இளம் அரசியல் போராளிகளுக்கு - பகத் சிங்

மார்ச்-23 பகத்சிங் நினைவுநாள் பாசிச எதிர்ப்பு மாநில மாநாடு சிறப்பு வெளியீடு

இளம் அரசியல் போராளிகளுக்கு  - பகத் சிங்

முன்னுரை

பகத்சிங்! 

லெனினியமும் ரசியப் புரட்சியும் பிரசவித்த மகத்தான புரட்சியாளன்!

இந்தியப் புரட்சிகர வானில் உதித்த துருவ நட்சத்திரம்! 

இளம் வயதிலேயே தேச விடுதலைக்கு தன் உயிரை ஒப்புக்கொடுத்த ஒப்பற்ற தியாகி! 

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஓநாய்களை அலறவிட்ட மாவீரன்! 

எல்லாவற்றிற்கும் மேலாக அவனொரு சிறந்த மார்க்சிய - லெனினியவாதி. 

ஆம்! பிரிட்டிஷ் காலனியமும் இந்திய ஆளும் வர்க்கங்களும் சித்தரித்ததைப் போல பகத்சிங் பயங்கரவாதியோ, உணர்ச்சிவசப்பட்ட கலகக்காரனோ அல்ல. அவர் மார்க்சிய - லெனினியத்தை ஆழமாக கற்றுத் தேர்ந்த அசலான புரட்சியாளர் என்பது அவரது கட்டுரைகளை வாசிக்கும் எவரும் அறியலாம். 

இந்தியப் புரட்சிக்கான தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்த பகத்சிங்கின் எழுத்துகளை நாம் அனைவரும் வாசிக்க வேண்டும். அதன் துவக்கமாக அவரது கட்டுரைகளில் ஒரு சிலவற்றை தொகுத்து அவரது நினைவு தினத்தன்று வெளியிடுகிறோம். 

மோடி கும்பலின் பாசிச காட்டாட்சியும் அமெரிக்காவின் புதிய காலனியமும் நாட்டை அழித்துவரும் இந்த சூழலானது பகத்சிங் வழியிலான விடுதலைப் போராட்டத்தின் அவசியத்தை ஆழமாக உணர்த்துகிறது. ஆகவே பகத்தின் எழுத்துகளை வாசிப்பது இன்று கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. 

வீறு கொண்டெழுந்த இந்திய விடுதலைப் போராட்டம் காந்தியத்தின் தரகு முதலாளித்துவ தேசியத்தால் மடைமாற்றப்பட்டு அகிம்சை வழி மாற்றம் எனும் சமரசவாதம் கோலோச்சிய காலத்தில் பகத்சிங்கின் அரசியல் பிரவேசம் துவங்குகிறது.

சமரசவாதத்தில் புரையோடிப்போயிருந்த காந்திய வழியிலான விடுதலைப் போராட்டத்திற்கு முடிவுரை எழுதி புரட்சிகர உள்ளடக்கத்துடன் கூடிய விடுதலைப் போராட்டத்திற்கு முதலில் புத்துயிர் ஊட்டியவர் பகத்சிங்.

இந்தியர்கள் கீழானவர்கள் எனும் காலனியவாதிகளின் கீழைத்தேயவாத சிந்தனைக்கு மரண அடி தந்தவர் பகத்சிங்.

ஆம்! பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின் புரட்சிகர சிந்தனையும் செயல்பாடும் காந்தியவாதத்தின் அகிம்சை வழியின் சமரசவாதத்தால் துவண்டு போயிருந்த விடுதலைப் போராட்டத்திற்குள் பெருவெடிப்பை பிரசவித்தது. 

அவர்களைக் கண்டு அஞ்சி நடுங்கியது ஆங்கிலேயே ஏகாதிபத்தியம் மட்டுமல்ல; அதன் செல்லப் பிள்ளையான காந்தியமும் தான். 

அதை தோழர் பகத்சிங் அவர்களே இவ்வாறு பிரகடனப்படுத்துகிறார்: 

"கற்பனாவாத அகிம்சை வழிப் போராட்டம் கோலோச்சிய காலத்திற்கு நாங்கள் முடிவுரை எழுதியுள்ளோம்" 

பாராளுமன்றத்தின் மீது வெடிகொண்டு வீசியெறிந்த வழக்கின் மீதான வாக்குமூலத்தில் பகத்சிங் இவ்வாறு உரத்து முழங்கினார். 

இந்தப் புரட்சிகர பிரகடனம் ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு மட்டுமின்றி காந்தியின் அகிம்சை வழிக்கும் வேட்டுவைப்பதாக இருந்தது. 

பகத்சிங் எனும் போல்ஷ்விச அபாயம் கண்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியமும் காந்தியமும் வன்முறை, பயங்கரவாதம் என்று மனப்பிறழ்வில் ஊளையிட்டன. இந்தப் புரட்சிகர நெருப்பை அணைக்காமல் தமக்கு வாழ்வில்லை என இரு தரப்பும் உணர்ந்தே அவ்வியக்கத்தை வேரோடு அழிக்க திட்டமிட்டன.

பகத்சிங் பாராளுமன்றத்தின் மீது குண்டு வீசியதற்கான காரணத்தை சொல்லும்போது "பாராளுமன்றத்தின் கேலிக்கூத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பத்திரிக்கை தேசத்துரோக மசோதா, பொதுப் பாதுகாப்பு மற்றும் வர்த்தக சிக்கல்கள் மசோதா போன்ற அடக்குமுறை சட்டங்களை எதிர்த்தும், லாலா லஜபதிராயின் கொலையை கண்டித்தும்" இதை அரங்கேற்றியதாக பகத்சிங் கூறுகிறார். ஆகவே காலனியாட்சி கூறுவது போல பயங்கரவாதத்தால் உந்தப்பட்டு இதை அவர் செய்யவில்லை. இது தெளிவான அரசியல் நோக்கத்தோடு செய்யப்பட்ட ஓர் அரசியல் நடவடிக்கையாகும். 

"இந்த தாக்குதல் தனி நபருக்கு எதிரானதல்ல; இந்த நாடாளுமன்ற அமைப்பு முறைக்கு எதிராக தொடுக்கப்பட்ட தாக்குதல் இது" எனும் அவரது கூற்று அதன் அரசியல் சாரத்தை எடுத்துக்காட்டுகிறது. கேளாத செவிகளை கேட்கச் செய்ய இந்த உரத்தக் குரல் தேவைப்படுகிறது எனும் அவரின் புகழ்பெற்ற வாசகம் கூட இதையொட்டி அவர் கூறியதுதான். 

நீதிமன்ற வாக்குமூலத்தில் பகத்சிங் "உள்ளீடற்று பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் நாடாளுமன்றம் மக்களை ஏய்ப்பதற்காகவே கட்டப்பட்டுள்ளது" என்கிறார். 

இந்த வாக்கியம் மோடி கும்பல் கட்டியெழுப்பியுள்ள உள்ளீடற்ற நாடாளுமன்றத்திற்கும் கூட அச்சு அசலாக பொருந்திப் போகிறது. நாடாளுமன்றத்தை காவி கும்பலைக் கொண்டு திறந்துள்ள மோடி கும்பல் அதை பாசிசத்தை கட்டியமைக்க ஒரு திரையாக பயன்படுத்துகிறது என மார்க்சியர்கள் அறிவார்கள். பகத் சொன்னவாறு இந்த நாடாளுமன்ற கேலிக்கூத்திற்கு நாம் முடிவுரை எழுத வேண்டும்.

பகத்சிங்கிற்கும் அவரது மாணவர்களாகிய நமக்கும் பாராளுமன்ற மாயைகள் எப்போதும் இருந்ததில்லை. அது போலி இடதுசாரிகளுக்கும் காந்தியத்திற்கும் உரித்ததாகும். 

மேலும் "பாராளுமன்ற அவையினர் சைமன் கமிஷனிடமிருந்து அற்ப சீர்திருத்தங்களால் வீசியெறியப்படும் எலும்புத்துண்டுகளுக்காய் சண்டையிடுகிறார்கள்" என்று அவர் கூறுவது அம்பானி - அதானி - அமெரிக்காவின் எலும்புத்துண்டுகளுக்காக நாயாய் அலையும் மோடி கும்பலுக்கும் சேர்த்துதான். 

பாராளுமன்ற பங்கேற்பு, புறக்கணிப்பு குறித்து எம்.எல் இயக்கங்களில் இன்றும் வலது, இடது போக்குகள் நீடித்துவரும் சூழலில் பகத்சிங் அது குறித்த துல்லியமான லெனினியக் கண்ணோட்டத்தைக் அந்த காலகட்டத்திலேயே கொண்டிருந்தார் என்பதை அறிந்து மெய்சிலிர்க்கிறது. 

இளம் அரசியல் போராளிகளுக்கு எனும் கட்டுரையில் அவர் 

1) சோசலிசத்தை பிரச்சாரம் செய்யும் ஒரு மேடையாகவே நமது பாராளுமன்ற பங்கேற்பு இருக்க வேண்டும் என்கிறார். 

2) லெனின் முதல் புரட்சி (1905) தோல்வியடைந்த பிறகுதான் டூமாவில் பங்கேற்றதாகவும், அதன் பிறகோ அதற்கு முன்போ பங்கேற்கவில்லை எனவும், அந்த பங்கேற்பும் கூட சோசலிசத்தை பிரச்சாரம் செய்யும் ஒரு மேடையாகவே (செயல்தந்திரமாகவே) லெனின் பயன்படுத்தினார் எனவும் எடுத்துக்காட்டுகிறார் பகத்சிங். 

எத்துனை சிறிய வயதில் எத்துனை பெரிய மேதமை! 

இந்தியப் பொதுவுடமை இயக்கம் காந்தியத்தின் பாலும், பெர்ன்ஸ்டைனியத்தின் (பாராளுமன்ற மோகம்) பாலும் மயக்கம் கொண்டிருந்த நிலைமையில் பகத்சிங்கின் இக்கண்ணோட்டம் லெனினியத்தில் அவருக்கிருந்த மேதமையை எடுத்துக்காட்டுகிறது. 

இதை முன்னுணர்ந்துதான் ஒரு மாபெரும் மார்க்சிய லெனினியவாதியை சின்னஞ்சிறுவயதிலேயே காலனியமும் காந்தியமும் கைகோர்த்து பச்சைப் படுகொலை செய்துள்ளன.

இது மட்டுமின்றி இக்கட்டுரை பல அம்சங்களில் முக்கியத்துவம் வாயந்ததாகும்.

சைமன் கமிஷனின் சீர்திருத்தங்களை ஆதரிக்கலாமா?? சமரசமே கூடாதா? எனும் கேள்வி எழுப்பி கம்யூனிஸ்ட்டுகள் சமரசங்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்று லெனின் புரட்சிக்குப் பிறகு சோசலிச குழந்தையைக் காப்பாற்றும் பொருட்டு ஜெர்மனுடன் மேற்கொண்ட பிரெஸ்ட் - லிடோவ்ஸ்க் சமரச ஒப்பந்தத்தை எடுத்துக் காட்டி விளக்குகிறார். அதில் இருந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்த அதிகாரத்தையும் பாதுகாப்பையும் வழங்காத சைமன் கமிஷன் அதாவது காலனிய சீர்திருத்தங்களை நாம் ஏற்க முடியாது என அரசியல் சித்தாந்த அடிப்படையில் விளக்குகிறார்.

ஆங்கிலேயரிடமிருந்து சில சலுகைகளை பெறுவதும், சில அதிகாரங்களை கைமாற்றுவதும் சுதந்திரம் அல்ல என்று கூறி காலனியாதிக்கத்தை வீழ்த்தி ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள், கூலி விவசாயிகள் புரட்சியின் வாயிலாக அரசியல் அதிகாரத்தை அடைவதும் அதன் மூலம் அம்மக்களின் சுதந்திர குடியரசை நிறுவுவதுமே உண்மையான பூரண சுதந்திரம் என்கிறார் பகத்சிங். இதன் பிறகு சோசலிசத்தை கட்டியமைக்க வேண்டும் என்கிறார். அதாவது காலனியாதிக்கத்தை வீழ்த்தவல்ல தேச விடுதலைப் புரட்சி அல்லது முதலாளித்துவப் புரட்சியை (புதிய ஜனநாயகப் புரட்சி) முதல் கட்டமாகவும், சோசலிசப் புரட்சியை இரண்டாம் கட்டமாகவும் மிகத்துல்லியமாக அன்றே இந்தியப் புரட்சிக்கான திட்டத்தை முன்வைத்துள்ளார்.

இந்தியப் புரட்சிக்கு நட்பு சக்தியாக தலைமை தாங்கும் சக்தியாக காந்தியையும் காங்கிரசையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மதிப்பிட்டு வலது விலகலில் வீழ்ந்திருந்த சூழலில், அக்கட்சியும் காந்தியும் சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமை தாங்க தகுதியற்றவை என அறைந்து கூறினார் பகத்சிங். 

இளம் அரசியல் போராளிகளுக்கு எனும் கட்டுரையில்...

1) காங்கிரசு விடுதலை பெற்றுத் தராது. அக்கட்சியின் தீர்மானம் முழு சுதந்திரம் என்று கூறினாலும் அதன் உள்நோக்கம் அதுவல்ல. அத்தீர்மானமும் கூட அக்கட்சியில் உள்ள இடது பிரிவின் அழுத்தத்தால் உருவாக்கப்பட்டதே ஒழிய அதன் நோக்கம் அதுவல்ல. காங்கிரசின் நோக்கம் பிரிட்டிஷ் ஆட்சியில் தன்னாட்சி (டொமினியன் அந்தஸ்து) பெறுவதே. அதையும் கூட பேரம் பேசவே அக்கட்சி பயன்படுத்தியது என்கிறார் பகத்சிங். 

2) தொழிலாளர்களை அரசியலுக்கு பயன்படுத்துவது ஆபத்து என்று கூறும் காந்தியை இந்தியத் தலைவர்கள் ஒருவர் கூட தாண்டவில்லை என்கிறார். 

3) காந்தி காலனியாட்சிக்கு ஆதரவான சமரசவாதி என துல்லியமாக மதிப்பிட்டு சொல்கிறார். 

4) ஓராண்டில் அமைதிவழி சுயராஜ்ஜியம் எனும் காந்தியின் கற்பனாவாதத்தால் ஈர்க்கப்பட்டு 10 ஆண்டில் புரட்சி சாத்தியம் என்பன போன்ற சிறுபிள்ளைத்தனமான மனக்கோட்டைகளை தகர்த்துவிடுங்கள் என்று இளம் அரசியல் போராளிகளுக்கு அறைகூவல் விடுக்கிறார். 

5) காந்தி மற்றும் காங்கிரசின் போராட்டம் சமரசங்களில் முடிவது இயல்பான ஒன்றல்ல. அவர்கள் சமரசங்களை எதிர்நோக்கியே திட்டம் வகுத்துப் போராடினார்கள் என்கிறார் பகத். 

எத்துனை துல்லியமான தீர்க்கதரிசனம்! 

காலனிய ஆட்சிக்குட்பட்ட தன்னாட்சி கோரிக்கையை காங்கிரசு மட்டுமல்ல பெரியாரின் நீதிக்கட்சியும் அதே கோரிக்கையைத்தான் அதாவது காலனியாட்சிக்கு உட்பட்ட திராவிட நாடு கோரிக்கையைத்தான் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது. அம்பேத்கரோ விடுதலையால் எமக்கென்ன இலாபம்?? தலித்துகள் கோவிலுக்குள் நுழைய முடியுமா?? என பேசிக்கொண்டிருந்தார். அவரும் சுதந்திரத்தை விரும்பவில்லை. காலனியாட்சியை வீழ்த்தி முதலாளித்துவ உற்பத்தியை கட்டியமைத்தால்தான் சாதி ஒழியும் எனும் கண்ணோட்டம் அவரிடம் இல்லை. பெரியாரோ காலனியாதிக்கம் மீதான பக்தி இயக்கத்தை நீதிக்கட்சியின் பேரால் கட்டியமைத்தார். ஆனால் இவர்களைத்தான் புரட்சியாளர்களாக திட்டமிட்டு ஒரு பிம்பத்தை ஏகாதிபத்தியமும் இந்திய ஆளும் வர்க்கங்களும் கட்டியமைத்து வருகின்றன. உண்மையான புரட்சியாளரும் தத்துவவாதியுமான பகத்சிங் ஒரு கோபக்கார இளைஞனாக -- அரசியலற்ற கலக்காரனாக காட்டப்படுகிறார். காலனிய அடிமைத்தனத்தை வளர்த்தவர்கள் எல்லாம் மேதைகளாக, மகாத்மாக்களாக புரட்சியாளர்களாக காட்டப்படுகின்றனர். மாபெரும் அவலம்! இந்த அவலத்திற்கு நாம் முடிவுகட்ட வேண்டும். மகாத்மாக்களின் பிம்பத்தை உடைத்து நொறுக்கி நமது ஆசான் பகத்சிங் இந்தியப் புரட்சியின் ஈடு இணையற்ற வழிகாட்டி என்று வரலாற்றை மாற்றி எழுதும் கடமை நமக்குண்டு.

புரட்சி குறித்தும், அதன் பாதை குறித்தும் தெளிவான மார்க்சியக் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தார் பகத்சிங். 

"புரட்சி என்பது வெறுமனே ஒரு எழுச்சியோ இரத்தக் களரியோ அல்ல; நிலவும் அரசமைப்பை முற்றாக அழித்து அதனிடத்தில் புதியதொரு சிறப்பான சமூகத்தை மறுகட்டமைக்கும் சரியான திட்டத்தைப் புரட்சி கோருகிறது" என்கிறார். 

புரட்சிக்குத் தேவையான ஒரு உண்மையான புரட்சிகரப் படையை தொழிலாளர்கள் மற்றும் கூலி விவசாயிகளைக் கொண்டுதான் கட்டியமைக்க இயலும் எனவும், ஏகோபித்த மக்கள் ஆதரவுடன் அரசியல் அதிகாரத்தை அடைவதே அரசியல் புரட்சியாகும் எனவும் கூறுகிறார். 

பயங்கரவாத நடவடிக்கைகளால் புரட்சி சாத்தியமில்லை, புரட்சிகர பாதையில் சில சமயம் அவ்வழிமுறை தேவைப்படலாமே ஒழிய அதுவே புரட்சியைக் கொண்டு வராது என்று என்ன செய்ய வேண்டும்? எனும் லெனினின் ஆவணத்தை கண் முன் காட்டுகிறார்.

புரட்சி நடைபெற வேண்டுமானால் புரட்சிகர கட்சியும் அதன் வழியிலான வெகுஜன அமைப்புகளும் (தொழிலாளர், விவசாயிகளின் வர்க்க அமைப்புகள்) அவசியம் எனவும் வர்க்க அமைப்புகளின் சங்க கோரிக்கைகள் அரசியல் அதிகாரத்துடன் இணைக்கப்பட வேண்டும் எனவும் லெனினியத்தை துல்லியமாக விளக்குகிறார்.

புரட்சிகர கட்சிக்கு முழுநேரப் புரட்சியாளர்கள் மிகவும் அவசியம் என்பதை லெனினிடம் இருந்து எடுத்துக்காட்டி "சொந்த தொழிலிலும் குடும்ப வாழ்விலும் மூழ்கியிருந்தால் கட்சி கட்டுவதும் புரட்சி நடத்துவதும் சாத்தியமில்லை" என்கிறார். 

புரட்சிகர கட்சியில் தனி நபர் வாதம் (அராஜகவாதம்) கூடாது என்று வலியுறுத்தும் அவர் கட்சிக்குள் தோன்றும் வலது சந்தர்ப்பவாதம், இடது தீவிரவாதப் போக்குகளை களைய வேண்டும் என்கிறார். 

புரட்சிக்கு தேதி குறிக்க முடியாது என்று கூறி, சமூக பொருளாதார நிலைமைகள் கனியும்போதுதான் அந்த நிலைமைகளை கட்சி பயன்படுத்தும் போதுதான் புரட்சி சாத்தியம் என்பதை ரசிய அனுபவங்களில் இருந்து விளக்குகிறார். 

நாட்டுப்பற்று மட்டுமே புரட்சியைக் கொண்டுவராது; தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு வர்க்க உணர்வை நாம் ஊட்டவேண்டும். ஏனெனில் இது பாட்டாளி வர்க்கத்தின் புரட்சி; பாட்டாளி வர்க்கத்திற்கான புரட்சி என அழுத்தமாக வலியுறுத்துகிறார். 

இவ்வாறாக, இளம் அரசியல் போராளிகளுக்கு எனும் பகத்சிங்கின் கட்டுரையை வாசிக்கும்போது, இந்தியப் புரட்சிக்கு தலைமை தாங்குவதற்கு தகுதியான மகத்தானதொரு மார்க்சிய லெனினியப் புரட்சியாளரை இளம் வயதிலேயே நாம் இழந்துவிட்டோம்! என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. உண்மையில் சொல்வதெனில் காலனியமும் காந்தியமும் நமது ஆசானை திட்டமிட்டுப் படுகொலை செய்து விட்டன என்பதுதான் நிதர்சனம். 

கனவுதேசம் எனும் தலைப்பிட்ட தனது நண்பன் எழுதிய கவிதையை விமர்சிக்கும்போது அதிலுள்ள சரி தவறுகளை இயங்கியல் ரீதியாக விமர்சிக்கிறார். கவிதையை கடவுளுக்கு காணிக்கை செய்வது கருத்துமுதல்வாதம் எனவும், தான் ஒரு பொருள்முதல்வாதி எனவும், மதம் ஓர் அபின் எனும் மார்க்சின் கோட்பாட்டில் இருந்து அதை மறுப்பதாகவும் விளக்கும்போது ஆச்சர்யம் மேலிடுகிறது. மேலும் முக்கியமாக இலக்கியத்திற்கு அரசியல் உள்ளடக்கம் அவசியம் எனும் கலை இலக்கியம் குறித்த மார்க்சியக் கண்ணோட்டத்தை முன்வைக்கிறார்.

பிற்சேர்க்கையில் உள்ள கட்டுரையானது பகத்சிங்கின் சர்வதேசியக் கண்ணோட்டத்தையும் ஸ்டாலின் தலைமையிலான கம்யூனிஸ்டு அகிலம் அவரது அரசியல் வழிக்கு தந்த முக்கியத்துவத்தையும், ஸ்டாலின் அவரை சந்திக்க விரும்பி அழைப்பு விடுத்ததையும் அறிய முடிகிறது. அவரும் அகிலத்தின் வரலாற்றுத் தேவையை உணர்ந்திருந்தார் என்றே தெரிகிறது. இங்கிருந்து அகிலம் சென்ற எம்.என் ராய் போன்ற திருத்தல்வாதிகளின் கருத்தை லெனின் நிராகரித்துவிட்ட பின்பும் அவர்தான் மேதாவியாக இங்கு காட்டப்படுகிறார். காங்கிரசு கட்சி குறித்த இவரைப் போன்றவர்களின் தவறான மதிப்பீட்டை (தேச விடுதலைக்கு தலைமை தாங்கும் கட்சி) அகிலத்தில் மாற்றியமைத்தவர் பகத்சிங் ஆவார். காங்கிரசு கட்சியை சமரசவாத முதலாளித்துவ கட்சி என்று கூறி பகத்சிங்கின் HRA இயக்கத்தின் எழுச்சியை அகிலம் ஆர்வத்துடன் அங்கீகரித்தது. ஆகவேதான் சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் தலைவரும் ஆசானுமான ஸ்டாலின் பகத்சிங்கை சந்திக்க விரும்பினார் என்பது மெய்சிலிர்க்கும் வரலாறு அல்லவா! 

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற புரட்சியாளர்கள் தமது வயிற்றில் மீண்டும் பிறக்க வேண்டும் என விரும்பி அவர்களின் சாம்பலை தாய்மார்கள் தமது வயிற்றில் பூசிக்கொள்வார்களாம்! நாம் அவர்களை நமது நினைவில் பூசிக்கொள்வோம்! எனக்கு மரணமில்லை. நான் எண்ணற்ற வீரர்கள் உருவில் மீண்டும் பிறப்பேன் என முழங்கி பகத்சிங் தூக்குமேடை ஏறியது நம்மை மனதில் வைத்துத்தான்! நரை கூடி கிழப்பருவமெய்தி கொடுங்கூற்றுக்கு இரை என மாயும் பல வேடிக்கை மனிதர் போல் வீழாமல் பகத்சிங்கின் மாணவர்களான நாம் அவரது இலட்சியங்களை நிறைவேற்ற சூளுரைப்போம்! 

இன்று மோடி கும்பல் அமெரிக்காவின் புதிய காலனியத்திற்கும் அதன் தெற்காசிய மேலாதிக்கத்திற்கும் நாட்டை பலியிட்டு வரும் இந்த சூழலில்...

எவ்வித மாற்றுக் கொள்கையுமில்லாத, பாசிச எதிர்ப்பு திட்டமில்லாத காங்கிரசை பாஜகவிற்கு மாற்று என முன் நிறுத்தப்படும் சூழலில்... 

பகத்சிங்கின் லெனினிய வழியை உயர்த்திப் பிடிப்பது மிகவும் அவசியமாகிறது. ஆர்.எஸ்.எஸ் வருங்கால இந்தியாவின் அச்சுறுத்தல் என சரியாக கணித்து சொன்ன பகத்சிங்கின் தீர்க்க தரிசனம் பொய்த்துவிடவில்லை. ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான பாஜக ஆட்சியை வீழ்த்தவும் மக்கள் ஜனநாயகக் குடியரசை அமைக்கவும் களம் காண்பதே பகத்சிங்கிற்கு நாம் செலுத்தும் உண்மையான நேர்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

=================================================================================================

1

கேளாத செவிகள் கேட்கட்டும்

இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுக் கழக அறிவிப்பு1

"கேளாத செவிகளைக் கேட்கச் செய்ய ஓர் உரத்த குரல் தேவைப்படுகிறது." 

இதே போன்ற ஒரு தருணத்தில் பிரெஞ்சு புரட்சியாளர் வாலியண்ட் கூறிய அழியாப் புகழ்பெற்ற இந்த வார்த்தைகளின் அடிப்படையில்தான், நமது இச்செயலுக்கு தீர்க்கமாக நியாயம் சேர்க்கப் போகிறோம்.

இந்திய நாடாளுமன்றம் என சொல்லிக் கொள்ளப்படும் இந்த அவையின் மூலம், கடந்த பத்தாண்டு காலமாக, இழிந்து போன சீர்திருத்தங்களே மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படும் வரலாற்றைப் பார்க்காமல், இந்திய தேசத் தலைவரை  அவையில்  புண்படுத்தும் இழிசொற்களைப் பற்றிப் பேசாமல், மக்கள் சைமன் கமிஷனிடமிருந்து அற்ப சீர்திருத்தங்களையே இம்முறையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவையினரோ, சைமன் கமிஷனின் சீர்திருத்தங்களால் வீசியெறியப்படும் எலும்புத் துண்டுகளுக்காக இன்னமும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகை தேசத்துரோக மசோதா, பொதுப் பாதுகாப்பு மற்றும் வர்த்தக சிக்கல்கள் மசோதா போன்ற புதிய அடக்குமுறை நடவடிக்கைகளை நம் மீது திணிக்கிறது இந்த அரசு. தொழிற்சங்கத் தலைவர்களை கண்மூடித்தனமாக கைது செய்வதே, இவர்களின் போக்கு என்னவென்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

மிகக் கொந்தளிப்பான இச்சூழலில், இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுக் கழகம், தனது முழுப்பொறுப்பையும் ஆழ்ந்து உணர்ந்து, நாடாளுமன்றம் என்ற இந்த மோசமான கேலிக்கூத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அந்நிய சுரண்டல்காரர்கள், எதையும் செய்யட்டும்; ஆனால், என்ன செய்யவிருக்கிறார்கள் என்பதை மக்கள் முன் தோலுரித்துக் காட்டவும், தீர்மானித்து, தனது படைக்கு குறிப்பான இச்செயலை நிறைவேற்ற உத்தரவிட்டது.

மக்கள் பிரதிநிதிகள் தங்கள் தொகுதிகளுக்குத் திரும்பி, வரவிருக்கும் புரட்சிக்கு மக்களைத் தயார்படுத்தட்டும். அரசு இதை தெரிந்து கொள்ளட்டும். மேலும் பொதுப் பாதுகாப்பு மற்றும் வர்த்தக சிக்கல்கள் உள்ளிட்ட மசோதாக்களுக்கும், லாலா லஜபதி ராயின் கொடூரமான கொலைக்கும் எதிராகவும், நிர்க்கதியாக நிற்கும் தேச மக்களின் சார்பாகவும் போராடும் நாம், இந்த பாடத்தை  அரசுக்கு புகட்ட நினைக்கிறோம். 

தனிநபர்களைக் கொல்வதென்பது  எளிது, ஆனால் அவர்களின் நம்பிக்கையை அழிக்க முடியாது எனும் மாபெரும் வரலாற்றுப் படிப்பினை அது. பெரிய பேரரசுகள் நொறுங்கின, ஆனால் நம்பிக்கைகள் ஒழியவில்லை. புரட்சி வெற்றிகரமாக வீறுநடை போட்ட போதுதான் போர்பன்களும் ஜார்களும் வீழ்ந்தனர்.

நாங்கள் மனித உயிரை மிகவும் நேசிக்கிறோம். மனிதன் அமைதியையும் முழு சுதந்திரத்தையும் பெற வேண்டும் என கனவு காணும் நாங்கள், புரட்சிக்காக சில சமயம் இரத்தம் சிந்த வேண்டியுள்ளது என்பதை வருத்தத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அனைவருக்கும் சுதந்திரத்தை அளிக்கும் வல்லமை படைத்த புரட்சி வென்றிடவும். மனிதனை மனிதன் சுரண்டுவதைத் தடுத்திடவும் தனி மனிதன் அதனூடேயான  பலிபீடத்தில் பலியாகும் தியாகம் தவிர்க்க இயலாததாகிவிடுகிறது. 

"புரட்சி நீடூழி வாழ்க!"

பாலராஜ், தலைமை தளபதி

ஏப்ரல் 8, 1929

அடிக்குறிப்புகள்:

1. பகத் சிங் மற்றும் படுகேஷ்வர் தத்தா ஆகியோரால் நாடாளுமன்றத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்த பிறகு வீசப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் இடம்பெற்றிருந்த உரை இது. பகத் சிங்கின் தோழரும், சாகேத் பகத் சிங்  தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் நூலின் ஆசிரியருமான ஷிவ் வர்மா அவர்கள் இந்த கட்டுரை   பகத்சிங்கால் சீதாராம் பஜாரில் இருந்த அவர்ளது ரகசிய அறையில் இருந்து எழுதப்பட்டது என்று நினைவு கூர்ந்தார். கட்சியின் கடிதத் தாளிலேயே  அதன் 30 முதல் 40 பிரதிகளை தட்டச்சு செய்தார். ஜெய்தேவ் கபூர், தட்டச்சு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உதவினார். துண்டுப் பிரசுரம் முழுவதும் அதே நாள் (ஏப்ரல் 8) மாலையே தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் மாலைப் பதிப்பில்  வெளியிடப்பட்டது.

=====================================================================================================

2

மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குமூலம்

மன்னர் (எதிர்) பகத் சிங் & பி.கே. தத்தா

இ.பி.கோ பிரிவு 307-ன் கீழும், வெடிப்பொருட்கள் சட்டப் பிரிவு 3, 4-ன் கீழும் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன.

பகத் சிங் மற்றும் பி.கே. தத்தாவின் (எதிர்வாதிகளின்) எழுத்துப்பூர்வ வாக்குமூலம்.1

1. எங்கள் மீது மிகக் கடுமையான குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் எங்களின் நடவடிக்கைகள் குறித்து தன்னிலை விளக்கம் தருவது அவசியமானதாகிறது. இது தொடர்பாக பின்வரும் கேள்விகள் எழுகின்றன:

(1) நாடாளுமன்ற அவைக்குள் குண்டுகள் வீசப்பட்டதா, அப்படியானால், அதன் பின்னணி என்ன? (2) கீழமை நீதிமன்றத்தால் வனையப்பட்ட குற்றச்சாட்டு சரியானதா இல்லையா?

