ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) சட்ட மசோதா 2023: ஊடகத்துறை மீதான மோடி அரசின் பாசிசம்

சமரன்

ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) சட்ட மசோதா 2023: ஊடகத்துறை மீதான மோடி அரசின் பாசிசம்

ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) சட்ட மசோதா இரண்டு முக்கிய நோக்கங்களுக்காக இப்போது கொண்டுவரப்பட்டுள்ளது. ஒன்று, கார்ப்பரேட் ஏகபோக ஆட்சி முறைக்கு உகந்த ஊடக ஏகபோகத்தை நிறுவுவதற்கு மோடி ஆட்சிக்கு இச்சட்டம் தேவைப்படுகிறது.  இரண்டு, அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிரான எள் அளவிலான விமர்சனக் குரலையும் நசுக்குவது.  

2023ம் ஆண்டு நிலவரப்படியே, பத்திரிக்கை மற்றும் ஊடக ஜனநாயகத்தில் உலகளவில் உள்ள 180 நாடுகள் பட்டியலில் இந்தியா 161 வது இடத்தைப் பிடித்துள்ளது. இம்மசோதா கொண்டுவரப்படுவதற்கு முன்பே இந்தியாவின் பத்திரிக்கை சுதந்திரமும் ஜனநாயகமும் பல் இளிக்கிறது. தற்போது இந்த சட்டமும் அமல்படுத்தமெனில் சொல்லவா வேண்டும்? ஆளும் வர்க்க கும்பலின் இந்த பாசிச ஆட்சி தொடருமானால் பெயரளவிலான ஜனநாயகம் என்பதும் சவக்குழிக்குள் அடக்கம் செய்யப்படுவது உறுதி. 

ஊடகங்களின் மூச்சுக்குழலை நெரிக்கும் பாசிச சட்டம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10-ஆம் தேதி, பாஜக அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நாடாளுமன்றத்தில் ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) சட்ட மசோதா - 2023 (Broadcasting Services (Regulation) Bill -2023) ஐ தாக்கல் செய்தார். அதன் மீதான கருத்துக்களை 30 நாட்களுக்குள் அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க கோரியது அரசு. பிறகு அதை ஜனவரி 27 வரை காலக்கெடு வைத்து நீட்டித்தது. ஊடகத்துறையின் பலர் இச்சட்டம் மிகவும் ஆபத்தானது எனக் கூறி எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா, பத்திரிக்கையாளர்களின் தேசியக் கூட்டமைப்பு போன்ற பல்வேறு ஊடக அமைப்புகள் அதை கைவிட வலியுறுத்தி வருகின்றனர். ஊடகத்துறையினரின் பல்வேறு எதிர்ப்புக் குரலுக்கு மத்தியிலும் இச்சட்டம் கைவிடப்படவில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலால், இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது குறித்தான ஆணையை அரசு அச்சகத்தில் இன்னும் வெளியிடவில்லை. ஏற்கனவே தொலைத்தொடர்பு மசோதா 2023, தகவல் தொழில்நுட்ப விதிகள் திருத்தம் 2023, டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் 2023 என அமெரிக்காவின் மாபெரும் கட்டமைப்புத் திட்டத்தின் அங்கமான டிஜிட்டல் பொது கட்டமைப்பை உருவாக்கும் திட்டத்திற்கு சேவை செய்யும் பாசிச சட்டங்களை கொண்டுவந்துள்ளது. இதற்கான அடிமை ஒப்பந்தத்தை மோடி அரசு ஏற்கனவே அமெரிக்காவோடு மேற்கொண்டுவிட்டது. எனவே, தேர்தலுக்குப் பின் எந்த கட்சியின் ஆட்சி அமைந்தாலும் இந்தச் சட்டம் அமல்படுத்தப்படுவது உறுதி. 

இதுவரை நடைமுறையில் இருந்துவந்த கேபிள் டிவி நெட்வொர்க்குகள் (ஒழுங்குமுறை) சட்டம் 1995 (Cable Television Networks (Regulation) Act 1995) ஐ நீக்கிவிட்டு அதனிடத்தில் இந்த சட்ட மசோதாவை முன்வைத்துள்ளது. ஏற்கெனவே இருந்த சட்டத்தின்படி கேபிள் டிவி, செயற்கைக்கோள், வானொலி முதலியவைதான் "ஒளிபரப்பு நெட்வொர்க்" என்ற வரம்பிற்குள் இருந்தது. இந்த புதிய சட்ட மசோதாவில், நெட்ஃபிளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பன்னாட்டு ஓ.டி.டி. தளங்கள் முதல் பிராந்திய அளவிலான மிகச்சிறிய ஓ.டி.டி. தளங்கள் வரை; பிபிசி, டைம், கேரவன் போன்ற பன்னாட்டு டிஜிட்டல் செய்தி ஊடகங்கள் முதல் செந்தளம் போன்ற சிறிய செய்தி ஊடகங்கள் வரை அனைத்தையும் இந்த சட்ட வரம்புக்குள் கொண்டு வந்துள்ளது. ஏன் தனி நபர் நடத்தி வரும் யூடியூப் சானல் முதல் அனைத்து சமூக வலைதள ஊடக ஒளிபரப்புகளுக்கும் இந்த சட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது. ஓ.டி.டி (OTT - Over the top) என்பதன் பொருளே அனைத்துக்கும் மேலான -வரம்புகளுக்கு கட்டுப்படாதது என்பதாகும். இச்சட்ட மசோதா மூலம் அதன் ஊடக சுதந்திரத்தையும் பறித்துள்ளது. 

சென்ற ஆண்டு பிபிசி வெளியிட்ட குஜராத் கலவரத்தின் பின்னணியில் மோடி அரசு ஆவணப்படத்தில், நீங்கள் என்ன தவறு செய்தீர்கள் என்ற கேள்விக்கு, நான் ஊடகங்களை சரியாக கையாளவில்லை என்று மிரட்டும் தொனியில் பேசியிருப்பார். தற்போது அந்த ஊடகங்களின் மூச்சுக்குழலை நெரிக்கும் விதமாக இந்த சட்ட மசோதாவை கொண்டுவந்துள்ளது மோடி அரசு. 72 பக்கங்கள், 6 அத்தியாயங்கள் கொண்ட இந்த சட்ட மசோதாவை வெளியிட்டுள்ளது. அவற்றுள் உள்ள முக்கியமான பாசிச அம்சங்களை மட்டும் இங்கே சுருக்கமாக காண்போம். 

ஒவ்வொரு ஒளிபரப்புக்கும் தணிக்கை

டிஜிட்டல் ஊடகங்களில் பதிவேற்றப்படும் ஒவ்வொரு ஒளிபரப்பு மற்றும் கட்டுரையையும் தணிக்கை செய்ய வலியுறுத்துகிறது இச்சட்டம். 

அதற்காக அத்தியாயம் 4 - பிரிவு 24(1) ன் படி, 3 அமைப்புகளை உருவாக்க பரிந்துரைக்கப்படுகிறது 

  1. பிரிவு 25ன் படி, ஒளிபரப்பாளர்களுக்கான சுய ஒழுங்குமுறை (Self-regulation by broadcasters and broadcasting network operators),
  2. பிரிவு 26ன் படி, சுய ஒழுங்குமுறை அமைப்பு (Self-regulatory Organisations), 
  3. பிரிவு 27ன் படி, ஒளிபரப்பு ஆலோசனைக் குழு (Broadcast Advisory Council) 

பிரிவு 24(2), ஒவ்வொரு ஒளிபரப்பாளரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உள்ளடக்க மதிப்பீட்டுக் கமிட்டியை (Content Evaluation Committee) நிறுவ வேண்டும். இந்த கமிட்டியில் யார் யார் இருக்க வேண்டும்; எத்தனை பேர் இருக்க வேண்டும், என்னென்ன உள்ளடக்கம் கொண்ட நிகழ்ச்சிகளை அக்குழு செயல்படுத்த வேண்டும் என அனைத்தையும் மத்திய அரசே தீர்மானிக்கும். இந்த உள்ளடக்க மதிப்பீட்டுக் கமிட்டி ஒவ்வொரு நிகழ்ச்சியை பரிசீலித்து சான்றளிக்கும். அப்படி சான்றளிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை மட்டுமே ஒளிபரப்பாளர்கள் ஒளிபரப்ப முடியும். 

பிரிவு 25, ஒளிபரப்பாளர்களுக்கான சுய ஒழுங்குமுறையை மேற்கொள்ள ஒரு அலுவலரை நியமிக்க வேண்டும்; அவர் சுய ஒழுங்குமுறை அமைப்பின் உறுப்பினருள் ஒருவராகவும் இருக்க வேண்டும்; நிகழ்ச்சி குறியீடு மற்றும் விளம்பர குறியீடுகளில் உள்ள வேறுபாடுகள் குறித்த புகார்கள் உள்ளிட்ட ஒளிபரப்புகள் மீதான அனைத்து கருத்துகளுக்கும் முகம் கொடுத்து குறிப்பிட்ட தேதிக்குள் அதை ஒழுங்குமுறை குழுவுக்கு கொண்டுச் செல்ல வேண்டும் என்கிறது.

பிரிவு 26, இச்சட்டம் அமலுக்கு வந்த 90 நாட்களுக்குள் ஓவ்வொரு ஒளிபரப்பாளரும் இந்த சுய ஒழுங்குமுறை அமைப்பை கட்டாயம் உருவாக்கி இருக்க வேண்டும்; அதை ஏற்கெனவே அமலில் இருக்கும் சட்ட விதிகளின் படி, மத்திய அரசில் பதிவு செய்திருக்க வேண்டும்; அந்த அமைப்பு சுய ஒழுங்குமுறையை கடைபிடிக்க வேண்டி அனைத்து புகார்களையும் பரிசீலித்து தவறுகளை சுயமாக திருத்தியமைத்துக் கொள்ள வேண்டும்; மீறினால், அதன் உறுப்பினர்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக நீக்கப்படுவதோடு ரூ. 5லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படுவர் என்கிறது.

பிரிவு 27, ஒளிபரப்பு ஆலோசனைக் குழுவை மத்திய அரசே உருவாக்கும்; அதில் 25 வருடத்திற்கும் குறையாமல் ஊடகத்துறையில் அனுபவம் பெற்ற ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவார்; தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம், சமூக நீதி மற்றும் நலத்துறை அமைச்சகம் என 5 துறைகளில் இருந்தும் தலா ஒரு அதிகாரி நியமிக்கப்படுவர்; மேலும் 5 உறுப்பினர்கள் சட்டம், பெண்கள், குழந்தைகள், மனித உரிமை போன்ற துறைகளில் அனுபவம் உள்ளவர்களாக தேர்ந்தெடுத்து அரசே நியமிக்கும்; இக்குழு முழுவதும் மத்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களுக்கு கட்டுப்பட்டே இயங்கும் என்கிறது.

பிரிவு 28 மற்றும் 29 இந்த ஆலோசனைக் குழுவின் பணிகளை விவரிக்கின்றது. அவை ஒளிபரப்பாளர்கள் மீது முழு ஆதிக்கத்தை செலுத்தும். சுய ஒழுங்குமுறை அமைப்புகளில் அளிக்கப்பட்ட புகார்கள் மீதான மேல்முறையீடுகளை இந்த ஆலோசனைக்குழு விசாரிக்கும். மத்திய அரசின் ஆணைகளுக்கு அடிபணிந்து ஒளிபரப்பாளர்களுக்கு அபராதங்கள் விதிக்கவும், தண்டனை வழங்கவும் வழிகாட்டுகிறது. சுய ஒழுங்குமுறை - ஆலோசனை என இந்த அமைப்புகளுக்கு பெயரிடுவதில் வார்த்தை ஜாலங்களில் ஈடுபட்டாலும் இந்தக் குழு உள்ளிட்ட அனைத்து குழுக்களுக்கும் மத்திய அரசாங்கத்தை மீறி சுயேச்சையாக முடிவெடுக்கும் அதிகாரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. 

எனவே எந்தவொரு ஒளிபரப்பு நிறுவனமும் இக்குழுக்களின் தணிக்கை இல்லாமல் அதாவது மத்திய அரசின் தணிக்கை இல்லாமல் எந்தவொரு நிகழ்ச்சியையும் ஒளிபரப்பே செய்ய முடியாத நிலையை உருவாக்கியுள்ளது இந்த சட்டம். 

பார்வையாளர்களின் அந்தரங்க உரிமையை கேள்விக்குள்ளாக்கும் சட்டம்

மசோதாவின் அத்தியாயம் 2 பிரிவு 14(1), ஒளிபரப்பை மேற்கொள்ளும் ஒவ்வொரு நிறுவனமும் தங்களது பார்வையாளர்கள் மற்றும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் துல்லியமான முழு விவரங்களையும் அவ்வபோது கேட்டறிந்து அந்த தகவல்களை உடனுக்குடன் பதிவேற்றம் செய்து பாதுகாக்க வேண்டும் என்கிறது. மேலும், அவர்கள் எவ்வகையான நிகழ்ச்சிகளை விரும்பி பார்க்கிறார்கள் என்பது குறித்தான தகவல்களையும் சேமிக்க வேண்டும் என்கிறது. அதை தொடர்ச்சியான இடைவெளியில் அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் என்கிறது. அதோடு எப்போது வேண்டுமானாலும் வெளியில் இருந்து வரும் தணிக்கையாளருக்கும் அந்த முழுத் தகவலையும் சமர்ப்பிக்க வேண்டும் என்கிறது. 

அதேபோல் பிரிவு 14(2), சந்தாதாரர்களின் தகவல்களை மாநில அரசாங்கத்திற்கோ அல்லது டிராய் (TRAI) அமைப்பிற்கோ வழங்க நேரிடும் பட்சத்தில் அந்த தகவலையும் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்கிறது. 

