சாத்தான்குளம் முதல் திருபுவனம் வரை… காவல்துறை ஏன் அட்டூழியம் செய்கிறது? – இ.பா.சிந்தன்
மாற்று இணையதளம்

காவல்துறையினரால் அஜித்குமார் என்ற இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், தற்போது பரவலாகப் பேசப்படுகிறது. தவறிழைத்த காவல்துறையினர் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் ஒலிக்கிறது. அதற்கேற்ப, ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிற்க! இது தனிநபர்களின் தவறா? அமைப்பு ரீதியான சிக்கலா?
இது காவல்துறையில் உள்ள ஒருசில தனிநபர்களின் தவறு மட்டும்தானா? பல நல்ல காவலர்கள் இருக்கும்போது, எங்கோ ஓரிருவர் மட்டும்தான் இப்படி இருக்கிறார்களா? இதை சில எளிமையான உதாரணங்களுடன் ஆராய்வோம்.
காவல்துறை யாருக்கானது?
ஒரு கிராமத்தில் சுமார் 100 பேர் வாழ்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோமே. அவர்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் ஒரு காவல்நிலையத்தை அமைத்து, அந்த 100 பேரில் இருவரை மட்டும் காவலர்களாக நியமிக்கிறது என்றும் வைத்துக்கொள்வோம்.
அந்த இரு காவலர்களுக்குமான ஊதியம் எப்படி வழங்கப்படுகிறது? மீதமுள்ள 98 பேரின் உழைப்பினால் செலுத்தப்படும் வரியிலிருந்துதான் அந்த இருவருக்கும் மாதாமாதம் ஊதியம் வழங்கப்படுகிறது. அந்த இரு காவலர்களும் பணிபுரியும் காவல்நிலையம் யாருடைய பணத்தில் கட்டப்படுகிறது? அதுவும் மீதமுள்ள 98 பேரின் வரிப்பணத்தில்தான். சரி, அந்த இருவரும் தங்கள் கைகளில் வைத்திருக்கும் ஆயுதங்கள் யாருடைய பணத்தில் வாங்கப்படுகின்றன? அதுவும் அதே 98 பேரின் பணத்தில்தான் வாங்கப்படுகிறது.
ஆக, 98 பேரின் உழைப்பினால், அவர்களைப் பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு காவல்துறையும், அதில் பணிபுரியும் அந்த இருவரும் யாருக்குக் கட்டுப்பட்டுச் செயல்பட வேண்டும்? அந்த 98 பேருக்குத்தானே!
ஆனால், நடைமுறையில் அந்த இரு காவலர்களும் யாருக்குக் கட்டுப்பட்டிருக்கிறார்கள்? அரசாங்கத்திற்குத்தானே. அதனால் அரசாங்கம் என்ன சொல்கிறதோ, அதைச் செய்யும் ஒரு கருவியாகவே காவல்துறை இயங்குகிறது.
ஒருவேளை அந்த அரசாங்கமே மோசமானதாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படித்தானே பெரும்பாலான அரசாங்கங்கள் இருக்கின்றன. அதனால், அந்த 98 பேருக்கும் அந்த அரசாங்கத்தைப் பிடிக்கவில்லை என்றால், அவர்கள் ஆட்சியாளர்களை எதிர்க்கத்தானே செய்வார்கள். தன்னை எதிர்த்து அந்த 98 பேரும் எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது என்பதற்காக, அவர்களை அடக்கி ஒடுக்குவதற்கு அந்த இரு காவலர்களையும் ஆட்சியாளர்கள் நிச்சயம் பயன்படுத்திக்கொள்வார்களா இல்லையா?
ஆம், அதைத்தான் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போதும் கண்டோம். அரசாங்கத்தை எதிர்த்துக் கேள்விகேட்டதற்காகவே, காவல்துறையின் மூலமாக மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆக, தங்களின் வரிப்பணத்தில் ஊதியம் வழங்கும் மக்களின் குரலைக் கேட்காமல், ஆட்சியாளர்களின் கட்டளைகளை மட்டுமே நிறைவேற்றும் ஒரு மக்கள் விரோத அமைப்பாகவே காவல்துறை விளங்குகிறது.
அதிகாரமும் சமூக ஏற்றத்தாழ்வுகளும்
சரி, இது ஒருபுறம் இருக்கட்டும். அதேபோல, அந்த இரு காவலர்களுக்கும் மக்களாகிய 98 பேரில் யாரைப் பிடிக்கவில்லையோ, அவர்களைத் துன்புறுத்தும் அதிகாரம் இயல்பாகவே வந்துவிடுகிறது. ஏனெனில், அந்த இருவரிடம் தான் ஆயுதங்களும் அதிகாரமும் இருக்கின்றன; மீதமுள்ள 98 பேரிடம் ஏதுமில்லை.
சமூகத்தில் ஏற்கெனவே ஏராளமான ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன அல்லவா? அவையும் இந்தக் காவல்துறை அதிகாரத்தால் மேலும் தீவிரமாவதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம்.
உதாரணமாக, சாதி ஏற்றத்தாழ்வை எடுத்துக்கொள்வோம். ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள், ஒடுக்கப்பட்ட சாதியினரை அடிப்பதும் துன்புறுத்துவதும் ஏற்றத்தாழ்வு மிக்க இந்தச் சாதிய சமூகத்தில் மிக இயல்பாகவே நடக்கிறது. அத்தகைய சூழலில், ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் அந்த இரு காவலர்களாகப் பதவியேற்றால் என்ன ஆகும்? மீதமுள்ள 98 பேரில் இருக்கும் ஒடுக்கப்பட்ட சாதியினரின் நிலை என்னவாகும்? காவலர்கள் என்ற அதிகாரம் இல்லாமலேயே தலைவிரித்தாடும் ஆதிக்க சாதியினர், ஆயுதமும் அதிகாரமும் பெற்ற காவலர்களாக மாறினால் என்ன நடக்கும் என்பதைச் சொல்லவா வேண்டும்?
அதேபோல, சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் சொல்லி மாளாதவை. வீட்டுக்குள்ளேயே குடும்பங்களால் படும்பாடு ஒருபுறம் என்றால், வெளியே சென்றால்கூட உடலளவிலும் மனதளவிலும் பெண்களுக்கு அனுதினமும் கொடுமைகள் இழைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழலில், எல்லா அதிகாரமும் படைத்த இரு ஆண்கள் அந்தக் காவலர் பதவிக்கு வரும்போது, மீதமுள்ள 98 பேரில் உள்ள பெண்களின் மீது எத்தகைய வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்.
தருமபுரி மாவட்டத்தின் வாச்சாத்தி கிராமத்தில், சந்தனக்கட்டை தேடுவதாகக் கூறி அத்துமீறி நுழைந்த நூற்றுக்கணக்கான காவல்துறையினர், 18 பெண்களை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்புணர்வு செய்தனர். அதேபோல, தீவிரவாதிகளைத் தேடுவதாகக் கூறி காஷ்மீரின் குனான் மற்றும் போஷ்போரா கிராமங்களில் நுழைந்த இந்திய இராணுவம், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை வன்புணர்வு செய்திருக்கிறது. 1947 முதல் இன்றுவரை இந்திய இராணுவத்தினரால் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில் இருக்கும் என்பதைப் பல மனித உரிமை அமைப்புகளின் புள்ளிவிவரங்கள் நமக்குச் சொல்கின்றன. காஷ்மீரில் வாழும் பெண்களில் 13%க்கும் மேலானோர், இந்திய இராணுவத்தினரால் ஏதேனும் ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக, அங்குள்ள பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் “எல்லைகளற்ற மருத்துவர்கள்” (MSF) என்ற மருத்துவ உதவி அமைப்பு தெரிவித்திருக்கிறது.
இந்திய இராணுவமும் உள்ளூர் காவல்துறையினரும் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பெண்களுக்குச் செய்துகொண்டிருக்கும் அட்டூழியங்கள் எண்ணிலடங்காதவை. மாவோயிஸ்ட்டுகளைப் பிடிக்கிறோம் என்ற பெயரில், மலைவாழ் மற்றும் பழங்குடிப் பெண்களைத் தினந்தோறும் பாலியல் துன்புறுத்துவதை காவல்துறையும் இராணுவமும் வாடிக்கையாகவே வைத்துள்ளன.
இவை எல்லாம் எப்படி நிகழ்கின்றன? மேலே குறிப்பிட்ட அதே காரணத்தால்தான். சமூகத்தில் ஏற்கெனவே புரையோடிப்போயிருக்கும் ஆணாதிக்கத் திமிருடன், அதிகாரத் திமிர் இணைவதால்தான். சாதியாலும், பாலினத்தாலும், பணத்தாலும், மதத்தாலும் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஒரு சமூகத்தில், ஏற்கெனவே ஒரு பகுதி மக்கள் சர்வசாதாரணமாக ஒடுக்கப்படுகிறார்கள். இதில், எல்லையற்ற அதிகாரம் கொண்ட காவல்துறையும் இணைந்து மக்களைக் கொடூரமாக ஒடுக்குகிறது.
தட்டிக் கேட்க முடியாத அதிகாரம்
வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகளைக் கூட நாம் எங்காவது சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்கலாம். அதற்கும் மசியவில்லையென்றால், அடுத்த தேர்தலில் தோற்கடிக்கலாம். ஆனால், நம்முடைய வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு, லத்தியோடும் துப்பாக்கியோடும் வலம்வரும் காவல்துறையையும் இராணுவத்தையும் தட்டிக்கேட்கவோ, பதவியிறக்கவோ நமக்கு எந்த உரிமையும் இல்லாமல் இருக்கிறது.
“சில நல்லவர்களும் காவல்துறையில் இருக்கிறார்கள்தானே” என்ற வாதமும் சரியானதாக இருக்காது. வானளாவிய அதிகாரத்தை அவர்களிடம் வழங்கிவிட்டு, அவர்களில் யாரேனும் விருப்பப்பட்டு நல்லவர்களாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று நாம் காத்துக்கொண்டிருக்க முடியாது.
“இது என் லத்தி, இது என் காவல்நிலையம், இது என் லாக்கப், இது என் காக்கிச் சீருடை, இது என் துப்பாக்கி. நான் யாரை வேண்டுமானாலும் அடிப்பேன், யாரை வேண்டுமானாலும் கொல்வேன், நான் அடிக்கிற எவருக்கும் என் அதிகாரத்தைப் பறிக்கிற உரிமை இல்லை” என்கிற நிலை இருக்கும்வரை, காவல்துறை இப்படித்தான் அத்துமீறி நடந்துகொண்டே இருக்கும். அதுவரையிலும் பல வாச்சாத்திகளையும், காஷ்மீர்களையும், வடகிழக்கு இந்தியாக்களையும், தூத்துக்குடிகளையும் ஸ்டெர்லைட்டுகளையும் நாம் பார்த்துக்கொண்டேதான் இருக்க வேண்டும்.
நமது கோரிக்கை என்னவாக இருக்க வேண்டும்?
மக்களை எப்போதும் அடிமைகளாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள அரசுகள் நினைப்பதையும், அதற்கு அரசின் அதிகார அடியாட்படையாகக் காவல்துறை இருப்பதையும், அதற்காக எல்லையற்ற அதிகாரத்தைக் காவல்துறைக்கு வழங்கியிருப்பதையும் ஒருசேரத் தடுத்தே ஆகவேண்டும் என்ற கோரிக்கையை நாம் அனைவரும் ஒன்றிணைந்து உரக்க எழுப்ப வேண்டும்.
(இ.பா.சிந்தன்)
- மாற்று இணையதளம்
https://maattru.in/2025/07/custodial-deaths/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு