்றிக்கொண்டது; இந்துத்துவத்தையும் காரியவாதமாக பயன்படுத்திக் கொள்ளத் துவங்கியது. இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தின் மூல மொழியான சமஸ்கிருதத்திலிருந்து இந்தி மொழி உருவானதாகவும், இந்தியிலிருந்து இந்திய மொழிகள் உருவாகியிருப்பதாகவும் கூறி இந்தி மொழி பேசும் இந்தி தேசிய இனமே (பொது மொழி, பொது பிரதேசம், பொது பண்பாடு அற்ற கற்பனையான தேசியம்) இந்தியாவின் பெரிய தேசிய இனம் என்றும் பிற மொழிகள் - இனங்கள் கீழ் ஆனவை என்றும் பெருந்தேசிய வாதத்தை முன்வைத்தது. ஆங்கிலம் - இந்தியை ஆட்சி மொழிகளாக்கி பிற தேசிய மொழிகளை - இனங்களை ஒடுக்குகின்றது. பிரதேசமற்ற இந்தப் பெருந்தேசியவெறி எல்லா தேசிய இனங்களையும் ஒடுக்குவதோடு அண்டை நாடுகள் மீதான விஸ்தரிப்புவாதத்தையும் (பாஜக அகண்ட பாரதக் கொள்கையையும்) தீவிரப்படுத்துகிறது. நவீன இந்துத்துவாவை ஏற்றுக் கொண்டதன் மூலம் மக்களை சாதி-மத ரீதியாக பாஜகவை போன்றே காங்கிரசு கும்பலும் பிளவுபடுத்துகிறது.

இந்தியாவில் ஆரிய மொழிக் குடும்பம் - சமஸ்கிருதம் அல்லாமல் பிற மொழிகள் பேசுவோரும் வாழ்ந்து வந்தனர். ஆனால் அவை ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை அல்ல. அவை ஆரிய மொழிக் குடும்பத்திற்கு கீழானவை என்று ஏகாதிபத்தியவாதிகள் கூறினர். இதையே காங்கிரசுக் கும்பல் பெருந்தேசிய வாதத்திற்கு அடிப்படையாகக் கொண்டு இந்திய தேசிய இனங்களை ஒடுக்குகிறது. பாஜகவும் இதிலிருந்தே தேசிய இனங்களை மொழி ரீதியாக ஒடுக்குகிறது. இந்துத்துவத்தின் மூலம் சாதி-மத ரீதியாக தேசிய இனங்களை ஒடுக்குகிறது. இவ்விரு கட்சிகளுமே 'ஆரிய இன மேன்மையை' ஏற்றுக் கொண்டதே இதற்கு காரணமாகும்.

ஆகவே, இந்தியப் பாசிசம் என்பது சாதி-மத-தேசிய இன ஒடுக்குமுறைகளை தனது நிலைப்பிற்கு ஆதாரமாகக் கொண்டுள்ளது. இந்தியப் பாசிசத்தின் பொருளியல் அடிப்படையாக ஏகாதிபத்திய புதிய காலனிய நிதி மூலதன சர்வாதிகாரத்திற்கு சேவை செய்யும் தரகு முதலாளித்துவ - அரை நிலவுடைமை உற்பத்திமுறை திகழ்கிறது. பெருந்தேசிய வெறி, இந்துத்துவம் என்ற வடிவங்களில் பாசிசத்தை கட்டி அமைப்பதற்கு இதுவே பொருளியல் அடிப்படையாகும்.

திராவிட இனவாதம் இந்தியப் பாசிசத்தின் தொங்கு சதையாக விளங்குவது ஏன்?

