தொண்டு நிறுவனங்கள்: ஏகாதிபத்தியத்தின் ஏவல் அமைப்புகள் - முன்னுரை

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

தொண்டு நிறுவனங்கள்: ஏகாதிபத்தியத்தின் ஏவல் அமைப்புகள் - முன்னுரை

முன்னுரை

தொண்டு நிறுவனங்கள் குறித்து ம.ஜ.இ.க மற்றும் சமரன் வெளியிட்ட கட்டுரைகளையும், பிற பத்திரிகைகள், இணைய தளங்களில் வெளிவந்த கட்டுரைகளையும் இணைத்து ஒரே நூலாக காலத்தின் தேவை கருதி ம.ஜ.இ.க வெளியிடுகிறது. 

தொண்டு நிறுவனங்களின் அரசியல்-பொருளாதாரம்

தொண்டு நிறுவனங்களின் வர்க்க குணாம்சத்தைப் பார்க்கும் போது, இவர்கள் புதியதொரு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றே கருதலாம். இவர்கள் பூர்வீகச் சொத்துடமை அல்லது அரசின் ஊதியத்தைச் சார்ந்து வாழ்பவர்கள் அல்ல. குறிப்பிட்ட சில முக்கியமான மக்கள் திரள் அமைப்புகளை கட்டுப்படுத்தும் தமது சொந்த ஆற்றலையும், ஏகாதிபத்தியத்திடம் இருந்து பெறும் நிதியையும் சார்ந்து வாழ்பவர்கள். எனவே இவர்கள் புதிய வகைப்பட்ட தரகு கூட்டத்தினரே ஆவர்.

தொண்டு நிறுவனங்கள் (அ) அரசு சாரா அமைப்புகள் என்பன ஏகாதிபத்திய நிதி மூலதனத்திற்கு பிறந்த தரகு அமைப்புகள். இவை ஏகாதிபத்தியங்களுக்கும் மற்றும் புதிய காலனி நாடுகளின் தரகு முதலாளித்துவ கும்பலுக்கும் சேவை செய்யும் ஏவல் அமைப்புகள். சாரமாக சொல்வதெனில் அவை ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள்.

ஏகாதிபத்தியம் மற்றும் காலனிய-அரைக் காலனிய நாட்டு கார்ப்பரேட்டுகளை எதிர்த்த மக்கள் போராட்டங்களை திசை திருப்புதல், வர்க்கப் போராட்டங்களை அடையாள அரசியல் போராட்டங்களாக சீரழித்தல், கம்யூனிச மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய விடுதலைப் போராட்ட அமைப்புகளுக்குள் ஊடுருவி அவற்றை ஒழித்துக் கட்டுதல், அரசியல் முன்னணிகளை கட்சி சார்பற்றவர்களாக மாற்றுதல், மற்றும் இன்னபிற ஐந்தாம்படை வேலைகளையும் செய்வதே தொண்டு நிறுவனங்களின் 'இலக்கு' ஆகும்.

அரசு சாரா அமைப்புகள் தம்மைப் பற்றி கூறிக்கொள்வது போன்று அவை அரசு சாரா அமைப்புகள் அல்ல. அரசு சார்பு அமைப்புகளேயாகும். ஏகாதிபத்திய நாடுகளில் இருந்து இவை நிதி உதவி பெறுகின்றன. உள்நாட்டு (இந்தியா போன்ற) அரசிடமிருந்து தனிப்பட்ட துணை கான்டிராக்டர்கள் என்ற முறையில் இவை நிதி உதவி பெறுகின்றன. தத்தமது நாட்டு அரசுகளுடன் நெருக்கமான உறவுகள் கொண்டுள்ள பன்னாட்டு நிறுவனங்களின் மானியத்தால் நடக்கும் தனிப்பட்ட அறக்கட்டளைகளிடமிருந்தும் அவை நிதி உதவி பெறுகின்றன. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல்வேறு அரசுகளின் ஏஜென்சிகளுடன் அடிக்கடி வெளிப்படையாக ஒத்துழைத்து வேலை செய்கின்றன.

இந்த அரசு சாரா அமைப்புகள் (NGO) தமது திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவை அல்ல. நிதி உதவி அளிக்கும் வெளிநாட்டு எஜமானர்களுக்கு மட்டும்தான் இவை பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளன. நிதி உதவி அளிப்பவர்தான் இவற்றின் வேலைகளைப் பரிசீலிக்கின்றனர். மேற்பார்வையிடுகின்றனர். நிதி அளிப்பவரின் நிபந்தனைகளுக்கும் நலன்களுக்கும் ஏற்பவே இவை செயல்பட முடியும். அதாவது நிதி உதவி அளிக்கும் ஏகாதிபத்தியத்தைச் சார்ந்து அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் தரகு அமைப்புகளே தொண்டு நிறுவனங்களாகும்; அவை ஒன்றும் சுதந்திரமான அமைப்புகள் அல்ல.

அரசு சாரா அமைப்புகளுக்கு ஏகாதிபத்திய நாடுகள் நிதி உதவி அளிப்பது என்பது, உள்நாட்டு பிற்போக்கு கும்பல்கள் ஏகாதிபத்திய நலன்களைக் காக்க முடியாமல் போகும் பட்சத்தில் ஏகாதிபத்திய நலன்களை காப்பீடு செய்வதற்கே ஆகும். அவ்வகையில் நிலவும் பிற்போக்கான அமைப்பை பாதுகாக்கும் சேஃப்டி வால்வுகளாக (Safety valve) தொண்டு நிறுவன கும்பல் செயல்படுகின்றன. 

முதலாளித்துவ சமூக அமைப்பு என்பது மிகு உற்பத்தி நெருக்கடியை அடிப்படையாகக் கொண்டது. இந்த சமூக அமைப்புக்குள்ளாகவே இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு (அ) தீர்வு காண்பதற்கு சாத்தியமில்லை என்பது சமூக விஞ்ஞான ரீதியான புரிதல் மட்டுமல்ல, கடந்தகால வரலாறும் நமக்கு அதையேதான் நிரூபித்துள்ளது. ஆளும் வர்க்கங்கள் இந்நெருக்கடியை உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதன் மூலமே தீர்வு காண முயல்கிறது. நெருக்கடியின் சுமைகளை எதிர்த்துப் போராடும் மக்களின் உண்மையான போராட்டங்களை திசைத்திருப்பியும், அதன் வர்க்க குணாம்சத்தை மூடிமறைத்தும் ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்யும் கோடாரிக் காம்புகளாக அரசு சாரா தன்னார்வ அமைப்புகள் செயல்படுகின்றன. வர்க்க கண்ணோட்டத்தை மறுக்கும் எல்லாவிதமான அடையாள அரசியலும் தொண்டு நிறுவனங்களின் மையமான செயல்தந்திரமாக விளங்குகின்றன. 

ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை எதிர்த்து சவால்விடும் அளவுக்கு பரந்துபட்ட மக்கள் இயக்கங்களின் எழுச்சிகள் நடந்த போதுதான் அரசுசாரா நிறுவனங்கள் பல்கிப் பெருகின.

ஒரு நாட்டை அடிமைப்படுத்துவதற்கு ஏகாதிபத்தியங்கள் இரண்டு வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன. 

  1. இராணுவ ரீதியாக போரிட்டு அடிமைப்படுத்துவது
  2. ஏகாதிபத்திய நிதி உதவி பெறும் அரசு சாரா தன்னார்வ அமைப்புகள் மூலம் வர்க்கப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்து தனக்கான பொம்மை ஆட்சியை நிறுவுவது

அதாவது, ஏகாதிபத்திய புதிய காலனியாதிக்கத்தின் கூர் தீட்டப்பட்ட இரட்டை ஆயுதங்களாக, இருபக்க கூர்வாள்களாக இராணுவமும் தொண்டு நிறுவனங்களும் விளங்குகின்றன.

இவ்வாறு, இந்த சுரண்டல் சமூக அமைப்பை கட்டிக் காப்பாற்றும் விதமாக தொண்டு நிறுவனங்களை ஏகாதிபத்திய நாடுகள் "வேட்டை நாய்களாக" ஊட்டி வளர்க்கின்றன.

தமக்கு அடங்க மறுக்கும் நாடுகளில் உள்ள ஆட்சிகளை "பல வண்ணப் புரட்சி மற்றும் மலர் புரட்சிகள்" மூலம் கவிழ்ப்பது, ஏகாதிபத்தியங்களின் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் "போர்த்தந்திரமாக" உள்ளது. மத்திய ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளின் ஆட்சிகளை "இவ்வண்ணமே" அமெரிக்கா கவிழ்த்து தனது பொம்மை ஆட்சிகளை நிறுவியது. சோவியத் யூனியனை பிளவுபடுத்தவும், அதிலிருந்து பிரிந்த நாடுகளில் (ஜார்ஜியா, உக்ரைன், கிர்கிஸ்தான்) உள்நாட்டு கலகத்தின் மூலமும், அமைதி வழியில் பல வண்ணப் புரட்சிகள் மூலமும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் தொண்டு நிறுவனங்கள் பெரும் பங்காற்றின. 

பயங்கரவாத எதிர்ப்பு, பேரழிவு ஆயுதங்களை ஒழிப்பது எனும் பேரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆப்கனிலும், ஈராக்கிலும் இராணுவத் தலையீட்டின் மூலம் பல இலட்சம் மக்களை கொன்றொழித்து அந்நாடுகளில் நடந்த ஆட்சி மாற்றத்திற்கு தொண்டு நிறுவனங்கள் பெரும் உதவி புரிந்தன. லிபியா மற்றும் சிரியாவில் மக்களை தூண்டிவிட்டு உள்நாட்டுக் கலவரம் நடத்தியது; ஈரானை மிரட்டியது;  அண்மையில் இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளில் ஷாங்காய் ஆதரவு ஆட்சிகளை எதிர்த்த போராட்டங்களில் தமது தொண்டு நிறுவனங்களை ஊடுருவவிட்டு ஆட்சிகளை கவிழ்த்தது என இதற்கு பல உதாரணங்களைக் கூற முடியும். யூகோஸ்லேவியாவில் நடந்த புல்டோசர் புரட்சி (2000), ஜார்ஜியாவில் ரோஸ் புரட்சி (2003), யுக்ரைனில் ஆரஞ்சு புரட்சி (2004), கிர்கிஸ்தானில் துலிப் புரட்சி (2005), அர்மினியாவில் வெல்வட் புரட்சி(2018), அரபு வசந்தம் (2010-2012) போன்றவைகளும் கடந்தகால உதாரணங்களாக உள்ளன.

அரபு நாடுகளில் ஆட்சி கவிழ்ப்புக்கான "அரபு வசந்தம்" தங்களது யுத்தத்தந்திரமே என ஹிலாரி கிளிண்டன் ஒப்புதல் வாக்குமூலமே தந்தார். 2011 பிப்ரவரி 15ம் தேதி ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும்போது "அரபு நாடுகளில் அரசு எதிர்ப்பு கிளர்ச்சிக்காக பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் ஒரு வலைப் போரை (web war) நடத்துவதற்கு நாங்கள் உதவி செய்தோம். அதேபோல ரசிய, சீன, இந்தி மொழிகளில் இணையதளப் பிரச்சாரத்தை துவக்கி உள்ளோம்" என்று அவர் கூறினார்.

ஏகாதிபத்தியங்களின் முக்கியமான "புதிய காலனிய ஆயுதங்களாக" அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் விளங்குகின்றன என்பதை இவை அப்பட்டமாக நமக்கு உணர்த்துகின்றன. கத்தியின்றி, இரத்தமின்றி "அமைதி வழியில்" புதிய காலனிய பொம்மை அரசுகளை ஏகபாதிபத்தியங்கள் உருவாக்க, இவ்விதம் பிரதான கூலிப்படைகளாக தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன.

அரசுகளுக்கு எதிரான தன்னெழுச்சியான போராட்டங்களை தொண்டு நிறுவனங்கள் மூலம் கட்டியமைப்பது மட்டுமின்றி, இராணுவ மற்றும் ஆயுதக் குழுக்களுக்கும் கூட ஏகாதிபத்தியங்கள் நிதியுதவி அளித்து தமது புதிய காலனிய நலன்களுக்கு பயன்படுத்துகின்றன. அதாவது தமது மேலாதிக்க மற்றும் மறுபங்கீட்டு நலன்களுக்காக இராணுவம், ஆயுதக் குழுக்களை ஊட்டி வளர்க்கின்றன. மேலும் தமது இராணுவ ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக, அதை நியாயப்படுத்தும் பிரச்சாரங்களையும் தொண்டு நிறுவனம் மூலமே ஏகாதிபத்தியங்கள் செய்கின்றன. (உ.ம். வியட்நாம், ஈராக், ஆப்கான்) அல்லது ஏற்கனவே உருவான ஆயுதக் குழுக்களை தமது ஏவல் படைகளாக மாற்றுகின்றன. எகிப்தில் முபாராக் ஆட்சியை வீழ்த்த எகிப்து இராணுவத்தையும், இஸ்லாமியத் தொண்டு நிறுவனமான "இஸ்லாமிய சகோதரத்துவம்" எனும் தொண்டு நிறுவனத்தையும் அமெரிக்கா பயன்படுத்தியதை இதற்கு உதாரணமாக கூறலாம். மேலும் சிரியாவில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு ஆயுதக் குழுக்களுக்கும் கூட அமெரிக்கா நிதியுதவி அளித்து ஊட்டி வளர்த்ததை நாம் காண்கிறோம். ஷியா, சன்னி பிரிவினரிடையே மத மோதல்களை உருவாக்கி கலவரங்களுக்கு தலைமை தாங்கியதையும் காண்கிறோம். எனவே மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை மட்டுமின்றி, ஆயுதக் குழுக்களையும் தமது காலனிய நலன்களுக்கான தொண்டு நிறுவனங்களாக ஏகாதிபத்தியங்கள் மாற்றியமைக்கின்றன என்பதும், இராணுவ ஆக்கிரமிப்புகளை நியாயப்படுத்தும் பிரச்சாரங்களை NGO மூலம் செய்கின்றன என்பதும் தெளிவு.

இந்தியாவில் என்.ஜி.ஓ. படையெடுப்பு

1960களில் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏகாதிபத்திய காலனியாதிக்கம், சுரண்டல் மற்றும் அடக்குமுறைகளை எதிர்த்து தேச விடுதலைப் போராட்டங்கள் வெடித்தன. அவற்றை திசைத் திருப்பும் பொருட்டு அந்நாடுகளில் ஏகாதிபத்தியங்கள் தொண்டு நிறுவனங்களை துவக்கி நிதி உதவி அளித்தன. அதன் ஒரு பகுதியாக இந்தியாவிலும் தொண்டு நிறுவனங்கள் படையெடுத்தன. அவற்றில் ஒன்றுதான் ரஜினி கோத்தாரி தலைமையில் 1963-ல் உருவாக்கப்பட்ட வளரும் சமூகங்களுக்கான ஆய்வு மையம் (CSDS - Centre for Sudy of Developin Societies) ஆகும். இது கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஆசியன் அறக்கட்டளை, ஃபோர்டு அறக்கட்டளையின் நிதியில் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இந்திய NGOக்களின் முன்னோடியான கோத்தாரி இந்தியாவில் "சாதிய அரசியல்" எனும் அடையாள அரசியலை வர்க்க அரசியலுக்கு மாற்றாக முன்வைத்தவர்.

இந்திரா அரசு சோவியத் சமூக ஏகாதிபத்திய நலன்களிலிருந்தும், பாகிஸ்தான் மீதான போரால் (வங்கப் பிரிவினைக்காக) ஏற்பட்ட நெருக்கடியிலிருந்தும் "எமர்ஜென்சி" ஆட்சியை திணித்தது. இந்திய வரலாற்றில் தோன்றிய முதல் பாசிச ஆட்சியான பாசிச இந்திரா ஆட்சியை CPI ஆதரித்தது. இந்திரா ஆட்சியை எதிர்த்த ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஜனதா கட்சியின் போராட்டங்களை அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் தொண்டு நிறுவனங்கள் குறிப்பாக ரஜினி கோத்தாரியின் தொண்டு நிறுவனமும் ஆதரித்தது. CPM கட்சியும் இப்போராட்டங்களை ஆதரித்தது. மட்டுமின்றி 1977 தேர்தலில் ஜனதா ஆட்சி அமைவதற்கு மறைமுகமாக ஆதரவும் அளித்தது. இவ்வாறு CPI, CPM கட்சிகளின் ஏகாதிபத்திய சார்பின் வரலாறு அப்போதிருந்தே தொடங்கிவிட்டது.

ரசியாவில் குருசேவின் நவீன திருத்தல்வாதமும், அதன் இறுதிக் கட்டமான கோர்ப்பசேவ் கலைப்புவாதமும் அமெரிக்க நிதி மூலதனத்தின் ஆதரவுடன்தான் நடந்தேறியது. கோர்ப்பசேவ் 1987-88ல் சோவியத் யூனியனை கலைத்துவிட்டு "கம்யூனிசம் தோற்றுவிட்டது; வரலாறு முடிந்துவிட்டது" என்று அமெரிக்க மேடையில் நின்றுகொண்டுதான் அறிவித்தான்.

ரசியாவைத் தொடர்ந்து சீனாவிலும் முதலாளித்துவ மீட்சி ஏகாதிபத்தியத்தின் ஆசியுடன் நடந்தேறியது. அமெரிக்க - ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள், அதன் தொண்டு நிறுவனங்கள், திருச்சபைகள் மற்றும் ஃபிராங்ஃபர்ட் பள்ளி எனும் கூட்டிணைவின் தலைமையில் கம்யூனிச அமைப்புகளில் கலைப்புவாதத்தை ஊடுருவவிட்டு உடைத்தன. இந்த துரோகத்தனமான காரியத்தை இங்கு  அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை, ரவிக்குமார் போன்றோர் துவக்கி வைத்தனர். இவர்கள் அனைவரும் ஜெயப்பிரகாஷ் நாராயணன், ரஜினி கோத்தாரி ஆகியோர் உருவாக்கிய PUCL-ன் வார்ப்புகள்.

1960களில் குருசேவின் நவீன திருத்தல்வாதத்தையும், பிறகு 1980களில் கோர்ப்பசேவின் கிளாஸ்நோஸ்ட் மற்றும் பெரஸ்டோரிகா எனும் தாராளமய பொருளாதார கொள்கைகளையும், சோவியத் யூனியனின் கலைக்கப்பட்டதற்கு பிறகு உருவாக்கப்பட்ட கலைப்புவாதக் கருத்துகளையும் அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை போன்ற ஏகாதிபத்திய "ஏவல் அறிவாளிகள்" முன்னெடுத்தனர். "ஸ்டாலினின் எதேச்சதிகார எதிர்ப்பு" எனும் பெயரில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே தவறு எனும் குருசேவிய-டிராட்ஸ்கிய குப்பைகளை பரப்பினர். மார்க்சியம் குறையுள்ளதால்தான் அது தோற்றுவிட்டது; அக்குறைகளை பெரியார், அம்பேத்கர் மற்றும் காந்தியின் கருத்துகளைக் கொண்டு இட்டு நிரப்ப வேண்டும் எனும் "மண்ணுக்கேத்த மார்க்சியத்தை" கம்யூனிச அமைப்புகளில் பரப்பினர். இக்கருத்துக்களை CPI, CPM மட்டுமின்றி எம்.எல். அமைப்புகளும் ஏற்றுக் கொண்டன. இந்த கலைப்புவாத முதலாளித்துவ சித்தாந்தங்களை தமது அமைப்பு சித்தாந்தங்களாக வரித்துக் கொண்டன.

அ.மார்க்ஸ் கும்பல் நிறப்பிரிகை, மக்கள் கல்வி மையம் எனும் தொண்டு நிறுவன அமைப்புகளை உருவாக்கி இவற்றை பரப்பின. எஸ்.வி.ராஜதுரை ரஜினி கோத்தாரியின் லோகாயன் (Lokayan) எனும் (ஃபோர்ட் பவுன்டேஷண், ஆசியன் பவுன்டேஷண் நிதியில் இயங்கும்) தொண்டு நிறுவன இதழின் வாயிலாக இவற்றை பரப்பினார். லோகாயன் ஆசிரியர் குழுவில் செயல்பட்டுக் கொண்டே மக்கள்யுத்தக் குழுவில் எஸ்.வி.ராஜதுரை ஊடுருவினார்.

பு.ப.இ (புரட்சி பண்பாட்டு இயக்கம்) அமைப்பில் கலைப்புவாதத்தையும், தலித்தியம், வன்னியரியம் உள்ளிட்ட சாதிவாதத்தையும் இக்கும்பல் பரப்பியது. விசிக, வன்னியர் சங்கம் போன்ற சாதிவாத அமைப்புகளின் உருவாக்கத்திற்கு "சித்தாந்த" வழிகாட்டுதலை அ.மார்க்ஸ், ரவிக்குமார் போன்றோர் தந்தனர், பு.ப.இ. அமைப்பிலும், கட்சியிலும் உள்ள தோழர்களிடையே சாதியவாதத்தை புகுத்தி காயடித்து வி.சி.க-வன்னியர் சங்கத்திற்கு ஆள்பிடித்து கொடுத்தனர். பு.ப.இ, ம.யு.கு (PWG)-வை உடைத்து நாசமாக்கினர்.

அன்னியமாதல், இருத்தலியம், அறியவொணாவாதம் போன்றவற்றையும், லெனினுக்கு வாரிசு டிராட்ஸ்கிதான்;  ஸ்டாலின் அல்ல என்றும்; ஏகாதிபத்தியங்களுக்குள் முரண்பாடு  - போர் இல்லை என்றும்; ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு எதேச்சதிகாரக் கோட்பாடு எனவும் மார்க்சிய விரோதக் கருத்துகளை 'பிராங்பர்ட் மார்க்சியம்' எனும் பேரில் தொண்டு நிறுவனங்கள் வாயிலாகப் பரப்பினர். இதற்கு ஃபோர்ட், ராக்பெல்லர் மற்றும் பில்கேட்ஸ் அறக்கட்டளைகள் நிதி உதவி தந்தன. அவர்களின் நோக்கம் கம்யூனிச அமைப்புகளை ஒழித்துவிட்டு, அவ்விடத்தில் கம்யூனிச அமைப்பைப் போன்ற ஒன்றை நிறுவுவதாக இருந்தது. அதாவது "வடிவத்தில் கம்யூனிசம்; உள்ளடக்கத்தில் முதலாளித்துவம்" என்பதாக இருந்தது.

சிங்களப் பேரினவாத அரசின் ஆதரவில் செயல்படும் ஸ்ரீலங்கா டெமாக்ரடிக் ஃபோரம் (SLDF), லிட்டில் எய்டு (Little Aid) போன்ற தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த ஷோபாசக்தி,  சுசீந்திரன், சுகன் போன்ற "புலி" எதிர்ப்பாளர்கள் - தமிழீழ எதிர்ப்பாளர்களுடன் சேர்ந்துக் கொண்டு அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை, ரவிக்குமார்  ஆகியோர் தமிழகம், கேரளாவில் ஈழத்திற்கும் 'புலிகளுக்கும்' எதிரான துரோகத்தனமான கருத்துகளைப் பரப்பினர். 

இவர்கள்தான் இங்கு மார்க்சிய அறிஞர்களாகவும், மனித உரிமை ஆர்வலர்களாகவும் CPI, CPM, லிபரேசன், எய்ம் மற்றும் எம்.எல் அமைப்புகளால் அறிமுகப்படுத்தப்பட்டு அவற்றின் மேடைகளை அலங்கரிக்கிறார்கள். எஸ்.வி.ராஜதுரைக்கு 'மார்க்சிய அறிஞர்" பட்டத்தை CPM வழங்குகிறது. சிபிஐ, சிபிஎம் கட்சிகள், அ.மார்க்ஸ், மனிதி போன்ற என்.ஜி.ஓ.க்களுடன் கைக்கோர்த்துக் கொண்டு மார்க்ஸ் சிலையை நிறுவ குழு அமைத்து செயல்பட்டு வருகின்றன.

மாவோயிச கட்சிகள் மற்றும் NGO கூட்டு

CPI, CPM, லிபரேஷன், ரெட்ஸ்டார் உள்ளிட்ட பாராளுமன்றவாத கட்சிகள் மட்டுமின்றி "மாவோயிச" வழியில் செயல்படுவதாக கூறிக்கொள்ளும் "ஆயுதப் போராட்ட" குழுக்களும்  "தொண்டு நிறுவனங்களுடன் ஐக்கியம் - போரட்டம்" என்று கூறி இணைந்து செயல்பட துவங்கியதானது அக்குழுக்களின் வீழ்ச்சிக்கு இட்டுச் சென்று வருகிறது. இப்போக்கு தெற்காசிய மாவோயிச கட்சிகள் நடத்திய மும்பை எதிர்ப்பியக்கம்-2004-லிருந்து துவங்கியது.

2000ம் ஆண்டுகளில் உலகெங்கும் தீவிரம் அடைந்த உலகமய எதிர்ப்பு போராட்டங்களை மடைமாற்றி உலகமயத்திற்கு மனித முகம் கொடுக்கவும், ஏகாதிபத்திய அமைப்பிற்குள்ளாகவே முதலாளித்துவ ஜனநாயகம் எனும் தீர்வை முன்வைத்து ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களை காயடிக்கவும் உருவான அமைப்புதான் உலக சமூக மாமன்றம் ஆகும். அமெரிக்க தொண்டு நிறுவனங்கள், ஃபோர்ட் பவுண்டேசன், ஆக்ஸ்பாம் நிறுவனம் உள்ளிட்ட ஏகாதிபத்திய அமைப்புகள் சேர்ந்து உலக சமூக மாமன்றத்தை (WSF) மும்பையில் 2004-ம் ஆணடு நடத்தின. இதில் இந்தியாவில் செயல்படும் அமெரிக்க சார்பு தொண்டு நிறுவனங்கள், CPI, CPM, லிபரேசன் உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தன.

உலக சமூக மாமன்றத்திற்கு மாற்றாக மும்பை எதிர்ப்பியக்கத்தை (Mumbai Resistance 2004), தெற்காசிய மாவோயிச கட்சிகள், டிராட்ஸ்கிய குழுக்கள், ILPS அமைப்பு, ஐரோப்பிய தொண்டு நிறுவனங்கள் இணைந்து அதே ஆண்டு நடத்தின. ஆனால் அது WSFக்கு மாற்றாக அல்லாமல், ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஒரு வலது சந்தர்ப்பவாத நிலையையும் தொண்டு நிறுவனங்களுடன் ஐக்கியம்-போராட்டம் எனும் சமரசவாத நிலையையும் எடுத்தது. தொண்டு நிறுவனங்களைப் புறக்கணிப்பது அராஜகவாதம் எனும் நிலை எடுத்தது. அது முதல் இங்குள்ள மாவோயிச கட்சி உள்ளிட்டு தெற்காசிய மாவோயிச கட்சிகள் அனைத்தும் (இதில் பங்கு கொண்ட) தொண்டு நிறுவனங்களுடன் கூட்டு வைத்து செயல்பட துவங்கின.

மும்பை எதிர்ப்பியக்கத்தின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டுதான் ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கம் (AIM) உருவானது. அதன் கருத்துகளை ம.ஐ.இ.க.வில் பரப்பி கோஷ்டிவாதம் மூலம் அமைப்பை உடைக்கும் துரோகப் பணியில் ஞானம்-ரவிந்திரன் ஈடுபட்டனர்; அமைப்பை உடைத்து நாசமாக்கினர். 

AIM-ன் நிலைப்பாடு என்ன?

  1. தொண்டு நிறுவனங்களுடன் "ஐக்கியம்-போராட்டம்" எனும் அடிப்படையில் இணைந்து செயல்படுவது
  2. இராணுவ ஆக்கிரமிப்பில் ஈடுபடும் ஏகாதிபத்தியம் மட்டுமே ஏகாதிபத்தியம்; அதனுடன் முரண்படும் பிற ஏகாதிபத்தியங்களை ஆதரிப்பது

எனும் பாட்டாளி வர்க்க விரோத நிலைபாட்டை அது முன்வைத்துள்ளது. அதன் நிலைபாடும் மும்பை எதிர்ப்பியக்கத்தின் நிலைப்பாடும் ஒன்றே ஆகும்.

விடியல் பதிப்பகம் சார்பாக மாவோயிஸ்ட் கட்சியின் 'நிதின்' எழுதிய "தொண்டு நிறுவனமும், புரட்சிகர நிலைப்பாடும்" எனும் நூலில் இதே கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என அறியப்பட்ட அந்த நூலில் "தொண்டு நிறுவனங்களுடன் ஐக்கியம்-போராட்டம்" எனும் அணுகுமுறையை ஆதரித்து எழுதப்பட்டுள்ளது.

அதை உறுதிப்படுத்தும் விதமாக மாவோயிஸ்ட் அமைப்பின் தியாகிகளுக்கு எய்ம், சும்ஸ் (SUMS), பெண்கள் எழுச்சி இயக்கம் (WUM) போன்ற தொண்டு நிறுவனங்கள் அஞ்சலிக் கூட்டங்கள் நடத்துகின்றன. அக்கட்சியின் சிறைவாசிகள் மீட்பு இயக்கத்தையும் அவைதான் நடத்துகின்றன. அ.மார்க்ஸ், எஸ்.வி. ராஜதுரை போன்றவர்கள் மக்கள் சிவில் உரிமை கழகத்தின் (PUCL) பேனரில் அதற்கு தலைமை தாங்குகின்றனர். இதை மாவோயிச கட்சி அனுமதிக்கிறது.

இத்தகைய தொண்டு நிறுவன ஊடுருவல் காரணமாக அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டும், கொல்லப்பட்டும் வருகிறார்கள். அக்கட்சியின் இரகசிய கூட்டங்களை NGO ஆள்காட்டிகள் மூலம் அரசு மோப்பம் பிடித்து வேட்டையாடுகிறது, அருந்ததி ராய், அக்னிகோஷ் போன்ற ஊரறிந்த NGO பேர்வழிகள் அக்கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் வரை சந்தித்து பேட்டி தருகின்றனர். அருந்ததிராய் மாவோயிச கட்சி தலைவர்களை சந்தித்தது பற்றி "தோழர்களுடன் ஒரு பயணம்" என்று புத்தகம் எழுதி புளங்காகிதம் அடைகிறார். அவர்களை "ஆயுதம் ஏந்திய காந்தியவாதிகள்" என்று புகழ் மாலை சூட்டுகிறார். (மக்கள் அதிகாரம் அமைப்பின் மேடைகளிலும் இவர் மேடையேறி அலங்கரிக்கிறார்).

நேபாள மாவோயிச கட்சியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக NGO ஊடுருவல் உள்ளதென்றால் மிகையில்லை. இது பற்றி சபாநாவலனின் கட்டுரை அம்பலப்படுத்துகிறது.

நேபாள புரட்சியின் இடைக் கட்டத்தில் (2007) ஐ.நாவின் "பணித் திட்டக் குழு" (UNMN) எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் உள்ளே அனுமதிக்கப்பட்டது. அது "மாவோயிசப் போராளிகளை, மக்கள் விடுதலைப் படையினரை நிராயுத பாணியாக்கும்" துரோகத்தை மேலிருந்து கீழ்வரை செயல்படுத்தியது. அதைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையிலான தொண்டு நிறுவனங்கள் "வளர்ச்சி" எனும் பேரில் நேபாள கட்சி கட்டுப்பாட்டில் இருந்த கிராமங்களை நோக்கி படையெடுத்தன. 2008-ம் ஆண்டு இது உச்சத்தில் இருந்தது. ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியில் இயங்கும் 'நிர்தன் உத்தன் வங்கி' கிராம்புறங்களில் சீரழிவு திட்டங்களை சுய முன்னேற்றம் எனும் பெயரில் செயல்படுத்தி புரட்சிகர உணர்வை காயடித்தது. தவிர, நுண் கடன் மையம் (CMF), அமெரிக்காவின் COPPADES போன்றவை கிராமாப்புற பொருளாதாரத்தை தனது கட்டுக்குள் கொண்டு வந்தன. இவ்வாறாக நேபாள கட்சி, அதன் புரட்சிகர இலக்குகள் என்.ஜி.ஓ.க்களால் காயடிக்கப்பட்டன.

மக்கள் போராட்டங்களை காயடிக்கும் NGOக்கள்

  1. ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக போராடும் போது, அவற்றை கைப்பற்றி தனது தலைமையிலான போராட்டங்களாக மாற்றியமைத்து "கலகம்" வராமல் கவனித்துக் கொள்வது; நிலவும் சமூக அமைப்பைப் பாதுகாக்கும் வகையில் அதற்குள்ளாகவே தீர்வை முன்வைப்பது
  2. ஊழல் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனப் பாதுகாப்பு, இயற்கைப் பேரிடர் மீட்பு, சாதி-தீண்டாமை எதிர்ப்பு, பெண்கள் மற்றும் குழந்தைப் பாதுகாப்பு, பழங்குடியினர் நலன், சிறுபான்மை நலன் உள்ளிட்ட பல தளங்களில் திட்டமிட்டு மக்கள் போராட்டங்களை கட்டியமைப்பது; நிலவும் சமூக அமைப்பைப் பாதுகாக்கும் வகையில் அதற்குள்ளாகவே தீர்வை முன்வைப்பது

என்று, இருவகைப்பட்ட மக்கள் போராட்டங்களில் தொண்டு நிறுவனங்களின் "பங்கு" உள்ளது. இதற்கு உதாரணமாக பல போராட்டங்களை கூற முடியும். அவையாவன:

1. ஊழல் எதிர்ப்பியக்கம்

அன்னா ஹசாரே தலைமையிலான "ஊழலுக்கு எதிரான இந்தியா" எனும் இயக்கம் ஃபோர்ட் பவுண்டேசன் நிதியில் உருவாகி வளர்ந்த இயக்கமே ஆகும். அவ்வமைப்பில் செயல்படும் பலரும் ஃபோர்ட் அறக்கட்ளையிலிருந்து நிதி உதவி பெறுபவர்களே. அரவிந்த் கெஜ்ரிவால் தமது நண்பர் மணிஷ் சிசோடியா (ஃபோர்ட்) மூலம்  3,97,000 டாலர்கள் நிதியுதவி பெற்றுள்ளார். மேலும் யோகேந்திர யாதவ் 3,50,000 டாலர்களும், நீல்கேணி 2,30,000 டாலர்களும், சந்தீப் தீட்சித் 6,50,000 டாலர்களும் பெற்றுள்ளனர்.

இவ்வியக்கம் முதலாளித்துவ ஊழலைப் பற்றி வாய் திறக்காமல், தனிநபர் ஊழலை மட்டுமே பேசி இயக்கம் நடத்தியது. மத்திய அரசின் லோக்பால் திட்டமும் சரி; ஹசாரே-அரவிந்த் கெஜ்ரிவால் கும்பல் முன்வைத்த ஜன்லோக்பால் திட்டமும் சரி;  இரண்டுமே ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்க கூடிய பன்னாட்டு முதலாளிகள் மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகளை ஊழல் வரம்பிற்குள் கொண்டு வரவில்லை. இவ்வாறாக ஊழல் எதிர்ப்பு இயக்கம் முதலாளித்துவ ஊழலை பாதுகாத்தது. பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் கும்பல் டெல்லியில் ஆட்சியைப் பிடித்து, அண்மையில் ஊழல் வழக்கில் சிறை சென்று சீரழிந்ததை நாம் கண்டோம்.

2. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம்:

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை தலைமையேற்று துவக்கி வைத்த சு.ப.உதயகுமார், அமெரிக்காவின் கிரீன் பார்ட்டி (Green party) எனும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர் ஆவார். அமெரிக்காவின் புதிய காலனிய நலன்களுக்கான இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைப் பற்றி வாய் திறக்காத இக்கும்பல், ரசியாவின் உதவியில் நிறுவப்பட்ட கூடங்குளம் அணு உலையை மூடு என்று இயக்கம் நடத்தியது; அதன் மூலம் இந்தியா மீதான அமெரிக்காவின் புதிய காலனிய நலன்களை பாதுகாத்தது. இப்போராட்டத்தை CPI, CPM, மட்டுமின்றி ரெட்ஸ்டார் (செங்கொடி), ம.க.இ.க., பு.ஜ.தொ.மு. போன்ற எம்.எல் அமைப்புகளும் ஆதரித்தன.

ம.க.இ.க. WSF, MR-2004-ஐ பற்றி பேசியபோது, தொண்டு நிறுவனங்களை விமர்சித்து எழுதியது. ஆனால், பிறகு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சு.ப.உதயகுமார் எனும் NGO பேர்வழியை ஆதரித்தது. அவரை போராளி, நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர் என்று புகழ்மாலை சூட்டியது. தொண்டு நிறுவனங்கள் ஏகாதிபத்தியத்தின் தரகு வர்க்கம், கைக்கூலிகள் எனும் நிலைப்பாட்டை முன்வைக்கவில்லை.

"அணு உலை எதிர்ப்பு" எனும் பேரில் துவங்கப்பட்ட இவ்வியக்கம் அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் பற்றி கள்ள மௌனம் சாதிப்பது குறித்து பேசிய, அம்பலப்படுத்திய ஒரே இயக்கம் ம.ஜ.இ.க மட்டுமே. அது குறித்து "கூடங்குளம் அணு உலையை திற" எனும் நூலில் இருந்து சிறு பகுதி இணைக்கப்பட்டுள்ளது.

3. மெரினா போராட்டம் 

மத்திய-மாநில அரசுகளின் மீதான அதிருப்தியின் வெளிப்பாடாக ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்த போராட்டம் 2017-ல் மெரினாவில் வெடித்தது. அப்போராட்டம் ஒரு "கலகமாக" மாறாமல் தடுக்கும் பொருட்டு ஏராளமான தொண்டு நிறுவனங்கள் அவ்வியக்கத்திற்குள் ஊடுருவி தலைமை தாங்கும் அளவிற்கு சென்றன. அப்போராட்டத்தில் அரசியல் கட்சிகள் தலையிடக் கூடாது எனும் முழக்கம் அதன் தொண்டு நிறுவன நிலைபாட்டை அம்பலப்படுத்தியது.

இத்தகைய நிலைபாட்டுடன்தான் மீதேன், ஹைட்ரோ கார்பன் மற்றும் நெடுவாசல் போராட்டங்கள் நடந்தன. தொண்டு நிறுவனங்கள் அதில் பெரும் செல்வாக்கு செலுத்தி போராட்டத்தைக் கைப்பற்றின.

4. வேளாண் சட்டங்களை எதிர்த்த போராட்டம்

இன்னொரு உதாரணமாக, மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்தப் போராட்டத்தையும் குறிப்பிடலாம். அப்போராட்டம் உண்மையிலேயே பாஜக ஆட்சியை எதிர்த்த தீரமிக்க போராட்டமாக துவங்கி, பாஜகவின் பிற அரசியல் பொருளாதார கொள்கைகளையும் எதிர்க்கும் இயக்கமாக வளர்ந்தது. ஆனால் அதிலும்கூட "அரசியல் கட்சிகளை அனுமதிப்பதில்லை" எனும் தொண்டு நிறுவன நிலைபாடு துவக்கம் முதலே தலைமை தாங்கும் அளவிற்கு சென்றது. அப்போராட்டம் 3 வேளாண் சட்டங்களை பாஜக ரத்து செய்ததுடன் கைவிடப்பட்டது; பாஜக ஆட்சிக்கு எதிரான போராட்டமாக - ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டமாக வளரவில்லை. காரணம் அதன் NGO அரசியலே ஆகும்.

இவ்வாறு பல உதாரணங்கள் நம்மால் கூற முடியும். மக்கள் போராட்டங்கள் வர்க்க போராட்டமாக மாறாமல் அவை திட்டமிட்டு பாதுகாக்கப்பட்டன என்பதை நாம் இதன் மூலம் அறியலாம்.

கலை, இலக்கியம் மற்றும் வரலாற்றுத் துறைகளில் NGO ஊடுருவல்

கலை, இலக்கியத் துறைகளில் CIA மற்றும் NGO ஊடுருவல் குறித்து தோழர் இரா.முருகவேள் அவர்களின் கட்டுரை தெளிவாக பேசுகிறது.

கலை, இலக்கியம், வரலாற்றுத் துறைகளில் தொண்டு நிறுவன அரசியலும், பின் நவீனத்துவமும் பிண்ணிப் பிணைந்துள்ளது. ஆளும் வர்க்கத்தை எதிர்த்த பேருரு (Macro Politics) அரசியலை மடைமாற்றும் பொருட்டு, சிற்றுரு அரசியல் (Micro Politics) என்.ஜி.ஓ.க்களால் முன்னெடுக்கப்பட்டது. ஒருமுகப்படுத்தப்பட்ட கலை, இலக்கிய, வரலாற்று ஆய்வுகளை மறுத்து, வட்டார, சாதிய அடிப்படையிலான சிற்றுரு ஆய்வும், நோக்கும், அரசியலும் முன்வைக்கப்பட்டன. நாட்டார் ஆய்வுகள் எனும் பெயரில் கரிசல் காடு, முந்திரிக்காடு, தலித் இலக்கியம் - வரலாறு எனும் பிராந்திய, சிற்றுரு இலக்கியம் வர்க்க அடிப்படையை மறுத்து உருவாக்கப்பட்டன.

காங்கிரசு ஃபார் கல்ச்சுரல் ஃபிரீடம் (Congress for Cultural Freedom) எனும் அமைப்பு சி.ஐ.ஏ (CIA) வால் நடத்தப்படும் அமைப்பாகும். இந்த அமைப்புதான் இத்தகைய ஆய்வுகளுக்கு நிதியும், வழிகாட்டுதலும் அளிக்கின்றன. க.ந.சு. போன்ற எழுத்தாளர்கள் இவ்வமைப்பில் செயல்பட்டனர். கம்யூனிச எதிரியான ஜார்ஜ் ஆர்வல் எழுதிய விலங்குப் பண்ணை, "1984" ஆகிய  கம்யூனிச எதிர்ப்பு நாவல்களை இவர் தமிழில் மொழிபெயர்த்தார். "புது விசை", "தலித் முரசு" போன்ற தலித்திய இதழ்கள், தலித்திய அரசியல் - கலை - இலக்கியத்தை முன்னெடுத்தன. ஜெயமோகன் "பின்தொடரும் நிழலின் குரல்" போன்ற ஸ்டாலின் எதிர்ப்பு நாவல்களை வெளியிட்டார்.

சமூக மாற்றத்தைப் பேசும் இலக்கியங்கள் ஆழமற்றவை, அழகியல் அற்றவை. தனி மனித உணர்வை பேசும் இலக்கியமே ஆழமானவை, உண்மையானவை போன்ற தட்டையான வாதங்களை இவை முன்வைத்தன.

கலை, இலக்கியம், ஓவியத் துறைகளில் பின்நவீனத்துவ வடிவங்கள் எவ்வாறு CIA மற்றும் தொண்டு நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டன என இக்கட்டுரை விரிவாக விளக்குகிறது.

தொண்டு நிறுவனங்களின் வர்க்க அடித்தளம் என்ன? அவற்றின் மீதான பாட்டாளி வர்க்க செயல் தந்திரம் என்ன?

தொண்டு நிறுவனங்களின் வர்க்க குணாம்சத்தைப் பார்க்கும் போது, இவர்கள் புதியதொரு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றே கருதலாம். இவர்கள் பூர்வீகச் சொத்துடமை அல்லது அரசின் ஊதியத்தைச் சார்ந்து வாழ்பவர்கள் அல்ல. குறிப்பிட்ட சில முக்கியமான மக்கள் திரள் அமைப்புகளை கட்டுப்படுத்தும் தமது சொந்த ஆற்றலையும், ஏகாதிபத்தியத்திடம் இருந்து பெறும் நிதியையும் சார்ந்து வாழ்பவர்கள். எனவே இவர்கள் புதிய வகைப்பட்ட தரகு கூட்டத்தினரே ஆவர்.

சமுதாயத்திற்கு அவசியமான எந்த உற்பத்தியிலும் இவர்கள் ஈடுபடுவதில்லை. தமது சொந்த ஆதாயத்திற்காக உள்நாட்டு ஏழ்மையை வைத்து, நிதியுதவி அளிக்கும் எஜமானர்களுக்கு தொண்டூழியம் செய்து பணம் பார்ப்பவர்கள். மொத்தத்தில் ஏகாதிபத்திய தரகு அதிகார வர்க்க கூட்டம்தான் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள்.

பாட்டாளி வர்க்க இயக்கம் பொதுவாக அரசு சாரா அமைப்புகளை எதிரியாகவே பாவித்து அவற்றை தனிமைப்படுத்தும் செயல்தந்திரத்தைத்தான் கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் புறநிலை நிகழ்வுப் போக்கின் ஆய்விலிருந்து அரசு சாரா அமைப்புகளைத் தனிமைப்படுத்துவதா? அல்லது தாக்குதல் இலக்காக கொள்ள வேண்டுமா? என்பதை தீர்மானிக்க வேண்டும். மாறாக அவற்றை நடுத்தர வர்க்கத்துப் போராளிகள் என வரையறுப்பதோ, ஐக்கியம்-போராட்டம் என்று அவற்றுடன் கூட்டு வைப்பதோ பாட்டாளி வர்க்க இயக்க நலன்களுக்கு எதிரான அணுகுமுறையே. தொண்டு நிறுவனங்கள் பாட்டாளி வர்க்கத்தின் எதிரிகளே. அவை இலக்கு சக்தியா அல்லது தனிமைப்படுத்தப்பட வேண்டிய சக்தியா என்பது புற நிலைமைகளைப் பொறுத்தது. உதாரணமாக டெல்லியில் ஆளும் வர்க்கமாக உயர்ந்து ஆட்சியில் அமர்ந்த ஆம்-ஆத்மி எனும் NGO அமைப்பு அங்கு பாட்டாளி வர்க்கத்தின் இலக்காக உள்ளது. தமிழகத்தில் மீத்தேன் - ஹைட்ரோ கார்பன் போராட்டங்களை முன்னெடுத்த தொண்டு நிறுவனங்களை நாம் தனிமைப்படுத்த வேண்டியிருக்கும். தனிமைப்படுத்துவது என்பது NGO க்களின் திட்டங்களை அம்பலப்படுத்தி மாற்று திட்டத்தை முன்வைத்து அவற்றின் கீழ் திரளும் மக்களை வென்றெடுப்பதே; தொண்டு நிறுவனங்களுடன் கூட்டு வைப்பதல்ல.

தொண்டு நிறுவனங்கள் சகல துறைகளிலும் ஊடுருவி பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு சவாலாக உள்ள சூழலில், அவற்றை எவ்வாறு கையாள்வது? அவற்றின் வர்க்க அடித்தளம் என்ன? அரசியல் பொருளாதார - இலக்கு என்ன? என்பது பற்றி கம்யூனிஸ்ட் கட்சிகள் முழுமையானதொரு புரிதலுக்கு வர இந்நூல் தொகுப்பு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்பது ஐயமில்லை.

இத்தொகுப்பில் ம.ஜ.இ.க. கட்டுரைகள் நமது நிலைப்பாட்டை விளக்குவதாக வாசகர் எடுத்துக் கொள்ளலாம். அதே சமயம் பிற வலைதளக் கட்டுரைகள் நமது நிலைப்பாட்டை முழுமையாக எடுத்தியம்புவதாக கொள்ளக் கூடாது. அவற்றில் நமக்கு சில மாறுபட்ட கருத்துகளும் உண்டு. அவை தகவல்கள், ஆதாரங்களுக்காக இதில் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றை ம.ஜ.இ.க நிலைப்பாட்டிலிருந்து வாசிக்குமாறு தோழமையுடன் கோருகிறோம்.

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

விலை - ரூ.240

நூலினை பெற தொடர்பு கொள்ளவும்
94864 64963