பங்குச்சந்தை சூதாடி அதானியின் சொத்துக்களை பறிமுதல் செய்வோம்! துணைபோன மோடி ஆட்சியை தூக்கியெறிவோம்!
சமரன்
பங்குசந்தை மோசடியின் மூலமாக அதானி குழுமம் பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்ததை அம்பலப்படுத்தி அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் ஜனவரி 24 அன்று அறிக்கை வெளியிட்டது. பாசிச மோடி ஆட்சியின் அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு அதானி குழுமம் ஷெல் கம்பெனிகள் என்று சொல்லப்படும் போலி நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் பங்கு விலைகளை செயற்கையாக பன்மடங்கு உயர்த்தி அந்த பங்குபத்திரங்களை கொண்டே பெரிய அளவில் நிதிநிறுவனங்களில் கடன்களைப் பெற்றுள்ளது. அதன் மூலம் இயற்கை வளங்களையும் அரசு மற்றும் பல்வேறு சிறு, குறு நிறுவனங்கள், சில பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களையும் விழுங்கி ஊதி பெருத்திருக்கிறது, பல ஆண்டுகளாக இந்த பங்குச்சந்தை மோசடி ஆட்சியாளர்களின் ஆசிர்வாதத்தால் அரங்கேறி வந்துள்ளது.
கொரோனா கால நெருக்கடிக்குப் பிறகு உக்ரைனை மறுபங்கீடு செய்வதற்கான நேட்டோ -ரஷ்யாவின் பனிப்போர் தொடங்கியது. அது ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான முரண்பாடுகளை மேலும் கூர்மைப்படுத்தியது; மேற்படி போரில் இந்தியா எடுத்த ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைபாட்டால் கோபமடைந்த அமெரிக்கா இந்தியாவை கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. அதானிக்கு கடன் கொடுத்த நிறுவனங்கள் வீழ்ந்துகொண்டிருக்கும் போது அதானி குழுமம் மட்டும் முன்னணி நிறுவனங்கள் பட்டியலில் எவ்வாறு உயர்ந்தது என்பதை ஆய்வு செய்து ஹிண்டன்பர்க் அறிக்கையாக வெளியிட்டது. இப்போது அதுவே அரசியல் ரீதியாக மிகப்பெரிய விவாதமாகியிருக்கிறது.
ஹிண்டன்பர்க் குற்றச் சாட்டுகளும் அதானியின் மோசடியும்
ஹிண்டன்பர்க் நிறுவனம் 88 கேள்விகளைக் கொண்ட குற்றசாட்டுகளின் பட்டியல் எந்தளவுக்கு அதானி குழுமம் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்துகிறது.
அதானி என்டர்பிரைஸஸ், அதானி ட்ரான்ஸ்மிஷன், அதானி டோடல் கேஸ், அதானி க்ரீன் எனர்ஜி, அதானி பவர், அதானி போர்ட்ஸ், அதானி வில்மார் என்ற அதானியின் குழுமத்தின் 7 நிறுவனங்களின் மூலம் பங்கு மதிப்புகளை மோசடியாக மிகைப்படுத்தி காட்டியதால் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் அதன் சொத்து மதிப்பு 819% உயர்ந்திருக்கிறது. கௌதம் அதானியின் சொத்து மதிப்பு கொரோனா காலத்திலிருந்து மூன்று வருடத்தில் ரூ.1,62,000 கோடியிலிருந்து ரூ.9,72,000 கோடியாக 6 மடங்கு உயர்ந்துவிட்டது.
உண்மையில் அதானி குழுமத்தில் மூலதன சுழற்சிக்கு தேவையான வருமானத்தை ஈட்டக் கூடிய நிறுவனம் அதானி போர்ட்ஸ் (துறைமுக கட்டுமானம்) மட்டுமே. 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அது வருமானத்தை ஈட்டக்கூடியதாய் இருக்கிறது. மற்ற நிறுவனங்கள் மோசடியாக உயர்த்திக் காட்டப்பட்ட பங்குகளை வைத்து, அதன் மூலம் கடனை பெற்று இயங்குகிறது.
இந்நிறுவனங்களின் பங்குகளை உயர்த்திக் காட்டுவதற்காக அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 156 துணை நிறுவனங்களை உருவாக்கியது. அதன் மற்ற 7 நிறுவனங்கள் 578 துணை நிறுவனங்களையும், பல கூட்டு நிறுவனங்களையும் பல பெயர்களில் போலி நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. இந்த போலி நிறுவனங்களின் மூலம் 2022ஆம் நிதியாண்டில் மட்டும் 6,025 பரிவர்த்தனைகளை செய்துள்ளது.
அந்த நிறுவனங்களில் சிஇஓ, இயக்குநர்கள் ஆகிய முக்கிய பொறுப்புகளில் கௌதம் அதானியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இருக்கிறார்கள். அதானியின் தம்பி ராஜேஷ் அதானி வைர வணிகம் செய்பவர் இவர் 2004-05ஆம் ஆண்டுகளில் வரி ஏய்ப்பு, ஊழல், மோசடி செய்தல் போன்ற குற்றங்களுக்காக இரண்டு முறை கைது செய்யப்பட்ட குற்றவாளி ஆவார். ஒரு கோடி ரூபாயை தண்டனையாக தண்டம் கட்டியிருக்கிறார். இந்தியாவை விட்டு தப்பிஓடியவர். அவர்தான் அதானி குழுமத்தின் சில நிறுவனங்களின் நிர்வாக இயக்குநராக இன்றுவரை உள்ளார். மைத்துனர் சமீர் வோராவும் வைர வணிகம் செய்பவர். அவரும் வரி ஏய்ப்பு, ஊழல் மோசடி பொய் கணக்கு காட்டுதல் ஆகிய குற்றங்களுக்கான வழக்குகளை எதிர்க்கொண்டிருப்பவர். இவர்தான் ஆஸ்திரேலியா பிரிவிற்கு செயல் இயக்குநராக இருக்கிறார்.
மொரிஷியஸ் நாட்டில் உள்ள 38 போலி நிறுவனங்கள் உட்பட சைப்ரஸ், யுஏஇ, சிங்கப்பூர், கரீபியன் தீவுகளில் பல போலி நிறுவனங்களை அதானியின் அண்ணன் வினோத் அதானி நிர்வகிக்கிறார். வினோத்தின் Labyrinthian Network of Shells நிறுவனம் அதானி நிறுவனங்களில் இழப்புகள் ஏற்பட்டால் மாற்றிக்காட்டுவது, அறிக்கையிடப்பட்ட வருவாயை அதிகரிப்பது, மற்றும் அதானி குழுவில் உள்ள நிறுவனங்களுக்கு பாதகமான நிலை ஏற்படுமானால் முட்டுக்கட்டை போடுவதற்கு இரகசியமாக பணத்தை நகர்த்துவது போன்ற தகிடுதத்த மோசடி வேலைகளை செய்து வருகிறது. மொரிஷியசை தளமாக கொண்டு இயங்கும் இன்னொரு நிறுவனம் குருனால் டிரேட் & இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனம். இது வினோத் அதானி மற்றும் அதானி குழுமத்தின் பல நிறுவனங்களில் சிஇஓ-வாக உள்ள சுபிர் மித்ரா ஆகியோரை கொண்டு இயங்குகிறது. இந்நிறுவனம் மட்டும் 11.71 பில்லியன் ரூபாய் எவ்வித கணக்கையும் காட்டாமல் அதானி குழுமத்தின் பரிவர்த்தனையில் ஈடுபட்டிருகிறது.
இந்த குடும்பத்தின் உறுப்பினர்களை வைத்தே பல போலி நிறுவனங்களின் மூலமாக, இவர்களையே புரோமோட்டர்களாக மாற்றி அதானி குழுமத்தின் பங்குகளை மீண்டும் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் அதிக விலைக்கு வாங்கி செயற்கையாக பங்கின் விலையை பல மடங்கு உயர்த்தி நிதிமோசடி செய்திருக்கிறது.
அதாவது அதானி குழுமத்தின் பங்குகளை அதே குழுமத்தின் பினாமி கம்பெனிகளின் மூலம் மிக அதிக விலைக்கு வாங்கி அதன் மதிப்பை 85% உயர்த்திக் காட்டியிருக்கிறார்கள். அதன் மூலம் இந்நிறுவனம் மிக உயர்ந்த மதிப்பு கொண்ட நிறுவனங்கள் என்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதைவிட இப்படி உயர்த்திக் காட்டப்பட்ட பங்குகளை வைத்தே மேலும் மேலும் கடன்களை பெற்றிருக்கிறார்கள். ஷெல் நிறுவனங்கள் பெயர்களை மறைத்து இதன் மூலம் வரி ஏய்ப்பு, பண மோசடி, ஏலத்தில் போலியான பெயர்களில் பங்கேற்று ஏலத்தைக் கைப்பற்றுவது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளது அதானி குழுமம். அப்படி மூன்றுவருடத்தில் எந்தளவுக்கு உயர்த்திக் காட்டியிருக்கிறார்கள் என்பதை கீழ்க்கண்ட அட்டவணையிலிருந்து அறிய முடியும்.
நிறுவனங்கள் |
சந்தை மூலதனம் (MCap) மில்லியன் ரூபாயில் |
சந்தை மூலதனம் (MCap) மில்லியன் டாலரில் |
1 வருடத்தின் பங்கு ஆதாயம் % (Stock gain) |
3 வருடத்தின் பங்கு ஆதாயம் % (Stock gain) |
அதானி எண்டர்பிரைசஸ் |
39,28,558 |
48,108 |
101% |
1398% |
அதானி டிரான்ஸ்மிசன் |
30,95,771 |
37,910 |
36% |
729% |
அதானி டோட்டல் கேஸ் |
42,75,567 |
52,357 |
118% |
2121% |
அதானி கிரீன் எனர்ஜி |
30,47,678 |
37,321 |
4% |
908% |
அதானி பவர் |
10,62,201 |
13,007 |
167% |
332% |
அதானி போர்ட்ஸ் |
16,68,599 |
20,433 |
8% |
98% |
அதானி வில்மார் |
7,34,123 |
8,990 |
149% |
149% |
மொத்தம் |
1,78,12,498 |
2,18,127 |
|
|
(சந்தை மூலதனம் என்பது நிலுவையில் உள்ள பங்குகளின் மொத்த எண்ணிக்கையை ஒரு பங்கின் தற்போதைய சந்தை விலையை பெருக்குவதன் மூலம் கிடைப்பதாகும்.)
இந்த பங்குச் சந்தை மோசடியில் பல போலி நிறுவனங்களையும் ஊழல் பெருச்சாளிகளையும் பயன்படுத்திதான் சொத்துகளை குவித்திருக்கிறது. அதில் லண்டனை அடிப்படையாக கொண்ட Elara Capital Plc என்ற நிறுவனம் மொரிஷியஸ் தீவை தளமாக கொண்டு இயங்கும் நிறுவனமாகும். இந்த எலரா நிறுவனத்தின் சிஇஓ யாரென்றால்? கேதன் பரேக் பங்கு ஊழலில் தொடர்புடைய தர்மேஷ் தோஷி. இவர் செபியால் குற்றம் சாட்டப்பட்டு தண்டனையும் அளிக்கப்பட்டு இந்தியாவை விட்டு தப்பிச் சென்ற ஒரு குற்றவாளி. இந்த நிறுவனத்தை அடிப்படையாகக் கொண்டே 24,600 கோடி ரூபாய் (3 பில்லியன் டாலர்) ஹோல்டிங்குகளை கொண்டு அதானி குழுமம் பங்குகளை கட்டுப்படுத்துகிறது.
கௌதம் அதானியின் அண்ணன் வினோத் அதானியும், சீன நிறுவனத்தின் நிர்வாகி சாங்க்-சுங்-லிங் என்பவரும் சிங்கப்பூரிலுள்ள ஒரே முகவரியை வைத்துதான் இயங்குகிறார்கள் என்பதை ஹிண்டன்பர்க் அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. இதன்மூலம், சீன நிறுவனத்தோடு கூட்டுச் சேர்ந்துக்கொண்டு இந்த பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதும் அம்பலமாகியுள்ளது.
17 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு அதானி குழுமம் மீண்டும் மீண்டும் ஊழல், பணமோசடி மற்றும் வரி செலுத்துவோர் நிதி திருட்டு போன்ற குற்றச்சாட்டுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது, இதன் மீதான விசாரணை முழுவதும் மோடி அரசால் இன்றுவரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோத வைர வியாபாரம், சுங்க வரி ஏய்ப்பு, போலி ஆவணங்கள் மற்றும் சட்டவிரோத இறக்குமதி ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பலமுறை பல வழக்குகள் வினோத் அதானியின் மீது பதியப்பட்டுள்ளது. ராஜேஷ் அதானி உட்பட குடும்ப உறுப்பினர்களின் மீது வரி ஏய்ப்பு, கடத்தல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டாலும் மத்திய - மாநில அரசுகளும், செபி போன்ற நெறிப்படுத்தும் மையங்களும் கண்டுகொள்ளவில்லை. அதானி குழுமம் அரசியல் அதிகார பீடத்தைப் பயன்படுத்தி லஞ்சம் கொடுத்தோ மிரட்டியோ வழக்கு விசாரணையை சரிகட்டியுள்ளது. இவ்வாறு அதானி குடும்பமே இந்த பங்குச் சந்தை சூதாட்டத்தை நடத்தியிருக்கிறது.
இந்திய சட்டத்தின்படி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளில் 25% அதன் உரிமையாளர் கட்டுப்பாடில் இருக்கக் கூடாது; அதை மற்ற பங்குத்தாரருக்கு கொடுத்திருக்க வேண்டும், அவ்வாறு கொடுக்காமல் போலி நிறுவனங்களைக் கொண்டும், குடும்ப உறுப்பினர்களைக் கொண்டும் போலி பெயரிகளில் பங்குகளை வாங்கி தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொண்டுள்ளது. இது போன்ற ஏமாற்றும் மோசடி நிறுவனங்களை பங்குச் சந்தை பட்டியலிலிருந்தே நீக்க வேண்டும் என்கிறது செபி விதிகள். ஆனால் அனுமார் மோடியின் தயவால் அதானியும் அவரது குடும்பமும் பாதுகாப்பாக வாழ்கிறார்கள்.
இந்த நிறுவனங்கள் கணக்கு வழக்குகளில் சிக்காமல் இருக்க குறுகிய ஆண்டுக்குள் பல நிதி மேலாளர்களை (CFO) மாற்றியிருக்கின்றன. தகுதியற்ற பெயரளவுக்கான நிறுவனத்தை வைத்து தணிக்கை செய்வது என மோசடிகளை மூடி மறைத்துள்ளது. அதில் ஒன்று ஷா தந்தனா என்ற 11 ஊழியர்கள் மட்டுமே கொண்ட நிறுவனம். இவைதான் மிகப் பெரிய நிறுவனங்களுக்கான கணக்குகளை நிர்வகிக்கும் நிறுவனம். அதாவது பெயரளவுக்கு இவர்களை வைத்துக்கொண்டு இரகசியமாக கணக்கு வழக்குகளை நிர்வகிக்கிறது.
அதானி நிறுவனங்களின் மேற்படி ரகசியங்களை ஆராயும் பத்திரிகையாளர்கள், அம்பலப்படுத்தும் அரசியல் விமர்சகர்கள், இயக்கங்கள் ஆகியோர் மீது மோடி அரசின் துணைகொண்டு பொய் வழக்குகளை தொடுத்து சிறையில் அடைத்துள்ளது. தனது செய்திகளை இருட்டடிப்பு செய்வதற்காக செய்தி நிறுவனங்கள், டிவி நிறுவனங்களை விலைக்கு வாங்குவது அல்லது ஒழித்துக் கட்டுவது ஆகிய சட்டவிரோத வேலைகளை செய்தே இதுவரையில் செயல்பட்டிருக்கிறது அதானி குழுமம்.
ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு அதானி குழுமம் ஜனவரி 29 அன்று பதில் அளித்துள்ளது. அதற்கு ஹிண்டன்பர்க்கும் மீண்டும் பதில் கொடுத்துள்ளது. இது அதானியின் மோசடியை மேலும் உறுதிப்படுத்தியது.
அதானி குழுமம் ஹிண்டன்பர்க் நிறுவனம் மீது பின்வருமாறு குற்றம் சாட்டியது: "ஹிண்டன்பர்க் நிறுவனம் என்பது ஷார்ட் செல்லிங் மூலம் ஆதாயம் தேடும் நிறுவனம்; தன் லாபத்திற்கு ஆதாரமற்ற தவறான தகவல்களை பரப்பி ஆதாயம் அடைவதற்காகவே தன்மீது அறிக்கையை வெளியிட்டிருக்கிறது; ஏற்கெனவே இந்நிறுவனம் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது".
அதானி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் தனது வளர்ச்சிக்காக பங்குச் சந்தையில் மூலதனத்தை திரட்டுவதற்கு தொடங்கிய போதுதான் அந்த பங்குகளை மலிவான விலையில் கைப்பற்றுவதற்கு தீய நோக்கோடு செயல்பட்டதாக ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியது.
மேலும், "பங்குப் பத்திரங்கள் மற்றும் அந்நியச் செலாவணி சட்டங்களை நாங்கள் அப்பட்டமாக மீறியுள்ளோம்" என்று அதானி கூறியுள்ளார். ஆனால், எந்த வகையில், நாங்கள் சட்டங்களை மீறியிருக்கிறோம் என்று குறிப்பிட்டு ஒன்றையும் சொல்லவில்லை என்று ஹிண்டன்பர்க் கூறியது.
ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டிற்கு அதானி நிறுவனம் பதிலளிக்கையில், "இது எங்கள் நிறுவனத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, இந்திய நாட்டின் மீதும், சுதந்திரத்தின் மீதும், ஒற்றுமையின் மீதும், நிறுவனங்களின் தரத்தின் மீதும் திட்டமிட்டு தொடுத்திருக்கும் தாக்குதல்" என்று குற்றம் சாட்டியது.
அதற்கு ஹிண்டன்பர்க் நிறுவனம் "அதானி குழுமம் தேசபக்தி போர்வையை தனது பங்குச் சந்தை ஊழலை நியாயப்படுத்துவதற்கு கையாண்டது என்றும் இந்திய நாட்டை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது; தன்மீதான மோசடிக் குற்றச்சாட்டுக்களைத் திசைத்திருப்ப 'தேசியவாதம்' என்ற கதை கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது; அதே வேளையில், இந்திய தேசிய கொடியை தன்மீது போர்த்திக் கொண்டு இந்திய தேசத்தை திட்டமிட்டு கொள்ளையடிக்கும் அதானி குழுமத்தால், இந்தியாவின் வளமான எதிர்காலம் தடுக்கப்படுகிறது என்பதையும் நாங்கள் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறோம்" என்று பதில் அளித்துள்ளது.
அதானி நிறுவனத்தின் மீது கேள்வி எழுப்பினாலே வழக்கு போட்டு அவர்களை பணியவைக்கும் வேலையை செய்கிறது என்று ஹிண்டன்பர்க் அறிக்கை கூறியிருந்தது. 'த வயர்' என்ற ஆங்கில மின்னிதழ் மீது 100 கோடி ரூபாய் நட்டஈடு கேட்டு வழக்கு தொடுக்கப்பட்டது. அதே போல் 'எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி' இதழ் மீதும் வழக்கு போட்டது. அதே போல் எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ் மொரிஷியஷ் முதலீடுகளை பற்றிய செய்தியை வெளியிட்டதற்காக பல கோடிகளை கேட்டு அவதூறு வழக்கு பதிவு செய்தது என அந்த அறிக்கையில் கூறியிருந்தது. இதை மீண்டும் பதிலாக கூறியது.
அதானி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜுகேஷிந்தர் சிங், இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமத்தைத் தொடர்பு கொள்ளவோ அல்லது சரிபார்க்கவோ இல்லை என்று கூறினார். அதற்கு ஹிண்டன்பர்க், "இதுவரை அதானி எங்கள் அறிக்கைக்கு எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. மேலும், நாங்கள் எதிர்பார்த்தது போல், அதானி மிரட்டல் தொனியில் பேசுகிறார்," என்று ட்வீட் செய்துள்ளது.
அதானி குழுமத்தின் சட்டத்துறை தலைவர் ஜதின் ஜலுந்த்வாலா, "அதானி குழுமம் ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு எதிராக இந்தியா மற்றும் அமெரிக்காவில் தண்டனை பெற்றுத் தரக்கூடிய சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருகிறது" என்று கூறினார். ஹிண்டன்பர்க் நிறுவனம் இதற்கு பதில் அளிக்கும் விதமாக அதானி குழுமம் வழக்கு தொடுத்தால் அதை சந்திக்க தயார். "அதானி இதில் தீவிரமாக இருந்தால், அவர் அமெரிக்காவில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். தேவைப்படும் ஆவணங்களின் நீண்ட பட்டியல் உள்ளது. சட்ட நடவடிக்கையின் போது அவரிடம் இவற்றைக் கோருவோம்." என்று பதிலளித்தது.
மேலும், பல அடிப்படையான கேள்விகளுக்கு பதிலே அளிக்கவில்லை அதானி குழுமம். பல கேள்விகளுக்கு சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் எதை எதையோ தகவலாக தந்தது. மொத்தத்தில் அதானி குழுமம் போலி நிறுவனங்களை உருவாக்குவது, பங்குகளை பல மடங்கு உயர்த்திக் காட்டுவது, ஹவாலா கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவது, மோடி ஆட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தி கடன்களை பெறுவது, முதலீடுகள் திரட்டுவது, விதிகளை திருத்தி, தளர்த்தி அரசின் திட்டங்களை தனதாக மாற்றிக்கொள்வது என இதன் மோசடி பட்டியல் நீளமானது.
