மோடி கும்பலின் பாசிச ஒடுக்குமுறைக்கு எதிரான மல்யுத்த வீராங்கனைகளின் தொடர் போராட்டம் வெல்லட்டும்!

"உலகத்திலுள்ள எல்லா முதலாளித்துவ, பூர்ஷ்வா குடியரசுகளிலும் பெண்குலத்தை அவமதிக்கவும், தாழ்வுபடுத்தவும், ஆண்களுக்கு தனி உரிமைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன" என்பார் லெனின் - சமரன்

மோடி கும்பலின் பாசிச ஒடுக்குமுறைக்கு எதிரான மல்யுத்த வீராங்கனைகளின் தொடர் போராட்டம் வெல்லட்டும்!

முன்னேற்றமடைந்த, அறிவுப் பெருக்கம் கொண்ட, ஜனநாயகக் குடியரசுகள் எல்லாவற்றிலும் கூட இதே நிலைதான் எனும்போது, மடாதிபதிகள் (நிலப்பிரபுக்கள்) தரகுமுதலாளிகளின் ஆசியோடு நடக்கும் மிகவும் பிற்போக்கான இந்துத்துவ பாசிச ஆட்சியில் பெண்களின் நிலையைப் பற்றி சொல்லவா வேண்டும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளின் ஒரு அத்தியாயம்தான் மல்யுத்த வீராங்கனைகள் மீதான மோடி கும்பலின் பாலியல் வன்கொடுமை.

இந்திய மல்யுத்த கூட்டமைப்புத் தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் ஷரன் சிங் 10-க்கும் மேற்பட்ட மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தான் என ஜனவரி 18ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் மற்றும் வீரர் பஜ்ரங் பூனியா தலைமையில் நீதி கேட்டு போராட துவங்கினர். 3 நாட்கள் நீடித்த அந்த போராட்டத்திற்கு பிறகு, பாஜகவை சேர்ந்த மல்யுத்த வீராங்கனை பபிதா போகட் (வினேஷ் போகட்டின் சகோதரியும் ஆவார்) மத்தியஸ்தம் பேச வந்தார். அதன் பின் ஜனவரி 23ம் தேதி, விளையாட்டுத் துறை அமைச்சகம் இதற்கென குத்துச் சண்டை வீரர் மேரிகோம் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தது. விசாரணை முடியும் வரை பூஷன் சிங் கூட்டமைப்பு தலைவர் பொறுப்பிலிருந்து விலகியிருப்பார் எனவும் உத்தரவாதமளித்து அக்குழு. அதை ஏற்றுக்கொண்டு போராட்டத்தை ஒத்தி வைத்தனர் மல்யுத்த வீராங்கனைகள்.

மல்யுத்த வீராங்கனைகள் மீதான பிரிஜ் பூஷன் சிங்கின் வன்கொடுமைகள்  

இவன் தொடர்ச்சியாக பல பெண் வீரர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தாலும், 7 பெண் வீரர்கள் மட்டுமே தற்போது துணிந்து வந்து தங்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். அதில் 12 வயதுடைய சிறுமியும் ஒருவர். குழந்தையை கூட விட்டுவைக்காத இந்த கேவலமான மிருகத்தைதான் கூட்டமைப்பின் தலைவராக நீட்டிக்க வைத்துள்ளது பாஜக அரசு. இவன் பெண் வீரர்களை மூச்சு பயிற்சி என்ற பெயரில் தேர்வு செய்வதில் தொடங்கி, பயிற்சியின் போதும், போட்டிகளின் போதும் கூட பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். தனது பாலியல் அத்துமீறல்களை பொறுத்துக் கொண்டால் விளையாடுவதற்கான ஊட்டச்சத்துப் பொருட்கள் வாங்கி தருவதாகவும், இல்லையென்றால் கிடைக்காது என்றும் மிரட்டியுள்ளான். பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்ட் என கூட்டமைப்பின் பலரும் இவனின் பாலியல் வன்கொடுமைகளுக்கு துணை நின்றுள்ளனர். அந்த நாய்களும் தன் இச்சையை காட்டியுள்ளன. இது வீரர்களிடையே உடல்ரீதியான சோர்வு மட்டுமல்லாமல் அவர்களுக்கு தாங்க முடியாத மன அழுத்தத்தையும் கொடுத்துள்ளது. பாலியல் வன்கொடுமைகளோடு மட்டுமில்லாமல் வீரர்களுக்கு பெண் பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்ட அடிப்படையான தேவைகள் எதையும் நிறைவேற்றி கொடுக்காமல் அவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை அபகரித்துள்ளான். இது போன்ற வன்கொடுமைகளுக்கு நீதி கேட்டுத்தான் வீராங்கனைகள் போராட்டத்தை ஜனவரியில் துவங்கினர்.

மல்யுத்த வீராங்கனைகளின் தொடர் போராட்டம்

4 வாரங்களுக்குள் விசாரணை குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று உறுதி வழங்கப்பட்ட நிலையில், காலம் தாமதித்து ஏப்ரல் முதல் வாரத்தில்தான் அறிக்கையை அவர்கள் சமர்ப்பித்தனர். அதன் பின்னர் அந்தக் குழுவும் கலைக்கப்பட்டது. ஆனால், அவர்கள் சமர்ப்பித்த அறிக்கை வெளியிடப்படவுமில்லை, பூஷன் சிங் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவுமில்லை. குழு உத்தரவாதமளித்தபடி அவன் தற்காலிகமாக கூட கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்படவுமில்லை. இந்த ஏமாற்றுப் போக்கை கண்டு மனம் வெதும்பிய வீராங்கனைகள் மீண்டும் ஏப்ரல் 21ம் தேதி டெல்லி காவல் துறையிடம் புகார் அளிக்க முயன்றனர். அவர்களின் புகாரை ஏற்காமல் எஃப்.ஐ.ஆர் கூட பதிவுசெய்ய மறுத்து விட்டது போலீஸ். இதையடுத்து, மீண்டும் ஜந்தர் மந்தரில் அவர்கள் போராட்டத்தை தொடங்கியதோடு உச்ச நீதிமன்றத்திலும் அவசர வழக்கை பதிவு செய்தனர். உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலுக்கு பின்னே எஃப்.ஐ.ஆரை கூட பதிவு செய்தது டெல்லி காவல்துறை. இதில் சிறுமியின் மீதான பாலியல் வன்கொடுமையும் சேர்ந்திருப்பதால் போக்சோ குற்றப் பிரிவுகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

அதன் பின்னரும் கூட பூஷன் சிங் கைது செய்யப்படவில்லை. போக்சோ குற்றப்பிரிவில் வழக்கு தொடரப்பட்டால் குற்றவாளி விசாரணையின்றியே கைது செய்யப்படலாம் என சட்டம் வழிகாட்டினாலும் அதை மயிரென நினைத்து இந்த மோடி அரசு கொடூர குற்றவாளி பூஷன் சிங்கை பாதுகாக்கிறது. மல்யுத்த வீராங்கனைகளுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிகளுக்கு எதிராகத்தான் அவர்கள் ஜந்தர் மந்தர் பகுதியில் வெயிலிலும் மழையிலும் தொடர் போராட்டத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் அமைதியான போராட்டத்தை ஒடுக்க பல்வேறு வழிகளில் இடர்பாடுகளை தொடர்ச்சியாக ஏற்படுத்தியும் வந்துள்ளது. ஊடக தொடர்பை துண்டித்தது; மின்சாரம் துண்டிப்பு, இண்டெர்நெட் துண்டிப்பு, உணவு வழங்க வரும் வாகனங்களை மறிப்பது; ஏன் குடிநீர் சப்ளையையும் கூட தடுத்து நிறுத்த முயற்சி மேற்கொண்டது பாஜக அரசு. இத்தனை இன்னல்களையும் தாண்டிதான் மெழுகுவர்த்தி ஏந்தி நீதிக்காகப் போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக மல்யுத்த வீரர்களும் நீரஜ் சோப்ரா, அபினவ் பிந்த்ரா, சானியா மிர்சா, கபில்தேவ், கும்ப்ளே, சேவாக் உள்ளிட்ட பிற விளையாட்டு வீரர்களும் குரல் கொடுத்தனர். சர்வதேச ஒலிம்பிக் ஆணையம் கூட தலையிட்டு இந்த பிரச்சனையில் முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்திய மல்யுத்த கூட்டமைப்பை அங்கீகரிக்க மாட்டோம் என்று கூறியும் இது எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் பிரிஜ் பூஷன் சிங் என்ற தனிநபரை பாதுகாத்து வருகிறது மோடி அரசு.

சாவர்க்கரின் கொடுங்கோல் மன்றம்           

பிரிஜ் பூஷன் சிங் போன்ற நபர்கள்தான் பாஜகவின் அரசியல் வார்ப்புகள்.  பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வதை அரசியல் ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என்றான் சாவர்க்கர். அவனுடைய அரசியல் வாரிசுகள் அதை இன்று கூச்ச நாச்சமின்றி பெருமிதத்தோடு செய்து வருகின்றன. அதனடிப்படையில்தான் பல்வேறு கொலை, கொள்ளை, கலவரச் செயல்களில் ஈடுபட்ட பூஷன் சிங்கை மடாதிபதிகளுடன் சேர்த்து புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவிற்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது. சாவர்க்கரின் இந்து ராஜ்ஜிய கனவை நிலைநாட்டவே அவனது பிறந்தநாளில் இதை திறந்துள்ளது. 'பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ' என ஒருபுறம் பெண் குழந்தைகளின் நலனில் அக்கறைக் கொண்டுள்ள அரசாக காட்டிக் கொள்ளும் இந்த மோடி கும்பல்தான் அவர்களின் மீது தமது பாலியல் ஒடுக்குமுறை அரசியலை அப்பட்டமாக ஏவி வருகிறது. இதன் மூலம் புதிய நாடாளுமன்றத்தில் சாவர்க்கரின் பிற்போக்கு கொடுங்கோலை நிறுவியுள்ளது.       

போராடிய வீராங்கனைகள் மீது மோடி அரசின் பாசிச அடக்குமுறை           

பாஜக அரசின் இந்தப் போக்குகளை கண்டு வெகுண்டெழுந்த மல்யுத்த வீராங்கனைகள் மே 28 அன்று காலை ஜந்தர் மந்தரில் இருந்து 1.5 கி.மீ. தொலைவில் உள்ள புதிய நாடாளுமடத்தை நோக்கி அணிவகுக்க முயற்சித்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி சாலையில் தரத்தரவென்று இழுத்துச் சென்றும் தாக்குதல் நடத்தியும் கைது செய்தது. அப்போது அவர்கள் மூவர்ண தேசியக் கொடியை கையிலேந்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எதற்கெடுத்தாலும் தேசபக்தி பாடமெடுக்கும் இந்த மோடி அரசுதான் தன் தாய் நாட்டிற்காக ஒலிம்பிக், காமன்வெல்த் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அரங்குகளில் பதக்கம் வென்ற வீராங்கனைகளின் குரல்வளையை தனது பூட்ஸ் காலால் நெரித்துள்ளது.

பாஜகவை சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ் அஸ்தானா, "அவர்கள் எங்களுக்கு குப்பைகள் போல என்றும் தேவைப்பட்டால் துப்பாக்கிச்சூடும் நடத்துவோம்" என கொக்கரித்தான். இரத்த வெறி கொண்ட அந்த ஏவல் நாயை கண்டிக்கும் விதமாக வீரர் பஜ்ரங் பூனியா, "சுடுவதென்றால் முதுகில் சுடாதே, இதோ என் மார்பு" என்று எழுச்சியூட்டினார். அடக்குமுறைக்கு ஆளான வீராங்கனைகள் பலரும், நாட்டின் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மோடி அரசின் இந்த அடக்குமுறை கேள்விக்குறியாக்குவதாகவும் தெரிவித்தனர். ஒரு பாலியல் கயவன் இந்த நாட்டின் ஆட்சிப் பீடத்தில் ராஜ வரவேற்புடன் உலா வரும் அதே வேளையில் அவனால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் உள்பட 700க்கும் மேற்பட்ட வீரர்களும் வீராங்கனைகளும் இந்த அரசால் தாக்குதல் தொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 147, 149, 186, 188, 332, 353 ஆகிய இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளில் கலவரத்தில் ஈடுபட்டதாக பொய்வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் அவர்களின் கூடாரங்களை அப்புறப்படுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் யாரைம் நுழைய விடாமல் போலீசையும் துணை இராணுவப் படையையும் குவித்துள்ளது. 

இதற்கிடையே, பேருந்தில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்ட மல்யுத்த வீராங்கனைகள் சிரித்துக் கொண்டிருப்பதைப் போன்ற ஒரு போலியான புகைப்படத்தை சித்தரித்து வெளியிட்டன சங்பரிவார கும்பல். "இதைச் செய்பவர்களுக்கு வெட்கமே இல்லை. இது மாதிரியான ஆட்களை கடவுள் எப்படி படைத்தார்? மனமுடைந்து நிற்கும் பெண்களின் முகத்தில் சிரிப்பை ஒட்டுகிறார்கள். இவர்களுக்கு இதயமே இல்லை" என்று இவர்களின் கேடுகெட்டச் செயலைக் கண்டு குமுறியுள்ளார் சாக்ஷி மாலிக். 

ஆதரவாக களமிறங்கிய விவசாயிகள்           

அரசின் இந்த பாசிச அடக்குமுறையால் நம்பிக்கையிழந்த வீராங்கனைகள் தங்கள் பதக்கங்களை கங்கையில் வீசியெறியப் போவதாக அறிவித்தனர். ஹரித்துவார் நோக்கிச் சென்ற வீராங்கனைகளை சந்தித்து பதக்கங்களை வீசியெறிய வேண்டாம் என அறிவுறுத்தியதோடு அவர்களிடம் அப்பதக்கங்களை பெற்றுக் கொண்டனர். வீராங்கனைகளின் போராட்டத்திற்கு துணைநிற்கப் போவதாகவும் அறிவித்தனர். நடக்கவிருக்கும் மகா பஞ்சாயத்துகளில் இப்பிரச்சனையை கிளப்ப இருப்பதாகவும் தெரிவித்து விவசாயிகளும் இப்போராட்டத்தில் கைக் கோர்த்துள்ளனர்.           

வீராங்கனைகளின் (மல்)யுத்தம் தொடரட்டும்

இந்திய மக்கள் தொகையில் பாதி எண்ணிக்கையிலுள்ள அனைத்து வர்க்கங்களிலுமுள்ள பெண்கள் மீது ஆணாதிக்க வெறி ஏவப்படுகிறது.  ஒடுக்கப்படும் உழைக்கும் வர்க்கத்தில் உள்ள பெண்கள் அனைத்து விதமான அடிமைத்தளையிலும் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள் உழைப்பு முதல் உடல் வரை அனைத்தும் இந்த சமூகத்தால் சுரண்டப்படுகிறது. தனிச் சொத்துடைமை ஒழிக்கப்படும் வரை, ஆணாதிக்கமும் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளும் ஒழியப்போவதில்லை. இம்மண்ணில் சோசலிசம் மலரும்போதுதான் எல்லா அரங்குகளிலும் பெண்களும் சமத்துவம் பெற முடியும். அந்த பாதையின் இடைக்கட்டமாக பாட்டாளி வர்க்க தலைமையில் பெண்கள் உள்ளிட்ட ஒடுக்கப்படும் அனைத்து வர்க்கங்களையும் உள்ளடக்கிய புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணி வகுப்பதே பெண்கள் தங்கள் மீதான ஒடுக்குமுறைகளிலிருந்து வெளியேற தீர்வாக அமையும்.

டெல்லியில் போராடும் வீராங்கனைகள் பல்வேறு வர்க்கத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்றவர்கள் என்பதால்தான் அவர்கள் மீதான நாட்டின் ஒட்டுமொத்த கவனமும் இன்று குவிந்துள்ளது. அதே வேளையில் இந்தியாவில் மூன்றில் ஒரு பெண்கள் நித்தம் நித்தம் உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிராக இந்த குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இந்துத்துவ பாசிச மோடி ஆட்சியில் இசுலாமிய பெண்களும், தாழ்த்தப்பட்ட பெண்களும் கும்பல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

எனவே போராடும் வீராங்கனைகள் தங்களது கோரிக்கைகளான பூஜன் சிங் தண்டிக்கப்பட வேண்டும்; தற்போதுள்ள மல்யுத்த கூட்டமைப்பை கலைத்து புதியதொன்றை அமைக்க வேண்டும்; தங்கள் மீதான பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பனவற்றோடு மட்டும் நின்றுவிடாமல் அனைத்து பெண்கள் மீதும் வன்முறையை ஏவும் மக்கள் விரோத இந்தப் பிற்போக்கு பாசிச ஆட்சிக்கு முடிவு கட்ட அணிதிரள வேண்டும். சாவர்க்கர் வாரிசுகளின் (செங்)கோலை வெட்டியெறிய வேண்டும்.

- சமரன்

ஜூன் மாத இதழ்