இந்தியாவைப் பொறுத்த அளவில் ஆரியர்கள் நுழையும் முன்பே சிந்து சமவெளி நாகரிகம் இருந்தது என 1924இல் கண்டறியப்பட்டது. இங்கு பூர்வகுடிகளான தமிழர்கள், மங்கோலியர்கள் போன்ற பல்வேறு பழங்குடிகள் வசித்து வந்தன. இவர்களின் நாகரீகம் ஆரியரின் நாகரீகத்தை விட மேலானதொரு நாகரீகமாகும். ஆரியர் வருகையால் இங்கு நாகரீகம் மேம்பாடு அடையவில்லை. மாறாக அவர்களின் வருகையால் இவர்கள் அடிமைப்படுத்தப் பட்டார்கள். ஆகவே, ஆரிய மேன்மைக் கோட்பாடு அடித்து நொறுக்கப்பட்டது.

எல்லிஸ் எனும் காலனியாதிக்கவாதி "தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் ஒரே வேர்ச்சொல்லை கொண்டவை - அவை தென்னிந்திய மொழிக் குடும்பம் - அவை சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்டவை" என வகைப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கவாதியும், சமயப் பரப்பாளருமான ராபர்ட் கால்டுவெல் என்பவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளையும் உள்ளடக்கி "திராவிட மொழிக்குடும்பம்"என்று வகைப்படுத்தினார். இம் மொழிகளைப் பேசுவோர் திராவிட இனம் என சொன்னார். இந்த வாதத்தை ஆந்திராவைச் சேர்ந்த மமட்டி வெங்கைய்யா எனும் மொழி அறிஞர் மறுக்கிறார். தெலுங்கு மொழி, திராவிட- தமிழ் மொழியை சார்ந்தது அல்ல என்கிறார் அவர். ஆரிய இனவாதக் கோட்பாட்டில் ஜோன்ஸ் கும்பலால் என்ன முன்வைக்கப்பட்டதோ அதே கோட்பாட்டையே கால்டுவெல் பேசுகிறார். எனவே திராவிட மொழியியல் - இனவியல் கோட்பாடு ஆரிய மொழியியல் - இனவியல் கோட்பாட்டிற்கு மாறானது அல்ல. அந்தக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையிலேயே கால்டுவெல் இக்கோட்பாட்டை முன்வைக்கிறார். நாம் ஜோன்ஸ்-கால்டுவெல் கும்பலின் ஆரிய-திராவிட மொழியியல் - இனவியல் கோட்பாட்டை நிராகரிக்கிறோம். ஒரே வேர்ச்சொல், இலக்கண ஒற்றுமை என்பதன் அடிப்படையில் ஒரே மொழிக் குடும்பம் (அ) மூல மொழிக்கொள்கை என வரையறுப்பது மார்க்சியத்திற்கு எதிரானது என ஸ்டாலின் "மார்க்சியமும் மொழியியலும்" எனும் நூலில் கூறுகிறார்.

அதன்பிறகு, பார்ப்பனர்கள் அல்லது ஆரியர்கள் குறிப்பாக சொன்னால் ரிக் வேத கால ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்களா? இங்கேயே பிறந்தவர்களா? வெளியிலிருந்து வந்தவர்கள் எனில் படையெடுத்து வந்தவர்களா? ஊடுருவினார்களா? ஆகிய கேள்விகள் எழுந்தன.

கால்டுவெல், ஜோன்ஸ், முல்லர் போன்ற காலனி ஆதிக்கவாதிகள் ஆரியர்கள் வெளியில் இருந்து படையெடுத்து வந்தவர்கள் என்ற நிலைபாட்டை முன்வைத்தனர். இந்திய வரலாற்றையே ஆரிய-திராவிட இனவாத வரலாறாக முன்வைத்தனர். இதனடிப்படையில்தான் - இந்த இனவாத வரலாற்றை ஏற்றுக்கொண்டுதான் பூலேவும், பெரியாரும் நிலை எடுத்தனர். அதாவது ஆரியர்கள் வந்தேறிகள்; படையெடுத்து வந்து இந்திய பூர்வகுடிகளை வென்று அடிமைப் படுத்தினார்கள்; ஆரிய-திராவிட பகைமைதான் இந்திய வரலாறு என்ற காலனியாதிக்க கோட்பாட்டை ஏற்றனர். பெரியார், பூலேவின் வாதத்தை மறுத்து அம்பேத்கர் சரியான நிலை எடுத்தார்.

அம்பேத்கார் இது குறித்து 'சூத்திரர் யார்?' என்ற தனது நூலில் விரிவாக பின்வருமாறு கூறுகிறார்:

1.            ஆரிய இனக் கோட்பாடு அதன் ஒவ்வொரு அம்சத்திலும் தோல்வியடைந்து வருகிறது. அது அறிவியல் கண்டுபிடிப்புகளின் வக்கிரம்.

2.            ஆரிய இனம் போன்ற எத்தகைய இனத்தையும் வேதங்கள் அறிய மாட்டா.

3.            ஆரிய இனம் இந்தியாவின் மீது படையெடுத்து வந்து இந்தியாவின் பூர்வகுடிகளான தாசர்கள் மற்றும் தஸ்யூக்களை வென்று கீழ் படுத்தினார்கள் என்பதற்கு வேதங்களில் எவ்வித சான்றும் இல்லை.

4.            ஆரியர்கள், தாசர்கள், தஸ்யூக்கள் இடையிலான வேறுபாடு இன வேறுபாடு என்பதற்கான சான்றுகள் இல்லை.

5.            ஆரியர்கள் மேனி வண்ணத்தில் தாசர்கள், தஸ்யூக்களிடம் இருந்து வேறுபட்டவர்கள் என்ற வாதத்தை வேதங்கள் ஏற்கவில்லை.

மேலும், 'மொழிக் குடும்பம்' என்ற அடிப்படையில் முன்வைக்கப்படும் இனக் கோட்பாடு தவறு. இவை அனைத்தும் புராணக் கதைகளின் அடிப்படையில் பேசுவது அறிவியல் பூர்வமானது அல்ல; இது இன வகை பட்டதல்ல" என்று கூறி இந்த நிலைபாட்டை எதிர்க்கிறார். மேலும் ரிஸ்லே என்ற காலனியாதிக்கவாதி "வர்ணமும் சாதியும் இனமே" என்ற கோட்பாட்டை (HH Ridley 1841, 259) முன்வைத்தார். அதையும் அம்பேத்கார் மறுக்கிறார்; "சாதியே இனமாகாது; மாறாக சாதி சமூக வகைப்பட்டது" என்கிறார். "பஞ்சாபை சேர்ந்த பார்ப்பனருக்கும் மதராசை சார்ந்த பார்ப்பனருக்கும் என்ன ஒற்றுமை இருக்க முடியும்?" எனவும், "மதராசை சேர்ந்த பார்ப்பனரும் பறையரும் ஒரே மரபினம் தான்" என்றும் கூறி அதை மறுக்கிறார். ஆனால் அம்பேத்கருடைய ஆய்வு முறையானது, மதத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. பொருளியல் அடிப்படையில் அவர் ஆய்வு செய்யவில்லை. இருப்பினும் அம்பேத்கார் சாதியை இன வகையாகப் பார்க்காமல் சமூக வகையாகப் பார்க்கிறார். இது ஒரு சரியான அம்சமாகும். ஆனால் அவரும் தன்னுடைய ஆய்வு முறையில் சமூக பொருளாதார ஆய்வை எடுத்துக்கொள்ளாமல் மதத்தையும் இலக்கியங்களையும் மட்டுமே எடுத்துக் கொண்டு ஆய்வு செய்யும் முறையை மேற்கொள்கிறார். ஆகவேதான் இந்துமதமே சாதி நிலைப்பிற்கு அடிப்படை என்ற தவறான முடிவிற்கு வருகிறார். ஆகவேதான் சாதி-மத ஒழிப்பிற்கு அம்பேத்கர் அவர்களால் ஒரு விஞ்ஞான பூர்வமான திட்டத்தை முன்வைக்க முடியவில்லை. மதமாற்றமே சாதியை ஒழிக்கும் என்ற தவறான தீர்வை வந்தடைகிறார். இருப்பினும் ஆரிய இன வாதத்தை மறுப்பதன் மூலம் வரலாற்றில் ஒரு நேர்மறையான பாத்திரம் வகிக்கிறார். அம்பேத்கர் பூலே, பெரியாரை போன்று இனவாதி (Racists) அல்ல.

