2023 பட்ஜெட்: கார்ப்பரேட்களுக்கு அமிர்த காலம்! மக்களுக்கோ ஆலகால விசம்

சமரன்

2023 பட்ஜெட்: கார்ப்பரேட்களுக்கு அமிர்த காலம்! மக்களுக்கோ ஆலகால விசம்

மத்தியில் ஆளும் இந்துத்துவ பாசிச மோடி அரசு அடுத்த 25 ஆண்டுகள் அமிர்தகாலம் என்கிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இவ்வாண்டுக்கான (2023-24) பட்ஜெட் உரையில் இது அமிர்தகாலத்தின் முதல் பட்ஜெட் என்கிறார். உண்மையில் அமிர்தகாலம்தான்! ஆனால் அது யாருக்கு என்பதை பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு விவரங்களே நமக்குத் தெளிவாக காட்டுகின்றன. இந்த பட்ஜெட் அமெரிக்க புதிய காலனிய அரசியல்-பொருளாதார நலன்களுக்கு சேவை செய்யும் இராணுவ பட்ஜெட்டாகவும், பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சிக்கு உதவிடும் அமிர்தகால பட்ஜெட்டாகவும் உள்ளது. கொரோனா, உக்ரைன் போர் இவற்றுக்குப் பின்னால் உலக முதலாளித்துவ பொது நெருக்கடி ஆழமடைந்துள்ளது. சிலிக்கான் வேலி வங்கி, லெஹ்மேன் பிரதர்ஸ் வங்கி உள்ளிட்ட அமெரிக்காவின் வங்கிகளே திவாலடைந்துவருவது உள்ளிட்ட பல செய்திகள் தினந்தோறும் உலக பொருளாதரா பொதுநெருக்கடியை பிரதிபலித்து வருகின்றன. இந்த நெருக்கடிகளுக்கு இந்திய உழைக்கும் மக்களை காவு கொடுக்கும் பட்ஜெட்டாகவே இந்தாண்டின் பட்ஜெட்டும் தீட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புதிய காலனிய நலன்களுக்கு சேவை செய்யும் திட்டங்களுக்கு நிதிஒதுக்கீடு

அமெரிக்காவின் மாபெரும் மறுகட்டமைப்பு திட்டத்திற்கு சேவை செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட கதிசக்தி திட்டம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களான பாரத்மாலா, சாகர்மாலா, உதான் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளே இந்த பட்ஜெட்டில் பெரும் பங்கினை பிடித்துள்ளதை அட்டவணை ஒன்றில் பார்க்கலாம். ரயில்வே, மெட்ரோ ரயில் திட்டங்கள், தூய்மை இந்தியா போன்றவற்றின் நிதி ஒதுக்கீடுகள் சென்ற ஆண்டை விட அதிகரித்துள்ளது. ரயில்வேத் துறையை முழுவதுமாக தனியார்மயமாக்கும் நோக்கில் - தனியார் அரசு பங்கேற்பு எனும் பெயரில், தனியாருக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கித் தருவது. இந்த நிதியில் பெரும்பகுதி சரக்கு போக்குவரத்திற்காகதான் ஒதுக்கப்படவுள்ளது. சீனாவுக்கு எதிராக சரக்கை கையாளும் முக்கிய ஆசிய நாடாக இந்தியாவை முன்னிறுத்தும் நோக்கிலேயே அமெரிக்கா இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது, அதைத்தான் கதிசக்தி திட்டம் மூலம் இந்தியா நிறைவேற்றுகிறது. அதுதான் இந்த பட்ஜெட்டிலும் வெளிப்பட்டுள்ளது. ரயில்வே துறை, துறைமுகங்கள், சாலை கட்டமைப்புகள், விமான நிலையங்கள் போன்ற கட்டமைப்புகளை உருவாக்கி பன்னாட்டு நிறுவனங்களின் சரக்குகளை கையாளும் வசதிகளை உருவாக்கி தருவதே இந்த உள்கட்டமைப்பு திட்டங்களின் நோக்கம். மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியிலும் பெரும்பகுதி இந்த திட்டங்களுக்கே செலவிடப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன்தான் வழங்குகிறது. பட்ஜெட்டில் கடைசி மைல் வரை சேவை என்கிறது, அதாவது கனிம வளங்கள் சுரண்டப்படும் இடத்திலிருந்து அது சென்றடைய வேண்டிய இடம் வரையிலும், இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் அது சென்றைடைய வேண்டிய கடைகோடி பகுதி வரை உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே. வந்தேபாரத் ரயில்கள், மெட்ரோ ரயில்கள், 8வழிச் சாலை, பசுமைவழிச் சாலை மூலம் போக்குவரத்துகளை துரிதப்படுத்துவது போன்ற திட்டங்களும் உள்நாட்டு கார்ப்பரேட்கள் லாபமடையும் நோக்கிலே உருவாக்கப் படுகின்றன. இதன் மூலம் மக்களின் அடிப்படை பயணங்களுக்கு அவர்கள் தனியார் மயத்தையே முழுவதும் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கே தள்ளப் படுகின்றனர். அரசின் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவையே டாட்டா கார்ப்பரேட் நிறுவனத்திடம் விற்றுவிட்டபின் உதான் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் விமான நிலையங்கள் யார் நலன்களுக்காக உருவாக்கப்படுகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். அந்நிறுவனம் ஸ்பெயினைச் சார்ந்த ஏர்பஸ் டிபென்ஸ் மற்றும் அமெரிக்க போயிங் நிறுவனங்களுடன் 80பில்லியன் டாலர் மதிப்பீட்டில் விமான மற்றும் போர் விமான ஒப்பந்தங்களை செய்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. குடிநீரை தனியார் மயமாக்கும் கட்டமைப்புகளை உருவாக்கி சூயெஸ் போன்ற பகாசுர நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் ஜல்ஜீவன் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அட்டவணை -1: பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருக்கும் துறைகள்

    துறைகள்

நிதி ஒதுக்கீடு 2023-24 (கோடியில்)

நிதி ஒதுக்கீடு 2022-23 (கோடியில்

அதிகரிப்பு (கோடியில்)

ராணுவம்

5,94,000

5,25,000

69,000

மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி

18,62,874

17,10,828

1,52,046

மூலதன முதலீடுகளுக்கான செலவு

10,00,961

7,28,274

2,72,687

ரயில்வே

2,40,0000

1,40,000

1,00,000

மெட்ரோ ரயில் திட்டங்கள்

19,518

15,629

3,889

மின்சார வாகன உற்பத்தி

5,172

2,898

2,274

ஜல் ஜீவன் திட்டம்

70,000

55,000

15,000

தூய்மை இந்தியா திட்டம்

12,192

7,000

5,192

மருத்துவ உள்கட்டமைப்பு

4,200

1,885

2,335

 

குவாட் திட்டங்களுக்கு சேவை செய்ய நிதி ஒதுக்கீடு

சீனாவை சுற்றிவளைக்கும் (Pivot China) திட்டத்தின் அங்கமான 'ஆசிய நேட்டோ' என்றழைக்கப்படும் குவாட் திட்டத்திற்கும், அமெரிக்காவுடனான 4 அடிப்படை பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கும் சேவை செய்ய இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறையை பென்டகனின் இந்திய கிளையாக மாற்றி வருவதை நாம் ஏற்கனவே பல்வேறு கட்டுரைகளில் பார்த்தோம். அத்திட்டங்களுக்கு சேவை செய்யும் வகையிலேயே ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கு தொடர்ச்சியாக ஜிடிபியில் பெரும் பங்கினை ஒதுக்கிவருவதோடு இந்தாண்டு பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கீடை அதிகரித்துள்ளது. 24000கோடி மதிப்பீட்டில் தாக்குதல் ட்ரோன்களை அமெரிக்காவிடமிருந்து கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்ட ஒப்பந்தம் விரைவில் இறுதிசெய்யப்படவுள்ளது. குவாட் கூட்டமைப்பின் பசுமை ஆற்றல் திட்டங்களுக்கு சேவை செய்யும் வகையிலேயே மின்சார வாகன உற்பத்திக்கான மத்திய அரசின் நிதியை அதிகரித்துள்ளது. மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதிகளின் பெரும்பகுதியும் கூட இத்திட்டங்களுக்கே திருப்பிவிடப்படுகின்றன. மாநில அரசு பழைய வாகனங்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நிபந்தனைகளுடனே இந்த நிதியும் ஒதுக்கப்படுகிறது. அந்த வகையிலேயே திமுக அரசானது, அரசு போக்குவரத்துத் துறைகளை தனியார்மயமாக்கி வருகிறது. மருத்துவ கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதும் தனியார் மயமாக்கலுக்கே பயன்படவுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை, மாநில அரசு செலவினங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என முகஸ்டாலின் பேசியுள்ளதே, மத்திய அரசானது மாநில அரசு நிதி ஒதுக்கீடு மூலமாக எத்திட்டங்களை நிறைவேற்ற துடிக்கிறது என்பது விளங்கும். இவை அமெரிக்க ஏகாதிபத்திய புதிய காலனிய நலன்களுக்கும் - அம்பானி, அதானி, டாட்டா போன்ற கார்ப்பரேட்களுக்கும் என்பது தெள்ளத் தெளிவு. அதனால்தான் அமெரிக்க அதிபர் ஜோபடனும் இந்திய தரகுமுதலாளிகளின் நலன்களுக்கான கூட்டமைப்பான FICCI ஐயும் இந்த அமிர்தகால பட்ஜெட்டை விதந்தோதி வரவேற்றுள்ளனர்.

கார்ப்பரேட்களை காக்க மூலதன முதலீடுக்கான நிதி ஒதுக்கீடு

உக்ரைன் போராலும் அதைத்தொடர்ந்து ஆழமடையும் சர்வதேச முரண்பாடுகளால் சில பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்களும் குறிப்பிட்ட சரிவை சந்தித்து வருகின்றனர். ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பின் சரிந்திருக்கும் அதானியின் வளர்ச்சியே இதில் ஒன்றாகும். இவர்களை எப்பாடு பட்டாவது காப்பற்ற வேண்டிய அவசியத்தில் மோடி அரசு உள்ளது. இந்த நோக்கிலேயே மூலதன முதலீடுகளுக்கு என்றும் அவர்களுக்கு கடன்களை மேலும் வாரி வழங்கவும் 10லட்சம் கோடிகளுக்கு மேல் நிதியை ஒதுக்கியுள்ளது. ஏற்கனவே இதே மதிப்புடைய தொகையை கடந்த 5 ஆண்டுகளில் இவர்களுக்கு (வாராக்கடன்கள் என அறிவித்து) தள்ளுபடியும் செய்துள்ளது. இது போதாதென்று கார்ப்பரேட்டுகளுக்கான சர்சார்ஜ், செஸ் வரிகளை 37% சதவிகிதத்திலிருந்து 25% சதவிகிதமாக குறைத்துள்ளது. இவ்வாறு பல வழிகளில் கார்ப்பரேட்டுகளை உலக பொருளாதார நெருக்கடியிலிந்து காப்பாற்ற முயன்று வருகிறது இந்த மோடி அரசு.

மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு குழிபறிப்பு

உணவு, உடை, இருப்பிடம், சுகாதாரம், கல்வி போன்ற இன்றிமையாத தேவைகளுக்கு நிதி ஒதுக்கீட்டை தொடர்ச்சியாக குறைத்து வருகிறது இந்த கார்ப்ப்ரேட் நல அரசு. இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் அதை மேலும் குறைத்துள்ளதை அட்டவணை 2 ல் பார்க்கலாம். (சுமார் 7% அதிகரித்திருக்கும் பண வீக்கத்தையும் - சுமார் 8.5% சரிந்திருக்கும் டாலருக்கெதிரான இந்திய ரூபாய் மதிப்பையும் கணக்கில் கொண்டால் ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியின் மதிப்பு இன்னும் குறைவு என்பதையும் கணக்கில் கொள்க). மக்களின் அடிப்படை நலத்திட்டங்களுக்கான நிதியை பாதியாக வெட்டியுள்ளது. விவசாயம் சார்ந்த மானியங்களையும், ரேஷன், பெட்ரோல், கேஸ் உள்ளிட்ட எரிவாயுகளுக்கான மானியங்களையும் குறைத்துள்ளது. விவசாயிகளுக்கு பிஎம் கிசன் திட்டம் மானியம் மூலம் ஆண்டிற்கு வழங்கப்படும் ரூ.6000 நிதியை ரூ.8000 ஆக உயர்த்துவதாக பொய்ப் பிரச்சாரம் செய்த மோடி அரசு அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் குறைத்துள்ளது. அதே போல கார்ப்பரேட் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட வேளாண் சட்டங்களினால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதை மூடிமறைக்க விளைபொருட்களுக்கான ஆதாரவிலையில் சந்தை குறுக்கீடு பாதிப்பிற்கான திட்டம் (மார்க்கெட் இன்டர்வென்ஷன் ஸ்கீம்) சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. சென்ற ஆண்டு இதற்கு ஒதுக்கப்பட்ட 1500 கோடியை தற்போது முழுமையாக ரத்து செய்துள்ளது. பெயருக்கு வெறும் 1 லட்ச ரூபாய் ஒதுக்கியுள்ளது. விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போவதாக பேசும் அரசு அதற்கு மாறாக அவர்களின் வாழ்வாதாரத்தை பறித்து வருகிறது. உர மானியங்களின் பெரும்பகுதியும் கார்ப்பரேட் விவசாயத்திற்கே பயனளிக்கிறது. இந்த பட்ஜெட் நடுத்தர விவசாயிகளை பால்டாயிலை குடிக்கும் நிலைக்கு தள்ளுகிறது. கிராமப்புற விவசாய கூலிகளின் கொந்தளிப்பு நிலையையும் பட்டினிச்சாவுகளையும் குறைக்க உருவாக்கப்பட்ட தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமான மன்ரேகா (MNREGA) எனப்படும் 100நாள் வேலைத்திட்டத்திற்கு நிதியில் மூன்றில் ஒரு பங்கு குறைத்துள்ளது. நூறு நாட்களுக்கான வேலைக்கு தேவைப்படும் நிதி 2,72,000 கோடியாக கணக்கிடப்பட்டிருந்த நிலையில், வெறும் 60,000 கோடி என்பது 25 நாட்களுக்கு கூட பற்றாது. ஏற்கனவே இத்திட்டத்தில் சம்பளம் நிலுவையில் உள்ளது. இவ்வாறு விவசாயத்துறையையும் விவசாயிகளையும் இந்த அரசு ஒழித்துக்கட்டி வருகிறது.  

அட்டவணை -2: பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருக்கும் துறைகள்

துறைகள்

நிதி ஒதுக்கீடு 2023-24 (கோடியில்)

நிதி ஒதுக்கீடு 2022-23 (கோடியில்

குறைப்பு (கோடியில்)

நலத்திட்ட உதவிகள்

2,34,359

4,76,105

2,41,746

உணவு, உரம், பெட்ரோல் மானியம்

3,74,707

5,21,585

1,46,878

விவசாயம்

1,44,214

1,51,521

7,307

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்

60,000

89,400

29,400

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம்

13,625

15,500

1,875

பிஎம் கிஷன் திட்டம்

60,000

68,000

8,000

வேளாண் அபிவிருத்தி திட்டம்

7,115

10,398

3,283

விவசாயிகளுக்கான – மார்க்கெட் இண்டர்வென்ஷன் திட்டம்

0.01

1500

1500

மதிய உணவு திட்டம்

11,000

12,800

1,800

சுகாதார இயக்கம்

36,785

37,800

1,015

கேஸ் மானியம்

2287

5813

3,526

சிறுபான்மையினர் நலன்களுக்கு

2612

5000

2,388

PM சுவஸ்தியா சுரக்‌ஷா யோஜனா

3365

10,000

6,635

 

  

ஏற்கனவே போதிய ஆம்புலன்ஸ், படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட மருத்துவ வசதியின்மையால் அவதியுறும் மக்களுக்கு இந்தாண்டு பட்ஜெட்டிலும் மருத்துவ காப்பீடு மற்றும் சுகாதார இயக்கத்திற்கான நிதியை மேலும் வெட்டியுள்ளது. மருத்துவ கட்டமைப்பு வசதிக்காக நிதியை உயர்த்தியிருப்பது என்பதானது தனியார்மயமாக்கல் நலனிலிருந்து மட்டுமேயொழிய கிராமப்புற மருத்துவ கட்டமைப்பிற்காக அல்ல. கல்வியை முற்றிலும் தனியார்மயமாக்கி - கல்வி வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு தன்னை விடுவித்து கொண்டு வரும் சூழலில் இந்தாண்டில் கல்விக்கான நிதியில் எவ்வித அதிகரிப்புமில்லை. ஒதுக்கப்பட்டுள்ள நிதியும் பன்னாட்டு பல்கலைக்கழகங்களும் கார்ப்பரேட் கல்வி கொள்ளைக்குமே பயன்படப்போகிறது. ஏழை எளிய மாணவர்களிடமிருந்து கல்வியைப் பறித்து கூலிவேலைக்கு அனுப்பவுள்ளது. மாணவர்கள் ஏற்கனவே ஊட்டச்சத்து குறைபாட்டுடன் அவதியுறும் நிலையில் மதிய உணவுத் திட்டதிற்கான நிதியையும் குறைத்துள்ளது. மோடி அரசாங்கத்தின் சிறுபான்மை மக்கள் விரோத, பெண்கள் விரோத, தாழ்த்தப்பட்ட மக்கள் விரோத, பழங்குடியினர் விரோத அணுகுமுறையை, இந்த பட்ஜெட்டிலும் தெளிவாகப் பார்க்க முடிகிறது. சிறுபான்மையினர் வளர்ச்சிக்கான பல திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் 66% சதவிகிதம் வெட்டப்பட்டிருக்கின்றன. மகப்பேறு மருத்துவத் திட்டத்திற்கான ஒதுக்கீடு 40.15 கோடி ரூபாய் வெட்டப்பட்டிருக்கிறது.

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டையும் பெரும் கார்ப்பரேட்டுகளையும் புகுத்திய பின் சிறிய நடுத்தர வணிகர்கள் ஓட்டாண்டிகளாகியுள்ளனர். சிறு வணிகர்களை ஊக்குவிக்கும் நோக்கில் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும், வணிகர்கள் நலத் திட்டங்களை இந்த அரசு உருவாக்கித் தர வேண்டும் என கோரி வருகின்றனர். ஆனால் இந்த பட்ஜெட்டில் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் ஏதுமில்லை. நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் சிறு குறு தொழில்களுக்கு இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருக்கும் 9000கோடியையும் கூட பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களே தங்களது துணை நிறுவனங்கள் மூலம் கைப்பற்றுகின்றன. இதனால் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு என்பதே இல்லாமல் நசிந்து வருகின்றன. மூலதன முதலீட்டில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு என ஒதுக்கப்படும் நிதி பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் துணை நிறுவனங்களுக்கு (Sister concern) மட்டுமே பயன்படும் வகையில் கம்பெனிகளுக்கான சட்டங்கள் ஏற்கனவே திருத்தியமைக்கப்பட்டுவிட்டன. சிறுகுறு தொழில்களை இந்த பட்ஜெட்டும் தன்பங்கிற்கு மேலும் நசுக்குகிறது.   

இந்தியாவிலும் எதிரொலிக்கும் உலக பொருளாதார நெருக்கடி

"உலக சந்தையில் நிச்சயமற்ற தன்மையை இந்தியா உட்பட எந்த நாட்டாலும் தவிர்க்க முடியவில்லை. எனவே உலக பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை நாம் தீர்மானித்திருக்கிறோம். ஆகையால்தான் கடந்த நிதியாண்டில் (2022-23) இந்தியா ஜிடிபியில் 6.8% வரை வளர்ச்சி பெற்றுள்ளோம்" என பட்ஜெட் உரையில் தம்பட்டமடிக்கிறார் நிர்மலா சீதாராமன். உண்மையில் கொரோனா கால கட்டத்தில் அடைந்த வீழ்ச்சியையே இன்னும் எட்டவில்லை, குறைந்தபட்சம் 16% ஜிடிபியில் வளர்ந்திருக்க வேண்டும், அப்போதுதான் கொரோனா காலகட்ட வீழ்ச்சியை ஈடுகட்டியிருக்க முடியும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்குமான பற்றாக்குறை அதிகரித்துள்ளது; நாட்டை அந்நிய முதலீடுகளுக்கு அகல திறந்துவிட்டும் அந்நிய முதலீடுகள் குறைந்து வருகிறது; கடன் அதிகரித்துக் கொண்டே செல்கிறது; பணவீக்கம் மற்றும் டாலருக்கெதிரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி இவற்றுடன் ஜிடிபியை ஒப்பிடுகையில் இந்தியா பொருளாதார நெருக்கடியை நோக்கிச் செல்வதையே காட்டுகிறது. உலக பொருளாதார நெருக்கடிக்கு இந்தியாவிலும் மிக மோசமான பாதிப்புகளையே ஏற்படுத்தியுள்ளது. ஏற்பட்டிருக்கும் இந்த குறைவான வளர்ச்சி கூட மக்களை ஒட்டச் சுரண்டி கொழுத்ததால் - உக்ரைன் போரினால் எண்ணெய் வர்த்தகம் உள்ளிட்டவற்றில் குறிப்பிட்ட அளவு லாபமடைந்த இந்திய கார்ப்பரேட்களின் அபார வளர்ச்சியையே காட்டுகிறது. மக்களிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு முன்னிலும் அதிகரித்துள்ளது.

நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பை அபகரிக்கும் பட்ஜெட்

வருமான வரி செலுத்துவோரில் பெரும்பகுதியினர் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த 40% மக்கள் தொகையை சார்ந்தவர்களே. அவர்களே தன்னுடைய எதிர்கால நலன்களுக்காக எல்.ஐ.சி, தங்கம், வங்கி டெபாசிட்டுகள், ப்ராவிடண்ட் பண்டுகள், வீடுகள் அதற்கான கடன்கள் மூலம் சேமிப்பில் ஈடுபடகின்றனர். அவர்களின் சேமிப்பிற்கும் வேட்டு வைத்துள்ளது இந்த பட்ஜெட். வருமானவரிக்கான வரம்பை ரூ.7 லட்சமாக உயர்த்தி விட்டதாக ஏமாற்றுகிறது. ஆனால் வருமான வரியில் புதிய முறைகளை (new regime tax) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. அதுவே இப்போது முன்தேர்வுசெய்யப்பட்ட (Default) முறையாக இருக்கும் என இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. பழைய முறைகளில் வருமான வரி (old regime tax) செலுத்த விரும்புவோர் பிரத்யேகமாக கோரிக்கை விடுக்க வேண்டுமாம். பழைய முறையில் சேமிப்புகளுக்கும் கடன்களுக்கும் வரிச்சலுகை கொடுக்கப்பட்டிருந்தது. புதிய முறையில் கடன்களுக்கும் சேமிப்புகளுக்கும் வருமானத்தில் வரிச் சலுகை கிடையாது. ஏற்கனவே ரெப்போ ரேட் அதிகரிப்பால் கடன்களுக்கான வட்டி விகிதமும் அதிகரித்திருக்கும் நிலையில் இந்த புதிய வரி விதிப்பு முறை அவர்களின் வருமானத்தில் குறிப்பிட்ட பங்கை சூறையாடுகிறது. ஆண்டிற்கு 3லட்சத்திற்கு மேல் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை எவ்வித சேமிப்பின்றி ஊதாரித்தனமாக செலவு செய்திருக்க வேண்டும் என்கிறது. அப்போதுதான் வரிச்சலுகை என்கிறது (பொதுச்சொத்துக்களை விற்றுப் பணமாக்கும்) இந்த ஊதாரி அரசு. கூடவே தங்கத்திற்கான வரியையும் உயர்த்தியுள்ளது. இது தங்கத்தை பதுக்கி வைத்திருக்கும் கருப்புபண ஆசாமிகளுக்கு கொள்ளை லாபத்தைக் கொடுக்கிறது. சேமிப்புக்காக தங்கம் வாங்க நினைக்கும் நடுத்தர வர்க்கத்தினரை சுரங்கத்தில் அடக்கம் செய்கிறது.

ஏழைகளை சூறையாடும் மறைமுக வரிகள்

45,03,097 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த பட்ஜெட்டில் வரிவருவாயாக 54% சதவிகிதம் மட்டுமே கிடைக்கும். மீதமுள்ள நிதிப் பற்றாக்குறையை கடன்கள் மூலமாக திரட்டவுள்ளதாக கூறியுள்ளது. அதில் கடன் பத்திரங்கள் மூலமும் பணமாக்கல் திட்டத்தின் மூலமும் 17,98,603 கோடி ரூபாயும் வெளிநாட்டு கடன் மூலம் 22,118 கோடியும் பெற்று கடன் சுமையை ஏற்றிக் கொள்ள உள்ளது. மொத்த பட்ஜெட் செலவினத்தில் 20% சதவிகிதத்தை கடன்களுக்கான வட்டிக்காக மட்டும் செலுத்துவதுதான் கொடுமையிலும் கொடுமை. அச்சுமைகள் அனைத்தையும் ஏழை எளிய நடுத்தர மக்களின் தலையில்தான் சுமத்தவுள்ளது. இந்த வரிவருவாயிலும் பெரும்பகுதி இவர்களிடமிருந்தே சுரண்டப்படுகிறது. பொருளாதார அளவில் கீழ்மட்டத்தில் உள்ள 50 சதவீத மக்கள், மேல்மட்ட 10 சதவீதத்துடன் ஒப்பிடும்போது மறைமுக வரிவிதிப்புக்கு ஆறு மடங்கு அதிகமாக ஆளாகின்றனர் என்றும் உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களில் இருந்து வசூலிக்கப்படும் மொத்த வரியில் 64.3 சதவீதம் கீழுள்ள 50 சதவீதத்தில் இருந்து வருகிறது என்றும் மொத்த ஜிஎஸ்டியில் மூன்றில் இரண்டு பங்கு கீழ்மட்ட 50 சதவீத மக்களிடமிருந்தும் நடுத்தர 40 சதவீத மக்களிடமிருந்து மூன்றில் ஒரு பங்கும் மேல்மட்ட 10 சதவீத பணக்காரர்களிடமிருந்து 3-4% சதவீதம் மட்டுமே பெறப்படுகிறது என்றும் ஆக்ஸ்பாம் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் கார்ப்பரேட்களுக்கு சேவை செய்யும் வகையில் சர்ஜார்ஜ் மற்றும் செஸ் வரிகளை 12%சதவிகிதமளவிற்கு குறைத்துள்ளது. அதுவும் முறையாக வசூலிக்கப்படுவதில்லை. அது போதாதென்று கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 10.09 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது.  ஏழைகளின் மீதான மறைமுக வரிகளை மட்டும் அதிகரித்துள்ளது இந்த கேடுகெட்ட மோடி அரசு.

அதிகரிக்கும் பட்டினி - வேலையின்மை

இந்தியாவில் பில்லியனர்களின் எண்ணிக்கை கடந்தாண்டில் 102லிருந்து 166 ஆக உயர்ந்துள்ளது. அவர்களின் சொத்து மதிப்பு 54.12லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதில் முதல் 10 பில்லியனர்களின் சொத்துமட்டும் 27.52லட்சம் கோடியாக உள்ளது.கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் 33% சதவிகிதம் உயர்ந்துள்ளது. இவர்களின் சொத்து மதிப்பை வைத்தே 2 ஆண்டுகள் வரை இந்தியாவின் நிதிநிலையை ஈடுகட்டு முடியும். அதானியின் விற்பனை செய்யப்படாத பங்கை (1.79லட்சம் கோடி ரூபாய்) வைத்து மட்டுமே 50லட்சம் பள்ளி ஆசிரியர்களை பணிக்கமர்த்தி சம்பளம் கொடுக்க முடியும். இந்த 166 பெரும்பணக்காரர்களின் மொத்த சொத்துகளின்மீது ஒருமுறை 2 சதவிகிதம் வரி விதித்தால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கத் தேவையான நிதியை (அதாவது ஆண்டிற்கு 40,423 கோடி ரூபாய்) பெறமுடியும். முதல் 10 பெரும்பணக்காரர்களுக்கு ஒருமுறை 5 சதவிகித வரி விதித்தால், 2022 - 2023 ஆம் ஆண்டில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (86,200 கோடி ரூபாய்) மற்றும் ஆயுஸ் அமைச்சகம் (3,050 கோடி ரூபாய்) ஆகியவற்றின் தேவையை விட ஒன்றரை மடங்கு அதிக நிதி கிடைக்கும்" என்று ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கை கூறுகிறது. ஆனால் இதையெல்லாம் செய்ய வக்கற்ற மோடி அரசு மக்களை பட்டினிக் கொடுமைகளிலும் வேலையின்மையிலும் தள்ளி வருகிறது.

பட்டினி பிரச்சனையைத் தீர்க்கவும். வேலையின்மையைத் தீர்க்கவும் இந்த பட்ஜெட்டில் எந்த திட்டங்களுமில்லை. பட்டினி, வேலையின்மை என்ற வார்த்தைகளை நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் பயன்படுத்தவில்லை என்கிறார் முன்னாள் காங்கிரஸ் நிதி அமைச்சர் ப.சிதம்பரம். மளிகைக்கடை பில் போல உள்ளது என்கிறார் பாஜக வின் சுப்ரமணிய சுவாமி. (கரடியே காரித் துப்பிய தருணம்!). ஆனால் 81கோடி மக்கள் ரேஷன் பொருட்களை நம்பி வாழுகின்றனர். 35 கோடி பேர் பட்டினியில் வாடுகின்றனர். இதில் 5வயதுக்குட்பட்ட இறக்கும் குழந்தைகளில் 65% சதவிகிதம் பேர் பட்டினியால் மட்டுமே இறக்கின்றனர் என்று மத்திய அரசே உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்துள்ளதாக ஆக்ஸ்பாம் கூறுகிறது. வேலையின்மை சதவிகிதம் வருடாவருடம் அதிகரித்தே வருகிறது. கடந்தாண்டு மட்டும் வேலையின்மையால் 13,417பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், 42,004 தினக்கூலிகள் போதிய வருமானமின்றியும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேப் போல் பிற சிறுகுறு தொழில் செய்பவர்களும், பெண்களும், விவசாயிகளும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஐடி துறையிலும் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை 'மன்னிக்கவும்' என்ற ஒற்றை வார்த்தையை கூறியே எவ்வித முன்னறிவிப்புமின்றி வீட்டிற்கு அனுப்பி வருகின்றன. இவ்வாறு பட்டினியும் வேலையின்மையும் மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த பட்ஜெட்டும் தொழிலாளார் விரோத - உழைக்கும் மக்கள் விரோத - விவசாயிகள் விரோத பட்ஜெட்டாகவே உள்ளது. ஆகவேதான் கூறுகிறோம் இந்த பட்ஜெட் கார்ப்பரேட்களுக்கு அமிர்தகாலம் ஆனால் மக்களுக்கோ ஆலகால விசம்.

"அந்நிய மூலதனத்தை மேலும் ஈர்ப்போம், அதன் மூலம் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வோம், இந்தியப் பொருளாதாரத்தை 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவோம்" என 2019ல் வாய்சவடால் அடித்த மோடி கும்பலால் இன்று ஏன் அதை நிறைவேற்ற முடியவில்லை. நாட்டை பட்டினிக் குறியீட்டில் 128வது இடத்திற்கு தள்ளியதைத் தவிர அவர்கள் செய்த சாதனைகள் என்ன?. அதேப் போல சென்ற வருடம் பணமாக்கல் திட்டம் மூலம் 13துறைகளை 6லட்சம் கோடிக்கு கார்ப்பரேட்டுகளுக்கு விற்று அதன் மூலம் நாட்டின் பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்கப் போவதாக கூறியதெல்லாம் என்னவாயிற்று. புதியகாலனிய - கார்ப்பரேட் நல அரசியல் பொருளாதார கொள்கைகள் எந்த நெருக்கடிகளையும் பிரச்சனைகளையும் தீர்க்கவியலாதது; அதை பின்பற்றும் இந்த மோடி அரசும் நெருக்கடிகளைத் தீர்க்க வக்கற்றதே. அதே அரசியல் பொருளாதார கொள்கைகளுக்கும் பாசிசத்திற்கும்தான் அமிர்த காலத்தின் முதல் பட்ஜெட்டும் சேவை செய்கிறது. எனவே இந்த பட்ஜெட்டை எதிர்த்துப் போராடுவதோடு அந்நிய நிதிமூலதன ஆதிக்கமில்லாத நாட்டின் சுதேசிய வளர்ச்சிக்காகவும் அதற்கு தடையாக இருக்கும் அடிமைத்தளைகளை உடைத்தெறியவும் போராட வேண்டும்.

- சமரன்
(மார்ச் -மே 2023 மாத இதழ்)