ஞானவாபி மசூதி : இசுலாமியர்களின் வழிபாட்டு உரிமையைப் பறிக்கும் பாசிச மோடி அரசு

சமரன்

ஞானவாபி மசூதி : இசுலாமியர்களின் வழிபாட்டு உரிமையைப் பறிக்கும் பாசிச மோடி அரசு

மோடி அரசு தனது ஆட்சியின் அனைத்து அவலங்களையும் மூடிமறைக்க இந்து மதவெறியை கேடயமாக பயன்படுத்துகிறது. அமெரிக்காவுக்கு சேவை செய்யும் இந்து ராஜ்ஜியத்தை அமைப்பதற்கான முதல் இலக்கை பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டியதன் மூலமாக எட்டிவிட்டது. நாட்டை கலவர பூமியாக்கி பல்லாயிரம் இசுலாமியர்களின் குருதியாலும் மண்டையோடுகளாலும் எழுப்பப்பட்டது அந்த இலக்கு. தற்போது 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறது. அதில் தனது ஊழல் சாதனைகளை சொல்லியா வாக்கு கேட்கும்?! அல்லது மக்களை வறுமையிலும் வேலையின்மையிலும்  ஆழ்த்திவிட்டு, அம்பானிகளையும் அதானிகளையும் கொழுக்க வைத்துள்ள தனது சாதனைகளை சொல்லியா கேட்கும்?! நிச்சயம் செய்யாது மக்கள் துடப்பத்தால் விரட்டியடிப்பார்கள் என தெரியும். மக்களின் சொல்லொண்ணா இத்துயரங்களுக்கு காரணமான அரசின் அரசியல்-பொருளாதாரக் கொள்கைகளை மறைத்து இந்து மதத்திலுள்ள பிற்போக்குச் சக்திகளை வென்றெடுப்பதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளது. மீண்டும் மக்களிடம் மத மோதல்களை உருவாக்கி நாட்டை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து அமெரிக்காவுக்கும் பன்னாட்டு-உள்நாட்டு முதலாளிகளுக்கும் குருதி தோய்ந்த சிவப்புக் கம்பளம் விரிக்கிறது. அதற்கான நடவடிக்கைதான் ஞானவாபி மசூதி. 

ஞானவாபி மசூதி மீதான சமீபத்திய வழக்குகளின் காலவரிசை

உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் முக்கிய நகரமான வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவிலும் ஞானவாபி மசூதியும் அருகருகே அமைந்துள்ளன. இதில் ஞானவாபி மசூதி 17ம் நூற்றாண்டு வாக்கில் ஔரங்கசீப் காலத்திலும், காசி விஸ்வநாதர் கோவில் 18ம் நூற்றாண்டு வாக்கில் அகில்யாபி ஹோல்கர் என்ற மராத்திய மன்னர் காலத்திலும் கட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெறும் 3000 அல்லது 4000 சதுர அடி அளவில் சிறியதாக இருந்த காசி விஸ்வநாதர் கோவிலை 2021ம் ஆண்டில், 5லட்சம் சதுர அடி பரப்பு கொண்ட இந்துத்துவ அடையாளச் சின்னமாக மாற்றியது மோடி அரசு. 

இதற்கான திட்டத்தை 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத்தில் அறிவித்தது மோடி அரசு. அதே ஆண்டின் இறுதியில் - நவம்பர் மாதத்தில் பாபர்மசூதியை இசுலாமியர்களிடமிருந்து பறித்து ராமர்கோவிலைக் கட்டிக்கொள்ள உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பும் சங்பரிவாரங்களுக்கு உத்வேகம் அளித்தது. அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாகவே ஞானவாபி மசூதியை உரிமைக் கொண்டாடும் வகையில் விஜய் சங்கர் என்ற சங்கி வழக்கறிஞர் மூலம் வழக்கைத் தொடுத்தன. அதில் ஞானவாபி மசூதிக்கு அடியில் பழைய காசி கோவில் இருப்பதாக பொய்யைக் கூறி அதனை அகழ்வாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என கோரியது. அவ்வழக்கை கீழமை நீதிமன்றம் அனுமதித்தது. மசூதி மேலாண்மைக் கமிட்டி அதற்கு எதிராக மனு செய்திருந்ததால் அலகாபாத் உயர்நீதிமன்றம் மசூதிக்குள் அகழாய்வு மேற்கொள்ள இடைக்கால தடைவிதித்தது. தடை அமலில் இருந்தபோதிலும் வாரணாசி நீதிமன்றம் மசூதியின் சுற்றுபுறச் சுவர்களில் அகழ்வாய்வை மேற்கொள்ள அனுமதி வழங்கியது.