ஆரிய இன மேன்மை மற்றும் ஆரிய படையெடுப்பு கோட்பாட்டையும், ஆரியர்கள் சுதேசிகள் என்ற ஆர்.எஸ்.எஸ்.சின் (RSS) கோட்பாட்டையும் நாம் மறுக்கிறோம். ஆரிய இனம் - திராவிட இனம் என்ற இனங்கள் ஏதும் இல்லை. ஆரியப் பழங்குடிகள் (ஆரிய இனம் அல்ல) ஊடுருவினார்கள்; உற்பத்தியில் ஈடுபட்டார்கள்; ஒன்று கலந்தார்கள் என்ற ஆர்.எஸ் சர்மா, கோசாம்பி போன்ற மார்க்சிய வரலாற்று ஆய்வாளர்களின் நிலைபாட்டை நாம் ஏற்கிறோம். ஆரியர் என்ற சொல் ஐரோப்பிய பழங்குடிகளையே (Aryan Tribals) குறிக்கும். பார்ப்பனர்களை அல்ல. ஆரிய (அ) ஐரோப்பிய காலனி ஆதிக்கவாதிகள் பார்ப்பனர்களை ஆரியர்களாகக் கருதவில்லை. பார்ப்பனர் என்பது சாதிப் பிரிவைக் குறிக்கிறது; இனத்தைக் குறிக்கவில்லை. பிராமணர்கள் என்பார் ஆரிய பழங்குடிகள் மற்றும் இந்தியப் பழங்குடிகளின் கலப்பின் விளைவாக தோன்றியவர்கள் ஆவர். அவர்கள் தனிச் சொத்துடைமையின் விளைவாக உருவான வர்க்கச் சமூகத்தில் சுரண்டல் வர்க்கமாக இருந்தனர். இந்த கலப்பின் காரணமாகவும் உருவ வழிபாடு மற்றும் சாதி முறையின் காரணமாகவும், பிராமணர்கள் அல்லது பார்ப்பனர்கள் ஆரியத் தூய்மை இழந்துவிட்டனர் என கூறி அவர்களை ஆரியர்களாக ஏகாதிபத்தியவாதிகள் கருதுவதில்லை.

காலனிய இனவாதத்தின் விளைவே ஆரிய மாயை - திராவிட மாயை

1. ஆரிய மாயையால் காங்கிரஸில் திலகர் முதல் தியோசோபிகல் சொசைட்டியின் அன்னிபெசன்ட் அம்மையார் வரை ஆதிக்கத்தையும், பிற்போக்கையும் நிலைநாட்டினார்கள்.

2.            ஆரிய மேன்மை, தூய்மை இனவாதத்தால் உருவான ஆர்எஸ்எஸ் கும்பலின் இந்துத்துவம், ஜெர்மன் பாசிசத்துடன் கூட்டு வைத்துக்கொண்டு இந்துத்துவப் பாசிசமாக வடிவம் பெற்றது.

"இந்து என்பவன் யார்?" என்ற பிரசுரத்தில் சாவர்க்கரின் விளக்கம் வருமாறு:

"இந்து என்பவன் இந்தியாவை தந்தை நாடாகவும், புனித நாடாகவும் கருதவேண்டும். இந்திய முஸ்லிம்களுக்கும், கிருத்துவர்களுக்கும் புனித பூமி அரேபியாவிலும், பாலஸ்தீனத்திலும் இருப்பதால் பித்ரு பூமியை (தந்தை நாடு) புனித பூமியாகக் கருதமாட்டார்கள். கம்யூனிஸ்டுகளுக்கு நாடு என்பதே கிடையாது. ஆகவே இவர்களை வெளியேற்ற வேண்டும்" என்கிறார்.

