கார்ல் மார்க்ஸ் பற்றி லெனின் - பகுதி 3

மார்க்சியத்தைப் பற்றிய விரிவுரையுடன் அமைந்த வாழக்கை வரலாற்று சுருக்கம்

கார்ல் மார்க்ஸ் பற்றி லெனின் - பகுதி 3

முந்தைய பகுதிகளை படிக்க : கார்ல் மார்க்ஸ் பற்றி லெனின்

கார்ல் மார்க்ஸ் பற்றி லெனின் - பகுதி 2

மார்க்ஸின் பொருளாதாரப் போதனை

மூலதனம் என்ற நூலின் முன்னுரையில் மார்க்ஸ் சொல்வதாவது: ''நவீன சமுதாயத்தின்' (அதாவது முதலாளித்துவ, பூர்ஷ்வா சமுதாயத்தின்) "இயக்கத்திற்குரிய பொருளாதார விதியை வெளிப்படுத்திக் காட்டுவதுதான் இந்நூலின் இறுதியான நோக்கமாகும்''. வரலாற்றின் வழியே வரையறுக்கப்பட்ட, குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் உற்பத்தி உறவுகளை அவற்றின் தோற்றம், வளர்ச்சி, நலிவு ஆகிய கட்டங்களிலே பரிசீலனை செய்வது-இதுதான் மார்க்ஸின் பொருளாதாரப் போதனையின் உள்ளடக்கம். முதலாளித்துவ சமுதாயத்தில் ஆட்சி செலுத்துவது பண்டங்களின் உற்பத்திதான்; ஆகவே மார்க்ஸின் பகுப்பாய்வு பண்டத்தைப் பரிசீலிப்பதிலிருந்து தொடங்குகிறது.

மதிப்பு

பண்டம் என்பது, முதன் முதலாக மனிதத் தேவையை நிறைவாக்குகிற ஒரு பொருளாகும். இரண்டாவதாக, அது இன்னொரு பொருளுடன் பரிமாற்றம் செய்து கொள்ளக் கூடிய பொருளாகும். ஒரு பொருளின் பயன்தரும் தன்மை அதை பயன்பாடு மதிப்பு ஆக்குகிறது. பரிமாற்ற மதிப்பு என்பது (அல்லது, வெறுமே மதிப்பு என்றே குறிப்பிடலாம்) முதலில் ஒரு விதத்தைச் சேர்ந்த, குறிப்பிட்ட அளவிலான பயன்பாடு மதிப்புக்களை மற்றொறு விதத்தைச் சேர்ந்த, குறிப்பிட்ட அளவிலான பயன்பாடு மதிப்புகளுடன் பரிமாற்றம் செய்து கொள்வதிலிருக்கிற அளவுப் பொருத்தமாகவும் அல்லது விகிதமாகவும் தென்படுகிறது. இப்படிப்பட்ட கோடானு கோடியான பரிமாற்றங்கள், எல்லா வகையான பயன்பாடு மதிப்புகளை, முற்றிலும் வேறு வேறானவையும் ஒப்பிடவே முடியாதவையுமான பயன்பாடு மதிப்புகளைக் கூட, ஒன்றுடன் ஒன்று எப்போதும் சமப்படுத்திய வண்ணமாயிருக்கின்றன என்பதை அன்றாட அனுபவம் நமக்குக் காட்டுகிறது. இனி, பலவகைகளைச் சேர்ந்த இந்தப் பொருட்களுக்கு சமுதாய உறவுகளின் ஒரு குறிப்பிட்ட அமைப்பு முறையில் ஒன்றோடொன்று எப்போதும் சமப்படுத்தப்பட்டு வரும் இந்தப் பொருட்களுக்குப் பொதுவாயுள்ள அம்சம் எது? அவற்றின் பொது அம்சம் என்னவென்றால் அவை எல்லாம் உழைப்பின் உற்பத்திப் பொருட்களாக இருப்பதுதான். உற்பத்திப் பொருட்களைப் பரிமாற்றம் செய்து கொள்ளும் போது உழைப்பின் பல்வேறு விதங்களை மக்கள் ஒன்றோடொன்று சமப்படுத்துகிறார்கள். பண்ட உற்பத்தி என்பது சமுதாய உறவுகளின் அமைப்பு முறை; அந்த அமைப்பு முறையில் தனித்தனி உற்பத்தியாளர்கள் பல வகைப்பட்ட உற்பத்திப் பொருட்களைச் செய்கிறார்கள் (சமுதாய வழியிலான உழைப்புப் பிரிவினை); அந்த அமைப்பு முறையில் இந்த உற்பத்திப் பொருட்களெல்லாம் பரிமாற்றம் மூலமாக ஒன்றோடொன்று சமப்படுத்தப்படுகின்றன. ஆகவே, எல்லாப் பண்டங்களுக்கும் பொதுவாயுள்ள அம்சம் ஒரு குறிப்பிட்ட உற்பத்தித் துறையைச் சேர்ந்த ஸ்தூலமான உழைப்பு அல்ல; ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த உழைப்பு அல்ல; ஆனால் அவற்றிற்குப் பொதுவாயுள்ள அம்சம் சூட்சமமான மனித உழைப்புத்தான், அதாவது, பொதுப்படையான மனித உழைப்புத்தான். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் உழைப்புச் சக்தி முழுவதும், எல்லாப் பண்டங்களின் மதிப்புகளின் மொத்தத் தொகையிலே பிரதிநிதித்துவப்படுகிற ஒரே மனித உழைப்புச் சக்திதான். கோடிக் கணக்கிலே நடைபெறும் பரிமாற்றங்கள் இதை நிரூபிக்கின்றன. ஆகவே. ஒவ்வொரு குறிப்பிட்ட பண்டம், சமுதாய வழியில் அவசியமான உழைப்பு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட பண்டத்தை, குறிப்பிட்ட பயன்பாடு மதிப்பை உற்பத்தி செய்வதற்குச் சமுதாய வழியில் அவசியமான உழைப்பின் அளவைக் கொண்டுதான், சமுதாய வழியில் அவசியமான உழைப்பு நேரத்தின் அளவைக் கொண்டுதான், அம்மதிப்பின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. "பரிமாற்றம் மூலமாக வகை வகையான நமது உற்பத்திப் பொருட்களை மதிப்புகளாகச் சமப்படுத்தும் பொழுதெல்லாம் அதே செய்கையின் வாயிலாக அவற்றின் உற்பத்திக்குச் செலவழிக்கப்பட்ட உழைப்பின் பல்வேறு விதங்களையும் ஒரே மனித உழைப்பு என்ற முறையில் சமப்படுத்திவிடுகிறேம். இதை நாம் உணர்வதில்லை; இருந்தாலும் செய்கிறோம். பழைய பொருளாதாரவாதிகளில் ஒருவர் சொன்னது போல், மதிப்பு என்பது இரண்டு நபர்களிடையே இருக்கும் உறவுதான்; அத்துடன், அந்த உறவு பொருட்களிடையே இருக்கும் உறவாக மாறுவேஷம் கொண்டிருக்கிறது என்றும் அவர் சேர்த்துச் சொல்லியிருக்க வேண்டும். குறிப்பிட்ட வரலாறு வகைப்பட்ட சமுதாய அமைப்பில் இருக்கிற சமுதாய உற்பத்தி உறவுகளின் தொகுப்பு முறையை நோக்குநிலையாகக் கொண்டு பார்த்தால் மட்டுமே மதிப்பு என்பது என்ன என்று நாம் புரிந்து கொள்ள முடியும்: மேலும், இந்த உறவுகள் பெருவாரியாக நடைபெறுகிற பரிமாற்றத்திலே தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன. இந்தப் பரிமாற்றம் என்ற நிகழ்ச்சி கோடிக் கணக்கான முறை திரும்பத் திரும்ப நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றது. "மதிப்புகள் என்ற முறையில், எல்லாப் பண்டங்களுமே உறைந்து கெட்டியான உழைப்பு நேரத்தின் குறிப்பிட்ட திரள்களே ஆகும். பண்டங்களில் அடங்கியுள்ள உழைப்பின் இருவகைத் தன்மையை விபரமாகப் பகுத்தாராய்ந்த பின் மார்க்ஸ் மதிப்பின் வடிவத்தையும் பணத்தையும் பகுத்தாராய்வதில் முனைகிறார். மதிப்பின் பண வடிவத்தின் தோற்றத்தைப் பரிசீலிப்பது, (ஒரு பண்டத்தின் குறிப்பிட்ட அளவு மற்றொரு பண்டத்தின் குறிப்பிட்ட அளவுக்கு மாற்றிக் கொள்ளப்படுவதான "மதிப்பின் ஆரம்ப அல்லது தற்செயலான வடிவம்'' என்ற) தனியான, தற்செயலான பரிமாற்றங்களிலிருந்து தொடங்கி, குறிப்பிட்ட ஒரு பண்டத்துக்குப் பல்வேறு வகையான பண்டங்கள் மாற்றிக் கொள்ளப்படுவதான, மதிப்பின் முழுதளாவிய வடிவத்திற்கும், பின்பு தங்கம் இந்தக் குறிப்பிட்ட பண்டமாக, முழுதளாவிய ஈடாக ஏற்பட்ட காலத்திலுண்டான மதிப்பின் பண வடிவத்திற்குமாகப் பரிமாற்றம் வளர்ந்து வந்தது பற்றிய வரலாறு வகைப்பட்ட இயக்கப் போக்கைப் பரிசீலிப்பதே இங்கு மார்க்ஸின் பிரதான நோக்கம், பரிமாற்றம், பண்ட உற்பத்தி  ஆகியவற்றின் வளர்ச்சியில் மிக உயர்த்த விளைவாயிருப்பதன் காரணமாக, பணம் என்ன செய்கிறது? எல்லாத் தனித்தனி வேலைகளிலும் அடங்கியிருக்கும் சமுதாயத் தன்மையை, சந்தையின் மூலம் ஒன்றாக்கப்பட்டுள்ள தனித்தனி உற்பத்தியாளர்களுக்கிடையே நிலவும் சமுதாய உறவை, அது மூடிமறைக்கிறது. பணத்தின் பல்வேறு செயற்கூறுகளை மார்க்ஸ் மிகவும் விபரமாகப் பகுத்தாராய்கிறர். (பொதுவாக மூலதனத்தின் ஆரம்ப அத்தியாயங்களில் போலவே) இங்கே குறிப்பாக ஒன்றைக் கவனிப்பது அத்தியாவசியம்: அதாவது. இங்கே மார்க்ஸின் விளக்கமுறை சூட்சசமமானதாக இருக்கிறது; சில நேரங்களில் அது சுத்தமாக உய்த்தறியும் வகைப்பட்டதாயும் தோன்றும். ஆனால் உண்மையிலே அந்த விளக்கமுறை பரிமாற்றம், பண்ட உற்பத்தி ஆகியவற்றின் வளர்ச்சி வரலாற்றைப் பற்றிய விபர விஷயங்களைப் பிரம்மாண்டமான அளவில் திரட்டித் தருகிறது. "பணத்தைக் கவனிப்போமானால், அது வழக்கிலிருப்பது பண்டப் பரிமாற்றத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தையே உட்கிடையாகக் குறிக்கிறது. பண்டங்களின் வெறும் ஈடாக மட்டுமோ. புழக்கத்திற்குரிய சாதனமாகவோ, செலுத்துவதற்குரிய சாதனமாகவோ, சேமிப்பாகவோ, முழுதளாவிய பணமாகவோ பணம் செய்கிற குறிப்பிட்ட செயற்கூறுகள் எல்லாம். அவற்றில் ஒவ்வொன்றின் அளவையும், ஒன்றைவிட மற்றொன்று எந்த அளவுக்கு மேலோங்கியிருக்கிறது என்பதையும் பொறுத்து, சமுதாய உற்பத்தி இயக்கப் போக்கின் மிகவும் வேறுபட்ட கட்டங்களையே குறிக்கின்றன." (மூல தனம், தொகுதி 1)

மிகுதி மதிப்பு

பண்ட உற்பத்தி வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பணம் மூலதனமாக மாறுகிறது. பண்டப் புழக்கத்தின் பொதுச் சூத்திரம் பின்வருமாறு: பண் (பண்டம்) -ப(பணம்) - பண் (பண்டம்); அதாவது ஒரு பண்டத்தை வாங்குவதற்காக மற்றொரு பண்டத்தை விற்பது என்பதாம். இதற்குபட மாறுக, மூலதனத்தின் பொதுச் குத்திரம் ப-பண்-ப: அதாவது (இலாபத்துக்கு) விற்பதற்காகவே வாங்குவது என்பதாம். புழக்கத்திற்குக் கொண்டுவரும் பணத்தின் ஆரம்ப மதிப்பில் ஏற்படுகிற அதிகரிப்பை மார்க்ஸ் மிகுதி மதிப்பு என்று அழைக்கிறர். முதலாளித்துவப் புழக்கத்தின் போது பணத்தில் இவ்வாறு "பெருக்கம்' ஏற்படுகிறது. என்ற உண்மை எல்லோரும் அறிந்ததே. இந்தப் 'பெருக்கம்'' தான் பணத்தை மூலதனமாக மாற்றுகிறது; உற்பத்தியின் ஒரு தனி, வரலாற்று வழிப்பட்ட, சமுதாய உற்பத்தி உறவு என்ற முறையிலே அமைகிற மூலதனமாக மாற்றுகிறது. பண்டப் புழக்கத்திலிருந்து மிகுதி மதிப்பு தோன்ற முடியாது; ஏனெனில், பண்டப் புழக்கம் ஈடுகளின் பரிமாற்றத்தைத் தான் கண்டிருக்கிறது. விலையைக் கூட்டிவிடுவதிலிருந்தும் மிகுதி மதிப்பு தோன்ற முடியாது; ஏனெனில் வாங்குபவர்கள், விற்பவர்களுடைய பரஸ்பர நஷ்டங்களும் இலாபங்களும் ஒன்றையொன்று சமமாக்கிச் சரி செய்துவிடும். ஆனால் இங்கே நாம் பார்ப்பது ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி அல்ல: பெருந்திரளாய் நடந்தேறும் சராசரியான, சமுதாய நிகழ்ச்சியாகும். மிகுதி மதிப்பு பெறுவதன் பொருட்டு, பணத்தின் சொந்தக்காரன் "மதிப்பைத் தோற்றுவிக்கும் தோற்றுவாயாய் அமையும் சிறப்பு இயல்புடைய பயன்பாடு மதிப்புள்ள ஒரு பண்டத்தைச் சந்தையில்... தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதாவது, அந்தப் பண்டத்தின் நுகர்கிற இயக்கப் போக்கு மதிப்பைப் படைக்கும் இயக்கப்போக்காயும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பண்டம் ஒன்று உண்டு. அதுதான் மனிதனின் உழைப்புச் சக்தி. அதன் நுகர்வுதான் உழைப்பு: உழைப்பு மதிப்பைப் படைக்கிறது. பணத்தின் சொந்தக்காரன் உழைப்புச் சக்தியை அதன் மதிப்புப்படி வாங்கிக் கொள்கிறான். மற்ற ஒவ்வொரு பண்டத்தின் மதிப்பு போலவே இந்த மதிப்பும் இதன் உற்பத்திக்கு வேண்டிய, சமுதாய வழியில் அவசியமான உழைப்பு நேரத்தினாலேயே நிர்ணயிக்கப்படுகிறது (அதாவது, அது அந்தத் தொழிலாளியும் அவனது குடும்பமும் பிழைத்திருப்பதற்கு வேண்டிய செலவு ஆகும்). உழைப்புச் சக்தியை வாங்கிய பணச் சொந்தக்காரனுக்கு அதைப் பயன்படுத்திக் கொள்ள உரிமையுண்டு: அதாவது, அந்த உழைப்புச் சக்தியை நாள் முழுவதும்-பன்னிரண்டு மணி நேரம் என்று வைத்துக் கொள்வோம். வேலை வாங்க அவனுக்கு உரிமையுண்டு. இருந்தாலும், ஆறு மணி நேரத்தில் (''அவசியமான' உழைப்பு நேரம்) தொழிலாளி தனது பிழைப்புச் செலவைச் சரிக்கட்டுமளவுக்கு உற்பத்திப் பொருளைச் செய்கிறான்; அடுத்த ஆறு மணி நேரத்தில் ("மிகுதி" உழைப்பு நேரம்) 'மிகுதி உற்பத்திப் பொருளை அல்லது மிகுதி மதிப்பைச் செய்கிறான். இதற்கு முதலாளி அந்தத் தொழிலாளிக்குப் பணம் கொடுப்பதில்லை. எனவே உற்பத்தியின் இயக்கப்போக்கிலிருந்து பார்க்கையில் மூலதனத்தில் காணக்கூடிய இரு பகுதிகளை வேறுபடுத்துவது அவசியமாகும்: அதாவது, (இயந்திரங்கள், உழைப்புக் கருவிகள், கச்சாப் பொருட்கள் முதலிய) உற்பத்திச் சாதனங்களுக்காகச் செலவாகிற நிலையான மூலதனம்; இதன் மதிப்பு கொஞ்சமேனும் மாறுபடாமல் (ஒரே மொத்தமாகவோ பகுதி பகுதியாகவோ) தயாரான உற்பத்திப் பொருளின்பால் மாற்றப்படுகிறது; அடுத்தது, மாறுபடும் மூலதனம்: இது உழைப்புச் சக்திக்காகச் செலவழிக்கப்படுகிறது. இந்த மூலதனத்தின் மதிப்பு ஒரு நிலையாயிருப்பதில்லை; உழைப்பின் இயக்கப் போக்கில் அது மிகுதி மதிப்பைப் படைத்த வண்ணம் வளர்கிறது. ஆகவே உழைப்புச் சக்தியை மூலதனம் சுரண்டுகிற அளவைக்காட்ட வேண்டுமானால் மிகுதி மதிப்பை மொத்த மூலதனத்தோடு ஒப்புநோக்கலாகாது; மாறுபடும் மூலதனத்துடன் மட்டுமே ஒப்புநோக்க வேண்டும். ஆகவே, நமது உதாரணத்தில், மிகுதி மதிப்பின் விகிதம் என்று மார்க்ஸ் அழைக்கிற இந்த விகிதம் 6:6, அதாவது 100 சதவிகிதம் ஆகும்.

மூலதனத்தின் தோற்றத்திற்கு வரலாற்று வழிப்பட்ட முன்தேவைகளாவன: முதலாவதாக, தனிநபர்களின் கையிலே ஒரு குறிப்பிட்ட அளவுக்குப் பணம் குவியவும், அதே சமயத்தில் பொதுவாகவே பண்ட உற்பத்தியின் வளர்ச்சி சார்புநோக்கில் உயர்ந்த தரத்திற்கு தரத்திற்கு வளர்ந்திருக்கவும் வேண்டும்; இரண்டாவதாக, இரண்டு அர்த்தங்களில் "சுதந்திரமான" உழைப்பாளி இருக்க வேண்டும்-அதாவது, தனது உழைப்புச் சக்தியை விற்பதில் எல்லா விதமான கட்டுப்பாடுகளிலிருந்தும் தடைகளிலிருந்தும் விடுபட்டவன் என்ற அர்த்தத்திலும், நிலத்திலிருந்தும் பொதுவாக எல்லா உற்பத்திச் சாதனங்களிலிருந்தும் விடுபட்டவன் என்ற அர்த்தத்திலும், யாருடனோ எதனுடனோ இணைக்கப்படாத கட்டறுந்த உழைப்பாளி, அதாவது தனது உழைப்புச் சத்தியை விற்பதைத் தவிர வேறெந்த வழியிலும் பிழைக்க முடியாத 'பாட்டாளி" இருக்க வேண்டும்.

இரண்டு அடிப்படையான முறைகளின் மூலமாக மிகுதி மதிப்பை அதிகப்படுத்த முடியும்: அதாவது, வேலை நேரத்தை அதிகப்படுத்துவது ("தனிமநிலை மிகுதி மதிப்பு''), அவசியமான வேலை நேரத்தைக் குறைப்பது ("சார்புநிலை மிகுதி மதிப்பு"). முதல் வழியை மார்க்ஸ் பகுத்தாராய்கையில், வேலை நேரத்தைக் குறைப்பதற்காகத் தொழிலாளி வர்க்கம் நடத்திய போராட்டத்தைப் பற்றியும், வேலை நேரத்தை அதிகமாக்குவதற்காகவும் (14ம் நூற்றாண்டிலிருந்து 17ம் நூற்றாண்டு வரை), வேலை நேரத்தைக் குறைப்பதற்காகவும் (19ம் நூற்றாண்டின் ஆலைச் சட்டங்கள்) அரசாங்கம் தலையிட்டு வந்ததைப் பற்றியும் ஆழப்பதியும் சித்திரம் ஒன்றை நமக்குத் தருகிறார். மூலதனம் வெளிவந்த காலந்தொட்டு இந்தச் சித்திரத்தை மேலும் விரிவாக்கும் விதத்திலே பல்லாயிரக் கணக்கான புதிய விபரங்களை எல்லா நாகரிக நாடுகளிலுமுள்ள தொழிலாளர் இயக்கத்தின் வரலாறு தந்திருக்கிறது.

சார்புநிலை மிகுதி மதிப்பின் உற்பத்தியைப் பகுத்தாராய்கையில் மார்க்ஸ், முதலாளித்துவம் எந்த மூன்று கட்டங்கள் மூலமாக உழைப்பின் உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்திருக்கிறதோ, அந்த மூன்று வரலாற்றுக் கட்டங்களையும் பரிசீலிக்கிறார். அவையாவன: 1)சாதாரணக் கூட்டுறவு; 2) உழைப்பின் பிரிவினையும் பட்டறைத் தொழிலும்; 3) இயந்திரங் ளும் பெருமளவான தொழிலும். முதலாளித்துவ வளர்ச்சியின் அடிப்படையான, எடுத்துக்காட்டான முனைப்புக் கூறுகளை மார்க்ஸ் இங்கே எவ்வளவு ஆழமாக வெளிப்படுத்தியிருக்கிறர் என்பதை ருஷ்யாவின் ''குடிசைத் தொழில் என்று சொல்லப்படுவதைப் பற்றிய ஆராய்ச்சிகள் மேலே குறித்துள்ள முதல் இரண்டு கட்டங்களை விளக்கிக் காட்டுவதற்கு ஏராளமான விபரங்களைத் தந்துள்ளன என்ற உண்மை காட்டுகிறது என்று போகிற போக்கில் குறிக்கலாம். பெருமளவான இயந்திரத் தொழிலின் எந்தப் புரட்சிகரமாக்கும் செயல்தன்மையை மார்க்ஸ் 1867ல் விவரித்தாரோ, அந்தச் செயல்தன்மை (ருஷ்யா, ஜப்பான் முதலிய) பலப்பல புதிய நாடுகளிலே கடந்த அரை நூற்றாண்டில் வெளியாகியிருக்கிறது.

மேலே தொடர்வோம். மிக மிகப் புதுமையானதும் முக்கியமானதும் மூலதனத்தின் திரட்டல் பற்றிய மார்க்ஸின் பகுப்பாய்வாகும். மூலதனத்தின் திரட்டல் என்றால் மிகுதி மதிப்பின் ஒரு பகுதி மூலதனமாக மாற்றப்படுவது; மிகுதி மதிப்பை முதலாளியின் சொந்தத் தேவைகளையோ, மன விருப்பங்களையோ நிறைவு செய்வதற்காகப் பயன்படுத்தாமல் புதிய உற்பத்திக்காகப் பயன்படுத்துவது. (ஆதாம் ஸ்மித் முதல்) முந்தைய மூலச்சிறப்புள்ள அரசியல் பொருளாதாரவாதிகள் எல்லோரும் செய்த தவறை மார்க்ஸ் வெளிப்படுத்தினார். அவர்கள் எல்லோரும் மூலதனமாக மாற்றப்படும் மிகுதி மதிப்பு முழுவதும் மாறுபடும் மூலதனமாகும் என்று எண்ணிக் கொண்டார்கள். ஆனால் உண்மையிலேயே மிகுதி மதிப்பு உற்பத்திச் சாதனங்களுக்கு ஒரு பங்காகவும், மாறுபடும் மூலதனத்துக்கு மற்றொரு பங்காகவும் பிரிக்கப்படுகிறது. (மூலதனத்தின் மொத்தத் தொகையில்) மாறுபடும் மூலதனத்தின் பங்கைவிட நிலையான மூலதனத்தின் பங்கு அதிக வேகத்துடன் வளர்ச்சி பெறுவது முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கிலும், முதலாளித்துவம் சோஷலிஸமாக மாறுவதற்கான இயக்கப்போக்கிலும் மகத்தான முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

மூலதனத்தின் திரட்டல், தொழிலாளர்களுக்குப் பதிலாய் இயந்திரங்களைக் கொண்டு வேலைகளை முடித்துக் கொள்ளும் போக்கை விரைவுபடுத்தி, ஒரு கோடியில் செல்வத்தையும் இன்னொரு கோடியில் வறுமையையும் உண்டாக்கித் "தொழிலாளர்களின் சேமப் பட்டாளம்'' என்று சொல்லப்படுவதை, "சார்புநிலை மிகுதியான" தொழிலாளர்களை அல்லது முதலாளித்துவ மிகை மக்கள் தொகைப் பெருக்கை" தோற்றுவிக்கிறது. இந்நிகழ்ச்சியானது பல வகைப்பட்ட வடிவங்களில் ஏற்பட்டு, மூலதனம் மிகமிக வேகமாக உற்பத்தியை விரிவாக்குவதைச் சாத்தியமாக்குகிறது. இங்கே ஒன்று சொல்லலாம். இந்நிலைமையும் கடன் வசதிகளும். உற்பத்திச் சாதனங்களிலே ஏற்படும் மூலதனத் திரட்டலும் முதலாளித்துவ நாடுகளில் அவ்வப்போது ஏற்பட்ட மிகை உற்பத்தி நெருக்கடிகளின் காரண காரியங்களைப் புரிந்து  கொள்வதற்குத் தடயம் தருகின்றன. இந்த நெருக்கடிகள் முதலில் சராசரி பத்தாண்டுகளுக்கு ஒரு தடவையாக ஏற்பட்டுக் கொண்டிருந்தன; பிறகு, இதைவிட நீண்ட, அவ்வளவாகத் திட்டமாகச் சொல்ல முடியாத கால இடைவெளி விட்டு நிகழ்ந்தன. முதலாளித்துவத்தின்கீழ் ஏற்படுகிற மூலதனத் திரட்டல் வேறு, துவக்கக்கால மூலதனத் திரட்டல் என்று சொல்லப்படுவது வேறு என்பதை நினைவிலிருத்திக் கொள்ள வேண்டும். துவக்கக்கால மூலதனத் திரட்டல் என்பது என்ன? உற்பத்திச் சாதனங்களிலிருந்து உழைப்பாளியைப் பலாத்காரமாகப் பிரித்துவிடுவது, நிலத்திலிருந்து விவசாயிகளைத் துரத்திவிடுவது, சமுதாயப் பொது நிலங்களைத் திருடிக் கொள்வது, காலனிகள், தேசியக் கடன்கள், காப்பு வரிகள், முதலான பல ஏற்பாடுகள் துவக்கக்கால மூலதனத் திரட்டலின் முனைப்புக்கூறுகளாம். ''துவக்கக்கால மூலதனத் திரட்டல்" என்பது ஒரு கோடியில் "சுயேச்சையான" பாட்டாளியைத் தோற்றுவித்து, மற்றொரு கோடியில் பணச் சொந்தக்காரனை. முதலாளியை, தோற்றுவிக்கிறது.

"முதலாளித்துவ மூலதனத் திரட்டலின் வரலாற்று வழிப் பட்ட போக்கைப்" பின்வரும் புகழ் பெற்ற சொற்களில் மார்க்ஸ் விவரிக்கிறார்: "நேரடியான உற்பத்தியாளர்களின் சொத்தைப் பறிமுதல் செய்யும் வேலை, ஈவிரக்கமற்ற படு மூர்க்கத்துடன், மிகமிக வெட்கக்கேடான, மிகமிக ஆபாசமான, மிகமிக அற்பத்தனமான, மிகமிக இழிவான, அருவருக்கத்தக்க வெறியுணர்ச்சிகளால் தூண்டப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. தனியான, சுயேச்சையான உழைப்பாளியும், அவனுடைய உழைப்புக்குரிய நிலைமைகளும் ஒன்றாக இணைவதை அடிப்படையாகக் கொண்டதென்று சொல்லக் கூடிய சொந்த சம்பாத்தியமாகிய தனிச்சொத்து" (விவசாயி, கைத்தொழில் செய்வோன் ஆகியோர்களின் தனிச் சொத்து) 'நீக்கப்பட்டு அதன் இடத்தில் முதலாளித்துவத் தனிச்சொத்து ஏற்றி வைக்கப்படுகிறது. இந்த முதலாளித்துவத் தனிச்சொத்து, பிறருடைய, பெயரளவில் சுயேச்சையான உழைப்பைச் சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது..... இப்பொழுது சொத்து பறிமுதல் செய்யப்பட வேண்டியவன் தனக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கும்  உழைப்பாளியல்ல, பல தொழிலாளிகளைச் சுரண்டிக் கொண்டிருக்கிற முதலாளிதான். முதலாளித்துவ உற்பத்தியின் இயல்பான உள் விதிகள் செயல்படுவதன் மூலமாக, மூலதனம் ஒரு மையத்தில் சேகரிக்கப்படும் போக்கின் மூலமாக, இந்தச் சொத்துப் பறிமுதல் நிறைவேற்றப்படுகிறது. எப்பொழுதுமே ஒரு முதலாளி பல முதலாளிகளைக் கொள்கிறான். இவ்வாறு ஒரு மையத்தில் மூலதனம் சேகரிக்கப்படும் போக்கோடு கூடவே, அல்லது பல முதலாளிகளின் சொத்தைச் சில முதலாளிகள் பறிமுதல் செய்வதோடு கூடவே, உழைப்பு முறையின் கூட்டுறவு வடிவமும், விஞ்ஞானத்தை உணர்வுபூர்வமான தொழில்நுட்பப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதும், விளைநிலத்தைத் திட்டப்படி பண்படுத்தி வருவதும், உழைப்புக் கருவிகள் எல்லோரும் பொதுவாக உபயோகிக்கும்படியாக மட்டுமே அமைந்த உழைப்புக் கருவிகளாக மாற்றம் அடைவதும், எல்லா உற்பத்திச் சாதனங்களையும் ஒன்றிணைந்த, சமுதாய மயமான உழைப்பின் உற்பத்திச் சாதனங்களாக உபயோகிப்பதன் மூலமாக அவற்றைச் சிக்கனம் செய்வதும், உலகச் சந்தை என்ற வலையில் எல்லா நாடுகளைச் சேர்ந்த மக்களையும் சிக்க வைப்பதும், அத்துடன் முதலாளித்துவ அரசாட்சியின் சர்வதேசத் தன்மையும், மேலும்மேலும் விரிவான அளவில் வளர்கின்றன. மூலதன அதிபர்களின் எண்ணிக்கை இடையறாது குறைந்து கொண்டே போகிறது; இந்த மாற்றத்தினால் கிடைக்கிற அனுகூலங்கள். எல்லாவற்றையும் அவர்களே கைப்பற்றி ஏகபோகமாக்கிக் கொள்கின்றனர். இந்தப் போக்குடன் கூடவே, வறுமையும் ஒடுக்குமுறையும் அடிமைத்தனமும் இழிநிலையும் சுரண்டலும் மலைபோல் வளர்கின்றன. ஆனால், இத்துடன் கூடவே தொழிலாளி வர்க்கத்தின் கிளர்ச்சியும் வளர்கின்றது. தொழிலாளி வர்க்கம் எப்போதும் எண்ணிக்கையில் பெருகிக் கொண்டேயிருக்கும் வர்க்கமாகும்; மேலும் முதலாளித்துவ உற்பத்திப் போக்கிலேயே அந்த வர்க்கம் கட்டுப்பாடும் ஒற்றுமையும் ஒழுங்கமைப்பும் பெறுகிறது. எந்த உற்பத்தி முறை மூலதனத்தின் ஏகபோகத்துடன்கூடவே முளைத்து, அதனுடனேயே, அதன் அடியிலேயே தழைத்துச் செழித்ததோ, அந்த உற்பத்தி முறைக்கு மூலதனத்தின் ஏகபோகமே விலங்காகிவிடுகிறது. உற்பத்திச் சாதனங்களின் ஓரிடக்  குவியலும், உழைப்பின் சமுதாய மயமாக்குதலும் கடைசியிலே ஒரு நிலையை எட்டியதும் அவற்றிற்கும் அவற்றின் முதலாளித்துவ மேலோட்டுக்கும் பொருத்தமற்றுப் போய்விடுகிறது. இந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனிச் சொத்துக்குச் சாவுமணி அடிக்கப்படுகிறது. பறிமுதல் செய்வோர்களின் சொத்து பறிமுதல் செய்யப்படுகிறது.'' (மூலதனம், தொகுதி 1).

மூலதனத்தின் இரண்டாம் தொகுதியில் மொத்த சமுதாய மூலதனத்தின் மறு உற்பத்தியைப் பற்றி மார்க்ஸ் செய்யும் பகுப்பாய்வு மிகமிக உயர்ந்த அளவிலே புதுமையாயும் முக்கியமானதாயும் உள்ளது. இங்கேயும்கூட மார்க்ஸ் தனியொரு நிகழ்ச்சியை ஆராயாமல் வெகுவாகக் காணக் கிடக்கிற நிகழ்ச்சியையே ஆராய்கிறார்; சமுதாயத்தினுடைய பொருளாதாரத்தின் ஏதோ ஒரு சிறு பகுதியை ஆராயாமல் அந்தப் பொருளாதாரம் முழுவதையுமே ஆராய்கிறார். மூலச் சிறப்புள்ள பொருளாதாரவாதிகள் செய்த மேற்கூறிய தவறைத் திருத்தி, சமுதாய உற்பத்தி முழுவதையும்: 1) உற்பத்திச் சாதனங்களின் உற்பத்தி, 2) நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி என்று இரண்டு பெரும் பகுதிகளாக மார்க்ஸ் பிரிக்கிறார்: மேலும், முந்தைய அளவுகளிலே மறு உற்பத்தி விஷயத்திலும் சரி, குவியல் விஷயத்திலும் சரி மொத்த சமுதாய மூலதனம் புழங்கி வந்ததைப் பற்றி மார்க்ஸ் எண் கணித உதாரணங்களுடன் விபரமாகப் பரிசீலனை செய்கிறார். மதிப்பின் விதியை அடிப்படையாகக் கொண்டு, இலாபத்தின் சராசரி விகிதம் அமையும் பிரச்சினையை மூலதனத்தின் மூன்றாம் தொகுதி தீர்த்து வைக்கிறது. வெகுவாகக் காணக் கிடக்கிற பொருளாதாரத் தோற்றங்களைப் பார்க்கும் நிலையிலேதான், சமுதாயப் பொருளாதாரம் முழுவதையும் பார்க்கும் நிலையிலே தான், மார்க்ஸ் தமது பகுப்பாய்வை நடத்திச் செல்கிறார். விஞ்ஞானக்கேடான அரசியல் பொருளாதாரமோ, அல்லது நவீன காலத்திய ''இறுதிநிலைப் பயன்பாட்டுத் தத்துவமோ" அடிக்கடி செய்வது போல, தனித்தனி விஷயங்களை எடுத்துக் கொண்டு அல்லது போட்டியின் வெளித் தோற்றமாயுள்ள, மேலெழுந்தவாரியான அம்சங்களை மட்டும் எடுத்துக் கொண்டு பார்க்கும் நிலையுடன் மார்க்ஸ் நின்றுவிடவில்லை. பொருளாதார விஞ்ஞானத்தில் மார்க்ஸ் ஏற்படுத்திய பெருத்த முன்னேற்றம் இதில் அடங்கியிருக்கிறது. மிகுதி மதிப்பின் தோற்றத்தை மார்க்ஸ் முதலில் பகுத்தாராய்கிறார்; பிறகு அது இலாபமாகவும், வட்டியாகவும், நில வாடகையாகவும் பிரிவதைக் கவனிக்கப் புகுகிறார். இலாபம் என்பது மிகுதி மதிப்புக்கும். ஒரு தொழில் நிலையத்தில் போடப்பட்ட மொத்த மூலதனத்திற்கும் இடையேயுள்ள விகிதமேயாகும். 'உயர்வான உள்ளமைப்பு" (high organic composition] உள்ள (அதாவது, நிலையான மூலதனம் மாறுபடும் மூலதனத்தைக் காட்டிலும் சமுதாய சராசரிக்கும் மேல் அதிகமாயிருப்பதான) மூலதனம், சராசரியைவிடக் குறைந்த இலாபவிகிதத்தைத் தருகிறது. "தாழ்ந்த உள்ளமைப்பு" (low organic composition) உள்ள மூலதனம் சராசரியைக் காட்டிலும் அதிகமான இலாபவிகிதத்தைத் தருகிறது. மூலதனங்களிடையேயுள்ள போட்டி, ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு அந்த மூலதனங்கள் மாறிச் செல்வதற்குப் பெற்றுள்ள சுதந்திரம்-இவையிரண்டும் இலாப விகிதத்தைச் சராசரிக்குச் சமப்படுத்திவிடுகின்றன. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் எல்லாப் பண்டங்களுடைய மதிப்புகளின் மொத்தத் தொகை பண்டங்களுடைய விலைகளின் மொத்தத் தொகையோடு ஒத்திருக்கிறது; ஆனால், போட்டியின் காரணமாக, தனித்தனி தொழில் நிலையங்களிலும் தனித்தனி உற்பத்திக் கிளைகளிலும் அவற்றின் மதிப்புகளுக்குச் சமமாகப் பண்டங்கள் விற்கப்படுவதில்லை; அதற்குப் பதிலாக அவற்றின் உற்பத்தி விலைகளுக்குச் சமமாகத்தான் விற்கப்படுகின்றன. இந்த உற்பத்தி விலைகள் செலவழிக்கப்பட்ட மூலதனமும் சராசரி இலாபமும் சேர்ந்த கூட்டுத் தொகைக்குச் சமமாகும்.

இவ்வாறு விலைகளுக்கும் மதிப்புகளுக்குமிடையே வேற்றுமையுள்ளது என்ற மறுக்கமுடியாத, எல்லோருக்கும் தெரிந்த உண்மையையும், இலாபங்கள் ஒன்றோடொன்று சமப்படுத்தப்படுகின்றன என்ற மறுக்கமுடியாத, எல்லோருக்கும் தெரிந்த உண்மையையும் மார்க்ஸ் மதிப்பின் விதியை அடிப்படையாகக் கொண்டு முற்றாக விளக்கி வைக்கிறார்; ஏனெனில், எல்லாப் பண்டங்களுடைய மதிப்புகளின் மொத்தத்தொகையும் விலைகளின் மொத்தத் தொகையோடு ஓத்திருக்கின்றது. என்ற போதிலும், (சமுதாய) மதிப்பு (தனிப்பட்ட) விலைகளுடன் சரி சமமாக்கப்படுவது அவ்வளவு எளிதாக, நேரடியாக நடைபெறுகிற விஷயமல்ல; அது மிகச் சிக்கலான முறையிலே நடைபெறுகிற காரியமாகும். சந்தையால் மட்டுமே ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிற தனித்தனி பண்ட உற்பத்தியாளர்களைக் கொண்ட சமுதாயத்தில் விதியானது சராசரியான, சமுதாய அளளிலான, பெரு வழக்கான விதியாகத்தான் வெளிப்பட முடியும் என்பது மிகமிக இயல்பானதொரு விஷயமாகும்; இந்த விதியிலிருந்து இந்தப் பக்கமோ, அந்தப் பக்கமோ விலகிச் செல்லும் தனித்தனி திரிபுகள் ஒன்றையொன்று சரிக்கட்டிக் கொள்கின்றன.

உழைப்பின் உற்பத்தித் திறன் உயர்கிறது என்பதின் உட்கிடை நிலையான மூலதனம் மாறுபடும் மூலதனத்துடன் ஒப்பிடும் போது வேகமாக அதிகரிக்கிறது என்பதுதான். மிகுதி மதிப்போ, மாறுபடும் மூலதனத்தின் செயற்கூறு மட்டுமே; ஆகவே, இலாப விகிதம் (மிகுதி மதிப்புக்கும் மொத்த மூலதனத்துக்கும் - அதன் மாறுபடும் பகுதிக்கு மட்டுமல்ல - இடையேயுள்ள விகிதத்தை இது குறிக்கிறது) இறங்கும் போக்குள்ளது வெளிப்படை. இந்த இறங்கும் போக்கையும், இதை மூடிமறைக்கிற, அல்லது இதற்கு எதிராகச் செயல்படுகிற பல சூழ்நிலைமைகளையும் மார்க்ஸ் விபரமாகப் பகுத்தாராய்கிறார். கடும் வட்டி மூலதனம், வியாபார மூலதனம், பண மூலதனம் ஆகியவற்றைப் பரிசீலிக்கும் மூலதனத்தின் மூன்றாம் தொகுதியிலுள்ள மிகமிகச் சுவாரசியமான பகுதிகளைப் பற்றிச் சொல்ல முற்படாமல், அதில் மிக மிக முக்கியமான பகுதியாகிய நிலவாடகையின் தத்துவம் பற்றிய பகுதியைக் கவனிப்பதில் முனைவோம். நிலப்பரப்பு ஒரு வரையறைக்குட்பட்டது; முதலாளித்துவ நாடுகளில் இந்த நிலப்பரப்பு முழுவதையும் தனித்தனி சொந்தக்காரர்கள் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் காரணத்தினால் விவசாய விளைபொருட்களின் உற்பத்தி விலை நிர்ணயிக்கப்படுவது, சராசரி ரக விளைநிலத்தில் அல்ல, அடிமட்ட ரக விளைநிலத்தில் ஏற்படும் உற்பத்திச் செலவைக் கொண்டு, விளைபொருட்களைச் சந்தைக்குக் கொண்டு செல்வதற்கான சராசரி வசதி நிலைமைகளைக் கொண்டல்ல, படுமோசமான நிலைமைகளைக் கொண்டு, இந்த விலைக்கும், மேலான விளை நிலத்தில் (அல்லது மேலான நிலைமைகளில்) ஆகும் உற்பத்தி விலைக்கும் உள்ள வேறுபாடுதான் வேற்றுமை நிலை வாடகை ஆகும். இதை விபரமாகப் பகுத்தாராய்ந்து, வெவ்வேறு நிலப்பகுதிகளின் செழுமையிலே இருக்கிற வேறுபாட்டிலிருந்தும் நிலத்தில் ஈடுபடுத்தும் மூலதனத்தின் அளவில் இருக்கிற வேறுபாட்டிலிருந்தும் இந்த வாடகை எப்படித் தோன்றுகிறது என்பதை எடுத்துக்காட்டிய மார்க்ஸ், ரிக்கார்டோவின் தவறை முற்றாக அம்பலப்படுத்துகிறார் (மிகுதி மதிப்பு பற்றிய தத்துவங்கள் என்ற நூலைப் பார்க்க: இதிலுள்ள ரோட் பெர்டஸ் பற்றிய விமர்சனம் குறிப்பாகக் கவனிக்கத்தக்கது). நிலம் மேலான நிலையிலிருந்து படிப்படியாக மோசமான நிலைக்கு மாறிச் செல்லும்போதுதான் வேற்றுமை நிலை வாடகை பெறப்படுகிறது என்று ரிக்கார்டோ தவறாகக் கருதினார். இதற்கு மாறாக, கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கும் நிலங்கள் மாறக் கூடும் (விவசாயத் தொழில் நுணுக்கத்தில் ஏற்படும் முன்னேற்றம், நகரங்களின் வளர்ச்சி முதலிய காரணங்களால்) நிலம் ஒரு ரசுத்திலிருந்து இன்னொரு ரகத்துக்கு மாறக் கூடும். "குன்றிச் செல்லும் விளைவு விதி" (law of diminishing returns) என்ற கெட்ட பெயர் பெற்ற விதி முற்றிலும் தவறானதாகும். இது, முதலாளித்துவத்தின் குறைபாடுகளையும் வரையறைகளையும் முரண்பாடுகளையும் இயற்கையின் மீது சுமத்துகிறது. மேலும், தொழிலின் எல்லாத் துறைகளிலும், பொதுவாக தேசியப் பொருளாதாரத்தின் எல்லாத் துறைகளிலும் இலாபம் சரிசமமாக்கப்பட வேண்டுமானால் போட்டியிடுவதில் முழுச் சுதந்திரமும் ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு மூலதனம் தங்கு தடையின்றி ஓடிக் கொண்டிருப்பதும் அவசியம் இருந்து தீரவேண்டும். ஆனால் நிலத்திலுள்ள தனியுடைமை ஏகபோகத்தைத் தோற்றுவிக்கிறது. இந்த ஏகபோகம் மூலதனம் இப்படி ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்குத் தங்குதடையின்றி ஓடுவதற்கு இடையூறாக அமைந்துவிடுகிறது. தாழ்ந்த உள்ளமைப்புள்ள மூலதனத்தையும், அதன் பயனாகத் தனித்த முறையில் உயர் தர இலாப விகிதத்தையும் சிறப்பியல்பாகக் கொண்ட விவசாயத்தின் விளைபொருட்கள் இந்த ஏகபோகத்தின் காரணத்தால், இலாப விகிதத்தைச் சரிசமமாக்கி வைக்கும் முழுச் சுயேச்சையுள்ள இயக்கப் போக்கில் பங்கு கொள்வதில்லை. நிலச்சுவான்தார் ஏகபோக உரிமையாளனாக இருப்பதினால் விலையைச் சராசரிக்கு மேலாகவே உயர்த்தி வைத்திருக்க முடியும். இந்த ஏகபோக விலைதான் தனிமநிலை வாடகையை உண்டாக்குகிறது. முதலாளித்துவ முறையின்கீழ் வேற்றுமை நிலை வாடகையை ஒழித்துவிட முடியாது, ஆனால் தனிமநிலை வாடகையை ஒழித்துவிட முடியும்; உதாரணமாக, நிலத்தைத் தேசியமயமாக்குவதின் மூலமாக, நிலத்தை அரசு உடைமையாகச் செய்வதின் மூலமாக, அதை ஒழிக்க முடியும். நிலத்தை அரசு உடைமையாகச் செய்துவிடுவது தனி நிலச்சுவான்தார்களின் ஏகபோகத்தைப் பலவீனப்படுத்தும், விவசாயத் துறையிலும் போட்டியிடுவதற்குரிய சுதந்திரம் முன்னை விட முரணின்றி முழுமையாகச் செயல்படுவதில் கொண்டு போய்விடும். எனவேதான், நிலத்தைத் தேசியமயமாக்கவேண்டும் என்ற இந்த முற்போக்கான முதலாளித்துவக் கோரிக்கையைத் தீவிரவாத முதலாளி வர்க்கத்தினர் வரலாற்றுப் போக்கிலே திரும்பத் திரும்ப வெளியிட்டு வந்திருக்கிறார்கள், ஆனால் இந்தக் கோரிக்கை பெரும்பாலான முதலாளி வர்க்கத்தினரைக் கிலியடைந்தோடச் செய்கிறது. ஏனென்றால் அது இன்னொரு ஏகபோகத்தை-தற்காலத்தில் குறிப்பிடத் தக்க முக்கியத்துவமுள்ள, ''தொட்டால் சிணுங்கியான" ஏகபோகத்தை, அதாவது பொதுவாக உற்பத்திச் சாதனங்களிலுள்ள ஏசுபோகத்தை - மிகவும் நெருங்கிய முறையில் "பாதிக்கிறது". (மூலதனத்தின் மேல் கிடைக்கிற இலாபத்தின் சராசரி விகிதம் பற்றிய தமது தத்துவத்தைக் குறித்தும், தனிமநிலை நில வாடகை பற்றிய தமது தத்துவத்தைக் குறித்தும் 1862 ஆகஸ்ட் 2ம் தேதி எங்கெல்ஸுக்கு எழுதிய கடிதத்தில் மார்க்ஸ் மக்களுக்குப் புரியும்படியான, சுருக்கமான, தெளிவான விளக்கத்தைத் தருகிறார். கடிதப் போக்குவரத்து, மூன்றாம் தொகுதி. 77-81ம் பக்கங்களைப் பார்க்க. மேலும் இதே தொகுதியில் 86-87ம் பக்கங்களில் தரப்பட்டுள்ள 1862 ஆகஸ்ட் 9ம் தேதியிட்ட கடிதத்தையும் பார்க்க.) உழைப்பு வாடகை எவ்வாறு படிப்படியாக மாறி முதலாளித்துவ வாடகையாக உருப்பெறுகிறது என்பதைக் காட்டும் மார்க்ஸின் பகுப்பாய்வைக் கவனிப்பதும் நில வாடகையின் வரலாற்றுக்கு முக்கியமானதாகும்: (விவசாயி நிலப்பிரபுவின் நிலத்தில் பாடுபட்டு மிகுதி விளைபொருளை உண்டாக்குவதான) உழைப்பு வாடகையானது. (விவசாயி தன் சொந்த நிலத்தில் மிகுதி விளைபொருளை உண்டாக்கி "பொருளரதாரச் சார்பற்ற நிர்ப்பந்தம்" காரணமாக அதை நிலப்பிரபுவிடம் ஒப்படைத்துவிடுவதான) விளைபொருள் வாடகை அல்லது பண்ட வாடகையாகவும், பின்பு (பண்ட உற்பத்தி வளர்ச்சியின் காரணமாக, பண்ட வாடகை பணமாக மாறுவதான, ருஷ்யாவில் வழங்கிய "ஒப்ரோக்' முறை போன்ற) பண வாடகையாகவும் மாறுகிறது: முடிவில், கூலி உழைப்பின் உதவியால் சாகுபடி செய்யும் விவசாயத் துறை முதலாளி விவசாயியை அகற்றி விட்டு அவன் இடத்தில் அமர்ந்து கொள்ளும் போது முதலாளித்துவ வாடகையாக மாறுகிறது என்று மார்க்ஸின் பகுப்பாய்வு காட்டுகிறது. "முதலாளித்துவ நில வாடகையின் தோற்றம்" பற்றிய இந்தப் பகுப்பாய்வு சம்பந்தமாக மார்க்ஸ் விவசாயத் துறையில் முதலாளித்துவத்தின் பரிணாமம் பற்றித் தருகிற, (ருஷ்யாவைப் போன்ற பிற்பட்ட நாடுகளுக்குத் தனி முக்கியத்துவம் வாய்ந்த) பல ஆழ்ந்த ஆழ்ந்த கருத்துக்களைக் குறிப்பிட்டாக வேண்டும். “பண்ட வாடகை பண வாடகையாக மாறுவதுடன் கூடவே கூலிக்கு வேலை செய்பவர்களான சொத்தில்லாத கூலி ஆட்களின் வர்க்கம் ஒன்று அவசியம் உருவாகிவிடுகிறது என்பது மட்டுமல்ல; அந்த வர்க்கம் உருப்பெறுவதே அதை முன்னறிவிக்கிறது. இந்தக் கூலி வேலையாட்கள் தோன்றிக் கொண்டிருக்கும் காலப்பகுதியில், இந்தப் புதிய வர்க்கம் இங்குமங்குமாய்த் தோன்றிக் கொண்டிருக்கையிலேயே, நல்ல நிலைமையிலுள்ள, மேல்வாரம் செலுத்தும் விவசாயிகளிடையே தங்களது சொந்த அனுகூலத்துக்காகவே விவசாய உழைப்பாளிகளைச் சுரண்டுகிற வழக்கமும், நிலப்பிரபுத்துவ காலத்தில் அதிகச் செல்வம் படைத்த பண்ணையடிமைகள் தங்களுடைய சொந்த அனுகூலத்துக்காக மற்ற பண்ணையடிமைகளை வேலைக்கு வைத்துக் கொண்டிருந்தது போலவே, அவசியமாக வளர்கிறது. இந்த முறையிலே அவர்கள்--நல்ல நிலைமையிலுள்ள, மேல்வாரம் செலுத்தும் விவசாயிகள்-ஒரு குறிப்பிட்ட அளவுக்குச் செல்வத்தைச் சேகரிப்பதற்கும் எதிர் காலத்தில் முதலாளிகளாகக்கூட மாறிவிடுவதற்கும் படிப்படியாக வாய்ப்பு பெறுகின்றனர். சுயமாக உழைத்து வந்த பழைய நிலச் சொந்தக்காரர்கள் இப்படித்தான் தங்கள் மத்தியிலிருந்தே முதலாளித்துவக் குத்தகைதாரர்களை வளர்க்கும் ஒரு வளர்ப்புப் பண்ணையை உண்டாக்கி வைக்கிறார்கள். இந்த முதலாளித்துவக் குத்தகைதாரர்களின் வளர்ச்சி நாட்டுப்புறங்களுக்கு வெளியேயுள்ள முதலாளித்துவ உற்பத்தியின் பொது வளர்ச்சியைப் பொறுத்திருக்கிறது'', மூலதனம், தொகுதி 3. பக்கம் 332.) 'விவசாயி மக்களில் ஒரு பகுதியினரின் சொத்தைப் பறிமுதல் செய்து அவர்களை நிலத்திலிருந்து வெளியேற்றி விடுவதானது தொழில் மூலதனத்திற்கு வேண்டிய உழைப்பாளிகளும், அவர்களுடைய பிழைப்புக்கான சாதனங்களும், உழைப்பதற்குரிய பொருள்களும் தங்குதடையின்றிக் கிடைக்கும்படி செய்தது. அது மட்டுமல்ல, அது உள்நாட்டு சந்தையையும் உண்டாக்கியது.'' (மூலதனம், தொகுதி 1. பக்கம் 778.) விவசாயி மக்கள் ஏழ்மைப்பட்டுச் சீரழிந்ததன் விளைவாக ஏற்படுகிறது என்னவென்றால் மூலதனத்திற்கு ஒரு சேமத் தொழிலாளர் பட்டாளம் உருவாகிறது. ஒவ்வொரு முதலாளித்துவ நாட்டிலும் 'விவசாயி மக்களின் ஒரு பகுதி, நகர, அதாவது பட்டறைத் தொழில் முறையைச் சேர்ந்த (விவசாயம் தவிர மற்றெல்லாத் தொழில்களையும் இது குறிக்கும்) பாட்டாளி வர்க்கமாக மாறிப் போகும் நிலையில் எப்பொழுதும் இருந்து வருகிறது... இப்படியாக, சார்புநிலை மிகை மக்கள் தொகைப் பெருக்குக்குரிய இந்த ஊற்றுக்கண் எப்பொழுதும் பெருகியோடிக் கொண்டேயிருக்கிறது.... ஆகவே விவசாயத் தொழிலாளி எப்பொழுதுமே குறைந்தபட்சக் கூலிக்குத்தான் வேலை செய்ய வேண்டியதாகிறது; பஞ்சைத்தனம் என்ற சேற்றுக் குழியிலே ஒரு காலை வைத்துக் கொண்டிருக்கிற நிலையிலேயே அவன் எப்போதும் நிற்கிறான்" (மூலதனம், தொகுதி 1, பக்கம் 668). தானே பாடுபடுகிற நிலத்தில் விவசாயிக்கிருக்கிற தனியுடைமை சிற்றளவான உற்பத்திக்கு அடிப்படையாயும், அது செழுமை பெறவும். சுத்தமான முழு வடிவம் பெறவும் தேவைப்படுகிற நிபந்தனையாகவும் இருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட சிற்றளவான உற்பத்தி ஒரு குறுகிய துவக்கக்கால உற்பத்திக் கட்டுக்கோப்புக்கும் சமுதாயக் கட்டுக்கோப்புக்கும் மட்டுமே பொருத்தமுடையது. முதலாளித்துவத்தின்கீழ் ''விவசாயிகளைச் சுரண்டுவது இயந்திரத் தொழிலில் வேலை செய்து வரும் பாட்டாளி வர்க்கத்தைச் சுரண்டுவதிலிருந்து வடிவத்தில் மட்டும்தான் மாறுபட்டிருக்கிறது. சுரண்டுவது என்னவோ ஒன்றே ஒன்று தான்: மூலதனம். தனித்தனி முதலாளிகள் தனித்தலி விவசாயிகளை அடமானம் மூலமாகவும், கடும் வட்டி மூலமாகவும் சுரண்டுகிறார்கள்; முதலாளி வர்க்கமானது விவசாயி வர்க்கத்தை அரசாங்க வரிகள் மூலமாகச் சுரண்டுகிறது.'' (பிரான்ஸில் வர்க்கப் போராட்டம்.) ''விவசாயியின் சிறு பெறு நிலப்பண்ணையானது, இலாபங்களையும் வட்டியையும் வாடகையையும் முதலாளிகள் விளைநிலத்திலிருந்து வதை அனுமதிப்பதற்குரிய ஒரு சாக்காக மட்டுமே இன்று இருக்கிறது; அதே சமயத்தில், நிலத்தை உழுபவன் தனக்குக் கூலி எப்படிக் கிடைக்கும் என்பதைத் தானே பார்த்துக் கொள்ளும்படி விட்டுவிடப்படுகிறன்" (பதினெட்டாவது புரூமேர்.)" "சாதாரணமாகவே முதலாளித்துவச் சமுதாயத்துக்கு, அதாவது முதலாளி வர்க்கத்துக்கு, விவசாயி தனது கூலியிலும்கூட ஒரு பங்கை ஒப்படைத்து "அயர்லாந்து குத்தகை விவசாயியின் நிலைக்கு...'' இழிந்துவிடுகிறான். "..எல்லாம் தனிப்பட்ட நிலச் சொந்தக்காரன் என்ற வெளிப்பூச்சுக்குள்ளே." (பிரான்ஸில் வர்க்கப் போராட்டம்.) 'முதலாளித்துவ உற்பத்தி முறை அமையப் பெற்றுள்ள நாடுகளைக் காட்டிலும் சிறு விவசாயிகள் மேலோங்கியிருக்கின்ற நாடுகளில் தானியங்களின் விலையைக் குறைத்து வைத்திருக்கிற காரணங்களில் ஒன்று'' எது? (மூலதனம், தொகுதி 3.பக்கம் 340.) அந்தக் காரணம், விவசாயி தனது மிகுதி விளைபொருளின் ஒரு பகுதியைச் சமுதாயத்துக்கு (அதாவது. முதலாளி வர்க்கத்துக்கு) இலவசமாக ஒப்படைத்துவிடுகிறான் என்பதுதான். "(தானியங்கள், இதர விவசாய விளைபொருட்கள் ஆகியவற்றின்) இந்தக் குறைந்த விலையானது உற்பத்தியாளர்களின் வறுமையின் ஒரு விளைவே தவிர நிச்சயமாக அவர்களுடைய உழைப்பின் உற்பத்தித் திறனின் அல்ல.'' (மூலதனம், தொகுதி 3. பக்கம் 340.) விளைவு அல்ல. சிறு நில உடைமை முறை என்பது சிற்றளவான உற்பத்தியின் சகஜமான வடிவமாகும். முதலாளித்துவத்தின் கீழ் அது சீர்குலைந்து, சரிந்து, நாசமடைகிறது. ''சிறு விவசாயிகளின் சொத்து அதன் இயல்பின் காரணமாகவே உழைப்பின் சமுதாய உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கும், உழைப்பின் சமுதாய வடிவங்களுக்கும், மூலதனங்கள் சமுதாய வழியில் குவிவதற்கும், பரந்த அளவிலே கால்நடைகளை வளர்ப்பதற்கும். விஞ்ஞானத்தை மேலும் மேலும் செயல்படுத்துவதற்கும் இடம் கொடுப்பதில்லை. கடும்வட்டி முறையும் வரிவிதிப்பு முறையும் அதை எங்கும் ஏழ்மைக்குள்ளாக்கித் தீரவேண்டும். நிலத்தின் விலைக்காக மூலதனத்தைச் செலவழிப்பதானது அந்த தடை மூலதனத்தைச் சாகுபடியில் ஈடுபடுத்தாமல் செய்கிறது. அத்துடன் உற்பத்திச் சாதனங்கள் அளவின்றி சிதறடிக்கப்பட்டு வீணாக்கப்படுகின்றன, அந்த உற்பத்தியாளர்களே தனிமைப்படுத்தப்படுகிறார்கள்." (கூட்டுறவுச் சங்கங்கள், அதாவது சிறுவிவசாயிகளின் சங்கங்கள், மிகவும் முற்போக்கான முதலாளித்துவப் பாத்திரத்தை வகித்து வருகிற பொழுதே, இந்தப் போக்கை ஒழிக்காமல் பலவீனப்படுத்துகின்றன. அவ்வளவுதான்; மேலும், இந்தக் கூட்டுறவுச் சங்கங்கள் நல்ல நிலைமையிலுள்ள விவசாயிகளுக்கு நிறைய உதவுகின்றன: ஆனால் திரள்திரளான ஏழை விவசாயிகளுக்கு மிகச் சொற்பமாகத்தான் உதவுகின்றன. அநேகமாக உதவுவதில்லை என்றே சொல்லிவிடலாம்; பிறகு இந்தச் சங்கங்களே கூலியுழைப்பைச் சுரண்டுபவையாகவும் ஆகிவிடுகின்றன என்பதை மறந்துவிடக் கூடாது.) "மேலும், மனித சக்தி பிரம்மாண்டமான அளவுக்கு வீணாக்கப்படுகிறது. உற்பத்தி நிலைமைகள் மேலும் மேலும் சீர்குலைவதும் உற்பத்திச் சாதனங்களின் விலை ஏற்றப்படுவதும் சிறு விவசாயிகளுடைய சொத்தின் அவசியமான விதியாகும். தொழில் துறையில் செய்வது போலவே விவசாயத் துறையிலும் "உற்பத்தியாளனைப் பலியிட்டுத்தான்' விலையாகப் பெற்றுத்தான் முதலாளித்துவம் உற்பத்தியின் இயக்கப் போக்கை மாற்றியமைக்கிறது. 'கிராமப்புறத்து உழைப்பாளிகள் அதிகப் பரவலான பிரதேசங்களுக்குச் சிதறடிக்கப்படுதல் இந்த உழைப்பாளிகளின் எதிர்ப்புச் சக்தியை உடைத்தெறிகிறது; ஆனால் நகரத் தொழிலாளர்களிடையே குவியும் தன்மையோ அவர்களுடைய எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துகிறது. நகரத் தொழில்களைப் போலவே நவீனகால விவசாயத்திலும் ஈடுபடுத்தப்படுகிற உழைப்பின் அதிகரித்த உற்பத்தித் திறனும் அளவும் உழைப்புச் சக்தியை வீணடித்தும், நோய்நொடிகள் மூலமாக நாசப்படுத்தியும் உண்டாக்கப்படுகின்றன. மேலும், முதலாளித்துவ முறையிலான விவசாயத்தில் ஏற்படும் முன்னேற்றமெல்லாம் உழைப்பாளியைக் கொள்ளையடிக்கும் கலையில் மட்டுமல்ல, விளைநிலத்தைக் கொள்ளையடிக்கும் கலையிலும் ஏற்படுகிற முன்னேற்றமாகும்.... ஆகவே, எல்லாச் செல்வங்களுக்கும் அசல் ஊற்றுக் கண்ணாயுள்ள விளைநிலத்தையும் உழைப்பாளியையும் உறிஞ்சிவிடுவதின் மூலமாக மட்டுமே முதலாளித்துவ உற்பத்தியானது உற்பத்திக் கலையை வளர்க்கவும், பல்வேறு இயக்கப் போக்குகளை ஒரு சமுதாய முழுமையில் இணைத்து வைக்கவும் செய்கிறது.'' (மூலதனம், தொகுதி 1, 13ம் அத்தியாயத்தின் இறுதி.)

 - வி.இ.லெனின்

(1914 - ஜூலை நவம்பரில் எழுதப்பெற்றது, நூல்திரட்டு, தொகுதி 26, பக்கங்கள் 43- 81லிருந்து)

(தொடரும்....)

அடுத்த பகுதியை படிக்க