சிறப்புக் கட்டுரை: 3 மாநில தேர்தல்களில் படுதோல்வி : பாசிச எதிர்ப்பு திட்டமில்லாத 'இந்தியா' கூட்டணி பாஜக விற்கு மாற்று அல்ல!

சமரன்

சிறப்புக் கட்டுரை: 3 மாநில தேர்தல்களில் படுதோல்வி : பாசிச எதிர்ப்பு திட்டமில்லாத 'இந்தியா' கூட்டணி பாஜக விற்கு மாற்று அல்ல!

நாட்டில் எங்கு காணினும் வறுமை! எங்கு காணினும் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு. வாழவழியின்றி தற்கொலைக்குத் தள்ளப்படும் தொழிலாளர்கள் - சிறுகுறு உற்பத்தியாளர்கள் - விவசாயிகள். ஏன், பாஜக ஆட்சியில் சில பெரும் நிறுவனங்கள் கூட திவாலாகிவிட்டன. எங்கும் ஊழல்! எதிலும் ஊழல்! பாஜக ஊழல் செய்யாத துறையே இல்லை எனும் அளவிற்கு அனைத்திலும் ஊழல். இப்படி அனைத்து வாழ்வுத் துறைகளிலும் பாஜக அரசு படுதோல்வியடந்துவிட்டது. ஆனால் இவை மக்களிடையே கொந்தளிப்பு நிலையை உண்டாக்கவில்லை; சாதிவெறியூட்டப்பட்டு - மதவெறியூட்டப்பட்டு அரசுக்கெதிரான அந்த கோபம் மடைமாற்றப் படுகிறது. மக்களை கிளர்ந்தெழ செய்ய வேண்டிய புரட்சிகர அமைப்புகள் மக்கள் மத்தியில் இருந்து பலவீனமடைந்துள்ளன (அதற்கான காரணங்களை பின்னர் வேறொரு தருணத்தில் பரிசீலிப்போம்). இச்சூழலில் பாஜகவின் பாசிச அரசியலுக்கு ஒரே மாற்றாக காங்கிரசு தலைமையிலான 'இந்தியா' கூட்டணி முன்னிறுத்தப்படுகிறது. ஆனால் உண்மையென்னவென்றால் அக்கூட்டணிக்கு பாசிச எதிர்ப்பு திட்டமே இல்லை. 'இந்தியா' கூட்டணி எவ்விதத்திலும் தேர்தல் அரசியலில் கூட பாசிச பாஜகவுக்கு மாற்றாக அமையாது என்பதை சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களே பாடம் புகட்டுகின்றன.     

பாஜக அரசின் தோல்வியும் இந்திய பொருளாதார வீழ்ச்சியும் 

அந்நிய நிதிமூலதன ஆதிக்கம் மற்றும் ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக அமல்படுத்திய உலகமய-தாராளமய-தனியார்மயக் கொள்கைகளின் காரணமாக நாட்டின் நிதிநிலையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் என்பது அம்பானி - அதானி - டாட்டா போன்ற பெரும் தரகுமுதலாளித்துவ கும்பல்களின் வளர்ச்சியாக மட்டுமே மாற்றப்பட்டது. தேசிய முதலாளித்துவ வர்க்கம் அடியோடு துடைத்தெறியப்பட்டது. காலனிய நாடுகளின் பொருளாதாரம் காற்றடைத்த பலூன் போல மாறிவருவதும்; அவை எந்நேரத்திலும் வெடித்து சிதறலாம் என்ற நிலை உலகளவில் பொதுப்போக்காகவே மாறியுள்ளது. பில்லியனர்கள் டிரில்லியனர்களாக மாறுவதும் நடுத்தர வர்க்கத்தினரும் ஏழைகளும் பரம ஏழைகளாக மாறுவதும் என்ற ஏற்றத்தாழ்வு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஏழைகளின் தட்டிலிருந்து உணவு பறிக்கப்படுகிறது; நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப்படுகிறது; கல்வி, மருத்துவம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு வருகின்றன. அவர்களின் எலும்புகளும் மண்டையோடுகளும் கார்ப்பரேட்டுகளின் மாளிகைகளை அலங்கரிக்கின்றன. இப்போக்குகள் அனைத்தும் மோடி ஆட்சியில் பன்மடங்கு அதிகரித்துள்ளன. அமெரிக்காவுக்கும் - பன்னாட்டு - உள்நாட்டு கார்ப்பரேடுகளுக்கும் சேவை செய்வதற்காக - சுரண்டுலுக்குத் தடையாக இருந்த அரைக்குறை கட்டுப்பாடுகளையும் நீக்கி-அனைத்து சட்டங்களையும் திருத்தி பாசிச காட்டாட்சியை நடத்தி வருகிறது மோடி அரசு.

  • மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1000க்கும், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100க்கு மேலும், சமையல் எண்ணெயின் (நல்ல எண்ணெய்)விலை ரூ.400க்கு மேலும் விற்கிறது. அரிசியின் விலை 50% சதவிகிதத்திற்கும் மேல் உயர்ந்துவிட்டது. வெங்காயம், தக்காளி, பூண்டு, காய்கறிகள் மற்றும் பால்பொருட்களின் விலை பற்றி சொல்லவே வேண்டாம். இவை மக்களை உணவிற்காக செலவிடும் தொகையை அதிகரிப்பதற்கும் தங்களின் வயிற்றை சுருக்கிக் கொள்ளும் பட்டினி நிலைக்கும் தள்ளுகின்றது. இதனால் 50% சதவிகிதம் அளவிற்கு வறுமை அதிகரித்துள்ளது. 
  • 2014ல் ரூ.56 ஆக இருந்த டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.83 க்கும் அதிகமாக சரிந்துள்ளது; நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் 140லிருந்து 200க்கும் மேல் அதிகரித்துள்ளது; பணவீக்கம் 7% சதவிகிதத்தை தாண்டி உயர் பணவீக்க சிக்கலில் இந்தியா தவித்துவருகிறது; கடன்களுக்கான வட்டிவிகிதம் (ரெப்போ ரேட்) அதிகரிக்கப்பட்டுள்ளது; ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரித்து வருவதால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஆண்டுக்கு 3% அதிகரித்து வருகிறது; 50 லட்சம் கோடியாக இருந்த அந்நியக் கடன் 205 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது (இது இந்தியாவின் மொத்த பொருளாதாரத்தில் 75% சதவிகிதத்திற்கும் மேல் ஆகும்); வேலையின்மை ஆண்டுக்கு 9% சதவிகிதம் அளவிற்கு உயர்ந்து 40 கோடிக்கும் மேற்பட்டோர் வேலையின்மையால் அவதிப்படுகின்றனர்; 60%க்கும் மேற்பட்ட சொத்துக்கள் ஒரு சில விரல்விட்டு எண்ணக்கூடிய பில்லியனர்களின் கைகளில் குவிக்கப்பட்டு வருகின்றன - இவையே மோடி அரசு கூறும் நாட்டின் வளர்ச்சி(!).
  • ஜிஎஸ்டி வரி விதிப்பு; பணமதிப்பிழப்பு - செல்லாக்காசு அறிவிப்பு, பணமில்லாப் பொருளாதரம் எனும் பெயரில் வங்கிகளிலிருந்து மக்களின் சேமிப்புகள் சூறையாடப்படுவது; ரைட்-ஆப் எனும் பெயரில் கார்ப்பரேட்களுக்கு ரூ.14 லட்சம் கோடி கடன் தள்ளுபடி; கார்ப்பரேட்களுக்கு வரிச்சலுகை, சாமானிய மக்களுக்கு மறைமுக வரிகள்; பணமாக்கல் திட்டங்கள் மூலம் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை தாரை வார்த்தது; மானிய வெட்டு - மாநில உரிமைகள் பறிப்பு என நாட்டின் பொருளாதாரம் சூறையாடப்பட்டு வருகிறது.
  • IMF, WTO, உலகவங்கியின் ஏவல்களுக்கு அடிபணிந்து நாட்டின் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வர்த்தகப் பண்டமாக மாற்றியது; நீட், கியூட் என சுருக்குக் கயிறுகளை மாணவர்கள் கழுத்தில் இறுக்கியது.
  • நிதிமூலதன ஆதிக்கத்திற்கும் கார்ப்பரேட் நலன்களுக்கும் சேவை செய்யும் வகையில் - இராணுவ - பாதுகாப்புத் துறை அடிப்படை ஒப்பந்தங்கள்; ஆசிய-பசிபிக், இந்தோ-பசிபிக், குவாட், பிரிக்ஸ் உள்ளிட்ட இராணுவ -பொருளாதார கூட்டமைப்புகள்; அம்பானி -அதானி -டாட்டா நிறுவனங்களுடன் இராணுவ தளவாட உற்பத்தி, துறைமுகம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பொதுத்துறை -தனியார் பங்கேற்பு ஒப்பந்தங்கள்; வேளாண் சட்டங்கள், சுற்றுச் சூழல் சட்டம், வனச் சட்டம், பல்லுயிர் பெருக்கச் சட்டம், அரிய தனிமங்கள் பயன்பாட்டு சட்டம், நிலச் சீர்திருத்தச் சட்டம் உள்ளிட்ட கார்ப்பரேட் சுரண்டுலுக்குத் தடையாக இருந்த அரைக்குறை கட்டுப்பாடுகளையும் நீக்கி அனைத்து சட்டங்களையும் திருத்துதல் - ஆகியவற்றை செவ்வனே நிறைவேற்றி வருகிறது.
  • உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஊழல், சுங்கச் சாவடிகளில் ஊழல், மருத்துவக் காப்பீடுத் திட்டங்களில் ஊழல், இராணுவ தளவாட உற்பத்தியில் ஊழல், கிராமப்புற மேம்பாடு திட்டத்தில் ஊழல், பங்குச் சந்தை மோசடிகள், 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல், நிலக்கரி ஊழல், ரஃபேல் ஊழல், வியாபம் ஊழல் என அடுக்கிக்கொண்டே போகலாம்... இவ்வளவுதான் தொகை என மதிப்பிட முடியாத அளவிற்கு லட்சக்கணக்கான கோடிகள் மதிப்பிலான ஊழலில் புரள்கிறது.
  • இவையனைத்தையும் எதிர்த்த மக்களின் - ஜனநாயக சக்திகளின் போராட்டங்களை ஒடுக்க குற்றவியல் நடைமுறைச் சட்டம், ஊபா, என்.ஐ.ஏ, தொழில்நுட்பச் சட்டம், தபால்துறை சட்டம், குற்றத் தண்டணைகள் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பாசிச சட்டங்களை சத்தமே இல்லாமல் அமைதி வழியிலேயே நிறைவேற்றி வருகிறது.
  • டெல்லி, கர்நாடகா, மணிப்பூர், ஹரியானா என குஜராத் மாடல் சாதி - மத- இனக்கலவரங்களை கட்டவிழ்த்து மக்களைக் கொன்று புதைத்து வருகிறது. உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் புல்டோசர் பாசிசத்தை ஏவி வருகிறது. நாடு முழுவதும் மசூதிகளை அகழ்வாய்ந்து திருட்டுத்தனமாக கோவில்களாக மாற்றி வருகிறது. ஒரு பக்கம் சட்டங்கள் மூலம் அமைதிவழியிலேயே பாசிசத்தை அரங்கேற்றிக் கொண்டு மறுபக்கம் தேவைப்படும் இடங்களில் இத்தகைய வெளிப்படையான பயங்கரவாதத்தையும் ஏவி வருகிறது.

இவ்வாறு பாஜக அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியுற்று ஆளத் தகுதியற்று அம்பலப்பட்டு நிற்கிறது; மாபெரும் தோல்வியடந்துள்ளது. மக்கள் மத்தியில் அரசின் மீதான அதிருப்தியை (Anti-incumbency) உருவாக்கியுள்ளது. ஆனால் இதை அறுவடை செய்யும் அளவிற்கு எதிர்கட்சிகளின் செயல்பாடுகள் உள்ளதா என்றால் நிச்சயம் இல்லை.

ராஜஸ்தான், ம.பி., சட்டீஸ்கர் மாநில தேர்தல்களில் படுதோல்வியடைந்த காங்கிரசு

கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் டிசம்பரில் வெளியாகியது. அதில் இந்தியாவின் இதயம் (Hindi heartland) என அழைக்கப்படும் மாநிலங்களுள் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் காங்கிரசு பாஜகவுடன் நேரடியான தோல்வியைத் தழுவியுள்ளது. அதில் ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கரில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் பாஜகவிடம் தோற்று ஆட்சியை இழந்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது. தெலுங்கானாவில் ஆட்சியிலிருந்த சந்திரசேகர ராவ்வின் பாரதிய ராஷ்ட்ரா சமிதியை (BRS) வீழ்த்தி காங்கிரசு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மிசோராமில் ஆட்சியிலிருந்த மிசோ தேசிய முன்னணியை (MNF) வீழ்த்தி சோரம் மக்கள் இயக்கம் (ZPM) ஆட்சியைப் பிடித்துள்ளது. பிந்தைய இரு மாநிலங்களும் பாஜக செல்வாக்கு இல்லாத - காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் நேரடி மோதல் இல்லாதவை. இந்த தேர்தல் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரை இறுதி போட்டியாக அல்லது ஒரு முன்னோட்டமாக பார்க்கப் படுகிறது. அப்படியான இத்தேர்தலில்தான் 'இந்தியா' என்ற 25க்கும் மேற்பட்ட கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியை உருவாக்கிய பின்பும் இந்தியாவின் இதயமாகக் கருதப்படும் மாநிலங்களில் கூட வெற்றி பெற முடியாமல் - இருந்த ஆட்சியையும் இழந்துள்ளது காங்கிரசு. இந்த தோல்வி நிச்சயம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்கிறார்கள் தேர்தல் கருத்துக் கணிப்பாளர்கள். கடந்த 2018ல் காங்கிரசு இந்த மாநிலங்களில் நடைபெற்றிருந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்று இருந்தாலும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியையே தழுவியது. ஆகையால் இந்த தேர்தலின் தோல்வியை வைத்து மட்டும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை கணிக்க முடியாது. இருப்பினும் அதன் தோல்விக்கான காரணங்கள் என்னென்ன, அது உருவாக்கியுள்ள 'இந்தியா' கூட்டணி வெற்றியைக் கைப்பற்றுமா என்பதை இத்தேர்தலின் அனுபவங்களில் இருந்து பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வோம்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள தேர்தல் முடிவுகளின் புள்ளி விவரங்களைப் பார்த்தால் தெளிவாகத் தெரிவது தெலுங்கானாவைத் தவிர மற்ற 

4 மாநிலங்களிலும் காங்கிரசின் செல்வாக்கு வீழ்ந்துள்ளது. பாஜகவின் வாக்கு சதவிகிதம்  மிசோரமைத் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் வெகுவாகவே உயர்ந்துள்ளது. மக்கள் மத்தியில் பாஜக அரசின் மீது எழுந்துள்ள அதிருப்தி ஏன் வாக்கு வங்கியில் எதிரொலிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது அல்லவா? காரணம் பாஜக அரசின் மீது மட்டுமல்ல எதிர்க் கட்சிகள் உள்ளிட்ட இந்த ஆளும் வர்க்கக் கட்சிகள் அனைத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து இருப்பதேயாகும். அதனால்தான் மிசோரமில் புதிதாக போட்டிக்கு வந்துள்ள என்.ஜி.ஒ.- வின் வளர்ப்பு பிள்ளையான சோரம் மக்கள் இயக்கத்தை தேர்தலில் வெற்றியடைய செய்துள்ளனர். அன்று அதுவே டில்லியில் நடந்தது; நேற்று பஞ்சாபில் நடந்தது - ஆம்ஆத்மி ஆட்சியைப் பிடித்தது.  

இந்த தேர்தலில் பாஜக அரசு மீது மக்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தியை காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் வாக்காகக் கூட மாற்ற முடியாததற்கான பொதுவான காரணங்களுள் சில:

  1. உட்கட்சி பூசல்
  2. களப்பணியாற்றுவதில் தொய்வு
  3. காங்கிரசின் கார்ப்பரேட் சேவை மற்றும் 
  4. மிதவாத இந்துத்துவப் போக்குகள்
  5. சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய அறிவிப்பு 
  6. மதுவிலக்கு மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள்
  7. நல (ஏமாற்று) திட்டங்கள் அறிவிப்பு
  8. அமலாக்கத் துறையை அரசியல் கருவியாகப் பயன்படுத்தும் பாஜக
  9. செத்துப் பிறந்த 'இந்தியா' கூட்டணி
  10. இவை அனைத்திற்கும் மேலாக பாசிச எதிர்ப்பு திட்டமின்மை 

உட்கட்சி பூசல் : பாஜக போட்டியிட்ட அனைத்து மாநிலங்களிலும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயேதான் போட்டியிட்டது, மத்திய அரசின் முகத்தை (மோடி பிம்பம்) பயன்படுத்தியதோடு தாமரையின் முகமே பாஜகவின் முகம் என தனது கட்சிக்குள் எழுந்த உட்கட்சி பூசலை விவாதப் பொருளாக்காமல் சமாளித்தது. பாஜக அரசின் செயல்பாடுகள் அதிருப்தியை உருவாக்கியிருந்தாலும் மோடிக்காக மட்டுமே வாக்களிப்போரின் எண்ணிக்கை மத்தியப்பிரதேசத்தில் 19% சதவிகிதமாகவும், ராஜஸ்தானில் 24% சதவிகிதமாகவும் உள்ளது. 'மத்தியப்பிரதேச மக்கள் மனதில் மோடி உள்ளார், மோடி மனதில் மத்தியப்பிரதேசம் உள்ளது (Madhya Pradesh ke man me Modi hai, Modi ke man me Madhya Pradesh hai)' என்ற பிரச்சாரத்தை மோடி பிம்பத்தை மையப்படுத்தி முன்னெடுத்தது. அப்படியொரு பிம்பம் ராகுல்காந்திக்கு இதுவரை கட்டியமைக்கப்படவில்லை. ஆகையால் காங்கிரசில் அனைத்து மாநிலங்களிலும் உட்கட்சி பூசல் விவாதப் பொருளாகியது. மத்தியப்பிரதேசத்தில் கமல்நாத் மற்றும் திக்விஜய் சிங் இடையே, சட்டீஸ்கரில் பூபேஷ் பாகெல் மற்றும் டி.எஸ்.சிங் இடையே, அதிலும் குறிப்பாக ராஜஸ்தானில் அசோக் கெலோட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் மற்றும் அசோக் கெலோட்டின் கையில் குவிக்கப்பட்ட அளவுகடந்த அதிகாரமும், தேர்தல் பிரச்சாரப் பணிகளில் பெரும் சுணக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வாறு காங்கிரசு அடிப்படை உறுப்பினர்களை சார்ந்து இயங்காமல் மாநிலத் தலைவர்களை சார்ந்து இயங்கியதும் இந்த சுணக்கத்திற்கு ஒரு முக்கிய காரணம்.