அதன்பிறகு 1930களில் ஜெர்மன் மற்றும் இத்தாலிய பாசிச சக்திகளுடன் கூட்டு வைத்தது ஆர்எஸ்எஸ் கும்பல். இனத் தூய்மை காக்க ஹிட்லர் யூதர்களை கொன்றொழித்தது போலவே, இங்கே இஸ்லாமியர்களை கொன்றொழிக்க வேண்டும் என்று இக்கும்பல் கூறுகிறது.

'நாம் அல்லது நமது தேசியத்தை வரையறுத்தல்' எனும் நூலில் அடால்ஃப் ஹிட்லர் பாணியில் கோல்வால்கர் பின்வருமாறு கூறுகிறார்:

"இன்று எல்லோரும் ஜெர்மனியின் தேசிய கர்வத்தைப் பற்றி பேசுகிறார்கள். தன் தேசிய இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை தக்கவைத்துக்கொள்ள ஜெர்மனி செமிட்டிக் இனங்களை, யூதர்களை அழித்து உலகத்திற்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இங்கே மிக உயர்ந்த அளவில் தேசிய கர்வம் காணப்படுகிறது. அடிப்படையில் வேறுபாடுகளைக் கொண்ட இனங்களும் கலாச்சாரங்களும் ஒற்றுமை உள்ள ஒரே அமைப்பாக ஒருங்கிணைவது அனேகமாக முடியாது என்பதை ஜெர்மனி எடுத்துக் காட்டியுள்ளது. ஹிந்துஸ்தானில் இருக்கும் நமக்கு கற்கவும், லாபம் அடையவும் அது ஒரு நல்ல பாடம்".

நாஜிசத்திலிருந்து தான் கற்றுக் கொண்டவற்றை கோல்வால்கர் பின்வருமாறு விளக்குகிறார்:

"கூர்மதியுள்ள பழமையான நாடுகளின் அனுபவத்திலிருந்து ஒரு படிப்பினையை நாம் கற்க வேண்டும். இந்துஸ்தானில் வசிக்கும் இந்து அல்லாதவர்கள் இந்து கலாச்சாரத்தையும் மொழியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்து மதத்தை மதிப்பதற்கும் போற்றுவதற்கும் கற்க வேண்டும். இந்து மதத்தை பெருமைப் படுத்துவதைத் தவிர வேறு எத்தகைய கருத்துக்கும் இடம் அளிக்கக்கூடாது. அதாவது இந்த நாட்டையும் அதன் யுகாந்தர மரபுகளையும் வெறுப்புடன் பார்ப்பதை, நன்றி இல்லாத முறையில் நடந்து கொள்வதைக் கைவிட வேண்டும். அத்துடன் பற்றுதல் மற்றும் பக்தி செலுத்துதல் எனும் ஆக்க பூர்வமான அணுகுமுறையை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரே வார்த்தையில் சொல்வதெனில் அவர்கள் அந்நியர்களாக இருக்கக் கூடாது. அல்லது இந்து இனத்திற்கு முற்றிலும் கீழ்ப் படிந்தவர்களாக, எதையும் விரும்பாமல் சலுகைகளை கோராமல் அவர்கள் இந்த நாட்டில் வசிக்கலாம். சிறப்பான முறையில் தங்களை நடத்த வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. குடிமக்களின் உரிமைகள்கூட அவர்களுக்கு கிடையாது" என்கிறார்.

இந்த பிற்போக்கான தத்துவத்தைக் கொண்டே இஸ்லாமியர்களைக் கொன்றொழித்து வருகிறது; குடியுரிமை சட்டங்கள் மூலம் நாடற்றவர்களாக மாற்றுகிறது ஆர்எஸ்எஸ் கும்பல்.

இந்துத்துவம் என்பது இசுலாமியர், கிறித்துவர் போன்ற சிறுபான்மை மதத்தினருக்கு எதிரானது மட்டுமல்ல, அது தன் சொந்த இந்து மதத்திலேயே இருக்கின்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களுக்கும் எதிரானதாகும். இவ்வாறு இரு பக்கமும் கூர் தீட்டப்பட்ட கத்தியாக இந்துத்துவம் விளங்குகிறது.

3. திராவிட இனவாதம் மற்றும் திராவிட மாயையின் விளைவாக தமிழ் தேசிய இனத்திற்கும், அதன் சுயநிர்ணய உரிமைக்கும் பெருங்கேடு ஏற்பட்டது. பெரியார் காங்கிரஸிலிருந்த பொழுது தேசியவாதியாக இருந்தார். அக்கட்சியில் இருந்த பிற்போக்குத்தனம் மற்றும் பார்ப்பனிய ஆதிக்கத்தால் வெளியேறி சுயமரியாதை இயக்கம் துவங்கினார். வர்ணாசிரம எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, சுயமரியாதை போன்ற அவரது நடவடிக்கைகள் சரியான ஒன்றே ஆகும். பிறகு சிங்காரவேலர் மற்றும் ஜீவாவின் நட்பால் சோசலிச சமதர்மக் கருத்துகளைப் பேசத் துவங்கினார். ரஷ்ய பயணத்திற்கு பிறகு அது தீவிரமடைந்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் மொழிபெயர்க்கும் அளவிற்கு சென்றார். இதுவும் அவரின் சரியான அம்சமே. சீர்திருத்தவாதியாக இருந்தவரை அவரை அனுமதித்த பிரிட்டிஷ் அரசு, அவரின் ஏகாதிபத்திய எதிர்ப்பு கருத்துகளை அனுமதிக்கவில்லை. அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அரசின் அச்சுறுத்தலுக்கு பயந்து, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோசலிஸ கருத்துகளை அவர் கைவிட்டார். பிறகு நீதி கட்சியில் இணைந்து ஏகாதிபத்தியத் தாசராக மாறினார். சமதர்மப் பாதையை கைவிட்டதற்கான காரணம் குறித்து பெரியார் இவ்வாறு கூறுகிறார்:

"சர்க்கார் வலிமையானது. அது நம்மை அடக்கி ஒடுக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டால் இனி புத்தியுடன் செயல்பட வேண்டியுள்ளது... ஆகவே சுயமரியாதை இயக்கமே இன்றைய தேவை...ச் இது ஜீவா மற்றும் சிங்காரவேலருக்கு பிடிக்காது. என்ன செய்வது? வேறு வழியில்லை" என்று தனது சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்தினார். இவ்வகையில் காவுத்ஸ்கி, பிரசந்தா, பெரியார் மூவரும் ஒன்றே. தனது ஏகாதிபத்திய அடிமைத்தனத்திற்கு பின்வருமாறு விளக்கம் தந்து, தனது சுய மரியாதையின் வர்க்கப் பண்பை பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்: "வெள்ளைக்காரன் காலை நக்கியவர்கள் என்று நீங்கள் எங்களை கேவலமாகச் சொல்லலாம். பார்ப்பான் காலை விட வெள்ளைக்காரன் கால் சுத்தமானது. அது சாக்ஸ் போட்ட கால். சுத்தமாக இருக்கும். இதை நக்குவதை விட அதை நக்குவது என்பது நல்லது என்று பெரியார் தனக்கே உரிய பாணியில் ஓங்கி அடித்து பதில் சொன்னார்".

(வீரமணி, மொழியால் தமிழர் இனத்தால் திராவிடர், திமுக வெளியீடு, பக்கம் 65)

ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பகத்சிங்கும் அவரது தோழர்களும் இரத்த சரித்திரம் எழுதிக் கொண்டிருந்த பொழுது நீதிக்கட்சியும், ஆர்.எஸ்.எஸ்சும் இங்கே எச்சில் சரித்திரம் எழுதிக் கொண்டிருந்தன.

