இந்திய ஊழல் வரலாற்றின் அவமானச் சின்னமாக விளங்கும் மோடி அரசு
சமரன்

நானும் சாப்பிட மாட்டேன் பிறரையும் சாப்பிட விடமாட்டேன் (நா காத்தா ஹும் - நா கானே தூவுங்கா) இதுவே எனது தாரக மந்திரம், அதாவது நானும் ஊழல் செய்யமாட்டேன் ஊழலில் ஈடுபடுவோரையும் சும்மா விட மாட்டேன் எனக் கூறி 2014ல் ஆட்சிக்கு வந்த மோடி அரசு இன்று மலைமுழுங்கியாய் வரலாறு காணாத மாபெரும் ஊழல்களில் திளைத்து வருகிறது. பிறரையும் சாப்பிட விட மாட்டேன் என ஏழைகளின் உணவை பறித்து அவர்கள் வயிற்றிலடித்து அதானி அம்பானிகளை கொழுக்கச் செய்வதில் அரும்பாடு படுகிறது. அதற்காக மாபெரும் முதலாளித்துவ ஊழல்களில் ஈடுபடுகிறது மோடி அரசு. மத்தியில் ஆளும் மோடி அரசு மட்டுமல்ல பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் கூட மிகப் பெரிய ஊழல்களில் ஈடுபட்டு வருகிறது, அவை குறித்தும் இக்கட்டுரையில் காண்போம்.
நாட்டின் 77வது சுதந்திரதின உரையில் கூட 'நாட்டில் நிலவும் அனைத்து பிரச்னைகளுக்கும் ஊழலே காரணம். கரையான்களைப்போல ஊழல் நாட்டின் அமைப்புகளை அரிக்கிறது' என மோடி வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருந்த சூழலில் தான் இந்திய கணக்குத் தணிக்கை ஆணையத்தின் (Comptroller and Auditor General of India - CAG) அறிக்கை வெளியிடப்பட்டு மோடி அரசின் 7.5லட்சம் கோடி ரூபாய் ஊழலை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
சிஏஜி அறிக்கையின்படி 7.5லட்சம் கோடி ரூபாய் ஊழல்
நாட்டின் வளங்களை அமெரிக்க ஏகாதிபத்தியமும் உள்நாட்டு கார்ப்பரேட்களும் சுரண்டி கொள்ளையடிக்க உருவாக்கப்பட்ட திட்டங்களே பாரத்மாலா, சாகர்மாலா, உதான் உள்ளிட்ட மாபெரும் உள்கட்டமைப்பு திட்டங்களாகும். அந்த பாரத் மாலா திட்டத்தின் படி உள்கட்டமைப்புகளை உருவாக்குவதிலும்கூட கொள்ளையடித்துள்ளது மோடி அரசு. அத்திட்டத்தின்கீழ் 34,800 கி.மீ நீளத்துக்கு நாடு முழுவதும் நெடுஞ்சாலை அமைக்க ரூ.5,35,000 கோடியைப் பொருளாதார விவகாரங்களுக்கான நிலைக் குழு அங்கீகரித்தது. அதில், 31 மார்ச் 2023 வரை 13,499 கி.மீ நீளமுள்ள சாலைகள் மட்டுமே முடிக்கப்பட்டிருக்கின்றன. இது மொத்த அங்கீகரிக்கப்பட்ட நீளத்தில் 39% சதவிகிதத்துக்கும் குறைவு. பொருளாதார விவகாரங்களுக்கான நிலைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கி.மீ தொலைவுக்கு ரூ.15.37 கோடி என்ற செலவைவிட இரண்டு மடங்கு அதிகமாக, ஒரு கி.மீ.க்கு ரூ.32.17 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் மேலும் 26,316 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலை அமைக்க மட்டும் முன் அனுபவமில்லாத அதானியின் ஷெல் நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்குவதற்காக ரூ.8,46,588 கோடியை அனுமதித்துள்ளது மோடி அரசு. இவ்வாறு இத்திட்டத்தில் மட்டும் சுமார் 7லட்சம் கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டுள்ளது. அதிலும் குறிப்பாக டெல்லியிலிருந்து ஹரியானாவின் குருகிராம் வரையிலான துவாரகா தேசிய விரைவுச் சாலைத் திட்டத்தில் மட்டும் 1 கி.மீ சாலை அமைக்க 250கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக மலைக்க வைக்கும் பொய்யான கணக்கை காண்பித்துள்ளது இந்த திருட்டுக் கும்பல். திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 18கோடி ரூபாய் என்பதே மிகை மதிப்பீடுதான் அவ்வாறிருக்கையில் அதைவிட 14 மடங்கு செலவு செய்திருப்பதாக ஏமாற்றுவதெல்லாம் அடுக்குமா என்பது இந்த ஆட்சியாளர்களுக்கே வெளிச்சம்(!). மக்களை எவ்வளவு ஏமாளிகளாக கருதுகிறார்கள் இவர்கள்.