களப்பணியாற்றுவதில் தொய்வு : பாஜக தனது ஆட்சியில் எழுந்துள்ள அதிருப்திகளை மூடி மறைக்க அது சங்பரிவாரங்களை அடிமட்டம் வரை இறக்கிவிட்டு களப்பணியாற்றுகிறது. நாடு முழுவதும் ஒவ்வொரு குக்கிராமங்களிலும் கூட இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் உள்ளிட்ட சங்பரிவாரங்களின் கொடிகள் பறக்கின்றன. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை உள்ள அனைத்து சிறு தெய்வ கோவில்கள் கூட சங்பரிவாரங்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. திருவிழாக்கள் முதல் விநாயகர் ஊர்வலம் வரை மதச் சடங்குகள் அனைத்திலும் அவை ஆதிக்கம் செலுத்துகின்றன. வேலைவாய்ப்பின்மை பேசுப்பொருளாக மாறுவதை இக்கும்பல் திட்டமிட்டுத் தடுக்கிறது; வேலையில்லாப் பட்டாளத்தின் மத்தியில் உள்ள பிற்போக்கு சக்திகளை வாணர சேவைப் படையாக மாற்றி வருகிறது. மதபோதையோடு அபின், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை சப்ளை செய்து இளைஞர்களை தங்களது கட்டுப்பாட்டில் இயக்குகிறது. அவர்களில் குறிப்பிட்ட சிலரை மாதிரியாக தேர்ந்தெடுத்து உள்ளூர் காண்டிராக்ட், மார்க்கெட் ஏலம் உள்ளிட்ட பணிகளில் செல்வாக்கு மிக்கவர்களாக மாற்றுகிறது; இது பிற வேலையில்லா இளைஞர்கள் மத்தியிலும் செல்வாக்கு செலுத்தி அவர்களின் போராட்ட உணர்வை மழுங்கடித்து வருகிறது. இவற்றை செயல்படுத்த ஊழல் பணங்களையும் வெளிநாடுகளில் இருந்து குவியும் பணங்களையும் வாரி இரைக்கிறது இந்த கும்பல். உள்ளூர் காண்டிராக்டர்கள் முதல் வணிகர்கள் வரை ஊடுருவி வேலை செய்கிறது. சமூக வலைத்தளங்களிலும் மோடி மீதான - பாஜக மீதான நேர்மறை பிம்பத்தை கூச்சநாச்சமில்லாமல் பொய் பேசியே கட்டியமைக்கிறது. அதனால்தான் மத்தியப் பிரதேசத்தில் உள்ள 67% சதவிகிதத்தினரும் ராஜஸ்தானில் 79% சதவிகிதத்தினரும் ஆளும் மத்திய பாஜக அரசு மீது தங்களது திருப்தியை வெளிப்படுத்துவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மக்களின் அதிருப்தியை தங்களது பொய்ப் பிரச்சாரம் மற்றும் மதவாத பிரச்சாரம் மூலமே செல்வாக்காக மாற்றி வருகிறது இந்த மோசடி கும்பல். ஆனால் காங்கிரசு கட்சி மக்களிடையே சுத்தமாக களப்பணியாற்றவில்லை. பாஜக அரசின் கொள்கைகளை எதிர்த்து ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசுவதோடு சரி. களத்தில் அவர்கள் கட்சி ஓர் ஆர்ப்பாட்டம் கூட நடத்துவதில்லை. பல ஊர்களில் காங்கிரசுக்கு கிளைகள் கூட கிடையாது. அதனால்தான் ராகுலின் 'ஜோடா யாத்திரை' பெரும் கவனத்தை மக்கள் மத்தியில் குவிக்கவில்லை; மாறாக அது கூட்டணி கட்சிகளுக்குள்தான் சங்கடத்தை ஏற்படுத்தியது.                  

காங்கிரசின் கார்ப்பரேட் சேவை : மத்திய - மாநில பாஜக அரசு மட்டுமல்ல மாநில காங்கிரசு அரசுகளும் கூட கார்ப்பரேட் சேவையில் சளைத்தவர்கள் இல்லையென தங்களை வெளிப்படையாகவே பிரகடனம் செய்து கொண்டனர். சட்டீஸ்கரின் பூபேஷ் பாகெல் தலைமையிலான காங்கிரசு அரசு கொரோனா காலகட்டத்தில் ஓராண்டில் மட்டும் ரூ.42000 கோடி மதிப்பிலான 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. சென்ற ஆண்டு டாட்டா குழுமத்துடன் தகவல் தொழில்நுட்பத் துறைசார் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதானி குழுமத்திற்கு சட்டீஸ்கரின் நிலக்கரி சுரங்கத்தை மோடி அரசோடு இணைந்து தாரைவார்த்தது. ராஜஸ்தான் மாநில காங்கிரசு அரசின் முதல்வர் அசோக் கெலோட் ஒருபடி மேலே சென்று அது அம்பானியோ, அதானியோ அல்லது (அமித்ஷா மகன்) ஜெய்ஷா'வோ யாராக வேண்டுமானால் இருக்கட்டும் அனைவரும் வாருங்கள் உங்களுக்காக ராஜஸ்தானின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என்று பகிரங்கமாகவே அழைப்பு விடுத்தார். அவர்களோடு 2022ம் ஆண்டு - ஒரே ஆண்டில் மட்டும் ரூ. 1.7 லட்சம் கோடி வரை தனியார்மய ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளார். தங்கள் மாநிலங்களில் காங்கிரசு அரசுகள் அமல்படுத்திய தனியார்மய கார்ப்பரேட் நலக் கொள்கைகளும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. இதுபோன்றப் போக்குகளே தெலுங்கானாவிலும், மிசோரத்திலும் ஆளும் கட்சிகள் மீது மக்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியுள்ளன.