இங்கு ஏற்கனவே நிலவி வந்த பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பூசல்கள், கால்டுவெல் வருகைக்குப் பிறகே ஆரிய-திராவிட இனவாத வடிவம் பெற்றது. இரண்டுமே காலனியாதிக்க அடிமைத் தத்துவங்களே. கற்பனையான பழைய பிற்போக்கு பைபிள் கதைகளை அடிப்படையாகக் கொண்டு காலனியாதிக்கவாதிகளும், திருச்சபைகளும், மிஷனரிகளும் சேர்ந்து உருவாக்கிய இந்த ஆரிய-திராவிட இனவாத தத்துவங்களை காங்கிரஸ், ஆர்எஸ்எஸ் மற்றும் நீதிக்கட்சியும் பெரியாரும், அண்ணாதுரையும் வரித்துக் கொண்டனர்.

இந்த திராவிட இனவாதம்தான், இந்தியாவை மூன்றாகப் பிரிக்கும் "இந்துஸ்தான்- திராவிடஸ்தான் - பாகிஸ்தான்" எனும் இனவெறி கோட்பாட்டிற்கு இட்டுச்சென்றது. பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரம் கைமாற்றப்பட்ட பிறகு, மொழிவழி மாநிலம் அமைந்தது. பொது மொழியும், பிரதேசமும் அற்ற திராவிட தேசியம் காலாவதியான பிறகு அண்ணாதுரை திராவிட இனவாதத்தை பின்வருமாறு மறுவரையறை செய்தார்:

"வர்ணாசிரமத்தை ஏற்பவர்கள் ஆரியர்கள். ஏற்காதவர்கள் திராவிடர்கள்" என்றார்.

இவ்வாறு, காலனியாதிக்க ஆதரவு திராவிட மரபின வாதம் தமிழ் தேசிய இன சுயநிர்ணய உரிமைக்கும், இந்திய விடுதலைப் போராட்டத்திற்கும் பெருங்கேடு ஏற்படுத்தியது. இந்தி மொழி எதிர்ப்பு எனும் பெயரில் "ஹிந்தி நெவர், இங்கிலீஷ் எவர்" (Hindi never, English ever) என்று ஆங்கில மொழி அடிமைத்தனத்திற்கும், ஆங்கில மொழியை நிலையான ஆட்சி மொழியாக்கும் நிலைக்கும் இட்டுச் சென்றது. மேலும் செம்மொழி எனும் கூப்பாடு தமிழ் மொழிக்கு இவர்கள் செய்த துரோகத்தை மூடி மறைப்பதே ஆகும். திராவிட கட்சிகள் பாசிச கும்பல்களான காங்கிரசு, பாஜக கட்சிகளுடன் கைகோர்த்துக்கொண்டு மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என புதிய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்கின்றன.

ஆகவே ஆரிய - திராவிட மாயை இரண்டுமே அன்றும் இன்றும் என்றும் காலனிய இனவியலுக்கு சேவை செய்பவையே ஆகும். அன்று பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு சேவை செய்தன. இன்று அமெரிக்கா தலைமையிலான புதிய காலனியச் சுரண்டலுக்கு சேவை செய்கின்றன. ஏகாதிபத்திய நிதி மூலதன நலன்களுக்காக பாசிசத்தை கட்டியமைக்கின்றன. வர்க்கப் போராட்டத்தை மழுங்கடிக்கின்றன. ஆரியம்-திராவிடம் இரண்டுமே ஏகாதிபத்தியமும், திருச்சபையும் கள்ளத்தனமாக ஈன்றெடுத்த இரட்டைகுழந்தைகள் ஆகும். ஒன்று வெள்ளை குழந்தை; இன்னொன்று கருப்பு குழந்தை; ஒன்று காவி - கதர் மடம்; மற்றொன்று கருப்பு மடம்.