2. முதல் கேள்வியின் முதல் பகுதியைப் பொறுத்தமட்டில், நாங்கள் குண்டுகள் வீசியதை ஒப்புக்கொள்வதாகவே இருந்தாலும், நேரில் கண்ட சாட்சிகள் என்ற பெயரில் பொய்சாட்சி அளித்துள்ளதை கணக்கில் கொண்டு பார்க்கும் போது, குற்றச் செயலில் எங்கள் பங்கு எந்தளவிற்கு இருந்துள்ளதென்பதை அவர்கள் பொய்சாட்சியை வைத்து மட்டுமே முடிவு செய்யாமல், எதிர்வாதங்களின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.  உதாரணமாக, எங்களில் ஒருவரிடமிருந்து கைத்துப்பாக்கியை கைப்பற்றியதாக உதவி ஆய்வாளர் டெர்ரி அளித்த வாக்குமூலம் வடிகட்டின பொய்யாகும்; ஏனெனில், நாங்கள் சரணடைவதாக ஒப்புக்கொண்டபோது எங்களில் யாரிடமும் கைத்துப்பாக்கி இருக்கவில்லை. நாங்கள் வெடிகுண்டுகள் வீசியதை பார்த்ததாக கூறும் பிற சாட்சிகள் பொய், பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை எனச் சொல்லுமளவிற்கு கூச்சநாச்சமின்றி அப்பட்டமாக பொய் புளுகுகிறார்கள் என்று கவனித்த எவருக்கும் தெரியும். நீதித்துறையில் சத்தியமும், நேர்மையும் நிலைநாட்டப்பட வேண்டுமென நினைப்பவர்களக்கு இந்த வழக்கிலிருந்து கற்பதற்கு நல்ல பாடங்கள் உள்ளன. அதே சமயம், அரசு வழக்கறிஞரும், இந்நீதிமன்றமும் இதுவரையில் நடுநியாயமாக நடந்து கொண்டதையும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.

3. முதல் கேள்வியின், இரண்டாம் பகுதியைப் பொறுத்தமட்டில், எங்களது உள்நோக்கங்கள் குறித்தும், இப்போது ஒரு வரலாற்று நிகழ்வாகவே மாறியுள்ள சம்பவத்திற்கு வழிவகுத்த காரண காரியங்கள், சூழ்நிலைமைகள் குறித்தும் முழுநிறைவான, நேர்மையான விளக்கத்தின் மூலம் தெளிவான பதிலை வழங்குவதே சரியாக இருக்கும். இந்தத் தாக்குதல் தனியொரு நபருக்கு எதிராக தொடுக்கப்பட்டதல்ல, இந்த நாடாளுமன்ற அமைப்பு முறைக்கு எதிராக தொடுக்கப்பட்டது என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கான கூட்டு அமர்வில் உரையாற்றிய போது இர்வின் பிரபு விவரித்ததாக சிறைச்சாலையில் எங்களைக் காண வந்த சில காவல் துறை அதிகாரிகள் கூறினர்; அவ்வகையில், எதற்காக தாக்குதல் தொடுக்கப்பட்டது என்பதை சரியாகவே மதிப்பிட்டுள்ளனர் என்பதை அவர்கள் சொல்லும் போதே புரிந்துகொண்டோம். மனித குலத்தை நேசிப்பதில் எங்களுக்கு நிகர் எவருமில்லை. எந்தவொரு நபருக்கு எதிராகவும் நாங்கள் குரோத உணர்வு கொண்டதில்லை; எங்களைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு மனித உயிரும் வார்த்தைகளில் விவரிக்க முடியாதளவிற்கு உன்னதமானது. [போலி சோசலிசவாதியான திவான் சமான் எங்களைப் பற்றி கூறியது போல]  கொலைவெறித் தாக்குதல்களை கோழைத்தனமாக செய்து நாட்டிற்கே அவப்பெயர் தேடித்தந்துள்ள கேடிப்பயல்களோ அல்லது [லாகூரிலிருந்து வெளியிடப்படும் தி ட்ரிபுயூன் பத்திரிக்கையும், இன்னும் சிலரும் நம்புவது போல] நாங்கள் பைத்தியக்கார்களோ அல்ல. நாங்கள் வெளிவேஷம் போடுவதை இழிவானதாகக் கருதுகிறோம்; நாட்டின் கடந்த காலம் பற்றியும், அதன் தற்போதைய நிலைமைகள் பற்றியும் மட்டுமல்லாது மனித வாழ்க்கையின் ஏக்கப் பெருமூச்சுகளாக கருதப்படும் ஒவ்வொரு விருப்பங்களையும்கூட கருத்தூன்றிப் பயிலும் மாணவர்கள் நாங்கள் என்று சொல்லிக் கொள்வதைத் தவிர ஒன்றுமில்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம். [நாடாளுமன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டதில் இருந்தே, தனது லாயக்கற்ற தன்மையை மட்டுமல்லாது சர்வகுலநாசத்தை உண்டுபண்ணும் அளவிற்கான எதேச்சதிகாரத்தையும் சேர்த்தே வெளிப்படுத்தி வந்துள்ளது. இது குறித்து எத்தனைமுறை சிந்தித்த போதும், இந்தியாவின் அடிமை வாழ்வையும், கையறுநிலையையும் உலக அரங்கில் வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக மட்டுமே இந்த அமைப்பு நிலவுகிறது என்பது சந்தேகத்திற்கிடமின்றி உறுதியாகிறது. மக்கள் பிரதிநிதிகளால் முன்தள்ளப்படும் நாட்டு நலனுக்கான கோரிக்கைகள், மீண்டும் மீண்டும் குப்பைத் தொட்டியில் மட்டுமே தூக்கியெறியப்படுகின்றன. இந்தியாவின் நாடாளுமன்றம் என்று சொல்லப்படும் இடத்தில் அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப்படும் எந்தவொரு தீர்மானங்களையும் கால் தூசுக்கு சமமானதாகக் கருதும் திமிர்பிடித்த போக்கே நிலவுகிறது.  ஒடுக்குமுறையான, எதேச்சதிகார சட்டங்களை திரும்பப் பெறக் கோரி நிறைவேற்றப்படும் தீர்மானங்களை எந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு அற்பமாக எண்ணி இழிவான முறையில் புறந்தள்ளப்படுவது ஒருபுறம் நடக்கிறதென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளும், இன்ன பிற முன்மொழிவுகளும் ஒரே கையெழுத்தில் நடைமுறைக்கு வருவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. சுருக்கமாக, பல இலட்சக்கணக்கான இந்தியர்கள் வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்தைக் கொண்டு எவ்வளவுதான் பிரம்மாண்டமாக, ஆடம்பரமாக கட்டியிருந்தாலும், இந்த நாடாளுமன்றம் இருக்க வேண்டும் என்பதற்கான எந்தவொரு நியாயமும் - பலமுறை யோசித்துப் பார்த்தும்கூட - எனக்கு பிடிபடவில்லை; உள்ளீடற்று பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் நாடாளுமன்றம் மக்களை ஏய்ப்பதற்காக மட்டுமே எழுப்பப்பட்டுள்ளது. அதேபோல, (அவை நடவடிக்கைகள் என்ற பெயரில்-மொர்) மக்களின் நேரத்தையும், பணத்தையும் வீணடித்து, இந்தியாவின் அடிமை வாழ்வை இவ்வளவு நேர்த்தியாக, முன்கூட்டியே திட்டமிட்ட முறையில் வெளிச்சம் போட்டுக் காட்டும் செயலுக்கு துணைபோகும் மக்கள் பிரதிநிதிகளின் மனப்போக்கு என்னவென்பதையும் எங்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.] தொழிற்சங்கத் தலைவர்கள் பூண்டோடு கைது செய்யப்பட்டது உட்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து நாங்கள் கூர்ந்து கவனித்து வந்தோம்; நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தொழில் தகராறு மசோதாவே அவையில் என்னதான் நடக்கிறது என்பதை பார்ப்பதற்காக எங்களை உள்ளிழுத்து வந்தது. [இது தொடர்பாக நடந்த விவாதங்களைப் பார்த்த போது திக்கற்ற உழைக்கும் மக்கள் மீது சுரண்டும் வர்க்கத்தின், ஒடுக்குமுறையாளர்களின் அதிகாரத்தையும், அடிமைத்தனத்தையும் சுமத்தும் சின்னமாக திகழும் நாடாளுமன்றத்திடமிருந்து இலட்சோப இலட்ச உழைக்கும் மக்கள் ஒன்றைக்கூட பெற முடியாது என்பதை மேன்மேலும் ஆணித்தரமாக உறுதிப்படுத்தியது. இந்நாட்டு மக்கள் பிரதிநிதிகள் என்பாருக்கே இதுபோன்ற அவமரியாதை நடக்கிறதென்பதை வன்கொடுமையான, நாகரிகமற்ற செயலாகவே நாங்கள் கருதுகிறோம். இவையெல்லாம் பசிப்பட்டினியால் வாடி வதங்கும் இலட்சோப இலட்ச மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயலாகும்; மேலும், வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்களுக்கு இருக்கின்ற ஒரே வழியையும் அடைக்கும் செயலாகும்.  

வாயில்லா அடிமாடுகளைப் போல உழைக்கும் தொழிலாளர்களின் ஒற்றுமைக்காக சுகபோக வாழ்வை உதறித் தள்ளிவிட்டு வந்துள்ள எங்களைப் போன்ற எவராலும், இதுபோன்ற நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகளை பார்த்த பிறகு எவ்வித சலனமும் இல்லாமல் வேடிக்கை பார்க்க முடியவே முடியாது. ஒடுக்கும் வர்க்கத்தின் மொத்த பொருளாதாரக் கட்டமைப்பையும் உருவாக்கியது மட்டுமல்லாது, சத்தமே இல்லாமல் அதைத் தாங்கிப் பிடிப்பதற்காக தங்கள் வாழ்வைத் தியாகம் செய்து வருபவர்களுக்காக பாடுபடும் எங்களைப் போன்ற - குறிப்பாக நட்டின் அரசாங்கமே பெரும்சுரண்டல்காரர்களின் பிரதிநிதியாக இருந்து கொண்டு நெஞ்சைக் குத்திக் கிழிக்கும் வன்கொடுமையான செயல்களை பார்க்கும் போது மரண வலியால் பீறிட்டு எழும் ஆத்திரத்தை எங்களைப் போன்ற - எவராலும், வெளிக்காட்டாமல் இருக்க முடியாது.] அவ்வகையில், [தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் சட்ட உறுப்பினராக சேவையாற்றிய மறைந்த திரு. ஷி.ஸி. தாஸ் தனது மகனுக்கு எழுதிய பிரபலமான கடிதமொன்றில் - ஆழ்ந்த நித்திரையில் லயங்கி கிடக்கும் இங்கிலாந்தை கண்திறந்து பார்க்கச் செய்வதற்கு வெடிகுண்டு சத்தம் அவசியம்] - என்று சொன்ன வார்த்தைகளை மனதில் வைத்துத்தான் நாங்கள் நாடாளுமன்ற அவையினுள் குண்டு வீசினோம்; ஒடுக்கப்பட்டவர்களின் மரண ஓலங்களை வெளிப்படுத்த வேறுவழியில்லாமல் தவித்தவர்களின் சார்பாக எங்களது கண்டனக் குரலை பதிவு செய்வதற்காகவே அவையினுள் குண்டு வீசினோம். "கேளாத செவிகளைக் கேட்கச் செய்வதும்", கண்டும் காணாதது போல கடந்து செல்பவர்களுக்கும் தக்க நேரத்தில் எச்சரிக்கை செய்வது மட்டுமே எங்களது ஒரே குறிக்கோளாக இருந்தது. [எங்களைப் போன்றே இன்னும் பலரும் இதேபோல கொதித்துப் போய்தான் நிற்கிறார்கள்; அதிதீவிர புயலுக்கு முன் கடலில் தோன்றும் அமைதி போல இந்திய மக்கள் மத்தியில் அமைதி நிலவுவது போலத் தோன்றினாலும், ஆழிப்பேரலை போல மக்கள் வெடித்தெழுவது வெகுவிரைவில் நிகழத்தான் போகிறது.] எதிர்வரும் பேரெழுச்சியை கண்டுகொள்ளாமல் சர்வகுலநாசத்தை நோக்கி வேகமாக செல்பவர்களுக்கு எச்சரிக்கை செய்யும்வகையில் நாங்கள் "சாவு மணி" அடித்துள்ளோம். [கற்பனாவாத அகிம்சை வழிப் போராட்டம் கோலோச்சிய காலத்திற்கு நாங்கள் முடிவுரை எழுதியுள்ளோம்; அகிம்சை வழிமுறையில் நம்மால் சிறு துரும்பைக் கூட வென்றெடுக்க முடியாது என்று சந்தேகத்திற்கிடமின்றி பறைசாற்றும் நிலைக்கு இன்றைய இளைய தலைமுறையினர் வந்து நிற்கின்றனர். நாங்கள் மனிதகுலத்தின் மீது உண்மையான அக்கறையும், அன்பும் கொண்டுள்ளோம்; எங்களைப் போல இன்னும் பலரும் உறுதியாக முன் அறிவிப்பு செய்துவரும் சொல்லொண்ணாத் துயரங்களை தடுக்க வேண்டுமென்பதற்காகவே சாவு மணி அடிப்பது போன்றொரு போராட்ட வழிமுறையின் மூலம் நாங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளோம்.

4. முந்தைய பத்தியில் கற்பனாவாத அகிம்சை வழிப் போராட்டம் என்ற சொற்றொடரை பயன்படுத்தியிருந்தோம்; இந்த சொற்றொடர் குறித்து கூடுதலான விளக்கம் தர வேண்டியது அவசியமாகிறது.] முரட்டுத்தனமாக நமது அதிகாரத்தை, பலத்தைப் பயன்படுத்துவதை "வன்முறை" என்று சொல்லலாம்; இத்தகைய வன்முறைகளை ஒருபோதும் எவ்வித நீதி தர்மங்களைக் (அறத்தைக்) கொண்டும் நியாயப்படுத்த முடியாது. எனினும், எப்போது, ஒரு நியாயமான காரணத்திற்காக பலம் (அதிகாரம்) பிரயோகிக்கப்படுகிறதோ அதை நீதி தர்மங்களின் (அறத்தின்) அடிப்படையில் சரியானதாக ஏற்கச் செய்ய முடியம். [எல்லாச் சூழ்நிலைகளிலும், ஒரேயடியாக பலத்தை, அதிகாரத்தை இல்லாமல் செய்வதென்பது நடைமுறையில் சாத்தியமே இல்லாத ஒன்றாகும். குரு கோபிந்த் சிங், சிவாஜி, கமல் பாஷா, ரிஷா கான், வாஷிங்டன், கரிபால்டி, லாஃபீயெட், லெனின் போன்ற வரலாற்று நாயகர்களின் கொள்கைகளை நினைவிலேந்தி நின்று, இந்நாட்டில் தலையெடுத்து வரும் இயக்கங்களின் குரல்களையும் கேட்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவே சங்கநாதம் எழுப்பினோம். இதுபோன்ற இயக்கங்களின் இருப்பையும், அவர்கள் எதற்காக போராடுகிறார்கள் என்பதை அந்நிய அரசாங்கம் மட்டுமல்லாது இந்திய மக்கள் தலைவர்கள் என்பாரும் கண்டுகொள்ளாமல் காதுகொடுத்து கேட்கவும் மறுத்து வருகிறார்கள். கேளாத செவிகளுக்கு கேட்கும் வகையில் சாவு மணி அடிப்பது எங்கள் கடமை என்று உணர்ந்ததால்தான் குண்டு வீசினோம்.

5. இதுவரை இந்த சம்பவத்திற்கு வழிவகுத்த பின்னணிக் காரணங்களைப் பற்றி பார்த்தோம். இப்போது, என்ன நோக்கத்திற்காக இவை நடத்தப்பட்டது என்பது பற்றி திட்டவட்டமாக விளக்குவது அவசியமாகிறது.

சிறுசிறு காயங்களைப் பெற நேர்ந்த தனிநபர்களுக்கு எதிராகவோ அல்லது அவையில் இருந்த எந்தவொரு நபர்களுக்கு எதிராகவும் நாங்கள் குரோத உணர்வோ அல்லது பழிதீர்க்கும் எண்ணங்களோ கொண்டிருக்கவில்லை என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும். இதுமட்டுமல்லாது, வார்த்தைகளால் விவரிக்க முடியாதளவிற்கு மனித உயிர்கள் உன்னதமானது என்பதை எப்போதும் நம்புகிறோம்; பிறருக்கு காயம் ஏற்படுத்துவதைவிட மனித குலத்தின் நன்மைக்காக எங்கள் உயிரைத் தியாகம் செய்வது மேலானதாக இருக்குமென்றால் நாங்கள் எப்போதும் உயிர்துறப்பதற்கே முன்னுரிமை தருவோம். [தயவுதாட்சண்யமின்றி கொன்றொழிப்பதற்காகவே பயிற்றுவிக்கப்பட்ட ஏகாதிபத்திய கூலிப்படைகளல்ல நாங்கள்.] மனித வாழ்வை போற்றுகிறோம்; எப்பாடுபட்டாவது மனித வாழ்வை பாதுகாப்பதே எங்களது ஒரே நோக்கமாக இருந்து வருகிறது. அப்படியிருந்தபோதிலும், நாடாளுமன்ற அவைக்குள் திட்டமிட்டே நாங்கள் குண்டுகளை வீசினோம் என்பதை மறுக்கவில்லை! எனவே, எங்கள் செயல்களால் உண்மையில் என்ன விளைந்தது என்பதை வைத்தே எங்களது நோக்கங்களை (intetion) மதிப்பிட வேண்டுமேயொழிய மிகைப்படுத்தப்பட்ட சான்றுகளைக் கொண்டோ, முன்-அனுமானங்களைக் கொண்டோ முடிவுக்கு வரக்கூடாது. நாடாளுமன்ற அவையில் வீசப்பட்ட குண்டுகள் மரச்சாமான்களுக்கு சிற்சில சேதத்தை ஏற்படுத்தியதென்றும், ஆறு பேருக்கும் குறைவான நபர்களுக்கு சில சிறிய கீறல்கள் மட்டுமே இருந்ததென்றும் அரசாங்கத்தின் வல்லுநர் சமர்ப்பித்த வாக்குமூலமே கூறுகின்றது. இந்த சம்பவத்தில் பெரும் பாதிப்பு ஏற்படாமலிருந்தது அதிசயமே என்று அரசு வல்லுநர் குறிப்பிட்டுள்ளார்; எனினும், எங்களைப் பொறுத்தவரை துல்லியமான விஞ்ஞானப்பூர்வமான திட்டமிடல் என்று சொல்வதைத் தவிர வேறு திருவிளையாடல்கள் எதுவுமில்லை. மேசைகளும், பெஞ்சுகளும் தடுப்புகள் போல சூழ்தமைந்திருந்த ஆளில்லாத இடத்தில்தான் இரண்டு குண்டுகளை வெடிக்கச் செய்தோம் என்பதே முதலில் கவனிக்க வேண்டிய விசயமாகும். இரண்டாவதாக, வெடித்த இடத்திலிருந்து இரண்டடிகளுக்குள்ளாக அமர்ந்திருந்த நபர்களுக்கும்கூட (அதாவது திரு. P.R. ராவ், சங்கர் ராவ், சர் ஜார்ஜ் சுஸ்டர்) எவ்வித காயங்களும் ஏற்படவில்லை அல்லது சிறு கீறல்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன. அரசு வல்லுரால் ஊகிக்கப்பட்ட குண்டின் வெடிப்புத்திறன் (இது மிகைப்படுத்தப்பட்டதாகவும், கற்பனையானதாகவும் இருந்தபோதிலும்), அவர்கள் மிகைப்படுத்தி சொல்வதுபோல பொட்டாஸியம் குளோரேட்டுடன் எளிதில் வெடிக்கத்தக்க பிக்ரேட்டையும் (Picrate) சேர்த்து தயாரிக்கப்பட்ட சக்திவாய்ந்த குண்டு வெடித்திருந்தால் சுற்றியிருந்த தடுப்புகளையும் மீறி பல அடிகளுக்கு தள்ளியிருந்த நபர்களுக்கு கூட கடுமையான காயங்களை ஏற்படுத்தியிருக்கும். ஒருவேளை, பெருநாசத்தை ஏற்படுத்தக் கூடிய சிறுசிறு குறுணைக் குண்டுகளோ (pellets) அல்லது குறுணைக் கணைகளைக் (darts) கொண்டோ பெருவெடிப்புத்திறன் கொண்ட பிற மருந்துகளை வைத்து தயார் செய்து குண்டுகளை வெடிக்கச் செய்திருந்தால், அவையிலிருந்த பெரும்பான்மையான உறுப்பினர்களை கொன்றொழிப்பதற்கு போதுமானதாக இருந்திருக்கும். இதுமட்டுமல்ல, முக்கியப் புள்ளிகள் கும்பலாக அமர்ந்திருக்கக்கூடிய மேடையில்கூட எங்களால் அந்த குண்டுகளை வீசியிருக்க முடியும். இவ்வளவு ஏன், எல்லாவற்றுக்கும் மேலாக, சமூக பொறுப்புள்ள எல்லோரும் தீரத்துடன் எதிர்த்து போராடிய சைமன் குழுவின் தலைவர் சர் ஜான் சைமன் அப்போது ஜனாதிபதி அரங்கில்தான் அமர்திருந்தார், பதுங்கியிருந்து அவருக்குக் கூட வேட்டு வைத்திருக்க முடியும். எனினும், இவையெல்லாம் எங்கள் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டவை; வெடிகுண்டுகள் என்ன நோக்கத்திற்காக தயார் செய்யப்பட்டதோ அவை செவ்வனே நிகழ்ந்துள்ளன; எந்த இடத்தில் வெடிக்கச் செய்தால் என்ன நிகழும் என்பதை தெளிவாகத் திட்டமிட்டதை தவிர - எல்லோரும் நினைப்பது போல - இதில் எவ்வித மாயவித்தையோ, அதிசயமோ (திருவிளையாடலோ) ஒளிந்திருக்கவில்லை; இதேபோல் கைத்துப்பாக்கியைக் கொண்டு மேல் நோக்கி சுடப்பட்டது என்றாலும் அதை நாங்கள் இருவருமே செய்யவில்லை.

6. நாங்கள் செய்த செயலுக்கான விளைவுகளை எதிர்கொள்ள தானாக முன்வந்து சரணடைந்தோம்; [தனிநபர்களைக் கொல்வதன் மூலம் அவர்கள் கொண்ட இலட்சியங்களை கொன்றுவிட முடியாது என்பதை ஏகாதிபத்திய சுரண்டல்காரர்களுக்கு பறைசாற்றுவதற்காகவே நாங்கள் சரணடைந்தோம். இரண்டு தனிநபர்களை அடிபணியச் செய்தது போல நாட்டிலுள்ள எல்லோரையும் அடிபணியச்  செய்துவிட முடியாது; எதேச்சதிகார அவசரச் சட்டங்கள் மூலம், சிறைக் கொட்டடிகள் மூலம் எப்படி பிரெஞ்சு புரட்சியாளர்களை ஒடுக்க முடியாமல் போனதென்ற வரலாற்று உண்மையை அடித்துச் சொல்ல வேண்டுமென நினைத்தே சரணடைந்தோம். தூக்கு மேடைகளும், சைபீரிய சுரங்கங்களும் ரஷ்யப் புரட்சியாளர்களை ஒழிக்க முடியவில்லை. இரத்த ஞாயிறுகளாலும், கரும்பச்சை-காக்கிளாலும்கூட அயர்லாந்து நாட்டின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க முடியவில்லை. (கடந்த கால உண்மைகள் இவ்வாறிருக்க - மொ-ர்), அவசரச் சட்டங்களாலும், பாதுகாப்பு சட்டங்களாலும் கொழுந்துவிட்டெரியும் சுதந்திரச் சுடரை அணைத்துவிட முடியுமா என்ன! இட்டுக்கட்டப்பட்ட அல்லது கண்டறியப்பட்ட சதி வழக்குகளால் மட்டுமல்லாது, மகத்தான இலட்சியங்களை ஏந்தி நடக்கும் எல்லா இளைஞர்களையும் சிறைப்படுத்துவதனால் மட்டும் புரட்சியை தடுத்து நிறுத்திவிட முடியாது. தக்க நேரத்தில் அடிக்கப்பட்ட சாவுமணியை சரியாக புரிந்துக்கொண்டு உடனடியாக செயல்பட்டால், எண்ணற்ற உயிர்பலியையும், சர்வகுலநாசத்தையும் தடுத்து நிறுத்த முடியும். எச்சரிக்கை விடுப்பதை எங்கள் கடமையாகக் கருதினோம்; அவ்வகையில் எங்கள் கடமை செவ்வனே நிறைவேற்றப்பட்டது.

7. 'புரட்சி' என்றால் எங்களைப் பொறுத்தவரை என்னவென்பது குறித்து கீழமை நீதிமன்றத்தில் பகத் சிங் ஆகிய என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளிக்கையில், புரட்சி என்பது இரத்தவெறிக் கொண்ட மோதலாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை, தனி மனிதர்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கும் அதில் இடமில்லை. குண்டு வீசுவது, துப்பாக்கி சூடு நடத்துவது மட்டுமே ஒரே வழிமுறையாகக் கொள்வது புரட்சியாகாது. அப்பட்டமான அநீதிகள் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ள தற்போதைய அமைப்பு முறை அனைத்தும் தலைகீழாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதே நாங்கள் சொல்லும் புரட்சியின் அர்த்தமாகும். சமூகத்தின் இன்றியமையாத சக்திகளான உற்பத்தியாளர்கள் அல்லது தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிய பங்கைத் தட்டிப் பறிப்பதோடு, அவர்களின் அடிப்படை உரிமைகளையும் சேர்த்தே பறிக்கின்றனர். இன்னொருபுறம், உலகிற்கே உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் குடும்பம் பட்டினி கிடக்கிறது. உலகுக்கே ஆடை உற்பத்தி செய்து தரும் நெசவாளியோ தனது பெண்டு பிள்ளைகளது அங்கத்தை மறைப்பதற்கு வேண்டிய துணிமணிகளைக்கூட வாங்க முடியாது தவிக்கின்றார்; உழைப்பும் உளியும் கொண்டு பிரம்மாண்டமான அடுக்குமாடிகளை கட்டியெழுப்பம் கட்டிட வேலைக்கரர்கள், இரும்புக்கொல்லர்கள், தச்சர்களோ குடிசை வீடுகளிலும், சேரிகளிலும் வாழ்ந்து மடிகிறார்கள். மறுபுறம், சமூகத்தில் ஒட்டுண்ணி வாழ்வு நடத்திவரும் முதலாளித்துவச் சுரண்டல்காரர்கள், தங்களின் தனிப்பட்ட ஆசைகளுக்காகவும், சுகபோகங்களுக்காகவும் கோடிக்கணக்கான பணத்தை ஊதாரித்தனமாக வீணாக்குகிறார்கள். கூர்மையடையும் படுபயங்கரமான ஏற்றத்தாழ்வுகளும், சம வாய்ப்புகளை பலவந்தமாக பறிக்கப்படும் சமூகநிலைமைகள் பெருங்கலகத்தை நோக்கி இட்டுச் செல்கிறது. இந்த நிலையே நீண்ட காலம் நீடிக்க முடியாது; மகிழ்ச்சியாகவும் கொண்டாட்டமாகவும் இருப்பதுபோலத் தோன்றும் தற்போதைய சமூக அமைப்பு நெருக்கடியின் விளிம்பில் உள்ளது என்பது தெளிவாகிறது. எப்பாவமும் அறியாத சுரண்டும் வர்க்கத்தின்  பிள்ளைகளின் எதிர்காலமும், கோடிக்கணக்கான சுரண்டப்படும் வர்க்கத்தின் பிள்ளைகளின் எதிர்காலமும் அழிவின் விளிம்பு நோக்கி தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நாகரீகத்தின் முழுக் கட்டமைப்பும், சரியான நேரத்தில் மீட்கப்படாவிட்டால், சின்னாபின்னமாகிவிடும். எனவே, ஒரு அடிப்படை மாற்றம் இன்றியமையாததாக இருக்கிறது; ஒட்டுமொத்த சமூகத்தையும் சோசலிச கொள்கையின் அடிப்படையில் மாற்றியமைப்பதே தீர்வென புரிந்துக்கொண்டவர்களின் பொறுப்பு இது. இந்தக் கடமையைச் செய்யாவிட்டால், மனிதனை மனிதனே சுரண்டுவதையும், ஏகாதிபத்தியம் (வல்லரசு நாடுகள்) என்ற போர்வையில் ஒரு நாடு மற்றொரு நாட்டைச் சுரண்டுவதையும் முடிவுக்கு கொண்டு வராவிட்டால், இன்று மனிதகுலம் எதிர்நோக்கும் துன்பத் துயரங்களையும் சர்வகுலநாசத்தையும் தவிர்க்க முடியாது. இதைச் செய்யாமல் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக, உலகமே அமைதிப் பூங்காவாக மாறுவது பற்றியெல்லாம் நடத்தப்படும் எந்தவொரு விவாதமும் அப்பட்டமான வெளிவேஷமே தவிர வேறில்லை. நமது மொழியில் புரட்சி என்பது, சமூக ஏற்றத்தாழ்வுகளால் சீர்குலைந்துவிடாத ஒரு இலட்சிய சமூகத்தை இறுதியில் படைப்பதை நோக்கமாகக் கொள்வதாகும். இந்த நெடும் போராடத்தில், பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும்; இதுவே ஒரு உலகளாவிய கூட்டரசு உருவாகுவதற்கு வழிவகுக்கும்; இதன் மூலம் மட்டுமே முதலாளித்துவ சமூகத்தின் அடிமைத் தளைகளிலிருந்தும் ஏகாதிபத்தியப் போர்களால் ஏற்படும் துன்பத் துயரங்களிலிருந்தும் மனிதகுலத்தை விடுவிக்க முடியும்.

8. இதுவே எங்களின் இலட்சியமாகும், இந்த தத்துவத்தின்பால் உத்வேகம் பெற்ற நாங்கள் தெளிவாக எல்லோருக்கும் கேட்கும் வகையில் சாவு மணி அடித்துள்ளோம். இருந்தபோதிலும், நமது எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டு, தலையெடுத்துவரும் புரட்சிகர சக்திகளுக்கு தற்போதுள்ள அரசு இயந்திரத்தின் மூலம் முட்டுக்கட்டைபோடுகிற போது, கடுமையான போராட்டம் தவிர்க்க முடியாததாக மாறிவிடுகிறது; இந்தப் போராட்டம் அனைத்துத் தடைகளையும் தாண்டி, புரட்சிகர இலட்சியத்தை நிறைவேற்ற வேண்டுமெனில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவதை உள்ளடக்கமாக கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது.

புரட்சி என்பது மனித குலத்தின் பறிக்க முடியாத உரிமையாகும். சுதந்திரம் என்பது எவராலும் மறுக்கமுடியாத மனிதர்களின் பிறப்புரிமையாகும். ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உழைப்பாளிகளே அச்சாணியாவர். உழைக்கும் மக்கள் இறையாண்மை பெறுவதே தொழிலாளர்களின் இறுதி இலக்காகும்.

இந்த இலட்சியங்களுக்காகவும், இந்த நம்பிக்கைக்காகவும், எங்கள் மீது சுமத்தப்படும் எந்தவொரு துன்பத்தையும் மனமுவந்து ஏற்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இத்தகைய உன்னத நோக்கத்திற்காக எந்த ஒரு தியாகமும் பெரிதானதல்ல என்றுக் கருதி, இந்தப் புரட்சி எனும் வேள்வியில் எங்கள் இளமையை தியாகம் செய்கிறோம்.

புரட்சியின் வருகையை எதிர்பார்த்து நாங்கள் மனநிறைவோடு இருக்கிறோம்.

"புரட்சி நீடூழி வாழ்க"

பகத் சிங்

படுகேஷ்வர் தத்தா 

ஜூன் 9, 1929

அடிக்குறிப்புகள்:

1. ஜூன் 9, 1929 இல், வாக்குமூலத்தின் குறிப்பிடத்தக்க பகுதிகள் "பொருத்தமற்றவை" எனக் கூறப்பட்டு அதிகாரப்பூர்வ பதிவிலிருந்து நீக்கப்பட்டன. நீக்கப்பட்ட பகுதிகள் இங்கே சதுர [ ] அடைப்புக்குறிக்குள் இணைக்கப்பட்டுள்ளன. பகத் சிங் மற்றும் படுகேஷ்வர் தத்தா ஆகியோர் கையெழுத்திட்ட அசல் அறிக்கையும் இந்த வாக்குமூலக் கட்டுரையும் ஒன்றுதான்; இது புது தில்லியின் தேசிய ஆவணக் காப்பகத்தில் சேமிக்கப்பட்டுள்ளது (சேர்க்கை எண். 246, மன்னர் (எதிர்) பகத் சிங் மற்றும் பி.கே. தத்தா). இதற்கு முன்னர் வெளிவந்த பதிப்புகளுக்கும், தற்போதைய பதிப்பிற்கும் மாறுபாடுகள் உள்ளன. இந்த மாறுபாடுகள் எதற்காக கொண்டு வரப்பட்டன என்பது தெளிவாகத் தெரியவில்லை. 

====================================================================================================

3

"புரட்சி நீடூழி வாழ்க"

மாடர்ன் ரிவியூ ஆசிரியருக்கு1

உங்கள் மதிப்பிற்குரிய பத்திரிகையின் டிசம்பர் (1929) இதழில், "புரட்சி நீடூழி வாழ்க" என்ற தலைப்பில் ஒரு குறிப்பை எழுதி, இந்த சொற்றொடர் அர்த்தமற்றது எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். அனுபவமும் புகழும் மிக்க உங்களைப் போன்ற மூத்த பத்திரிகையாளரிடம் அறிவார்ந்த இந்தியர் எவருக்கும் பற்றுதல் உண்டு. அப்படிப்பட்ட உங்களின் கூற்றை மறுக்கவோ அல்லது முரண்படவோ முயற்சிப்பது எங்கள் தரப்புக்கும் சங்கடம்தான். இருப்பினும் இன்றைய கட்டத்தில் நாடு முழுவதும் இந்த முழக்கத்தை கொண்டு செல்ல வேண்டியதன் அவசியம் காரணமாக, அம்முழக்கம் மூலம் நாங்கள் கூற வந்தவற்றை இங்கு விளக்க வேண்டியது எங்கள் கடமையாகிறது.

இந்த முழக்கத்தை தோற்றுவித்தவர்கள் நாங்கள் அல்ல. ரஷ்ய புரட்சிகர இயக்கங்களிலும் இதே முழக்கம் பயன்படுத்தப்பட்டது. நன்கு அறியப்பட்ட சோசலிச எழுத்தாளரான அப்டன் சின்க்ளேர், தனது பாஸ்டன், ஆயில் போன்ற நாவல்களில் வரும் புரட்சிகர கதாபாத்திரங்கள் மூலம் இந்த முழக்கங்களை பயன்படுத்தியுள்ளார். 

இரத்தவெறிக் கொண்ட மோதலாகவே தொடர வேண்டும் என்றோ அல்லது சிறிது நேரம் கூட எதுவும் நிலையானதாக இருக்கக்கூடாது என்றோ இதற்கு அர்த்தமில்லை. இலக்கண அல்லது சொற்பிறப்பியல் பார்வையை நாம் குறை கூற முடியாது என்றாலும் அந்த நிலையில் இருந்து மட்டுமே இந்த முழக்கத்தை பற்றி வியாக்கியானம் செய்யக் கூடாது. அதே நேரத்தில், இந்த முழக்கங்களோடு தொடர்புடைய சிந்தனைகளையும் நாம் புறக்கணித்துவிட முடியாது. 

இத்தகைய முழக்கங்கள் அனைத்தும் பகுதியளவு கற்பதன் மூலமும், பகுதியளவு இயல்பாகவே உணர்வதன் மூலமும் வெளிப்படுகின்றன. உதாரணமாக, "ஜதின் தாஸ்2 வாழ்க" என்று நாம் முழங்கும்போது, தாஸ் இந்த மண்ணில் மரிக்காமல் உயிர் வாழ வேண்டும் என்ற அர்த்தத்தில் அல்ல. அந்த முழக்கத்தின் மூலம் நாம் சொல்வது என்னவென்றால், அவரது வாழ்வின் உன்னத இலட்சியமும், சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்த அந்த மாபெரும் தியாகியின் சிந்தனையும், ஆன்மாவும் என்றென்றும் வாழ வேண்டும் என்பதே ஆகும். ஆகையால், புரட்சி நீடூழி வாழ்க என்ற முழக்கத்தை எழுப்புவதன் மூலம், நமது இலட்சியத்தை நிறைநிறுத்துவதில் அதே துணிவைக் காட்ட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அந்த வேட்கையைத்தான் நாங்கள் உருவாக்க விரும்புகிறோம்.

அதேபோல, "புரட்சி" என்ற சொல்லை அதன் இலக்கிய அர்த்தத்தில் இருந்து மட்டும் விளக்கக் கூடாது. இந்த வார்த்தையை சரியாக பயன்படுத்துபவர்களின் அல்லது தவறாகப் பயன்படுத்துபவர்களின் நலன்களுக்கு ஏற்ப பல்வேறு அர்த்தங்களும் இந்த வார்த்தைக்குக் கொடுக்கப்படுகின்றன. சுரண்டல் அமைப்பு முறைக்கு இது இரத்தக் கறை படிந்த திகில் உணர்வை ஏற்படுத்துகிறது. புரட்சியாளர்களுக்கு இது ஒரு புனித சொற்றொடர். 

"புரட்சி" என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதை, டெல்லியில் உள்ள செஷன்ஸ் (குற்றவியல்) நீதிபதி முன்பு, நாடாளுமன்ற குண்டுவெடிப்பு வழக்கின் மீதான விசாரணையில் நாங்கள் தெளிவுபடுத்த முயற்சித்தோம். புரட்சி என்பது இரத்தவெறி கொண்ட மோதலாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று நாங்கள் அதில் கூறினோம். குண்டு வீசுவது, துப்பாக்கி சூடு நடத்துவது மட்டுமே ஒரே வழிமுறையாக கொள்வதல்ல; புரட்சியின் இலட்சியங்களை வென்றெடுப்பதற்கு சில சமயங்களில் அவ்வழி பயன்படலாம்; சில தருணங்களில் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை; கலகம் செய்வது புரட்சியாகாது. இறுதியினும் இறுதியாக கலகங்கள் புரட்சிக்கு இட்டுச்செல்லும்.

நாங்கள் வைத்துள்ள அம்முழக்கத்தில் புரட்சி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ள அர்த்தம், வேட்கை. ஒரு சிறந்த மாற்றுக்கான தாகம் அவ்வளவே!. 

இவர்கள் பொதுவாக இந்த சுரண்டல் முறைகளுக்கு பழக்கப்பட்டதனால், மாற்றத்திற்கான இந்த முழக்கங்களை கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள். இந்த மந்தப்போக்குதான் புரட்சிகர உணர்வால் மாற்றப்பட வேண்டும். இல்லையெனில், சீரழிவு மேலெழும்பிவிடும்; ஒட்டுமொத்த மனிதகுலமும் பிற்போக்கு சக்திகளால் வழிநடத்தப்படும். இத்தகையப் போக்குதான் மனிதகுல முன்னேற்றத்தை தடுத்து தேக்க நிலைக்கும் முடங்குவதற்கும் வழிவகுக்கிறது. புரட்சியின் வேட்கை எப்பொழுதும் மனிதகுலத்தின் ஆன்மாவில் ஊடுருவ வேண்டும், அதன் லட்சியப் பாதையை நோக்கிய அணிவகுப்பைச் சீர்குலைக்க பிற்போக்குச் சக்திகளுக்கு இடமளிக்கக் (பலமளிக்க) கூடாது.

உலகை சீரழிவிலிருந்து தடுக்க, எப்போதும் பழைய சமூகம் ஒழிக்கப்பட்டு புதிய சமூகம் படைக்கப்பட வேண்டும். இந்த அர்த்தத்தில்தான் "புரட்சி நீடூழி வாழ்க" என்ற முழக்கத்தை எழுப்புகிறோம்.

பகத்சிங் - பி.கே.தத்

டிசம்பர் 24, 1929

"இன்குலாப் ஜிந்தாபாத்!"

அடிக்குறிப்புகள்:

1. மாடர்ன் ரிவியூவின் ஆசிரியர் ராமானந்த் சாட்டர்ஜி, "புரட்சி நீடூழி வாழ்க" என்ற முழக்கத்தை கேலி செய்தார், ஏனெனில், அது கலகத்தின் முடிவில்லாத்தன்மையைக் குறிப்பதாக ராமானந்த் கருதினார். அதற்கான தனது பதிலை மாடர்ன் ரிவியூவிற்கு அனுப்புவதற்காக விசாரணை மாஜிஸ்திரேட்டிடம் பகத் சிங் ஒப்படைத்தார். அது டிசம்பர் 24, 1929 அன்று ட்ரிப்யூன் நாளிதழில் வெளியிடப்பட்டது.

2. ஜதிந்தர நாத் தாஸ் - இந்திய சோசலிசக் குடியரசுக் கட்சியின் உறுப்பினர். லாகூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டு பகத் சிங் உடன் சிறையில் இருந்த போது, சிறையில் அரசியல் கைதிகள் குற்றவாளிகள் போல நடத்தப்படுவதை கண்டித்தும் சிறைக்கைதிகளின் அடிப்படை உரிமைகளைக் கோரியும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார். தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தின் 64 வது நாளில் இன்னுயிரை நீத்தார். கல்கத்தா வீதிகளில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அணிவகுத்தனர் (ப--ர்).    

=====================================================================================================

4

கனவு தேசத்திற்கு ஓர் அறிமுகம்

எனது மேன்மைமிகு நண்பர், எல். ராம் சரண் தாஸ், அவரது கவிதைப் படைப்பான "கனவு தேசத்திற்கு" முன்னுரை எழுதச் சொன்னார். நான் ஒரு கவிஞனோ அல்லது இலக்கியவாதியோ இல்லை, பத்திரிகையாளரோ அல்லது விமர்சகனும் அல்ல. எனவே, அவரது கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுவது, கற்பனைக்கெட்டாதது. நூல் எழுப்பும் கேள்விகளைப் பற்றி விரிவாக ஆசிரியருடன் எதிரும் புதிருமாக வைத்து, வாதிடும் சூழலிலும் இப்போது நான் இல்லை.  எனவே நண்பனின் விருப்பத்தின்படி இதனை எழுதி அனுப்புகிறேனே தவிர வேறு எவ்வித மாற்றத்தையும் செய்ய இயலவில்லை.

நான் ஒரு கவிஞன் அல்ல என்பதனால் அத்தகையக் கண்ணோட்டத்தில் இருந்து விவாதிக்கப் போவதில்லை. சந்தத்தைப் பற்றி எனக்கு துளியும் அறிவு இல்லை, மேலும்  சந்த நடையின் விதிகளில் இருந்து அது சரியாக இருக்குமா என்றும் கூட தெரியவில்லை. இலக்கியவாதியாக இல்லாத நான், இந்த நூல் தேசிய இலக்கியத்தில் அதற்கு உரிய இடத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கிலிருந்து விவாதிக்கப் போவதில்லை.

அதிகபட்சமாக, நான் என்னுடைய அரசியல் நிலைபாட்டிலிருந்து மட்டுமே அதை விவாதிக்க முடியும். ஆனால் இங்கே மற்றொரு காரணியும் கூட என் வேலையை சாத்தியமற்றதாக இல்லையெனினும், மிகக் கடினமாக்கத்தான் செய்கிறது. பொதுவாக அறிமுகவுரை எப்போதும் நூலாசிரியரின் நிலைபாடோடு ஒத்துப்போவோரால் மட்டுமே எழுதப்படுகிறது. ஆனால், இங்கே நிலைமை முற்றிலும் வேறுபட்டுள்ளது. எல்லா விஷயங்களிலும் நான் என் நண்பருடன் உடன்படுவதில்லை. பல முக்கியமான விஷயங்களில் அவரிடமிருந்து வேறுபட்டுள்ளேன் என்பதையும் அவர் அறிந்திருந்தார். எனவே, எனது எழுத்து அந்நூலுக்கு அறிமுகமாகவே இருக்காது. இது அதிகபட்சமாக ஒரு விமர்சனமாக இருக்கலாம், ஆகையால் இது  புத்தகத்தின் தொடக்கத்தில் அல்லாமல் இறுதியில் இடம் பெற்றிருக்கும்.

அரசியல் துறையில் "கனவு தேசம் (The Dreamland)"முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் அது நமது இயக்கத்தில் மிக முக்கியமான இடைவெளியை நிரப்புகிறது. உண்மையில், நவீன வரலாற்றில் இதுவரை முக்கிய பங்காற்றிய, நம் நாட்டின் எந்தவொரு அரசியல் இயக்கமும் தனது இலக்கை அடைவதற்கான குறிக்கோளை கொண்டிருக்கவில்லை. புரட்சிகர இயக்கங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. 

நான் எவ்வளவு முயற்சி செய்தாலும், அவர்கள் எதற்காகப் போராடுகிறார்கள் என்ற தெளிவான நோக்கங்களைக் கொண்ட எந்தவொரு புரட்சிகர கட்சியையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போதுள்ள அரசமைப்புக்கு மாறாக (அமெரிக்க அரசின் வடிவம் போல) ஒரு ஜனநாயக குடியரசை நிறுவ விரும்புவதாகத் தெளிவாகத் தெரிவித்துள்ள கதர் கட்சியைத் தவிர வேறெந்த கட்சியும் தெரியவில்லை. மற்ற அனைத்துக் கட்சிகளும் ஒரே ஒரு நோக்கம் கொண்டவையாகவே  இருந்தன. அதாவது அந்நிய ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராட வேண்டும்; அந்த விருப்பம் மிகவும் பாராட்டத்தக்கதுதான்; ஆனால் அதை வைத்து மட்டுமே அது புரட்சிகரமானது என்று கூற முடியாது. புரட்சி என்பது வெறுமனே ஒரு எழுச்சியையோ அல்லது ஒரு ரத்தக் களறியையோ குறிக்கவில்லை என்பதை நாம் தெளிவுபடுத்த வேண்டும். தற்போதுள்ள அரசமைப்பை முழுமையாக அழித்து, அதனிடத்தில், புதியதொரு சிறப்பான சமூகத்தை முறையாக மறுகட்டமைக்கும் சரியான திட்டத்தை புரட்சி கோருகிறது.

அரசியல் துறையில் தாராளவாதிகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சில சீர்திருத்தங்களை மட்டும் விரும்புகின்றனர். அதே நேரத்தில் தீவிரவாதிகள் இன்னும் கொஞ்சம் அதிகமாகக் கோரினர், அதற்காக புரட்சிகர வழிகளை மேற்கொள்ளவும் ஆயத்தமாக இருந்தனர்; அவ்வளவு தான்.  புரட்சியாளர்களிடையேயும் சிலர் அவ்வகையான  தீவிர வழிமுறைகளுக்கு ஆதரவாக இருந்தனர். அதாவது அந்நிய ஆதிக்கத்தை தூக்கியெறிய வேண்டும் என்று குறிப்பாக விரும்பினாலும்கூட தீவிர வழிமுறைகளின் மூலம் மிரட்டி சில சீர்த்திருத்தங்களை பறித்துக்கொள்ள முடிந்தது. இதுபோன்ற இயக்கங்கள் அனைத்தையும் புரட்சிகர இயக்கங்கள் என்று நாம் குறிப்பிட்டுவிட முடியாது.

ஆனால் எல். ராம் சரண் தாஸ், 1908 ஆம் ஆண்டு வங்காளத்தைச் சார்ந்த  தலைமறைவு தோழர் ஒருவரால் பஞ்சாபில் முறையாக இயக்கத்தில் சேர்க்கப்பட்ட முதல் புரட்சியாளர் ஆவார். அப்போதிலிருந்து அவர் புரட்சிகர இயக்கங்களுடன் தொடர்பில் இருந்து இறுதியாக கதர் கட்சியில் சேர்ந்தார், இருப்பினும் அவர் முன்பு செயல்பட்ட இயக்கங்களின் இலட்சியங்களை கைவிடவில்லை. இதற்கு  அழகையும் மதிப்பையும் சேர்க்க மற்றொரு சுவாரஸ்யமான தகவல் உள்ளது. எல். ராம் சரண் தாஸ் 1915 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டார், பின்னர் ஆயுள் தண்டைனையாக குறைக்கப்பட்டது. மரண தண்டனையை விட ஆயுள் தண்டனை என்பது ஒப்பீட்டளவில் மிகவும் கொடியது என்பதை - தண்டனை விதிக்கப்பட்ட அறைகளில் அமர்ந்துகொண்டு -  வாசகர்களுக்கு இன்று அழுத்தமாக தெரிவிக்கிறேன். எல். ராம் சரண் தாஸ் பதினான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருந்தது. தென்னிந்தியாவின் ஏதோ ஒரு தென்னக சிறைச்சாலையில் இருந்துதான் இந்தக் கவிதையை எழுதினார். அவரின் அப்போதைய உளவியலும் மனப் போராட்டமும் கவிதையின் மீது அதன் தாக்கங்களை ஏற்படுத்தியதோடு  அதனை இன்னும் அழகாகவும் சுவாரஸ்யமாகவும் ஆக்கியுள்ளது. அவர் எழுத முடிவெடுப்பதற்கு முன்பு  மனச்சோர்வு நிலைக்கு எதிராக கடுமையாக போராடினார். அவரது தோழர்கள் பலர் அம்முயற்சிகளில் இருந்து விடுபட்டு -  அனைவருக்கும் அவருக்கும் கூட சோதனை மிகவும் வலுவாக இருந்த அந்த நாட்களிலும் கூட - மனைவி மற்றும் குழந்தைகளின் நினைவுகள் விடுதலைக்கான ஏக்கத்தை மேலும் அதிகரித்தபோதும்கூட -  அதனால் ஏற்பட்ட மனச்சோர்வுகளுக்கு எதிராக கடுமையாக போராடிக் கொண்டே  இந்த நூலை உருவாக்கும் பணியில் தனது கவனத்தை செலுத்தியுள்ளார். ஆகையால்தான்  தொடக்கத்தில் அதனை வெளிப்படுத்தியுள்ளார்:

"மனைவி, குழந்தைகள், நண்பர்கள், ஏன், என்னையும் 

சூழ்ந்திருப்பவை, விஷப் பாம்புகளே"

அவர் தொடக்கத்தில் ஒரு தத்துவத்தைப் பற்றி விவாதிக்கிறார். இந்த தத்துவம் வங்காளத்தின் அனைத்து புரட்சிகர இயக்கங்களுக்கும் அதே போல் பஞ்சாபின் இயக்கங்களுக்கும் முதுகெலும்பாக உள்ளது. 

இந்த விஷயத்தில் நான் அவரிடமிருந்து பாரிய அளவில் வேறுபடுகிறேன். பிரபஞ்சத்தைப் பற்றிய அவரது விளக்கம் உடனடி நோக்குள்ளதாகவும், கருத்து முதல் வாதமாகவும் இருந்தது. ஆனால் நான் ஒரு பொருள்முதல்வாதி,  அந்நிகழவைப் பற்றிய எனது விமர்சனம் இயல்பானதாகவே இருக்கும். இருப்பினும் இது காலாவதியானதா அல்லது இன்றைய சூழலுக்கு பொருந்தாததோ அல்ல. நம் நாட்டில் நிலவும் பொதுவான கருத்துக்கள், அவர் வெளிப்படுத்திய கருத்துக்களுடன் அதிகமாகவே ஒத்துப்போகின்றன. 

அந்த மனச்சோர்வு நிலையை எதிர்த்துப் போராடி அவர் பிரார்த்தனைகளை நாடியது, புத்தகத்தின் ஆரம்பம் முழுவதும் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதிலிருந்து தெளிவாகிறது. கடவுளைப் பற்றிய  புகழ் மற்றும் விளக்கங்களும் கூடத்தான். கடவுள் நம்பிக்கை என்பது மாயவாதத்தின் விளைவு ஆகும், இது மனச்சோர்வின் இயற்கையான விளைவு ஆகும். இந்த உலகம், 'மாயா' அல்லது 'மித்யா' (கனவு அல்லது கற்பனை) என்பது, சங்கராச்சாரியார் போன்ற பண்டைய சாமியார்களால் தோற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட மாயவாதம். ஆனால் பொருள்முதல்வாத தத்துவத்தில் இந்த சிந்தனை முறைக்கு முற்றிலும் இடமில்லை. ஆனால் நூலாசிரியரின் இந்த மாயவாதம் எந்த வகையிலும் இழிவானதோ அல்லது ஊதாசினப்படுத்தக் கூடியதோ அல்ல. இந்நூல் தனக்கென தனி அழகியலைக் கொண்டுள்ளது. அவரின் சிந்தனைகள் ஊக்கமளிக்கின்றன. இதோ சற்று பாருங்கள்:

"காணமுடியாத அடித்தளமாகட்டும் உன் சுமை

நெஞ்சில் மகிழ்ச்சியுடன் தாங்கி அதை அமை

உன்  வளாகம் வளர்ந்து அங்கே விரியட்டும் 

சுமையிலும் உனக்கு வரும் ஆறுதல், புரியட்டும்.

உலகத்தின் பாராட்டு அனைத்துக்கும் எல்லை

கட்டடத்தில் பதிக்கப்பட்ட கல்லில் இல்லை"

இத்தியாதி, இத்தியாதி...

எனது சொந்த அனுபவத்திலிருந்து சரியாகவே இதை வலியுறுத்த முடியும்: இடையறாத ஆபத்துள்ள பணிகளைக் கொண்ட இரகசிய வாழ்க்கையை ஒருவர் மேற்கொள்ளும்போது, "நம்பிக்கையின்றியும் அச்சமின்றியும்", "எப்போதும் வெளி உலகத்திற்கு அறியப்படாமல் இறக்கத் தயாராகவும், உரிய புகழ்கிடைக்காமலும்", அவர் இருப்பாராயின் அவரால் தனது சொந்த சபலங்களையும், அபிலாஷைகளையும், இத்தகைய உளைச்சலான மாயவாதத்தின் மூலம் எதிர்த்துப் போராடுவதை தவிர்க்க இயலாதுதான்.  அடுத்து அதை, ஒரு புரட்சியாளரின் மனநிலையிலிருந்து அதை கையாள வேண்டும். எல். ராம் சரண் தாஸ் புரட்சிக் கட்சியின் உறுப்பினராக இருந்தவர், அவ்வமைப்பு பல வன்முறை செயல்களில் ஈடுபட்டிந்ததாக குற்றச்சாட்டப்பட்டிருந்தது. ஆனால் புரட்சியாளர்கள் இரத்த வெறி பிடித்த அரக்கர்களோ அல்லது அழிவில் இன்பம் தேடுகிறவர்களோ அல்ல என்பதை இது எவ்வகையிலும் நிரூபிக்கவில்லை.

இதோ:

"இருக்கலாம், வெளியில் முரட்டுத்தன தோற்றம்,

உள்ளே சாந்தமான மனமே, தேவையான மாற்றம்.

தேவைப்பட்டால், தடையில்லை சீறுங்கள், 

ஆனால் கடித்துக் குதறுவது சரியல்ல பாருங்கள்;

வெளியிலே தெறித்து தெரியட்டும் போராட்டம், 

உள்ளிலே நெறித்த அமைதியின் நீரோட்டம்;

இத்தியாதி இத்தியாதி...

புதிய கட்டுமானத்திற்கு பழையதை  அழிப்பது இன்றியமையாதது மட்டுமல்ல. புரட்சியாளர்கள் அதைத் தங்கள் செயல்திட்டத்தின் அவசியமாக ஏற்றுக்கொள்ள வேண்டும், மேலும் வன்முறை மற்றும் அகிம்சையின் தத்துவம் மேலே உள்ள வரிகளில் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. லெனின் ஒருமுறை கார்க்கியிடம் தனது முழு நரம்பு மண்டலத்தையும் தாக்கும் இசையை தன்னால் தாங்க முடியவில்லை என்றும், அந்த கலைஞர்களின் தலையைத் தட்ட ஆசைப்படுவதாகவும் கூறினார். "ஆனால்", மேலும் அவர், "தலைகளைத் தட்டுவதற்கான நேரம் இதுவல்ல. கைகள் இப்போது கபாலத்தை அடித்து நொறுக்குகின்றன. நமது இறுதி நோக்கம் எல்லாவிதமான வன்முறைகளையும் ஒழிப்பதாகும்".  வன்முறை வழிகளை அவசியமாக கையாள வேண்டியிருக்கும் சூழலில் புரட்சியாளர்கள், வன்முறையை, கொடூரமான தேவையாகத்தான் பார்க்கிறார்கள்.

அடுத்து, பல்வேறு முரண்பட்ட மதங்கள் குறித்த பிரச்சினைகளை நூலாசிரியர் கையாள்கிறார். அனைத்து தேசியவாதிகளும் முயற்சிப்பது போலவே இவரும் அவைகளை இணக்கமாக்க முயற்சிக்கிறார். பிரச்சனையைக் கையாளும் அவரது முறை நீட்டி முழக்கி உள்ளது. என்னைப் பொறுத்தவரை, "மதம் மக்களுக்கு அபின்" என்று கார்ல் மார்க்ஸின் ஒற்றை வாக்கியத்தில் அதை நிராகரிக்கவே முனைவேன்.

கடைசியாக அவரது கவிதையின் மிக முக்கியமான பகுதி வருகிறது, அங்கு அவர் நாம் அனைவரும் உருவாக்க விரும்பும் எதிர்கால சமுதாயத்தைப் பற்றி பேசுகிறார். ஆனால் ஆரம்பத்திலேயே ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். "தி ட்ரீம்லேண்ட்" என்பதே கற்பனாவாதம். 

நூலாசிரியர் அதை தலைப்பிலேயே அப்பட்டமாக ஒப்புக்கொண்டுள்ளார். அவர் இந்த விஷயத்தில் அறிவியலின் அடிப்படையில் ஆய்வறிக்கை எழுதியதாகக் காட்டிக் கொள்ளவில்லை. "தூங்காவனம்" என்ற தலைப்பே அதை தெளிவாக்குகிறது. ஆனால் கற்பனாவாதம் சமூக முன்னேற்றத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. செயின்ட் சைமன், ஃபோரியர் மற்றும் ராபர்ட் ஓவன் மற்றும் அவர்களது கோட்பாடுகள் இல்லாமல் விஞ்ஞான மார்க்சிய சோசலிசம் இருந்திருக்காது. எல். ராம் சரண் தாஸின் கற்பனாவாதமும் அதே இடத்தைப் பிடித்துள்ளது. எங்கள் தொழிலாளர்கள் தங்கள் இயக்கத்தின் தத்துவத்தை நெறிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, இயக்கத்தின் அறிவியல் கண்ணோட்டத்தை உருவாக்கினால், இந்த புத்தகம் அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்நூல் கருத்துமுதல்வாதத்துடன் வெளிபட்டுள்ளது. இந்த வெளிப்பாடு செப்பமற்றதாக இருக்கிறது என்பதை காண்கிறேன். அவர் கற்பனாவாதக் கண்ணோட்டத்தில் அணுகும்போது தற்போதைய சமூகத்தின் கருத்துக்கள் அவரை எந்த வகையிலும் பாதிக்கவில்லை:

"தேவைப்பட்டவர்களுக்கு ஈகைகள் செய்தல்."

எதிர்கால சமுதாயத்தில், அதாவது, நாம் உருவாக்க விரும்பும் கம்யூனிச சமுதாயத்தில், நாம் தொண்டு நிறுவனங்களை நிறுவப் போவதில்லை, வறியவரும்  ஏழைகளும் இருக்கக்கூடாது, பிச்சை எடுப்பதும் தேவையில்லை தானம் வழங்குவதும் தேவையில்லை. இந்த முரண்பாடு நூலில் இருந்தபோதிலும், பிரச்சினை அழகியலோடு கையாளப்பட்டுள்ளது.

அவர் விவாதிக்கும் பொதுவான அம்சங்கள் விஞ்ஞான சோசலிசத்தைப் போலவே உள்ளது. ஆனால் எதிர்க்க வேண்டிய - முரண்பட வேண்டிய - இன்னும் துல்லியமாகச் சொன்னால் திருத்த வேண்டிய அம்சங்கள் உள்ளன. உதாரணமாக, சரணம் 427 இன் கீழ் உள்ள ஓர் அடிக்குறிப்பில், அரசு ஊழியர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு தினமும் நான்கு மணிநேரம் பண்ணைகளில் அல்லது தொழிற்சாலைகளில் வேலை செய்ய வேண்டும் என்று எழுதுகிறார். ஆனால் இது மீண்டும் கற்பனாவாதமானதும் நடைமுறைப்படுத்த முடியாததுமாகும். அரசு ஊழியர்களுக்கு மிக அதிக ஊதியம் வழங்கப்படுகிற தற்போதைய அமைப்பின் விளைவால் உண்டாகும் காழ்ப்பே இந்த வாதமாகும். உண்மையில், போல்ஷ்விக்குகள் உடலுழைப்பைப் போலவே மூளை உழைப்பையும், உற்பத்திக்கான உழைப்பு என அங்கீகரிக்க வேண்டியிருந்தது. எதிர்கால சமத்துவ சமுதாயத்தில் பல்வேறு உற்பத்தி உறவுகள் சீர்செய்யப்படும்போது, உற்பத்தியில் ஈடுபடுவோரும் விநியோகிப்பவரும் சமமாக கருதப்படுவார்கள். ஒரு மாலுமி தனது கப்பலை நிறுத்திவிட்டு நாளுக்கு ஒரு முறை தரையிறங்கி வந்து தனது வாழ்வாதாரத்திற்காக நான்கு மணி நேர உடல் உழைப்பை மேற்கொள்வார், அல்லது ஒரு விஞ்ஞானி தனது ஆய்வகத்தை விட்டு வெளியேறி தனது சோதனையை நிறுத்திவிட்டு வந்து  முறை செய்வார் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் இருவரும் மிகவும் ஆக்கப்பூர்வமான வேலை செய்து வருகின்றனர். சோசலிச சமூகத்தில் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், மூளை உழைப்பாளர்கள் இனி உடலுழைப்புத் தொழிலாளர்களை விட உயர்ந்தவர்களாகக் கருதப்பட மாட்டார்கள்.

கட்டாயக் கல்வி பற்றிய எல். ராம் சரண் தாஸின் யோசனை உண்மையில் கருத்தில் கொள்ளத்தக்கது, மேலும் சோசலிச அரசாங்கம் ரஷ்யாவிலும் ஓரளவு அதே போக்கைக் கடைப்பிடித்துள்ளது.

குற்றம் பற்றிய அவரது விவாதம் உண்மையில் மிகவும் மேம்பட்ட சிந்தனைத் தளமாகும். குற்றம் என்பது மிகத் தீவிரமான சமூகப் பிரச்சனையாகும், இதற்கு மிகவும் இலாவகமான சிகிச்சை தேவைப்படுகிறது. அவர் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை சிறைக்குள் அடைபட்டு கடந்துள்ளார். அவருக்கு நடைமுறை அனுபவம் உள்ளது. அவர் சாதாரண சிறைத்தண்டனைகள், குறைந்த உழைப்பு, நடுத்தர உழைப்பு மற்றும் கடின உழைப்பு போன்றவற்றைப் பயன்படுத்தும் ஓரிடம் அது. மற்ற எல்லா சோசலிஸ்டுகளைப் போலவே, பழிவாங்கும் அடிப்படையில் தண்டனை விதிப்பதற்குப் பதிலாக, அவர்களை சீர் செய்யும் அடிப்படையில் தண்டனைகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைக்கிறார். தண்டிப்பது மட்டுல்ல, திருத்துவதே நீதி நிர்வாகத்தின் வழிகாட்டும் கொள்கையாக இருக்க வேண்டும். சிறைச்சாலைகள் சீர்திருத்தப் பள்ளிகளாக இருக்க வேண்டும், பாழும் நரகங்களாக இருக்கக்கூடாது. இது தொடர்பாக வாசகர்கள் ரஷ்ய சிறைச்சாலைகளின் அமைப்பைப் படிக்க வேண்டும்.

போராளிகளை பற்றி பேசும் போது அவர் யுத்தத்தை பற்றியும் விவாதிக்கிறார். என் கருத்துப்படி,  யுத்தம் என்பது  கலைக்களஞ்சியத்தில் ஒரு சில பக்கங்களை மட்டுமே கொண்டிருக்கும் தலைப்பாகவும், யுத்த தளவாடங்கள் அருங்காட்சியகங்களின் காட்சிப்பொருளாகவும் மாற்றப்பட்டிருக்கும். ஏனெனில் சோசலிச சமூகத்தில் யுத்தத்தை ஏற்படுத்தும் முரண்பாடுகள் இருக்காது.

அதிகபட்சமாக, சோசலிச கட்டுமான இடைநிலைக் காலத்தில் வேண்டுமானால் இராணுவ அமைப்புகள்  ஒரு தேவையாக இருக்கலாம் என்று நாம் கூறலாம். இன்றைய ரஷ்யாவின் உதாரணத்தை எடுத்துக் கொண்டால் எளிதில் அதை புரிந்து கொள்ளலாம். அங்கு தற்போது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் உள்ளது. அவர்கள் ஒரு சோசலிச சமுதாயத்தை நிறுவ விரும்புகிறார்கள். இதற்கிடையில் அவர்கள் முதலாளித்துவ சமூகத்திற்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்ள ஒரு இராணுவத்தை பராமரிக்க வேண்டும். ஆனால் யுத்தத்தின் நோக்கங்கள் வேறுவிதமாக இருக்கும். ஏகாதிபத்திய அமைப்புகள் நம் கனவுலகமான சோசலிச மக்களை போர்களை நடத்த தூண்டாது. இனி போரால் கிடைக்கும் புதையல்கள் இல்லை.  புரட்சிகரப் படைகள் மற்ற நாடுகளுக்கு அணிவகுத்துச் செல்வது மக்களை ஆள்வதற்கோ அல்லது கொள்ளையடிப்பதற்கோ அல்ல, மாறாக ஒட்டுண்ணி ஆட்சியாளர்களை அவர்களின் சிம்மாசனத்தில் இருந்து கீழே இறக்கி, அவர்களின் இரத்தம் உறிஞ்சும் சுரண்டலை நிறுத்தவும், இதனால் உழைக்கும் மக்களை விடுவிக்கவுமே ஆகும். காட்டுமிராண்டித் தனமான தேசிய அல்லது இன வெறுப்பிலிருந்து அது இருக்காது.

உலக-கூட்டமைப்பு என்பது சுதந்திரமாகச் சிந்திக்கும் அனைத்து மக்களிடமும் பிரபலமான ஒன்றாகும். நூலாசிரியர் இந்த விஷயத்தை நன்றாக விரிவுபடுத்தியுள்ளதோடு லீக் ஆஃப் நேஷன்ஸ் பற்றிய அவரது விமர்சனம் அழகாக இருக்கிறது.

சரணம் 571 (572) இன் கீழுள்ள ஓர்  அடிக்குறிப்பில், நூலாசிரியர் சுருக்கமாக, முறைகள் பற்றிய பிரச்சினையைத் தொடுகிறார். அவர் கூறுகிறார்: "அத்தகைய ராஜ்ஜியத்தை வன்முறைப் புரட்சிகளால் உருவாக்க முடியாது. அது சமூகத்தின் மீது வெளியில் இருந்து வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட முடியாது. அது உள்ளிருந்து வளர வேண்டும். . .  பரிணாம வளர்ச்சியின் படிப்படியான செயல்முறையால், மக்களுக்கு மேற்குறிப்பிட்ட வரிகளின் அடிப்படையில் போதிப்பதன் மூலம் அதைக் கொண்டு வர முடியும்", இத்தியாதி. இந்த அறிக்கையில் எந்த உள்முரண்பாடும் இல்லை. இது மிகவும் சரியானது, ஆனால் முழுமையாக விளக்கப்படாதது சில தவறான புரிதலை அல்லது இன்னும் மோசமாக, குழப்பத்தை உருவாக்கும். வன்முறை வழிபாட்டின் பயனற்ற தன்மையை எல்.ராம் சரண் தாஸ் உணர்ந்துவிட்டார் என்று அர்த்தமா? அவர் அகிம்சையின் மரபுவழி விசுவாசியாகிவிட்டாரா? இல்லை, அதன் அர்த்தம் அப்படி இல்லை.

மேற்கோள் காட்டப்பட்டக் கூற்று என்ன என்பதை விளக்குகிறேன். சோசலிச சமுதாயத்தை வன்முறை வழிகளில் கொண்டு வர முடியாது, மாறாக அது உள்ளிருந்து வளரவும் உருவாகவும் வேண்டும் என்பது புரட்சியாளர்களுக்கு நன்கு தெரியும். கல்வியை மட்டுமே ஆயுதம் என்றும் நூலாசிரியர் கூறுகிறார். ஆனால், இங்குள்ள தற்போதைய அரசாங்கமோ ஏனைய அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்களுமோ அத்தகையதொரு முயற்சிகளுக்கு நிச்சயம் உதவப் போவது கிடையாது. மாறாக, இரக்கமின்றி அதன் மீது அடக்குமுறையையே செலுத்தும் என்பதை எளிதில் நாம் உணர முடியும். பிறகெப்படி அவனது 'கல்வி வளர்ச்சி' சாத்தியமாகும்? புரட்சியாளர்களாகிய நாம் இன்று ரஷ்யாவைப் போல், அதிகாரத்தை நம் கைக்கொள்ளவும், வெகுஜனக் கல்விக்கு தன் அனைத்து வளங்களையும் பயன்படுத்தக்கூடிய ஒரு புரட்சிகர அரசாங்கத்தை ஒழுங்கமைக்கவும் பாடுபடுகிறோம். அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, ஆக்கபூர்வமான பணிகளுக்கு அமைதியான முறைகள் பயன்படுத்தப்படும், தடைகள் அதிரடியாக நசுக்கப்படும். நூலாசிரியரும் இந்த அர்த்தத்தில்தான் முன்வைக்கிறார் என்றால், நாங்கள் ஒத்த கருத்திலேயே இருக்கிறோம். அவரும் இதைத்தான் சொல்கிறார் என நான் உறுதியாக நம்புகிறேன்.

புத்தகத்தைப் பற்றி மிக விரிவாக விவாதித்தேன். நான் அதை விமர்சித்தேன்தான். ஆனால், நான் அதில் எந்த மாற்றத்தையும் கோரப் போவதில்லை, ஏனெனில் அது அதன் வரலாற்று மதிப்பைப் பெற்றுள்ளது. இவை 1914-15ம் ஆண்டுகால புரட்சியாளர்களின் கருத்துக்கள்.

இந்த புத்தகத்தை குறிப்பாக இளைஞர்களுக்கு நான் பரிந்துரைக்கிறேன், ஆனால் ஒரு கவனமான எச்சரிக்கையுடன். தயவு செய்து அதனை கண்மூடித்தனமாக பின்பற்றவோ, அதில் எழுதப்பட்டிருப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவோ வேண்டாம். அதைப் படிக்கவும், விமர்சிக்கவும், அதைப் பற்றி சிந்திக்கவும், அதன் உதவியுடன் உங்கள் சொந்த யோசனைகளை உருவாக்க முயற்சிக்கவும்.

பகத்சிங் 2

அடிக்குறிப்புகள்:

1. ஷிவ் வர்மாவின் மேற்கோள்: "1915 ஆம் ஆண்டு முதல் லாகூர் சதி வழக்கில் லாலா ராம் சரண் தாஸ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். மெட்ராஸ் பிரசிடென்சியின் சேலம் மத்திய சிறையில் இருந்தபோது, அவர் தி ட்ரீம்லேண்ட் என்ற தலைப்பில் ஒரு கவிதை புத்தகத்தை எழுதினார். 1920களின் நடுப்பகுதியில் விடுதலையான பிறகு அவர் பகத்சிங் மற்றும் சுக்தேவ் ஆகியோரைத் தொடர்பு கொண்டு இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு கட்சி (HSRA)யில் தீவிரமாக செயல்பட்டார். இரண்டாவது லாகூர் சதி வழக்குத் தொடர்பாக அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த முறை அவர் அரசின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டார். விரைவில் அவர் தவறை உணர்ந்து தனது அறிக்கையை திரும்பப் பெற்றார். அவர் பொய்ச் சாட்சியம் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது, பின்னர் மேல்முறையீட்டில் ஆறு மாதங்களாக குறைக்கப்பட்டது.

"இந்தத் தண்டனையின் போதுதான் அவர் தனது கையெழுத்துப் பிரதியை பகத்சிங்கிற்கு அறிமுகவுரைக்காகக் கொடுத்தார். இந்தக் கட்டுரையில் பகத்சிங், ராம் சரண் தாஸ் பணியின் பின்னணியைப் பாராட்டி, புரட்சி குறித்த அவரது கற்பனாவாத அணுகுமுறையை விமர்சித்தார். அது கடவுள், மதம், வன்முறை, அகிம்சை, ஆன்மீகம், இலக்கியம், கவிதை போன்ற விசயங்களில் அவரது நூலில் வெளிப்பட்டது".

2. இக்கட்டுரை எழுதப்பட்ட ஆண்டு பற்றிய தகவல் கிடைக்கவில்லை. 1929-1930 ம் ஆண்டுகளில் எழுதப்பட்டிருக்கலாம் (ப-ர்).

=====================================================================================================

5

இளம் அரசியல் போராளிகளுக்கு1

அன்பார்ந்த தோழர்களே!

நமது இயக்கம் ஒரு மிக முக்கியமான கட்டத்தில் பயணித்து கொண்டிருக்கிறது. ஓராண்டு காலமாக நடந்து வந்த தீவிரமான போராட்டங்களுக்கு பிறகு காலனியாட்சியின் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்தான சில விசயங்களுக்கு வட்ட மேசை மாநாட்டில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது; இப்போதைய சூழ்நிலைக்கு இதுவே திருப்திகரமான சீர்த்திருத்தம் என்பது போல ஏற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிடுமாறு ஆங்கிலேயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்...2. இதை காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ஏற்பதும், எதிர்ப்பதும் நமக்கு முக்கியமல்ல. எப்படியும், தற்போது நடக்கும் போராட்டத்தின் முடிவில் ஒரு உடன்பாடு எட்டப்படும். அதுவும்கூட, இன்றோ நாளையோ நடைமுறைக்கு வரும். நாம் பொதுவாக நினைப்பது போல சமரசம் செய்து கொள்வதென்பது இழிவானதல்ல, அவமானகரமானதுமல்ல. அரசியல் உத்தி என்ற அடிப்படையில் பார்க்கும் போது, தவிர்க்க முடியாத தந்திரமாக விளங்குகிறது. மக்களை ஒடுக்கும் அரசுகளுக்கு எதிராக கிளர்ந்தெழும் எந்தவொரு நாடும் துவக்கத்தில் தோல்வியைச் சந்திக்க நேரிடுவதும், விடுதலைப் போராட்டத்தின் மத்திம கட்டத்தில் தங்களுக்குச் சாதகமான சீர்திருத்தங்களை சமரசத்தின் மூலமாக வென்றெடுக்க முடிவதையும் பார்க்க முடிகிறது. எப்போது தனக்கான சக்திகள், சாதனங்கள் முழுவதையும் தன்பக்கமாக திரட்ட முடிகிறதோ - போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் - அப்போது மட்டுமே தம்மை ஒடுக்கும் அரசுகளுக்கு எதிராக மரண அடியை கொடுக்க முடிகிறது. தன் பக்கமாக திரட்டிய பிறகும்கூட போராட்டம் தோல்வியடையக்கூடும் என்பதால் சிலவகையான சமரசங்கள் தவிர்க்க முடியாததாகிறது. சமரசங்கள் ஏன் தவிர்க்க முடியாது என்பதை துல்லியமாக ரஷ்ய வரலாற்றைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் விளக்கலாம்.

1905ல், ரஷ்யாவில் புரட்சி வெடித்தது. எல்லா தலைவர்களுமே புரட்சி வெற்றிபெறும் என்றே நம்பினார்கள். வெளிநாடுகளில் இருந்து இயங்கி வந்த லெனினும் நாடு திரும்பினார். அவர் புரட்சிப் போராட்டத்தை தலைமையேற்று நடத்தினார். 12க்கும் மேற்பட்ட நிலப்பிரப்புக்களை கொன்றுவிட்டோம், அவர்களுக்குச் சொந்தமான 20 அரண்மனைகளை தீக்கிரையாக்கினோம் என்று மக்கள் லெனினிடம் வந்துக் கூறினார்கள். 

12 அல்ல, இதே போல நூறு மடங்கிலான நிலப்பிரபுக்களை கொல்லுங்கள்; அவர்களுக்குச் சொந்தமான அரண்மனைகள் எவ்வளவு இருக்கிறதே அவ்வளவையும் தீக்கிரையாக்குங்கள் என்று அவர்களுக்கு பதிலளித்தார். ஒருவேளை புரட்சியே தோல்வியடைந்தாலும், இவை நிச்சயமாக முக்கியப் பங்காற்றும் என்பதே அவரின் கணிப்பாக இருந்தது. டூமா அறிமுகப்படுத்தப்பட்டது. டூமாவில் பங்கேற்க வேண்டும் என்ற கருத்தை லெனின் முன்வைத்து போராடினார். 1907ல் இதுதான் நடந்தது. டூமா அறிமுகப்படுத்தப்பட்ட முதலாமாண்டில் (1906), அதாவது அதிக அதிகாரம் நிலவிய போது, அவர் டூமாவில் பங்கேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார், எனினும், அடுத்தாண்டே டூமாவின் அதிகாரம் குறுக்கப்பட்ட போது அதில் பங்கேற்க வேண்டுமெனக் கோரி போராடினார். நிலைமைகள் மாறியதே இதற்கு காரணம். பிற்போக்கு சக்திகளின் அதிகாரம் மேலோங்கியபோது, சோசலிசக் கருத்தியலை பிரச்சாரம் செய்வதற்கான மேடையாக டூமாவை பயன்படுத்த வேண்டுமெனக் கூறினார்.

1917 புரட்சிக்குப் பிறகு, மறுபடியும் இதேதான் நடந்தது. பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் உடன்படிக்கை போல்ஷ்விக்குகள் மீது திணிக்கப்பட்ட போது,லெனினைத் தவிர எல்லோருமே எதிர்த்தார்கள். அப்போது லெனின் சொன்னார்: "போர் நிறுத்தம்". "சமாதானம், எத்தனை முறை யோசித்தாலும் சமாதானமே தேவை": என்ன விலை கொடுத்தாகினும் - ஜெர்மானிய யுத்த பிரபுக்கள் ரஷ்யப் நிலப்பரப்பிலிருந்து ஏராளமான பிராந்தியங்களை ஈடாக கேட்டாலும் நமக்கு சமாதானமே தேவை" என்று முழங்கினார். இந்த ஒப்பந்தத்தை ஏற்பதற்காக போல்ஷ்விக் கட்சியை எதிர்க்கும் சிலர் லெனின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர், ஜெர்மனியின் கடுந்தாக்குதலை எதிர்கொள்ளும் திறன் போல்ஷ்விக்குகளுக்கு இல்லை என்றும், போல்ஷ்விக் அரசாங்கம் முற்றிலுமாக அழித்தொழிக்கப்படுவதை தவிர்ப்பதற்காகவே இந்த ஒப்பந்தத்தை நாங்கள் ஏற்கிறோம் என்பதை லெனின் வெளிப்படையாக அறிவித்தார்.