அதன் பின்னர், 2021ம் ஆண்டு ஆகஸ்டில் விஸ்வ வேதிக் சனாதன சங் என்ற சங்பரிவாரத்தைச் சார்ந்த 5 பெண்கள், மசூதியின் மேற்குத்திசை சுவற்றின் வெளிப்புறத்தில் உள்ள சிருங்கார கௌரி அம்மன் சிலையை வருடம் முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் எனவும், மசூதிக்குள்ளும் அக்கடவுளின் சில சிலைகள் உள்ளன என்ற பொய்யான வாதத்தையும் முன்வைத்து அதனையும் அகழாய்வு செய்ய வேண்டும் எனவும் வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அவ்வழக்கினையொட்டி 2022ம் ஆண்டு ஏப்ரலில், மசூதிக்குள் இந்துக் கடவுள்களின் சிலைகள் உள்ளனவா என்று வீடியோ ஆய்வு மேற்கொள்ள ஆணையிட்டு அதற்கு ஒரு வழக்கறிஞர் ஆணையரையும் நியமித்தது வாரணாசி நீதிமன்றம். அச்சமயத்தில் மசூதிக்குள் உள்ள கிணறு போன்ற குளத்தில் இருந்த நீரூற்றை லிங்கம் என பொய்யான வீடியோவை சங்பரிவாரங்களுடன் கூட்டுச் சேர்ந்து சித்தரித்து வெளியிட்டது. அதை எதிர்த்து மசூதி பாதுகாப்புக் குழு மே 2022ல், அலகாபாத் நிதிமன்றத்தில் வீடியோ சர்வேக்கு தடைவிதிக்கக் கோரி மனு தாக்கல் செய்தது, அந்த மனுவை அலகாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதே மாதத்தில் சங்பரிவாரங்களுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றமமும் அந்த மசூதி பாதுகாப்புக் குழுவின் மனுவை நிராகரித்ததோடு மசூதிக்குள் இருந்த குளத்தை சீலிட்டு மூடவும்; மசூதிக்குள் 20 பேருக்கு மேல் தொழுகை நடத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டது. 

இதே போன்று ஏழு வழக்குகள் மசூதியின் மீது உரிமைக்கோரி சங்பரிவாரங்கள் தரப்பிலிருந்து தொடுக்கப்பட்டன. அவற்றின் அடிப்படையில் 2023ம் ஆண்டு ஜூலையில் அழகாய்வு பணிகளை மேற்கொள்ள இந்திய தொல்லியல் ஆராய்ச்சித் துறைக்கு (ஏ.எஸ்.ஐ) உத்தரவிட்டது வாரணாசி நீதிமன்றம். ஆகஸ்ட் 2023ல் உச்ச நீதிமன்றமும் நவீன முறைகளில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியது. செப்டம்பர் 2023ல் மேலும் ஒரு வழக்கு சைலேந்திர குமார் பதாக் வியாஸ் என்ற சங்கியால் மசூதியின் தென்புற நிலவறைக்குள் பூஜை நடத்த அனுமதி கோரியது. அதற்கு "வியாஸ் தெக்கானா (Vyas Tehkhana)" - அதாவது "வியாஸின் நிலவறை" எனவும் பெயரிட்டு அங்கு அவரின் தாத்தா சோம்நாத் வியாஸ் என்பவரும் அவருக்கு முந்தையவர்களும் 1993ம் ஆண்டுக்கு முன்புவரை - நூறாண்டுகளுக்கு மேலாகவும் - தொடர் பூஜை நடத்தி வந்ததாகவும் அந்த வழக்கில் கதையளந்துள்ளது. 

2023ம் ஆண்டு இறுதியில் - டிசம்பரில் இந்திய தொல்லியல் ஆராய்ச்சித் துறை தனது அறிக்கையை வாரணாசி மாவட்ட நீதிமன்றத்திடம் சமர்பித்தது. அதன் நகல் 2024ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதிதான் மசூதி பாதுகாப்புக் குழுவுக்கு வழங்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் 839 பக்கம் கொண்ட அந்த அறிக்கையை அவர்கள் பகுப்பாய்வு செய்யக் கூட நேரம் வழங்காமல் ஜனவரி 31ம் தேதியே தென்புற நிலவரையில் பூஜை நடத்த அனுமதி வழங்கியது. மசூதி பாதுகாப்புக் குழுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யக்கூட கால அவகாசம் வழங்கவில்லை. ஏழு நாட்களுக்குள் பூஜை செய்துக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் காசி விஸ்வநாதர் ஆலய பூசாரி ஒருவரை நியமித்துக் கொள்ள அவசர அவசரமாக உத்தரவிட்டது. சங்பரிவாரங்கள் அடுத்த சில மணிநேரங்களிலேயே இரும்புவேலியைத் தகர்த்துவிட்டு மசூதியின் நிலவறையை கைப்பற்றி பூஜையை நடத்திவிட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மசூதி பாதுகாப்புக் குழு மனுதாக்கல் செய்திருந்தது. அந்த மனுவையும் பிப்ரவரி 26ம் தேதி நிராகரித்து மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை குப்பைத் தொட்டியில் வீசும் அநீதி மன்றங்கள்

1990ம் ஆண்டு பாபர் மசூதியை இடிப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த பிறகு 1991ம் ஆண்டே அயோத்தி பாபர் மசூதி, காசி ஞானவாபி மசூதி, மதுரா மசூதி மூன்றையும் அகற்றிவிட்டு அவ்விடங்களில் இந்து கோவில்களை கட்ட அனுமதி வேண்டி விஷ்வ ஹிந்து பரிசத் வழக்குத் தொடர்ந்தது. அயோத்தி ராம ஜென்ம பூமியென்றும், காசி விஸ்வநாதர் - சிவனின் புனித பூமியென்றும், மதுரா கிருஷ்ண ஜென்ம பூமியென்றும் கதையளந்து அங்குள்ள மசூதிக்களை இடித்து தள்ளிவிட்டு அவற்றில் பிரம்மாண்ட கோவில் நகரங்களை உருவாக்குவதை திட்டமாக செயல்படுத்தத் துவங்கின. 

பாபர் மசூதி தொடர்பான சச்சரவுகள் நீண்டகாலமாக இருந்துவந்த காரணத்தாலும் இந்த வழக்கையொட்டியும் வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு) சட்டம் - 1991 ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது காங்கிரசு அரசு. அச்சட்டத்தின் பிரிவு 3, எந்தவொரு வழிபாட்டுத் தலத்தின் தன்மையையும் மாற்றுவதை தடை செய்கிறது. பிரிவு 4, அனைத்து வழிபாட்டுத் தலங்களும் ஆகஸ்ட் 15, 1947க்கு முன்பு எப்படி இருந்தனவோ அவ்வாறே தொடர வேண்டும். வேறு மதத்தைச் சார்ந்தவர்களோ அல்லது அதே மதத்தைச் சார்ந்த வேறொரு பிரிவினரோ வழிபாட்டுத் தலத்தின் தன்மையை மாற்றவதை தடை செய்கிறது. மேலும் இச்சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பாக தொடுக்கப்பட்ட (வழிபாட்டுத் தலங்களை மாற்றக் கோரும்) அனைத்து வழக்குகளையும் ரத்து செய்கிறது. இச்சட்டம் ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தவிர இந்தியா முழுமைக்கு செல்லுபடியாகும் என்கிறது. 

இச்சட்டமும் கூட புராதன நினைவுச் சின்னங்கள் மற்றும் அகழாய்வு இடங்கள் பாதுகாப்புச் சட்டம் 1954க்கு எதிரானது. ராமராஜ்ஜியத்தை நிறுவுவதற்கான அடையாளச் சின்னமாக - மசூதியை இடித்துவிட்டு - ராமர் கோவிலைக் கட்ட வேண்டும் என்ற அன்றைய குறைந்தபட்சத் திட்டத்தில் காங்கிரசு - பாஜக இரண்டு கட்சிகளும் உடன்பட்டுதான் இந்த சட்டத்தை நிறைவேற்றின. புராதன நினைவுச் சின்னங்கள் சட்டம் 1947க்கு முன்பு இருந்த அனைத்து தலங்களையும் அப்படியே பாதுகாப்பதை வலியுறுத்தியது. ஆனால் காங்கிரசு கொண்டு வந்த வழிபாட்டு தலச் சட்டம் 1991, பாபர் மசூதிக்கு விலக்கு அளித்து புரதான நினைவுச் சின்னங்கள் சட்டத்திற்கு எதிராக அமைந்தது. அச்சட்டமே பாபர் மசூதியை சங்பரிவார குண்டர்கள் இடிப்பதற்கு அனுமதியையும் ஆதரவையும் அளித்தது; அச்சட்டமே இன்று பிற மசூதிகளின் மீதான உரிமைக் கோரல்களுக்கும் துவக்கப்புள்ளியாக அமைந்தது. பாபர் மசூதி நிலத்தை கைப்பற்றி ராமர் கோவில் கட்ட அனுமதித்ததும் கூட இந்துக்களின் நம்பிக்கையின் பெயரிலும் அச்சட்டத்தின் அடிப்படையிலும்தான். 

இது ஒருபக்கம் இருந்தாலும், இந்த சட்டத்தையும் கூட எதிர்த்து பாஜகவின் வழக்கறிஞர் அஷ்வினிகுமார் உபத்யாய் மற்றும் விஷ்வ பத்ர பூஜாரி புரோகித் மகாசங் என்ற சங்பரிவார அமைப்பும் 2020ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. இன்று அந்த கும்பலுக்கு சாதகமாக - அந்த சட்டத்திற்கும்கூட எதிராகத்தான் - ஞானவாபி மசூதி வழக்கில் நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கின்றன. பாபர் மசூதியை ராமர்கோவிலுக்கு தாரை வார்த்த 2019 தீர்ப்பிலும் கூட இனி இதுபோன்ற கோரிக்கைகளை மற்ற வழிபாட்டுத் தலங்களுக்கும் கோரக் கூடாது என்றுதான் வழங்கியது. இன்று உச்சநீதிமன்றத்தின் அந்த தீர்ப்புக்கும் எதிராகதான் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. முன்னாள் இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேயும் கூட 2021ம் ஆண்டில் வழிபாட்டுத்தல சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பேசியுள்ளார். இதில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பேசும் மதச்சார்பின்மை எங்கே இருக்கிறது? அது குப்பைத் தொட்டியில்தான் வீசப்பட்டுள்ளது. 

இந்திய தொல்லியல் துறையின் காவிக் கறை படிந்த அறிக்கை 

இந்திய அரசியலமைப்பு சட்டம், வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு) சட்டம் -1991 ஆகியவற்றிலும் குழப்பங்கள் இருப்பதனால்தான், "வழிபாட்டுத் தலங்கள் சட்டமானது தலங்களின் தன்மையை மாற்றுவதைத்தான் தடைசெய்கிறதேயொழிய அங்கு மாற்று மதத்தினரின் தலம் இடித்துதான் அது கட்டப்பட்டதா என அகழாய்வு செய்து அதன் மதத்தன்மையை கண்டறிவதற்கு தடை விதிக்கவில்லை" என்று கூறி 2022 ம் ஆண்டு ஞானவாபி மசூதிக்குள் அகழ்வராய்ச்சியினை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அந்த அடிப்படையில்தான் அகழாய்வு நடத்தப்பட்டது. 

இந்திய தொல்லியல் துறை அகழ்வாய்வு செய்த அறிக்கையின் அம்சங்கள் :

  1. கலை மற்றும் கட்டடக்கலை அடிப்படையில், ஏற்கெனவே இருக்கும் இந்த அமைப்பை இந்து கோவிலாக அடையாளம் காணலாம். தற்போதைய கட்டடம் கட்டப்படுவதற்கு முன்பு, அங்கு ஒரு பெரிய இந்து கோவில் இருந்தது என்கிறது.
  2. முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் (1676-77) ஆட்சியின்போது மசூதி கட்டப்பட்டது என்று எழுதப்பட்ட கல்வெட்டு இருந்ததாகவும், மேலும் மசூதியின் சஹான் (முற்றம்) பழுதுபார்க்கப்பட்டதற்கான தகவல்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், இந்தக் கல்வெட்டின் உடைந்த பாகத்தின் புகைப்படம் 1965-66 ஏ.எஸ்.ஐ. பதிவுகளில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஔரங்கசீப்பின் சுயசரிதையான மாசிர்-இ-ஆலம்கிரியில் ஔரங்கசீப் தனது அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களுக்கும் சமய நம்பிக்கையவற்றவர்களான காஃபிர்களின் பள்ளிகள் மற்றும் கோவில்களை இடிக்க உத்தரவிட்டதாக எழுதப்பட்டுள்ளது என கூறுகிறது. இதனை மேற்கோள் காட்டி, 1669ம் ஆண்டில் ஔரங்கசீப்பின் உத்தரவைத் தொடர்ந்து, காசியில் உள்ள விஸ்வநாதர் கோவில் இடிக்கப்பட்டதாக முடிவு செய்துள்ளது. 
  3. ஏற்கெனவே உள்ள கட்டமைப்புகளின் சில பகுதிகள் இடிக்கப்பட்டு, அவை மீண்டும் மசூதியின் கட்டுமானம் மற்றும் பழுதுபார்ப்பின் போது பயன்படுத்தப்பட்டதாகவும் அதில் தேவநாகரி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் இடம்பெற்றுள்ளதாகவும் உள்ளது. மேலும் இந்தக் கல்வெட்டுகளில் ஜனார்தன், ருத்ரா மற்றும் உமேஷ்வரா ஆகிய மூன்று கடவுள்களின் பெயர்களும் இருப்பதாக தெரிவித்துள்ளது.
  4. மசூதியில் வழிபாட்டுக்காக, அதன் கிழக்குப் பகுதியில் அடித்தளங்கள் ஏற்படுத்தப்பட்டன. மேலும் மசூதியில் அதிகமான மக்கள் தொழுகை நடத்தும் வகையில் மேடைகள் மற்றும் அதிக இடவசதியும் ஏற்படுத்தப்பட்டது. கிழக்குப் பகுதியில் அடித்தளம் அமைக்க கோவிலின் தூண்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறுகிறது. இந்தத் தூண்களை மசூதி கட்டுவதற்குப் பயன்படுத்துவதற்காக, அதில் யாழி உருவங்கள் அகற்றப்பட்டு, மலர் வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளாதக கூறுகிறது. என்2 (N2) எனப் பெயரிடப்பட்ட ரகசிய அறையில் மணிகள், விளக்கு மாடம் போன்ற அமைப்புகள் அடங்கிய தூண் உள்ளதாகவும் S2 எனப் பெயரிடப்பட்ட அறையில் புதைந்திருந்த இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் சிலைகளும் மீட்கப்பட்டன என்கிறது.
  5. மசூதியின் மேற்கு சுவரின் எஞ்சிய பகுதி ஏற்கெனவே இருக்கும் இந்து கோவில் என்கிறது. கோவிலின் வடக்கு மற்றும் தெற்கு நுழைவு வாயில்கள் படிக்கட்டுகளாக மாற்றப்பட்டு, வடக்கு மண்டப வாசலில் உள்ள படிக்கட்டுகள் இன்றும் பயன்பாட்டில் உள்ளதாகவும்; கோவிலில் ஒரு பெரிய மைய அறையும், வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கில் தலா ஒரு அறையும் இருந்ததாகவும்; முந்தைய கட்டமைப்பின் (கோவில்) மைய அறை தற்போதைய கட்டமைப்பின் (மசூதி) மைய அறையாக உள்ளதாகவும் தொல்லியல்துறை நம்புகிறது.

தொல்லியல் துறையின் இந்த அறிக்கை முன்முடிவோடு அணுகப்பட்டு புனைவுகளோடு தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்த அகழ்வாராய்ச்சி, அடித்தளத்தைத் தோண்டி அதிலிருந்து கிடைத்த ஆதாரங்களை கொண்டு செய்யப்பட்டதல்ல. ராடார் கருவி மூலம் பூமிக்கடியில் ஊடுருவி ஆய்வு மேற்கொள்ளும் முறையிலேயே செய்யப்பட்டது. இந்த ஆய்வு முறையில் மூலம் அடித்தள அமைப்பின் கட்டிடக் கலை இந்த மதத்தினரைச் சார்ந்தது என துல்லியமாக அளவிட முடியாது என மசூதி பாதுகாப்பு குழு கூறுகிறது. ஔரங்கசீப் காலத்தில் கட்டப்பட்டதற்கான கல்வெட்டுச் சான்றுகள் 1965ம் ஆண்டின் புகைப்படத்தில் உள்ளதாக கூறப்பட்டது முற்றிலும் பொய் என்றும் மசூதி பாதுகாப்பு குழு மறுக்கிறது. அப்படி ஓர் அகழாய்வு அந்த ஆண்டுகளில் நடத்தப்படவில்லை என்கிறது. மேலும், கோவிலை இடித்து அதன் தூண்களில் இருந்த சிற்பங்கள் திருத்தப்பட்டு அதே தூண்கள் மசூதி கட்டப் பயன்படுத்தப்பட்டது என்பது தொல்லியல் துறையின் கற்பனை என்கின்றனர். அதே போல் மசூதியின் மேற்கு சுவர் பகுதியில் இருக்கும் கோவிலின் எச்சங்கள், மசூதியின் அருகில் கோவில் இருந்ததையே காண்பிக்கன்றனவே ஒழிய கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதற்கான ஆதாரங்களை வழங்கவில்லை என்கின்றனர். மேலும் இம்மசூதி ஔரங்கசீப் காலத்தில் கட்டப்பட்டதல்ல அக்பர் காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கக் கூடும் அக்கட்டத்தில் அவர் இசுலாமியர் மற்றும் பிறமதத்தினரின் ஒற்றுமையை பேணியதாகவும் அருகருகே அமைந்த கோவில்கள் மற்றும் மசூதிகள் அவர் காலத்தில் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டதாகவும் மசூதி பாதுகாப்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர். எனவே தொல்லியல் துறையின் இந்த அறிக்கை ஞானவாபி மசூதியானது கோவிலை இடித்துக் கட்டப்பட்டுள்ளது என்பதனை நிறுவும் நோக்கில் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. அது உண்மைகளை வெளிப்படுத்தவில்லை என்கின்றனர்.

இது குறித்து மார்க்சிய வரலாற்று ஆய்வாளர் இர்ஃபான் ஹபீப், "பழங்காலத்தில் எங்கெல்லாம் கோவில்களும் மசூதிகளும் கட்டப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் புத்த விகாரங்களின் கட்டுமானங்கள் கிடைத்துள்ளன. இந்த மசூதி மற்றும் மதுரா மசூதி இரண்டுமே அக்பர் மற்றும் ஜகாங்கீர் காலத்தில் கட்டப்பட்டிருந்த கட்டுமானங்களை (கோவில்களை) தகர்த்துவிட்டுதான் கட்டப்பட்டது. ஆனால் காசியில் சிவன் கோவிலை இடித்துவிட்டுதான் கட்டப்பட்டது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஞானவாபியில் சிவலிங்கம் இருப்பதாக தற்போதுதான் உரிமைக் கோரப்படுகிறது. இதற்கு முன்பான வழக்குகளில் அது தாக்கல் செய்யப்படவில்லை. அந்த வடிவில் இருக்கும் அனைத்தையும் சிவலிங்கம் என்று கூறி விட முடியாது. சிவலிங்கம் என்பதற்கான அடையாளங்கள் தனிச்சிறப்புடையவை. இதற்காக 1670 ம் ஆண்டில் கட்டப்பட்ட மசூதியை இடிக்க வேண்டும் என கோருவது தவறு. அதேபோல், சித்தூரில் உள்ள ராணா கும்பா கோபுரத்தில் 'அல்லா' என அராபிக் மொழியில் பொறிக்கப்பட்ட கல் உள்ளது என்பதனாலேயே அது மசூதி என இசுலாமியர்கள் கோர முடியுமா? இந்திய புராதன சின்னங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. அதை மீறுவது புராதன சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரானது" என்கிறார். 