தமிழ் தேசியம் பேசுபவர்களின் திராவிட இனவாத எதிர்ப்பு மிகவும் சரியானதே. வரவேற்கக் கூடியதே. ஆனாலும் அவர்கள் ஆரிய இனவாதத்தை ஏற்றுக்கொண்டு திராவிட இன வாதத்தை நிராகரித்து அதற்கு மாற்றாக தமிழ் இனவாதத்தை முன்வைக்கிறார்கள். ஆரிய இன மேன்மையை ஏற்றுக் கொண்டதால்தான் அவர்களும் திராவிடவாதிகள் போலவே பார்ப்பனிய எதிர்ப்பில் வந்து நிற்கிறார்கள். கால்டுவெல்லுக்கு மாற்றாக எல்லிஸ், ஜி.யு.போப் போன்ற தமிழ் இனவாதத்தை முன்னிறுத்திய காலனியாதிக்க வாதிகளை ஆசான்களாக ஏற்கிறார்கள். அவர்களின் திராவிட இன எதிர்ப்பும் கூட தெலுங்கு / வடுகர் எதிர்ப்பாகவே திகழ்கிறது. பார்ப்பனிய எதிர்ப்பை சாதி ஒழிப்பு திட்டமாக பெரியாரைப் போலவே முன்வைக்கிறார்கள். ஆகவேதான் அவர்களின் தமிழ் இனவாதம் திராவிட இன வாதத்திற்கு மாற்றாக அமையவில்லை.

எனவே, இந்திய பாசிசத்தின் இரு வடிவங்களின் சித்தாந்த வேரும் காலனிய இனவாதத்தில் பொதிந்துள்ளது. ஆகவேதான் காலனிய இனவியலை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ்-பாஜக கட்சிகள் இந்திய பாசிசத்தின் இரு முகங்களாகவும்; திராவிட கட்சிகள் இந்திய பாசிசத்தின் தொங்கு சதைகளாகவும் விளங்குகின்றன.

மேலும் ஏகாதிபத்திய எதிர்ப்பையும் பாசிச எதிர்ப்பையும் ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாததாகத் திகழ்கின்றன. அவ்வாறு பிரித்தால் பாசிசத்தை வீழ்த்த முடியாது.

இந்தியப் பாசிச வடிவங்களின் சித்தாந்த வேர் காலனிய இனவியல் என்று சொல்வதினாலும், அதன் பொருளியல் அடிப்படை ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கம் என்று சொல்வதினாலும் ஏகாதிபத்திய சகாப்தம் முழுதும் பாசிசம் வரும் என்று பொருள் கொள்ளக் கூடாது. ஏகாதிபத்திய நிதி மூலதன கும்பல்களின் பொருளாதார நெருக்கடி தீர்க்க முடியாத அளவிற்கு முற்றும்போது ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் பாசிசத்தை கட்டமைக்க வேண்டிய தேவை ஆளும் வர்க்கத்திற்கு எழுகிறது. அவ்வாறு பாசிசம் கட்டமைக்க வேண்டிய சூழலில், இந்தியப் பாசிசம் பெருந்தேசியவெறி, இந்துத்துவம் எனும் இரு வடிவங்களில் எழுகிறது. நாளை இவ்விரு வடிவங்களும் தோற்கும் பட்சத்தில் மதச்சார்பற்ற பாசிசம், திராவிட மாடல் பாசிசம், சமூக நீதி பாசிசம், கேரளா மாடல் எனப்படும் இடதுசாரி பாசிச மாடல் அல்லது ஜனநாயக வேடமிட்ட வேறு பாசிச வடிவங்களையோ கூட எடுக்கலாம்.

(தொடரும்)

இந்திய பாசிசம் மற்றும் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணிக்கான செயல்தந்திரம் - பகுதி - 4 

- சமரன்