ஹிஜாப் தடை: பகுதி-1
இசுலாமியப் பெண்களின் கல்வி உரிமையை மறுக்கும் இந்துத்துவப் பாசிசம்
பாசிச பாஜக அரசு, ஹிஜாப் தடை எனும் பெயரில் இசுலாமியப் பெண்களின் கல்வி மற்றும் மத உரிமையைப் பறித்துள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான பாசிச நடவடிக்கை. வறுமை, வேலைவாய்ப்பின்மையை தீர்க்க வக்கற்ற மத்திய மாநில பாஜக ஆட்சிகளின் தோல்வியை மூடி மறைக்க மதக் கலவரங்களை கட்டவிழ்த்துவிடுகிறது - சங்பரிவாரங்களின் மதவாத செயல்தந்திரங்களை நடைமுறைப்படுத்துகிறது. கர்நாடக பாஜக அரசும் மாணவர்களை மதரீதியாகப் பிளவுப்படுத்த ஆர்.எஸ்.எஸ் - ஏ.பிவிபி காட்டுமிராண்டிகளை ஏவிவிடுகிறது.
இதற்கான பொருளியல் அடிப்படை என்ன?
அமெரிக்க-நேட்டோ, சீன-ரஷ்ய-ஷாங்காய் ஏகாதிபத்திய முகாம்களுக்கிடையிலான உலக மறுபங்கீட்டீற்கான பனிப்போர் உக்கிரமடைந்துள்ளதை தொடர்ந்து, ஏகாதிபத்தியங்கள் நெருக்கடியின் சுமைகளை அனைத்து நாட்டு உழைக்கும் மக்களின் மீது சுமத்துகிறது. புதிய காலனிய சுரண்டல் முறைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கு எதிராகப் போராடும் மக்களை பாசிச நடவடிக்கைகள் மூலம் துண்டாடுகின்றன. இந்தியாவில் அமெரிக்காவின் புதிய காலனியாதிக்கத்தை எதிர்த்து போராடும் மக்களை ஒடுக்குவதற்காக மோடி அரசு இந்துத்துவ பாசிசத்தை கட்டியமைத்து வருகிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கால்களை நக்கிப் பிழைக்க சங்பரிவாரங்கள் துணையோடு தனது சொந்த நாட்டு உழைக்கும் மக்களையும் சிறுபான்மை மதத்தினரையும் பிரித்து ஒடுக்குகிறது. அதன் ஒரு அங்கமாகத்தான் ஹிஜாப் தடை எனும் பெயரில் இசுலாமியப் பெண்களின் கல்வி மற்றும் மத உரிமையை பறிக்கிறது.
ஹிஜாப் சர்ச்சையை உருவாக்கியது இசுலாமிய மாணவிகள் அல்ல! மத்திய மாநில பாஜக அரசின் - சங்பரிவாரங்களின் மதவாத செயல்தந்திரமே!
ஹிஜாப் (தலை மற்றும் கழுத்தை மறைக்கும் முக்காடு) சர்ச்சை எவ்வாறு உருவாகியது?
