குஜராத் இனப்படுகொலைக்கு தலைமை தாங்கிய மோடி கும்பல் மீது பன்னாட்டு விசாரணைக்காக போராடுவோம்!

சமரன்

குஜராத் இனப்படுகொலைக்கு தலைமை தாங்கிய மோடி கும்பல் மீது பன்னாட்டு விசாரணைக்காக போராடுவோம்!

உக்ரைன் போருக்குப் பின் ஏற்பட்டிருக்கும் சர்வதேச சூழலையும் ஏகாதிபத்திய முரண்பாடுகளையும் தனது தரகுமுதலாளித்துவ நலன்களிலிருந்து மோடி அரசு பயன்படுத்திக் கொண்டது. எனவேதான் உக்ரைன் போரில் நடுநிலை வகிப்பதாக நாடகமாடியது. ரஷ்யா மீதான பொருளாதார தடை விதிப்புக்கான அமெரிக்க - நேட்டோ நாடுகளின் தீர்மானங்களை ஏற்காமல் ரஷ்ய ஆதரவு நிலை எடுத்தது. இந்தியாவின் மீதான தனது புதியகாலனிய பிடியை இறுக்க வேண்டிய தேவை அமெரிக்க - நேட்டோ ஏகாதிபத்தியங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் மோடி அரசை தட்டிவைக்கும் நோக்கில் பிபிசி ஆவணப்படத்தையும் ஹிண்டன்பர்க் அறிக்கையும் அமெரிக்க - பிரிட்டன் ஏகாதிபத்தியங்கள் கிளப்பியுள்ளன.

இங்கிலாந்து அரசின் பிபிசி நிறுவனம் 20வருடங்களுக்கு முன்பு நடந்த இனப்படுகொலை குறித்த ஆவணப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளது. புதிய தலைமுறையினர் பலருக்கு குஜராத்தில் அன்று என்ன நிகழ்ந்தது என்று தெரிந்திருக்கும் வாய்ப்பு குறைவுதான். அதனால், ஆவணப்படம் என்ன பேசுகிறது என்று பார்க்கும் முன் குஜராத்தில் மோடி கும்பல் இசுலாமியர் மீது நடத்திய இனப்படுகொலையை சுருக்கமாக நினைவு கூர்வோம்.

குஜராத் இனப்படுகொலை சுருக்கமாக

2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27ல் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சார்ந்த விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (VHP) கரசேவகர்கள் அயோத்திக்கு சென்று சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தனர். குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த ரயிலின் S6 பெட்டியில் திடீரென நெருப்பு பற்றி எரியத் தொடங்கியது. பற்றி எரிந்த தீ மிக வேகமாக அடுத்தடுத்த பெட்டிகளிலும் பற்றி எரியத் தொடங்கியது. இதில் 59 பேர் பலியானார்கள்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு இஸ்லாமியர்கள்தான் காரணம் என்ற பொய்யான செய்தியை சங்பரிவாரங்கள் குஜராத் முழுவதும் திட்டமிட்டு பரப்பின. அந்த செய்தி குஜராத்தை ரத்தக் காடாக மாற்றியது. ரயிலில் எரிந்தும் எரியாமல் கோரமான நிலையிலிருந்த உடல்களை 120கிமீ தாண்டியுள்ள அகமதாபத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று கொலைவெறியூட்டியது விஹெச்பி. அவை கூக்குரலிட்டு வந்தன. அப்படி வெறியூட்டப்பட்ட சங்பரிவார கும்பல் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டது. இசுலாமியர்களை மிருகங்களை விட மோசமாக வேட்டையாடின. நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார்கள். அதன் பின் படுகொலை செய்யப்பட்டார்கள். தடுக்க வந்த இஸ்லாமிய ஆண்கள் வெட்டி வீசப்பட்டார்கள். வீதிகளில் பெட்ரோல் வைத்துக் கொளுத்தப்பட்டனர். கர்ப்பிணி பெண்ணின் வயிற்றைக் கிழித்து வயிற்றில் இருந்த குழந்தையை வெளியே எடுத்து தீயில் வீசினர். இசுலாமியர்களை கருவறுத்தனர். கலவரத்திலிருந்து உயிர் தப்பினால் போதும் என்று பயந்தவர்கள் பல இடங்களில் பதுங்கி இருந்தார்கள். ஆனால் கொலைவெறியோடு அவர்களைத் தேடி அலைந்த கும்பல், கையில் கிடைத்தவர்களையெல்லாம் சிதைத்து சின்னா பின்னம் ஆக்கின. அப்படி அவர்கள் கையில் சிக்கிக் கொண்டவர்களில் ஒருவர்தான் இன்று நேரடி சாட்சியமாக இருக்கும் பில்கிஸ் பானு. பில்கிஸ் பானுவுடன் அவரின் ஒட்டு மொத்த குடும்பமும் சிக்கிக்கொண்டது. பில்கிஸ் பானுவையும் அவரோடு இருந்த மூன்று பெண்களையும் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்தது. பில்கிஸ் பானுவின் பிஞ்சுக் குழந்தையையும் விட்டுவைக்கவில்லை, அந்த பிஞ்சையும் குதறிய மிருகங்கள் அக்குழந்தையை பாறையில் வீசி அடித்தே கொன்றனர். பாலியல் வன்புணர்வுக்கு பின் மூன்று மணி நேரம் மயக்கமாக கிடந்த பில்கிஸ் பானு, மயக்கம் தெளிந்து எழுந்த பிறகுதான் தனக்கு நடந்த அவலத்தை உணர்ந்து அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் துணி வாங்கி தன் உடலை மறைத்துள்ளார். அவருக்கு நேர்ந்த அந்த கொடுமையின் போது பில்கிஸ் பானு கர்ப்பமாக இருந்தார். ஆனால் அந்த கும்பல் அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் ஈவிரக்கமின்றி நரவேட்டையாடியது. கோத்ராவில் தொடங்கி குஜராத் முழுவதும் நடந்த அந்த கலவரம் சுமார் மூன்று மாதம் வரை நீடித்தது. மூன்று மாதம் நீடித்த அந்த வன்முறை வெறியாட்டத்தில் 2000க்கும் மேற்பட்டோர் படுகொலைச் செய்யப்பட்டனர். லட்சக்கணக்கான இசுலாமியர்களின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே உள்நாட்டு அகதிகளாக்கப்பட்டனர்.

"இந்தியா: மோடி பிரச்சனை" - பிபிசி ஆவணப்படம் காட்சிப்படுத்துவது என்ன?

ஏற்கனவே பல்வேறு ஆய்வறிக்கைகளும், ஆவணப்படங்களும், திரைப்படங்களும் குஜராத் கலவரத்தைப் பற்றி பல்வேறு காலகட்டங்களில் வெளிவந்துள்ளன. அதன் தொடர்ச்சியாகவே பிபிசி, இந்தியா: மோடி பிரச்சனை எனும் ஆவணப் படத்தை வெளியிட்டுள்ளது. பிபிசி டூ (BBC Two) ஊடகத்தில் ஜனவரி'17-2023 அன்று முதல் பாகம் வெளியிடப்பட்டது. இங்கிலாந்து அரசின் விசாரணை அறிக்கை இத்தொடரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குஜராத் கலவரத்திற்கு "மோடியே முழுப் பொறுப்பாவார் (Narendra modi is directly responsible)" என்றும் "இனப் படுகொலைக்கான அத்தனைக் கூறுகளும் (all the hallmarks of ethnic cleansing)" கொண்ட "திட்டமிடப்பட்ட வன்முறையே (systematic campaign of violence)" அந்த கலவரங்களுக்கு காரணம் என்றும் ஆவணப்படம் பேசுகிறது.

"30க்கும் மேற்பட்ட நபர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்த அச்சத்தினால் இந்த தொடரில் பங்கேற்க மறுத்தனர். இந்த ஆவணப்படத்தில் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு இந்திய அரசாங்கம் பதிலளிக்க மறுத்துவிட்டது." என்ற வாசகங்களுடன் தொடங்குகிறது இந்த ஆவணப்படம்.

இம்ரான் தாவூத் எனும் பாதிக்கப்பட்ட இசுலாமியர், தன் குடும்பத்திற்கு நேர்ந்த துயரங்களை கண்ணீர்மல்க நினைவு கூறுகிறார். தாஜ்மகால் சென்று காரில் திரும்பிக் கொண்டிருக்கும்போது, காவல்துறை தடுப்பரண் உதவியுடன் வழிமறித்து தன்னை நிர்வாணமாக்கி சுன்னத் செய்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டு கத்தியில் குத்தியுள்ளனர். அவர் நினைவு திரும்பிப் பார்க்கையில் உடன் வந்த அவரது உறவினர்கள் உயிருடன் இல்லை என்கிறார்.

தன்னை அடையாளங் காட்டிக்கொள்ள விரும்பாத இங்கிலாந்தின் முன்னாள் தூதர் ஒருவர் இந்த ஆவணப்படத்தில் கூறியிருப்பதாவது:

"குறைந்தபட்சம் 2000 பேராவது இந்தக் கலவரத்ததில் கொல்லப்பட்டிருப்பார்கள். இவர்களில் பெரும்பான்மையோர் இசுலாமியர்களே. இசுலாமியர்ளை குறிவைத்து திட்டமிட்ட முறையில் அரசியல் காரணங்களுக்காக கலவரம் நடத்தப்பட்டுள்ளதால்தான் இதை இனப்படுகொலை எனக் கூறுகிறோம்.

ஆர்.எஸ்.எஸ்.சின் கிளை அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் (VHP) அமைப்பின் பெயரும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வி.எச்.பி என்ற இந்துத்துவ பயங்கரவாத அமைப்பே இந்தக் கலவரத்தை திட்டமிட்டு தலைமையேற்று நடத்தியுள்ளது என்றே பரவலாக தெரியவந்தது" என்கிறார்.

இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாக் ஸ்ட்ரா ஆவணப்படத்தில் கூறுவதாவது:

"குஜராத் கலவரம் குறித்து இங்கிலாந்து அரசு கொதித்து போய் விசாரணைக் கமிஷன் அமைத்தது. கலவரம் குறித்து நான் மிகவும் வேதனையடைந்திருந்தேன். எங்கள் நாடு இந்தியாவுடன் நல்லுறவு பேணிவருவதனால் நான் தனிப்பட்ட முறையில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டேன். அதே நேரத்தில் இதை நாங்கள் மிகுந்த எச்சரிக்கையோடு கையாள வேண்டியிருந்தது. விசாரணைக் குழு நேரடியாக குஜராத்திற்கே சென்று விசாரணை மேற்கொள்ள வேண்டும் என முடிவெடுத்து அறிக்கையை உருவாக்கினோம். கலவரங்களின் எண்ணிக்கை சொல்லப்பட்டதை விட அதிகமான இடங்களில் நிகழ்ந்துள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் பல மாதங்கள் முன்பாகவே இவ்வன்முறை திட்டமிடப்பட்டது. திசையெங்கும் திட்டமிடப்பட்ட முறையில் கண்ணில்பட்ட இசுலாமியப் பெண்களையெல்லாம் வன்புணர்வுக்கு உட்படுத்தினர். இந்துக்கள் வாழும் பகுதியிலிருந்து இசுலாமியர்களை துடைத்தொழிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே கலவரம் தூண்டப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமின்றி இதற்கு மோடியே காரணம். நம்மை யாரும் தண்டிக்கமாட்டார்கள் என்ற ஒரு வாய்ப்பான சூழ்நிலையை மாநில அரசு உருவாக்கித் தராமல் இப்படியொரு பெருங்கலவரத்தை நிச்சயமாக வி.எச்.பியாலும் அதன் கூட்டு அமைப்புகளாலும் நிகழ்த்தியிருக்க முடியாது. எதைச் செய்தாலும் நம்மால் தப்பித்து விட முடியும் என்ற போக்கே கலவரத்தை உருவாக்குவதற்கான புறச்சூழலை தோற்றுவித்துள்ளது. காவல்துறையை செயல்படவிடாமல் செய்ததிலும், கமுக்கமாக இந்துத்துவ தீவிரவாதிகளை கலவரத்திற்கு தூண்டியதிலும் முதலமைச்சராக இருந்த மோடி கிட்டதட்ட நேரடியாகவே செயல்பட்டார் என்பது முக்கியமானது. மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையை செயல்பட விடாமல் தடுத்தது என்பது படுமோசமான அரசியல் சதி நடந்தள்ளதையே எடுத்துக்காட்டுகிறது. கலவரத்தை தூண்டுவதில் அமைச்சர்கள் நேரடியாகவே இறங்கி வேலைசெய்தனர். காவல் துறையின் மூலம் எவ்வித குறுக்கீடும் இருக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு என்பது சாத்தியமேயில்லை. மேலும், ஒரு வெளியுறவு அமைச்சராக என்னால் அச்சமயத்தில் சில சட்டப்படியான விசயங்களை செய்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தேன். நாங்கள் இந்தியாவுடனான அரசியல் உறவுகளை துண்டித்துக் கொள்வதற்கு முயலவில்லை. எனினும் மோடியின் நற்பெயருக்கு இது பெரும் களங்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் மறுக்கமுடியாது" என்கிறார்.

லண்டன் கிங்ஸ் கல்லூரி பேராசிரியர் கிரிஸ்டோபர் ஜப்ரீலாட் "ஆர்.எஸ்.எஸ் இத்தாலியிலும் ஜெர்மனியிலும் இனவாத அரசியல் மேலோங்கிய காலத்தில் தோன்றிய இயக்கம். அது இந்துக்களின் மேன்மை பற்றி பேசுவதோடு இசுலாமியர்களை பொது எதிரியாக கருதும் அரசியல் இயக்கம் என்கிறார். மோடி பதின் பருவத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ் ஸால் பயிற்றுவிக்கப்பட்டு இன்று எவ்வாறு பாஜகவின் முக்கிய பொறுப்பு வகிக்கிறார்" என்பது பற்றியும் பேசுகிறார்.

இமிதியாஷ் பதான் என்ற பாதிக்கப்பட்ட இசுலாமியர் பின்வருமாறு நினைவு கூறுகிறார்:

"எது எங்கள் தவறு? நாங்கள் இசுலாமியர்களாக பிறந்ததா? கலவரத்தினால் அச்சமடைந்து நாங்கள் அனைவரும் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஷான் ஜாப்ரி வீட்டில் தஞ்சம் புகுந்தோம். அவர் காவல்துறை உதவியோடு எங்களுக்கு பாதுகாப்பளிப்பார் என்று நம்பினோம். ஆனால் வெளியில் ஜாப்ரியை கொல்லுங்கள் என்று கலவரக்காரர்கள் கோஷமெழுப்பிக் கொண்டிருந்தனர். அவர் தனக்கு நெருக்கமான அதிகார வட்டாரங்கள் அனைவரையும் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உதவிக் கோரினார். எந்த உதவியும் கிடைக்கவில்லை. கடைசியாக முதலமைச்சர் மோடிக்கே போன் செய்தார். அதன் பின், ஜாப்ரி நம்பிக்கையிழந்து சோகத்தில் துவண்டு அமர்ந்தார். மோடி போனில் கோபமாக திட்டியதாக ஜாப்ரி தன்னிடம் தெரிவித்தார். அவர் ஜன்னல் வழியாக கலவரக்காரர்களை நோக்கி கொல்வதெனில் என்னைக் கொள்ளுங்கள், உள்ளிருக்கும் குழந்தைகளையும் பெண்களையும் விட்டுவிடுமாறு கோரினார். அவர்கள் ஜாப்ரியின் கழுத்தையறுத்து துண்டு துண்டாக வெட்டிக் கொன்றனர். எங்களில் ஒரு சிலர் மட்டும் ஒளிந்து தப்பினோம். (அந்த குல்பர்க் சொசைட்டி படுகொலையில்) ஜாப்ரியோடு சேர்த்து 69 பேரை கொன்றனர், அதில் என் குடும்பத்தைச் சேர்ந்தோர் மட்டுமே 10பேர் அவர்களின் உடலை அடையாளம் கண்டுகொள்வது கூட சிரமமாக இருக்கும் வகையில் எரிக்கப்பட்டிருந்தனர். மோடிதான் இந்த கலவரத்திற்கு முழு காரணம்." என்கிறார். 

 

கலவரம் குறித்து மோடியிடம் அன்றைய கட்டத்தில் நேர்காணல் கண்ட பிபிசியின் பெண் செய்தியாளர் ஜில் மெக்கிவிரிங் "நரேந்திர மோடியை பொறுத்தவரையில் ஊடகங்களுடன் இணங்கி பழக விரும்பாதவராக இருந்தார். எங்களைப் போன்ற பத்திரிக்கையாளருடன் உரையாடுவது கூட அவருக்கு சவாலான விஷயமாக இருந்தது. அவர் மதவெறியர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். அவர் அச்சுறுத்தும் நபராக எனக்கு தோன்றினார்" என்று தெரிவித்துள்ளார்.

அந்த நேர்காணலின் முக்கிய உரையாடல்களும் இந்த ஆவணப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில்,

"கலவரத்திற்கு பிறகு தொடர் வன்முறையால் குஜராத் மாநிலமே வன்முறைக் காடாக மாறியுள்ளது, தங்களது உறவினர்களைக் கொன்றவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படாத நிலையில் வீடுகளுக்குத் திரும்பச் செல்லப் பயப்படும்-இன்னும் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கும் மக்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? என்ற கேள்விக்கு, 'உங்களுக்கு கிடைத்த தகவலை முதலில் நீங்கள் சரிபார்க்க வேண்டும் என நினைக்கிறேன். எங்கள் மாநிலம் அமைதிப் பூங்காவாகவே திகழ்கிறது' என்று மோடி பதிலளிக்கிறார். குஜராத் மாநிலத்தில் சட்ட, ஓழுங்கை காக்கத் தவறியதாக அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பற்றி தொடர்ந்து கேள்வி எழுப்ப முயன்றபோது, ஆவேசத்துடன் இடைமறித்து 'இது முழுக்க முழுக்க திரித்துக் கூறப்பட்டவையாகும்; உங்களது ஆய்வுமுறையை நான் ஏற்கவில்லை. இவற்றை எந்தக் குப்பையில் இருந்து நீங்கள் எடுத்தீர்கள் என்று எனக்குத் தெரியாது' என்றும் 'எந்த அரசாங்கத்தின் உள்விவகாரத்திலும் தலையிட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நான் மிக மிகத் தெளிவாக இருக்கிறேன். நீங்கள் செய்துள்ளது மிகவும் தவறானது. இந்தியர்களாகிய எங்களுக்கு வெள்ளையர்களாகிய நீங்கள் மனிதஉரிமைகள் பற்றி பாடம் எடுக்க முயற்சிக்க கூடாது' என்றும் பேசுகிறார். அடுத்த கேள்விதான் முக்கியமானது. எதை இன்னும் சரியாக செய்திருக்கலாம் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது தனது இடது கை ஆள்காட்டி விரலை உயர்த்தி அச்சுறுத்தும் தொனியில் 'ஊடகங்களை கையாள்வதில் நான் வேறு மாதிரி செயல்பட்டிருக்கவேண்டும்' என்கிறார் மோடி.

செர்டிக் பிரகாஷ் எனும் பாதிரியார் "குஜராத் அமைச்சர் ஹாரன் பாண்டியா எங்களிடம் மோடி அரசு எவ்வாறு இக்கலவரத்தை தூண்டியது என்பது பற்றி தன்னிடம் தெரிவிக்க இருந்தாதாகவும், அவர் இக்கலவரத்தில் பாஜக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து தன் பதவியை ராஜினாமா செய்தார்" என்றும் தெரிவிக்கிறார். பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரான சுப்ரமணிய சுவாமி, ஹாரன் பாண்டியாவின் இறப்பு பற்றிக் கூறுகையில், "அது கொடூரமானதும், மர்மமானதும் ஆகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பாபு பஜாங்கி என்ற சங்பரிவார குண்டர், "நாங்கள் பெண்களையும் குழந்தைகளையும் துண்டுதுண்டாக வெட்டி வீசினோம். அவர்களை விட்டுவைக்கக் கூடாது. நாங்கள் அதை மிகுந்த மகிழ்ச்சியோடும் பேரார்வத்தோடும் செய்தோம். வீட்டிற்கு வந்து மனநிறைவோடு உறங்கினோம். மோடி நாங்கள் விடுதலையடைந்து வெளியில் வருவதற்கு உதவினார். அவர் கூறிய பின் நீதிபதி கேஸ் ஃபைலைக் கூட திறக்காமல் எங்களை விடுவித்தார்" என்கிறான். மற்றொருவன் "மோடி தங்களிடம் 3நாட்களுக்கு எந்த கலவரத்தையும் செய்யுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறான்.

மோடி பிரிட்டனில் இருந்த போது, லண்டன் நீதிமன்றத்தில், அவரைக் கைது செய்ய ஒரு விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. ஆனால், அது மயிரிழையில் தவறிப் போனது. இதில் தொடர்புடைய இம்ரான் கான் என்னும் பிரித்தானிய வழக்கறிஞர், "நாம் இப்போது எதை அறிகிறோமோ, எத்தகைய தகவல்கள் நம்மிடம் இருக்கின்றனவோ, அவை அப்போது நம்மிடம் இருந்திருந்தால், மோடி கைது செய்யப்படுவதற்கான அரசாணை, அப்போது பிறப்பிக்கப்பட்டிருக்கும்" என்று கூறுகிறார்.

ஐரோப்பிய ஒன்றியமும் ஓர் ஆய்வை நடத்திற்று. குஜராத் மாநில அரசின் அமைச்சர்கள் இவ்வன்முறையில் தீவிரமாகச் செயல்பட்டதாகவும், காவல்துறையின் மூத்த அதிகாரிகள் இவ்வன்முறையைத் தடுப்பதில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் இவ்வாய்வு குறிப்பிடுகிறது. மேலும், 2002 - ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 - ஆம் நாள், காவல் துறையின் மூத்த அதிகாரிகளை மோடி சந்தித்ததாகவும், கலவரத்தைத் தடுக்க வேண்டாம் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும், நம்பத்தக்க மனிதர்கள் இத்தகவல்களை தங்களிடம் கூறியதாகவும் இவ்வறிக்கை குறிப்பிடுகிறது. அதை சஞ்சீவ் பட்டின் மகள் இந்த ஆவணப்படத்தில் நினைவு கூறுகிறார். ஆனால், இக்கூட்டம் நடந்ததையே காவல்துறை மறுக்கிறது என்றும் இவ்வறிக்கை பதிவு செய்துள்ளது. குஜராத் மாநில உளவுத்துறையின் அப்போதைய தலைவராக இருந்த ஸ்ரீகுமாரும், மற்றுமொரு காவல்துறை அதிகாரியான சஞ்சீவ் பட்டும் மோடி மேற்கூறியவாறு உத்தரவிட்டதாகக் கூறினர். இதனால், வேறொரு பொய் வழக்கை சஞ்சீவ்பட் மீது தொடுத்து ஆயுள்தண்டனையோடு சிறையில் அடைக்கப்பட்டார். இவர்களோடு மனித உரிமை செய்ற்பாட்டாளர் தீஸ்தா செதால்வாட்டின் பேரும் இணைக்கப்பட்டு கைது செய்து சிறையலடைக்கப்பட்டார்.

கலவரத்தில் கொல்லப்பட்ட எம்.பி. ஜாப்ரியின் கொலைக்கு நீதி கேட்டு ஜாப்ரி மனைவி தொடுக்கப்பட்ட வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

கலவரம் குறித்து மோடியின் கூட்டாளி அமித்ஷா பேசுகையில் "அரசு கலவரத்தை தடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தது. மோடி தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து வலிகளையும் நஞ்சுக்களையும் தாங்கி இன்று வெற்றிப் பெற்றுள்ளதாக" கூறுகிறார்.

ஸ்வபன் தாஸ்குப்தா மற்றும் ஸ்வதேஷ் சிங் என்ற பாஜக ஆதரவாளர்கள் இந்த அறிக்கையை மறுப்பதையும் இந்த ஆவணப்படம் காட்சிப்படுத்தியுள்ளது "உச்ச நீதிமன்றமே மோடியை விடுவித்துவிட்டது" என்கிறார்கள்.

2000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதிற்கு மோடி அரசுதான் காரணம், அவர் இதுவரை தண்டிக்கப்படவில்லை இன்றும் ஆட்சியதிகாரத்தில் இருக்கிறார் என்பதோடு இந்த ஆவணப்படம் முடிகிறது.

இதன் இரண்டாவது பகுதி, ஜனவரி 24ல் வெளியிடப்பட்டது. மோடி பிரதமராக பதவி வகிக்கும் காலத்தில் 2019க்கு பின்பான இசுலாமியார்கள் மீதான ஒடுக்குமுறைகளை பற்றி காட்சிப்படுத்தியுள்ளது. குடியுரிமைச் சட்டம் உள்ளிட்ட பாசிச அடக்குமுறைகள் குறித்தும், அதனைத் தொடர்ந்து மாணவர்கள் மீதான கொடூர தாக்குதல்கள் குறித்தும், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட டெல்லி கலவரம் குறித்தும் பேசுகிறது. இவை குறித்து நாம் சமீப காலமாக ஏராளமானவற்றை நேரிலே கண்டுவிட்டோம்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வன்முறையே

பிபிசி ஆவணப்படம் குஜராத் கலவரத்திற்கு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் காரணமாக இருந்தது என்ற அளவில் மட்டுமே கோத்ரா ரயில் சம்பவம் குறித்த தனது ஆய்வை நிறுத்திக் கொள்கிறது. இசுலாமியர்கள் அந்த ரயில் எரிப்பு சம்பவத்தை நிகழ்த்தவில்லை என்பதனை நிறுவ எவ்வித முயற்சியும் மேற்கொண்டதாக தெரியவில்லை. அவர்களுக்கு அது அவசியமுமில்லை. அவர்களின் நோக்கமெல்லாம் மோடி அரசையும் அதானி போன்ற தரகுமுதலாளித்துவ கும்பல்களையும் பேரம்பேசி பணிய வைப்பதே. 

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் பின் ரயில்பெட்டியை ஆய்வு செய்த தடயவியல் நிபுணர்கள், "எரிக்கப்பட்ட ரயில்பெட்டியில் தீ உள்ளே இருந்துதான் பற்ற வைக்கப்பட்டுள்ளது. அதுவும் கதவுக்கு அருகே இருக்கும் 72வது இருக்கை அருகில் இருந்துதான் தீ பற்ற வைக்கப்பட்டு பரவியுள்ளது. பெட்டியில் உள்ள அனைத்து ஜன்னல்களின் இரண்டு சட்டர்களும் (கண்ணாடி மற்றும் இரும்பு வெண்டிலேட்டர்) மூடப்பட்டுள்ள நிலையில் இருந்தது. அவ்வாறு மூடப்பட்டுள்ள நிலையில் வெளியிலிருந்து பெட்ரோல் வீசி ஊற்றினால் அதில் 1% சதவிகிதம் கூட உள்ளே சென்றிருக்க வாய்ப்பில்லை." என்கின்றனர். அதேப்போல இந்து மத யாத்ரீகர்கள் நிறைந்திருந்த ரயில் பெட்டிக்கு உள்ளே இசுலாமியர்களால் பெட்ரோல் நிரப்பப்பட்ட கேன்களை எடுத்துச் சென்றிருக்க வாய்ப்பே இல்லை. அவர்களுக்கு நன்கு பரிச்சயப்பட்ட சிலரால்தான் கொளுத்தப்பட்டிருக்க முடியும். இது விஹெச்பி சங்பரிவார கொலைக் கும்பலால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டதாகதான் இருக்க முடியும் என்பதை அதன் பின்னான சம்பவங்கள் அனைத்தும் நமக்கு காட்டுகின்றன. ஏனெனில் பிப்ரவரி'27 மாலையில்தான் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் நடைபெறுகிறது. ரயில் எரிப்பு சம்பவம் குறித்து மோடி அரசு எந்த ஆய்வும் செய்யவில்லை. அவசர அவசரமாக மறுநாளே பிப்ரவரி'28 அன்றே மாநிலத்தின் முக்கிய அரசதிகாரிகளை ஒருங்கிணைத்து மோடி பேசுகிறார். நடைபெறவிருக்கும் கலவரத்தில் இருந்து விலகி நின்று வேடிக்கைப் பார்க்குமாறு கூறுகிறார். அதைத் தொடர்ந்து, பிணங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று இசுலாமியர்கள் மீது இனவெறித் தாக்குதல் தொடுப்பதற்கு தலைமைத் தாங்குகிறார் எனில், இந்த கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டதும் இந்த சங்பரிவார வானரக் கூட்டம்தான் என்பது தெளிவு. விஎச்பியின் பெண்கள் குண்டர் படை அமைப்பான யுவ வாஹினி அமைப்பைச் சார்ந்த பிராச்சி எனும் பெண் சாமியார் "பிரதமர் அவர்களே, கோத்ரா போல ஒரு சம்பவத்தை நிகழ்த்தி பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டினால் நாடே உங்களுக்கு தலைவணங்கும்" எனப்பேசி கோத்ரா ரயில்சம்பவத்தில் ஈடுபட்டது தாங்கள்தான் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். அதன் துணை அமைப்புகள் மூலம் அதன் 59 இந்து கரசேவகர்களையே எரித்துக் கொன்று இந்துமதவெறியைத் தூண்டிவிட்டுள்ளது. கலவரம் குறித்து கேட்கையில் ஒரு வினைக்கு சமமான எதிர்வினையே இது என்று கலவரத்தை நியாயப்படுத்தினார் மோடி. எனவே கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும் அதையொட்டிய குஜராத் கலவரமும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட வன்முறையும் இனப்படுகொலையுமாகும்.

குஜராத் கலவரத்தில் மோடிகும்பலுக்கு ஆதரவாக செயல்பட்ட விசாரணை கமிஷன்களும் நீதிமன்றங்களும்

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக அன்றைய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் (பானர்ஜி கமிஷன்) அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் விபத்து என்றது. ஆனால் அதற்கு பிறகு அமைக்கப்பட்ட குஜராத் அரசின் விசாரணை ஆணையம் (நானாவதி கமிஷன்) கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் திட்டமிட்ட சதி என்று அறிக்கை கொடுத்ததோடு அப்போதைய குஜராத் முதல்வர் மோடியை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்தது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்கு குஜராத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் மாநில அரசும், ரயில்வே துறையும் சட்ட ஒழுங்கை சரியாக பராமரிக்கவில்லை என்று குற்றம் சாட்டியதோடு மட்டும் நிறுத்திக் கொண்டு பாதிக்கப்பட்ட தரப்பினரான 31 இசுலாமியர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியது. 2011 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அந்த தீர்ப்பில் 11 பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டிருந்தது. பிறகு மேல்முறையீட்டு மனுவை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு அக்டோபரில் 11 பேரின் மரண தண்டனையை ரத்து செய்தது. இன்னும் இசுலாமியர்கள் மீதான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று சிலரை சமீப காலம் வரை தேடி வந்தது குஜராத் காவல்துறை. 2021ல் கூட ரபீக் உசைன் பதுக் என்பவரை கைது செய்தது. இவ்வாறு குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கி பாஜக அரசின் பாசிசப் போக்குகளுக்கு அரசின் ஒவ்வொரு உறுப்புகளும் துணை நிற்கின்றன.

ஆனால் கலவரத்தில் ஈடுபட்ட சங்பரிவார குண்டர்களை தொடர்ச்சியாக விடுவித்து வருகிறது. சமீபத்தில் கூட பில்கிஸ் பானுவை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த 11 காவி குண்டர்களை நன்னடத்தை என்ற பெயரில் தண்டனை காலம் முடிவதற்கு முன்பே விடுவித்துள்ளது. அவர்களை உச்சிமுகர்ந்து வரவேற்றுள்ளது பாஜக அரசு. ஆட்சியும் அதிகாரமும் கையில் இருந்தால் நாட்டில் எப்படிப்பட்ட வன்முறைகளையும் நிகழ்த்தலாம் என்பதற்கும் அப்படி வன்முறை செயல்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற முடியும் என்பதற்கும் குஜராத் படுகொலை சம்பவமும், பில்கிஸ் பானுவிற்கு இழைக்கப்பட்ட அநீதியும் மாறாத சாட்சியங்களாக இருக்கின்றன.