மிதவாத இந்துத்துவப் போக்குகள் : பாஜக அரசு தங்களது தோல்வியை மூடிமறைக்க இந்துமதவாத உணர்வுகளைத் தூண்டிவிட்டு இந்துத்துவ பாசிசத்தை கட்டியமைத்து வருகிறது. டெல்லி, கர்நாடகா, மணிப்பூர், ஹரியானா என கலவரங்களை கட்டவிழ்த்து மக்களைக் கொன்று புதைத்து வருகிறது; ராமர் கோவில்-ஒரே நாடு ஒரே கடவுள்-மாயையில் மூழ்கடித்து வருகிறது. மதச்சார்பற்ற கட்சி என்று பேசப்படும் காங்கிரசு, பாஜகவின் இத்தகைய மதவாதப் போக்குகளை அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்வதற்கு மாறாக - தான் மதச்சார்பற்ற கட்சி அல்ல; தானும் இந்துத்துவப் போக்குகளை கையாளும் கட்சியே என்று நடைமுறையில் நிரூபித்தே வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசின் கமல்நாத், ராமர்கோவிலை காங்கிரசு துணையில்லாமல் கட்டியிருக்கவே முடியாது; ராஜீவ் காந்திதான் பாபர் மசூதியில் ராமர் வழிபாட்டிற்கு அடிகோலிட்டவர்; அப்பெருமை எங்களையே சாரும்; வரலாற்றை மறந்துவிடக் கூடாது எனக் கேவலமாக உரிமை கோருகிறார். ராமர் கோவிலுக்கு இலவசமாக அழைத்து செல்லப்படுவீர்கள் என பாஜக அரசு பிரச்சாரம் செய்தால், மத்தியப் பிரதேச எதிர்கட்சியான காங்கிரசு "ஸ்ரீ ராம் வான் கமன் பாதை" திட்டம், இலங்கையில் சீதைக்கு கோவில் கட்டும் திட்டம் என இந்துத்துவ தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியது. பஜ்ரங்தள் அமைப்புக்கு ஆதரவாக பேசிவரும் சட்டீஸ்கரின் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரசு அரசும் இந்துத்துவ வாக்குறுதிகளை பேசி வந்தார். ராஜஸ்தான் உள்ளிட்ட இந்த 3 மாநிலங்களிலும் கோசாலைகளுக்கு நிதி ஒதுக்கீடு, பசுவதை தடை, மாட்டின் சாணங்கள் மற்றும் மூத்திரத்தை அரசே கொள்முதல் செய்யும் திட்டங்கள் என இந்துத்துவத் திட்டங்களை இந்த இரு கட்சிகளின் அரசுகளுமே அமல்படுத்தி வருகின்றன. தெலுங்கானாவில் ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லி-இ-இத்தியாதுல் முஸ்லீமின் (AIMIM) கட்சி பலமாக இருப்பதால், இசுலாமியர்களின் ஓட்டுக்களை குறிவைத்து அங்கு மட்டும் மதச்சார்பற்ற பிரச்சாரம் செய்கிறது காங்கிரசு. நாடு முழுவதும் இசுலாமியர்கள் மீது ஏவப்படும் வன்கொடுமைகளை கண்டித்து பேச வக்கற்று இந்துத்துவத்தை காரியவாதமாக கையாண்டு வருகிறது அக்கட்சி. அதன் மாநிலத் தலைவர்கள் பெரும்பான்மையோர் சங் பரிவாரங்களின் உறுப்பினர்கள் போலவே பேசியும் செயல்பட்டும் வருகின்றனர். இந்த காரியவாதத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அக்கட்சியின் தோல்வி அப்பட்டமாக்கியுள்ளது.                  

சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய அறிவிப்பு : பீகாரில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள் அரசு, மாநில அளவில் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தி அப்புள்ளி விவரங்களை வெளியிட்டதையொட்டி காங்கிரசும் தனது தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாநில அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்றதோடு மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என அறிவித்தது. இதை பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. காங்கிரசு சாதி வாரி கணக்கெடுப்பு மூலம், சாதிரீதியான பிரிவினையைத் தூண்டுகிறது என்று பிரச்சாரம் மேற்கொண்டது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடிகள் இதன் மூலம் பெரிதும் பாதிக்கப்படுவர் என்றும் பிரச்சாரம் மேற்கொண்டது. ஆகையால் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு வாக்குறுதி காங்கிரசுக்கு எதிராக அமைந்தது. ஆனால் பாஜக சாதிரீதியான அணித்திரட்டலை திட்டமிட்டு சிறப்பாக செய்து வருகிறது. சிறுபான்மை அல்லது ஒடுக்கப்படும் ஒவ்வொரு சாதியிலும் அடையாள மாதிரிகளை (tockenism) உருவாக்குவதன் மூலம் தாங்கள் அனைத்து சாதியினருக்குமான கட்சி என்ற மாயை உருவாக்குகிறது. ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த ராம்நாத் கோவிந்த் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்த திரௌபதி முர்மு ஆகியோரை ஜனாதிபதியாக நியமித்தது. தமிழ்நாட்டில் முருகன் போன்று பல்வேறு மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை கொடுத்து அடையாள மாதிரிகளாக மாற்றி வருகிறது. ஏற்கனவே மோடியை மையப்படுத்தி பிற்பட்ட சாதியினருக்கான அல்லது சாமானியர்களின் முகமாக விளங்கும் கட்சி என்ற பிம்பத்தை கட்டியமைத்திருந்தது. தற்போது இந்த tockenism மூலம் அனைத்து சாதி மத்தியிலும் சாதிரீதியான அணிதிரட்டலை செய்வதில் செல்வாக்கு பெற்று வருகிறது. ஏனைய சாதிவாத கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி வருகிறது. பழங்குடிகள் மத்தியிலும் அவர்களை நக்சல் தீவிரவாதிகள் - ரெட் காரிடாரில் இருந்து மீட்டு மறுவாழ்வு ஏற்படுத்துவதாக கூறி சங்பரிவார கொடியை பறக்கவிட்டுள்ளது. இச்செல்வாக்கு இத்தேர்தலின் வாக்கு விகிதத்திலும் எதிரொலித்துள்ளது. சென்ற தேர்தலில் பாரத் ஆதிவாசி கட்சி, பகுஜன் சமாஜ் போன்ற தாழ்த்தப்பட்ட சாதியினரை அடையாளப்படுத்தும் கட்சிகளின் இடங்களையும் அவர்களின் ஓட்டுவங்கியையும் பாஜக பறித்துள்ளது. கணிசமான அளவில் பிற்படுத்தப்பட்ட சாதியிலுள்ள வாக்குகளையும் காங்கிரசை விட அதிகரித்துள்ளது. அதற்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றிய பொய் பிரச்சாரத்தையும் யுக்தியாக மேற்கொண்டது. காங்கிரசின் மாநிலத் தலைவர்கள் குறிப்பிட்ட ஆதிக்க சாதியைச் சார்ந்தவர் - அவர் சார்ந்த சாதிக்குதான் தனது ஆட்சியில் முக்கியத்துவம் அளிப்பார் என்ற பிரச்சாரங்களிலும் ஈடுபட்டது. பாஜகவின் இப்பிரச்சாரங்களை காங்கிரசு எதிர்கொள்ளத் திராணியற்று இருந்தது. மேலும் இசுலாமியர்கள் மத்தியில் உள்ள ஓட்டுகளைப் பிரிக்கும் வேலையிலும் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் வேலூர் இப்ராஹிம் போல பல்வேறு மாநிலங்களில் இசுலாமியர்களின் மத்தியிலும் சங்கிகளை வளர்த்துவிட்டுள்ளது. இவ்வாறு சிறுபான்மை மதத்தினரில் ஒரு சிலரையும் தாழ்த்தப்பட்ட சாதியிலுள்ள ஒரு சிலரையும் பதவி ஆசைக்காட்டி வளைத்துப் போட்டுக் கொண்டு அவர்களின் கைவிரலை வைத்தே அம்மக்களின் கண்களை குத்துகிறது. அவர்களின் மீதான கொடூரமானத் தாக்குதல்களை செயல்படுத்திக் கொண்டே மூடிமறைக்கிறது. மிசோரமில் மட்டும்தான் பாஜகவின் வாக்குவங்கி குறைந்துள்ளது. காரணம், மணிப்பூரில் குக்கி பழங்குடிகள் மீதான வெளிப்படையான பயங்கரவாதத்தை எந்த முகமூடி கொண்டும் அவர்களால் மூடிமறைக்க முடியவில்லை. மிசோரமிலும் அப்பழங்குடியின குழுக்கள் மத்தியில் வெறுப்பை உண்டாக்கியுள்ளது பாஜக அரசு. அங்கு கிறித்துவ தேவலாயங்கள் தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் சக்தியாக மாறியுள்ளன. என்.ஜி.ஓ. மற்றும் கிறித்துவ தேவலாய பிரபுக்களின் கூட்டு லதூமா என்ற முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி தலைமையிலான சோரம் மக்கள் இயக்கத்தை வெற்றியடைய செய்துள்ளது. ஆம் ஆத்மிக்கு பாஜக மறைமுக ஆதரவளித்து வருவதுபோல இங்கும் கூட பாஜக ZPM கட்சிக்கு மறைமுகமாக ஆதரவளித்ததாக கருத்து கணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.     

மதுவிலக்கு மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் : காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலங்களில் மதுவிலக்கை அமல்படுத்த அழுத்தமான கோரிக்கைகள் இருந்த போதிலும் அவற்றை காங்கிரசு அரசுகள் நிறைவேற்றவில்லை. மதுவிலக்கை அமல்படுத்துவதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த சட்டீஸ்கர் மாநில காங்கிரசு (பூபேஷ் பாகெல்) அரசு மதுபானக் கடைகளையும் அதன் விரிவாக்கத்தையும் பெரிதளவில் வளர்த்துவிட்டுள்ளது. இது அம்மாநில பெண்கள் மத்தியில் அரசின் மீதான அதிருப்தியாக மாறியது. ராஜஸ்தானில் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. ஒரு இளம்பெண் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டாள். காங்கிரசு (அசோக் கெலோட்) அரசு அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இம்மாதிரியான நிகழ்வுகள் ராஜஸ்தானில் தொடர்கதையானது. இது அரசின் மீது பெண்கள் மத்தியில் வெறுப்புணர்வை விதைத்தது. அவர்களுக்கு தேர்தலில் தோல்வியைக் கொண்டு வந்ததில் முக்கியப் பங்காற்றியுள்ளது. மறுபுறம், மத்தியப் பிரதேசத்தில் பாஜக (சிவராஜ் சிங் சௌகான்) அரசு கொண்டுவந்த பெண்கள் உரிமைத் தொகை திட்டமான 'லட்லி பெஹ்னா ஸ்கீம் (Ladli Behna scheme)' பெண்கள் மத்தியில் அவரின் செல்வாக்கை (39% சதவிகிதம்) உயர்த்தியதோடு காங்கிரசின் கமல்நாத் செல்வாக்கை (32% சதவிகிதம்) சரித்தது. பெண்களின் தேர்தல் பங்கேற்பு சதவிகிதமும் இந்த தேர்தலில் உயர்ந்ததோடு பாஜகவிற்கு வாக்களித்த பெண்களின் சதவிகிதமும் ஆண்களைவிட உயர்ந்துள்ளது. மேலே கூறிய உத்தியையே பெண்கள் விசயத்திலும் கடைபிடிக்கிறது. ஆஷிபாக்களை கோவில் கருவறைக்குள் தோண்டி புதைத்த இந்த கும்பல் - பெண்கள் விரோத பாஜக அரசு, பெண்கள் நல அரசாக வேடமிட்டு ஏமாற்றி வருகிறது. 

நல (ஏமாற்று) திட்டங்கள் அறிவிப்பு : கல்வி, மருத்துவம் போன்றவற்றை சந்தைப் பொருளாக்கிவிட்டு, RTE மற்றும் மருத்துவக் காப்பீடு திட்டங்கள்; சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை உயர்த்திவிட்டு வருடத்திற்கு 3 விலையில்லா சிலிண்டர்கள் என்ற மோசடி அறிவிப்பு; உணவுப் பொருட்களின் விலைவாசியை பன்மடங்கு உயர்த்தி விட்டு வங்கி கணக்கில் மாதந்தோறும் பணம்; வறுமையை ஒழித்துவிட்டதாக கூவிக் கொண்டே 80கோடி மக்களுக்கு கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட இலவச அரிசித் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு; மின் கட்டணத்தை உயர்த்தி விட்டு பெண்களுக்கு மானிய விலையில் இ-ஸ்கூட்டர்; விவசாயத்தை அழித்துவிட்டு-விவசாயிகளை நிலத்தோடு கொலை செய்துவிட்டு-விவசாயிகளுக்கு பண உதவி திட்டம் என பல்வேறு பெயர்களில் பல்வேறு திட்டங்களை நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசும் அறிவித்து வருவதோடு அவற்றை மேலும் உயர்த்தி தருவதாக வாக்குறுதிகளையும் அள்ளி வீசுகின்றன. ஓர் அரசு மக்களுக்கு அடிப்படையாக செய்ய வேண்டிய அனைத்து தார்மீக பொறுப்புகளிலிருந்தும் விலக்கிக் கொண்டு அனைத்து சேவைகளையும் சந்தைப் பொருளாக்கி விட்டது. நான் உனக்கு குறிப்பிட்டத் தொகையை தந்துவிடுகிறேன், நீ அதை வைத்து வாழ முடிந்தால் வாழ் அல்லது செத்து மடிந்து போ! அரசு ஆற்ற வேண்டிய கடமைகள் - உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பாதே! என்கின்றன. கார்ப்பரேட்களின் சமூக பொறுப்பு என்ற பெயரில் அவர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட வசதியாக இதுபோன்ற திட்டங்களை அவர்கள் தயவில் வாக்குறுதிகளாக அள்ளி வீசுகின்றன. மறுபுறம் விலைவாசி உயர்வு, வரி உயர்வு மூலமும் மக்களின் உழைப்பையும் இரத்தத்தையும் அட்டையாக உறிஞ்சிக் குடிக்கின்றன. அனைத்து சமூக நலப் பொறுப்புகளையும் துறந்துவிட்டு ஏமாற்று மோசடித் திட்டங்களை மக்கள் நலத் திட்டங்கள் என பெயரிட்டு ஏமாற்றி வருகின்றன. இவற்றை இவ்விரு கட்சிகளும் அறிக்கையாக வெளியிட்டாலும், காங்கிரசு ஆட்சிசெய்யும் மாநிலங்களில் அவை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அளவுக்கு நடைமுறைப்படுத்தப் படவில்லை. இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பாஜக பெண்களுக்கான லட்லி பெஹ்னா திட்டத்தில் வழங்கப்பட்ட ரூ.1000 ஐ ரூ. 3000 ஆக உயர்த்தி தருவதாக வாக்குறுதி அளித்துள்ளது. காங்கிரசு அரசு அறிவிப்புகள் வெத்துவேட்டு அறிவிப்புகள் மட்டுமே. ஆனால் எங்களது அறிவிப்புகள் உத்திரவாதமானது என பாஜக பிரச்சாரம் செய்தது - 'மோடியின் உத்திரவாதம் என்பது உத்திரவாதம் என்பதற்கே உத்திரவாதம் (Modi ki guarantee matlab gurantee ki guarantee)' என்ற முழக்கத்தை மையமாக்கியது. பாஜகவின் இந்த பிரச்சாரங்களுக்கும் முகம் கொடுக்க முடியாமல் காங்கிரசு தோற்றது.

அமலாக்கத் துறையை அரசியல் கருவியாகப் பயன்படுத்துதல் : ஊழல் ஒழிப்புப் பிரச்சாரத்தையும் அமலாக்கத்துறையையும் பாஜக ஓர் அரசியல் கருவியாகவே தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகிறது. 'மகாதேவ் ஆப்' எனப்படும் விளையாட்டு போட்டிகளின் மேட்ச் ஃபிக்சிங் மற்றும் சூதாட்ட மொபைல் அப்ளிகேஷன் மூலம் பண மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி ஊழல்களில் சட்டீஸ்கர் மாநில காங்கிரசு முதல்வர் பூபேஷ் பாகலையும் தொடர்புபடுத்தியது. அமலாக்கத் துறையை ஏவிவிட்டு சட்டீஸ்கர் மாநில காங்கிரசு அரசை ஊழல் அரசாக பிரச்சாரம் செய்தது. ஏற்கனவே அமலாக்கத் துறையையும் தேர்தலின் பங்கேற்பாளராக மாற்றி நாடு முழுவதும் பல ஏக்நாத் ஷிண்டேக்களை உருவாக்கியது; எதிர்க் கட்சிகளை உடைத்து தன் வசப்படுத்திக் கொண்டது. சமூக வலைத்தளங்களில் உலாவும் புதிய தலைமுறை இளம் வாக்காளர்கள் மத்தியில் காங்கிரஸ் ஊழல்வாத கட்சி - பாஜக ஊழலை ஒழிக்க வந்த கட்சி என்ற மாயையும் தோற்றுவித்துள்ளது. இந்தியாவின் வரலாற்றில் மாபெரும் ஊழலில் திளைத்து வரும் பாஜகதான் ஊழலை ஒழிப்பதாக வெட்கமின்றி நாடகமாடுகிறது. அதை தேர்தல் பிரச்சார உத்தியாகவும் செய்து வருகிறது. பாஜகவின் ஊழல்களை அம்பலப்படுத்தி அதை மக்கள் இயக்கமாக காங்கிரசு மாற்றவில்லை. அமலாக்கத்துறையின் பிடியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதே இவர்களுக்கு பெரும்பணியாகி விட்டது. 

செத்துப் பிறந்த 'இந்தியா' கூட்டணி : கடந்த ஆண்டு ஜூன் மாதம், காங்கிரசின் தலைமையில்-நிதிஷ்குமார் ஒருங்கிணைப்பில்- திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தள், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட 16 கட்சிகளை உள்ளடக்கிய எதிர்கட்சிகளின் கூட்டணி உருவாக்கப்பட்டது. பின்னர்  ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற சந்திப்புகளில் மேலும் சில கட்சிகள் இணைத்துக் கொள்ளப்பட்டு 28 கட்சிகள் அடங்கிய - 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியாக - 'இந்தியா (Indian National Develpmental Inclusive Alliance)' எனும் கூட்டணியாக அறிவிக்கப்பட்டது. அது இயற்கையான பங்காளர்கள் ஒருங்கிணைந்த கூட்டணியாக உருவாக்கப் படவில்லை. அது சந்தர்ப்பவாத கூட்டணியாகவே உருவாகியுள்ளது. அது தோன்றும் போதே - யார் பிரதமர் வேட்பாளர் என்பதிலிருந்தே - அவர்களுக்குள் குடுமிப்பிடி சண்டை தொடங்கிவிட்டது. ராகுல் காந்தியா, மம்தாவா அல்லது நிதீஷ்குமாரா என நீயா நானா போட்டியானது. சனாதனத்தை ஒழிப்போம் என உதயநிதி பேசியது கூட்டணியில் உள்ளவர்கள் மத்தியிலேயே சலசலப்பை ஏற்படுத்தியது. ஏன் காங்கிரசின் கமல்நாத் கூட அதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தார். இதுதான் இந்துத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் மதச்சார்பற்ற(?!) கூட்டணி; வேடிக்கை!. அதேப் போல சமீபத்தில் நிதீஷ்குமார் ஹிந்தியில் பேசியதை மொழிபெயர்க்க திமுகவினர் கோரும்போது, நீங்கள் இந்தி கற்றுக் கொண்டு வாருங்கள் என அவர் கோபத்தை வெளிப்படுத்தினார். இதுவும் கூட்டணிக்குள் சலசலப்பை உண்டாக்கியது. 3 மாநிலத் தேர்தல்களிலும் காங்கிரசு தாங்கள் வெற்றிப் பெற்று விடுவோம் என்ற அதீத திமிரில் கூட்டணியில் உள்ள கட்சிகளான சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளுக்கு உரிய தொகுதிகளை பங்கிட்டுக் கொடுக்காமல் அவர்களை அலட்சியப்படுத்தியது. அம்மாநிலத் தேர்தல்களில் கூட்டாக பாஜக எதிர்ப்பு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் தனித்தனியாக போட்டியிட்டன. அதுவும் காங்கிரசின் தோல்விக்கும், ஓட்டு பிரிவுக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. இந்த தோல்வி தற்போது 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிற மாநிலங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்காளத்திலும், ஆம்ஆத்மி டெல்லியிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன; ஆனால் கூட்டணியில்தான் உள்ளனவாம்! விந்தை!. அமலாக்கத்துறையின் ஏவலுக்குப் பணிந்து அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் பிரிவு ஏற்கனவே கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது. தற்போது நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள் கட்சி காங்கிரசிலிருந்து பாஜகவுக்கு பல்டியடித்துள்ளது. இந்த லட்சணத்தில்தான் இவர்கள் பாஜகவை எதிர்த்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளனர்.  தேர்தலுக்கு முன்பும் பின்பும் எத்தனை பிளவுகள் ஏற்படும் என்பது அவர்களுக்கே வெளிச்சம்(?!). எனவே இந்த செத்தே பிறந்தக் குழந்தை மீது மக்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை. அதனால்தான் ஆளும் பாஜக மீது அவ்வளவு அதிருப்தி இருந்தும் கூட மக்கள் இந்தக் கும்பலை வெற்றி பெற செய்யவில்லை.       

பாசிச எதிர்ப்புத் திட்டமில்லாத கூட்டணி : பாஜக அரசு அமல்படுத்தும் அதே அரசியல் பொருளாதாரக் கொள்கைகளைத்தான் காங்கிரசு உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் பங்குப் பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் அரசுகளும் அமல்படுத்தி வருகின்றன. இன்றைய பாசிசம் தீவிரமடைவதற்கு அடிப்படையாக விளங்கும் புதிய பொருளாதாரக் கொள்கைகளை முதன் முதலில் 80களின் இறுதியில் அமல்படுத்தத் தொடங்கியதே காங்கிரசு அரசுதான். தான் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதையேத்தான்-பாஜக விட்ட இடத்திலிருந்து-மீண்டும் மூர்க்கமாக நிறைவேற்றும். அதனால்தான் பாஜக அரசின் பாசிச சட்டங்களை எதிர்த்து எவ்வித தீர்க்கமான போராட்டங்களையும் இக்கட்சிகள் முன்னெடுக்கவில்லை. இந்த பாசிச காட்டாட்சியால் மக்கள் சொல்லொண்ணாத் துயரத்தில் அல்லல்பட்டு வரும்போது கூட அவர்களுக்காக சிபிஎம் உள்ளிட்ட திருத்தல்வாதக் கட்சிகள் கூட பெருந்திரள் மக்கள் இயக்கங்களை முன்னெடுக்கவில்லை. அறிக்கைகள் விடுவதோடு நிறுத்திக் கொள்கின்றன. அவ்வளவு ஏன் 146 எம்பிக்களை பாஜக அரசு பாசிச முறையில் தகுதிநீக்கம் செய்த போதும்கூட இந்த கூட்டணி அமைதி காக்கின்றது. பாஜகவின் மதவாதத்தை எதிர்ப்பதாக சில இடங்களில் பேசி வருகின்றன. ஆனால் இந்துத்துவப் பிற்போக்கு சக்திகள் நிறைந்துள்ள பகுதிகளில் தானும் இந்துத்துவ வேடம் தரிக்கின்றன. ஆகையால் இந்த கும்பல் பாஜகவின் பாசிசத்தை எதிர்த்த திட்டத்தை வைக்க திராணியற்றது மட்டுமல்ல; இவை வைக்கவும் செய்யாது. அவ்வளவு ஏன்? பாஜகவின் பாசிசப் போக்குகளை கூட மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி அதனை வாக்குவங்கியாக கூட மாற்றும் வக்கற்று நிக்கின்றன. அதுதான் இந்த 3 மாநில தேர்தல் தோல்வியிலும் வெளிப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு விழுந்த வாக்குகளும் கூட இவைகள் மாற்றுத் திட்டம் அல்லது கொள்கை வைத்து ஈடுபட்ட பிரச்சாரத்தால் நிச்சயம் கிடைக்கவில்லை; மக்கள் மத்தியில் பாஜக அரசு மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியால் விழுந்தது.    

எனவே காங்கிரசு தலைமையிலான 'இந்தியா' கூட்டணி எவ்வகையிலும் பாஜகவின் பாசிச அரசுக்கு மாற்றாக இல்லை; மாற்றாகவும் அமையாது. அதேபோல் தேர்தல் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியும் என்ற வாதமும் மோசடியானது. மக்கள் ஜனநாயக குடியரசு அமைப்பது ஒன்றே மாற்றாகும்.     

சமரன், (பிப் - மார்ச் 2024) இதழில்