டிரம்பின் வரிக்கொள்கைகள்: பயமா, வியூகமா - பின்னால் இருக்கும் மாஸ்டர் மைண்ட் யார்?
விகடன் இணைய தளம்

உலக வர்த்தக அமைப்பை அமெரிக்காவுக்கு சாதகமாக திருப்ப ட்ரம்ப் அரசு எடுக்கும் முயற்சிகள் பின்னால் இருக்கும் ஹாவர்ட் பட்டதாரி!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் புதிய கட்டணக் கொள்கைகள் உலக பொருளாதாரத்தை உலுக்கிவிட்டிருக்கின்றன.
ஏப்ரல் 2ம் தேதி அவர் அறிவித்த பரஸ்பர கட்டணங்கள் அமெரிக்க பொருளாதார கொள்கையின் புதிய கிளர்ச்சி. அதன் விளைவாக உலகில் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் பங்குச் சந்தை தடுமாறியது.
புதிய சரமாரியான கட்டணங்களுக்கு அவர் 90 நாள் நிறுத்தம் அறிவித்தப் பிறகுதான் சந்தையில் செயல்படுபவர்களும், முதலீட்டாளர்களுக்கும் பெருமூச்சு விட்டனர். ஆனால் இது மிகப் பெரிய தளர்வு அல்ல என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
90 நாள்கள் இடை நிறுத்தம் ஏற்படுத்திய மாற்றம் என்ன?
ட்ரம்ப் அறிவித்துள்ள கட்டண நிறுத்தம் அனைத்து இறக்குமதிக்கும் பொருந்தாது. அடாவடியான வரிகள் நிறுத்தப்பட்டாலும், நடைமுறைபடுத்தப்பட்டுள்ள 10% அடிப்படை வரியே, அமெரிக்காவின் வரி கொள்கையில் மிகப் பெரிய மாற்றம் என்பதை சுட்டிக்காட்டுகின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
(ஏப்ரல் 5 சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்த புதிய குறைந்தபட்ச 10% வரி விகிதம் அனைத்து நாடுகளில் இருந்து வரும் இறக்குமதி பொருள்களும் பொருந்தும். மருந்துகள், மைக்ரோசிப்கள் மற்றும் சில பொருள்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.)
சீனா ட்ரம்ப்பின் வரி நிறுத்தத்தில் சேர்க்கப்படவில்லை. மாறாக வரி விகிதம் 125% ஆக உயர்த்தப்பட்டுள்ளது (இது உலக நாடுகளின் பொருளாதாரத்தை பாதிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன).
உலகின் பல வளரும் நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதால் கிடைக்கும் பொருளாதாரத்தை நம்பியிருக்கின்றன.
வியட்நாமின் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட 30% மதிப்பிலான பொருள்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ட்ரம்ப் அறிவித்த 46% வரி விகிதம் அந்த நாட்டின் பொருளாதாரத்தை மோசமாக பாதித்திருக்கக் கூடும்.
ஆனால், அடிப்படை 10% வரி விகிதமே, இதற்கு முன்னர் பல நாடுகள் அளித்துவந்த குறைந்த விகிதத்தை விட அதிகமானதே. இதுவும் சளைத்ததில்லை!
ஆஸ்திரேலியா, தென் கொரியா உள்ளிட்ட அமெரிக்காவின் கூட்டாளி நாடுகள் வரி இல்லா வணிக ஒப்பந்தங்களைப் பெற்றிருந்தன. இப்போது அவையும் 10% அடிப்படை வரி விகித கொள்கைக்குள் வருவதனால், அந்த நாடுகளின் அமெரிக்காவுடனான வர்த்தக உறவில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
புதிய அடிப்படை வரிவிதம் மூலம் கனடா, மெக்சிகோவுக்கு முந்தைய பதவிக்காலத்தில் அவரே வழங்கிய இலவச வர்த்தக ஒப்பந்தங்களை கிழித்தெறிந்துள்ளார் ட்ரம்ப்.
இது தவிர ஏப்ரல் 2-ம் தேதிக்கு முன்பு அவர் அறிவித்த வரிகளும் நடைமுறையில் உள்ளன.
பொருளாதார வல்லுநர்கள் ட்ரம்ப்பின் நடவடிக்கை அமெரிக்க வர்த்தக வரலாற்றின் திசையை முற்றிலும் மாற்றியிருக்கிறது என எச்சரிக்கின்றனர்.
ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ட்ரம்ப் நிறுத்தத்தை அறிவிப்பதற்கு முன்னர், அமல்படுத்திய அமெரிக்காவின் அனைத்து இறக்குமதிப் பொருள்களின் சராசரி வரி 27%. இது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாதபடிக்கு அதிகம்.
10% அடிப்படை வரி விகிதத்தை மட்டும் அமல்படுத்தி, கூடுதல் வரிகளை நிறுத்திய பிறகு அமெரிக்காவின் அனைத்து இறக்குமதிப் பொருள்களின் சராசரி வரி, 24%. இதுவும் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாதவகையில் அதிகம்தான்.
உலக வர்த்தக அமைப்பை மாற்றியமைக்க முயற்சி
ட்ரம்ப் உலக நாடுகளின் மீது பதிலுக்கு பதில் வரிகளை அறிமுகப்படுத்தியபோது அமெரிக்க பங்குச் சந்தையும் பலத்த வீழ்ச்சியைச் சந்தித்தது. ஆனால் உலக வர்த்தக அமைப்பை முழுமையாக மாற்றியமைக்கும் முயற்சியில் இது சகஜம்தான் எனக் கடந்தார் ட்ரம்ப்.
பின்னர், 90 நாள்கள் நிறுத்தம் அறிவித்தப் பிறகு அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்றம் தெரிந்தது. சிலர், ட்ரம்ப் அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சியால், உலக பொருளாதாரம் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு நிறுத்தத்தை அறிவித்தார் என நம்புகின்றனர்.
சிலர், உலக நாடுகளை வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க ட்ரம்ப் செய்திருக்கும் அதிர்ச்சி நாடகம் என்கின்றனர். ஏனென்றால் ஏற்கெனவே பல உலக நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் ஏற்படுத்த பேச்சுவார்த்தைக்கு வரிசைகட்டியிருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள், உலக வர்த்தக அமைப்பை அமெரிக்காவுக்கு சாதகமாக திருப்பும் என்கின்றனர். இதற்கு பின்னிருக்கும் மாஸ்டர் மைண்ட் யார் தெரியுமா?
பொருளாதார நிபுணர்களும் முதலீட்டாளர்களும் ட்ரம்ப்பின் பரஸ்பர வரி விகித அறிவிப்புகள் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்து வருகையில் அவர்கள் பேசுவது முற்றிலும் தவறானது என வலுவாக மறுத்துவருகிறார் ஸ்டீபன் மிரான்.
இவரைப் பற்றி யாரும் பெரிதாகக் கேள்விப்பட்டிருக்க முடியாது. இந்த முறை ஒரு முடிவோடவே ஆட்சியில் அமர்ந்த ட்ரம்ப், அவரது கொள்கைகளுக்கு ஏற்ற நபராக இவரைத் தேர்ந்தெடுத்து பொருளாதார ஆலோசகர் கவுன்சிலின் (Council of Economic Advisers) தலைவராக்கினார் ட்ரம்ப்.
சீனா அமெரிக்கா மீது பதிலடியாக வரி விகித்தபோது, ஆக்ரோஷமாக 104% கூடுதல் வரி விதித்தது அமெரிக்கா. இத்தகைய ஆக்ரோஷமாக நடவடிக்கைகளைத் தேர்ந்தெடுக்குமிவர், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
முனைவர் பட்டத்திற்கு இவரது வழிகாட்டியாக செயல்பட்டவர், முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனின் பொருளாதார ஆலோசகர் கவுன்சில் தலைவராக (1982-84) இருந்த மார்ட்டின் ஃபெல்ட்ஸ்டீன் என்பது குறிப்பிடத்தக்கது.
முனைவர் பட்டம் பெற்ற ஸ்டீபன், பல பில்லியன் டாலர் உலகளாவிய முதலீட்டு மேலாண்மை நிறுவனமான ஹட்சன் பே கேபிடலில் மூத்த வியூக வகுப்பாளராக பணியாற்றினார்.
இப்போது, உள்நாட்டு மற்றும் சர்வதேச பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதற்கு அதிபருக்கு புறநிலை ஆலோசனை வழங்கும் அமைப்பின் தலைவராக செயல்படுகிறார்.
ஸ்டீபன் மீரான் எழுதிய கட்டுரை
2024, நவம்பர் மாதம் ஹட்சன் பே கேபிடலில் இருந்தபோது, ஸ்டீபன் மீரான், 41 பக்கங்கள் கொண்ட 'உலகளாவிய வர்த்தக அமைப்பை மறுசீரமைப்பதற்கான பயனர் வழிகாட்டி’ ஒன்றை எழுதினார்.
"அமெரிக்காவின் நன்மைக்காக உலகளாவிய வர்த்தக மற்றும் நிதி அமைப்புகளை டிரம்ப் நிர்வாகம் மறுகட்டமைக்கக்கூடிய" ஒரு பாதையையும் அதற்கு அரசின் கொள்கைகளை எப்படிக் கருவியாக பயன்படுத்தலாம் என்பதையும் அந்த வழிகாட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு மற்ற நாடுகளின் சந்தைகளைத் திறப்பதற்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, வரிகளை, இறக்குமதி கட்டணங்களை எப்படி ஒரு கருவியாக பயன்படுத்தி, அந்நியச் செலாவணியைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற யுத்தியை அதில் விளக்கியுள்ளார்.
அதைத்தான் இப்போது ட்ரம்ப் செய்துவருகிறார், சாதிக்க முயற்சிக்கிறார் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மீரான், அமெரிக்க அரசு உலக நாடுகளுக்கு அளித்து வரும் சலுகைகள் தொடர வேண்டுமென்றால், பிற நாடுகளும் அதற்கான சுமையை பகிர்ந்துகொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்.
இதற்காக ஒருதலைபட்சமான பொருளாதார கொள்கைகளை உருவாக்குகிறார்.
உலக வர்த்தக நடைமுறைகளை அமெரிக்காவுக்கு லாபம் தருவதாக மாற்றும்படியான வரி விகிதங்களை அறிவிப்பதன் மூலம் அனைத்து நாடுகளையும் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு இழுப்பதே நிலையில்லாமல் பொருளாதார கொள்களை அறிவித்ததன் நோக்கம் என்கின்றனர்.
ஸ்டீபன் மீரானின் வழிகாட்டுதலை ட்ரம்ப் முழுமையாக பின்பற்றினால், உலக நாடுகளிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு பின்வரும் நடவடிக்கைகளில் ஈடுபட உலக நாடுகளுக்கு நெருக்கடி கொடுக்கப்படும்.
1. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும்போது அதிகப்படியான வரி விகிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
2. அமெரிக்க பொருள்களுக்காக உள்நாட்டு சந்தையை திறந்து, நியாயமற்ற, தீங்கு விளைக்கும் வர்த்தக நடைமுறைகளுக்கு முட்டுக்கட்டையிட வேண்டும்.
3. அமெரிக்காவிலிருந்து இராணுவ, பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க வேண்டும்.
4. வரி விதிப்புகளில் இருந்து தப்பிக்க அமெரிக்காவில் முதலீடு செய்து தொழிற்சாலைகளை நிறுவ வேண்டும்.
5. உலகளாவிய பொது விஷயங்களுக்கு நிதியளிக்க அமெரிக்க கருவூலத்துக்கு பணம் செலுத்த வேண்டும்.
(Antony Ajay R)
- விகடன் இணைய தளம்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு