ராமராஜ்ஜியம் அமைப்பதில் பாஜகவும் காங்கிரசும் ஒன்றே!

சமரன்

ராமராஜ்ஜியம் அமைப்பதில் பாஜகவும் காங்கிரசும் ஒன்றே!

அமெரிக்காவுக்கு சேவை செய்யும்
ராமராஜ்ஜியம் அமைப்பதில் பாஜகவும் காங்கிரசும் ஒன்றே!

ஆளும் மோடி அரசு நாட்டின் அனைத்து துறைகளில் தோல்வியடைந்து வருகிறது. நாட்டில் விலைவாசி உயர்வு, வறுமை, வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது. வரலாறு காணாத ஊழலில் திளைக்கிறது. அதானி, அம்பானிகளுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் நாட்டை கூறுபோட்டு விற்கிறது. நெருக்கடியின் சுமைகள் மக்கள் மீது சுமத்தப்படுவதை மூடிமறைக்க மக்களை சாதி, மதவெறிகளில் ஆழ்த்தி வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்து மதவெறியூட்டி பெரும்பான்மை இந்துக்களை வாக்குவங்கியாக மாற்றும் நோக்கில் இந்த மாதம் 22ம் தேதி ராமர் கோவிலை திறக்கவுள்ளது. சொல்லொண்ணா துயரத்தில் மக்கள் அல்லலுறும்போது 80,000 கோடி ரூபாயை ராமர் கோவில் மற்றும் அயோத்தி மேம்பாடு திட்டங்களுக்கு ஒதுக்கியுள்ளது. ராமர் கோவிலின் கட்டுமான பணிகள் முழுமையடையாத நிலையில் முகப்பை மட்டும் சரி செய்து அவசர அவசரமாக விழா எடுக்கவுள்ளது. இதில் கலந்து கொள்ள மோடியின் அமெரிக்கா விசா தடைக்கு எதிராக வாதாடிய அமெரிக்க மருத்துவர் உள்ளிட்ட ஏகாதிபத்திய ஏஜெண்டுகள், நிதியாதிக்க கும்பல், உலகம் முழுவதும் வலைபின்னலை கொண்டுள்ள இந்துமதவெறியர்கள் என மோடியின் எஜமானர்களும் விசிவாசிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.     

இந்நிலையில் ராமர் கோவில் திறப்புவிழாவிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களும் பாஜக அரசால் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சி தனது பங்கேற்பை உறுதி செய்துள்ளது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. பல ஆண்டுகளாக இந்துமதவாதத்தை காரியவாதமாக கடைபிடித்து வந்த காங்கிரஸ் கட்சி தற்போது சில ஆண்டுகளாக நேரடியாகவே இந்துத்துவா ஆதரவு நிலைபாட்டை கடைபிடித்து வருகிறது. நாடு முழுவதும் நடைபெற்று வரும் இசுலாமியர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல்களை பெயரளவுக்கு கூட கண்டிக்கவில்லை. மாறாக தன்னையும் பாஜகவுக்கு இணையான இந்துமத காவலானாக நிரூபிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பெரும்பான்மை இந்துக்களின் ஓட்டுகளை குறிவைத்தே பாஜகவின் மாபாதக செயல்களில் தானும் துணை நிற்கிறது.

பாபர் மசூதி பிரச்சனையில் காங்கிரஸ் இசுலாமியர்களுக்கு இழைத்த துரோகம்

இந்துவாக வாழ்வது எனும் ஆர்.எஸ்.எஸ்.-ன் ‘நவீன இந்துத்துவத்தையும்’ காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி தீர்மானமாக நிறைவேற்றி, அதை ஏற்றுக்கொண்டே இன்று வரை செயல்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ் கும்பலால் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, காங்கிரசிலிருந்து விலகிய "நேரு சோசலிசவாதியான" ஆச்சார்யா நரேந்திர தேவ் உள்ளிட்ட 13 உறுப்பினர்கள் சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்யவே, 1948ல் அயோத்தியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆச்சார்யாவை வீழ்த்த காங்கிரசு கட்சி இந்து மகா சபையின் உதவியை நாடியது. அப்போது இந்துமக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த இந்து மகாசபையின் பாபா ராகவ் தாஸ் என்பவரை உ.பியின் (காங்கிரசு) முதல்வர் கோவிந்த் வல்லபாய் பந்த் வேட்பாளராக நிறுத்தினார். அயோத்தியாவில் கோவில் கட்டுவதை தேர்தல் பிரச்சனையாக முன்வைத்து 'ஆச்சார்யாவிற்கு ராமர் கோவில் மீது நம்பிக்கை இல்லை' என்று தனது தேர்தல் பிரச்சாரங்களில் முதல்வர் பந்த் கூறினார். காங்கிரசு வெற்றி பெற்றது. இவ்வாறு ராமர் கோவில் பிரச்சனையை தேர்தல் ஆதாயத்திற்காக காங்கிரசு கட்சியே முதன் முதலில் இந்து மகா சபை உதவியுடன் கையில் எடுத்தது. 

பாபா ராகவ் தாஸின் வெற்றி ராமர் கோவில் கட்டும் முயற்சியில் இந்து மகா சபைக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியது. 1949 ஜுலை மாதம் பீடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி கேட்டு உ.பி அரசுக்கு கடிதம் எழுதியது இந்து மகா சபை. அதையொட்டி ஆர்.எஸ்.எஸ் -ஐ சேர்ந்த ஆட்சியர் கே.கே.நாயர் "மசூதிக்கு வெளியே உள்ள இடம் ராமர் பிறந்த இடம்; எனவே அங்கு பிரமாண்டமான கோவில் கட்ட வேண்டும் என இந்துக்கள் விரும்புகின்றனர்; அங்கு கோவில் கட்ட அனுமதிப்பதில் எவ்வித பிரசனையும் இல்லை" என்று அறிக்கை அனுப்பினார். அதே ஆண்டு நவம்பர் 24ம் தேதியன்று நள்ளிரவில் பாபர் மசூதிக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து அங்கு ராமர், சீதை சிலைகளை வைத்துவிட்டு, தான் பிறந்த இடத்தை ராமர் தானே எடுத்துக் கொண்டார் என்று பிரச்சாரம் செய்தன சங்பரிவாரங்கள். அந்த குற்றச் செயலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக பாதிக்கப்பட்டவர்களுக்கே தண்டனை வழங்கும் விதமாக அதுவரை மசூதியை தொழுகைக்கு பயன்படுத்தி வந்த இசுலாமியர்களுக்கு, மசூதிக்குள் நுழைவதற்கு தடை விதித்தது நேருவின் காங்கிரஸ் அரசு. அதை சர்ச்சைக்குரிய நிலமாக அறிவித்தது. 1984 தேர்தலில் இந்துமதவெறியைப் பயன்படுத்துவது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தந்திரத்தின் அடிப்படையாக இருந்தது. அதே ஆண்டில் விஹெச்பி, “பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டுவோம்” என்று அறைகூவல் விடுத்தது; 1986ம் ஆண்டு ராமர் பூஜைக்காக மசூதியை திறக்காவிட்டால் பலவந்தமாக திறப்போம் என்றும் அறிக்கை விட்டது. இந்து மதவெறியர்களின் ஆதரவை பெறுவதற்காக, 35 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த பாபர் மசூதியின் கதவுகளை அவர்களுக்காக திறந்துவிட்டது ராஜீவ் அரசு.

அடுத்த 6 ஆண்டுகளில், 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரசு அரசின் ஒத்துழைப்புடன் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., விஹெச்பி, பஜ்ரங்தள், சிவசேனா உள்ளிட்ட இந்து மதவெறி குண்டர்படையால் இசுலாமியர்களின் மத அடையாளமாக விளங்கிய பாபர்மசூதி இடித்து நொறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ‘முஸ்லீம் ஜாவோ பாகிஸ்தான்’ என்ற வெறிகூச்சலோடு திட்டமிட்டு நாடு முழுவதும் கலவரங்களைத் தூண்டியது. இதில் 2000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கொள்ளையடித்தல், பெண்களை வன்புணர்வு செய்தல் போன்ற கொடூரங்களை நடத்தின. வாழ்விடங்கள் சூறையாடப்பட்டன. லட்சக்கணக்கானோர் உள்நாட்டு அகதிகளாக்கப்பட்டனர். இவை அனைத்தும் இராமனின் பெயரால் நிகழ்த்தப்பட்டன. இதுதான் புண்ணிய பூமியா? இந்த பிணக்குவியலின் மீது எழுப்பப்பட்டுள்ள ராமர் கோவிலில் வழிபடும்போது புனித உணர்வு சிறிதளவாவது எழுமா? என வயர் தளத்தில் தான் எழுதிய கட்டுரை மூலம் கேள்வி எழுப்புகிறார் அபூர்வானந்த். நிச்சயம் எழாது. அங்கு ஒலிக்கும் மணியோசையிலும், உச்சரிக்கும் மந்திரங்களிலும் லட்சக்கணக்கனோரின் மரண ஓலங்கள் அசரீரியாக செவிகளை பிளக்கும். காற்றில் பிணவாடையும், கோவில் பிரசாதத்தில் இரத்தவாடையும் கலந்து மரண பீதியூட்டும். ஆம் அது ஒரு மயான பூமி!

மசூதி இடிப்பு மற்றும் கலவரங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் காங்கிரஸ் ஆட்சிகாலம் முழுவதும் தண்டிக்கப்படவே இல்லை. அவர்களை காங்கிரசு அரசு பாதுகாத்தது. 2019ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி இந்துத்துவ பாசிசத்தின் கைக்கூலியாக செயல்பட்டு வரும் உச்சநீதிமன்றம், மசூதியை இடித்து தள்ளிய ஆர்.எஸ்.எஸ். – பாஜக கிரிமினல் கும்பலிடமே நிலத்தை ஒப்படைப்பதற்கான இறுதி தீர்ப்பை இசுலாமியர்களின் குருதி நிரம்பிய பேனாவால் எழுதியது. தானும் கரசேவையில் பங்கெடுத்துக் கொண்டு இந்துராஜ்ஜியத்தை நிலைநாட்டியது. இதன்மூலம், நீதித்துறையின் ஜனநாயக வேஷங்கள் மீண்டுமொரு முறை கலைந்தது. இசுலாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக்கியது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து காங்கிரசோ – சிபிஎம் கட்சியோ கண்டனம் கூட தெரிவிக்கவில்லை, உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கருத்து கூற முடியாது என்றன. வேறொரு இடத்தில் இசுலாமியர்களுக்கு மசூதி கட்டித்தரப்படும் என்ற உச்ச நீதிமன்றத்தின் வாக்குறுதி குறித்தும், அது என்னவாயிற்று என்றும் கூட கேள்வி எழுப்பவில்லை.   எனவே இந்த பஞ்சமா பாதகங்கள் அனைத்தையும் - பாஜக, காங்கிரஸ் - இரண்டு ஆளும் வர்க்க கட்சிகளும் கூடிக் குலாவியே நிகழ்த்தின. அது ராமர் கோவில் திறப்பு நிகழ்விலும் தொடர்கிறது. 

பிரிட்டிஷின் காலனியாதிக்க கட்டத்தில் தொடங்கப்பட்ட இந்த பிரச்சினை இன்றைய அமெரிக்க புதிய காலனிய ஆதிக்கத்திற்கும் சேவை செய்கிறது.

காங்கிரசும் பாஜகவும் இந்திய பாசிசத்தின் இருமுகங்கள்

உலகம் முழுவதும் நிதிமூலதன நெருக்கடியின் சுமைகள் காலனிய நாடுகள் மீது சுமத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்க-நேட்டோ மற்றும் சீன-ரஷ்ய முகாம்களுக்கிடையே மறுபங்கீட்டிற்கான பனிப்போர் தீவிரமடைந்து வரும் சூழலில் மோடி அரசும் ராகுல்காந்தி கும்பலும் அமெரிக்க நிதிமூலதன கும்பலின் காலடியில் நாட்டின் இறையாண்மையை பலியிடுவதற்காக போட்டிபோடுகின்றன. நாற்காலியில் துண்டுபோட்டு இடம்பிடிக்க போட்டியிடுகின்றன. அதற்காக இசுலாமியர்களை நரபலி கொடுப்பதில் ஒன்றிணைந்து செயல்படுகின்றன; இந்துக்களில் உள்ள உழைக்கும் மக்களை பகடையாக்குகின்றன. அமெரிக்க மாமனே இவர்களின் ராமன்!

இவர்களின் கொடி மட்டுமே வேறு வேறு; இவர்களின் அரசியல்-பொருளாதார கொள்கைகள் ஒன்றேயாகும். ஆனால், இந்த “இரு கட்சிகளும் ஏதோ ஒரு கொள்கைப் போராட்டம் நடத்துவதுபோல், ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றன. இவை இரண்டிற்கும் இடையில் நடைபெறும் போராட்டம் எதிர் எதிரான நலன்களைக் கொண்ட வர்க்கங்களுக்கிடையில் நடைபெறும் ஒரு போராட்டமல்ல. ஆட்சி பிடிக்கும் சண்டையே. இவை இரண்டும் ஈருடலும் ஓர் உயிராய் இருப்பவை. சில நேரங்களில் ஊடும் சில நேரங்களில் கூடும். இவை இரண்டுமே ஊடுவதும் கூடுவதும் இவற்றின் அரசியல் வாழ்வின் வளர்ச்சியின் விதி. இவற்றிற்குள் நடக்கும் சண்டையைக் கண்டு நாம் ஏமாந்து போகக் கூடாது. காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி ஆகிய இரண்டின் லட்சியமும், கொள்கைகளும் ஒன்றுதான். கொடிதான் வெவ்வேறானது; காந்தியார் சொன்ன ‘இராம இராஜ்ஜியமும்’ கோல்வால்கர் சொன்ன ‘இந்து இராஜ்ஜியமும்’ அடிப்படையில் வெவ்வேறு நோக்கங்களைக் கொண்டவை அல்ல. இரண்டுமே ஏகாதிபத்திய இராமனின் செருப்பை வைத்துக் கொண்டு நாட்டை ஆளக் கூடியவைதான். இவை இரண்டுமே சிறிது வித்தியாசமான முறைகளைக் கையாண்டு ஒரு பாசிச ஆட்சியை அமைக்க முயல்கின்றன. பா.ஜ.க இந்து மதவெறியைத் தூண்டுவதின் மூலம் பாசிச ஆட்சியை அமைக்க முயல்கிறது. காங்கிரஸ் தேசிய ஒருமைப்பாடு பேசிப் பாசிச ஆட்சியை உருவாக்க முயலுகிறது. இரண்டுமே ஒரே வர்க்கம் பெற்றெடுத்த அமைப்புகள் ஆகையால் காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி ஆகிய இரண்டு பாசிசக் கட்சிகளும் மக்களின் எதிரிகளே” என்கிறார் ஏஎம்கே

(காங்கிரசும் பாரதிய ஜனதாவும் இந்தியப் பாசிசத்தின் இருமுகங்கள், பக் -33, சமரன் வெளியீடு)

ஏஎம்கேவின் இந்த கூற்று 30 ஆண்டுகளை கடந்த பின்னும் இன்றைய ராமன் கோவில் நிகழ்விலும் அப்படியே பொருந்தி போகிறது.

சிபிஎம் கட்சி இந்நிகழ்வில் பங்கேற்பதற்கான அழைப்பை நிராகரித்திருப்பது சரியான அம்சமே. இருப்பினும், பாதிக்கப்படும் இசுலாமியர்கள் பக்கம் உறுதியாக நிற்காமல் போலி மதச்சார்பின்மை பேசி காங்கிரசின் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இதன் மூலம் காங்கிரசு கும்பலின் இந்துமதவாதப் போக்குகளுக்கு நேரடியாகவும், பாஜகவின் பாசிச நடவடிக்கைகளுக்கு மறைமுகமாகவும் சாமரம் வீசுகின்றது. ஸ்டாலின் தலைமையிலான திமுக இது குறித்து எதுவும் பேசாமல் மௌனம் காக்கிறது. திமுக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ராமர் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோருக்கு ஏற்பாடுகள் செய்து தருவதாக பேசி வருகிறார். இதுதான் இக்கும்பலின் சமூகநீதி?!. அறிவாலய காவலர்களாக செயல்படும் - வர்க்கப் பார்வையற்ற சில எம்.எல். இயக்கத்தினர் காங்கிரசை ஆதரிப்பதன் பெயரில் ராமராஜ்ஜியத்திற்கு துணை நிற்கின்றனர். இந்த காங்கிரஸ் துரோக கும்பலைத்தான் பாஜகவுக்கு மாற்று என தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன; மக்களை ஏமாற்றுகின்றனர்.

ராமன் ஆர்.எஸ்.எஸ் கொலைபாதக கும்பலின் மூலவர்; ராமர் கோவில் ஓர் அநீதியின் சின்னம்; அது சிறிதளவும் புனித உணர்வை ஏற்படுத்தாது; அது பரந்துபட்ட உழைக்கும் மக்களின் ஆன்மீக நம்பிக்கைக்கான அடையாளம் அல்ல. இந்துமத நம்பிக்கை என்பது வேறு; இந்து மதவெறி என்பது வேறு. அரசியல்-பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் மட்டுமல்லாமல் இந்துமதவெறியைக் கைகொள்வதிலும் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் எவ்வித வித்தியாசமுமில்லை என்பதை வரலாறு மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளது.  

- சமரன் (டிசம்பர் 2023 - ஜனவரி 2024 மாத இதழில்) 

பின் குறிப்பு:

காங்கிரசு கட்சி ராமர் கோவில் நிகழ்வில் முதலில் பங்கேற்பதாக கூறியது. தற்போது  பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளது. அது குறித்து அறிவாலய அறங்காவலர்கள் சிலர் சிலாகித்து எழுதுகின்றனர். ஆனால், கலந்து கொள்ளாததற்கு காங்கிரசு கட்சி  சொல்லும் காரணம் என்ன? 

"நாங்கள் ராமர் கோவிலுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் பாஜக அதை அரசியல் ஆக்குகிறது. கட்டி முடிக்கப்படாத கோவிலை திறப்பது தேர்தலுக்காகவே. ஆகவே நாங்கள் பங்கேற்க மாட்டோம்"  

ராமர் கோவில் என்பது கோவில் அல்ல; அது இஸ்லாமியர்களின் பிணங்களின் மீது எழுப்பப்படும் மயான பூமி; அது இந்து மதவெறியின் சின்னம் என காங்கிரசு கட்சி  அறிவிக்குமா?? வாய்ப்பே இல்லை.