குல்பர்க் சொசைட்டி படுகொலை (காங்கிரஸ் எம்,பி. இஷான் ஜாப்ரி உள்ளிடோர் கொலை) வழக்கின் மீது சிறப்பு புலனாய்வுகுழுவும் குஜராத் நீதிமன்றமும் 2017ம் ஆண்டு மோடி குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கின. இந்த தீர்ப்பை எதிர்த்து அவரது மனைவி ஜாகியா ஜாப்ரி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. "சிறப்புக் குழுவின் அறிக்கையை ஏற்று மாஜிஸ்திரேட் எடுத்த முடிவையும் எதிர்ப்பு மனுவை நிராகரிக்கும் முடிவையும் நாங்கள் ஆதரிக்கிறோம். இந்த மேல்முறையீடு தகுதியற்றது என்பதால் தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும் ஜாப்ரியா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபில் நடவடிக்கை சட்டவிரோதமானது; அரசியல் உள்நோக்கம் கொண்டது" என்று கூறி 2021 ஜூன் மாதத்தில் வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம். பாபர் மசூதி வழக்கு போல இந்த வழக்கிலும் இந்துத்துவ பாசிசத்தின் கைக்கூலியாக மாறியது உச்ச நீதிமன்றம். இந்துத்துவ பாசிச கும்பலுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய பி.ஆர்.படேல், சதாசிவம் உள்ளிட்ட உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை ஆளுநர், நீதிமன்ற வழக்குகளை கண்காணிக்கும் அதிகாரி போன்ற உயர் பதவிகள், நாடாளுமன்றத்தில் இருக்கைகளை அளித்து ஊக்குவிக்கிறது இந்த பாசிச மோடி அரசு. 

இந்துத்துவ சக்திகளுக்கும் புத்துயிர் பாய்ச்சிய அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை

2001 செப்டம்பரில் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டபின், இசுலாமிய பயங்கரவாதத்திற்கெதிரான உலகப்போர் என்பதை தனது வெளியுறவுக் கொள்கையாக அறிவித்தது அமெரிக்கா. இதை அன்று மத்தியில் ஆட்சியிலிருந்த வாஜ்பாய் அரசும் ஆதரித்தது. அமெரிக்காவின் இந்த இசுலாமிய பயங்கரவாத எதிர்ப்பு கொள்கை இந்தியாவிலுள்ள இந்துத்துவ சக்திகளுக்கும் புத்துயிர் பாய்ச்சியது. தனது இந்துமதவாத அரசியலை செயல்படுத்தும் களமாக, தான் பெரும்செல்வாக்கு பெற்றிருந்த குஜராத்தை தேர்ந்தெடுத்தது ஆர்.எஸ்.எஸ். 2001 அக்டோபரில் குஜராத்தின் அன்றைய பாஜக முதலமைச்சராக இருந்த கேஷூபாய் பட்டேலை நீக்கிவிட்டு மோடியை தேர்தலில் போட்டியிடாமலே முதல்வராக்க பரிந்துரைத்தது ஆர்.எஸ்.எஸ். அதன் படி, செயல்பாடு குறைவான முதல்வர் நீக்கப்பட்டு பாஜக அரசின் புதிய முதல்வராக மோடி பதவியேற்றார். 2002 பிப்ரவரி 24ல்தான் மோடி சட்டசபை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 3 நாட்களுக்குள் இந்திய வரலாற்றிலேயே மிகமோசமான இனப்படுகொலைக்கு தூபம் போட்டது. இந்துராஷ்டிரத்தை தனது நோக்கமாக கொண்ட ஆர்.எஸ்.எஸ்., இசுலாமியர்களை கொன்றொழிப்பது, அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவதன் மூலம் அதை நிறைவேற்ற முயற்சிக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்.சின் முன்னோடியான சாவர்க்கர் தனது ஆறு புகழ்பெற்ற சகாப்தங்கள் என்ற நூலில் இசுலாமியப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யுமாறு வழிகாட்டுகிறான். "அவர்கள் வயிற்றில் இந்துக்களின் குழந்தைகள் பிறக்க வேண்டும்" என்கிறான். ஆர்.எஸ்.எஸ்.ன் இந்த இந்துராஷ்டிர நோக்கமே குஜராத்தில் 2002ல் நிகழ்ச்சி நிரலாக அரங்கேறியது. அதற்கு தலைமைத் தாங்கிய கொலைகாரன்தான் மோடி. அந்த கலவரங்களுக்குப் பின் மோடியின் இந்துத்துவ பிம்பம் உயர்ந்தது. எதிர்கட்சிகளின் எதிர்ப்பினால், ஏப்ரலில் தனது பதவியை ராஜினாமா செய்த மோடி, அதைத் தொடர்ந்த தேர்தலில் அமோக வரவேற்புடன் வெற்றி பெற்றார். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் விசா தடை நாடகங்கள் மோடி உடையில் ஒரு சின்ன கரும்புள்ளியைக் கூட ஏற்படுத்தவில்லை. தாராளமயமாக்கலுக்கு மாநிலத்தின் கதவை அகல திறந்துவிட்டது மோடி அரசு. சீனாவிலிருந்து அதிகப்பொருட்கள் இறக்குமதி செய்யும் மாநிலமாக குஜராத் திகழ்ந்தது. குஜராத் மாடல் பிம்பம் கட்டியமைக்கப்பட்டது. நாட்டின் இந்துத்துவ அரசியலுக்கு முன்மாதிரியாக மாறியது இந்தியாவை உலுக்கிய அந்த இனப்படுகொலை.