அதானியை காப்பாற்ற மக்களின் பணமும், நாட்டின் வளங்களும் பொதுத்துறையும் சூறையாடப்படுதல் - அதிகார நிறுவனங்கள் அதானிக்கு சரணடைதல்
ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு அதானி குழுமத்தின் பங்குகள் அதளபாதாளத்தில் வீழ்ந்தது. இதன் விளைவாக 20,000 கோடி மதிப்பிலான எல்.ஐ.சி பங்குகளின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது. அதன் பிறகும் கூட மோடி ஆட்சி அதானி நிறுவனத்தை தூக்கி நிறுத்த எல்.ஐ.சி. நிறுவனத்தின் ரூ.300 கோடியையும், எஸ்.பி.ஐ. தொழிலாளர் ஓய்வூதிய நிதி ரூ.100 கோடியையும், எஸ்.பி.ஐ. காப்பீட்டு நிறுவனத்தின் ரூ.125 கோடியையும் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. மோடி ஆட்சி அதானி குழுமத்தை எப்படியும் தூக்கி நிறுத்தியே ஆகவேண்டும் என்று துடியாய் துடிக்கிறது.
விமான நிலையங்களை நிர்வகிக்கும் அனுபவம் இல்லாத நிறுவனத்திற்கு அந்த திட்டத்தை பெறுவதற்கு அனுமதி இல்லை. ஆனால் அதானிக்காக மோடி அரசு அந்த விதிகளை தளர்த்தி ஆறு விமான நிலையங்களை நிர்வகித்திட அனுமதி கொடுத்துள்ளது.
நிலக்கரி ஏலம் எடுப்பதற்கு 2021-ஆம் ஆண்டு வரையில் மூன்று அல்லது அதற்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கேற்றால் மட்டுமே ஏலம் நடைபெறும். அவ்வாறு இல்லை என்றால் ஏலம் ரத்து செய்யப்படும். ஆனால் மோடி அரசு அதானிக்காக 2021ல் ஏலதாரர்கள் பங்குகொள்ளும் எண்ணிக்கையை மூன்றிலிருந்து இரண்டாகக் குறைத்தது. தகுதி இல்லாத ஏலதாரர்கள் இருந்தால் முதல் முயற்சியிலேயே ஏலம் ரத்து செய்யப்படும் என்ற நிபுணர் குழு பரிந்துரைகளை ஒன்றிய அரசு இப்போது அதானிக்காக காற்றில் பறக்கவிட்டிருக்கிறது. இவ்வளவு அம்பலமான பிறகும் கூட நிலக்கரிச் சுரங்கத்தை ஏலம் எடுக்கும் எந்த அனுபவமும் அதானி நிறுவனத்திற்கு இல்லை என்பதால் கார்ட்டல்கள் அமைத்து மோசடி செய்துள்ளது. மிகப் பெரிய 4 நிலக்கரிச் சுரங்கங்களை அடிமாட்டு விலைக்கு ஏலம் எடுக்க மோடி அரசு துணைபோயுள்ளது. அதானி நிறுவனத்திற்கு தொடர்புடைய பெயரளவிலான நிறுவனம்; அதானி நிறுவனத்தால் கடன் கொடுக்கப்பட்ட அல்லது முதலீடு செய்யப்பட்ட நிறுவனங்களை போலியான போட்டியாளர்களாக காட்டியுள்ளது. ஒரு ஏலத்தில் 1 லட்சம் மட்டுமே முதலீடு கொண்ட ஒரே குடும்ப நிறுவனமான அடிகார்ப் மற்றும் கேவில் மைனிங் நிறுவனத்தை பெயரளவுக்கு போட்டியாளராக காட்டியது. ஆட்சி அதிகாரத்தின் உதவியோடு மிகவும் அடிமாட்டு விலைக்கு ஏலத்தை அதானி குழுமம் சுலபமாக எடுத்திருக்கிறது. ஆட்சி அதிகாரத்தின் உதவியோடு போட்டியாளர்களே இல்லாமல் அடிமாட்டு விலைக்கு அதானி குழுமம் சுலபமாக எடுத்திருக்கிறது.
இவ்வளவுக்குப் பிறகும் மோடி ஆட்சி அதானிக்கு கடன் கொடுப்பதையும், ஒப்பந்தங்கள் வழங்குவதையும் நிறுத்தவேயில்லை.
59 லட்சம் டன் லித்தியம் கனிம வளம் காஷ்மீரில் உள்ளதாக தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதை அதானிக்கு கைமாற்றிவிட மோடி அரசு துடிக்கிறது. காஷ்மீரின் லித்தியம் எடுக்கும் ஏலத்தில் "அதானி வெற்றி பெறுவார், அந்த வணிகத்தில் நுழைவதற்கு அவருக்கு அனுபவம் தேவையில்லை, அதனால் லித்தியம் இருப்பு அதானிக்கு கிடைக்கும் என்று என்னால் ஆரூடம் சொல்லமுடியும்," என்று ராகுல்காந்தியே கூறும் அளவிற்கு இன்று மோடியின் அதானி சேவை தொடர்கிறது.
செபி, அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளும் மத்திய நிதி அமைச்சகமும் அதானி குழுமத்தை பாதுகாத்தது. 2022ஆம் ஆண்டு தேசிய பங்குச் சந்தை நிர்வாக அதிகாரியாக இருந்த சித்ரா சுப்பிரமணியன் தன் அதிகாரத்தை பயன்படுத்தி கார்ப்பரேட்டுகளின் பங்குச் சந்தை மோசடிக்கு துணைபோயிருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. பினாமி பரிவர்த்தனைகள் (தடை) திருத்தம் சட்டம் 2016ன் படி, பங்குச் சந்தை சூதாட்டம், போலி ஷெல் நிறுவன மோசடி ஆகியவற்றில் ஈடுபடும் நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யமுடியும். ஆனால் இதுவரையில் அப்படி ஏதும் செய்யவில்லை. அவை கழிவறை காகிதங்களாகவே மட்டும் இருக்கிறது.
கார்ப்பரேட்டுகளுக்கே எல்லா கடன்களையும் அள்ளிக் கொடுப்பதும் பிறகு வாராக் கடன் என அறிவித்து அவற்றை தள்ளுபடி செய்வதும் வருடா வருடம் வாடிக்கையாகிவிட்டது. வாராக் கடன் பட்டியல் வெளியிடக் கோரி எதிர்கட்சிகளும் உச்சநீதிமன்றமும் மத்திய அரசிடம் கோரிய போதிலும் ரிசர்வ் வங்கியின் விதிகளை காரணம் காட்டி கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கியுள்ள வாராக்கடன் விவரங்களை வெளியிட மறுத்து அவர்களை காப்பாற்றி வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்.
மிக மலிவான விலையில் ரூபிளில் அதிகமான கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிலிருந்து அதானி குழுமம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், MRPL இறக்குமதி செய்கிறது. இவற்றை சுத்திகரிப்பு செய்து பிரிட்டன், அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து மிகப் பெரிய லாபத்தை ஈட்டுக்கிறது. ஆனால் மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விலையை பன்மடங்கு உயர்த்தி கொள்ளையடித்து மக்களை சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்த்தி வருகிறது.
இவ்வளவு மோசடிக்கு பிறகும் இந்த நெருக்கடிகளை சரிசெய்ய கார்ப்பரேட்டுகளுக்கு இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில் மூலதன செலவுக்கு என்று 10 லட்சம் கோடி ஒதுக்கியிருக்கிறது. அதில் பெரும்பகுதியை அதானியும் அம்பானியும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி கைப்பற்றி கொள்கிறார்கள். சிறு, குறு தொழில்களுக்கு ஒதுக்கிய 9,000 கோடி நிதியிலும் கூட அதானியின் இரண்டு நிறுவனங்களும் மட்டும் குறுதொழில் என்ற பெயரில் பெரும்பகுதியை கைப்பற்றி கொள்கிறது. ஆனால் மக்கள் நலத் திட்டங்களுக்கு ஏற்கனவே ஒதுக்கி வந்துள்ள நிதிகளையும் கூட ஒதுக்காமல் மேலும் குறைத்து மக்களுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இந்த நெருக்கடியை எதிர்த்துப் போராடும் மக்கள் மீது பாசிச ஒடுக்குமுறையை ஏவி வருகிறது மோடி அரசு.
அதானி கும்பல் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டின் வளங்களையும் மக்களின் சேமிப்புகளையும் பொதுத்துறையையும் சூறையாடி கொழுத்து வளர்ந்திருக்கிறது.
இந்திய நிறுவனங்களையும் அரசு சொத்துக்களையும் விழுங்கி கொழுத்த அதானி குழும வளர்ச்சியின் வரலாறு
2014ல் உலகளவில் 638வது பணக்காரராக இருந்த அதானி 2022ல் 137.4 பில்லியன் டாலர் சொத்துக்களை குவித்து 3வது பணக்காரராக வளர்ந்திருக்கிறார். இதில் 100 பில்லியன் டாலர் சொத்துக்களை கொரோனாவுக்குப் பிறகான
3 வருடத்திற்குள் குவித்திருக்கிறார். அதானியின் சொத்துகளின் மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 1440 சதவிகிதம் வளர்ந்திருக்கிறது. பங்குவர்த்தக பட்டியல் நிஃப்டி 50ல் 2 நிறுவனங்களும், இந்திய பங்குச் சந்தையில் MSCIயில் 2 நிறுவனங்களும் பட்டியலிடுகின்ற அளவுக்கு சொத்து மதிப்பும் பெருகியது.
அதானி நிறுவனம் மோடி ஆட்சியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி எல்ஐசியிலிருந்து ரூ.77,000 கோடி முதலீட்டை பெற்றது. எஸ்பிஐ வங்கியிடமிருந்து ரூ.81,200 கோடி கடன் பெற்றது. உள்நாட்டு நிதிநிறுவனங்களிடமிருந்து 18% மூலதனத்தை திரட்டியுள்ளது. அதே போல் டாய்ச், பார்க்லேஸ், ஸ்டாண்டர்சார்ட், சிட்டி வங்கி (Deutsche, Barclays StanChart, City Bank) ஆகிய வெளிநாட்டு வங்கிகளிடமிருந்தும் 37%மும் அந்நிய நிதிநிறுவனங்களிடம் பத்திரக் கடன்கள் மூலமாக 27 பில்லியன் டாலரும் (ரூ. 2.16 லட்சம் கோடி) கடன் பெற்றது என அதன் மூலதன திரட்டலுக்கு வாங்கிய கடன் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
அதானி குழுமம் மோடி ஆட்சியைப் பயன்படுத்தி கடன், முதலீடு ஆகியவற்றை மிக அதிகமாக பெற்று பெரும் ஏகபோக குழுமமாக வளர்ந்துள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் பெயரில் சுரங்கம், கச்சாப் பொருள் உட்பட விவசாயம், இராணுவ தளவாடம், விண்வெளி, துறைமுகம், விமானதளம், சாலை போக்குவரத்து, மெட்ரோ ரயில், நீர், மின் உற்பத்தி, மின்பகிர்மானம், பசுமை எரிசக்தி, எரிவாயு உள்பட உள்கட்டமைப்பு துறைகள் எண்ணெய் & உணவுப் பொருள், டேட்டா சென்டர் ஆகிய துறைகளில் இதை முதலீடாக செய்து லாபம் கொழித்தது.
புதுபுது துறைகளில் நுழைவது மட்டுமல்ல, ஏற்கெனவே பல்வேறு கார்ப்பரேட்டுகளை விழுங்குவதும் தொடர்கிறது. மும்பை ரிலையன்சின் மின்பகிர்மான வர்த்தகத்தை தனதாக்கிக் கொண்டது. சத்தீஸ்கரில் ஜிஎம்ஆர் அனல் மின் திட்டத்தை விழுங்கிவிட்டது. எல்&டி காட்டுபள்ளி துறைமுகம், ராஜஸ்தானில் கே.இ.சி இண்டர்நேஷனல் மின்பகிர்மான திட்டம், தமிழ்நாட்டில் கோஸ்டல் எனர்ஜான் என்கிற திட்டத்தில் 51% சதவிகிதம், லாங்கோ நிறுவனத்தின் உடுப்பி அனல் மின் திட்டம், ஒடிசாவில் எல்&டி மற்றும் டாட்டாவின் தாம்ரா துறைமுகம் என மற்ற நிறுவனங்களை மட்டுமல்ல ஏற்கெனவே செயல்படுத்திக் கொண்டிருந்த திட்டங்களையெல்லாம் தமதாக்கிக் கொண்டு அசுர வளர்ச்சி பெற்று இந்திய நிறுவனங்களிடம் ஏகபோகம் பெற்றது. 2018ல் மட்டும் 20,000 கோடி ரூபாய் அளவுக்கு மற்ற நிறுவனங்களை கையகப்படுத்தியுள்ளது.
10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியின் உதவியோடு 35 திட்டத்திற்கான ஒப்பந்தங்களை பெற்றது என்றால் எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோகம் உட்பட மோடி ஆட்சியின் 2014-20 ஆண்டுக்குள் அதாவது 6 ஆண்டுக்குள் பெரிய திட்டங்களாக 63 ஒப்பந்தங்களை கைப்பற்றி அதானி சாம்ராஜ்ஜியத்தை நிறுவியுள்ளது.
நிதிமூலதன கும்பலையும் பங்குச் சந்தை ஊழலையும் வளர்த்துவிட்டு பலம்பெற்ற இந்துத்துவ பாசிசம்
ஜி.எஸ்.டி, பணமாக்கல் திட்டம், நீட் என மக்கள் மீது தாக்குதல் நடத்திக்கொண்டே இன்னொரு பக்கம் மோடியின் 'ஆத்மநிர்பார்' 'மேக் இன் இந்தியா (Make in India)' திட்டங்கள் பெயரில் அதானியின் ஊக மூலதன பங்குச்சந்தையுடன் கைக்கோர்த்துக்கொண்டு மிகப் பெரிய ஊழல்-மோசடி-சூதாட்டம் என பிண்ணிப் பிணைந்து பாசிச பாஜக தன்னை வளர்த்துக் கொண்டது.
பங்கு வர்த்தக மோசடியின் மூலம் பெறப்பட்ட நிதி ஆதாரத்தைக் கொண்டு பெரும் லாபமீட்டும் உள்கட்டமைப்புத் துறைகளில் முதலீடு செய்து கொள்ளையடிப்பதே அதானியின் வரலாறாக இருக்கிறது. பங்குவர்த்தக சூதாடி கேதன் பராக் - அதானி கும்பலின் கூட்டு 2002ல் அம்பலமானது. அப்போதும் அதானி காப்பாற்றப்பட்டார். அம்பானி குழுமம் பங்குச் சந்தை மோசடியின் மூலம் மூலதனத்தை பெருக்கிக் காட்டி அதனை வைத்து கடன்களைப் பெற்று வளர்ந்து கொண்டிருக்கிறது.
2009ஆம் ஆண்டு சத்யம் கம்பியூட்டர்ஸ் நிறுவனம் தனது ப்ரோமோட்டர் ராமலிங்க ராசு மூலம் இதே போல் பங்கு மதிப்பை உயர்த்தி மோசடியாக கொள்ளையடித்தது. எஸ்.பி.ஐ, எல்.ஐ.சி. போன்ற அரசு நிதிமூலதனம், அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பணம், தனியார் துறை ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் பணத்தை பங்குச்சந்தையில் வைத்து சூதாடும் ஏகாதிபத்திய, தரகு முதலாளித்துவ கொள்கையால் மக்களின் சொத்துகளை வைத்து மத்திய, மாநில அரசுகள் சூதாடுகிறது.
உற்பத்திக்கு சம்பந்தமில்லாத இந்த பங்குச் சந்தை அமைப்பே மோசடியானது. அதானி நிறுவனம் மொரிஷியஸில் 38 நிறுவனங்கள், பனாமாவில் ஷெல் நிறுவனங்கள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சைப்ரஸ், சிங்கப்பூர் மற்றும் பல்வேறு கரீபியன் தீவுகளில் ஷெல் நிறுவனங்களை நிறுவியுள்ளது. அதே போல், எல்லா நிறுவனங்களும் மடகாஸ்கர், கேமென் தீவுகள் உட்பட பல்வேறு தீவுகளை ஆளும் வர்க்கக் கட்சிகள் அவர்களுக்காக புதையல் தீவுகளாக திட்டமிட்டே உருவாக்குகின்றன. இத் தீவுகள் வரி ஏய்ப்பு, கருப்பு பணம் பதுக்கல், பங்குச் சந்தை மோசடிக்காகவே உருவாக்கப்படுகிறது. கார்ப்பரேட்டுகள் இப்படி மக்களின் பணங்களை சுரண்டுவதற்கும், செல்வங்களை குவிப்பதற்கும் அதை வைத்து நிறுவனத்திற்கு தேவையான நிதிமூலதனத்தை திரட்டுவதற்கும் இந்த மோசடியான பங்குச் சந்தை அமைப்பை பயன்படுத்திக் கொள்கிறது. உற்பத்தியிலேயே எந்த பங்கும் வகிக்காத இந்த பங்குச் சந்தையை ஒழிக்காமல் நாட்டின் உண்மையான வளர்ச்சியை உருவாக்கவே முடியாது.
அதானியின் வீழ்ச்சி ஹிண்டன்பர்க் அறிக்கையால் மட்டும் வந்ததல்ல; சர்வதேச ஊக மூலதன நெருக்கடியினால் வந்தது
அதானி நிறுவனம் மோசடியாக மதிப்பை உயர்த்திக் காட்டி ஏமாற்றியதை ஹிண்டன்பர்க் அறிக்கை அம்பலப்படுத்தியது. இதன் விளைவாக அதானியின் சொத்துமதிப்பு வீழ்ந்தது. இந்த வீழ்ச்சி இந்த அறிக்கையால் மட்டுமல்ல உண்மையில் ஒட்டுமொத்த சர்வதேச ஊக மூலதன நெருக்கடியின் வீழ்ச்சி இந்திய முதலாளிகளின் வீழ்ச்சியாக மாறிவருகிறது. அதானிக்கு எதிரான இந்த அறிக்கை வீழ்ச்சியை வேகப்படுத்தியது. உலக பணக்காரர் பட்டியிலில் 3வது இடத்திலிருந்து தற்போது 68வது இடத்திற்கு அதானி தள்ளப்பட்டார். இதனால் 11 லட்சம் கோடி ரூபாயை அதானி குழுமம் இழந்திருக்கிறது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் நீர்குமிழிப் போல வெடித்து அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்தது. உலக முதலாளித்துவ பொது நெருக்கடியும் சர்வதேச ஊக மூலதன வீழ்ச்சியும் அதானியின் பங்கு வீழ்ச்சியில் வெளிப்பட்டிருக்கிறது. அதாவது அதானியின் வீழ்ச்சி என்பது உருகி மூழ்கும் பனிப்பாறையின் ஒரு முனை (tip of an iceberg) மட்டுமே. ஹிண்டன்பர்க் அறிக்கை அதானியின் ஊதி பெருக்கி மோசடியாக காட்டப்பட்ட பிம்பத்தை அம்பலப்படுத்தியதை மட்டுமே செய்தது.
கொரோனா பொருளாதார மந்தநிலையாலும், உக்ரைன் போர் உருவாக்கிய நெருக்கடியாலும் இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மாபெரும் அரசியல் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. 156 ஒடுக்கப்பட்ட நாடுகளில் பொருளாதார நெருக்கடி உருவாகும் என ஐநாவே அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்கா மீண்டும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. சிலிக்கான் வேலி வங்கி (silicon valley bank) மற்றும் சிக்னேச்சர் (signature bank) ஆகிய இரு வங்கிகளைத் தொடர்ந்து. ஃபஸ்ட் ரிப்பப்ளிக் வங்கியும் (First Republic Bank) திவாலாகி அமெரிக்க பங்குச்சந்தையில் வங்கிகளின் பங்குகள் சரிவடைந்து 90 பில்லியன் டாலர் வரையில் இழப்பை ஏற்படுத்தியது. 56 வங்கிகள் மொத்தமாக வீழ்ந்திருப்பதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து மூடிஸ் அமைப்பு வெஸ்டர்ன் அல்லயன்ஸ் பேங்க்கார்ப், இண்டிரஸ்ட் பைனான்சியல் கார்ப், யுஎம்பி பைனான்சியல் கார்ப், ஜியோன்ஸ் பேங்க் கார்ப், கோமரிக்கா இங்க் ஆகிய வங்கி நிறுவனங்கள் உட்பட இன்னும் 100க்கும் மேற்பட்ட வங்கிகள் திவாலாகும் சூழ்நிலையில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் நெருக்கடியின் சுமைகளை பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்கள் மீது சுமத்தி வருகிறது. பெருமளவில் வேலையிலிருந்து நீக்கம் செய்து வருகிறது. 12,000 ஊழியர்களை நீக்கியது கூகுள் நிறுவனம். 18000 ஊழியர்களை நீக்கியது அமேசான், 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது மைக்ரோசாப்ட், 3,900 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஐபிஎம், 6% ஊழியர்களை நீக்கியது Spotify, 10% ஊழியர்களை பணிநீக்கம் செய்யதது விமியோ, 10% ஊழியர்களைக் குறைத்தது சேல்ஸ்ஃபோர்ஸ்ம் என நாள்தோறும் மிகப் பெரிய நிறுவனங்களின் மதிப்பு வீழ்ந்துகொண்டே செல்வதும், அதனை ஈடு செய்ய வேலை நீக்கம் செய்வதும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
அமெரிக்காவின் நிலை இப்படி என்றால், ஐரோப்பாவின் 2வது மிகப்பெரிய வங்கியாக உள்ள கிரெடிட் சூயிஸ் (credit suisse) வங்கியின் பங்கு மதிப்பு சரிந்து திவாலானது. UBS வங்கி சூயிஸ் வங்கியை வாங்கியது. பிரித்தானிய பங்குச்சந்தையில் வங்கிகளின் பங்குகள் சரிவடைந்து மொத்தமாக 50 பில்லியன் பவுண்டுகள் இழப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, செலவைக் குறைக்க 9,000 பேரை வேலையிலிருந்து நீக்கவும் ஜெர்மனியின் SAP 3000 பேரை வீட்டிற்கு அனுப்பும் நிலைக்கும் நெருக்கடி முற்றிவிட்டது.
இந்த பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் கடுமையான பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு நாள்தோறும் வேலையை விட்டு வெளியேற்றுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதானி குழுமம் தனது நிதிநிலையை சரி செய்ய ரூ.34,900 கோடி பிவிசி ஆலை திட்ட பணிகளை நிறுத்தியிருக்கிறது. இன்ஃபோசிஸ் விப்ரோ நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளத்தை பாதியாக குறைத்துள்ளது. டிசிஎஸ், எச்சிஎல் நிறுவனங்கள் புதிய புராஜக்ட்கள் இல்லாமல் அதே நேரம் செய்துகொண்டிருக்கும் புரோஜக்ட்களை அவுட்சோர்ஸ் செய்ய ஆரம்பித்துள்ளது. ஐசிஐசிஐ நிறுவனம் நெருக்கடியை நோக்கி தள்ளப்பட்டிருக்கிறது. பல இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எதிர்காலம் முற்றிலும் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
இவ்வாறு உலக முதலாளித்துவமே நெருக்கடியில் வீழ்ந்துகொண்டிருக்கிறது. ஏகாதிபத்திய நிதி மூலதன கும்பல் வீழ்கிறது. அவர்களை சார்ந்து நிற்கும் இந்திய தரகு முதலாளித்துவ வர்க்கமும் அதன் ஒரு பகுதியான அதானி குழுமமும் நெருக்கடியில் வீழ்ச்சியை நோக்கி தள்ளப்படுவது தவிர்க்க முடியாதது. இதனால்தான் அதானி நிறுவனத்தின் வீழ்ச்சியை மூழ்கும் பனிப்பாறையின் ஒரு முனை மட்டுமே என்கிறோம். அதானியின் வீழ்ச்சி மிக வேகமாக இருப்பதற்கு காரணம் பங்கு சந்தை மோசடியிலேயே மிக உச்சபட்ச மோசடியில் ஈடுபட்டதுதான் காரணம்.
அதானியை கட்டுப்படுத்த ஹிண்டன்பர்க் அறிக்கை, மோடியை கட்டுப்படுத்த பிபிசி ஆவணப்படம்
இந்தியாவின் மீதான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய காலனிய ஆதிக்கம் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், ஒப்பந்தங்கள் வாயிலாகவும் மிகவும் இறுக்கமானது. தற்போது அமெரிக்காவை சார்ந்து கதிசக்தி திட்டத்தின் கீழ் நிலக்கரி, சிமெண்ட், உரம், உணவு உற்பத்தி உட்பட 156 உள்கட்டமைப்பு திட்டங்களை முடிவு செய்து அதில் முதல் 66 பெரிய திட்டங்களுக்கு 5 லட்சம் கோடி முதலீடு கொண்டுவர திட்டம் தீட்டியிருக்கிறது. அந்தளவுக்கு அமெரிக்காவின் முதலீடும், அதன் அரசியல் ஆதிக்கத்திற்கான ஒப்பந்தங்களும் வலிமையானது. ஆனால் உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுப்பதற்கு, இந்தியாவின் பின்வரும் ரஷ்ய ஆதரவு நிலைபாடுகள் தடையாக இருக்கிறது.
உக்ரைன் போரால் ஏற்பட்ட நிலைமையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ரஷ்யாவிடம் சர்வதேச விலையை விட மிக மலிவான விலையில் அதிகமான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது.
எண்ணெய் வர்த்தகத்தை டாலரில் அல்லாமல் ரூபிளில் வணிகம் செய்கிறது.
ரஷ்யாவின் அணுமின் நிலையப் பொருட்களை தரைவழிப் பாதை வழியாக வங்காளதேசத்திற்கு அனுப்புவதற்கு இந்தியா உதவுகிறது.
இந்தியா ரசியாவிடமிருந்து அதிகமாக இராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்கிறது.
ரஷ்யாவுக்கு அரசியல் நெருக்கடியை உருவாக்க உக்ரைன் போரில் பிப்ரவரி 24, 2022ல் உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷ்யா இணைத்ததை கண்டித்து ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போதும், பிப்ரவரி 24, 2023 அன்று கொண்டுவரப்பட்ட ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தின் போதும் இந்தியா அந்த தீர்மானத்தை புறக்கணித்து ரஷ்ய ஆதரவு நிலை எடுத்தது. சமீபத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திலும் சீனாவோடு இந்தியாவும் புறக்கணித்து அப்பட்டமாக ரஷ்ய ஆதரவை காட்டிக்கொண்டது.
சீனாவுடனான வர்த்தகமும் அந்நிறுவனங்களுடனான கூட்டு நடவடிக்கை இருப்பதாக அமெரிக்கா கருதுகிறது.
குடாமி இண்டர்னேஷனல். சீனாவின் சாங்க்-சுங்-லிங், லிங்கோ-சாங்கின் மகன் சியென்-டிங் சாங், தைவானில் உள்ள அதானி குழுமத்தின் பிரதிநிதி இவர்கள் மூலம் சீனாவோடு இரகசிய உறவு வைத்திருப்பதாக கருதுகிறது.
வடகொரியாவுக்கு பொருளாதார தடை விதித்திருந்த நிலையில் அந்நாட்டிற்கு சீன நிறுவனத்துடன் அதானி கப்பல் நிறுவனமும் சேர்ந்துகொண்டு அந்நாட்டிற்கு இரகசியமாக வர்த்தக பறிமாற்றதை செய்துள்ளது.
இந்நிலையில்தான் மோடியின் இந்த அரசியல் பொருளாதார நகர்வுகளை அமெரிக்கா கட்டுப்படுத்த வேண்டிய தேவையிலிருந்து பிபிசி ஆவணப்படத்தையும், அதானி மீதான ஹிண்டன்பர்க் அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவும் பிரிட்டனும், எதிர் கட்சியான காங்கிரஸ் மூலம் மோடிக்கு நெருக்கடி கொடுக்கிறது. அதானி குழுமத்தின் நடவடிக்கைகளில் சாங் சுங்-லிங்குடன் பங்கு இருக்கிறது என்றும், 20,000 கோடி ரூபாய் எப்படி சென்றது என்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இவரை சேர்த்திருப்பதாகவும் ஹிண்டன்பர்க் அறிக்கையை எடுத்துக் காட்டி ராகுல்காந்தி அம்பலப்படுத்தினார்.
ராகுலின் ஜோடோ யாத்திரையில் ஓபன் சொசைட்டி அறக்கட்டளையின் துணைத் தலைவர் சலில் ஷெட்டி பங்கேற்றார். அதன் தலைவர் ஜார்ஜ் சொரோஸ் என்பவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு ராகுல் காந்தியை வரவேற்றார். ஹிண்டன்பர்க் அறிக்கை இந்தியாவின் கூட்டாட்சி அரசாங்கத்தின் மீதான மோடியின் பிடியை கணிசமாக பலவீனப்படுத்தும், அது இந்தியாவின் ஜனநாயக மறுமலர்ச்சியை உருவாக்கும் என்று சொரோஸ் தெரிவித்தார். இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை தன் கைக்குள்ளேயே வைத்துக்கொள்ள சாம, பேத, தண்டம் என அத்தனை வழிமுறைகளையும் அமெரிக்கா கையாள்கிறது.
அதானியுடனான திமுக அரசு போட்டுள்ள திட்டங்கள்
திமுக அரசு, பங்குச்சந்தை மோசடி அதானி கும்பலுடன் 33 ஒப்பந்தங்கள் போட்டுள்ளது. பசுமை வழிச் சாலை ஒப்பந்தம், காட்டுப்பள்ளி உள்ளிட்ட துறைமுகங்கள், விமான நிலையங்கள், கமுதி சோலார் பவர் யூனிட் ஒப்பந்தம், டேட்டா சென்டர், இராணுவத் தளவாட உற்பத்தி முனையம், தூத்துக்குடி அனல் மின்சார உற்பத்திக்கான திட்டத்தில் அதிகபட்ச பங்குகளை பெறுவது, தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்துடன் கூட்டு என பல ஒப்பந்தங்களை கார்ப்பரேட்டுகளின் நலனிலிருந்து போட்டுள்ளது. திமுக அரசும் அதானி போன்ற பெரும் குழுமங்களுக்காக திட்டங்களை போடுகிறது. திமுக அரசு போட்டுள்ள அனைத்து ஒப்பந்தங்களையும் முற்றிலுமாக ரத்து செய்வதற்கு போராட வேண்டும்.
தேசிய வெறியூட்டி பாசிசத்தை கட்டியமைக்கும் மோடி ஆட்சி
பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் ஊக மூலதனத்தின் அழுகல் போக்காலும், புல்லுருவித்தனத்தாலும் இந்தியா கடும் அரசியல் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துக்கொண்டிருக்கிறது. ஊக மூலதனத்தின் இந்த அழுகல் போக்கு உலகமய, தனியார்மய, தாராளமய கொள்கைகளை அமல்படுத்திய பிறகு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. இது பெருமளவு கொள்ளைக்கும், பகாசுர ஊழலுக்கும், மோசடிகளுக்கும் வழிவகுத்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் அதானி குழுமமும் வளர்ந்திருக்கிறது. அதானியின் இந்த நீர்க்குமிழி பொருளாதாரத்தின் (Bubble Economy) வீக்கத்தை நாட்டின் முதலாளித்துவ வளர்ச்சியாக மோடி ஆட்சி காட்டுகிறது. அதானியின் மோசடியை அம்பலப்படுத்துவதை நாட்டின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று தேசிய கொடியை போர்த்திக்கொண்டு பாசிச மோடி கும்பல் தேசிய வெறியை ஊட்டுகிறது.
2019ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில், மோடி என்றாலே மோசடியாளர்களா என்று ராகுல்காந்தி மேடையில் பேசியதை வைத்துக் கொண்டு அவர்மீது தனது கட்சி எம்.எல்.ஏ மூலம் அவதூறு வழக்கு போட்டு - ஆர்.எஸ்.எஸ் நீதிபதியை பதவியிலமர்த்தி 2 ஆண்டு தண்டனை கொடுத்துள்ளது மோடி அரசு. மேல்முறையீட்டிலும் அந்த தண்டனையை உறுதி செய்யும் வகையில் பாசிச கூடாரமாக குஜராத் நீதிமன்றங்கள் மாறியிருக்கிறது. இது மோடி அரசு தனக்கு போட்டியாளரான ராகுல் காந்தியை போட்டியிலிருந்து அகற்ற எடுத்துள்ள பாசிச நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.
அதானியின் மீது ஹிண்டன்பர்க் வைத்த பங்குச்சந்தை மோசடி குற்றச் சாட்டுகளை இந்திய நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று மோடி அரசு கூச்சலிடுகிறது. இந்த தேசிய வெறி கூச்சலில் பாராளுமன்றம், நிர்வாகத்துறை, நீதித்துறை என ஆட்சி அதிகார அமைப்புகள் எல்லாம் கார்ப்பரேட்டுகளுடன் கைக்கோர்த்துக் கொள்கின்றன. மோடி அரசு கார்ப்பரேட்டுகளுக்காகவே சட்டங்களை இயற்றுகிறது; அவர்களுக்காகவே விதிகளை தளர்த்துகிறது; ஏகாதிபத்தியங்களுக்கு அள்ளிக் கொடுக்கிறது; இந்திய நாட்டை பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் வேட்டையாடுவதற்கு திறந்துவிட்டு அவர்களுக்கு காவல் காக்கிறது. பாசிஸ்ட்டுகள் எப்போதும் எதற்கும் வெட்கப்படுவதில்லை. எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. மக்களை பலி கொடுத்து அந்த சாம்பலின் மீதே பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதே முக்தி அடைவதற்கு ஒரே வழி என்று தாண்டவம் ஆடுகிறது.
அதானியின் மோசடியையும் அதை பாதுகாக்க துடிக்கும் மோடியையும் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என எதிர் கட்சிகள் வைத்த கோரிக்கைகளை காதில் கூட வாங்காமல் புறந்தள்ளி நாடாளுமன்றத்தையும் முடக்கியது மோடி அரசு. இந்த மோசடி போலவே 1958ல் கொல்கத்தாவைச் சார்ந்த முந்த்ராவின் நிறுவனத்தைக் காப்பாற்ற செயற்கையாக மதிப்பை உயர்த்திக் காட்டி அந்நிறுவனங்களில் எல்.ஐ.சி முதலீடு செய்த விவகாரத்தில் அன்றைய நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அதானியின் மோசடிக்கு பொறுப்பேற்று மோடியோ, நிதியமைச்சரோ பதவி விலகத் தயாராக இல்லை.
இந்நிலையில் மோசடி செய்து மக்களின் சொத்துகளை சூறையாடிய அதானியை கைது செய்யவும் சொத்துகளை பறிமுதல் செய்யவும் போராட வேண்டும். கார்ப்பரேட்டுகளின் அடிமைகளாக செயல்பட்டு மோசடிக்கு உடந்தையான செபி, வங்கி அதிகாரிகள் உட்பட அனைவரையும் கைது செய்து தண்டிக்க வேண்டும். இவற்றையெல்லாம் விட அரசியல் அதிகாரத்தை கொண்டு கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்வதும், எதிர்த்துப் போராடும் மக்களை ஒடுக்குவதுமான பாசிச ஆட்சியினை நடத்தும் மோடி கும்பல் இனி ஒரு நிமிடம் கூட ஆட்சியிலிருக்க எந்த தகுதியுமில்லை. எனவே பாசிச மோடி அரசை தூக்கியெறிவதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் உறுதியாக போராட முன்வரவேண்டும்.