வயநாடு நிலச்சரிவு: பாஜக, கேரள அரசுகளின் கார்ப்பரேட் வனக்கொள்கை மற்றும் ரியல் எஸ்டேட் ஆக்கிரமிப்புகளால் உருவாக்கப்பட்ட செயற்கைப் பேரிடர்

சமரன் சிறப்புக் கட்டுரை

வயநாடு நிலச்சரிவு: பாஜக, கேரள அரசுகளின் கார்ப்பரேட் வனக்கொள்கை மற்றும் ரியல் எஸ்டேட் ஆக்கிரமிப்புகளால் உருவாக்கப்பட்ட செயற்கைப் பேரிடர்

இயற்கைப் பேரிடர்களும் நிலச்சரிவுகளும் கேரளாவுக்கு புதியது ஒன்றுமல்ல; ஆனால் இம்முறை இந்திய வரலாற்றிலேயே மிக துயரமான பேரிடரை சந்தித்துள்ளது கேரள மாநிலத்தின் வயநாடு. கடவுளர்களின் தேசம் – சொர்க்க பூமி என்று புகழப்படும் கேரளா இன்று சாத்தான்களின் தேசமாகவும் நரகமாகவும் மாறி நூற்றுக்கணக்கான உயிர்களை பறித்துள்ளது. 

உண்மையில் இது இயற்கை பேரிடரல்ல; ஏகாதிபத்திய – இந்திய தரகுமுதலாளித்துவ கொள்ளைக் கும்பலின் நவீன ஆதி சுரண்டலால் உருவாக்கப்பட்ட செயற்கை பேரிடரே ஆகும். மத்திய பாஜக, கேரள சிபிஎம் அரசுகளின் கார்ப்பரேட் வனக்கொள்கை, காடழிப்பு, மலைகள் மீதான ரியல் எஸ்டேட் ஆக்கிரமிப்புகளே இந்தப் படுகொலைகளுக்கு காரணம். 

வயநாடு - புஞ்சேரி மட்டம் முதல் மேப்பாடி வரையிலான நிலப்பரப்பு

வயநாடு மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது மேப்பாடி எனும் சிறிய நகரம் அதற்கு மேலே மலைச்சரிவில் அமைந்துள்ள கிராமங்கள் தான் அட்டமலை, சூரல்மலை, முண்டக்கை அதற்கும் மேலே புஞ்சேரி மட்டம். இந்த கிராமங்களுக்கு உள்ளும்புறமும் அருவி போல வளைந்து நெளிந்து ஓடுகிறது இருவழிஞ்சி ஆறு. இந்த ஆறு புஞ்சேரி மட்டத்திலுள்ள முகட்டில் இருந்து தோன்றி கீழே பள்ளத்தாக்கில் ஓடும் பிரதான ஆறான சாலியாற்றில் சென்று கலந்துவிடுகிறது. புஞ்சேரி மட்டத்தில் இருந்து சூரல்மலை வரையிலான அந்த மலைச்சரிவு மிகவும் செங்குத்தாக இறங்கும் மலைச்சரிவு ஆகும். புஞ்சேரி மட்டம் முகடு கடல் மட்டத்திலிருந்து 1800மீ உயரத்தில் உள்ளது எனில் சூரல்மலை 700-800மீ உயரத்தில் உள்ளது. சுமார் 1.5கிமீ கிடைமட்ட தொலைவிற்குள் 1கி.மீ செங்குத்து உயரம் உள்ளது எனில் அதன் சரிவு எவ்வளவு செங்குத்து என்பதை புரிந்துக் கொள்ள முடியும்.

இப்படியான ஒரு நிலப்பரப்பில்தான் இயற்கையான நீர் வழித்தடங்கள் ரியல் எஸ்டேட் மாஃபியாக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதுபோக, தேயிலைத் தோட்ட வேலைகளுக்காக புலம்பெயர் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக கொண்டுவரப்பட்டு சுரண்டப்பட்டு வருகின்றனர். இவர்கள், தமிழ்நாட்டிலிருந்தும், கர்நாடகாவிலிருந்தும், மேற்குவங்கம், அசாம், மத்தியபிரதேசம், ஜார்காண்ட் ஆகிய மாநிலங்களிலிருந்தும் கேரளாவின் பிற பகுதிகளிலும் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள். அவர்கள் அந்த அபாயகரமான மலைச்சரிவிலேயே தகர கொட்டைகள் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான சுரண்டலை சொல்லி மாளாது. நாம் கதகதப்பாக அருந்தும் ஒவ்வொரு தேநீர் கோப்பையிலும் செம்பாதி அவர்களின் குருதியும் கண்ணீரும் கலந்துள்ளது. அவர்களின் இரத்ததின் ஒருபாதியை அட்டைகளும் மறுபாதியை ஆண்டைகளும் உறிஞ்சுகையில் அவர்களின் உயிரெஞ்சிய உடல்களை மண்ணோடு மண்ணாக புதைத்துள்ளது இந்த நிலச்சரிவு.     

     

நிகழ்ந்தது அந்த பெருந்துயரம்

ஜூலை 29 அன்று இரவு, புஞ்சேரி மட்ட முகட்டில் தொடங்கிய நிலச்சரிவு மெல்ல மெல்ல சரிந்து 30ம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் வேகமெடுத்தது. ஆபத்தை உணர்ந்த நீத்து ஜோஜூ என்கிற மருத்துவ உதவியாளராக வேலை செய்யும் பெண் தனது அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து உதவி கோரியுள்ளார். மீட்பதற்கும் உதவி செய்வதற்கும் ஆட்கள் யாரும் உடனடியாக வர முடியாத சூழலில் கடும் மழை கொட்டித் தீர்த்தது. ஆபத்தை உணர்ந்த மேலும் சில அப்பகுதி வாழ்மக்கள் தகவல்களை பரப்பி தங்களுக்குள் உதவி தப்பிக்க முயன்றனர். அந்த அடர் இருளில், கடும் மழை கொடூர அரக்கனை போல் மிரட்டியது. தப்பிப்பதற்கு கூட வழியில்லாமால் சேறு சகதியுமாக பாதைகள் அறுபட்டுக் கொண்டிருந்தன. அதிகாலை 4 மணியளவில், புஞ்சேரி மட்டம், முண்டக்கை கிராமங்களை முழுவதுமாக பெயர்த்தெடுத்து சரிந்தது மலை; அதைத் தொடர்ந்து இருவழிஞ்சி ஆறு அகலமாகி நீர் ஓடும் பாதையிலிருந்து விலகி நேர் செங்குத்தாக பாயத் தொடக்கியது. அது, சூரல்மலை கிராமத்தின் பெரும் பகுதியையும் பெயர்த்தெடுத்தது. மண், சரடுகள், கற்கள். சிறு பாறைகள், பெரும் பாறைகள் முதலியவை காட்டாற்று வெள்ளத்தில் அரித்தெடுக்கப்பட்டு வந்து இப்பகுதிகளை மூழ்கடித்துள்ளன. அடுத்தடுத்துள்ள அட்டமலை கிராமும் மேப்பாடி நகரின் சிறுபகுதியும் கூட இதில் பாதிக்கப்பட்டுள்ளது.

முதல் தகவல் அளித்த - நீத்து என்கிற அந்த – பெண்ணும்,  காப்பாற்ற யாரும் இல்லாத நிலையில் நிலச்சரிவில் சிக்கி மாண்டுள்ளார். தப்பிக்க முயன்றவர்கள் – காப்பாற்ற முயன்றவர்கள் பலரும் சிக்கிக் கொண்டனர். என்ன நடந்து வருகிறது என்பதை உணர்வதற்குள்ளேயே பலர் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர். தூக்கத்தில் இருந்த நிலையிலேயே பலர் மண்ணுக்குள் புதைந்துள்ளனர். சுமார் 2000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்த இடம் தெரியாமல் சிதைந்து மண்ணில் புதைந்துள்ளன. பலர் புதைந்த வீடுகளுக்குள்ளே பிணமாக்கப்பட்டுள்ளனர். ஒரு குடும்பம் கட்டிலில் தூங்கியவாறே மேற்கூரை கான்கிரீட் இடிந்துவிழுந்து நசுங்கி மடிந்துள்ளது. ஒருவர் நாற்காலியில் உட்கார்ந்தவாறே பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். பலர் மண்ணுக்குள்ளும் பாறை இடிபாடுகளிலும் உடல் உறுப்புகள் சிதைந்து அடையாளம் தெரியாத அளவிற்கு புதைந்துள்ளனர். கை, கால்கள், துண்டாகியும், மூளை, வயிற்றுக் குடல் பகுதிகள் வெளியேறியும் இருந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பலியாகியுள்ளனர். ஒரு தாய் தனது குழந்தையை இறுக அணைத்துப்பிடித்த படியே சடலமாக கிடந்தார். மற்றொரு பெண் தனது ஒருகையில் மரக்கிளையையும் மற்றொரு கையில் தனது குழந்தையையும் இறுகப்பிடித்தபடி மரணப் போராட்டத்தில் சிக்கியுள்ளார், அப்போது வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மற்றொரு குழந்தையை மீட்க முயன்று அந்தக் குழந்தையைக் காப்பாற்றியுள்ளார். அந்த தருணத்தில் தனது குழந்தையை பறிகொடுத்துள்ளார்.                       

ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சேற்றோடும் சகதியோடும் பிணங்கள் குவியல் குவியலாக அள்ளப்படுகின்றன. தோண்ட தோண்ட சடலங்கள்; அடையாளம் அறிய முடியாத பிணக் குவியல்கள்; மேப்படி நகர மருத்துவமனைகளில் நிரம்பிய காயமடைந்தோர்; எங்கும் மரண ஓலங்கள்; செய்வதறியாத திகைத்து நிற்கும் மக்கள்; விக்கி நிற்கும் உறவினர்கள் – உறவினர்களை இழந்த குழந்தைகள் – குழந்தைகளை இழந்த தாய்மார்கள்; பிணக்குவியலுக்குள்ளும் புதை மண்ணுக்குள்ளும் உறவுகளை தேடும் ஏங்கிய கண்கள் என கொடுந்துயரமான காட்சிகள் நம் நெஞ்சை பதை பதைக்க வைக்கின்றன. ஒரே குடும்பத்தைச் சார்ந்த 16 பேரும், மற்றொரு குடும்பத்தைச் சார்ந்த 10 பேரும் இறந்துள்ளனர். 400க்கும் மேற்பட்ட உடல்கள் மண்ணில் புதைந்து மீட்கப்பட்டுள்ளன. 200க்கும் மேற்பட்ட உடல்கள் 15கி.மீ முதல் 60கி.மீ வரை தூரம் வரை சாலியாற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் இருந்த 2500 மக்களில் 1200 பேர் உயிருடனோ அல்லது பலத்த காயத்துடனோ தப்பியுள்ளனர். மீதமுள்ளவர்களின் நிலை என்னவென்று இந்தநாள் வரை தெரியவில்லை. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனித உயிர்களை காவு வாங்கியுள்ளது இந்த கொடூர சம்பவம். மனிதர்கள் மட்டுமல்லாமல், மாடுகள், நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகள், மான்கள், குரங்குகள் உள்ளிட்ட மலைவாழ் உயிரினங்கள் என அனைத்து உயிர்களும் பலியாகி உள்ளன. ஒரு குரங்கு தன் குட்டியை இறுகப்பற்றி அந்த மழையிலும் நடுநடுங்கி உட்கார்ந்திருக்கும் காட்சியும்; நாய் ஒன்று தனது குட்டிகளையும் வளர்த்தவரையும் தேடி அங்குமிங்கும் அழுதபடி ஓடி ஓலமிடும் காட்சிகள்; வெளிநாட்டில் வேலைப் பார்த்து வந்த ஒருவர் தனது குடும்பத்தை பறிக்கொடுத்த நிலையில் அவர்களின் உடல் கிடைக்காததால் ஒரு கையில் குச்சியை வைத்துக் கொண்டு மண்ணில் குத்தி குத்திப் பார்த்து கண்கலங்கிப் போய் தேடிக் கொண்டுள்ளார். இரவில் மற்றவர்களை காப்பாற்ற சென்ற தனது ஆருயிர் நண்பனை இழந்த ஒருவர் கிடைக்காமல் தேடிக் கொண்டுள்ளார் – இவை அனைத்தும் நம்மையும் அந்த மண்ணோடு மண்ணாக கரைய வைக்கின்றன.                      

புதிதாக திருமணமான தம்பதிகள், சுற்றுலாவுக்காக வந்தவர்கள் என ரிசார்ட்டுகளில் தங்கியிருந்தவர்களின் உயிர்களும் பறிக்கப்பட்டுள்ளன. புலம் பெயர் தொழிலாளிகள் மேற்கு வங்கத்தை சார்ந்த 242 பேர், அசாமைச் சார்ந்த 55 பேர், ஜார்காண்டைச் சேர்ந்த 44 பேர், மத்திய பிரதேசத்தைச் சார்ந்த 30 பேர் ஆகியோர் இறந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சூரல்மலைப் பகுதியில் உள்ளவர்கள் மட்டும் சிலர் அருகில் இருந்த பள்ளிக் கூடத்திலும் மசூதியிலும் தஞ்சம் புகுந்து தப்பித்துள்ளனர். உயிர் பிழைத்தவர்களும் உடுத்த மாற்றுத் துணிகூட இல்லாமல் அனைத்து உடைமைகளையும் பறிக்கொடுத்துள்ளனர். தங்களின் வாழ்வாதாரங்கள் அத்தியாவசிய உடைமைகள் என அனைத்தும் பறிபோய் நிர்க்கதியாக நிற்கின்றனர். சூரல்மலையிலிருந்து அட்டமலை, முண்டக்கை பகுதிகளுக்கு செல்லும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு பாதைகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுவிட்டன. எங்கு புதைகுழி இருக்கும் எங்கு பாறை இடுக்கு இருக்கும் என தெரியாத அளவிற்கு கால் ஊன்றி நடக்க முடியாத நிலையில் சுமார் 9 கி.மீ நீளத்திற்கு சகதிக் காடாகவும் பிணக்காடாகவும் மாறியுள்ளது அப்பகுதி. 3 கிராமங்களையே கொத்துயிரும் கொலையுயிருமாக சமாதிக் கட்டியுள்ளது. கேரள வரலாற்றிலேயே – ஏன் இந்திய வரலாற்றிலேயே மிகக் கொடூரமான பெருந்துயரத்தை பதிவு செய்துள்ளது இந்த வயநாடு நிலச்சரிவு. இது தேசிய பேரிடராகும். 

இந்த பெருந்துயரத்திற்கான காரணங்கள் என்ன?

இந்தியாவை உலுக்கிய இந்த பெருந்துயரம் நிகழ்ந்ததற்கான அடிப்படையை உடனடி காரணங்கள், நீண்ட கால காரணங்கள் என்று வகைப்படுத்தி அறிந்துக் கொள்ள வேண்டியுள்ளது.

உடனடி காரணங்கள்:

1. எச்சரிக்கை விடுத்ததில் மத்திய பாஜக, கேரள சிபிஎம் அரசுகளின் அலட்சியப் போக்கு 

2. பாஜக, சிபிஎம் அரசுகளின் கார்ப்பரேட் வனக் கொள்கை – காடழிப்பு, ரியல் எஸ்டேட் வர்த்தகம் – மலை ஆக்கிரமிப்புகள், நவீன ஆதி திரட்டல் கொள்ளை ஆகியவை

நீண்ட கால காரணங்கள்:

1. இயற்கை பூகோள அமைப்பு

2. புவி வெப்பமயமாதல் – காடழிப்புக்கு காரணமான இந்திய அரசுகளின் 40 ஆண்டுகால புதிய காலனிய –புதிய பொருளாதார கொள்கைகள் – அதை கேரள மாநில அரசுகள் அமல்படுத்தியது 

3. பழைய காலனியாதிக்க ஆதி திரட்டலின் நீட்சியே புதிய காலனிய கொள்கை

எச்சரிக்கை விடுத்ததில் மத்திய பாஜக, கேரள சிபிஎம் அரசுகளின் அலட்சியப் போக்கு 

ஜூலை மாதம் 29 – 30ம் தேதிகளில் பெய்த எதிர்பாராத பெருமழையால் நடந்தது இந்த துயர சம்பவம். அந்த இரு தினங்களில் மட்டும் மேக வெடிப்பு ஏற்பட்டு சுமார் 58 செ.மீ அளவிற்கான மழை கொட்டி தீர்த்துள்ளது. ஜூலை 29ம் தேதியன்றே சுமார் 25 செமீ மழை பொழிந்து இருவழிஞ்சி ஆறு வெள்ளப்பெருக்கெடுத்து நிரம்பி ஓடியது. மறுநாள் அதிகாலைக்குள் சுமார் 33 செ.மீ அளவுக்கு மழைக் கொட்டித் தீர்த்துள்ளது. நீரின் ஓட்டமும் ஈரப்பதமும் அதிகரிக்க அதிகரிக்க மண் தனது இறுக்கத்தை இழந்தது. மண்ணுக்குள் ஊடுருவிய நீர் ஊற்றுப்போல பெருக்கெடுத்து அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. நீரிடி எனும் அந்த அழுத்தம் தாளாமல் மண் வெகு வேகமாகவும் மொத்தமாகவும் பெயர்த்துக் கொண்டு சரியத் தொடங்கியுள்ளது.  

இந்த நிலச்சரிவு குறித்து எவ்வித அபாய எச்சரிக்கைகளும் இந்த மத்திய பாஜக மற்றும் மாநில சிபிஎம் அரசுகளால் கொடுக்கப்படவில்லை. இந்திய வானிலை ஆய்வுத் துறை, மழைப் பொழிவு குறித்த துல்லியமான மதிப்பீட்டை வழங்க திராணியற்று இருக்கிறது. அது அப்பகுதிக்கு வெறும் ஆரஞ்சு அலெர்ட் மட்டுமே கொடுத்திருந்தது. அதாவது, 10 செ.மீ –முதல் 15 செ.மீ வரை மட்டுமே மழை பொழிய வாய்ப்பிருப்பதாக கூறியது. ரெட் அலெர்ட் கூட கொடுக்கவில்லை. ஆனால் மழையோ மேக வெடிப்பு ஏற்பட்டது போல 58செ.மீ அளவிற்கு 48 மணிநேரத்திற்குள்ளாகவே கொட்டி தீர்த்துள்ளது. மத்திய நீர் ஆணையமும் அந்த தேதிகளில் இருவழிஞ்சி ஆற்றிலோ அல்லது சாலியாற்றிலோ வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கவில்லை.  ஜியோலாஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா துறையும் நிலச்சரிவு குறித்து எவ்வித முன்னறிவிப்பும் வெளியிடவில்லை. நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தபின்பே - ஜூலை 30ம் தேதி அன்று காலையில்தான் லேசான நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக மாநில சிபிஎம் அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளது. இது மக்கள் விரோத பாஜக அரசின் மாபெரும் துரோகமாகும்.

ஆனால், அமித்ஷா பேசுகையில் தாங்கள் முன்னரே எச்சரித்து விட்டதாகவும், மாநில அரசுதான் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையென்று பொய் பேசுகிறார். மாநில சிபிஎம் அரசின் பினராயி விஜயனும், தங்களுக்கு இவ்வளவு அபாயம் இருக்கும் என எச்சரிக்கவில்லை என மத்திய பாஜக அரசை கை காட்டுகிறார். முதல் நாள் 25 செ,மீ. க்கு மேல் மழை பதிவாகியிருந்த போதாவது இவர்கள் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம் கண்காணித்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியிருக்க வேண்டும். அதை மாநில அரசும் செய்யவில்லை. 

பாஜக – கேரள சிபிஎம் அரசுகளால் தொடர்ந்து வெள்ளம், பெருமழை, நிலச்சரிவு, பூகம்பம் போன்ற இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளையும் அவற்றை முன் உணர்ந்து மக்களைப் பாதுகாக்கும் தொழில்நுட்பங்களையும் உருவாக்கவே இல்லை. குறைந்தபட்சம், டாப்ளர் ராடர் (Doppler radar) இமேஜ் மேப்பிங் முறையை கூட பயன்படுத்தி மணிக்கு ஒருமுறை துல்லியமாக கண்காணிக்கும் முறைகளை கூட வயநாடு - மலபார் பகுதிகளில் உருவாக்கி வைக்கவில்லை இந்த ஆட்சியாளர்கள். 

வயநாடு நிலச்சரிவை முன்கூட்டியே உணர்ந்து எச்சரிப்பதற்கான தொழில்நுட்பங்கள் இல்லாததையும், மீட்பு பணிகளின் நடவடிக்கைகளிலும் தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் போதாமை நிலவியதையும் நாம் கண்கூடாக பார்த்தோம். மீட்பு பணிகளில் தன்னார்வலர்கள்தான் பெரும்பான்மையாக ஈடுபட்டனர். இராணுவ வீரர்களும் தங்களது உயிர்களை பணயம் வைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களுக்கு அத்தியவசியமான உபகரணங்களை கொடுப்பதற்கு திராணியற்று இருந்தது இந்த பாஜக அரசு, கொரோனா பெருந்தொற்று காலத்தில் எவ்வாறு மருத்துவர்களும், செவிலியர்களும், பிற மருத்துவ உதவியாளர்களும், தன்னார்வலர்களும் தங்களது உயிரை பணயம் வைத்து வேலை பார்த்தனர் என்பதையும் அவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் கூட கொடுக்காமல் அவர்களையும் இந்த கொள்ளை நோய்க்கு பலி கொடுத்தது என்பதை பார்த்தோமல்லவா? அதுபோலவே, மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களை பார்த்தீர்கள் என்றால் தெரியும், சகதிக்குள் இவர்களும் புதைந்து விடாமல் இருக்க வெறும் குச்சியை வைத்து குத்தி குத்திப் பார்த்து செல்லும் அவல நிலை; முண்டக்கை, அட்டமலை –சூரல்மலைப் பகுதிகள் தீவு போல துண்டிக்கப்பட்ட நிலையில் ஆற்று வெள்ளம் கடந்து செல்வதற்கு கயிறு கட்டி மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டிய அவல நிலை போன்றவை இருந்தது. 2 நாட்களுக்குப் பிறகே தற்காலிக பாலம் அமைத்து ஆற்றை கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த தாமதத்தால் உயிர் பிழைத்திருக்க வேண்டிய பலரும் கூட மத்திய-மாநில அரசுகளின் மெத்தனப்போக்கால் கொல்லப்பட்டனர். மண்ணுக்குள் புதைந்த மக்களை துரிதமாக மீட்பதற்கு உயரிய தொழில்நுட்பங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. நிலத்திற்கு அடியிலோ / கடலுக்கு அடியிலோ பல கி.மீ. ஆழத்தில் என்ன கனிம வளங்கள் படிந்துள்ளது என்று இன்றைய தொழில்நுட்பங்களால் கண்டுபிடிக்க முடிகிறது, ஆனால் 10 அடி – 20 அடி ஆழத்திற்குள் மக்கள் எங்கு புதைந்துள்ளனர் என்பதை கண்டுபிடிக்க முடியாதா என்ன? ஜேசிபி இயந்திரத்தால் குப்பைகளை சலிப்பது போல் - கை தனியாக கால் தனியாக உடல்களை துண்டு துண்டாக்கி - சலித்து எடுத்துள்ளது இந்த பிணந்திண்ணி அரசுகள். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹைபர்சோனிக் ராக்கெட் லாஞ்சர்களை உருவாக்கும் இன்றைய தொழில்நுட்பத்தால் மழையளவை கூட துல்லியமாக கணிக்க முடியாதது ஏன்? இந்த அறிவியல் தொழில்நுட்பங்கள் எல்லாம் பன்னாட்டு-உள்நாட்டு கார்ப்பரேட் நலன்களுக்குத்தான் என்பதை நாம் உணர வேண்டும்; மக்களுக்கு வெறும் கயிறும் குச்சிகளும்தான். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளை கூட உயிருடன் மீட்க வக்கற்ற இந்த ஆட்சியாளர்கள் இயற்கை பேரிடர்களில் இருந்தா மக்களை காக்கப் போகிறார்கள்? நிச்சயம் மாட்டார்கள்.

பாஜக, சிபிஎம் அரசுகளின் கார்ப்பரேட் வனக் கொள்கை – காடழிப்பு, ரியல் எஸ்டேட் வர்த்தகம் – மலை ஆக்கிரமிப்புகள், நவீன ஆதி திரட்டல் கொள்ளை

“வளர்ச்சி”, “மக்கள் நலன்” எனும் பெயர்களில் ஏகாதிபத்திய உலகமயமாக்கல் கொள்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு - நவீன ஆதி திரட்டல் வடிவில் - மூலப்பொருட்களும் இயற்கை வளங்களும் பன்னாட்டுக் கம்பெனிகள் சூறையாடுவதற்கு அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மத்திய அரசுகள் அகற்றி வருகின்றன. குறிப்பாக இன்றைய பாஜக அரசு தெற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் இளையப் பங்காளியாக செயல்பட்டு பாசிச காட்டாட்சியை நடத்தி வருகிறது.

இன்றைய நவீன தொழில்நுட்பத்திற்கு - புதியகாலனிய உற்பத்திக்கு தேவையான அதிமுக்கிய தனிமங்கள், சுரங்கங்கள் - சிறப்பு பொருளாதார மண்டலங்கள் - மாபெரும் கட்டமைப்புகள் அமைத்து சுரண்டப்படுகின்றன. அதற்காக சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டம், வனப் பாதுகாப்புச் சட்டம், பல்லுயிர் பெருக்கச் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. வளங்களை சுரண்டுவதற்கு இருந்த சொற்ப தடைகளும் அகற்றப்பட்டுவிட்டன; அவை வனங்களின்-வளங்களின் மீதான பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்களின் ஏகபோகத்திற்கு வழி ஏற்படுத்தியுள்ளன. இந்த ஏகபோக உருவாக்கத்தால் வனங்களின் - வளங்களின் மீதான பழங்குடிகளின் உரிமைகள் அன்றாடம் பறிக்கப்பட்டு வருகின்றன; மண் வளங்களும் இயற்கை வளங்களும் மென்மேலும் பாழாக்கபடுகின்றன. இவை மண் அரிப்பு, நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை தாங்கி நிற்கும் தன்மையை மேலும் இழந்துள்ளன. 

குறிப்பாக, வயநாடு பகுதியில் உள்ள தங்கப் படிமங்கள் உள்ளிட்ட கனிம வளங்களை (தங்கப்படிமங்கள் தற்போது முதிர்ச்சியடைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன) கொள்ளையடிப்பதற்கு வயநாடு மேப்பாடியிலிருந்து கோழிக்கோடு அனக்கம்போயில் வரையில் விரைவு சாலைத் திட்டம் நடைமுறப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வயநாடுப் பகுதியில் 8.7 கி.மீ நீளத்திற்கு பிரம்மாண்ட சுரங்கங்கள் உருவாக்குவதற்கான தொடக்கக் கட்ட பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஒருபக்கம் கனிம வளக் கொள்ளை மறுபக்கம் சுற்றலாத் துறை மேம்பாடு எனும் பெயர்களில் வனங்களையும் வளங்களையும் கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்கின்றது இந்த பாசிச மோடி அரசு. 

இந்த பெருந்துயர சம்பவத்தைக் கூட தேசிய பேரிடராக அறிவிக்க மறுக்கிறது  பாஜக அரசு. அவ்வாறு அறிவித்தால் புனரமைப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பதால் மறுக்கிறது. மேலும், தேசிய பேரிடர் தொடர்பான சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவர முன்னேற்பாடுகளை செய்து வருகிறது இந்த கேடுகெட்ட அரசு.   

பாஜகவிற்கு நாங்கள் எவ்விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என கார்ப்பரேட் சேவையை வரிந்துக் கட்டிக் கொண்டு செய்கிறது கேரள சிபிஎம் அரசு. பாஜக அரசிற்கு அடிபணிந்து அதன் கார்ப்பரேட் நல வளர்ச்சித் திட்டங்களை அம்மாநிலத்தில் தீவிரமாக நடைமுறைப் படுத்தி வருகின்றது. விழிஞ்சம் துறைமுகம் உள்ளிட்ட கார்ப்பரேட் நலத்திட்டங்கள் மூலம் வன வளங்களையும் கடல் வளங்களையும் அதானி அம்பானிகளுக்கு தாரை வார்க்கின்றது. பாஜக அரசின் மாபெரும் கட்டமைப்புத் திட்டங்களுக்கும் வனக் கொள்ளைத் திட்டங்களுக்கும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் தன் பங்கிற்கு கேரள மாநிலத்தையே சூறையாட அனுமதிக்கிறது. மேலே கூறப்பட்ட வயநாடு –கோழிக்கோடு விரைவு சாலை திட்டத்தையும் கூரிய முனைப்போடு செயல்படுத்தி வருகிறது. மேலும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது எனும் பெயரில் அதற்காக அதிக நிதிகளையே ஒதுக்கி வருகின்றது. கேரளாவின் சூழலியலை சிதைத்து சுற்றுலா பொருளாதாரத்திற்கு காவு கொடுத்து வருகிறது. 

இதுவரையில்லாதளவிற்கு, சென்றாண்டில் 122 பகாசுர நிறுவனங்களை உயர் அடுக்கு கட்டுமான ரியல் எஸ்டேட் வர்த்தகம் துவங்க அனுமதித்துள்ளது. மொத்தமாக 7,362 உயர்-அடுக்கு கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மாளிகை போன்ற தனி வில்லாக்கள் கட்டுவதற்கு 56 புதிய நிறுவனங்களை அனுமதித்துள்ளது. அவை 1,181 வில்லாக்களை கட்டியுள்ளன. காலி மனைகளை விற்பதற்காக 21 புதிய நிறுவனங்களை அனுமதித்துள்ளது. அவை 1,623 பிளாட்டுகளை விற்றுள்ளன. வணிக வளாக கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள 12 புதிய நிறுவனங்களை அனுமதித்துள்ளது. கேரள ரியல் எஸ்டேட் ஒழுங்காற்று ஆணையம் (K-RERA) வழங்கும் தகவல்படி, சென்றாண்டில் மட்டும் 15,14,746.37 சதுர மீட்டர் அளவிற்கான நிலத்தில் கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதில், வணிக பயன்பாட்டிற்காக மட்டும் 17,103.61 சதுர மீட்டர் அளவிற்கான நிலத்தில் கட்டிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கேராளா முழுவதையும் ரியல் எஸ்டேட் சந்தைக்காக அகல திறந்துவிட்டுள்ளது சிபிஎம் அரசு.

இதன் தொடர்ச்சியாக, ஒருபக்கம் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் உள்ளூர் அதிகார வர்க்கத்தினர் வயநாடு சுற்றியுள்ள பகுதிகளில் குவாரிகள், சுரங்கங்கள் மூலமாக கனிம வளங்களை கொள்ளையிடுகின்றனர். வயநாடு பகுதியில் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்ட குவாரிகள் செயல்பட அனுமதித்துள்ளது பினராயி விஜயன் அரசு. மறுபக்கம் ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் பல்வேறு மோசடி அறிவிப்புகள் மூலம் மலைகளை ரிசார்ட்களாகவும், குடியிருப்புகளாகவும் மாற்றி ஆக்கிரமித்து வருகின்றனர். 

சரிவானப் பகுதிகளில் கட்டப்படும் கட்டுமானங்கள் அதற்கேற்ப தாங்கும் திறன்களையும் திட்ட வடிவமைப்பையும் கொண்டிருக்க வேண்டும். உதாரணத்திற்கு, எந்தவொரு கட்டிடத்திற்கும் மேட்டுப்பகுதியிலும் பள்ளப் பகுதியிலும் தடிமனான கான்கிரீட் தாங்கு சுவர்கள் (Retaining wall) எழுப்பப்பட்டிருக்க வேண்டும்; அவை ஆழமான அடிக்கட்டுமானத்தின் (foundation) மீது எழுப்பப்பட்டிருக்க வேண்டும்; மேலும், மழைக்காலங்களில் சுவர்களின் மீதான நீர் அழுத்தத்தையும் குறைக்கும் வகையில் நீரை வெளியேற்றும் துளைகளும் (Weeping holes) தேவையான அளவில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதுபோன்ற அறிவியல் பூர்வமான எவ்வித அடிப்படை கட்டமைப்புகளும் இல்லாமல் லாப நோக்கில் கட்டப்படும் கட்டுமானங்கள் சிறிய பாதிப்பை கூட தாங்காமல் சீட்டுக் கட்டை போல சரிந்து விடுகின்றன. 

  

புஞ்சேரி மட்டம் முதல் மேப்பாடி வரை அமைந்துள்ள கட்டுமானங்கள் எதுவொன்றும் இத்தைகைய அடிப்படை அறிவியல் கட்டுமான விதிகளைக் கூட பின்பற்றி எழுப்பப்பட்டவையாக இல்லை. இன்னும் சொல்லப் போனால், இத்தகைய செங்குத்தான மலைச் சரிவில் முதலில் – அதுவும் காட்டாற்று நீர்வழித் தடத்தில் கட்டுமானங்களையே அனுமதிக்கக் கூடாது. இது எப்போதும் அபாயமானவையே. ஆனால் ரிவர் வியூ (river view), ஃபால்ஸ் வியூ (falls view), எஸ்டேட் வியூ (estate view), கார்டன் வியூ (garden view), ஜங்கிள் வியூ (jungle view), மௌன்டைன் வியூ (mountain view) அட்வெஞ்சர் (adventure) என்ற பல்வேறு கவர்ச்சிகரமான பெயர்களால் நிரம்பி வழியும் ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள். ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பலினால் உருவாக்கப்பட்ட குடியிருப்புகள் அப்பகுதிகளில் நிரம்பி வழிகின்றன. மேலும், புதிய காலனிய உற்பத்தி முறையால் இந்தியாவின் பல மூலைகளிலிருந்தும் மக்களை புலம்பெயர்த்து நாடோடிகளாகவும்-கொத்தடிமைகளாகவும்-பரதேசிகளாவும் மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் பொதுவாக இது போன்ற அபாயம் நிறைந்த நிலப்பரப்பிலேயே எவ்வித பாதுகாப்பும் அற்ற தகர கொட்டாய்களில் கொட்டடி போல அடைக்கப்படுகின்றனர். இவற்றை எவ்வித முறைப்படுத்துதலும் இல்லாமல் அனுமதித்து மக்களுக்கு சமாதி கட்டி வருகிறது கேரள சிபிஎம் அரசு.     

மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழுக்களின் பரிந்துரை

2010ம் ஆண்டு காங்கிரசு அரசு மேற்குத் தொடர்ச்சி மலைபகுதிகளின் சூழலியல் பற்றி ஆய்வு மேற்கொள்ள, மாதவ் காட்கில் தலைமையில் மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழுவை (Western Ghats Ecology Expert Panel - WGEEP) அமைத்தது.  அக்குழு 2011 ஆகஸ்டில் சமர்பித்த அந்த அறிக்கையின் சில முக்கியமான பரிந்துரைகளை பார்ப்போம்:  

மேற்குத் தொடர்ச்சி மலை முழுவதையும் சூழல் கூருணர்வு மிக்க மண்டலம் 1, 2, 3 என மூன்று மண்டலங்களாகப் பிரித்தது. ஒவ்வொரு பகுதியிலும் சூழலை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை பட்டியலிட்டது. 

1,29,000 சதுர கி.மீ கொண்ட பரப்பை சூழல் கூருணர்வு மிக்க மண்டலமாக அறிவித்தது. (அதில் வயநாட்டில் தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி பகுதிகளை உள்ளடக்கிய வைத்திரி வட்டம் முழுவதையும் கூட சூழல் கூருணர்வு மிக்க மண்டலம் –1 (Ecologically Sensitive Zone – ESZ 1) என வகைப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது).

சூழல் கூருணர்வு மிக்க மண்டலம் 1, 2 ல் (மேற்குத்தொடர்ச்சி மலையின் 75% சதவிகித பகுதிகள் இதற்குள் அடங்கும்) கட்டுமானப் பணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளும் வரைமுறைகளும் விதிக்க வேண்டும். குவாரிகள், சிவப்பு வகை தொழிற்சாலைகள் அனுமதிக்கக் கூடாது. 

மண் அரிப்பிற்கு அடிப்படையாக இருக்கும் ஒற்றைப் பயிர் சாகுபடி முறையைக் கைவிட வேண்டும்.

காலாவதியான அணைகள், அனல்மின் நிலையங்கள் செயல்பாட்டை நிறுத்த வேண்டும்.

வன நிலங்களை வேறு பயன்பாடுகளுக்கு மாற்றுதல், நீர்நிலைகளின் இயற்கையான வழிப் பாதைகளை மறித்து திசை மாற்றுதல் போன்றவற்றைச் செய்யக்கூடாது.

அதிரப்பள்ளி நீர்மின் திட்டம் அமல்படுத்தப்படுவதைக் கைவிட வேண்டும்.

மேற்குத் தொடர்ச்சி மலைக்கு, பிரத்தியேக சூழலியல் பாதுகாப்பு ஆணையம் பழங்குடிகளின் ஆலோசனைகள் மற்றும் பங்கேற்போடு அமைக்கப்பட வேண்டும்.

பழங்குடி மக்களை வனங்களிலிருந்து வெளியேற்றுவதைத் தவிர்க்க வேண்டும்; வனப் பாதுகாப்பில் அவர்களுடைய பங்கெடுப்பை உறுதி செய்ய வேண்டும்; அதற்கென புதிய திட்டங்களும், நிதி ஒதுக்கீடும், ஊக்கத்தொகைகளும் உறுதி செய்ய வேண்டும்.

போன்ற பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்பித்தது. இந்த அறிக்கையை அப்போதைய மத்திய காங்கிரசு அரசும் அதன் கூட்டணியில் இருந்த/இல்லாத மாநில அரசுகளும் (தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா) ஏற்க மறுத்தன. இந்த அறிக்கை சுற்றுச் சூழலியலுக்கு முக்கியத்துவம் தரும் அளவுக்கு உண்மையான கள நிலவரத்திற்கு முக்கியத்துவம் தரவில்லை என்று கூறி நிராகரித்தன. (இவர்கள் கூறும் கள நிலவரம் என்பது வளர்ச்சி எனும் பெயரில் குவாரி கிரிமினல்களும் – கார்ப்பரேட் கூட்டமும் கொள்ளையடிக்க அனுமதிக்க வேண்டும் என்பதே ஆகும்).  

இதன் காரணமாக, மாதவ் காட்கில் குழு பரிந்துரையை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு அதற்குப் பதிலாக கஸ்தூரி ரங்கன் தலைமையிலானக் குழுவை அமைத்தது காங்கிரசு அரசு. இந்தக் குழு 2013 ஆண்டில் கீழ்க்கண்ட பரிந்துரைகளை வழங்கியது:

மேற்குத்தொடர்ச்சி மலை முழுவதும் சூழல் கூருணர்வு மிக்க மண்டலமாக அறிவிக்க வேண்டாம், வெறும் 37% சதவிகிதம் பகுதியை மட்டும் அறிவிக்க பரிந்துரைத்தது. (அதில் 20,000 சதுர கி.மீ.க்கும் அதிகமான பகுதி கர்நாடாகா எல்லைக்குள் அடங்கும்) அந்த பகுதிகளுக்கு மட்டும் காட்கில் குழுவின் கட்டுமானம், குவாரிகள், தொழிற்சாலைகள் சம்பந்தமான பரிந்துரைகளை ஏற்கலாம் என்றது.

வன நிலங்களை சில கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளோடு வேறு பயன்பாட்டிற்கு அனுமதிக்கலாம் என்றது. அவற்றை வளர்ச்சித் திட்டங்களுக்கும் அனுமதிக்கலாம் என்றது, ஆனால் அவற்றை அனுமதிக்கும் முன்பே, வன உயிர்களிடையே ஏற்படுத்தப்போகும் விளைவுகளை ஆய்வு செய்ய வேண்டும்.

புதிய அனல் மின்நிலையம் அமைக்கும் திட்டங்களை அனுமதிக்கக் கூடாது. நீர்மின் திட்டங்களை சில கட்டுப்பாடுகளோடு அனுமதிக்கலாம் என்றது. 20,000 ச.மீ வரையிலான இதர கட்டுமானங்களையும் அனுமதிக்கலாம் என்றது.

இந்த அறிக்கையை மத்திய காங்கிரசு அரசு ஏற்றுக் கொண்டது. ஆனால், கர்நாடாக பாஜக அரசும், கேரள காங்கிரசு அரசும் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படும் என்று அதாவது, குவாரி – ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் நலன்கள் பாதிக்கப்படும் எனக் கருதி ஏற்றுக் கொள்ளவில்லை. அதாவது, கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்த 37% சதவிகித சூழலியல் கூருணர்வு மண்டலங்களில்தான் அதிகளவில் குவாரிகளும் தொழிற்சாலைகளும் இயங்கிவருவதானால் அவற்றின் ஒப்பந்த காலம் முடியும் வரை மூட முடியாது என்று வாதிட்டன. கேரளாவில் எதிர் கட்சியாக இருந்த சிபிஎம் கட்சியும் விவசாயிகள் நலன் பாதிக்கப்படும் என்ற பெயரில் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் உண்மையில் அக்கட்சியும் ஆட்சிக்கு வந்தபின் குவாரி-ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பல்களின் கொள்ளைக்கே துணைபோனது.  

இந்த 2 குழுக்களின் பரிந்துரைகளில் ஏதாவது ஒன்றை அமல்படுத்தி இருந்தால் கூட, குறிப்பாக கஸ்தூரி ரங்கன் அறிக்கையை அமல்படுத்தி இருந்தால் கூட இது போன்ற இயற்கை பேரிடர்களை தடுத்திருக்க முடியும் என்று சில ஊடகவியலாளர்கள் வாதிடுகிறார்கள். அது உண்மையா என்றால் நிச்சயம் இல்லை. 

ஏனெனில், கஸ்தூரி ரங்கன் குழுவின் அறிக்கை குவாரிகள், சில தொழிற்சாலைகளின் நடவடிக்கையாக குறைக்க கூறினாலும் அது காட்கில் குழு பரிந்துரைந்த பரப்புகளில் 60% சதவிகிதத்திற்கும் மேலான பரப்புகளுக்கு இப்பரிந்துரைகளை பொருத்தவில்லை. அதோடு வனப் பகுதிகளை வேறு பயன்பாட்டிற்கு மாற்றலாம் என்கிறது. இது முழுக்க முழுக்க கார்ப்பரேட்களுக்கு சாதகமான அம்சங்களை கொண்டே உள்ளது. அது வனங்களின் மீதான பழங்குடிகளின் உரிமைகளை பறிக்கும் விதமாகவே உள்ளது. இந்த பரிந்துரைகள் வனப் பாதுகாப்பு என்ற பெயரில் மோடி அரசு அமல்படுத்தும் சட்டங்களுக்கு துணை செய்வதாகவே உள்ளது.   

ஆனால், மாதவ் காட்கில் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளில் பழங்குடியினரை வெளியேற்றக் கூடாது; அவர்களையும் கொண்ட வனப்பாதுகாப்பு குழுக்களை அமைக்க வேண்டும் போன்ற சில சரியான அம்சங்கள் உள்ளது. இருந்தாலும் அக்கமிட்டியின் பரிந்துரைகள் வனங்களின் மீதான பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்களின் ஏகபோகங்களை தடுப்பதற்கான எவ்வித பரிந்துரைகளையும் கணக்கில் கொள்ளவில்லை; சூழலியல் சீர்கேட்டை உண்டாக்கும் மத்திய மாநில அரசுகளின் கொள்கைகள் மீது கேள்வி எழுப்பவில்லை; ஓரிடத்தில் குவாரிகள் அமைக்க கூடாது என்கிறது மற்றொரு இடத்தில் அப்படி அமைத்தாலும் அது குடியிருப்புகளில் இருந்து 100மீ தூரம் தள்ளி இருக்க வேண்டும் என்கிறது. அது கனிம வளக் கொள்ளைகளை முழுமையாக எதிர்க்கவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. ஒற்றை சாகுபடி முறை கைவிட வேண்டும் என்பது சரியானதே, ஆனால் கார்ப்பரேட்கள் கையில் குவிந்திருக்கும் நிலங்களை பழங்குடிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் பங்கிட்டு அளிக்க வேண்டிய கோரிக்கைகளுக்கு அது முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நாட்டில் உள்ள அனைத்து அனல் மின் நிலையத் திட்டங்களும் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு தீங்கு விளைவிப்பவையே. அவையும் பசுமைக் குடில் வாயுக்களை வெளியேற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதோடு நிலக்கரி சுரங்கள் அமைவதற்கும் காரணமாக உள்ளன. ஆனால் மாதவ் காட்கில் குழு காலாவதியான அனல் மின் நிலையங்களை மட்டுமே செயல்பட அனுமதிக்கக் கூடாது என்கிறது. எனவே இவ்விரு பரிந்துரைகளில் ஒப்பீட்டளவில் மாதவ் காட்கில் குழு சில சரியான அம்சங்களை கொண்டிருந்தாலும் இவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மட்டுமே மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாப்பதோ அல்லது பருவநிலை மாற்றங்களை கட்டுப்படுத்துவதோ சாத்தியமில்லை. ஆனால் இந்த கேடுகெட்ட ஆளும் வர்க்க கும்பல் இதைக் கூட அமல்படுத்த மறுத்து மக்களை பெருந்துயரில் ஆழ்த்தி வருகின்றன.

இயற்கை பூகோள அமைப்பு

கேரளாவின் சுமார் 60% சதவிகித நிலப்பரப்பு நிலச்சரிவின் அபாயத்தில் சிக்கியுள்ளது; அதே போல் மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிபாதி கேரளாவிலேயே அமைந்துள்ளது. அவை பெரும்பாலும் 200 டிகிரிக்கும் அதிகமான சாய்வான நிலப்பரப்பை கொண்டுள்ளன. இதில் 250 டிகிரிக்கும் அதிகமான சாய்வுடைய நிலப்பரப்புகள் எப்போதும் நிலச்சரிவுக்கான அபாயத்தை கொண்டுள்ளன. ஒவ்வொரு மண்ணின் தன்மைக்கும் ஏற்ப அதன் நிலைப்புத் தன்மைக்கு குறிப்பிட்ட கோணத்தில் (Angle of repose) அமைந்திருக்கும் வரை பாதிப்பு ஏற்படாது. இறுக்கமான மண்ணுக்கும் கூட அதிக பட்ச வரம்பு 300 டிகிரி மட்டுமே ஆகும். 

ஆனால், கேரளாவின் இப்படியான நிலப்பரப்பில்தான் அதன் இயற்கையான மண்ணின் தன்மை கூட இன்று பெருமளவில் சிதைக்கப்பட்டு வருகிறது. இப்போது நிலச்சரிவுக்கு ஆட்பட்டிருக்கும் பகுதி மிகவும் செங்குத்தானது என்பதை நாம் கட்டுரையின் தொடக்கத்திலேயே பார்த்தோம்.

புவி வெப்பமயமாதல் – காடழிப்புக்கு காரணமான இந்திய அரசுகளின் 40 ஆண்டுகால புதிய காலனிய –புதிய பொருளாதாரக் கொள்கைகள்

ஆழமாக வேரூன்றி வளர்ந்த மரங்களும் காடுகளும் மண்ணின் வளத்தை பாதுகாப்பதோடு மண் அரிப்பையும், நிலச்சரிவையும் தடுத்து நிறுத்துகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையின் பெரும்பகுதி காடுகள் அழிக்கப்பட்டு தேயிலை, காபி, ரப்பர் மரத் தோட்டங்களாகவும், கனிம வளக் கொள்ளைக்கான சுரங்கங்களாகவும் மாற்றப்பட்டுவிட்டன. இந்த வயநாடு பகுதி முழுவதும் கூட காடுகள் அழிக்கப்பட்டு சுற்றுச்சூழல் சிதைக்கப்பட்டுள்ளது.  

அதேபோல், பூமியின் இருப்பையே அச்சுறுத்தக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது உலகம் வெப்பமடைவதும், பருவநிலை மாற்றங்களும். பசுமை குடில் வாயுக்கள் (கார்பன்-டை-ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, குளோரோ ஃபுளோரோ கார்பன்கள் போன்றவை) வெளியேற்றப்படுவதே புவி வெப்பமடைவதற்கு அடிப்படையாக உள்ளது. இதுவே அரபிக் கடலின் வெப்ப அலை உயர்வுக்கும், திடீர் மேக வெடிப்புக்கும் – வரலாறு காணாத பெரு மழைக்கும் காரணமாகும். வயநாடு உள்ளிட்ட கேரளாவின் முக்கிய மாவட்டங்களில் மிதமான மழை நாட்கள் குறைந்தும் அதீத பெருமழை நாட்கள் அதிகரித்திருப்பதற்கும் காரணமாக அமைந்துள்ளது. புவி வெப்பமடைதலுக்கும் – பருவ நிலை மாற்றங்களுக்கும் பிரதான காரணமே ஏகாதிபத்திய கொள்ளைக் கும்பலின் சுரண்டல் உற்பத்தி முறையே ஆகும். கியாட்டோ மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை – அதாவது புவி வெப்பத்தை 2 டிகிரி செல்சியஸ் குறைப்பதற்கான செலவுகளை செல்வந்த நாடுகளே பொறுப்பேற்க வேண்டும் என்ற ஒப்பந்தங்களை – ஏகாதிபத்திய வல்லரசுகள் ஏற்க மறுக்கின்றன. அதை மூன்றாம் உலக நாடுகள் மீது திணிக்கின்றன. அதன்பிறகு நடைபெற்ற பாரீஸ் மாநாடு, குவாட், ஜி7, ஜி20 மாநாடுகளின் மூலம் புவி வெப்பமயமாவதற்கும் பருவநிலை மாற்றத்துக்கும் எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என தேனொழுக பேசி, அதற்கான சுமைகள் அனைத்தையும் காலனிய வளரும்-ஏழை நாடுகள் தலையில் கட்டிவிட்டது. மேலும் மேலும் நெருக்கடியின் சுமைகளை காலனிய நாடுகளின் உழைக்கும் மீது சுமத்தி வருகின்றன.

இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் ஏகாதிபத்தியங்களின் இத்தகைய காலனிய சுரண்டலுக்கும் ஆதிக்கத்திற்கும் துணைபோகின்றன. காங்கிரசு – பாஜக என இவ்விரு புதிய காலனிய தாசர்களும் தங்களது ஆட்சிகாலத்தில் மக்களுக்கான அடிப்படை கட்டமைப்புகள் - பொது மராமத்துப் பணிகளுக்கான நிதிகளை அறவே ஒழித்துக் கட்டி விட்டனர். கடந்த 40 ஆண்டுகாலமாக இவர்கள் அமெரிக்காவின் அநியாய அந்நிய கடன்களுக்கும், இராணுவ சேவைக்குமே நிதியினை அதிகமாக ஒதுக்கி வருகின்றனர். பட்ஜெட்டில் 3ல் 1 பங்கை கடன்களுக்கான வட்டிகளுக்கும் 6ல் 1 பங்கை இராணுவ செலவினத்திற்குமே ஒதுக்கி வருகின்றது பாஜக அரசு. அதேபோல், மாபெரும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதியை வாரி வழங்கினாலும் மக்களின் அத்தியாவசிய அடிப்படை கட்டமைப்புகளுக்கும் ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கும் கண்துடைப்புக்காக மிக சொற்பமான நிதியை ஒதுக்குகின்றன. அது இந்த பட்ஜெட்டிலும் நீடிக்கிறது. இந்திய இராணுவமும் – மாபெரும் கட்டமைப்புத் திட்டங்களும், இங்குள்ள வளங்களை சுரண்டவும் தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிராக இந்தியாவை அமெரிக்காவின் அடியாள்படையாக நிறுத்தவுமே சேவை செய்கின்றன. மாறாக மக்கள் நலன் – தேச இறையாண்மை என்பது துளிக்கூட இல்லை; அவற்றை அமெரிக்காவின் காலடியில் சேர்த்து விட்டன. இதற்காக உழைக்கும் மக்களின் உயிர்கள் காவு வாங்கப்படுகின்றன. அமெரிக்க எஜமானனுக்கும் – பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்களுக்கும் இந்திய மக்களின் குருதியால் சிவப்புக் கம்பளம் விரிக்கிறது பாசிச மோடி அரசு. 

அரசியல்-பொருளாதாரம் மையப்படுத்தப்பட்டு வருவதால் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள முடியாமல் மாநில அரசுகளும் திணறி வருகின்றன. மாநில அரசுகளுக்கு அத்தகைய நிதிகள் எதுவும் ஒதுக்கப்படுவதில்லை. புதிய புதிய வரி விதிப்புகள் மற்றும் சட்டங்கள் மூலம் மாநில அரசுகளின் வருவாயையும் பிடுங்கி மத்தியில் குவித்து விட்டு மாநில சிபிஎம் அரசை குறைகூறி கொண்டுள்ளது பாஜக அரசு, இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போது அவற்றின் உடனடியான நிலவரம் என்னவென்பதை கண்காணிக்க கூட முடியாமல் மாநில அரசுகள் திணறுகின்றன. அதற்கான எவ்வித கட்டமைப்புகளும் அதிகாரமும் மாநில அரசுகளிடம் இல்லை. மத்திய அரசிடம் உதவிக்கு கையேந்தி நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இவர்களின் அலட்சியப் போக்கால் மக்களை உயிரோடு கொன்று புதைத்துள்ளனர் இந்த கயவர்கள்.

பழைய காலனியாதிக்க ஆதி திரட்டலின் நீட்சியே புதிய காலனிய கொள்கை

இன்றைய புதிய காலனிய -இந்திய அரசுகள் அமல்படுத்துகின்ற கொள்கைகளானது பழைய காலனியாதிக்க வாதிகளின் நீட்சியே ஆகும். ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் ஆசிய- ஆப்பிரிக்க நாடுகளில் இருந்த சமூகப் பொருளாதார கட்டமைப்பை மட்டுமல்ல பொது மராமத்து கட்டமைப்புகளையும் சிதைத்தனர். அவற்றை தங்கள் நலன்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தனர். இந்திய விவசாயத்தையும் சுதேசிய தொழில்களையும் அழித்து நாசமாக்கினர். பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களால் மேற்குத் தொடர்ச்சியின் பெரும்பகுதி தேயிலை மற்றும் காபி தோட்டங்களாக மாற்றப்பட்டன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா வரை நீண்டுள்ள இந்த மேற்குத் தொடர்ச்சியின் மலையின் இயற்கையான பல்லுயிர் பெருக்க மையங்களையும் வனங்களையும் சிதைத்து கனிம வளங்களையும் இயற்கை வளங்களையும் கொள்ளையடித்துச் சென்றனர். 19ம் நூற்றாண்டின் இறுதியில் கேரளாவில் வயநாடு பகுதியிலும் வனங்கள் அழிக்கப்பட்டு தேயிலைத் தோட்டங்களாக மாற்றப்பட்டன. மலைப் பகுதியைச் சுற்றியுள்ள மக்களை கொத்தடிமைகளாக அழைத்து வந்து அவர்களின் உழைப்பை சுரண்டினர். காடுகளை அழித்தனர். மலைகளை பிளந்தனர். தேயிலை சாகுபடிக்கு ஏற்றவாறு மண்ணையும் மக்களையும் உருக்குலைத்து சிதைத்தனர். சாலியாற்றில் தங்க படிமத் துகள்கள் மிதந்து வருவதைக் கண்டவர்கள் வயநாடு சூரல்மலைப் பகுதிகளில் தங்க வேட்டையைத் தொடங்கினர். வனங்களை அழித்து சுரங்கங்களை குடைந்தனர். தங்கப் படிமங்கள் முதிர்ச்சியடையாத நிலையில் இருந்ததால், அவர்கள் எதிர்ப்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கவில்லை. தோண்டிய சுரங்கங்ளை கிடப்பில் போட்டனர். இவையே அப்பகுதியின் மண்வளத்தை பாதித்து நிலச்சரிவுகள் ஏற்பட முதன்மையான காரணமாக அமைந்தது. 1920 ம் ஆண்டுகளுக்கு முன்பாக கேரளாவிலும் வயநாட்டிலும் எவ்வித நிலச்சரிவும் ஏற்பட்டதற்கான பதிவுகள் இல்லை. மேலும், இவர்கள் நடத்திய சர்வநாசக் குவியலுக்கு இடையில் எவ்வித புனரமைப்பு பணிகளையும் செய்யவில்லை. மொத்த வருவாயில் 3ல் 2 பங்கை இராணுவத்திற்கும் - நாட்டைக் கொள்ளையடிக்கும் போர்களுக்குமே செலவிட்டவர்கள், பொது பராமத்து கட்டமைப்புகளுக்கு 2% சதவிகிதத்திற்கும் குறைவான நிதியையே ஒதுக்கினர். அவை கூட காலனிய சுரண்டலுக்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்கவே பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு, எவ்வித பாதுகாப்பு கட்டமைப்புகளும் உருவாக்காமல், மக்கள் எப்போதும் மரண பயத்திலே வாழும் அபாய நிலைக்கு தள்ளியது பிரிட்டிஷ் காலனியாதிக்கக் கொள்ளைக் கூட்டம்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு காலனிய ஒழிப்பு எனும் பெயரில் புதிய காலனிய முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய காலனியாதிக்கத்தின் கீழ் ஏகாதிபத்திய காலனியாதிக்க சுரண்டலும், மறுபங்கீட்டு போர்களும் உலகம் முழுவதும் கடுமையான பாதிப்புகளை உருவாக்கிவருகிறது. இந்தியாவில், 1947 அதிகார மாற்றத்திற்கு பிறகும் கூட நிலச்சீர்திருத்தம் செய்யப்படாமல் கொத்தடிமை சுரண்டல் முறை தொடர்ந்தது. 90களில் உலகமயம், தனியார்மயம், தாராளமய - புதிய தாராளக் கொள்கைகளை அமலுக்கு கொண்டு வந்து இயற்கை வளங்களை சூறையாடி உலகத்தை அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ளது. 2008க்குப் பிறகு ஏற்பட்ட உலக பொது நெருக்கடியால், அமெரிக்க-நேட்டோ முகாமும் சீன-ரஷ்ய முகாமும் புதிய புதிய அரசியல்-பொருளாதார-இராணுவ கூட்டமைப்புகளை உருவாக்கி தீவிரமான பனிப்போரில் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக இந்த ஏகாதிபத்தியவாதிகள் மூலப்பொருட்களையும் இயற்கை வளங்களையும் நவீன ஆதி திரட்டல் முறையில் ஆசிய-ஆப்பிரிக்க காலனிய நாடுகளிலிருந்து சுரண்டுகின்றன. இத்தகைய ஏகாதிபத்திய காலனியாதிக்க சுரண்டல்களும் – போர்களும்தான், ஏற்கெனவே மிச்சம் மீதம் இருக்கும் கட்டமைப்புகளையும் வனங்களையும் கூட பாழாக்கி - சுற்றுச் சூழலை அழித்து புவிவெப்பமடைதலும், பருவநிலை மாற்றமும் தீவிரமடைவதற்கு இட்டுச் சென்றுள்ளது. அதன் விளைவாகவே உலக மக்கள் புயல், வெள்ளம், வறட்சி, பஞ்சம் போன்ற பேரிடர்களல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே இந்த ஏகாதிபத்திய காலனியாதிக்க சுரண்டல்தான் புவி வெப்பமயமாவதற்கும் – பருவநிலை மாற்றத்திற்கும் அடிப்படையாகும். இதன்விளைவாக, இதுபோன்ற பிரளயங்களை இனி அடிக்கடி சந்திக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

இது எங்கோ தூரத்தில் வயநாட்டில் நடக்கும் சம்பவம் எனக் கருதி அசட்டையாக இருக்கக் கூடாது. தமிழ்நாட்டில் உள்ள 6 மாவட்டங்களில் இது போன்ற நிலச்சரிவுக்கான அபாயங்கள் இருந்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, ஏற்காடு, கொடைக்கானல் போன்ற பகுதிகள் அவ்வபோது நிலச்சரிவை சந்தித்து வருகின்றன. அவை ரியல் எஸ்டேட் மாஃபியாக்களின் கட்டுமானங்களால் நிரம்பி வழிகின்றன. நேற்று உத்ரகாண்ட், இன்று கேரளா, நாளை உங்களுக்கு என இந்த ஆபத்து தொடர்கிறது என்பதை உணர வேண்டும். 

 

ஏகாதிபத்திய சார்பு தொண்டு நிறுவனங்கள்

ஏகாதிபத்திய தொண்டு நிறுவனங்களும் இயற்கை ஆர்வலர் வேடம் தரித்து இயற்கைப் பேரிடர்களுக்கு உலகில் உள்ள அனைத்து மக்களையும் பொறுப்பாக்கி வருகின்றன. விவசாயம் செய்வது, செல்போன் பயன்படுத்துவது, மின்சாரம் பயன்படுத்துவது, ஏன் விறகு அடுப்பு எரிப்பதைக் கூட குற்றமாக்கி அனைத்து உழைக்கும் மக்களையும் குற்றவாளியாக்குகின்றன. ஏகாதிபத்திய – பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்களின் சூறையாடலை மூடி மறைக்கின்றன. அல்லது ஒரு ஏகாதிபத்தியத்தையோ அல்லது ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தையோ எதிர்த்து எதிர்த் தரப்பு ஏகாதிபத்தியங்களுக்கும் கார்ப்பரேட்களுக்கும் சேவை செய்கின்றன. இதுபோன்ற தொண்டுநிறுவன அரசியலை புறந்தள்ளி அந்த சக்திகளை தனிமைப் படுத்த வேண்டும். அவர்களின் ஏகாதிபத்திய –கார்ப்பரேட் ஆதரவு அரசியலை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும்.  

(இயற்கை) பேரிடர்களற்ற புதிய உலகத்தைப் படைக்க போராடுவோம்! 

நாட்டின் மீதான புதிய காலனிய ஆதிக்கத்தையும், ஏகாதிபத்திய மறுபங்கீட்டுப் போர்களையும், நவீன ஆதி திரட்டலையும் முறியடிக்காமல் நாட்டின் மனித வளங்களையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க முடியாது. புவி வெப்பமடைவதை தடுத்து நிறுத்தவும் முடியாது. ஏகாதிபத்திய அரசுகளால் உருவாக்கப்படும் பேரிடர்களை தடுத்து நிறுத்தவும் முடியாது. 

பாசிச பாஜக ஆட்சியைத் தூக்கியெறிந்து மக்கள் ஜனநாயக குடியரசு அமைக்கும் போதுதான் இயற்கை வளங்களுக்கு கேடு விளைவிக்காத உள்நாட்டு சுதேசிய உற்பத்தி முறையை கட்டியமைக்க முடியும். புதிய ஜனநாயக அரசமைக்கப் போராடும் அதே வேளையில் கீழ்க்கண்ட உடனடி கோரிக்கைகளுக்காகவும் போராட வேண்டியுள்ளது.

உடனடியாக,

வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க வலியுறுத்த வேண்டும்.

நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் அளிப்பதோடு அவர்களின் மறுவாழ்விற்கான திட்டங்களை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.

நிலச்சரிவில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சுற்றுச் சூழல் சீர்கேடுகள் காரணமாக அப்பகுதியில் தொற்று நோய்கள் உண்டாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவற்றை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையான மருத்துவ நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

அதைத் தொடர்ந்து,

வனங்களையும், வளங்களையும், நீர்நிலைகளையும் பெரும் கார்ப்பரேட்கள், ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள், சுரங்க கொள்ளையர்களிடமிருந்து மீட்டு அரசுடமையாக்க வேண்டும்.

சுற்றுச் சூழல் சட்டம், வன பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட கார்ப்பரேட் நலச் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்த வேண்டும்.

வனங்களின் மீதான பழங்குடிகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.

மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாக்க பழங்குடிகள், விவசாயிகள், விஞ்ஞானிகள், வன-உயிரியில் பாதுகாவலர்கள் சிறுகுறு தொழிற் நடத்துனர்கள் கொண்ட பாதுகாப்புக் குழுவை கட்டியமைக்க வேண்டும். 

பசுமைக் குடி வாயுக்களை வெளியேற்றும் தொழிற்சாலைகள், அனல் மின் திட்டங்களை உடனடியாக இழுத்து மூட வேண்டும். உற்பத்தியில் சூழல் சீர்கேடற்ற புதுப்பிக்கத் தக்க ஆற்றல் உள்ளிட்ட புதிய அறிவியல் தொழிநுட்பங்களை புகுத்த வேண்டும்; பாதுகாப்பான கட்டமைப்புக் கொண்ட அணு மின் நிலையங்களை உருவாக்க வேண்டும். அவற்றில் தனியாரை அனுமதிக்காமல் அரசே ஏற்று நடத்த வேண்டும்.  

மண் வளங்களை பாதுகாக்கும் வகையில் விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும். ஒற்றைப் பயிர் - பணப்பயிர் சாகுபடி முறையை ஒழிக்க வேண்டும். விவசாயத்தில் கார்ப்பரேட் ஏகபோகத்தை நிறுவும் வேளாண் சட்டங்களையும் டங்கல் திட்டங்களையும் கிழித்தெறிய வேண்டும்.

நதி நீர் இணைப்பு, முறையான நீர் வழித் தடங்கள் உருவாக்குதல், நீர் வழிச் சாலைகள் அமைத்தல் போன்றவை புவிவெப்பமடைவதைக் கட்டுப்படுத்தும். 

பருவநிலை மாற்றத்திற்கான சுமைகளை காலனிய நாடுகள் தலையில் கட்டும் குவாட், ஜி 20 உள்ளிட்ட கூட்டமைப்புகளில் இருந்து வெளியேற வேண்டும். ஏகாதிபத்திய அரசுகளே பொறுப்பேற்க போராட வேண்டும்.

கார்ப்பரேட்களுக்கு சேவை செய்யும் வகையிலான உற்பத்தி முறையை ஒழித்து சிறு குறு தொழில்கள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்களையும் மறு சீரமைப்பு பணிகளையும் உருவாக்க வேண்டும். 

புலம் பெயர் தொழிலாளர்கள் ஓரிடத்தில் குவிவதை உண்டாக்கும் புதிய பொருளாதார மண்டலங்களை ஒழித்துக் கட்டி, தொழிற்சாலைகளையும் சிறுவீத உற்பத்தியையும் பரவலாக்க வேண்டும். 

தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதுகாப்பான குடியிருப்புகளை உத்திரவாதம் செய்ய வேண்டும்.

நாட்டின் தொழிற்வளர்ச்சிக்கான கட்டுமானத் திட்டங்களை விஞ்ஞானப் பூர்வமான பாதுகாப்பு அம்சங்களோடு உருவாக்க வேண்டும். அவற்றில் கார்ப்பரேட் ஏகபோகங்களை ஒழித்துக் கட்ட வேண்டும்.

அநியாய அந்நிய கடன்களை முழுமையாக ரத்து செய்யவும், வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணங்களை மீட்கவும் போராட வேண்டும்.

இராணுவ செலவினங்களுக்கு நிதியைக் குறைத்து உள்நாட்டு அடிப்படை பொது மராமத்து பணிகளுக்கு செலவிட போராட வேண்டும்.

புதிய காலனிய இராணுவ-பொருளாதார ஒப்பந்தங்களை கிழித்தெறிய வேண்டும். 

இவற்றை இந்த பாசிச மோடி அரசு நிச்சயம் மேற்கொள்ளாது என்பதையும் சேர்த்து மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும். அவர்களை இந்த பாசிச அரசை வீழ்த்தி புதிய ஜனநாயக அரசமைக்க அணிதிரட்ட வேண்டும். இயற்கைப் பேரிடர்கள் உருவாக்கத்தில் ஏகாதிபத்தியங்களுக்கும் முக்கியப் பங்குள்ளது என்பதை நாம் மேலே பார்த்தோம். எனவே பேரிடரற்ற – ஏகாதிபத்தியங்களற்ற – அநீதிப் போர்களற்ற உலகத்தைப் படைக்க உலகத் தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்ட தேச மக்களும் ஒன்றுபடுவோம். 

- சமரன்