இந்துராஜ்ஜியத்தை கட்டியமைக்கும் ஒரு பகுதியாக, தேர்தலில் புதிய இளம் வாக்காளர்களை தமது பக்கம் ஈர்க்கும் நோக்கிலிருந்து ஹிஜாப் சர்ச்சையை சங்பரிவாரங்கள் துணையோடு தோற்றுவித்தன மத்திய-மாநில பாஜக அரசுகள், அவை பின்வருமாறு:
1. 2021 டிசம்பர் மாத இறுதியில், கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பி.யு.சி கல்லூரியில் பயிலும் 8 மாணவிகளை எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென ஹிஜாப் அணிவதை காரணம் காட்டி வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வெளியேற்றியது கல்லூரி நிர்வாகம். அதன் பின்னணியில் பாஜக எம்.எல்.ஏ. ரகுபதிபட் (இவர் மாணவர்களுக்கு காவித் துண்டுகளையும், சால்வைகளையும் அணியவைத்து மாணவர்களுக்கிடையே பிரிவினை மோதலைத் தூண்டிவிட்டதில் முக்கிய செயற்பாட்டளாரக இருந்தார்) ஐ தலைவராக கொண்ட கல்லூரி மேம்பாட்டுக் குழுவும் (CDC) இருந்தது;
2. கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் பெண்களின் உடைத்தேர்வை கொச்சையாக பேசியதோடு அரசாணை வரும் வரை ஹிஜாப் தடை தொடரும் எனவும் அறிவித்தார்;
3. அதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்விக்கான (Pre-University Education) கல்வித்துறை துணைச் செயலாளர் எஸ்.என்.பத்மினி "நீதிமன்ற தீர்ப்பு மற்றும் மாநில அரசின் புதிய வழிகாட்டல்கள் வரும்வரை இப்போது உள்ள நடைமுறையையே (ஹிஜாப் அனுமதி மறுப்பு) கல்லூரிகள் அமல்படுத்த வேண்டும்" என ஒரு கடிதத்தை ஜனவரி மாத கடைசி வாரத்தில் சுற்றுக்கு விட்டார்;
4. பஜ்ரங் தளம், இந்து ஜாக்ரனா வேதிகே (HJV) மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற சங்பரிவார கும்பல்களின் வலைப்பின்னல், ஆர்.எஸ்.எஸ்.ன் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) ஆகியவற்றுடன் சேர்ந்து ஷிவமோகாவில் உள்ள அரசு கல்லூரியில் காவிக்கொடியை ஏற்றியது உட்பட கர்நாடக மாநிலம் முழுவதும் அனைத்து கல்வி வளாகங்களிலும் இசுலாமிய மாணவிகளுக்கு எதிரான வன்முறைகள் கட்டியமைக்கப்பட்டன;
5. வழக்கு நீதி மன்றத்தில் விசாரணையில் இருக்கும்போதே இந்துத்துவ பசவராஜ் பொம்மை அரசு பிப்ரவரி 5ம் தேதி ஹிஜாப்புக்கு தடை விதித்து ஓர் அரசாணையை வெளியிட்டது; இசுலாமிய மாணவிகளை அரசே கல்வி நிலையங்களிலிருந்து விரட்டியடித்தது.
6. அரசாணையை வரவேற்று கர்நாடக உயர் நீதிமன்றம் பிப்ரவரி 15ம் தேதி தீர்ப்பு வழங்கியது;
7. இந்த நடைமுறை உ.பி., பீகார் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் பரவியது. பல்லாயிரக்கணக்கான இசுலாமிய மாணவிகளை கல்வி நிலையங்களிலிருந்து விரட்டியடித்தது. 'திராவிட மாடல்' திமுக அரசாளும் தமிழகத்தின் கள்ளக்குறிச்சியிலும் கூட ஹிஜாப் அணிந்த மாணவி தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.
இவ்வாறு அரசின் ஒவ்வொரு உறுப்புகளும் பாசிசமயமாக்கப்பட்டு வருகின்றன.
மறுபுறம், மாண்டியாவில் உள்ள பிஇஎஸ் கல்லூரியில் தன்னை அச்சுறுத்திய காவிக் காடையர்களை நோக்கி அறச்சீற்றம் கொண்டெழுந்த பீபி முஸ்கான் கான் எனும் மாணவி "அல்லா ஹு அக்பர்" என பாசிசத்திற்கெதிராக குரல் எழுப்பினார்; சிக்மங்களூரில் உள்ள ஐடிஎஸ்ஜி கல்லூரியில் காவி கும்பல்களின் அச்சுறுத்தலுக்கெதிராக நீல நிற சால்வை அணிந்த சில மாணவர்கள் 'ஜெய் பீம்' என கோஷமிட்டு இசுலாமிய மாணவிகளுக்கு துணை நின்றனர். மாணவிகள் முறையிட்டதையடுத்து அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (CFI) எனும் இசுலாமிய மாணவ அமைப்பினர் அமைதி வழியிலும் சட்டரீதியான போராட்டத்திலும் அவர்களுக்கு உதவினர்.
ஆனால், சங்பரிவாரங்கள் அம்மாணவிகள் மீதே பழியை போட்டனர். இசுலாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்கு செல்வது என்பது இதுவரை நடைமுறை அம்சமாக இருந்து வந்தது. ஆனால் அவர்கள் ஏதோ புதிதாக அணிந்து மதப்பிரச்சனை தூண்டுவதுபோல் பேசுகிறார்கள் இந்த காவி கயவாளிகள். மேலும், அவர்களுக்கும் அவர்களின் அமைதிவழி போராட்டங்களுக்கும் பின்னணியில் சர்வதேச தீவிரவாத வலைப்பின்னல் இருப்பதாக பொய்யான கோயபல்ஸ் வேலையைத் தொடங்கியது இந்த பாசிச கும்பல். அதற்கு காவி சாயமேறிய ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் துணை போயின. உண்மையில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார கும்பலே உள்நாட்டில் மதக் கலவரங்களைக் கட்டியமைக்க அதிக அந்நிய நிதியைப் பெறுகின்றன.
இந்துத்துவ பாசிசத்தின் கைக்கூலியாக கர்நாடக உயர் நீதிமன்றம்
கல்வி நிறுவனம் மாணவிகளை வெளியேற்றியதை தொடர்ந்து, CFI உதவியுடன் இசுலாமிய மாணவிகள் தரப்பில் சட்ட ரீதியான போராட்டம் நடத்த கர்நாடகா உயர் நீதி மன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இசுலாமிய மாணவிகள் பெரிதும் நம்பியிருந்த நீதிமன்றமும் அவர்களுக்கு பின்வருமாறு தீர்ப்பளித்து அநீதி இழைத்தது.
1. இசுலாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் மிக அத்தியாவசியமான மத நடைமுறையின் பகுதியாக இல்லை;
2. பள்ளிச் சீருடையை பரிந்துரைப்பது ஒரு நியாயமான கட்டுப்பாடு அதை மாணவர்கள் எதிர்க்க முடியாது;
3. இந்த விசயங்களில் அரசாணை வெளியிட மாநில அரசுக்கு உரிமை உள்ளது எனவே கர்நாடக அரசு வெளியிட்ட ஹிஜாப் தடை அரசாணை செல்லும்
எனக் கூறி ஹிஜாப் அணிவதற்கான தடையையும் அரசாணையையும் நியாயப்படுத்தியது கர்நாடக உயர் நீதிமன்றம்.
ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை ஹிஜாப் அணிவது மதம் சார்ந்த நடைமுறையின் ஓர் அத்தியாவசியமான பகுதியாகவே முகலாயர் ஆட்சி காலத்திலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் மிக அத்தியாவசியமான மத நடைமுறையின் பகுதியாக இருந்தது என்பதையும் குரான் தெரிவிக்கிறது: தனது அலங்காரமான உடைகளை குறைத்து ஆண்களும் பெண்களும் அடக்கமான ஆடை அணியவேண்டும் என்று (குரான் 24:30-31ல்) கூறுகிறது. ஹிஜாப் எனும் வார்த்தை குரானில் (7:46, 17:45, 19:17, 33:53, 38:32, 41:5, 42:51 மற்றும் 83:15 ஆகிய) எட்டு இடங்களில் அதன் அவசியத்தை வெளிப்படுத்துகிறது. மேலும், குரானின் இரண்டு வசனங்கள் ஹிஜாபைப் பற்றி பேசுகின்றன: நூர் மற்றும் அல்-அஹ்ராப், அல்-அஹ்ஸாபின் 59வது வசனம் உடலை மறைக்கும் வழியை பின்வருமாறு விவரிக்கிறது:
"நபிகள் நாயகத்தின் மனைவிகள், மகள்கள் மற்றும் அவர்களின் சந்ததிகளுக்காக மற்ற முஸ்லிம்களை நோக்கி, 'நபியே, உங்கள் மனைவிகள் மற்றும் உங்கள் மகள்கள் மற்றும் நம்பிக்கை கொண்ட பெண்களை, அவர்களின் வெளிப்புற உறைகளில் (Outer coverings) ஒரு பகுதியை நீக்குமாறு கட்டளையிடுங்கள். இது விரும்பத்தக்கது. அவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள், துன்புறுத்தப்பட மாட்டார்கள்' அன்றாட வழக்கத்தில், அவர்களின் அடக்கத்தை மறைக்க அவர்களின் வழக்கமான உடையின் மேல் ஒரு தளர்வான தாள் அல்லது சால்வை போதுமானது".
மத அறிஞர் ஃபர்ஹத் ஹஷ்மி, பெண்கள் தங்கள் வழக்கமான ஆடைகளுக்கு மேல் ஒரு தளர்வான தாளுடன் தங்களை மூடிக்கொள்வதே ஹிஜாப்பின் அறிவுறுத்தலாக கருதுகிறார். மேலும் குரானின் வாசகம் 24:31ம் தலையை மறைப்பதைப் பற்றி பேசுகிறது. எனவே வீடுகளில் திரைக்குப்பின்னால் அடைக்கப்பட்டிருந்த பெண்கள் வெளியில் வரும்போது ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் மிக அத்தியாவசியமான மத நடைமுறையின் பகுதியாக இருந்தது என்பது இதன் மூலம் தெரிகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 25, எந்தவொரு தனி நபரும் அவர் விரும்பும் மதத்தைச் சார்ந்திருக்கவும், அதன் நடைமுறைகளையும், பழக்கவழக்கங்களையும் சுதந்திரமாக மேற்கொள்ளவும் அனுமதிக்கிறது. ஆனால், நீதிமன்றம் இசுலாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் மிக அத்தியாவசியமான மத நடைமுறையின் பகுதியாக இல்லை எனக் கூறுகிறது. பிரிவு 19(1) (அ), தனிநபரின் உடைதேர்வு உரிமையை அனுமதிக்கிறது. பிரிவு 21 (அ), கல்வி கற்கும் உரிமையை வழங்குகிறது. அரசியலமைப்புச் சட்டம் கொடுத்திருக்கும் இந்த சிறு சிறு உரிமைகளையும் பறித்து பாசிசத்தின் கருவியாக மாறியுள்ளது நீதிமன்றம்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் விதிவிலக்கு கொண்டுவந்து; வரலாற்று ரீதியான தொல்லியல் ஆய்வுகளை மூடிமறைத்து; காலனியாதிக்கவாதிகளின் குறிப்புகளை மேற்கோள் காட்டியும்; "இந்துக்களின் நம்பிக்கை" எனும் பெயரிலே மட்டும் மசூதியை இடித்து தள்ளிய குற்றவாளிகளுக்கே மசூதியை சொந்தமாக்கியது. இன்று இசுலாமிய மாணவிகளின் நம்பிக்கைக்கு துரோகமிழைத்து அவர்களின் நெஞ்சில் சூலாயுதத்தை இறக்கியுள்ளது கர்நாடக உச்ச நீதி மன்றம். தருமபுர ஆதினங்களுக்கு பல்லக்கு தூக்க அனுமதிப்பது; தில்லை நடராஜர் கோவில் நிர்வாகத்தில் அரசு தலையிடக் கூடாது தீட்சிதர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என தொடர்ச்சியாகப் பெரும்பான்மை மத உரிமைகளுக்கு அவர்களின் நம்பிக்கையின் பெயரில் அனுமதிப்பதும், சிறுபான்மை மத உரிமைகளுக்கு குறிப்பாக இசுலாமியர்களின் நம்பிக்கைகளை அவமதிப்பது; இந்துமத வெறி யூட்யூபர் மாரிதாஸூக்கு மதவெறியைப் பரப்பக் கருத்துரிமை, பிற ஜனநாயக சக்திகளுக்கு கருத்துரிமை மறுப்பு; மீறினால் அவர்களை அர்பன் நக்சல்கள் எனக்கூறி என்.ஐ.ஏ, ஊபாவை ஏவுவது போன்றவை நீதிமன்றங்கள் ஜனநாயகமற்ற அநீதிமன்றங்களாக மாறியுள்ளதையே தெளிவாக காட்டுகிறது. மேலும் மதச்சார்பற்ற நிறுவனம் என வேடமிடும் நீதிமன்றம், பகவத்கீதையின் குறிப்புகளை கொண்டு தீர்ப்பு வழங்குவது; மோடி அரசின் சிறுபான்மை மக்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு துணை போவது என தான் இந்துத்துவ பாசிசத்தின் கைக்கூலியாக செயல்படுவதை அப்பட்டமாக்கியுள்ளது.
இசுலாமிய மாணவிகளின் கல்வியை பறிக்கும் ஹிஜாப் தடை
சிலர் ஹிஜாப் தடை என்பது பெண்ணடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவிக்கும் எனவும், அந்த நோக்கத்திற்காகவே அது அமல்படுத்தப்படுகிறது எனவும் வாதிடுகின்றனர். ஆனால், உண்மையில் இந்த ஹிஜாப் தடையானது பாஜக அரசின் பாசிச நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக காண மறுக்கின்றனர்.
பொருளாதார நெருக்கடிகளை தீர்க்க வக்கற்ற மோடி அரசு அதற்கு எதிராகப் போராடும் அனைத்து ஜனநாயக சக்திகள் மீதும் ஒடுக்குமுறைகளை ஏவி வருகிறது. அதிலும் குறிப்பாக தமது குறிக்கோளான இந்து ராஜ்ஜியத்தை கட்டியமைக்க சிறுபான்மை இசுலாமியர்களின் வாழ்வை பறித்து வன்முறையை தூண்டிவிடுவதுடன் மத மோதல்களை உருவாக்கி வருகிறது. ஜெய் ஸ்ரீ ராம் என முழங்கி ராம ராஜ்ஜியத்தை உருவாக்கி அதை அமெரிக்க மாமன் காலடியில் வீழ்த்துவதே இந்த பாசிச மோடி கும்பலின் நோக்கம்.
1. பாபர் மசூதியை இடித்தது; இடித்த காவிக் கிரிமினல்களுக்கே அந்த இடம் சொந்தம் என தீர்ப்பு வழங்கி ஆர்.எஸ்.எஸ்., பாஜக வின் கரசேவகனாக உச்ச நீதிமன்றம் செயல்பட்டது.
2. "நூரம்பர்க்" குடியுரிமைச் சட்டங்களை ஏவி இசுலாமியர்களையும் ஒடுக்கப்பட்ட இந்துக்களையும் நாடற்றவர்களாக்குவது.
3. இசுலாமியர்களின் காதல் திருமணங்களுக்கெதிராக 'லவ் ஜிகாத்'; பொதுசிவில் சட்டத்திற்கு முன்னோட்டமாக முத்தலாக் தடைச்சட்டம் கொண்டு வந்தது.
4. அ) வாரணாசியில் உள்ள கியான்வபி மசூதியில் சிவலிங்கம் இருப்பதாகக் கூறி அதைக் கைப்பற்ற முனைவது; இசுலாமியர்களின் தொழுகையை தற்காலிகமாக நிறுத்தி மசூதிக்கு சீல் வைத்தது;
ஆ) தொடர்ச்சியாக இசுலாமியர்களின் வழிபாட்டு தளங்களை இடிப்பது;
இ) தொழுகையின்போது எதிர் இரைச்சலை ஏற்படுத்துங்கள் என காவிக் குண்டர்கள் காணொலியில் அழைப்பு விடுக்கின்றனர். அதைத் தொடர்ந்து ஒலி மாசு ஏற்படுவதாக காரணம் கூறி தொழுகைக்கு விடுக்கப்படும் அழைப்புக்கு (பாங்கு) தடை விதிப்பது;
என அவர்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பது.
5. கோவில்கள் அருகில் உள்ள இசுலாமியர்களின் கடைகளை அகற்ற நடவடிக்கை, எக்கனாமிக்கல் ஜிஹாத் (Economical Jihad) எனும் பெயரில் அவர்களின் வர்த்தக உரிமையை பறிப்பது.
6. அ) ஹலால் முறையில் வெட்டி விற்கப்படும் இறைச்சியை இசுலாமியர்களின் இறைச்சி கடைகளிலும் உணவகங்களிலும் இந்துக்கள் வாங்கி உண்கிறார்கள் எனக்கூறி காவிக்கும்பல் இறைச்சி கடைகளை அடித்து நொறுக்கியது. இது இந்துமத உணவுமுறைக்கு எதிரானது எனக் கூறி அரசு ஹலால் இறைச்சிக்கு தடை;
ஆ) ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் ராமநவமி அன்று அசைவ உணவுக்கு தடை;
இ) ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறிக்கு தடை;
என இசுலாமியர்களின் உணவு உரிமையை மறுப்பது.
7. ராமநவமி ஊர்வலத்தில் இசுலாமியர்களின் கடைகளை, வீடுகளை அடித்து நொறுக்குவது; அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் கொடுப்பது; இசுலாமியர்களைக் கொல்ல படைகளை அமைக்க வேண்டும் என காவிக்குண்டர்கள் சபதமேற்பதையும், ஹிஜாப் அணிந்தால் வெட்டுவோம் என பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ள பஜ்ரங்தள் நடவடிக்கைகளையும் அரசு வேடிக்கைப் பார்ப்பது.
8. பாசிசத்திற்கெதிராக குரல் கொடுக்கும் இசுலாமிய மாணவிகளின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிப்பது என புல்டோசர் பாசிசத்தை ஏவுவது.
போன்ற எண்ணற்ற ஒடுக்குமுறைகள் மூலம் ஒரே நாடு - ஒரே மொழி - ஒரே மதம் என இசுலாமியர்களை துன்புறுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே ஹிஜாப் தடை எனும் பெயரில் இசுலாமிய மாணவிகளின் கல்வி உரிமையை பறித்துள்ளது. ஹிஜாப்புடன் கல்வி நிலையங்களுக்குள் அனுமதித்தால் என்ன தவறு? என்ற கேள்விக்கு மாறாக பலர், கல்வி வேண்டுமெனில் ஹிஜாப்பை நீக்கிவிட்டு வந்தாலென்ன? என்ற கேள்வியை எழுப்பி இசுலாமிய பெண்களின் கல்வி மறுக்கப்படுவதற்கு துணை போகின்றனர். அவர்கள் பாசிச நடவடிக்கைகளின் உள்ளே இருக்கும் நன்மைகளை பட்டியலிடும் அவல நிலைக்குச் செல்கின்றனர். இதன் மூலம் பாசிச காவலர்களாக மாறுகின்றனர்.
பொதுவாக சிறுபான்மையினர் நடத்தும் தனியார் கல்வி நிலையங்களில், இசுலாமியர்களின் மேல் நடுத்தர வர்க்கமும், மேட்டுக்குடிகளுமே கல்வி பெறுகின்றனர். அவை, அனைத்து இசுலாமிய மாணவ மாணவிகளுக்கும் கல்வி அளிக்கும் அளவுக்கு போதுமான எண்ணிக்கையிலும் இல்லை. தனியார் கல்வி நிலையங்களில் கட்டணம் செலுத்தி கல்வி கற்கும் வாய்ப்பில்லாத உழைக்கும் வர்க்க இசுலாமியர்கள் முழுவதும் அரசு நடத்தும் கல்வி நிலையங்களிலே கல்வி பெறுகின்றனர். ஹிஜாப் அணிந்துதான் வருவீர்கள் என்றால் இசுலாமிய கல்வி நிறுவனங்களுக்குச் செல்லுங்கள் என்று கொக்கரிப்பதன் மூலம் பாதிக்கப்படுவது உண்மையில் இசுலாமிய மதத்திலுள்ள உழைக்கும் வர்க்க மாணவிகள்தான். ஒரு இசுலாமிய பெண் ஹிஜாப் அணியவில்லை என்றால் அவரின் மத அமைப்பு அவள் மீது தாக்குதல் தொடுக்கிறது. அவள் அணிந்து வந்தால் இந்துத்துவ பாசிஸ்ட்டுகள் அவள் கல்வியைப் பறித்து விரட்டியடிக்கின்றனர் (அரூசா பர்வைஸ் எனும் காஷ்மீர் மாணவி ஹிஜாப் அணியாத காரணத்திற்காக அவர் தலை துண்டிக்கப்பட வேண்டும் என காஷ்மீரிலுள்ள மத அடிப்படைவாதிகளால் டிவிட்டரில் மிரட்டப்படுகிறார். மறுபுறம் ஹிஜாப் அணிந்தால் வெட்டுவோம் என பஜ்ரங்தள் குண்டர்கள் மிரட்டுகின்றனர்). ஆப்கனில் தாலிபான்கள் இசுலாமிய பெண்கள் அனைவரும் கட்டாயமாக புர்கா அணிய வேண்டும் என சட்டம் கொண்டு வந்துள்ளனர். இவ்வாறு ஹிஜாப் அணிவதா வேண்டாமா என்பதை இவ்விரு மத அடிப்படைவாதிகள்தான் தீர்மானிக்கிறார்கள், ஆனால், ஹிஜாப் அணிவது குறித்து முடிவெடுக்க வேண்டியது அந்த பெண்களே.
படிக்க: ஈரான் : ஹிஜாப்புக்கு எதிரான பெண்களின் போராட்டம் வெல்லட்டும்
ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்கு இசுலாமிய மாணவிகள் அனுமதிக்கப்பட்ட பிறகு, அவர்களின் கல்வி பெறும் விகிதமும் உயர்ந்தே வந்துள்ளதாக தேசிய மாதிரி ஆய்வு (National Sample survey) கூறுகிறது. இந்திய அளவில் இசுலாமிய பெண்களின் உயர்கல்வியில் வருகைப் பதிவு விகிதம் 2008ல் 6.7% சதமாக இருந்தது, இது 2018ல் 13.5% சதமாக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் மட்டும் 2008ல் 1.1% சதமாக இருந்த இது 2018ல் 15.8% சதமாக உயர்ந்துள்ளது.
இசுலாமிய மாணவிகளின் சேர்க்கை விகிதமும் மற்ற மத மாணவிகள் உள்ளிட்ட மொத்த மாணவிகளின் சேர்க்கையின் உள்விகிதத்திலும் உயர்ந்து வந்துள்ளதையே அட்டவணையின் புள்ளி விவரங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. இந்திய அளவில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளில் 2015-16 ம் கல்வியாண்டில் முறையே 13.3%, 11.23%, 8.77% சதவீதமாக இருந்ததிலிருந்து 2019-20 ம் கல்வியாண்டில் முறையே 14.54%, 13.29%, 10.67% சதவீதமாக உயர்ந்தே வந்துள்ளது. அதேபோல கர்நாடக அளவிலும் 2015-16 ம் கல்வியாண்டில் முறையே 15.6%, 13.61%, 8.08% சதவீதமாக இருந்ததிலிருந்து 2019-20 ம் கல்வியாண்டில் முறையே 15.81%, 15.47%, 8.69% சதவீதமாக உயர்ந்தே வந்துள்ளது. இவ்வாறு இசுலாமிய மாணவிகள் பள்ளி கல்லூரிகளில் சேரும் விகிதமும் இடைநிற்றலில்லா வருகை விகிதமும் உயர்ந்தே வந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதற்கு சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்கு முக்கிய காரணமாக இருந்தாலும், ஹிஜாப் அனுமதியோடு அவர்கள் கல்வி நிலையங்களுக்கு அனுப்பப்பட்டதும் முக்கிய பங்காற்றியுள்ளது.
இசுலாமிய பெண்களின் கல்வி கற்கும் நிலையில் ஏற்பட்டிருக்கும் இந்த வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத சங்பரிவார கும்பல்கள் திட்டமிட்டே அவர்கள் மீது ஹிஜாப் தடையை ஏவி அவர்களை கல்வி கற்பதிலிருந்து விரட்டியடிக்கிறது. இந்த ஆண்டு மட்டும் ஹிஜாப் தடையின் பெயரில் 20000க்கும் மேற்பட்ட இசுலாமிய மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த சாதாரணப் பெண்கள் கல்வி கற்க நடத்தும் போராட்டத்தை இந்தத் தடை முற்றிலும் மறுக்கிறது. அரசியலமைப்பின் கீழ் கிடைக்கும் குறைந்தபட்ச கனவுகள் மற்றும் இலக்குகளை நனவாக்கும் அவர்களின் விருப்பங்களையும் இது புறக்கணிக்கிறது.
கல்வி கற்பதற்குத்தான் சீருடை என்பதற்கு பதிலாக சிலர் சீருடை தான் முக்கியம் கல்வி இரண்டாம் பட்சமானது என்று வாதிடும் நிலைக்குச் செல்கின்றனர் கொச்சைப் பொருள்முதல்வாதிகள். அதனாலே ஹிஜாப் கூடாது எனும் அர்ஜீன் சம்பத் உள்ளிட்ட சங்பரிவார கும்பல்களின் கருத்துக்களை இவர்கள் மறுபதிப்பு செய்கின்றனர். இந்து மாணவிகள் சீருடையுடன் பொட்டு வைத்துக் கொள்வது, தலையில் பூச் சூடிக்கொள்வது; சீக்கியர்கள் தலையில் டர்பன் அணிவது போல இசுலாமிய மாணவிகள் சீருடையுடன் அதே நிறத்தில் சிறிய முக்காடு அணிந்து வருகின்றனர். எனவே இது வெறும் சீருடை பிரச்சனை மட்டுமல்ல. இசுலாமிய மாணவிகளின் கல்வி மற்று மத உரிமையை பறிக்கும் பாசிச செயல்தந்திரத்தின் ஒரு அங்கமாகும்.
இசுலாம் மத புனித நூலான குரானில் அலங்காரமில்லாத அடக்கமான ஆடை, தலை தாழ்த்திய நடை, பணிவோடு அணுகுவது போன்ற பண்புகள் ஆண் -பெண் என இரு பாலருக்கும் வழிகாட்டப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் அவ்வாறு இல்லை. எல்லா மதத்திலும் நீடிப்பது போலவே ஆணாதிக்கம் இசுலாம் மதத்தினர் மத்தியிலும் உள்ளது. அங்கும் ஆண்களுக்குச் சலுகை பெண்களுக்கு சுதந்திர மறுப்பு நீடித்தே வருகிறது. இன்றும் பெரும்பான்மையான இசுலாமிய பெண்கள் ஹிஜாப் அணிவதை கடவுள் நம்பிக்கையின் பெயரால் பெருமையாகவே (இந்து பெண்கள் தாலி அணிவதை பெருமையாகக் கருதுவது போல்) கருதும் நிலைக்கு அவர்களின் மதப் பிற்போக்குத்தனங்கள் தள்ளியுள்ளன. இருப்பினும் அவர்கள் ஹிஜாப் அணிய வேண்டுமா இல்லையா என்பதை முடிவெடுக்க வேண்டியது பாசிச கும்பல் அல்ல; அந்த பெண்களே. அவர்களின் மீது அந்த தடையை திணிப்பது அராஜகவாதமே. குறைந்தபட்சம் இந்த கல்வியாவது கிடைத்தால்தான் அப்பெண்களால் சுயேச்சையான பொருளாதார வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொள்ள முடியும், அப்போதுதான் அவர்கள் ஹிஜாப்பிலிருந்து தானாக விடுபடும் முடிவினை எடுக்க முடியும். அவ்வாறே பல மேட்டுக்குடி இசுலாமிய பெண்கள் ஆணாதிக்க இன்னல்களுள் சிக்கித் தவித்தாலும், அவர்களுக்கிருக்கும் பொருளாதார சுயேச்சைத் தன்மையின் காரணமாக அவர்கள் ஹிஜாப் அணிவதில்லை. உழைக்கும் வர்க்க இசுலாமிய பெண்களே இரட்டை தளைக்குள் சிக்கித் தவிக்கின்றனர். இந்த கல்வி முறை ஏகாதிபத்திய சேவையை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும் கல்வியாக இருந்தாலும், அதை கூட அவர்களுக்கு கொடுக்காமல் மறுப்பது அவர்களை மீண்டும் வீட்டின் திரைக்குப் பின்னாலே முடக்கும்.
சமரன், ஜூன் – ஆகஸ்ட் 2022 இதழிலிருந்து
தொடர்ச்சி பகுதி -2 ல் கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்