இதன் மூலம் அனைத்து பார்வையாளர்களின் முழுத் தகவல்கள் உள்ளிட்ட அனைத்து அந்தரங்க விசயங்களும் மத்திய அரசு தெரிந்துக் கொள்ள இச்சட்டம் அனுமதிக்கிறது. இதன் மூலம் ஒளிபரப்பாளர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும், அவர்கள் மீதும் அடக்குமுறைகளை ஏவவும் இச்சட்டம் வழிவகை செய்துள்ளது. 

திட்டமிட்டு வரையறைகளை மூடிமறைக்கும் மசோதா

நிகழ்ச்சிகள், பிரிவுகள் குறித்த எந்த தெளிவான வரையறைகளும் சட்டத்தில் கொடுக்கப்படவில்லை. 

சட்ட மசோதாவின் அத்தியாயம் 3 - பிரிவு 19, அனைத்து நிகழ்ச்சிகளும் ஆலோசிக்கப்பட்ட நிகழ்ச்சிக் குறியீடையும் (Programme Code); அனைத்து விளம்பரங்களும் ஆலோசிக்கப்பட்ட விளம்பரக் குறியீடையும் (Advertising Code) கொண்டிருக்க வேண்டும் என்கிறது. அதுமட்டுமல்ல மசோதாவின் ஏறக்குறைய அனைத்து பக்கங்களிலும் இவ்விரு வார்த்தைகளும் காணப்படுகின்றன. ஆனால் இவை குறித்த வரையறைகள் என்ன என்பது மசோதாவின் எவ்விடத்திலும் கொடுக்கப்படவில்லை. 

அதேபோல், பிரிவு 20, செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகளும் (News and Current affairs programmes) இந்த நிகழ்ச்சி மற்றும் விளம்பரக் குறியீடுகளை உள்ளடக்கி இருக்க வேண்டும் என்கிறது. மேலும் இப்பிரிவு, டிஜிட்டல் செய்திதாள், செய்தி தளம், இணையதளம், சமூக வலைதளம் மற்றும் இதுபோன்ற அனைத்து செய்தி ஊடகங்களுக்கும் ஓ.டி.டி. ஊடகங்களுக்கும் இந்த சட்ட மசோதா பொருந்தும் என்கிறது. இதிலும் நிகழ்ச்சி (Programme) என்பதற்கு தெளிவான வரையறை கொடுக்கப்படவில்லை. ஆனால் அது குறித்தான விதிமுறை மற்றும் வழிகாட்டுதல்களையும் மத்திய அரசே வழங்கும் என்கிறது. ஆனால் அத்தியாயம் 1 - பிரிவு 1(dd) யில் நிகழ்ச்சி என்பதற்கு ஒளிபரப்பப்படும் ஆடியோ, வீடியோ அல்லது இரண்டும் இணைந்தது, அடையாளம், சமிக்ஞைகள், எழுத்துக்கள், படங்கள் என அனைத்தும் உள்ளடங்கும் என்று பொதுவாக குறிப்படப்பட்டுள்ளது. குறிப்பாக இல்லாமல் இப்படி பொதுவாக வரையறுப்பதன் மூலம், அவர்கள் விரும்பினால் ஏகபோக கார்ப்பரேட்களின் அவதூறு ஒளிபரப்புகளை கூட நிகழ்ச்சி என்று வரையறைக்குள் கொண்டுவராமல் தவிர்க்கவும் முடியும் அல்லது எந்தவொரு தனிநபரோ செல்போனில் விருப்பக்குறியீடு (like button) ஐ அனுப்புவதைக்கூட நிகழ்ச்சி என்ற வரையறுத்து இந்த சட்டத்தின் விதிகளுக்கு உட்படுத்த கூடிய அபாயம் உள்ளது.  

பிரிவு 21 மற்றும் 22, ஒவ்வொரு ஒளிபரப்பு அல்லது நிகழ்ச்சிகளும் இது எந்த பட்டியிலின வகையைச் சேர்ந்தது என ஒளிபரப்பின் / நிகழ்வின் அல்லது செய்தியின் தொடக்கத்திலேயே குறிப்பிட வேண்டும் என்கிறது. அதில் உள்ளடக்கம், வகை, எந்த வகையான வாசகர்களுக்கு மற்றும் தர மதிப்பு உள்ளிட்ட விவரங்களையும் குறிப்பிட வேண்டும் என்கிறது. ஆனால் அதில் அப்பட்டியலின் விவரங்கள் கொடுக்கப்படவில்லை. அதையும் மத்திய அரசே வழங்கும் என்கிறது. 

இவ்வாறு எந்தெந்த நிகழ்சிகளை ஒளிபரப்பு முடியும் என்பது குறித்தும் தெளிவான வரையறைகளையோ அதற்கான விதிமுறைகளையோ வெளிப்படையாக கொடுக்கவில்லை. அந்த சமயத்தில் மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கம் அதை நிகழ்ச்சி என்று வரையறுக்கிறதோ - எதை விளம்பரம் என்று வரையறுக்கிறதோ அதைதான் ஒளிபரப்ப வேண்டும்; அதைதான் செய்தியாக வெளியிட வேண்டும். என்ன ஓர் அநியாயம்(!!).

ஒளிபரப்பு நிறுவனங்களை முடக்க எல்லையற்ற அதிகாரம் வழங்கும் சட்டம்

ஒளிபரப்பு நிறுவனங்களில் ஆய்வு நடத்தி அதன் நடவடிக்கைகளை முடக்கவும் இந்த சட்ட மசோதா வழிவகை செய்துள்ளது. 

சட்ட மசோதாவின் அத்தியாயம் - 5 - பிரிவு 30, மத்திய அரசோ அல்லது அதன் எந்தவொரு முகமையோ அல்லது அதனால் நியமிக்கப்பட்ட எந்தவொரு தனி அதிகாரியோ ஒளிபரப்பு நிறுவனங்களை நேரில் சென்று ஆய்வு செய்ய முடியும் என்கிறது. மேலும், அச்சமயங்களில், நிறுவனத்தின் செயல்பாடுகளையும், பணிபுரிவோரின் அனைத்து செயல்பாடுகளையும், உபகரணங்களின் பயன்பாட்டையும் நேரடியாக கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் அதிகாரம் வழங்குகிறது. ஆய்வு செய்வதற்கோ (நீதிமன்றம் உள்ளிட்ட) வேறு எவரிடமோ முன் அனுமதி வாங்கவோ அல்லது சம்பந்தப்பட்டவருக்கு முன்அறிவிப்பு செய்யவோ கூட தேவையில்லை என்கிறது. 

பிரிவு 31, ஆய்வு செய்யும்போது சட்டத்தின் விதிமுறைகள் மீறப்பட்டால் ஒளிபரப்பை உடனடியாக முடக்கி, ஒளிபரப்ப பயன்படும் கணிணிகள், போன்கள், இணைய இணைப்பு கருவிகள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் கைப்பற்ற ஆய்வு செய்பவருக்கு அதிகாரம் வழங்குகிறது. உபகரணங்கள் கைப்பற்றப்பட்ட 30நாட்களுக்குள் ஒளிபரப்பு நிறுவனம் விதிகளை மீறியதற்கான விளக்கம் அளிக்க வேண்டும் என்கிறது. பிரிவு 32 ன் படி குறிப்பிட்ட தேதிக்குள் விளக்கமோ அல்லது மன்னிப்புக் கடிதமோ எழுத்துப்பூர்வமாக கொடுக்கப்படவில்லையெனில் அந்த உபகரணங்களை பறிமுதல் செய்யவும் அதிகாரம் அளிக்கிறது. 

அதே போல் பிரிவு 32, ஆய்வு செய்த அதிகாரியும் கைப்பற்றி 10 நாட்களுக்குள் கைப்பற்றியதற்கான காரணத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்கிறது. அது கோர்ட்டில் ஒளிபரப்பாளர் முறையீடு செய்ய வாய்ப்பளிக்கும் என்கிறது. ஆனால் கோர்ட்டும் இந்த சட்ட விதிகளுக்கு உட்பட்டே தீர்ப்பளிக்கும். அதுவும் ஒரேயொரு முறைதான். வழக்கை மேற்கொள்ளும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டால் அதுவே இறுதியானது என்கிறது. மேல்முறையீடுகளுக்கு வேறு எந்த நீதிமன்றத்தையும் அணுகமுடியாது என்கிறது இந்த கொடிய சட்டம். 

பிரிவு 35, நிகழ்ச்சி குறியீடு அல்லது விளம்பரக் குறீயீடை மீறும்பட்சத்தில் நிகழ்ச்சியை நீக்க வேண்டும்; நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட எச்சரிக்கையை கணக்கில் கொண்டு நிகழ்ச்சியின் நேரம் மற்றும் விவரங்களை குறிப்பிட்டு மன்னிப்பு செய்தியை ஸ்க்ரோல் போர்டில் வெளியிட வேண்டும்; நிறுவன உரிமையாளர் அல்லது தொடர்புடைய பொறுப்பாளர் நேரடியாக மன்னிப்பை வாசிக்க வேண்டும் என்கிறது. இல்லையெனில் அதை செய்யும் வரையில் நிறுவனத்தின் ஒளிபரப்பு நிறுத்தி வைக்கப்படும் என்கிறது அல்லது அபராதம் விதிக்கப்படும் என்கிறது. 

பிரிவு 36ல், எந்தவொரு நிகழ்ச்சியையும் அது ஒளிபரப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும்போதோ அல்லது எப்போது வேண்டுமானாலும் அரசாங்க அதிகாரி தலையிட்டு தடை செய்ய முடியும். அந்த நிகழ்ச்சியினை ஒளிபரப்பளாருக்கு அறிவிப்பு செய்யப்படாமலேயே தளத்தில் இருந்து நீக்கும் அதிகாரத்தையும் இந்த சட்டம் வழங்குகிறது. மதம், மொழி, சாதி, இனம் மற்றும் பிராந்திய பிரச்சினைகளை காரணம் காட்டியோ அல்லது அந்த நிகழ்ச்சியை அரசாங்கம் தனக்கு உவர்ப்பாக கருதினாலோ அல்லது இறையாண்மை, மக்கள் நலன் என்ற வார்த்தை முலாம்களை பயன்படுத்தியோ அல்லது விதிகளுக்கு புறம்பானது எனக் கூறியோ அந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பை நீக்க முடியும் என்கிறது. 

தண்டனைகளும் அபராதமும்

நிகழ்ச்சி, நிகழ்ச்சிக் குறியீடு (Programme Code) மற்றும் விளம்பரக் குறியீடு (Advertising Code) பற்றிய விளக்கங்கள் என்னவென்றே குறிப்பிடப்படாமலேயே தண்டனையும் அபராதமும் வழங்க வழிவகுத்துள்ளது இச்சட்டம். 

அத்தியாயம் 5, பிரிவு 33 (1), சட்டங்கள், விதிகள், வழிகாட்டுதல் உள்ளிட்டவற்றை மீறும் எவராயினும் மூன்றாவது அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள படி தண்டனைகளுடன் கூடிய அபராதங்கள் வழங்கப்படுவர் என்கிறது. 

பிரிவு 33(2), நிறுவனத்தின் உரிமையாளர், விதிமீறல்களுக்கும் பிழைகளும் தனக்கு உண்மையிலேயே தெரியாமல் நடைபெற்றுவிட்டது என்பதை நிரூபிக்க தவறும் பட்சத்தில் அவரும் இந்த தண்டனைக்கும் உள்ளாவார் என்கிறது. 

பிரிவு 33(3), தண்டனைகளை வழங்க அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிக்கே முழு அதிகாரத்தையும் வழங்குகிறது. அவர் விரும்பினால் மட்டுமே நீதிமன்றத்தை நாட முடியும். இல்லையெனில் அந்த அதிகாரி எடுப்பதே இறுதி முடிவு என்கிறது. 

பிரிவு 35, தண்டைகள் இல்லாத ஆலோசனைகள், கண்டனங்கள், எச்சரிக்கைகள் மற்றும் அபராதங்களை பற்றி பேசுகிறது. மசோதாவின் இறுதியில் கொடுக்கப்படுள்ள முதல் அட்டவணையின் படி இவை வழங்கப்படும் என்கிறது. மன்னிப்பதோ அல்லது அபராதம் விதிப்பதோ அந்தத்த அதிகாரியின் முடிவே என்கிறது. இதை எதிர்த்து மத்திய அரசு குறிப்பிடும் மேல்முறையீடு சபையிடம் (அச்சபை எதுவென்று தெளிவாக மசோதாவில் குறிப்பிடவில்லை) 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் அல்லது அபராதத்தை ஏற்க வேண்டும் என்கிறது இப்பிரிவு. 

அதேப் போல் பிரிவு 31(2), நிறுவனத்தின் உபகரணங்களை அதிகாரி பறிமுதல் செய்துவிட்டதாலேயே அபராதத்திலிருந்து விலக்கு அளிக்க உரிமைக் கோரவும் முடியாது என்கிறது. 

அட்டவணை 1, பல்வேறு விதிமீறல்களை பட்டியிலிட்டு ரூ.10 லட்சம் முதல் ரூ.50 கோடிவரை அபராதம் விதிக்கிறது. இதில் நிறுவனங்களை குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள் என்று வகைப்படுத்துகிறது. அவைகளுக்கு பட்டியலில் உள்ள அபராதத்திலிருந்து முறையே 2%, 5%, 50% மற்றும் 100% என விதிக்கிறது, மேலும் பதிவு செய்யாமல் விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு 100% சதவிகிதம் அபராதத்தை விதிக்கிறது. 

அதேப் போல் அட்டவணை 3, பல்வேறு விதிமீறல்களை பட்டியிலிட்டு 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைகளை பரிந்துரைக்கிறது. கூடுதலாக தண்டனையுடன் கூடிய அபராதமாக ரூ.5லட்சம் முதல் ரூ.1கோடி வரை மேலே குறிப்பிட்ட விகிதத்தின் அடிப்படையில் விதிக்கிறது. 

ஊடகத்துறையில் கார்ப்பரேட்களின் ஏகபோகம்

மேலே குறிப்பிட்ட விதிகள், அதாவது சுய ஒழுங்கமைப்பு குழுக்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை சிறு குறு ஊடக நிறுவனங்களால் கண்டிப்பாக பின்பற்ற முடியாது. 

மசோதாவின் அத்தியாயம் -2 ன் பல்வேறு பிரிவுகளில் கொடுக்கப்பட்டுள்ள ஒளிபரப்பு சாதனங்களை நிறுவும் அமைப்புகள், குறைந்தபட்ச உபகரணங்களுக்கான விதிமுறைகள் போன்றவை சிறு குறு நிறுவனங்களை ஒளிபரப்பு உரிமைகளை பெறவோ அல்லது அந்த முறைகளின் கீழ் பதிவு செய்யவோ முடியாத அளவிற்கான நிபந்தனைகளை விதித்துள்ளது. 

மசோதாவின் அத்தியாயம் -6 ல் உள்ள பல்வேறு பிரிவுகளில் சேட்டிலைட் அமைப்புகள், கேபிள், அலைக்கற்றை உள்ளிட்ட கட்டமைப்புகளை நிறுவும் அல்லது மாற்றியமைக்கும் உரிமைகளை மத்திய அரசின் அதிகாரத்தின் கட்டுப்பட்டிலேயே கொண்டு வந்துள்ளது. மத்திய அரசை மீறி எவரொருவரும் ஒளிபரப்புகளுக்கான கட்டமைப்பை பெறவே முடியாது. இங்கு மத்திய அரசு என்றால் அது மக்களுக்கான அரசு அல்ல; ஏகபோக பெரும் கார்ப்பரேட்களின் அரசு என்பதை மீண்டும் ஒருமுறை மனதில் நிறுத்தி இவற்றை உள்வாங்க வேண்டும். அரசாங்கத்தின் பின்னணியில் உள்ள ஏகபோக கார்ப்பரேட் நிறுவனமோ அல்லது அமெரிக்க ஏகாதிபத்தியமோதான் யாருக்கு இந்த கட்டமைப்பை பிரித்து வழங்குவது; யார் அக்கட்டமைப்புகளை உருவாக்க முடியும் என்பதையும் தீர்மானிக்கும். 

கூடவே தொலைத் தொடர்பு சட்ட மசோதாவில் கொண்டு வந்துள்ள திருத்தத்தில் இனி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட தொலைத் தொடர்பு சம்பந்தமான உரிமைகளில், ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் ஏல முறைகளை அல்லது வெளிப்படையாக டெண்டர் விடும் முறைகளை கைவிடுவது என்று முடிவெடுத்துள்ளது. அரசு யாருக்கு வழங்க நினைக்கிறதோ அந்த நிறுவனத்திற்கு வழங்க முடியும் என்ற திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. அந்நிறுவனம் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், தேவையான லைசென்ஸ்களை பெற்றிருக்க வேண்டும், அத்துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும், இவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதெல்லாம் இனி தேவையில்லை. எவ்வித தகுதியும் அற்ற நிறுவனத்திற்கும் கூட தொலைத் தொடர்பு சேவைகளை வழங்க அனுமதிக்கிறது அச்சட்டத் திருத்தம். 

அனைத்து பொருளாதாரமும் ஒன்றுக்குவிக்கப்பட்டு ஏகபோகமடைந்து வருகிறது. இந்த பொருளாதார ஏகபோகம் தனக்கு சேவை செய்ய ஊடகம் உள்ளிட்ட அனைத்து அரசியல் துறைகளிலும் ஏகபோகத்தை கோருகிறது. எனவே ஊடகத்துறையில் ஏகபோகத்தை நிறுவுவதையும் நோக்கமாக கொண்டுதான் இச்சட்டங்களை கொண்டுவந்துள்ளது மோடி அரசு. 

கருத்துரிமைக்கு சவக்குழி வெட்டும் பாசிச சட்டம்

ஏற்கனவே உள்நாட்டில் இயங்கும் (ஏறக்குறைய) அனைத்து பிரதான ஊடகங்களும் (Mainstream) மோடி அரசின் ஊதுகுழலாக மாறிவிட்டன. சிறு குறு டிஜிட்டல் ஊடகங்கள்தான் அரசை எதிர்த்து குரல் எழுப்பி வருகின்றன. மேலும், மக்கள் விரோத அனைத்து கொள்கைகளும் திட்டங்களும் யூடியூப், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில்தான் பெரும்பாலும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு இருக்கும் அரைகுறை கருத்துரிமையைப் பறிப்பது மட்டுமல்ல, இவற்றை ஊடக பட்டியலில் இருந்து ஒழித்துக் கட்டுவதே இந்த சட்ட மசோதாவின் நோக்கமாக உள்ளது. மேலும் பிபிசி, கேரவன் போன்ற பன்னாட்டு ஊடகங்கள் அரசின் கொள்கைகளை விமர்சித்தால் அவற்றில் சேவைகளை முடக்கவும் வழிவகை செய்துள்ளது. அவ்விடத்தில் தனது அரசாங்கத்துடன் கூடிக் குலாவும் கார்ப்பரேட்களின் - அதானியின் என்.டி.டி,வி, அம்பானியின் நியூஸ் 18 போன்ற நிறுவனங்கள் ஊடகத்துறையின் அனைத்து தளங்களிலும் ஏகபோகத்தை உருவாக்கவே இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. அவை இனி அமெரிக்கா மற்றும் பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்களுக்கு சேவை செய்யும் திட்டங்களை விதந்தோதும். அவை அரசின் மாபெரும் சாதனைகளாக புகழ்மாலை சூட்டப்படும். இந்துத்துவ புராணக் குப்பைகளும் பிற மதத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளும் நிரம்பி வழியும். சங்பரிவார சாவக்கர்கள் ஏகாதிபத்தியத்தின் கால் நக்கிப் பிழைத்த அசிங்கங்கள் கூட இனி வீர தீர வரலாறுகளாக சித்தரிக்கப்படும். அவற்றுக்கு எதிர்ப்புக் குரல் என்பதே டிஜிட்டல் மீடியாவில் எங்கும் ஒலிக்காது என்ற நிலையை இச்சட்டம் உருவாக்க உள்ளது. 

ஒருபக்கம், அர்னாப் கோஷ்வாமி போன்ற கோயபல்ஸ் ஊடகவியாலாளர்களை மாநில அரசு கைதுசெய்தால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு விடுதலை செய்கிறது.   மறுபக்கம், மோடி பற்றிய ஆவணப்படம் வெளியிட்டதற்காக, பிபிசி நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறையையும் வருமானவரித் துறையையும் ஏவியது. காஷ்மீரில் நடக்கும் இராணுவ அட்டூழியங்களை வெளியிட்டதற்காக தி கேரவன் நிறுவனத்தின் கட்டுரை 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் இணையதளம் முடக்கப்படும் என்று மிரட்டியது. பிராமணப் பெண் பிரியாணி சமைப்பதாக காட்சிப்படுத்தப்பட்ட அன்னபூரணி திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் இருந்து (மிரட்டி) நீக்க வைத்தது. மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட அரசின் பாசிச ஒடுக்குமுறைகளை கேள்விக்கு உள்ளாக்கிய நியூஸ்கிளிக் நிறுவனத்தின் ஆசிரியர் மீது ஊபா அடக்குமுறை சட்டத்தை ஏவி கைது செய்து சிறையிலடைத்தது. ஜனநாயக உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த இன்னும் பல பத்திரிக்கையாளர்களை, டிவிட்டர் பதிவாளர்களை, எழுத்தாளர்களை மிரட்டியும், கருப்புச் சட்டங்களில் கைது செய்தும், சங்பரிவார குண்டர்களை ஏவி கொலை செய்தும் வருகிறது இந்த பாசிச பாஜக அரசு. இவையனைத்தையும் இதுவரை சட்டவிரோதமாக செய்து வந்தது. இச்சட்டம் அமலுக்கு வருமானால் இக்கொடுஞ் செயல்களை இனி சட்டப்பூர்வமாகவே செய்யும். பத்திரிகையாளர்கள், ஜனநாயக ஆதரவாளர்கள் மட்டுமின்றி, சமூக வலைதளங்களில் உலாவும் - ஓ.டி.டி. தளங்களின், செய்தி வலைதளங்களில் சந்தாதாரர்களாக இருக்கும் - மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து பொதுமக்கள் மீதும் இச்சட்டத்தின் மூலம் அடக்குமுறையை ஏவும் பாசிச அபாயத்தைக் கொண்டுள்ளது இந்த சட்ட மசோதா. 

இதை எதிர்த்து ஜனநாயக ஆதரவு எழுத்தாளர்களும், சினிமா துறையை சேர்ந்த சிலரும், பத்திரிக்கையாளர்கள் ஒரு சிலர் மட்டுமே இதுவரை பேசிவந்துள்ளனர். இதன் மீதான விவாதமே எழாத அளவுக்கு மோடி அரசு திசைத்திருப்பி வருகிறது. பாசிசத்தை வீழ்த்தப்போவதாக கதையளக்கும் திமுக, காங்கிரசு உள்ளிட்ட கட்சிகள் கூட வாய் திறக்கவில்லை; அவை திறக்கவும் செய்யாது. எனவே இச்சட்டத்தை எதிர்த்தும் பாசிச அடக்குமுறைகளை எதிர்த்தும் அனைத்து உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும்தான் ஒன்று திரண்டு போராட வேண்டும். 

- சமரன் (மே 2024 இதழில்)