நாட்டை உலுக்கிய ஒரிசா ரயில் விபத்து: மோடி அரசே குற்றவாளி!
சமரன்
கடந்த 100 ஆண்டுகளில் நாட்டை உலுக்கிய மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக நிகழந்துள்ளது ஒரிசா ரயில் விபத்து. இந்த கோர சம்பவத்திற்கு காரணம் மோடி அரசும் அதன் புதிய காலனிய தனியார்மயக் கொள்கைகளுமே ஆகும்.
ஜீன் 2 ம் தேதி இரவு 7 மணியளவில் ஒரிசாவின் பாலசோர் மாவட்டத்திலுள்ள பஹாநகா பஜார் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட இந்த கோர சம்பவத்தில் சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளனர், 1000 பேர் படுகாயமடைந்துள்ளனர். திரும்பும் திசையெங்கும் இரத்தக் கறைகள், கை கால்களை இழந்து உயிருக்குப் போராடும் கதறல்கள், சிதைந்த உடலருகே மரண ஓலங்கள், தன் உறவுகளை கண்ணீரோடும் வெறுமையோடும் தேடிய கண்கள் என மனதிற்குள் ரணங்களை விதைக்கும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது அந்த கொடூர சம்பவம். சிதறிக் கிடக்கும் பொருட்கள் எதிர்கால கனவுகளையும், உறவுகளின் நேசத்தையும், காதலின் தவிப்புகளையும் வலியாக கடத்தி செல்கின்றன.
எவ்வாறு நிகழ்ந்தது இந்த கோர விபத்து?
கொல்கத்தா ஷாலிமரிலிந்து - சென்னை சென்ட்ரல் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும், பெங்களூர் யஸ்வந்த்பூரிலிருந்து - கொல்கத்தா ஹவுரா நோக்கி ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் எதிரெதிர் திசையில் வந்து கொண்டிருக்கின்றன. இவை இரண்டும் நிறுத்தமில்லாத பஹாநகா பஜார் ரயில் நிலையத்தை ஒன்றையொன்று கடக்க வேண்டும். இரண்டு இரயில்களும் எதிரெதிரில் வந்தாலும் இணையான வெவ்வேறு மெயின் டிராக்குகளில்தான் முழு வேகத்தில் (மணிக்கு சுமார் 130கிமீ) வந்துள்ளன. கோரமண்டல் எக்ஸ்பிரசுக்கு முன்பு சென்று கொண்டிருந்த ஒரு சரக்கு ரயில் பஹாநகா பஜார் ரயில் நிலையத்திலுள்ள லூப் டிராக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சரக்கு ரயிலுக்காக மாற்றப்பட்ட லூப் லைன் விலக்கப்படாமலே கோரமண்டல் ரயிலுக்கும் செல்ல பச்சை சிக்னல் விழுந்துள்ளது. இதனால் மெயின் டிராக்கில் நேராக செல்ல வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லூப் டிராக்கில் வழிமாற்றப்பட்டு அங்கு ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதால் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு கவிழ நேரிட்டது; அச்சமயத்தில் எதிர் திசையில் வேகமாக கடந்து கொண்டிருந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தடம்புரண்ட பெட்டிகள் மோதியதால் இரண்டு ரயில்களும் நிலைகுலைந்து போயின. இத்தலைமுறை சந்தித்திராத ஒரு கோர விபத்து நிகழ்ந்தது. இந்த இரண்டு ரயில்களிலும் இருக்கும் முன்பதிவில்லாத பொதுப் பெட்டிகளில் பயணித்தோரே அதிகளவில் காவு வாங்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணங்கள் என்ன?
இந்த கோர விபத்து நிகழ்ந்ததற்கு பின்னாலுள்ள மோடி அரசின் அரசியல்-பொருளாதார கொள்கைகளை பார்க்கும் முன் உடனடி காரணங்கள் என்ன என்பதை பார்ப்போம்:
1. இண்டெர்லாக்கிங் (Interlocking) எனப்படும் தானியங்கு தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட பழுது (failure). (இந்த தானியங்கு தொழில்நுட்பம்தான் ரயில்களுக்கு சிக்னல்கள் வழங்குவது, லூப் டிராக்குகளை மாற்றி விடுவது போன்ற வேலைகளை மனிதனின் வேலையை மிச்சப்படுத்தி செய்து வருகிறது. இதை ஸ்டேசன் மாஸ்டர் மேற்பார்வை மட்டும் செய்து கொள்வார்). இந்த தானியங்கு முறையில் ஏற்பட்ட பழுதால்தான் சிக்னல் குளறுபடி ஏற்பட்டு விபத்து நிகழ்ந்தது. இது குறித்து 3 மாதங்களுக்கு முன்பே கூட எச்சரிக்கப்பட்டும் கூட அரசு இதில் அலட்சியம் காட்டியுள்ளது.
2. காலத்தை கடந்து தேய்ந்தும் மாற்றப்படாத தண்டவாளங்கள் - இந்தியாவிலுள்ள பெரும்பாலான இருப்பு பாதைகளிலுள்ள தண்டவாளங்கள் தாங்குதிறனுக்கு அதிகமான இரட்டை தேய்மானத்தை கடந்தும் மாற்றப்படாமலேயே உள்ளன. இதுவே ரயில்கள் எளிதில் தடம் புரள்வதற்கு காரணமாக அமைகிறது.
3. ரயில் மோதல்களை தடுக்க கொண்டுவரப்பட்ட KAVACH எனப்படும் தானியங்கு நிறுத்த அமைப்பு (Auto-breaking system) நிறுவப்படாமலே இருப்பது - 2012ம் ஆண்டிலேயே, இந்திய ரயில்வே, "Train Collision Avoidance System (TCAS)" எனும் மோதல் தடுப்பு அமைப்பை உருவாக்கியது. மோடி அரசு, ஆட்சிக்கு வந்த பிறகு, அதை KAvach (கவசம்) என்று பெயர்மாற்றம் செய்தது. இது வை-ஃபை (Wi-fi) நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்ட கருவிகளால் இயங்குகிறது. ஒரே வழித்தடத்தில் இரண்டு ரயில்கள் வந்தால் ஓட்டுநருக்கு எச்சரிக்கை கொடுப்பதோடு, ரயில்களை 400மீ தொலைவுக்கு அப்பாலேயே தானாக நிறுத்தி மோதலை தவிர்த்துவிடும். இது இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எளிமையானது மற்றும் செலவு குறைவானதே ஆகும். இந்திய இரயில்வேயின் மொத்த இருப்புப்பாதையான 68,000 கி.மீ.ல் வெறும் 1,400 கி.மீ.க்கு மட்டுமே கவாச் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இது வெறும் 2% மட்டுமே. மீதமுள்ள 98% பாதைகளுக்கு இன்றுவரை மோதல் தடுப்பு அமைப்புகள் நிறுவப்படவே இல்லை. அதேப் போல, மொத்தமுள்ள 13,000 ரயில் எஞ்சின்களில் வெறும் 65 ரயில் எஞ்சின்களில் மட்டுமே அந்த கவாச் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் அதிக ரயில்கள் இயங்கும் வழித்தடங்களிலாவது நிறுவப்பட்டிருந்தால் இவ்விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும்.
4. பாதுகாப்பு குறைபாடுள்ள பயணிகள் ரயில் பெட்டிகள் - அதிகபட்சமாக 72பேர் பயணம் செய்யக்கூடிய முன்பதிவில்லாத பொது பெட்டிகளில் 300க்கும் மேற்பட்டோர் நெரிசலில் சுவாசிக்க முடியாமல், நிற்க கூட இடமில்லாமல் படிகளில் தொங்கி கொண்டே நெடுந்தூரம் பயணிக்கும் அவலநிலை. இது ரயில் விபத்திற்குள்ளாகும்போது எளிதில் தடம் புரள்வதற்கு வாய்ப்பாக அமைவதோடு உயிரிழப்புகளையும் அதிகரிக்கிறது.
5. போதிய ஓய்வின்றி 12 மணி நேரத்திற்கும் மேல் உழைப்பு உறிஞ்சப்படும் ரயில்வே ஓட்டுநர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் - இந்திய ரயில்வேயில் 3.25 லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்பபடாமலேயே உள்ளது. இதனால் ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டு ஏற்கனவே வேலையில் இருக்கும் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. இவர்கள் நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் வரைகூட ஓய்வின்றி உழைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இவையே ஒரிசாவில் நிகழ்ந்துள்ள கோர விபத்திற்கு உடனடி காரணங்களாக அமைந்துள்ளன.
தனியார்மயமாக்கலின் கோரமுகம்
ரயில்வேதுறையை தனியார்மயமாக்கும் வேலை 2013ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிகாலத்திலேயே தொடங்கப்பட்டிருந்தாலும், 2014க்குப் பிறகு ஆட்சிக்கு வந்த பாஜக ஆட்சி அதை வேகமாக நிறைவேற்றியது. 2016ம் ஆண்டில் ரயில்வேக்கு என இருந்த தனி பட்ஜெட்டை ஒழித்துக் கட்டியது. அதன் மீதான திட்டமிடல் சார்ந்த நாடாளுமன்ற விவாதங்களை நீக்கி ரயில்வேயை முழுமையாக தனியார்மயமாக்கி வருகிறது. ரயில்வேதுறையில் மக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்ட மானியங்களை நிறுத்தி அவற்றை ரயில்வே கார்ப்பரேட்களுக்கு வாரி வழங்கியுள்ளது. தனியார் மயமக்கும் நோக்கோடு ஆண்டுக்கு ஆண்டுக்கு ரயில்வேக்கு ஒதுக்கப்படும் நிதியை குறைத்தே வந்தது. ஒதுக்கப்படும் நிதியையையும் கார்ப்பரேட் நலன்களுக்கான சரக்கு வர்த்தக சேவைகளுக்கும், லாபத்தை மட்டும் குறிக்கோளாக கொண்ட வந்தேபாரத் அதிவேக ரயில்களுக்கும், அவைகளுக்குத் தேவையான கட்டுமானங்களை உருவாக்குவதற்கும் மட்டுமே ஒதுக்கியது. இவை அமெரிக்காவின் மாபெரும் மறுகட்டமைப்பு திட்டங்களுக்கான சேவையின் பகுதியே ஆகும். உழைக்கும் மக்களும் பெரும்பான்மையான சாமனிய மக்களும் பயன்பெறும் வகையில் இருந்த போக்குவரத்து ரயில் தடங்களையும் ரயில்களின் எண்ணிக்கையையும் குறைத்து அவற்றை பாதுகாப்பற்ற விரைவு ரயில்களாக மாற்றின. உரிய பாதுகாப்பு கட்டமைப்புகள் ஏதும் உருவாக்கப்படாமல் ரயில்களின் வேகங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ரயில்வே துறை சார்பில் மூன்று மாதங்களுக்கு முன்னரே, தலைமை கணக்குத் தணிக்கையர் (CAG) மூலம் ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 1200 தடம் புரள்வுகள் நிகழ்ந்துள்ளன என்றும், பழுதுப்பார்க்கப்பட வேண்டிய இண்டெர்லாக்கிங் சிக்னல் அமைப்புகள் குறித்தும், மேம்படுத்தப்பட வேண்டிய பாதைகள் குறித்தும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதையெல்லாம் அலட்சியப்படுத்திதான், இந்த நிதியாண்டில் மட்டும் ரயில்வே டிராக்குகளை மேம்படுத்துவதற்கான நிதியை 14% சதவிகிதம் வரை குறைத்துள்ளது. ஆனால் மறுபக்கம் 2.5லட்சம் கோடி நிதியை ரயில்வேயில் தனியார்மய நலன்களுக்காக ஒதுக்கியுள்ளது. இவை பெரும்பாலும் சீனாவின் தெற்காசிய மேலாதிக்கத்திற்கு எதிராக இந்தியாவை முன்னிறுத்தும் அமெரிக்காவின் திட்டங்களுக்கு சேவை செய்யவே அனுமதிக்கப்படுகின்றன. (கப்பல், விமானம், ரயில் மூலம் சரக்குகளை கையாள்வதில் சீனாவுக்கு போட்டியாக இந்தியாவை மாற்றும் திட்டங்களே அவை).
மேலும், தேசிய பணமாக்கல் திட்டம் மூலம் 500 ரயில் நிலையங்கள், 150 ரயில்கள், 109 முக்கிய ரயில்பாதைகள் மற்றும் ரயில்வேக்கு சொந்தமான 4.77 ஹெக்டேர் மைதானங்கள் உள்ளிட்டவற்றை தனியாருக்கு 35 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம் பராமரிக்கும் இயக்கும் பொறுப்பிலிருந்து நழுவிக் கொண்டுள்ளது அரசு. பாம்பார்டியர், அல்ஸ்டோம், சீமன்ஸ், என்.ஐ.ஐ.எஃப், ஜி.எம்.ஆர்., ஐஸ்கொயர்டு கேப்பிட்டல் உள்ளிட்ட 23 பன்னாட்டு பகாசுர கார்ப்பரேட்டுகளுக்கு இவற்றை தாரை வார்த்து வருகிறது. கார்ப்பரேட்டுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வழித்தடங்கள் அனைத்தும் மக்கள் அதிகம் பயணிக்கும் நெரிசல் மிகு போக்குவரத்து கொண்டவை. எப்போது வண்டி இயக்குவது, எந்தெந்த நிறுத்தங்களில் நிறுத்தலாம், எவ்வளவு விலை நிர்ணயிக்கலாம் என்பதை அவர்கள் சுதந்திரமாக முடிவு செய்து கொள்ளலாம். அவற்றில் அரசு தலையிடாது. ஆனால் அவர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளை அரசு மக்களின் வரிப்பணத்தில் இருந்து பல்லாயிரம் கோடி செலவில் உருவாக்கித் தர வேண்டும். அதை அவர்கள் சொற்ப தொகைக்கு குத்தகைக்கு எடுத்து மக்களை சுரண்டி கொழுத்து கொள்ளை லாபத்தை அள்ளி செல்வர். இதனால் ரயில் பயணங்களை பெரிதும் நம்பியிருக்கும் உழைக்கும் மக்களுக்கு தேவையான சேவைகள் மெல்ல பறிக்கப்பட்டு வணிக நோக்கில் மேல்தட்டு மக்களுக்கான நுகர்வாக மட்டும் ரயில்வேத்துறை மாற்றப்படும். ஏற்கனவே 1500 ரயில் சேவைகளை நிறுத்தியுள்ளது. கேண்டின், ரயில்நிலைய பராமரிப்பு, கட்டுமானங்கள், எஞ்சின் உற்பத்தி என அனைத்தும் தனியாருக்கு மெல்ல லெல்ல தாரை வார்க்கப்பட்டுவிட்டது. இது ஒருபக்கம் கொத்தடிமை முறையில் ஊழியர்களை சுரண்டுவதை அதிகப்படுத்தியுள்ளது. மறுபக்கம் வழித்தடங்களையும் பயணங்களையும் அபயகரமாக்குவது போன்றவற்றையும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே பிரிட்டன், பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்திய நாடுகளில் கூட ரயில் தனியார்மயம் பெருத்த விபத்துக்களை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அதையெல்லாம் கணக்கில் கொள்ளாத மோடி அரசு நவீனமயமாக்கல் எனும் பெயரில் ரயில்வேயை முழுவதுமாக தனியார் மயமாக்கி வருகிறது.
மோடி ஆட்சியின் நவீனமாக்கல் எனும்பெயரில் தனியார்மய ஊழல்களின் விளைவே இந்த இண்டெர்லாக் தானியங்கு சிக்னல் முறைகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதற்கும், தண்டவாளங்கள் மாற்றப்படாமல் இருப்பதற்கும் காரணம். வந்தே பாரத் ரயில்கள் மாட்டின் மோதி சேதமடைந்ததே இவர்களின் உற்பத்தியின் தரத்தை அம்பலப்படுத்தியது. கார்ப்பரேட் நலன்களுக்கான சரக்கு போக்குவரத்திற்கென்று தனியாக இருப்புப் பாதைகள் அமைக்கப்படாமல் ஏற்கனவே அளவுக்கு அதிகமாக தேய்மானத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் பாதைகளையே அனுமதித்துள்ளது. இவ்வாறும் ஊழலில் திளைக்கின்றது மோடி அரசு.
நாட்டில் நிலவும் புதியகாலனிய உற்பத்தி முறையால், உற்பத்தி ஒருபுறம் ஒன்றுகுவிக்கப்படுகிறது, மறுபுறம் விவசாயம் உள்ளிட்ட சிறுகுறு தொழில்கள் அழிந்து மக்கள் அலைந்து திரிந்து வேலை தேடி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனாலேயே மேற்கு வங்கத்திலிருந்தும், ஒரிசாவிலிருந்தும், பீகாரிலிருந்தும் உழைக்கும் மக்கள் பிழைப்புக்காக பெரிய நகரங்களை நோக்கி குவியும் நிலை ஏற்படுகிறது. அதனாலேயே, ரயில்களிலும் அவர்கள் போதிய இருக்கையின்றி மந்தையைப் போல ஏற்றி செல்லப்படுகின்றனர். இதேப் போன்ற நிலையை தமிழகத்தில் தென்மாவட்டங்களிலிருந்து சென்னையை நோக்கி பயணிக்கும் ரயில்களிலும் காணலாம். நாட்டில் உள்ள 80% சதவிகித உழைக்கும் மக்களின் பயணங்களுக்கு, ரயில்களில் வெறும் 2பெட்டிகள் மட்டுமே ஒதுக்கி அவர்களை தொடர்ச்சியாக வஞ்சித்து வருகிறது. மக்களின் அத்தியாவசிய பயணங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கி அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த வக்கற்ற மோடி அரசு பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்களின் நலன்களுக்கு அவற்றை தாரை வார்ப்பதன் விளைவே இந்த கொடூர சம்பவங்கள்.
எல்லாம் சரியாக இருந்தாலும் விபத்து ஏற்படாத என சிலர் கேள்வி எழுப்பலாம். அவை எதிர்பாராத விதமாக சில நேரங்களில் ஏற்படலாம். அதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவாகவே இருக்கும். ஆனால் தனியார்மய கோரத்தால் விபத்தின்றி பயணிப்பது என்பதற்கான நிகழ்தகவே (Probability) குறைவாக உள்ளது. விபத்து நிகழ்வதற்கான அத்தனை சாத்தியக் கூறுகளையும் அவை உற்பத்தி செய்கின்றன. விபத்துகளை இவை தங்களின் லாப நலன்களுக்காக திட்டமிட்டே உருவாக்குகின்றன. மனித உயிர்களை துச்சமென மதிக்கின்றன. எனவே தனியார்மயத்தை ஒழிக்காமல் விபத்துகளை தடுக்கவே முடியாது.
விபத்திற்கு பின்னரும் மீட்பு பணிகளில் அலட்சியம்
விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை உடனடியாக போர்கால அடிப்படையில் உடனடியாக மீட்டு மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை. மக்களின் போராட்டங்களை ஒடுக்க துணை இராணுவ படையினரை உடனடியாக குவிக்கும் அரசு, அவசரகால மருத்துவ முகாம்களையோ, இராணுவ ஹெலிகாப்டர் உள்ளிட்ட விமானங்களையோ பயன்படுத்தாமல், போதிய ஆம்புலன்சுகள் இன்றி உயிருக்குப் போராடிய பலரை கொன்றுள்ளது. ஏன்? ரயில் பெட்டிகளில் முதலுதவி பெட்டிக் கூட பொருத்தப்படவில்லை என விபத்தில் சிக்கிய பெண் ஒருவர் காறி உமிழ்கிறார். இறந்தவர்களின் உடல்களை முறையாக எடுத்துச் செல்லாமல் குப்பைப் பொட்டலங்களை ஏற்றுவது போல் வண்டிகளில் வீசி குவித்து ஏற்றிச் செல்கின்றனர். அவர் இறந்தாரா உயிருடன்தான் உள்ளாரா என்று பரிசோதனைக் கூட செய்யாமல் வீசினர். அப்படி பிணங்களுக்குள் சிக்கிய ஒருவரைதான் அவரது தந்தை போராடித் தேடி மீட்டுள்ளார். எவ்வளவு கொடுமை! இன்னும் அடையாளம் காண முடியாத நூற்றுக்கணக்கான உடல்களை குப்பைகளைப் போல குவித்து வைத்துள்ளது இந்த கொடூர அரசு.
சதிவேலையில் ஈடுபட்டது மோடிகும்பலே!
ஒருபுறம், இந்த விபத்திற்கு காரணமான தனியார்மயத்தை ஒழிக்காமல், இந்த விபத்தையே ரயில்வேதுறையை முழுமையாக தனியார்மயமாக்க காரணமாக பயன்படுத்துகிறது - ரயில்வே ஊழியர்கள் அனைவரும் இடஒதுக்கீட்டால் வேலையில் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களின் திறனின்மையே இது போன்ற விபத்துகளுக்கு காரணம் என்றும் தனியார் மயமாக்கினால்தான் இவை நிகழாது என்றும் அவதூறு பிரச்சாரங்களை தொடங்கிவிட்டுள்ளன மோடி அரசும் சங்பரிவாரங்களும். விபத்து நடந்த பகுதியில் உழைக்கும் மக்கள் மதவேறுபாடின்றி மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இரத்தத்தானம் வழங்க குவிந்தனர். அதை சீர்குலைக்கும் விதமாக, இந்த ரயில் விபத்தில் ஏதோ சதி இருப்பதாக கூறி கலவரத்தைத் தூண்ட எத்தனிக்கிறது.
விபத்து நிகழ்ந்த மறுநாள் சம்பவ இடத்திற்கு வந்த மோடி இதற்கு காரணமானவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள், யாரும் தப்ப முடியாது என்றார். இரண்டு நாட்களில் விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைத்துள்ளது. ரயில் விபத்து குறித்து பொதுவாக ரயில்வே பாதுகாப்பு ஆணையம்தான் விசாரணை நடத்தும், ஆனால் தற்போது அதற்கு முன்னரே வழக்கை சிபிஐயிடம் கொடுத்துள்ளது மோடி அரசு. மேலும் வழக்கு பயணிக்க வேண்டிய கோணங்களையும் கொடுத்துள்ளது. பின்வரும் சதிகள் இருப்பதாக பொய்யான பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளது சங்பரிவார கும்பல்:
1. இண்டெர்லாக்கிங் முறையில் யாரோ ஊடுருவி (hack செய்து) சிக்னலில் குளறுபடி ஏற்படுத்தியுள்ளனர், அவர்கள் இசுலாமியர்கள், தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் என்ற வதந்திகளை பரப்பியது;
2. விபத்து நடந்த ரயில்நிலைய மாஸ்டர் ஒரு இசுலாமியர், இந்த விபத்தில் ரயில்வே ஊழியர்களுக்கும் பங்கு உள்ளது என்றும் பொய்யை பரப்பியது;
3. விபத்து நிகழந்த இடத்திற்கு அருகில் ரோஹிங்யா இசுலாமியர்கள் அதிகமாக வாழ்வதாகும், அவர்களின் மசூதி ஒன்று இருப்பதாகவும் ஒரு வெட்டி சித்தரிக்கப்பட்ட படத்தை பரப்பியது - அங்கு இருப்பது ஒரு ஜெயின் கோவில் என்பதை உண்மையான படங்கள் இவர்களின் மோசடிகளை அம்பலப்படுத்தின.
ஏற்கனவே குஜராத் கலவரத்தின் போது பிணங்களை வைத்து கலவரத்தை தூண்டி ஓர் இனப்படுகொலையை அரங்கேற்றியது. மீண்டும் அப்படியொரு மோசமான வரலாற்றை உருவாக்க முயற்சிக்கிறது இந்த கேடுகெட்ட கும்பல். வரும் தேர்தலில் இந்த விபத்து ஒரு பின்னடைவை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதற்காக இதையும் தனது மதவெறி அரசியலுக்கு எவ்வாறு பயன்படுத்தி வெற்றிக் கொள்ளலாம் என நரித்தனமாக திட்டமிடுகிறது பாஜக அரசு.
6 மாதங்களுக்கு முன் குஜராத் மோர்பி பாலத்தில் சுமார் 150 பேரை பலிக் கொண்டது, தற்போது ஒரிசா ரயில் விபத்தில் 300 பேரை பலிக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்த 2 நாட்களில் பீகாரில் கங்கை ஆற்றின் மீதமைந்த மிகப்பெரிய பாலம் சீட்டுக்கட்டைப் போல சரிந்து விழுந்துள்ளது. நல்ல வேளையாக அது இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இல்லையென்றால் அதுவும் நூற்றுக் கணக்காணோரை பலி வாங்கியிருக்கும். எனவே மோடி அரசே இக்கோர விபத்தின் முதன்மை குற்றவாளி. இதோடு மட்டுமில்லாமல் தான் பின்பற்றும் தனியார்மய தாராளமயக் கொள்கைகளால் தினம் தினம் உழைக்கும் மக்களையும், விவசாயிகளையும், மாணவர்களையும், வேலையில்லாத் திண்டாட்டத்தில் இளைஞர்களையும் கொன்று குவித்து வருகிறது. தன் ஆட்சியின் தோல்வியையையும் கையாலாகாத்தனத்தையும் மூடிமறைக்க நெருக்கடிகளை மேலும் மக்கள் மீது சுமத்த பாசிசத்தை எல்லா அரங்குகளிலும் அரங்கேற்றி வருகிறது. இந்த பாசிச கும்பலை வங்கக்கடலில் வீசியெறியாமல் கோரமெண்டல் கோர விபத்துக்களை தடுக்க முடியாது.
- சமரன்
(ஜூன் 2023 மாத இதழ்)