தொல்லியல்துறை அறிக்கையே ஆணித்தரமான முடிவுகளை வைக்காமல் பல இடங்களில் நம்புவதாகதான் வைத்துள்ளது. அதாவது பெரும்பான்மை மதவாத நம்பிக்கையின் பெயரிலேயே தனது அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளது தொல்லியல்துறை. இந்த அறிக்கையை முன்வைத்து மசூதியை சங்பரிவாரங்களிடம் ஒப்படைத்துள்ளன நீதிமன்றங்கள். இவையனைத்தும் நீதிமன்றங்கள், தொல்லியல்துறை உள்ளிட்ட அரசின் அனைத்துத் துறைகளும் காவிமயமாக்கப்பட்டு உள்ளதையே காண்பிக்கின்றன. பாபர் மசூதி தீர்ப்பில் தொல்லியல் ஆதாரங்களை முன்னிலைப்படுத்தாமல் காலனிய ஆட்சியாளர்களின் கட்டுக்கதைகள், இந்துக்களின் நம்பிக்கைகள் என்ற அடிப்படியில் மட்டும் தீர்ப்பு வழங்கியது. இன்று தொல்லியல் துறையையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, இந்து ராஜ்ஜியத்தைக் கட்டியமைப்பதில் அடுத்தக் கட்ட பாய்ச்சலை எடுத்துள்ளது பாஜக அரசு.

இசுலாமியர்களின் வழிபாட்டு உரிமையைப் பறிக்கும் பாசிச மோடி அரசு 

ஔரங்கசீப் உள்ளிட்ட முகலாயர்களின் ஆட்சிகாலம் பற்றி பல்வேறு கட்டுக்கதைகளை பிரிட்டிஷ் அரசு தனது ஏகாதிபத்திய ஆதிக்க நலன்களிலிருந்து கட்டமைத்தது. இந்துக்கள் - இசுலாமியர்கள் இடையே மோதல்களை உண்டாக்கி பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து நாட்டை தங்களது காலனியாதிக்க கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. நாம் முகலாய மன்னர்களின் ஆட்சிகாலத்திற்கு வக்காலத்து வாங்கவில்லை; அவர்கள் ஒன்றும் ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் உயர்த்திப் பிடித்தவர்கள் அல்ல. அவர்கள் நிலப்பிரபுத்துவ சமூக கட்டத்தைச் சார்ந்தவர்கள் - அவர்களின் ஆட்சி முறை மதத்தன்மையோடு இணைந்துதான் இருக்கும். அதற்காக இன்றைய இசுலாமியர்களை வதைப்பது சரியாகுமா? சமூகத்தை 400 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லதான் வேண்டுமா? அல்லது அதைவிட பின்னோக்கி இழுத்துச் செல்வதுதான் சரியானதா? இது காட்டுமிராண்டித்தனம் இல்லையா? இந்தக் காட்டுமிராண்டித்தனத்தைத்தான் ஜனநாயகம் என்ற போலியான முகமூடியின் மூலம் சட்ட வழியிலேயே நிறைவேற்றி வருகிறது மோடி அரசு. இதற்கு அரசின் அனைத்து துறைகளையும் பாசிசமயமாக்கி அவற்றை கருவியாக பயன்படுத்தி வருகிறது. 

குடியுரிமைச் சட்டத்தின் மூலம் இசுலாமியர்களை இரண்டாம்தர மக்களாக்க முயற்சித்தது. நாடு முழுவதும் எழுந்த கடும் போராட்டங்களுக்கு பின் அதை ஒத்தி வைத்தது. அவர்களின் வழிபாட்டு உரிமை, உணவு உரிமை, கல்வி உரிமை உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக பறிப்பதன் மூலம் அச்சட்டத்தை இயற்றாமலே அவர்களை இரண்டாம்தர குடிமக்களாக்கியுள்ளது. (இந்த கட்டுரை எழுதி முடித்த பின்பு குடியுரிமைச் சட்டத்தையும் கூட நிறைவேற்றி விட்டது). இந்துராஜ்ஜியத்தை கட்டமைப்பதற்கான இந்தப் போக்கு ஞானவாபி மசூதியோடு முடியப் போவதில்லை. அடுத்து மதுரா, தாஜ்மகால், டெல்லியில் உள்ள குதுப்மினார், கர்நாடாகா மசூதி என அவர்கள் பட்டியல் நீள்கிறது. இந்தியாவில் உள்ள 36000 மசூதிகளை இடித்து தரைமட்டமாக்குவதை இலக்காக வைத்துள்ளன. இசுலாமிய மத அடையாளங்களும் அவர்கள் இந்த நாட்டில் வாழ்ந்ததற்கான எச்சங்களும் இல்லாமல் அழித்தொழிப்பதையே இந்துராஜ்ஜியத்தின் இலக்காகக் கொண்டு செயல்படுகின்றன. இந்தப் பாசிச போக்கு இசுலாமியர்களுக்கு மட்டும் எதிரானதல்ல இந்து மதத்திலும் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்பதை நிலப்பிரபுத்துவ - சாதிய கட்டமைப்பு மற்றும் ஆகமவிதிகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட பழநி கோவில் தீர்ப்பிலேயே சமீபத்தில் கண்டோம்.

இந்த இந்துராஜ்ஜியம் என்பது நிதிமூலதன ஆதிக்கத்திற்கு சேவை செய்யத்தான் என்பதையும் நிரூபித்து வருகிறது மோடி அரசு. வாரணாசியில் மட்டும் ரூ. 48000 கோடி முதலீடு திட்டங்களை செயல்படுத்த உள்ளது. வாராணாசியின் சுற்றுலாத் துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளை பன்னாட்டு தனியார் கார்ப்பரேட்களின் பிடியில் கொண்டு சேர்த்துள்ளது. அதற்கு இந்த மசூதிகள் தடையாக இருப்பதாக கருதியே அவற்றை ஒழித்துக் கட்டி வருகிறது. 

காங்கிரசின் சந்தர்ப்பவாதம் 

பாபர் மசூதி இடிப்பில் பாஜகவோடு கைக்கோர்த்து துணையாக நின்ற காங்கிரசு கட்சி இன்று ஞானவாபி மசூதி மீதான தீர்ப்பு குறித்து வாய்திறக்காமல் அமைதி காக்கிறது. 2022 ம் ஆண்டில் காங்கிரசின் ப.சிதம்பரம் ஞானவாபி விசயத்தில் வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு) சட்டம் - 1991 ஐ மீறக்கூடாது என்று பேசினார். ஆனால் இன்று மசூதியை இந்துக்களின் வழிபாட்டுக்கு திறந்துவிட்டுள்ளது நீதிமன்றம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு - இந்துக்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்காக, தற்போது ஞானவாபி விசயத்தில் இசுலாமியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு எதிராக எதுவும் பேச மறுக்கிறது காங்கிரசு. இந்துத்துவத்தை காரியவாதமாக கையாளும் காங்கிரசின் சந்தர்ப்பவாதம் இதன் மூலம் மீண்டும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள் இரு கட்சிகளை தவிர இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள எந்தவொரு கட்சியும் நீதிமன்றங்களின் இந்த அநீதி தீர்ப்பை கண்டிக்கவில்லை. (முலாயம் சிங் யாதவ்வின் சமாஜ்வாதி அரசுதான் 1993ம் ஆண்டு ஞானவாபி மசூதியை சுற்றி இரும்புவேலி அமைக்க ஏற்பாடு செய்திருந்தது என்பதும் கூட இங்கு குறிப்பிடத்தக்கது). ஆகையால் இந்தியா கூட்டணி என்பது மதச்சார்பற்ற கூட்டணி அல்ல என்பதை அவர்களின் கள்ள மௌனமே நிரூபிக்கின்றன. இவர்கள் இந்துத்துவ பாசிசத்திற்கு நிச்சயமாக மாற்று அல்ல என்பதையும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் நிரூபித்து வருகின்றனர். 

சமூகத்தை மிகவும் பின்னோக்கி இழுக்கும் பாஜக அரசின் இந்த பாசிசப் போக்குகளை வீழ்த்த அணிதிரள்வதும், இசுலாமியர்களின் வழிபாட்டு உரிமைகள் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதும் அத்தியாவசியமாகிறது. 

சமூகம், பாசிச நடவடிக்கைகள் மூலம் பின்னோக்கி செல்வதை பரந்துபட்ட உழைக்கும் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மக்களின் எழுச்சியால் அது தடுத்து நிறுத்தப்படும்; சமூகம் முன்னோக்கிச் செல்வதையே அவர்கள் விரும்புவார்கள். அதற்கு அவர்கள் மத்தியில் உள்ள பிற்போக்குச் சிந்தனைகள் களையப்பட்டு வர்க்க உணர்வு ஊட்டப்பட வேண்டும். அது புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே சாத்தியப்படும். 

சமரன், ஏப்ரல் 2024