எலான் மஸ்க் இந்திய பயணம்.. தமிழ்நாட்டு நிறுவனத்துடன் டீல்..?!

குட் ரிட்டர்ன்ஸ்

எலான் மஸ்க் இந்திய பயணம்.. தமிழ்நாட்டு நிறுவனத்துடன் டீல்..?!

உலக புகழ்பெற்ற எலக்ட்ரிக் வாகன நிறுவனமான டெஸ்லா, தனது உலகளாவிய செமிகண்டக்டர் சிப் கொள்முதல் விரிவாக்கம் செய்யும் பொருட்டு, இந்தியாவில் முக்கிய உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, டெஸ்லா தற்போது அமெரிக்கா சார்ந்த மைக்ரான், மற்றும் இந்தியாவின் மும்பை அடிப்படையிலான சிஜி செமி (Murugappa குழுமத்தின் ஓர் அங்கமாகும்) ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

டெஸ்லாவின் சர்வதேச சப்ளைகளில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது: 2024 ஏப்ரல் மாதத்தில், டெஸ்லா நிறுவனம் டாடா எலெக்ட்ரானிக்ஸுடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன் மூலம், டாடா நிறுவனம் டெஸ்லாவிற்கு உலகளாவிய பயன்பாட்டுக்காக சிக்னல் செயலிகள் வழங்குகிறது.

இதைத் தொடர்ந்து, தற்போது டெஸ்லா தனது சிப்புகள் உற்பத்தி மற்றும் சோதனை செயல்பாடுகளுக்காக இந்தியாவின் மூன்று பெரிய செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனங்களை அணுகியுள்ளது. இதேவேளையில் எலான் மஸ்க் அடுத்த சில வாரத்தில் இந்தியாவுக்கு வர உள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மைக்ரான் (Micron Technology), சிஜி செமி (CG Semi), டாடா எலெக்ட்ரானிக்ஸ் (Tata Electronics) ஆகிய இந்த மூன்று நிறுவனங்களும் இந்தியாவில் சமீபத்தில் தங்கள் செமிகண்டக்டர் தொழிற்சாலைகளைத் தொடங்கியுள்ளன. இவை அனைத்தும் தனித்தனி வகை தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளன மற்றும் உலக சந்தையை டார்கெட் செய்து இயங்கி வருகிறது.

மைக்ரான் - குஜராத்தில் உள்ள அமெரிக்கா சார்ந்த தொழிற்சாலை: மைக்ரான் டெக்னாலஜி ஒரு முன்னணி மெமரி சிப் உற்பத்தியாளராக, இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தனது தொழிற்சாலையை உருவாக்கியுள்ளது. இங்கு சிப் அசம்பிளி மற்றும் சோதனை (Assembly and Testing) நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன. இது, இந்தியாவிற்குள் மட்டுமல்லாமல், உலக சந்தையிலும் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

சிஜி செமி - முருகப்பா குழுமத்தின் புதிய செமிகண்டக்டர் முயற்சி: சிஜி செமி ஆனது, தமிழ்நாட்டை சேர்ந்த முருகப்பா குழுமத்திற்குட்பட்ட சிஜி பவர், ஜப்பானின் Renesas, மற்றும் தாய்லாந்தின் Stars Micro electronics ஆகிய மூன்று நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இது OSAT (Outsourced Semiconductor Assembly and Test) தொழில்நுட்பத்தில் செயல்படும். இதன் முக்கிய வாடிக்கையாளர் Renesas இருந்தாலும், இது உலகளவில் பல்வேறு நிறுவனங்களுக்கு சேவை செய்யும் திறன் கொண்டதாகும்.

டாடா எலெக்ட்ரானிக்ஸ் - இந்தியா சிப்புகள் உற்பத்தியில் முன்னணி பங்கு வகிக்கிறது: டாடா குரூப் கடந்த சில ஆண்டுகளில் semiconductor தொழில்நுட்பத்தில் பெரிதும் முதலீடு செய்து வருகிறது. டெஸ்லா மற்றும் டாடா இடையிலான ஒப்பந்தம் கடந்த வருடம் வெளியானது. இந்நிலையில், டாடா நிறுவனம் இந்தியாவில் சிப்ஸ் உற்பத்திக்கான அடிப்படை கட்டமைப்புகளை வேகமாக உருவாக்கி வருகிறது.

டெஸ்லாவின் பேச்சுவார்த்தை: டெஸ்லா கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இந்த மூன்று செமிகண்டக்டர் நிறுவனங்களுடன் தனிப்பட்ட முறையில் சந்திப்புகளை நடத்தியுள்ளது. இதில், ஒவ்வொரு நிறுவனமும் எந்தவகை சிப்புகளை உருவாக்குகிறது, இதில் எது டெஸ்லாவுக்கு ஏற்றதாக இருக்கும், எப்போது அந்த உற்பத்தி தொடங்கும், மற்றும் உற்பத்தி விரிவாக்கத்திற்கு எவ்வளவு காலம் எடுக்கப்படும் என்பது போன்ற விஷயங்களை ஆய்வு செய்துள்ளது.

இந்த சந்திப்புகள், டெஸ்லா இந்தியாவில் தனது சப்ளை செயின் அமைப்பை பல வழிகளில் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே நடைபெற்று வருகிறது.

இந்தியா - செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தின் புதிய முகாம்: இந்தியாவில் செமிகண்டக்டர் தொழிற்சாலைகள் உருவாகும் வேகம் சமீபத்தில் அதிகரித்து வருகிறது. மத்திய அரசும், PLI திட்டம் (Production Linked Incentive Scheme) மூலம் semiconductor நிறுவனங்களுக்குப் பெரிதும் ஊக்குவிப்பு அளித்து வருகிறது.

டெஸ்லா இந்தியாவில் EV உற்பத்தி செய்யும் வாய்ப்பு: டெஸ்லா கடந்த சில வருடங்களாக இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி செய்ய முயற்சி செய்து வருகிறது. இதற்கான டெஸ்லா நிறுவனம் மத்திய மாநில அரசுகளுடன் நிலங்கள், வரிவிலக்கு, கொள்முதல் சலுகைகள் போன்றவற்றை ஆலோசனை செய்து வருகிறது.

(Vignesh Rathinasamy)

குட் ரிட்டர்ன்ஸ் 

https://tamil.goodreturns.in/news/tesla-looks-to-india-for-chips-talks-with-micron-cg-semi-and-tata-to-strengthen-global-supply-ch-062745.html

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு