அரசு மருத்துவ கல்லூரிகளில் இவ்வளவு அவலங்களா..?

அறம் இணைய இதழ்

அரசு மருத்துவ கல்லூரிகளில் இவ்வளவு அவலங்களா..?

‘தமிழகத்தில் இன்னும் 10 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரமும் ரத்தாகலாம்’ என்ற நிலைமை உள்ளது! இது ஏதோ தொழில் நுட்ப கருவிகளை சரியாக பராமரிக்காததால் உருவான பிரச்சினையல்ல. அரசு மருத்துவ கல்லூரிகளின் அடிப்படை தேவைகளே போதாமையாக உள்ளன! பேராசிரியர்களும், மாணவர்களும் கொந்தளிப்பில் உள்ளனர்.

தமிழகத்தில் சென்னை ஸ்டான்லி மற்றும் திருச்சி, தருமபுரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளதானது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால், இந்த மூன்று கல்லூரிகளில் நடப்பாண்டு 500 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்துவதில் தடை ஏற்பட்டுள்ளது.

தேசிய மருத்துவ ஆணைய (என்எம்சி) அதிகாரிகள் ஆண்டுதோறும் மருத்துவக் கல்லூரிகளை ஆய்வுசெய்து, அவற்றின் அங்கீகாரத்தைப் புதுப்பிப்பது என்பது வழமையான ஒன்று தான். இதனால், அவர்களின் வருகைக்கு முன்பாகவே கல்லூரிகளின் குறைகள் என்னென்ன என கண்டறியப்பட்டு நிவர்த்தி செய்ய வேண்டியது சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் கடமையாகும். ஆய்வின் போது குறைகள் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரியிடம் விளக்கம் கேட்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்தில் குறைகள் அனைத்தும் சரிசெய்யப்பட அவகாசமும் வழங்குவார்கள்.

பொதுவாக முன் கூட்டியே குறைகளை களையாத நிலையில், இந்த அவகாசத்தைப் பயன்படுத்தி சீர் செய்து விடுவார்கள் என்பதே நடைமுறை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக தமிழக அரசு இரண்டு வாய்ப்புகளையுமே பயன்படுத்தவில்லை என்பது தான் உண்மை! அப்படியும் குறைகள் சரி செய்யப்படவில்லை என்றால் மட்டுமே, அங்கீகாரம் ரத்து செய்யப்படும். அது தான் நடந்துள்ளது.

இந்தப்படி, கடந்த மாதம் தமிழகத்தில் என்எம்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆய்வு செய்தபோது, பேராசிரியர்கள், மாணவர்களுக்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு மற்றும் சிசிடிவி கேமராக்கள் முறையாக இல்லாததும், உரிய முறையில் பராமரிக்கப்படாமல் இருந்ததும் தெரிய வந்தது. தலை நகரான சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவ கல்லூரியின் நிலைமையே இந்த கதியில் இருப்பது தான் கொடுமை! அதுவும், திருச்சி மருத்துவ கல்லூரி நிலைமைகள் படுமோசம். மாணவர்கள் போராட்ட மன நிலையில் உள்ளனர். தர்மபுரி மருத்துவ கல்லூரியோ  பற்றாக் குறைகளின் தடுமாற்றத்தில் உள்ளது. அங்கு கொந்தளிப்பான மன நிலை நிலவுகிறது.

திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி

இதையடுத்து, இந்த குறைபாடுகளுக்காக ஏன் மூன்று மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று கேள்வி எழுப்பி, தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது என்பது எதிர்பாராத ஒன்றல்ல!

ஏனென்றால், முதல்கட்டமாக மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் அளித்த விளக்கத்தை ஆணையம் ஏற்க மறுத்தது என்பது கவனத்திற்கு உரியதாகும். அப்படியும் குறைகளை சரிசெய்ய காலஅவகாசம் வழங்கியது. இதையடுத்து, குறைகளை சரிசெய்து, அங்கீகார ரத்து நடவடிக்கையை தடுப்பதற்கான முயற்சியில் மூன்று மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களும்  ஈடுபடாமல் அலட்சியம் காட்டியது ஏன் என்று தான் புரியவில்லை.

அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு இருக்க வேண்டும் என்றும், கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்றும் ஏற்கெனவே தேசிய மருத்துவ ஆணையம் கறாராக உத்தரவிட்டிருந்தது. அதை முறையாகப் பின்பற்ற முடியாததற்கு காரணம் மூன்று மருத்துவ கல்ல்லூரிகளிலும் போதுமான பேராசிரியர் பணியிடங்கள் நிரப்படாமல் உள்ளன. இவை பொருத்தப்படும் பட்சத்தில் அந்தக் குறை பட்டவர்த்தனமாக தெரிய வந்துவிடும் என்பதாலேயே இந்த குறுக்கு வழியை அரசு நிர்வாகம் கையாண்டுள்ளது.

ஆக, மேலோட்டமாகப் பார்த்தால், இதற்கு ஏன் அங்கீகாரம் ரத்து செய்துள்ளார்கள் எனத் தோன்றும். ஆனால், சில பிரிவுகளுக்கு பாடம் நடத்த பேராசிரியர்களே இல்லை என்பது மிகப் பெரிய குறையல்லவா? காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் தேசிய மருத்துவ ஆணையம் விதித்துள்ள வருகைப் பதிவேட்டு (biometric) கருவியில் விடுப்பு எடுத்த ஆசிரியர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை  நிறைவேற்ற இயலாது

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட 1,400 பேராசிரியர் பணியிடங்களில் ஏறக்குறைய 450 பணியிடங்களும், 1,600 இணைப் பேராசிரியர் பணியிடங்களில் 550 பணியிடங்களும் காலியாக இருக்கிறது. திமுக அரசு பதவி ஏற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் பதவி உயர்வு கலந்துரையாடலே நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என பேராசிரியர்கள் தரப்பில் வருத்ததுடன் சொல்கிறார்கள். இப்படி இருந்தால் மாணவர்களுக்கு எப்படி சரியான கல்வி கிடைக்கும்? மொத்தத்தில் தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளைப் பொருத்த அளவில் பேராசிரியர்களும் சரி, மாணவர்களும் சரி சந்தோஷமாக இல்லை. பெருத்த அதிருப்தியில் தான் உள்ளனர்.

இருக்கும் பேராசிரியர்களை பணி நிரவல் செய்தாலும் கூட, தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏறக்குறைய 40%, பற்றாக்குறை இருக்கும். அதாவது, பட்டவர்த்தனமாக சொல்ல வேண்டும் என்றால், மேலும் 10 கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள் என்பதும் வெளிப்பட்டுவிடும். அவற்றின் அங்கீகாரமும் நீக்கப்படக் கூடிய சூழல் உருவாகலாம்.

இப்போதே சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 250, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் 150, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் 100 என மொத்தம் 500 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த விவகாரத்தால், நடப்பாண்டில் இந்த 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 500 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதில் தடை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”தேசிய மருத்துவ ஆணையம், சிசிடிவி கேமராக்கள் இல்லை என்று சிறிய குறையை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு உடனடியாகத் தீர்வு காணப்படும். அதேபோல, பழுதடைந்துள்ள சிசிடிவி கேமராக்களையும் விரைவில் சரி செய்துவிடுவோம். ஆனால், இதற்காக அங்கீகாரத்தை ரத்து செய்வதாக நோட்டீஸ் அனுப்பியது வருத்தத்துக்குரியது. இந்த சிறிய குறைகளுக்காக, அங்கீகாரம் ரத்து போன்ற பெரிய வார்த்தைகளைக் கூறுவது, மாநிலத்தின் மீது அவர்கள் காட்டும் பாகுபாட்டை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வருவதாலும், அரசியல்ஆதாயத்துக்காகவும் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கட்டமைப்புகளை குறைசொல்வது போன்ற செயல்களை தவிர்த்துக்கொள்வது நல்லது” என அரசியல் ரீதியாக இந்தப் பிரச்சினையை திசை திருப்புகிறார், சுகாதாரத் துறைஅமைச்சர். திமுகவின் தோழமை கட்சிகளும் தமிழக அரசுக்கு ஆதரவாக கண்டண அறிக்கைகள் தந்துள்ளன. இந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி தான் சரியாக குறைகளை சுட்டிக் காட்டியுள்ளது.

தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் சென்னை மருத்துவக் கல்லூரி போன்ற ஒரு சில கல்லூரிகளை தவிர்த்து பல கல்லூரிகளில் மருத்துவ ஆய்வகங்கள் கூட சரியாக பராமரிக்கப்படுவதில்லை. அங்கே நவீன கருவிகள், மருத்துவ சாதனங்கள் இல்லை. போதுமான லேப் டெக்னீசியன்கள், உதவியாளர்கள் இல்லை, மருத்துவ கருவிகள் பழுதடையும் பட்சத்தில் அவற்றை சரி செய்ய ஆட்கள் இல்லை போன்ற அவலங்கள் உள்ளன. அரசு மருத்துவ கல்லூரிகளே இந்த லட்சணத்தில் இயங்கினால் தனியார் மருத்துவ கல்லூரிகள் இதை சாக்காகக் கூறி தாங்களும் தவறு செய்வார்கள்!


இவற்றை சரி செய்யாமல் அரசியல் ரீதியாக பிரச்சினையை அணுகுவதால், எந்த விதத்திலும் பிரச்சினைகள் தீர வழிவகுக்காது! தமிழக மருத்துவத் துறையின் எதிர்காலமும், மக்களின் நல வாழ்வும் தான் கேள்விக்குரியாகும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

https://aramonline.in/13741/t-n-medical-colleges-license-cancel/

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு