விழிஞ்சம் துறைமுகம்: புதிய காலனிய சேவையில் அதானியுடன் தோள்சேர்ந்துள்ள கேரள சிபிஎம் அரசு

சமரன்

விழிஞ்சம் துறைமுகம்: புதிய காலனிய சேவையில் அதானியுடன் தோள்சேர்ந்துள்ள கேரள சிபிஎம் அரசு

சீனாவை முதன்மை எதிரியாக வரையறுத்து செயல்படும் அமெரிக்காவின் அரசியல் - பொருளாதார - யுத்தத்தந்திர கொள்கைகளுக்கு தெற்காசிய பிராந்தியத்தின் நம்பகமான கூட்டாளியாக மோடி அரசும் அதானி தரகுமுதலாளித்துவ கும்பலும் விளங்குகிறது. அமெரிக்காவுக்கு சவாலாக விளங்கும் சீனாவின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு மாற்றாக, அமெரிக்கா உலகம் முழுவதும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தி வருகிறது. அதன் முக்கியமானதொரு அங்கமாகதான் இந்த விழிஞ்சம் துறைமுகத் திட்டம் அதானிக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. அதானி - பாஜகவுடன் தோள்சேர்ந்து இத்திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது பினராயி விஜயன் தலைமையிலான கேரள சிபிஎம் அரசு.  

பூகோள ரீதியில் சிறப்புமிக்க விழிஞ்சம் கடற்பகுதி

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சார்ந்த பகுதிதான் விழிஞ்சம். இப்பகுதி கி.பி. 8ம் நூற்றாண்டில் இருந்தே கடல்சார் வாணிபத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்பகுதியில் துறைமுகத்தை அமைப்பதற்கான ஆய்வுகள் பிரிட்டிஷ் காலனிய கட்டத்திலேயே மேற்கொள்ளப்பட்டிருப்பினும் அது நடைமுறைக்கு வராமல் கொச்சியில் துறைமுகம் உருவாக்கப்பட்டது. மீண்டும் 1990களில் காங்கிரசு அரசால் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இத்தகையதொரு மாபெரும் கட்டமைப்புக்கு நிதி ஒதுக்குவது அன்றைய சந்தை நலன்களுக்கு கூடுதல் சுமையாக இருந்திருக்கக் கூடும் என்பதால் அவை கைவிடப்பட்டன. நாட்டின் அனைத்து துறைகளையும் அமெரிக்க-அதானி நலன்களிலிருந்து தனியார்மயமாக்கும் போக்கு தற்போது மோடி ஆட்சியில் விரைவாக தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால் இன்று விழிஞ்சம் துறைமுகத் திட்டம் முழுவதும் அதானிக்கு தாரை வார்க்கப்பட்டு மே மாதம் 2ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

விழிஞ்சம் துறைமுகம், சர்வதேச கடல் போக்குவரத்து எல்லையிலிருந்து 10 நேட்டிக்கல் மைல் (nautical mile) தொலைவிற்கும் குறைவான தூரத்திலேயே அமைந்துள்ளது. கடற்கரையிலிருந்து 1 நேட்டிக்கல் மைல் தொலைவிற்குள்ளாகவே 25 மீட்டர் அளவுக்கு ஆழ்கடல் பகுதி வந்துவிடுகிறது. இயற்கையாகவே அமைந்துள்ள இந்த வசதி ராட்சத சரக்கு கப்பல்களை கையாள்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. இந்தியாவின் கடற்கரையோரப் பகுதி எங்கிலும் இல்லாத முக்கியமான சிறப்பம்சமாகும் இது. இந்தியாவின் ஏனைய அனைத்து துறைமுகங்களில் கரையையொட்டி இத்தகைய ஆழமான கடல் பகுதி இல்லை. எனவேதான் அவைகளில் சிறியரக கப்பல்களை மட்டும் கையாள முடிகிறது; கனரக கப்பல்களிலிருந்து சரக்குப் போக்குவரத்து செய்ய முடிவதில்லை. இதனுடன், இது சர்வதேச கடல் போக்குவரத்து எல்லையிலிருந்து மிக அருகில் அமைந்திருப்பதும் மற்றொரு சிறப்பம்சமாகும். 

இதுநாள் வரை இந்தியாவில் இருந்து சரக்குகளை ஏற்றுமதி செய்வதற்கும், இறக்குமதி செய்வதற்குமான கனரக சரக்கு கப்பல்களை அணுகுவதற்கு அத்தகையதொரு துறைமுகம் இல்லை என்பது உண்மைதான். இதற்கு இலங்கை, சிங்கப்பூர், துபாய் நாடுகளிலுள்ள துறைமுகங்களை சார்ந்திருக்க வேண்டிய சூழலே உள்ளது. இந்த துறைமுகங்கள் வழியேதான் இந்தியாவிற்கான சரக்கு போக்குவரத்துகளில் பெரும்பகுதி கையாளப்படுகிறது. அதிலும் குறிப்பாக தற்போது சீனா கட்டுப்பாட்டில் இருக்கும் இலங்கை துறைமுகமே அதிக பங்கு வகிக்கிறது. எனவே இந்த துறையில் அமெரிக்கா மற்றும் இந்தியா அரசுகளின் சீன சார்பை குறைக்கும் பிரதான நோக்கில் இருந்தே விழிஞ்சம் துறைமுகம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் மற்றொரு பேருண்மையாகும். 

சர்வதேச சரக்கு பரிவர்த்தனை மையமாகும் விழிஞ்சம் துறைமுகம்

இத்தகைய பூகோள ரீதியான சிறப்பம்சங்களை பெற்ற இந்த விழிஞ்சம் பகுதியைத்தான் நாட்டுக்கு அர்ப்பணிப்பது எனும் மோசடி அறிவிப்பில் அதானிக்கும் அமெரிக்காவுக்கும் தாரை வார்த்துள்ளது மோடி அரசு. 

இந்த துறைமுகத் திட்டம், விழிஞ்சம் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தப் போகிறதா? அப்பகுதி மீனவர்களின் துயரமான வாழ்நிலையை மாற்றிமைக்கப் போகிறதா? கேரளாவின் சுயசார்பு தொழிற்துறை வளர்ச்சியை மேம்படுத்தப் போகிறதா? அல்லது இந்தியாவில் சுதேசிய முதலாளித்துவ வளர்ச்சியை தோற்றுவிக்கப் போகிறதா? கோடானுகோடி மக்களின் வறுமையையும், பஞ்சம், பட்டினி சாவுகளையும் தடுக்கப் போகிறதா? 

நிச்சயமாக இல்லை!

இந்தியாவை அமெரிக்காவின் புதிய காலனிய பிடிக்குள் மேலும் இறுக்கும் நாசகரத் திட்டமாகும் இது. 

இந்த துறைமுகத் திட்டத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று வார்த்தை ஜாலங்களில் ஈடுபட்டுவருகிறது. டோக்கனிஸம் (Tokenism) எனப்படும் ஏமாற்று செயல் மூலம் பாதிக்கப்படும் மக்களிலேயே விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வேலையை கொடுத்து பணிக்கமர்த்துவதன் மூலம் பாதிக்கப்படும் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரங்களுக்கு சவக்குழி வெட்டுகிறது. இத்திட்டத்தை எதிர்த்து 3 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மீனவர்கள் போராடி வரும் நிலையில், அவர்களில் இருந்து ஒரு பெண்ணுக்கு கிரேன் ஆப்பரேட்டர் வேலையை கொடுத்ததன் மூலம் வேலைவாய்ப்பு - வளர்ச்சி நாடகத்தை அரங்கேற்றுகின்றன பாஜக-சிபிஎம் அரசுகள்; எதிர்ப்புக் குரல்களை நசுக்க இத்தகைய சூழ்ச்சிகளை கையாளுகின்றன; போராட்ட உணர்வை மழுங்கடிக்கின்றன. இத்தகைய "டோக்கனிச" செயல் முறைகள் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எதிரான கோடாரிக் காம்புகளே ஆகும். அவை ஒரு போதும் அனைத்து மக்களின் வளர்ச்சியை உள்ளடக்கியதல்ல; மாறாக அது அவர்களுக்கு எதிரானதே ஆகும். 

எனில், இத்திட்டம் யாருக்கு சேவை செய்யப் போகிறது? எதனடிப்படையில் உருவாக்கப்படுகிறது?

அமெரிக்காவின் தெற்காசிய பிராந்திய மேலாதிக்கத்திற்கு சேவை செய்யும் வகையிலான உள்கட்டமைப்புகளை உருவாக்கும் மோடி அரசு 

முதலாளித்துவம் பொது நெருக்கடியால் முட்டுச்சந்தில் மாட்டிக் கொண்டு தவிக்கிறது. உற்பத்தியில் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, ஆதித்திரட்டல் முறைகளில் அதற்கு தேவையான கனிம வளங்களை -  மனித வளங்களை சுரண்டுவது, உற்பத்தியான பொருட்களுக்கான சந்தைகளை கைப்பற்றுவது போன்ற நடவடிக்கைகள் மூலம் புதிய புதிய நெருக்கடிகளை தீர்த்துக் கொள்ள முயல்கின்றன. இதற்கு அவை புதிய காலனிய முறைகளை கையாண்டு இந்தியா போன்ற காலனிய நாடுகளை ஒட்டச் சுரண்டுகின்றன. 

இந்த புதிய காலனிய சுரண்டல் முறைகளில் சீனா அமெரிக்காவை தாண்டி பல துறைகளில் முன்னேறி வருவதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இன்றைய அதிநவீன உயர் தொழில்நுட்ப உற்பத்திகளுக்குத் தேவையான அருமன் தனிமங்கள் உள்ளிட்ட கனிமவளங்களின் ஏகபோகத்திலும், அதற்கு தேவையான உள்கட்டமைப்புத் திட்டங்களிலும் சீனா அமெரிக்காவை காட்டிலும் முன்னிலையில் உள்ளது என்பதையும் காண முடிகிறது. பெல்ட் & ரோடு -  புதிய பட்டுச்சாலை திட்டங்கள் மூலம் ஆப்பிரிக்க -  ஆர்டிக் எல்லை வரை தனது ஆக்டோபஸ் கரங்களை நீட்டியுள்ளதை கண்டு வருகிறோம். இதன் ஒரு பகுதியாகத் தான் இலங்கையின் ஹம்பந்தோட்டையில் ஆழ்கடல் துறைமுகத்தை நிறுவி அதனை சர்வதேச சரக்கு பரிவர்த்தனை மையமாக மாற்றியுள்ளது சீனா. இதன் மூலம் இந்தோ - பசிபிக் பெருங்கடலை சுற்றியுள்ள பகுதிகளில் சரக்கு பரிவர்த்தனை உள்ளிட்டவற்றில் ஏகபோகத்தையும் மேலாதிக்கத்தையும் நிறுவி வருகிறது சீனா. இது இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் மேலாதிக்கத்தை முறியடிக்கவே இந்திய அரசை தனது அடியாட்படையாகவும் தனது புதிய காலனிய ஆதிக்கத்தின் பிடியிலும் பல்வேறு துறைகளில் இறுக்கி வருகிறது அமெரிக்கா. இதற்காக பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களில், இந்தியாவுக்கு உள்ளேயும் சர்வதேச அளவில் இந்தியாவை இணைத்தும் செயல்படுத்தி வருகிறது அமெரிக்கா. அதன் ஒரு முக்கியமான அங்கம்தான் இந்த விழிஞ்சம் துறைமுகம் என்பதை நாம் துவக்கத்திலேயே கோடிட்டு காட்டினோம். மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் துறைமுகங்களை பறித்து பெரும் கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்கும் திட்டத்தை கொண்டு வந்தது பாஜக. அதற்கேற்ப துறைமுக சட்டங்களை திருத்தியுள்ளது. விழிஞ்சம் துறைமுகமும் அவ்வகையிலேயே அதானிக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. பாஜகவின் இந்த நோக்குக்கு கேரள சிபிஎம் அரசு உறுதுணையாக நின்று இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. விழிஞ்சம் துறைமுகம் சாகர்மாலா எனும் கடல்வழிப்பாதை திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து துறைமுகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது; பாரத்மாலா திட்டம் மூலம் சாலைப் போக்குவரத்துகள் விழிஞ்சத்திலிருந்து நாட்டின் அனைத்து திசைகளுக்கும் கிளை விரிக்கிறது; உதான் திட்டம் மூலம் விமானப் போக்குவரத்துடனும்; ரயில்வழிப் பாதைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நாட்டின் மூலைமுடுக்கெங்கிலும் உள்ள கனிமவள சுரங்கங்களுக்கும், நவீன தொழிற்சாலை உற்பத்தி மையங்களுக்கும், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கும் தங்களது கூர்நகங்களை விரிவுபடுத்தியுள்ளன. அமெரிக்காவின் தலைமையிலான இந்தியா - ஐரோப்பா -  மத்திய கிழக்கு வழித்தடம் (India-Europe-Middle East Corridor -  IMEC) எனப்படும் மாபெரும் உள்கட்டமைப்புத் திட்டத்தில் இந்த விழிஞ்சம் துறைமுகம் இணைக்கப்பட்டுள்ளது. முன்னர் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை மையப்படுத்தி ஆலோசிக்கப்பட்ட இத்திட்டம், தற்போது விழிஞ்சம் துறைமுகத்தையும் இணைத்து அதை மையப்படுத்தி கிளை பரப்புகிறது. 

இதன் மூலம் இந்தியாவின் கனிம வளங்களும், மனித உழைப்பு சக்தியும் நவீன ஆதித்திரட்டல் வடிவில் சுரண்டப்பட்டு கொள்ளைப் போக போகின்றன. மக்களின் பஞ்சமும், பட்டினி நெருக்கடிகளும் மேலும் அதிகரிக்கவே செய்யும்; விவசாயம், மீன்பிடித் தொழில்கள் பாதிக்கப்படுவதோடு, சிறுகுறு தொழில்கள் மேலும் நசிந்து மக்கள் சொல்லாண்ணாத் துயரத்தில் ஆழ்த்தப்படுவர். வளர்ச்சி எனும் பெயரில் பெரும்பாலான உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவது அதிகரிக்கும். இதன் காரணமாகதான் இத்திட்டத்தை புதிய காலனிய பிடிக்குள் மேலும் இறுக்கும் நாசகரத் திட்டம் என்கிறோம். 

சீனா, இலங்கையின் ஹம்பந்தோட்டையை சர்வதேச சரக்கு பரிவர்த்தனை மையமாக மாற்றியுள்ளதற்கு சவாலாகவே விழிஞ்சம் துறைமுகத்தை தனது சர்வதேச சரக்கு பரிவர்த்தனை மையமாக (International transshipment hub) உருவாக்கியுள்ளது அமெரிக்கா. இப்பணியை மேற்கொள்வதற்கும் அதன் தரகு லாபத்தில் கொழிக்கவுமான வாய்ப்பை அதானிக்கு வழங்கியிள்ளது மோடி அரசு. இத்திட்டத்தை கூட்டு சேர்ந்து செயல்படுத்தியுள்ளது கேரள அரசு. 

விழிஞ்சத்தில் "லேண்ட் லார்டு மாடலை" நடைமுறைப்படுத்தும் கேரள சிபிஎம் அரசு

அரசு-தனியார் பங்கேற்பு (Private-Public Partnership) எனும் பெயரில் இந்நாட்டின் வளங்களையும் நிலங்களையும் தனியார் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து வருகின்றன மத்திய அரசும் அனைத்து மாநில அரசுகளும். விதிவிலக்கில்லாமல் கேரள சிபிஎம் அரசும் இதை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதற்கு "லேண்ட் லார்டு மாடல் (Landlord model)" என பெயரிட்டுள்ளது. அதாவது நிலப்பிரத்துவ குத்தகை முறையில் நிலங்களை குத்தகைக்கு விடுவதாம். நிலப்பிரபு நிலங்களை குத்தகைக்கு விட்டு சுரண்டி கொழுத்து வந்தான்; குத்தகைக்கு எடுத்த சிறு விவசாயி நிலத்தில் பாடுபட்டு செத்தான். ஆனால் இங்கே நிலைமை தலைகீழ். இங்கு அரசு கார்ப்பரேட்களுக்கு நிலத்தை தாரை வார்ப்பது மட்டுமல்லாமல், அனைத்து வசதிகளும் படைத்த உள்கட்டமைப்பை மக்களின் வரிப்பணத்திலோ அல்லது உலக வங்கியில் கடன் பெற்றோ செய்து கொடுக்கவும் வேண்டும். அது அப்படியே இந்த கார்ப்பரேட் மலைமுழுங்கிகளிடம் குத்தகை எனும் பெயரில் ஒப்படைக்கப்படும். இங்கு நிலவுடமையாளனான அரசாங்கத்திற்கு பதிலாக குத்தகைக்கு எடுத்த பெரும் கார்ப்பரேட் சுரண்டிக் கொழுப்பான். இதுதான் கேரள சிபிஎம் அரசின் நவீன "லேண்ட் லார்டு மாடல்". 

இதன் படிதான், துறைமுகத்திற்கான சுமார் 500 ஏக்கர் நிலம் மட்டுமல்லாமல், விழிஞ்சம் துறைமுகத்தின் முதல் கட்டத் திட்டங்களுக்கான மொத்த நிதி ஒதுக்கீட்டான ரூ.8867 கோடியில் கேரள அரசு ரூ.5595 கோடியையும், மத்திய அரசு ரூ.818 கோடியையும் செலவு செய்து உள்கட்டமைப்புகள் அனைத்தையும் உருவாக்கி கொடுத்துள்ளன. ஒரே நேரத்தில், 10 லட்சம் TEUக்கும் (20அடி நீள கண்டெய்னர் கொள்ளளவுக்கு இணையான அலகு) அதிகமான சரக்குகளை கையாளும் விதமாக இந்த முதல் கட்ட துறைமுக கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ராட்சத சரக்கு கப்பலான துருக்கியின் எம்.எஸ்.சி. கிளாடு கிரார்டெட் (MSC Claude Girardet) கப்பலில் இருந்து கூட நேரடியாக சரக்குகளை கையாளும் அளவுக்கு கட்டமைப்பும் வசதிகளும் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளன. துறைமுகத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலையை (-66) இணைக்கும் சாலை, சரக்கு வாகனங்கள் செல்வதற்கென பிரத்தியேக புறவழிச் சாலைகளையும் கூடுதலாக நிதி ஒதுக்கி நிறைவேற்றிக் கொடுத்துள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளை கேரளாவுடன் இணைக்கும் வகையில் புதிய புதிய 6-வழிச் சாலைகளையும், 8-வழிச் சாலைகளையும், ரயில் பாதைகளையும், சுரங்கவழித் தடங்களையும் மலைகளை குடைந்து காடுகளை அழித்து உருவாக்கி தருகின்றன. துறைமுக கட்டுமானங்களுக்கும் கூட பல டன் கிரானைட் கற்களை மலைகளை சிதைத்துக் கொண்டு வந்து கொட்டி குவித்தது. 

இதோடு மட்டுமில்லாமல், துறைமுகத்தை இயக்குவதற்கு தேவைப்படும் மீதமுள்ள ரூ.2454 கோடியிலும் கூட ரூ. 795 கோடியை சாத்தியக்கூறு இடைவெளி நிதி (viability gap funding) எனும் பெயரில் மானியமாக அதானிக்கு வழங்கியுள்ளது இந்த கேடுகெட்ட அரசு. இவை அனைத்தையும் செய்து கொடுத்து இத்தகைய பூகோள சிறப்பம்சம் பெற்ற துறைமுகத்தை 40 ஆண்டுகளுக்கு அதானிக்கு தாரை வார்த்துள்ளது. 72 லட்சம் கண்டெய்னர் கொள்ளளவுள்ள சரக்குகளை கையாளும் அளவுக்கு விழிஞ்சம் துறைமுகத்தினை விரிவுபடுத்த திட்டம் வைத்துள்ளன. ஆகையால், சுமார் 20000 கோடி ரூபாய் மதிப்பிலான அடுத்தக்கட்ட கட்டுமானப் பணிகளுக்கு அதானி குழுமம் தனது பங்கிற்கு செலவு ஏதும் செய்தால் இந்த குத்தகையை மேலும் 20 ஆண்டுகளுக்கு நீட்டித்து கொடுக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளது கேரள சிபிஎம் அரசு. ஆனால், இதன் மூலம் ஜி.எஸ்.டி வருவாயை தவிர அரசுக்கு வேறு எந்தவித வருமானமும் கிடையாது. அந்த வரி வருவாயை கூட மீண்டும் அதானி -  அமெரிக்க கும்பலின் வாயில்தான் கொட்டப் போகிறது என்பது தனிக் கதை. 10 ஆண்டுகள் கழித்து விழிஞ்சம் துறைமுகத்தின் சரக்கை கையாளும் நிதியில் கிடைக்கும் லாபத்தில் இருந்து கேரள அரசு வெறும் 1% சதவிகிதம் பணத்தை எலும்புத் துண்டை போல பெற்றுக் கொள்ளும் என்கிறது அந்த ஒப்பந்தம். இந்த எலும்புத் துண்டுக்குத்தான் நாட்டின் வளங்கள் அனைத்தையும் தாரை வார்க்கின்றன - தாயின் மார்பை அறுத்து கூறுபோட்டு விற்கும் இந்த கேடுகெட்ட கும்பல்.

அமெரிக்காவின் புதிய காலனிய தாசனாக காங்கிரசு

1991ம் ஆண்டே விழிஞ்சம் துறைமுகத்திற்கான துவக்கக் கட்டப் பணிகளை நரசிம்மராவ் அரசின் வழிகாட்டுதலில், கருணாகரன் தலைமையிலான கேரள காங்கிரசு அரசு துவங்கிவிட்டது. அதன் பிறகு, 25 ஆண்டுகள் பல்வேறு மாநில அரசுகளும் அதற்கான முயற்சிகளில் மாறி மாறி ஈடுபட்டன. 2014ல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, துறைமுகம் அதானியின் கைகளுக்கு செல்ல வழி வகுத்தது. அப்போதிருந்த உம்மன் சாண்டி தலைமையிலான கேரள காங்கிரசு அரசும் அதற்கு ஆதரவளித்து அதானிக்கும் அமெரிக்காவுக்கும் தாரை வார்க்க முன் வந்தது. பினராயி விஜயன் தலைமையிலான சிபிஎம் அரசு ஆட்சிக்கு வந்த பின் இத்துறைமுகத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. இதனால்தான், விழிஞ்சம் துறைமுகத் திட்டத்தை நாங்கள்தான் கொண்டுவந்தோம் என பெருமை பீற்றிக் கொள்ளும் காங்கிரசு, அதானி சேவை மற்றும் அமெரிக்க சேவையில் தனது பங்கும் உண்டு என்பதை அவ்வபோது வெளிபடுத்தி வருகிறது.

சென்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதே, மோடி அரசு சீனாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதில்லை; நான் அமெரிக்காவின் விசுவாசியாக இருந்து சீனாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுவேன் என்று அமெரிக்காவிடம் மன்றாடினார் ராகுல்காந்தி. தற்போது நாடாளுமன்றத்தில் பாஜகவும் - சிபிஎம் மும் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அளிப்பதாக கீழ்க்கண்டவாறு குற்றஞ்சாட்டி வருகிறது காங்கிரசு:

அமெரிக்காவின் புதிய காலனிய அடிமை ஒப்பந்தங்களுக்கு அடிபணிந்து 1997ம் ஆண்டில், யுத்தத்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு சீனாவின் உபகரணங்களை பயன்படுத்தக் கூடாது என கொள்கை வகுத்து, காங்கிரசு ஆதரவுடன் வெளியிட்டது அன்றைய ஜனதாதள் அரசு. ஆனால் இந்தியாவில் இயங்கும் பெரும்பாலான துறைமுகங்களில் கூட சீனா தயாரிப்பு உபகரணங்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதேநிலைதான் விழிஞ்சம் துறைமுகத்திலும் தொடர்கிறது. சீனாவை சார்ந்த ஷாங்காய் ழெனுவா ஹெவி இஞ்சினியரிங் கம்பெனி லிமிடெட் (Shanghai Zhenhua Heavy Engineering Company Limited -  ZPMC) நிறுவனத்தின் தயாரிப்புகளான தானியங்கி ராட்சத கிரேன்களும் அதற்கான மென்பொருட்களும் பயன்படுத்தப் பட்டுள்ளன. சீன தயாரிப்புகளை பாஜக அரசும் சிபிஎம் அரசும் கூட்டாக சேர்ந்து பயன்படுத்துகின்றன; நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கின்றன 

என நாடாளுமன்றத்தில் பேசுவதன் மூலம் தனது அமெரிக்க விசுவாசத்தை வெளிபடுத்திக் கொள்கிறது. எலான் மஸ்க் - ட்ரம்ப் கும்பலின் "அமெரிக்க முதன்மை" கொள்கைக்கு சாமரம் வீசி அதன் கடைக்கண் பார்வை தன் மீது விழாதா என ஏங்கி தவிக்கிறது காங்கிரசு.

"அதானி எங்கள் கூட்டாளி" -  சிபிஎம் - ன் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்

நாடாளுமன்ற பன்றித் தொழுவத்தின் மூலம் தொழிலாளி -  விவசாயி வர்க்க சோசலிசத்தை கொண்டு வரப் போவதாக திருத்தல்வாத நிலை எடுத்து இதுவரை பேசி வந்த சிபிஎம் இன்று அதை விட கீழ் சென்று, முதலாளித்துவ சோசலிசத்தை நிறுவ அரும்பாடு படுகிறது. விழிஞ்சம் துறைமுக திறப்பு விழாவினை முன்னிட்டு கேரள சிபிஎம் "அதானியை தங்களது கூட்டாளியாக" வெளிப்படையாகவே அறிவித்துக் கொண்டது. இது வரை அணிந்திருந்த முற்போக்கு முகமூடிகள் அனைத்தையும் கழற்றி அரபிக்கடலில் வீசிவிட்டு அம்மணமாக நிற்கிறது. 

  • அதானியை தங்கள் கூட்டாளி என்பது
  • அமெரிக்க நிதிமுலதனத்தை சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்பது
  • இந்தியாவில், பாஜக தலைமையிலான ஆட்சி பாசிச ஆட்சி இல்லை; நவபாசிசத்திற்கான கூறுகள்தான் சிறிதளவில் உள்ளது என மோடி ஆட்சிக்கு வால் பிடிப்பது
  • பாஜகவின் "ஆப்பரேசன் சிந்தூர்" நடவடிக்கையை சமூக தேசியவெறியுடன் பாராட்டி மகிழ்வது

என ஆர்.எஸ்.எஸ். க்கு போட்டியாக செயல்பட்டு வருகிறது சிபிஎம். ஆர்.எஸ்.எஸ்,-ன் "ஆர்கனைசர்" வலைதளமே சிபிஎம்-ன் அறிக்கைகளையும் நடவடிக்கைகளையும் பாராட்டும் வகையில் பாஜக அரசின் திட்டங்களை கேரளாவில் செயல்படுத்தி வருகிறது. விழிஞ்சம் துறைமுகத் திட்டத்தை எதிர்த்த சூழலியாளர்கள், மீனவர்கள், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியது. பாசிச நடவடிக்கைகளில் ஈடுபட்டது. தற்போது, கொள்கை அளவிலும் பாஜகவுடன் சமரசவாதப் போக்கை துவங்கிவிட்டது சிபிஎம். அவர்களின் இந்த அயோக்கியத்தனத்தால் சிவப்பு சாயம் வெளுத்து காவியாக மாறி வருகிறது. 

எனவே, காங்கிரசோ, திமுகவோ, சிவப்பு சாயம் பூசிய சிபிஎம் கட்சிகளோ பாசிசத்திற்கு மாற்று அல்ல. அவை பாசிசத்தின் சேவகர்கள் என்பதை புரிந்துகொண்டு,

"பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு

போகவோ -  நாங்கள் சாகவோ!

அழுதுகொண்டிருப்போமா ஆண்பிள்ளைகள்

அல்லமோ -  உயிர் வெல்லமோ!

என்ற பாரதியின் வரிகளை மனதில் நிறுத்தி நம் தாய் நாட்டை கொள்ளையடிக்கும் அந்நிய வர்க்க சக்திகளுக்கு சவக்குழி வெட்ட அனைத்து உழைக்கும் மக்களும் அணிதிரள்வோம். அதுதான் உண்மையான தேசபக்தி!.

- சமரன்

(ஜூன்- ஜுலை 2025 இதழில்)