மோடிஆட்சி, நீதி மற்றும் காவல்துறைகளின் கூட்டுப் பாசிசம்

சிறுபான்மையினர் மீதும் ஜனநாயக சக்திகள் மீதும் தொடரும் புனைவு கதைகள்

மோடிஆட்சி,  நீதி மற்றும் காவல்துறைகளின் கூட்டுப் பாசிசம்

நாடு முழுவதும் பல இடங்களில் கடந்த 22ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் பல்வேறு நிர்வாகிகளின் வீட்டில் சோதனை நடத்தினர்.  இதனால் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் நாடு முழுக்க பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சோதனையின் முடிவில் பல நிர்வாகிகளையும் கைது செய்தனா்.

வழக்கம்போல தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக தொடர்ந்து ஒரே பொய்யை கூறி அன்றுமுதல் இன்று வரை சதிச்செயலில் ஈடுபட்டு தன்னுடையை அரசியல் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டு வருகிறது மோடி-அமித்ஷா கும்பல். முதல்வராக இருந்தபோதும், பிரதமராக இருக்கின்ற இப்போதும் இவர்களின் அரசியல்-பொருளாதார கொள்கைகளை எதிர்த்து தொடர்ந்து போராடும் பல்வேறு ஜனநாயக சக்திகளையும், சிறுபான்மையினரையும் ஒடுக்குவதற்கும் ஜனநாயக சக்திகளின் குரல்களை நசுக்குவதற்கும் தன்னை கொல்ல சதி என்று இட்டுகட்டுகின்றன இந்த கும்பல். இதன் மூலம் தங்களுடைய கொள்கைகளுக்கு எதிராக போராடும் சக்திகளையும், அப்பாவி மக்களையும் வேட்டையாடுகின்றனர். இதற்காக அரசு நிர்வாகத்தின் பல்வேறுத் துறைகளை தவறாக பயன்படுத்தி பொய் குற்றச்சாட்டுகளை அடுக்கி ஒடுக்கி வருகின்றனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இந்த அமைப்பு நரேந்திர மோடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாகவும் அதற்காக 120 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளதாகவும் கதை புனைந்துள்ளனர். இதே போன்று பல கதைகளை மோடி-அமித்ஷா கும்பல் தங்கள் வரலாற்றில் பல முறை புனைந்துள்ளது.

இதுபோன்ற கட்டுகதைகளையும், பாசிச தாக்குதலையும் வரலாற்று ரீதியாக எப்போதெல்லாம் செய்யப்பட்டுள்ளது என்பதை தொடர்ந்து பார்க்கலாம். இந்த அனைத்து மோதல்களிலும் மோடி -அமித்ஷா கும்பலும், காவல் துறை, உளவுத்துறை மற்றும் நீதிமன்ற துணையுடன் தொடர்ந்து ஜனநாயக குரலை எப்படி நசுக்கினர் என்பதும் போலி என்கவுண்டர்களை (கொலை) எப்படி செய்தார்கள் என்றும் நாம் பார்க்களாம்.

 

இஷ்ராத் ஜஹான் (2004):

15 ஜூன் 2004 அன்று, அகமதாபாத்தின் புறநகர் பகுதியில், லஷ்கர்-இ-தொய்பா செயல்பாட்டாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் என நான்கு பேரை குஜராத் காவல்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர். சுட்டுகொன்ற நபர்கள் அன்றைய குஜராத்தின் முதலமைச்சராக இருந்த மோடியை குஜராத் கலவரத்தில் அவரின் செயல்பாட்டிற்காக கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியவர்கள் என்று உயர் போலீஸ் அதிகாரிகளும், மாநில குற்றப் பிரிவும் குற்றம் சுமத்தியது. ஆனால் செப்டம்பர் 2009 இல், அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் எஸ்பி தமாங் இந்த சம்பவத்தை "போலி என்கவுண்டர்" என்று அடையாளம் காட்டினார். 243 பக்க அறிக்கையில், போலீஸ் அதிகாரிகள் இறந்தவர்களை எப்படி மும்பையில் இருந்து கடத்திச் சென்று 12 ஜூன் 2004 அன்று அகமதாபாத்திற்குக் கொண்டு வந்து, ஜூன் 14 அன்று இரவு "கொடூரமாக கொலை" செய்தனர் என்றும், பின்னர் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வைத்து போலியாக தீவிரவாதிகளாக ஜோடிக்கப்பட்டனர் என்றும் தமாங் தன் அறிக்கையில் அம்பலப்படுத்தினார்.

 

சொராபுதீன் ஷேக் (2005):

நவம்பர் 22, 2005 அன்று, குஜராத் காவல்துறை மற்றும் ராஜஸ்தான் காவல்துறை அதிகாரிகள் ஹைதராபாத்தில் ஒரு பேருந்தை இடைமறித்து, அதில் தீவிரவாதிகள் என்று கூறப்படும் சொராபுதீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கவுசர் பி ஆகியோரை அகமதாபாத் அருகே உள்ள பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இந்த வழக்கில் சிபிஐயின் குற்றப்பத்திரிகையின்படி, நான்கு நாட்களுக்குப் பிறகு, சோராபுதீன் ஷேக் குஜராத் காவல்துறையால் "போலி என்கவுன்டரில்" சுட்டுக் கொல்லப்பட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, காவல்துறை கௌசர் பியைக் கொன்றது. அதற்கு அடுத்த ஆண்டு டிசம்பரில், சொராபுதீனின் கூட்டாளி என்று துளசிராம் பிரஜாபதி என்ற ஒரு நபரை சுட்டுக் கொன்றனர் என்று குற்றப்பத்திரிகை கூறுகிறது. சோராபுதீனும் மோடியைக் கொல்லத் திட்டமிட்டிருந்தவர் என்றும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும் குஜராத் காவல்துறை பின்னர் கட்டுகதையை புனைந்தது. இந்த வழக்கு இன்று வரை நடந்து வருகிறது. இதுவும் ஒரு போலி என்கவுண்டர் என்பதும் ஊரறிந்த உண்மை.

 

பாட்னா குண்டு வெடிப்பு (2013):

27 அக்டோபர் 2013 அன்று, பிரதமர் வேட்பாளராக இருந்த மோடியின் பிரச்சார கூட்டத்திற்கு முன்னதாக, பாட்னாவின் காந்தி மைதானம் மற்றும் நகரின் ரயில் நிலையம் ஆகியவற்றில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. ஆகஸ்ட் 2014ல் தடைச் செய்யப்பட்ட அமைப்பான இஸ்லாமிய மாணவர் இயக்கம் இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. அக்டோபர் 2017ல், சிறார் நீதி மன்றத்தால் ஒரு சிறுவனுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தேசிய புலனாய்வு துறை நீதிமன்றத்தில் வழக்கு இன்னும் நடந்து வருகிறது.

 

பீமா கோரேகான் (2018):

பீமா கோரேகானில் நடந்த வன்முறை தொடர்பாக, 2018ல் ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட 5 நபர்களில் ஒருவரான ரோனா வில்சனின் வீட்டில் இருந்து புனே காவல்துறையால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தில், “நாங்கள் மற்றொரு ராஜீவ் காந்தி மாதிரியான சம்பவத்தின் வழியே சிந்திக்கிறோம்” என்று எழுதப்பட்டிருந்ததாக ஒரு கதையை உருவாக்கினர். ஒரு சில வாரங்களில், இது பீமா கோரேகானின் கலவர விசாரணையிலிருந்து ஒரு கட்டத்தில் சர்வதேச சதி செயல் என்று கதை சங்கிலியை கட்டி இதில் எவ்வித சம்பந்தமும் இல்லாமல் பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள், ஜனநாயக செயற்பாட்டாளர்கள் என்று பலரும் ‘அர்பன் நக்சல்கள்’ என்று புதிய பதத்தை உருவாக்கி கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக 16 பேரை கைது செய்து, அதில் இருவர் மட்டுமே பிணையில் வெளி வந்துள்ளனர். வரவர ராவ் மற்றும் பரத்வாஜ் என்ற இருவர் மட்டுமே வெளியே வந்துள்ளனர். 4 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை இந்த வழக்கின் விசாரணையை கூட நீதிமன்றம் இன்னும் ஆரம்பிக்காமலும் அதே நேரத்தில் கைது செய்யப்பட்டவர்களை தொடர்ந்து காவலில் வைத்து சித்திரவதை செய்து வருகிறது.

 

தீஸ்தா செதால்வத் ஜூன் 2022:

கோத்ரா ரயில் எரிப்புக்கு பின்பு குஜராத்தில் நடந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள், கோடிக்கணக்கான சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டது. மோடி-அமித்ஷா கும்பல்தான் இதை தலைமையேற்று நடத்தியது. அப்போது அதிகாரத்தில் இருந்த காவல்துறையின் முன்னால் டைரக்டர் ஜெனரலான ஆர்.பி.சிரிகுமார் மற்றும் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த சஞ்சீவ் பாட் மற்றும் அக்கலவரத்தில் கொலை செய்யப்பட்ட ஒரு காங்கிரஸ் தலைவரின் மனைவியான தீஸ்தா செதால்வத் ஆகியோர் இக்கலவரம் தொடர்பாக தொடர்ந்து நீதி மன்றங்களில் சட்டப் போராட்டத்தை மேற்கொண்டனர். ஆனால் இஸ்லாமியர்களுக்கான அச்சட்டப் போராட்டம்  ஜூன் மாதம் மண்ணைக் கவ்வியது. குற்றம் சாட்டப்பட்ட இன்றைய பிரதமர் உட்பட அனைவரும் சுத்தமானவர்கள் / அப்பாவிகள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்து விடுதலை செய்தது. நீதி மன்றம் வழக்கை முடித்து வைத்தது. ஆனால் பாசிச மோடி-அமித்ஷா கும்பல் புதிய வழக்கையும் பாசிச நடவடிக்கையையும் ஆரம்பித்து வைத்தது.

தீஸ்தா செதால்வத் குஜராத் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த சதி செய்து, 2002 கோத்ராவுக்குப் பிந்தைய கலவரம் தொடர்பாக அப்போதைய முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதை உறுதி செய்ய சதிசெய்தார் என்று சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நீதிக்காக போராடிய தீஸ்தா செதால்வத், ஆர்.பி.சிரிகுமார் மற்றும் சஞ்சீவ் பாட் மீது 100 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை ஒன்றை ஜூன் மாதம் தாக்கல் செய்து சிறையில் அடைத்துள்ளது. மோடி கும்பலை நீதிமன்றம் விடுவித்த உடனே, அதே கையோடு அந்த வழக்கில் நீதிக்காக போராடுயவர்களை, ஒரு சமூக அவலத்திற்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தியவர்களை அதாவது ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை பறித்த, இஸ்லாமியர்களின் வீடு, கடைகள், வர்த்தக நிறுவனங்கள் என்று கோடிக் கணக்கான சொத்துகளை சூறையாடியதை எதிர்த்து இஸ்லாமிய சமூகத்திற்காக இயன்றவரை சட்ட ரீதியாக போராடியவர்களையே  தேச விரோதிகளாக ஆக்கி, அதிகார திமிரின் உச்சத்தில் மோடி-அமித்ஷா கும்பல், நீதி மன்றங்கள், காவல் துறை மற்றும் பல்வேறு புலனாய்வு துறையின் கூட்டு பாசிச போக்கை நம்மால் பார்க்க முடிகிறது.

இந்த வரிசையில்தான் இப்போது புனையப்பட்டுள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இயக்கத்தின் மீதான பாய்ச்சலை நாம் பார்க்கும்போது, இதுவரை இந்த மோடி-அமித்ஷா கும்பல் தடம் பதித்து வந்த பாதையே நமக்கு நல்ல வெளிச்சத்தை பாய்ச்சுகிறது. மோடி-அமித்ஷா கும்பல் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக அனைத்து வித சதிகளையும் பல நிர்வாக அமைப்புகளுடன் கூட்டுச் சேர்ந்து செய்யக் கூடியவர்கள் என்பது இங்கே நன்கு புலப்படுகிறது. ஒவ்வொரு நிகழ்விலும் மோடி-அமித்ஷா கும்பலுக்கு ஒரு பாதிப்பும் இருந்தது இல்லை. இப்படி இட்டுகட்டிய பல கதைகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதற்காக முயன்றதற்கு எந்த தீர்கமான சான்றும் இல்லை. ஆனால் எப்போதும் இவர்களே ஒரு கதையை புனைந்துவிட்டு, அந்த புனைந்த கதையிலிருந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்திலிருந்து வெளியே வரவேண்டும் என்றால் அது நிஜமல்ல கதைதான் என்று அவர்களே நிரூபிக்க வேண்டும். இப்படி குற்றவாளிகளாக குற்றம் சுமத்தப்பட்டவர்களே தான் குற்றவாளியல்ல என்று நிரூபித்து வெளியே வர வேண்டும் என்று நிரூபிக்கும் இந்த நீதித்துறைதான் ஜனநாயகத்தை காக்கும் தூணாம்! குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளிகளே குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க வேண்டும் என்ற உச்சபட்ச ஜனநாயகம் வழங்கும் நாடுதான் இந்தியா!

மோடி ஆட்சி, நீதி மற்றும் காவல் துறைகளின் கூட்டுப்பாசிசத்தை எதிர்த்து மக்கள் ஓரணியில் திரண்டு போராட வேண்டும். பாசிசத்தை வேரோடு அழிப்போம்!