குறிப்பிட்ட 5 சுங்கச்சாவடிகள் மட்டும் மாதிரி ஆய்வு நடத்தியதிலிருந்து மட்டும் 154கோடி ரூபாய் அளவிற்கு வாகன ஓட்டிகளிடமிருந்து அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மறுபுறம் சலுகை ஒப்பந்தங்களினால் வருவாய் பகிர்வுக்கான ஒதுக்கீடு இல்லாததால், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.133.36 கோடி வருவாயை இழந்துள்ளது. இந்த தணிக்கை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டால் மோடி கும்பலின் ஊழலால் அரசுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதும் அம்பலமாகும்.
மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டமான 'ஆயுஷ்மன் பாரத்' திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள 24கோடி மருத்துவ காப்பீடு அட்டைகளில் 7.5லட்சம் அட்டைகள் மொபைல் எண்ணே இல்லாமல் வெறும் '99999 99999' என்ற ஒரே எண்ணை கொண்டு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களுக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக போலியான ஆவணங்களை உருவாக்கி கொள்ளையடித்துள்ளது. இறந்துபோன 3500 க்கு மேற்பட்டோருக்கும் சிகிச்சைப் பார்த்ததாக கூறி கொள்ளையடித்துள்ளது இந்த பிணந்தின்னி மோடி கும்பல். கார்கில் யுத்தத்தில் சவப்பெட்டி வாங்குவதிலுங்கூட ஊழலில் ஈடுபட்ட வாஜ்பாய் கும்பலின் வாரிசுகள் தானே இவர்கள்.
அதேப்போல, அயோத்தி இராமர் கோவில் கட்டுமான ஒப்பந்தத்தில் முன்வைப்புத் தொகை பெறுவதில் ஊழல், கிராமப்புற மேம்பாடு திட்டத்திற்கான விளம்பரம் செய்வதில் ஊழல், ஹெச்.ஏ.எல் விமான இஞ்சின் தயாரிப்பு ஒப்பந்தத்தில் 160கோடி ரூபாய் ஊழல் என இந்தாண்டின் சிஏஜி அறிக்கையின் படி மட்டுமே மோடி கும்பல் 7.5லட்சம் கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டுள்ளது.
அதோடு மட்டுமில்லாமல், வரிவருவாய், அந்நிய மூலதனம், அந்நிய கடன்கள் உள்ளிட்ட எவற்றையும் முறையாக கணக்கு வைப்பதில்லை. கேட்டால் தேசப் பாதுகாப்பு- இராணுவ இரகசியம் என கதையளந்து பல லட்சம் கோடி ரூபாயை சுருட்டியுள்ளது. 4.78லட்சம் கோடி ரூபாய் வரி வருவாயை கணக்கில் வைக்காமல் மோசடி செய்துள்ளது. அந்நிய கடன் ரூபாய் 2.19 லட்சம் கோடி என கணக்கை குறைத்துக் காண்பித்து ஏமாற்றியுள்ளது. இவற்றையும் இந்த சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
கார்ப்பரேட் கடன்தள்ளுபடி, பங்குச் சந்தை, 5ஜி மற்றும் நிலக்கரி ஊழல்
மாபெரும் பங்குச் சந்தை மோசடிகளில் ஈடுபட்ட அதானி குழுமத்துடன் இணைந்து 18லட்சம் கோடியை சுருட்டியுள்ளது மோடி கும்பல். அதே வேளையில் அந்நிறுவனத்திற்கு எல்.ஐ.சி பங்குகளையும், எஸ்.பி.ஐ உள்ளிட்ட தேசிய வங்கிகளின் பங்குகளையும் தாரை வார்த்தது, அதானி உள்ளிட்ட பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்களுக்கு கடன்களை தள்ளுபடி செய்தது என சுமார் 14.5லட்சம் கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டுள்ளது மோடி அரசு. மேலும் ஹர்சத் மேத்தா, கேத்தன் பரேக் போன்ற பங்குச் சந்தை ஊழல்வாதிகளையெல்லாம் விஞ்சும் விதமாக செபி அமைப்பின் மூலம் சுமார் 4.5லட்சம் கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டுள்ளது சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் மோடி கும்பல்.
5ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்வதில் ஊழல் - 4.5லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அலைக்கற்றை ஏலத்தை அம்பானி நிறுவனத்திற்கு வெறும் 1.5லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஒதுக்கீடு செய்து அதில் சுமார் 3லட்சம் கோடி ரூபாய் வரை ஊழலில் ஈடுபட்டுள்ளது.
அதானி குழுமம் இந்தோனேசியாவில் இருந்து இங்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை நேரடியாக இங்கு இறக்குமதி செய்வது, ஆனால் அதற்கான பில்லை மட்டும் துபாய், மொரீசியஸ் போன்ற நாடுகளில் உள்ள தனது ஷெல் நிறுவனங்கள் மூலம் விலையை அதிகப்படுத்தி (Over Invoicing) காண்பிப்பது என மோடியின் ஆசியுடன் 29,000 கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டுள்ளது. இவையெல்லாம் மோடியின் தற்போதைய நான்கரை ஆண்டு ஆட்சிக் காலத்தில் வெளியில் வந்த சில ஊழல்கள் மட்டுமே. வெளியில் வராமல் ஊடகங்களின் வாயடைக்கப்பட்ட ஊழல்கள்கள் இன்னும் பல லட்சம் கோடி மதிப்பிலானவை.
மோடியின் முதல் 5ஆண்டு ஆட்சிக் காலத்திய ஊழல்கள்
இந்த நான்கரை ஆண்டு ஆட்சியில் மட்டுமல்ல ஊழலை ஒழிக்க வந்த உத்தமராக மோடி அவதாரம் பூண்டு ஆட்சிக்கு வந்த முதல்
5 ஆண்டு ஆட்சி காலத்திலேயே மாபெரும் ஊழல்களில் ஈடுபட்டது. மோடி ஆட்சியும் மாநில பாஜக அரசுகளின் ஊழல்கள் இல்லாத துறையே இல்லை எனும் அளவிற்கு அனைத்து துறைகளிலும் ஊழல் எதைத் தொட்டாலும் ஊழல்.
- ரஃபேல் ஊழல் - ஜெட் ரபேல் போர் விமானங்கள் - 126ல் 18ஐ பிரான்ஸ் தஸ்ஸோ நிறுவனத்திடமிருந்து வாங்குவது மீதம் 108ஐ தொழில்நுட்பம் பெற்று மத்திய அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (பிகிலி) மூலம் உற்பத்தி செய்வது என்ற மன்மோகன்சிங் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை முறித்துவிட்டு, 36 விமானங்களை மூன்று மடங்கு அதிக விலை கொடுத்து வாங்குவது மற்றும் மீதமுள்ள உற்பத்தியை எந்த முன் அனுபவமுமில்லாத - திவாலான அனில் அம்பானியின் 'ரிலையன்ஸ் டிபென்ஸ்' நிறுவனத்திற்கு டெண்டர் முறையில் ஒப்படைத்தது. இதில் சுமார் 60ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது மோடி கும்பல்.
- ஸ்பெக்ட்ரம் ஊழல் - மோடி அரசாங்கத்தின் கீழ் தொலைத்தொடர்பு அலைக்கற்றை நிர்வாகத்தில் 2016, 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் மட்டும் 69,381 கோடி ரூபாய் அளவுக்கு நிதி முறைகேடுகள் நடந்திருப்பதாக அப்போதைய சிஏஜி அறிக்கைகள் வெளிப்படுத்தின.
- ஸ்கில் இந்தியா மோசடி - 40 கோடி இளைஞர்களை திறன்படுத்தும் இலக்கை நிர்ணயித்தது மோடி அரசு. மோசடியான ஆதார் எண்களை உள்ளீடாக வழங்கி திறன் மேம்பாட்டு அமைப்பு (SDMS) தளத்தில் பதிவேற்றப்பட்ட 50 லட்சம் பேரில் 2018 நிலவரப்படி நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் 9.68 லட்சம் பேர் மட்டுமே உண்மையான ஆதாயங்களை பெற்றுள்ளனர். மீதமுள்ளவை பாஜகவின் மோசடியால் பதிவேற்றப்பட்டு பல்வேறு சலுகைகளை ஏமாற்றி கொள்ளையடித்துள்ளது பாஜக கும்பல்.
- மல்லையாவை தப்ப வைக்க ஊழல் - பொதுத்துறை வங்கிகளுக்கு 9,000 கோடி ரூபாய் கடனைத் தராமல் ஏமாற்றிய விஜய் மல்லையா சிபிஐயின் லுக் அவுட் நோட்டீஸை மீறியும் நாட்டை விட்டு பத்திரமாக தப்பவைக்க பாஜக அரசு உதவியதில் ஊழலில் ஈடுபட்டது.
- நீரவ் மோடி ஊழல் - பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.22,000 கோடி மோசடி செய்த நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர் தப்பிக்க அனுமதிக்கப்பட்டனர். மோடி,சோக்சி மற்றும் பிஎன்பி வங்கி அதிகாரிகள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக 2016 ஆம் ஆண்டிலேயே பிஎம்ஓ, செபி, ஈ.டி மற்றும் சிபிஐ ஆகியவற்றுக்கு புகார்கள் அளிக்கப்பட்டன. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் தப்பிக்க விடப்பட்டனர்.
- தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (NULM) கீழ் ஏழைகளுக்கு 208 வீடுகள் மட்டும் கட்டுவதற்கு ரூ.1078 கோடியை செலவழித்தது. இது அத்திட்ட மதிப்பீட்டிலான வீடுகளின் உண்மை மதிப்பீட்டைக் காட்டிலும் 200மடங்கு அதிகப்படியானது. இவ்வாறு ஏழைகளுக்கு வீடு கட்டுவதன் பெயரிலும் ஊழலில் ஈடுபட்டுள்ளது மோடி அரசு.
- நீட் ஊழல் - அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை கோரும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.25 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது, மேலும் தேர்வெழுதுவதில் ஆள்மாறாட்டத்திலும் ஈடுப்பட்டனர். முதுகலை படிப்பிற்கான நீட்டை நடத்த 40 மில்லியன் டாலர் மதிப்பிலான டெண்டரை எந்த அறிவிப்பும் இல்லாமல் கொடுத்துள்ளது. ஒருபக்கம் தகுதி எனும் பெயரில் ஏழை மாணவர்களின் உயிர்களை பறித்துக் கொண்டு மறுபக்கம் இத்தேர்வை பயன்படுத்தியே மிகப்பெரிய ஊழல்களில் ஈடுபட்டு வருகிறது பாஜக அரசு.
- SSC வினாத்தாள் கசிவு ஊழல் - 2017ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை Staff selection Commision -SSC ஆள்சேர்ப்பு தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் விடைகள் கசிய விடப்பட்டன. சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதிய இத்தேர்வில் ஆள்சேர்ப்பு மோசடியில் ஈடுபட்டது மோடி அரசு.
- எக்ஸ்-ரே டெக்னீஷியன் ஆட்சேர்ப்பு மோசடி - பிஜிஐஎம்இஆர்-ல் டெக்னீஷியன் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்களிடம் பணிக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை லஞ்சம் பெற்று ஏமாற்றியுள்ளது பாஜக அரசு.
- ஓஎன்ஜிசி ஊழல் - டீப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு எரிவாயு நீரிழப்பு அலகுகளை வழங்குவதற்காக ரூ.312 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை வழங்குவதில் ஊழல்.
- கேரளாவின் 5 விமான நிலையங்களை அதானி நிறுவனத்திற்கு இயக்குவதற்காக வழங்கிய டெண்டரில் ஊழல். ஜிஎம்.ஆர் நிறுவனம் ஒரு பயணிக்கு ரூ.63 என்று புள்ளிகள் வழங்கிய நிலையில் ரூ.168 என ஒரு பயணிக்கு புள்ளிகள் வழங்கிய அதானி நிறுவனத்திற்கு டெண்டரை வழங்கியது.
- போலியான இணைய தளங்களின் பெயரில் விளம்பரம் செய்ததாக பொய்யான செலவு கணக்கு காண்பித்ததில் ஊழல்
- குஜராத்தில் அதானி நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கியதில் ஊழல், 1 ச.மீ நிலத்தை வெறும் 1ரூபாய் முதல் 32ரூபாய் வரை மட்டுமே விலை நிர்ணயம் செய்து 14,305 ஏக்கர் நிலத்தை (சுமார் 6 கோடி ச.மீ) நிலத்தை வாரி வழங்கியுள்ளது.
- கேமன் தீவு FDI ஊழல் - கேமன் தீவுகளில் இருந்து வந்த அன்னிய நேரடி முதலீடு மூலமாக 2017-18ல் 8,300 கோடி ரூபாய் ஊழல் பணம் இந்தியாவுக்குள் நுழைந்தது. இது 2000 முதல் 2017 வரை இந்தியாவிற்கு வந்த மொத்த நிதிக்கு சமமானது.
- டெல்லி கிரிக்கெட் வாரிய ஊழல் - அலுவலகம் தொடர்பான உபகரணங்களான மடிக்கணினிக்கு நாளொன்ருக்கு ரூ.16000மும், பிரிண்டருக்கு நாளொன்ருக்கு ரூ.3000மும் என பல்வேறு உபகரணங்களுக்கு அநியாய டெண்டர் விலை உயர்த்தப்பட்டு முறைகேட்டில் ஈடுபட்டது. மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இந்த ஊழல் வழக்கில் நேரடி தொடர்பு கொண்டிருந்தார்.
- பணமதிப்பிழப்பு ஊழல் - பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் நாடு முழுவதிலும் அமித்ஷா உள்ளிட்ட பாஜகவினர் நிலம் வாங்கி குவித்ததில் ஊழல்.
- இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லீசிங் & ஃபைனான்சியல் சர்வீசஸ் (IL & FS) ஊழல் - திவாலான ஐஎல் அண்ட் எஃப்.எஸ் நிறுவனத்திற்கு 91,000 கோடி ரூபாய் கடன் வழங்கியதில் ஊழல். போதாதென்று பொதுத்துறை நிறுவனங்களை IL & FS-க்காக பிணை கொடுக்கவும் மோடி அரசாங்கம் வலியுறுத்தியது.
- ஜெய் ஷா நிறுவன ஊழல் - அமித்ஷா மகன் ஜெய் ஷாவுக்குச் சொந்தமான நிறுவனத்தின் வர்த்தகம் ஓராண்டில் 16,000 மடங்கு அதிகரித்துள்ளது. ஒரே ஆண்டில் நிறுவனத்தின் வருவாய் வெறும் 50,000 ரூபாயில் இருந்து 80கோடி ரூபாயாக உயர்ந்திருந்தது.
'ஜெய் பஜ்ரங் பலி' அனுமாரின் வால் போல நீளும் இந்த கும்பலின் ஊழல் பட்டியலை இந்த கட்டுரையின் எல்லைக்குள் அடக்குவதென்பது சற்று சிரமமான காரியம்தான் அதற்கென்று தனியே புத்தகமே எழுதும் அளவிற்கு நீண்டது. கரப்ட் மோடி தளம் (Corrupt Modi) 2019ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு வெளியிட்ட மாநில பாஜக அரசுகளின் ஊழல்கள் படித்து முடிப்பதற்குள்ளாகவே பெரும் மலைப்பு ஏற்பட்டு விடும் என்பதால் அவை (உள்பெட்டியில்) தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கொடுக்கப்பட்டுள்ளதை விட நீண்டது மோடி மற்றும் பாஜக அரசுகளின் ஊழல்கள். ஊழல்களை திட்டமிடப்பட்ட முறையில் செய்வது பாஜகவினருக்கு கைத்தேர்ந்த விசயமாகி விட்டது. மோடியின் ஆட்சிக்குப் பிறகு ஊழல் என்பது சாதாராணமான எவ்வித பதட்டத்தையும் ஏற்படுத்தாத (normolised) செய்தியாக்கப்பட்டுவிட்டது. தேசபக்தியின் பெயரிலேயே அத்தனை ஊழல்களையும் அரங்கேற்றி வருகிறது இந்த தேசவிரோத-மனிதகுல விரோத கும்பல். உலகளாவிய நிதி ஒழுங்கமைப்பு என்ற தொண்டு நிறுவனம் மன்மோகன் கும்பலின் ஆட்சிதான் ஆசியாவிலேயே மிகவும் ஊழல் மலிந்த ஆட்சி என்று அறிவித்தது. ஆனால் இன்று மோடி கும்பலின் ஆட்சி உலக வரலாற்றிலேயே ஊழல் மலிந்த ஆட்சியாக - அவமானச் சின்னமாக விளங்குகிறது.
மாநில பாஜக அரசுகளின் ஊழல்களுள் சில:
|
ஊழலின் ஊற்றுக்கண் நிதிமூலதனமே
நிதிமூலதனம் எந்த அரசாங்கத்தையும் விலைக்கு வாங்கவும் அடிமைப்படுத்தவும் செய்கிறது. காலனிய நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு, அதிகாரிகளுக்கு லஞ்சம் தருவதன் மூலமும், அவர்களை ஊழல்வாதிகளாக மாற்றியும் இதனை நிறைவேற்றிக் கொள்கிறது. மேலும் பெரிய வங்கிகள், பங்கு மார்க்கெட்டுகள், பங்கு பரிவர்த்தனை இவற்றுடன் பிணைக்கப்பட்டு நாட்டின் அனைத்துத் துறைகளையும் ஊழல்மயமாக்கி வருகிறது. பல்வேறு அடிமை ஒப்பந்தங்கள் மூலமாக அரசியல் பொருளாதார கொள்கைகளை கட்டுப்படுத்துகின்றன. நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கவும், சுரண்டி ஒன்றுகுவிக்கவும் இவ்வழிகளில் ஈடுபடுகிறது.
நிதிமூலதன ஆதிக்கத்திற்கான சேவையையும், முதலாளித்துவ ஊழலையும், பாசிசத்தையும் ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாது. இவை ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்கள். நிதிமூலதன ஆதிக்கமும் முதலாளித்துவ ஊழல்களும் நெருக்கடியை அதிகரிக்கின்றன. இந்த நெருக்கடியே பாசிசத்திற்கு வழி வகுக்கிறது. எனவே ஊழல் மற்றும் பாசிசத்தின் ஊற்றுக் கண்ணாய் விளங்கும் நிதிமூலதன ஆதிக்கத்தை ஒழிக்காமல் மோடி அரசின் ஊழல்களையோ பாசிசத்தையோ தனித்து ஒழிக்க முடியாது. பாசிசத்தை மருதையன் உள்ளிட்ட சிலர் வெறும் மதவாதமாக சுருக்கிப் பார்த்து, இன்று ஊழலுக்கெதிரான போராட்டத்தை விட மதவெறிக்கெதிரான போராட்டமே முதன்மையானது என்கின்றனர். பாசிசத்தின் பொருளியல் அடிப்படையை மார்க்சிய கண்கொண்டு பார்க்காமல், திராவிட கண்ணாடி அணிந்து பார்ப்பதன் விளைவே இவர்களின் மார்க்சிய விரோத நிலைபாட்டிற்கு அடிப்படையாக அமைகிறது. எனவே ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதும் - மோடி அரசின் இந்துத்துவ பாசிசத்திற்கு எதிரான போராட்டம் என்பதும் ஏகாதிபத்திய நிதிமூலதன ஆதிக்கத்திற்கெதிரான போராட்டத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது.
இந்திய பொருளாதார வீழ்ச்சி
ஒருபுறம் அம்பானியும் அதானியும் உலகின் பணக்காரர்கள் வரிசையில் முன்னிலைக்கு வந்துக் கொண்டிருப்பதும், மறுபுறம் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு அதளபாதாளத்தில் வீழ்ந்து ரூ83.20 காசுகளுக்கு வீழ்ந்துள்ளது, மக்களின் உணவு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் பணவீக்கம் 8% அளவிற்கு உயர்ந்து வாழ முடியாத அளவிற்கு இன்னலில் ஆழ்த்தி வருகிறது. இதற்கு உலகளாவிய மந்தநிலை ஒரு காரணமாக இருந்தாலும் இந்திய ஆட்சியாளர்களின் அரசியல்-பொருளாதார கொள்கைகளும் மோடி அரசின் ஊழல்மிகு ஆட்சியுமே மற்றொரு பிரதான காரணம்.
ஊழலை ஒழிப்பேன் - கருப்புப் பணத்தை மீட்பேன் என வாய்ச்சவடால் அடித்து ஆட்சிக்கு வந்த மோடி அரசு இன்று அனைத்துத் துறைகளிலும் தோல்வியடந்துள்ளதோடு மாபெரும் ஊழல்களிலும் திளைக்கிறது. 500,1000 ரூபாய் செல்லாது என அறிவித்து இது கருப்பு பணத்திற்கெதிரான துல்லியத்தாக்குதல் -சர்ஜ்ஜிக்கல் ஸ்டிரைக் என கதையளந்து 2000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்தது. தற்போது அதையும் மீண்டும் செல்லாது என அறிவித்து விட்டது. இதன் மூலம் கருப்பு பணம் ஒழிந்ததோ இல்லையோ ஏழைகளின் சேமிப்பு ஒழிந்தது; புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்க பல்லாயிரம் கோடி மக்களின் வரிப் பணம் பாழானது - இதுதான் மிச்சம்.
மக்களை வஞ்சித்து பசியிலும், பட்டினி வறுமையிலும் வேலையில்லா நெருக்கடியிலும் கொன்று குவிக்கும் மோடி அரசு, ஊழல் மூலம் தனது கட்சியின் சொத்துக்களையும் - ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகளின் சொத்துக்களையும் பன்மடங்கு பெருக்கி வருகிறது. கோடிக் கணக்கான நிதியை முதலாளித்துவ சேவைகளுக்காக இந்த அமைப்புகள் பெற்று ஏகாதிபத்தியங்களின் பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்களின் கரசேவகர்களாக செயல்படுகின்றன. நிதிமூலதன கொள்ளையை மூடிமறைத்து மக்களை மதரீதியாகவும், இன ரீதியாகவும், சாதி ரீதியாகவும் பிளவுப்படுத்தி மோத விடுகின்றன. அதற்காகவே தாராளமாக கையூட்டு பெறப்பட்டு இயங்குகின்றன இந்த கொலைவெறிக் கூட்டம்.
புதிய காலனிய நிதிமூலதன ஆதிக்கம் என்னதான் ஜனநாயக முகமூடி அணிந்து வந்தாலும் அதன் நெருக்கடி நிலை அதிகரிக்க அதிகரிக்க அது முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளையும் கூட பறித்து உழைக்கும் மக்கள் மீதும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினரின் மீதுமே பாசிசத் தாக்குதல்களை கட்டியமைக்கிறது. வரலாறு காணாத முதலாளித்துவ ஊழலில் ஈடுபட்டு வரும் மோடி அரசு தான் மறுபக்கம் நாடு முழுவதும் எதிர்க் கட்சிகளையும், ஏன் தனது கூட்டணியில் உள்ள கட்சிகளையும் கூட அமலாக்கத்துறை ரெய்டு, வருமானவரித் துறை ரெய்டு, விஜிலென்ஸ் ரெய்டு என கட்டிப்போட்டு மிரட்டி வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளின் வரலாறும் ஊழல் வரலாறே. தாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் நிதிமூலதன ஆதிக்கத்திற்கு சேவை செய்வதையும் ஊழலில் ஈடுபடுவதையும் தவிர்க்க முடியாது என்பதனால் அவை மோடி அரசின் ஊழல்களை பற்றி பேச மறுக்கின்றன. வாய்ப் பொத்தி மௌனம் காக்கின்றன. மோடி அரசின் இந்த மெகா ஊழல்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்யத் துப்பில்லாமல் சனாதன ஒழிப்பு எனும் பெயரில் பிரச்சனைகளைத் திசைத் திருப்பி வெட்கங்கெட்ட அடையாள அரசியலில் ஈடுபடுகின்றன சிபிஎம், திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள்.
எனவே மோடி அரசின் மதவாதப் போக்குகளை எதிர்த்துப் போராடுவது என்பதன் பொருள், அதன் ஊழல் மிகு ஆட்சியை எதிர்த்துப் போராடுவது; அதன் அரசியல்-பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவது; பன்னாட்டு-உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளை எதிர்த்து போராடுவது; புதியகாலனிய அடிமை ஒப்பந்தங்களை எதிர்த்துப் போராடுவது; ஊழலின் ஊற்றுக் கண்ணான ஏகாதிபத்திய நிதிமூலதன ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுவது ஆகும்.
- சமரன்
(டிசம்பர் 2023 -ஜனவரி 2024 இதழ்)