பிபிசி ஆவணப்படத்தை பார்ப்பவர்கள் மீது பாயும் பாசிச தாக்குதல்கள்

ஒருபுறம், வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் அரித்தம் பக்க்ஷி இந்த பிபிசி ஆவணப்படம் பற்றிக் குறிப்பிடுகையில், "முக்கியத்துவம் இல்லாத ஒருவாதத்தை பரப்பவே, இது வடிவமைக்கப்பட்டுள்ளது" என்கிறார். பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, இதை தாராளமாக திரையிட்டு பாருங்கள் அந்த ஆவணப்படத்தில் உள்ளது உண்மையில்லை, இதனால் மோடியின் செல்வாக்கு உயருமே ஒழிய குறையாது என திமிராக பேசி வருகிறார். மறுபுறம் தனது ஊசலாட்ட நிலையிலிருந்து இந்தியாவில் மோடி அரசு பிபிசி ஆவணப்படத்தை திரையிடவும், பரப்பவும் தடை விதித்துள்ளது. அவரசரகால சட்டங்களை வைத்து இதை முடக்கியுள்ளது. பிபிசியின் யூடியூப் பக்கத்திலிருந்து ஆவணப்படத்தை நீக்கியுள்ளது. பிபிசியின் இந்திய அலுவலகத்தின் மீது வருமான வரித்துறை விசாரணையை ஏவிவிட்டுள்ளது. பிபிசி ஆவணப்படத்தில் குறிப்பிடுவது போல அல்லாமல், இந்த முறை ஊடகங்களை கையாள்வதில் தேர்ந்தவராக பரிணமித்து விட்டார் மோடி; பாசிசத்தை நிதானமாக அரங்கேற்ற தொடங்கி விட்டார்.

திமுக கும்பலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழக திரையரங்குகள் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில்தான் வைத்துள்ளன. சாதிவெறியர்களின் பிற்போக்கான சினிமா படங்களை விளம்பரப்படுத்தி வெளியிடும் இவர்களுக்கு பிபிசியின் ஆவணப்படத்தை பிரச்சார நோக்கில் பரப்பக் கூட துப்பில்லை. காங்கிரசும் கூட இதை ஒரு பிரச்சார இயக்கமாக முன்னெடுக்கவில்லை. தடைசெய்யப்பட்ட பிபிசியின் ஆவணப்படத்தை சிபிஎம் மாணவர் இயக்கங்கள் இந்தியா முழுவதும் ஆங்காங்கே திரையிட்டு வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டுமே அதை தமிழ்படுத்தி வெளியிட்டுள்ளது. இவை தேர்தல் அரசியலில் இக்கட்சிகளுக்கிடையிலான சிறிய சிறிய முரண்பாடுகளையும் அணிச் சேர்க்கை மாறுதல்களையும் புகைய விடுகின்றன அவ்வளவே. ஆவணப்பட திரையிடல்களை அத்துமீறி தடுப்பதோடு, செல்போன்களில் இந்த ஆவணப்படங்களை பார்ப்பவர்களையும் கைது செய்து பாசிச தாக்குதல் தொடுத்து வருகிறது பாஜக அரசு.

1) கேரளாவிலும் ஆங்காங்கே இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டதை பாஜக குண்டர்கள் தடுத்து முடக்கினர்.

2) டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் ஆவணப்படம் திரையிட்டு பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் தொடுத்துள்ளது சங்பரிவார கும்பல். இணையச் சேவையையும் மின் இணைப்பையும் துண்டித்துள்ளது. தொடர்ந்து ஆவணப்படத்தை மொபைல் போனில் பார்த்த மாணவர்களை கைதும் செய்துள்ளது கெஜ்ரிவால் அரசு. 

3) அதேப்போல ஜாமிய பல்கலைக் கழகத்திலும் ஆவணப்படம் பார்த்த 70க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்துள்ளது. 

4) ஆவணப்படம் பார்க்க முயன்ற திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் மாணவர்களையும் தடுத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது பல்கலைக்கழக நிர்வாகமும் காவல்துறையும். 

5) சென்னையில் இந்த ஆவணப்படத்தை திரையிட முயன்றவர்களை காவல்துறை தடுத்துள்ளது. தொடர்ந்து மொபைல் போனில் பார்த்தவர்களையும் தன் கூட்டணி கட்சியைச் சார்ந்த சிபிஎம் கவுன்சிலர் பிரியதர்ஷினி என்பவரையும் கூட கைது செய்துள்ளது திமுக அரசு.

இவ்வாறு ஆவணப்படத்தை பார்ப்பவர்கள் மீது பாசிச தாக்குதலை தொடுத்து வருகிறது மோடி அரசு. அதன் அடிவருடியாக செயல்படும் ஃபோர்டு பவுண்டேஷன் மாடல் ஆம்ஆத்மி அரசும், திராவிட மாடல் திமுக அரசும் மோடி அரசின் பாசிசத்திற்கு லத்தியாக செயல்படுகின்றன.

மனித உரிமைகள் பற்றி பேச ஏகாதிபத்தியங்களுக்கு என்ன யோக்கியதை உள்ளது?

பிபிசி பல்வேறு நாடுகளில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு முக்கிய பிரச்சாரகராக பணி செய்து வருகிறது. பாலஸ்தீனம், ஈராக், உக்ரைன் பிரச்சினைகளில் அது அமெரிக்க-பிரிட்டன் அரசுகளின் ஊதுகுழலாக செயல்பட்டது. பிபிசியின் ஊடகக்கொள்கை குறித்த தெளிவுடன்தான் நாம் இந்த ஆவணப்படத்தை அணுக வேண்டும். மோடி பிரதமரானதும் தங்களது நாட்டிற்குள் நுழைய விதித்திருந்த தடையை இங்கிலாந்தும் அமெரிக்காவும் ஏன் நீக்கின? மோடி அரசுடன் பல்வேறு இராணுவ கூட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு சீனாவை சுற்றி வளைக்கும் திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும்போது தெரியவில்லையா?... மோடிதான் இனப்படுகொலைக்கு காரணமென்று. டெல்லியில் இசுலாமியர்களை படுகொலை செய்த மோடி அரசை ட்ரம்ப் அரசு எந்த வகையில் ஆதரித்தது. இனப்படுகொலையை அரங்கேற்றுவதில் அமெரிக்க அரசுக்கும் மோடி அரசுக்கும் சித்தாந்த ரீதியாக எந்த வேறுபாடும் இல்லை. உலகம் முழுவதும் அமெரிக்க பிரிட்டன் ஏகாதிபத்தியங்கள் ஈடுபடாத மனித உரிமை மீறல்களா, இனப்படுகொலைகளா? இவர்களுக்கு மனித உரிமைமீறல்கள் குறித்துப் பேச யோக்கியதை துளியுமில்லை. அதனால்தான் தற்போது கூட அமெரிக்கா மோடியுடன் நட்பு பாராட்டியே வருகிறது. இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனாக் தனக்கும் பிபிசியின் ஆவணப் படத்திற்கும் தொடர்பு இல்லை, அது மோடியைப் பற்றிய நன்மதிப்பை குறைக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது என பேசி வருகிறார். ஆவணப்படத்தில் கூட அன்றைய வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்ட்ரா மோடியின் இந்த செயலை வைத்து பிரிட்டிஷ் அரசு இந்தியாவுடன் தனது ராஜதந்திர உறவுகளை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்கிறார். மோடி எனும் தனிமனித ஆளுமைக் கோளாறு தொடர்பானதாக இந்தப் பிரச்சினையை பிபிசி ஆவணப்படம் காட்சிப்படுத்துகிறதேயொழிய இதை ஆர்எஸ்எஸ்ன் இந்துராஷ்டிர நோக்கமாக காட்டவில்லை. இங்கிலாந்து அரசு இந்தியாவுடனான அதன் தடையற்ற வர்த்தகங்களுக்கான - சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு (Free Trade Agreement - FTA) பலசுற்று பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகிறது. மேலும் வெளிநாட்டு வழக்கறிஞர்களும் இந்திய நீதிமன்றங்களில் அவர்களின் நிறுவனங்கள் சார்பில் வாதாட அனுமதிக்கும் சட்டங்களை இயற்றுவதற்கான பேச்சு வார்த்தைகளையும் நடத்தி வருகிறது. மோடி மீதான குஜராத் இனப்படுகொலை குற்றச்சாட்டை இந்த ஒப்பந்தங்களுக்கான நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு அடிப்பணிய வைக்கும் துருப்புச்சீட்டாகவும் பயன்படுத்துகிறது. மோடியின் தோளில் கையைப் போட்டுக் கொண்டே இடுப்பில் கத்தியை வைத்து மிரட்டுகின்றன. தங்களின் நலன்களுக்கு அடிபணிய மிரட்டுகின்றன. உடன்பட்டால் இந்த ஆவணப்படத்தை குப்பையில் எறிந்து மீண்டும் மோடியை பற்றிய நேர்மறை பிம்பத்தை கட்டியமைக்கும், இல்லையெனில் இந்தியாவில் ஆட்சி மாற்றத்திற்கு இதை பயன்படுத்தும். அதைத்தான் அமெரிக்க தொழிலதிபர் சோரஸின் குரல் வழியாக ஜனநாயக மறுமலர்ச்சி என பேசி வருகிறது.

ராகுல்காந்தியை மோடி அரசுக்கு மாற்றாக முன்வைக்கலாம். அல்லது தங்களுக்கு சேவை செய்யும் வகையில் ஏதேனும் புதியதொரு பொம்மை அரசை கூட இவர்களால் உருவாக்க இயலும். அண்மையில் இலங்கையில் அவ்வகையில்தான் அமெரிக்கா சீன ஆதரவு ராஜபக்சே அரசை வீழ்த்தி, ரணில் விக்ரமசிங்கை ஆட்சியில் அமர வைத்தது. ஏன் இந்தியாவில் கூட 90களில் விபிசிங் ஆட்சியை வீழ்த்தி சந்திரசேகரை பிரதமராக்கியது நாம் அறிந்ததே. இந்த பிபிசி ஆவணப்படம் வெளியிடுவதற்கு முன்பு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ராகுல்காந்தியின் உரைகளையும் ஜோடா யாத்திரை நாடகங்களையும் நாம் பார்த்தோம். மோடி அரசின் பாசிசப் போக்குகளை அம்பலப்படுத்தி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற வக்கற்ற ராகுல்காந்தி, அமெரிக்க -ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களிடம் "மை லார்ட்" தங்களுக்கு சேவை செய்ய எனக்கொரு வாய்ப்பளியுங்கள் என்று மண்டியிட்டு மன்றாடுகிறார். மோடி சீன எதிர்ப்பில் தயக்கம் காட்டுவதாகவும், சீனாவுக்கெதிரான தெற்காசிய மேலாதிக்கத்திற்கு மோடியை விட தான் அதிகம் பாடுபடவிருப்பதாகவும் உறுதியளிக்கிறார். ஆகையால் இந்த ஆவணப்படமும் ஆட்சி மாற்றமும் பாதிக்கப்பட்டவர்களின் ஜனநாயக உரிமைகளை எப்போதும் நிலைநாட்டப் போவதில்லை.

குஜராத் படுகொலையில் ஏகாதிபத்தியங்களின் விசாரணை என்பதெல்லாம் அவர்களின் புதிய காலனிய நலன்களிலிருந்தே எழுகின்றன. ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை ஏகாதிபத்தியங்கள் எவ்வாறு பயன்படுத்தின என்பதே அதற்கு சாட்சி. இதேப் போல்தான் சேனல்-4 நிறுவனத்தின் வீடியோக்களை முன்வைத்து இலன்கையில் மனித உரிமை மீறல் விவாதங்களை அமெரிக்கா ஐ.நாவில் எழுப்பியது. இனவழிப்பு போர்க்குற்றங்களில் ஈடுபட்ட ராஜபக்சே கும்பல் மீது சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைகளை ஐ.நா.வின் மனித உரிமை கமிஷனர் நவநீதம்பிள்ளை உள்ளிட்டோர் எழுப்பியபோதும் சர்வதேச விசாரணையை நடத்தாமல் குற்றவாளியான இலங்கை அரசிடமே அந்த பொறுப்பை ஒப்படைக்கும் ஜெனீவா தீர்மானம் மூலம் துரோகமிழைத்தது அமெரிக்கா, அதற்கு இங்கிலாந்தும் துணைப்போனது. பின்னர் ராஜபக்சே கும்பலின் மீதான களங்கத்தைப் போக்க இலங்கையிலேயே காமன்வெல்த் மாநாட்டை நடத்தின. ஏகாதிபத்தியங்கள் தங்களின் நலனுக்காக நடத்தும் விசாரணையை ஏற்க முடியாது. எனவே சர்வதேச விசாரணை என்பது ஏகாதிபத்தியங்களின் தலையீடற்ற வகையில் ஐ.நாவில் அங்கம் வகிக்கும் ஒடுக்கப்பட்ட நாடுகளின் தலைமையில் பன்னாட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும்.

ஆகையால், மோடிகும்பலை ஆட்சியிலிருந்து தூக்கியெறிய போராடுவதோடு; இனப்படுகொலைக்கும் துணைப்போன இந்துத்துவ பாசிசத்தின் கைக்கூலிகளான உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பதவிநீக்கம் செய்யவும்; ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகளை தடைசெய்யவும்; மோடி கும்பல் மீது ஒடுக்கப்பட்ட, இசுலாமிய நாடுகள், பத்திரிக்கையாளர்கள், ஜனநாயக அமைப்புகள் உள்ளடக்கிய குழுவின் பன்னாட்டு விசாரணைக் கோரியும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துப் போராட வேண்டும். 

- சமரன்

(மார்ச் -மே 2023 இதழ்)