இப்போது மட்டுமல்ல, நமது போராட்டத்தின் அடுத்தடுத்த வளர்ச்சிக் கட்டத்திலும்கூட சமரசம் என்ற அதிமுக்கியமான ஆயுதத்தை நாம் லாவகமாகப் பயன்படுத்தியாக வேண்டும் என்பதையே நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆனால், எந்தவொரு நிலைமைகளிலும் முன்னுக்குபின் முரணின்றி, நமது கொள்கைக் கோட்பாடுகளுக்கு முன்னுரிமைக் கொடுப்பது அவசியமாகிறது. நமது போராட்டத்தின் மூலமாக நாம் எதைச் சாதிக்க முயலுகிறோம் என்பதிலும், நமது இலக்கு என்னவென்பதிலும், எப்போதும் நாம் மிகத் தெளிவான புரிதலோடு இருப்பது அவசியமாகிறது. இதுவே நமது போராட்டத்தில் ஏற்படும் வெற்றித் தோல்விகளைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கு பெரிதும் உதவும். அதன் மூலம், அடுத்தடுத்த செயல்திட்டங்களையும் நம்மால் எளிதாக வடிவமைக்க முடியும். திலகரின் கொள்கைக் கோட்பாடுகளை ஒருபுறம் வைத்துவிட்டு, அவரின் செயல்தந்திரங்களை ஆராய்ந்து பார்த்தோமானால் அது ஆகச் சிறந்த ஒன்றாக இருப்பதை நம்மால் காண முடியும். உனது எதிரியிடமிருந்து 16 பைசாவைப் பெற வேண்டுமெனப் போராடுகிற போது உனக்கு ஓரு பைசா மட்டுமே கிடைக்கும். அதைப் பெற்றுக் கொள்; மற்றதையும் வென்றெடுப்பதற்கு தொடர்ந்து போராடு என்பதே அவரின் உத்தியாக இருக்கும். இதற்கு மாறாக, மிதவாத தேசியவாதிகளைப் பொறுத்தமட்டில், ஒரு பைசாவிற்கு குறிவைத்து அதையும் பெற முடியாமல் பரிதவிப்பதே அவர்களின் கொள்கையாக இருக்கிறது. தலைகீழ் மாற்றம் வேண்டும் என்பதற்காகவே நாம் போராடுகிறோம் என்பதை புரட்சியாளர்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த அதிகாரமும் நமது கைகளுக்கு வர வேண்டும். வழக்கமாக, பிற்போக்கு சத்திகள், சமரசத்திற்கு பிறகு புரட்சிகர சக்திகளை கூறுபோடுவதற்கான-துண்டாடுவதற்கான வேலையைத் துவங்குவார்கள் என்பதே சமரசம் பற்றிய பேச்சு எழுப்பப்படும் போதெல்லாம் கூடவே அச்ச உணர்வும் மேலெழும்புகிறது. இருந்தபோதிலும், விவேகமான, துணிச்சலான தலைமை இருக்கும் போது, இதுபோன்ற புதைச் சேற்றுக்குள் இயக்கம் விழுந்துவிடாமல் பாதுகாக்கப்படும்.  இதுபோன்ற, முக்கியமான தருணங்களில், நம் முன்னுள்ள அசல் பிரச்சனை, அதாவது நமது இறுதி இலக்கு என்னவென்பதில் எவ்வித குழப்பமும் தோன்றாத அளவிற்கு நாம் அதீத எச்சரிக்கையுடன் அணுகுவது அவசியமாகிறது. இங்கிலாந்தின் தொழிற்சங்கத் தலைவர்கள் தங்களது இலட்சியத்திற்காக போராடாமல் துரோமிழைத்து, நயவஞ்சகமான ஏகாதிபத்தியவாதிகளாக மாறி நிற்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, நாசூக்கான, 

நயவஞ்சகமான முறையில் ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யும் தொழிற்சங்கத் தலைவர்களைவிட, அதிதீவிரமான எதிர்ப்புரட்சிகர சக்திகள் மேலானவர்களாகத் தெரிகிறார்கள். செயல்தந்திரம், போர்த்தந்திரம் குறித்து ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டுமெனில், லெனினின் வாழ்வையும், பணியையும், கற்பது அவசியமாகிறது. சமரசம் பற்றிய பிரச்சனை குறித்து லெனினின் திட்டவட்டமான பார்வையை அறிந்து கொள்ள அவர் எழுதிய "இடது-சாரி" கம்யூனிசம் என்ற நூலை பயில வேண்டும். நான் மேற்சொன்னது போல, தற்போதைய போராட்டம், ஏதேனும் ஒரு சமரசத்திலோ அல்லது அப்பட்டமான தோல்வியிலோ சென்று முடியவிருக்கிறது.

இன்றையக் கட்டத்தில், போராட்டக் களத்திற்கு உண்மையான புரட்சிகர சக்திகள் அணிதிரட்டப்படவில்லை என்பதை அடிப்படையாகக் கொண்டே நான் இவ்வாறு கூறுகிறேன். மாறாக, தற்போதைய போராட்டம் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த வணிகர்கள் மட்டுமல்லாது இன்னும் சில முதலாளி வர்க்கங்களைச் சார்ந்தே முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வர்க்கங்களுமே, அதிலும் குறிப்பாக, முதலாளி வர்க்கத்தினர் எப்போதுமே எந்தவொரு போராட்டத்திலும் தங்களது உடைமைகளை அல்லது சொத்துக்களை இழப்பதற்கு துணிய மாட்டார்கள்.  உண்மையான புரட்சிகரப் படை என்பது கிராமங்களிலும், தொழிற்சாலைகளிலும் காணப்படும் விவசாயக் கூலிகள் மத்தியிலும், தொழிலாளர்கள் மத்தியிலுமே தோன்ற முடியும். நமது பூர்ஷ்வா வர்க்கத்து தலைவர்கள் ஒரு போதும் இவர்களை அணிதிரட்டுவதற்கு துணியமாட்டார்கள், அவர்களால் அணிதிரட்டவும் முடியாது.  ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் சிங்கத்தை ஒரு முறை தட்டியெழுப்பிவிட்டால் போதும், நமது பூர்ஷ்வா வர்க்கத்து தலைவர்களின் இலக்குகள் வென்றெடுக்கப்பட்டப் பிறகும்கூட அவர்களே நினைத்தாலும், பின்னுக்கு இழுக்க முடியாது. 1920ல், முதன்முதலாக அகமதாபாத் ஆலைத் தொழிலாளர்களின் போராட்டத்தில் பங்கேற்ற பிறகு மகாத்மா காந்தி இவ்வாறு அறிவித்தார்: "நாம் ஒருபோதும் ஆலைப் பாட்டாளிகளின் விசயத்தில் மூக்கை நுழைக்கக்கூடாது. அவர்களை அரசியல் நோக்கங்களுக்கு அணிதிரட்டுவது என்பது ஆபத்தான (விபரீதமான) ஒன்றாகும்" என்று மே, 1921ல் வெளிவந்த டைம்ஸ் பத்திரிக்கையில் எழுதியிருந்தார். அப்போதிருந்து, அவர்கள் ஆலைப் பாட்டாளி வர்க்கத்திடம் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்வதற்கு துணியவில்லை. இதன் பிறகு, அவர்கள் கவனம் மற்றொரு புரட்சிகர சக்தியான விவசாயக் கூலிகள் பக்கம் திரும்பியது. காலனியாதிக்கத்திற்கு எதிராக மட்டுமல்லாது நிலப்பிரபுக்களின் நுகத்தடியிலிருந்தும் விடுதலை பெறுவதற்காக கூலி விவசாயிகள் வர்க்கம் பிரம்மாண்டமாக அணிசேர்வதைக் கண்ட பூர்ஷ்வா வர்க்கத்து தலைவர்கள் எவ்வாறு அஞ்சி நடுங்கினர் என்பதை 1922ல் அவர்கள் வெளியிட்ட பர்தோலி தீர்மானம் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

இங்குதான், நமது நாட்டின் தலைவர்கள் விவசாயிகளுக்காக நிற்பதைவிட, ஆங்கிலேயர்களிடம் அடிபணிவதே மேல் என்ற முடிவிற்கு வெளிப்படையாக வந்து நின்றனர். பண்டிதர் ஜவஹர்லால் நேரு நீங்கலாக, கூலி விவசாயிகளையோ அல்லது தொழிலாளர்களையோ அணிதிரட்டுவதற்கு முயன்ற எவரேனும் ஒருவரை உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா? நிச்சயமாக உங்களால் காட்ட முடியாது, ஏனெனில், அவர்கள் ஒருபோதும் அத்தகையதொரு ஆபத்தான வேலையில் இறங்கமாட்டார்கள். அவர்கள் ஒருநாளும் தலைகீழ் மாற்றத்திற்கான புரட்சிக்காக போராடவில்லை என்பதை இதை வைத்துத்தான் நான் கூறுகிறேன். பொருளாதார ரீதியில், நிர்வாக ரீதியில் அழுத்தங்கள் கொடுப்பதன் மூலமாக இந்திய முதலாளி வர்க்கத்திற்கு வேண்டிய சில சலுகைகளையும், கூடுதலான சில சீர்த்திருத்தங்களையும் பெற்றுவிட முடியும் என்று மட்டுமே அவர்கள் நம்பினார்கள். இதனால்தான், இந்தப் போராட்டம் சில வகையான சீர்த்திருத்தங்களை வென்ற பிறகோ அல்லது அதை பெறாமலோக்கூட நிச்சயம் மடிந்தே தீரும் என்று நான் கூறுகிறேன். நேர்மையாக, உளப்பூர்வமாக "புரட்சி நீடூழி வாழ்க" என்று முழங்கும் இளம் போராளிகள் அமைப்புறுதியோடு முழுமையாக அணிதிரளவில்லை என்பது மட்டுமல்லாது, தாங்களே விடுதலைப் போராட்டத்தை ஏந்திச் செல்லுமளவிற்கான வலிமையையும் பெறவில்லை. சொல்லப்போனால், நமது நாட்டின் பெருந்தலைவர்கள்கூட, (இதில் பண்டிதர் மோதிலால் நேருவை விட்டுவிடலாம்) தங்களது தலையில் எந்த பொறுப்பையும் ஏந்திக் கொள்ளத் துணியவில்லை, இதன் காரணமாக, இப்போது மட்டுமல்லாது, எப்போதுமே காந்தியின் முடிவிற்கு நிபந்தனையின்றி அடிபணிகிறார்கள். எவ்வளவுதான் அவருடன் முரண்பட்டாலும், ஒருபோதும் அவரை கறாராக எதிர்த்து நின்றதில்லை என்பதால் எல்லாத் தீர்மானங்களையும் காந்தியே எடுக்கும் நிலை ஏற்படுகிறது.

இப்படிப்பட்டதொரு சூழ்நிலையில், இனி வருங்காலங்களில் மிகக் கடினமான சவால்களை நாம் எதிர்கொள்ளவிருக்கிறோம் என்பதால் புரட்சிக்காக தங்கள் வாழ்வை உண்மையாக அர்ப்பணித்துள்ள இளம் போராளிகளே, மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதை மட்டும் கூறிக்கொள்கிறேன். எதிர் வருகின்ற கடினமான காலங்களால் குழம்பி போவதற்கும் அல்லது நம்பிக்கையிழந்து போவதற்கும்கூட வாய்ப்புள்ளது என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காந்தி மகான் முன்னெடுத்த இரண்டு போராட்டங்களில் கிடைத்த அனுபவங்களை சீர்த்தூக்கிப் பார்த்த பிறகு, நமது தற்போதைய நிலையென்ன என்பது பற்றியும், எதிர்வருகின்ற காலத்தில் நமது செயல்திட்டம் என்னவென்பது பற்றியும் நம்மால் இப்போது ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும்.

காலனியாட்சியில் இந்தியர்கள் பங்கேற்பது பற்றியும், அதிகாரப் பகிர்வு வேண்டுமெனக் கோரி கூக்குரல் எழுப்பத் துவங்கியதைத் தொடர்ந்து மின்டோ-மார்லி சீர்த்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது; வைசிராய் தலைமையில் அமைக்கப்படும் நிர்வாக/ஆட்சிக் குழுவில் இந்தியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் உரிமையை மட்டுமே இந்தச் சீர்த்திருத்தம் வழங்கியது. முதலாம் உலகப்போர் சமயத்தில், இந்தியர்களின் உதவி இன்றியமையாததாக இருந்தபோது, சுயராஜ்ஜியம் தொடர்பான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது; அதைத் தொடர்ந்து இப்போதுள்ள சீர்த்திருத்தம் கொண்டு வரப்பட்டது. மாகாண சட்டமன்றங்களுக்கு குறிப்பிட்ட சிலத் துறைகளில் மட்டும் சட்டமியற்றுவதற்கான வரையறுக்கப்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டது என்றாலும் அதுவும்கூட வைசிராயின் நன்மதிப்பை, தயவை பெறுகிறபோது மட்டுமே நடைமுறைக்கு வரும். இப்போது மூன்றாவது கட்டம்.

சீர்த்திருத்தங்கள் குறித்தான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது, உடன்பாடு ஏற்படுகிறபட்சத்தில் கூடிய விரைவில் அமலுக்கு வரும். இதை நமது இளம் அரசியல் போராளிகள் எப்படி மதிப்பிட வேண்டும்? இதுவே நம் முன் எழக்கூடிய கேள்வியாகும்; காங்கிரஸ் தலைவர்கள் எதை அடிப்படையாகக் கொண்டு எப்படி மதிப்பிடப் போகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், புரட்சியாளர்களாகிய நமக்கு, மதிப்பிடுவதற்கென பின்வரும் அளவுகோல்கள் உள்ளன:

1. எந்தளவிற்கு இந்தியர்களின் கைகளில் அதிகாரமும், பொறுப்பும் கைமாற்றித் தரப்படுகிறது.

2. என்ன வடிவிலான அரசு நிறுவனங்களை அறிமுகப்படுத்தப் போகிறார்கள், அதில் வெகுமக்கள் பங்கேற்பதற்கான உரிமை எந்தளவிற்கு இருக்கும்.

3. எதிர் வருங்காலத்தில் இந்த உரிமைகள் எவ்வாறு விரிவுபடுத்தப்படும், மக்கள் நலனை பாதுகாப்பதற்குரிய அம்சங்கள் என்னென்ன.

இவற்றை நன்றாகப் புரிந்துகொள்வதற்கு இன்னும் கொஞ்சம் விளக்க வேண்டியுள்ளது. இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு அரசு இயந்திரத்தை நிர்வகிக்கும் அதிகார வர்க்கத்தினரை கட்டுப்படுத்தும் உரிமை எந்தளவிற்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை வைத்து முதல் அம்சத்தை எளிதாக விளங்கிக் கொள்ளலாம். இப்போது வரையில், வைசிராயின் நிர்வாகக் குழு எந்தவகையிலும் சட்டமன்றங்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவையல்ல என்பது மட்டுமல்லாது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் கொண்டு வரப்படும் எந்தவொரு முயற்சிகளையும் முடக்குவதற்கான தடுப்பதிகாரம் (வீட்டோ அதிகாரம்) வைசிராயிடம் உள்ளது. (சீர்திருத்தம் பெற்ற சட்டசபையின் போலித்தனத்தைப் பங்கேற்று அம்பலப்படுத்துவதென காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவான சுயராஜ்ஜியக் கட்சியினர் முடிவெடுத்திருந்தனர்-மொ--ர்.) மத்திய சட்டசபையில் இந்தியப் பிரதிநிதிகளால் ஒவ்வொரு முறையும் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் எவ்வாறு துளிகூட வெட்கமே இல்லாமல் வைசிராயின் தடுப்பதிகாரத்தின் மூலம் குப்பையில் வீசப்பட்டது என்பதை சுயராஜ்ஜிய கட்சியினரின் சீரிய செயல்பாடுகளால் அம்பலப்படுத்தப்பட்டது. இதுபற்றி பரவலாக எல்லோரும் அறிந்திருப்பதால் மேற்கொண்டு விளக்க வேண்டியதில்லை.

முதலில் வைசிராயின் நிர்வாகக் குழு எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதை ஆராய வேண்டும்: மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறதா அல்லது இதற்கு முன்னர் செய்தது போல மேலிருந்து வைசிராயால் திணிக்கப்படுகிறதா என்பதை ஆராய வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சபைக்கு வைசிராயின் நிர்வாகக் குழு கட்டுப்பட்டதா அல்லது இதற்கு முன்பிருந்தது போல சட்டசபையின் அதிகாரங்களை துச்சமாக மதிக்கும் போக்கே தொடருமா என்பதையும் சேர்த்தே நாம் ஆராய வேண்டும்.

இரண்டாவது அளவுகோலைப் பொறுத்தமட்டில், எந்தளவிற்கு வாக்குரிமை விரிவுபடுத்தப்படுகிறது என்பதைக் கொண்டே தீர்மானிக்க முடியும். சொத்திருப்பவர்களே வாக்களிக்க முடியும் என்ற நிபந்தனையை ஒழித்துவிட்டு, அனைவருக்குமான வாக்குரிமையை அமல்படுத்த வேண்டும். குறிப்பிட்ட வயது (வயது வந்தவர்) பூர்த்தியடைந்த ஆண், பெண் இருவருக்குமே வாக்குரிமை வழங்கப்பட வேண்டும். அவ்வகையில், தற்போதுவரை, வாக்குரிமை எந்தளவிற்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்பதை நம்மால் அளந்தறிய முடியுமென நினைக்கிறேன்.

அரசாங்கத்தின் வடிவமோ ஈரவைகளை கொண்ட சட்டமன்றங்களாக இருக்கின்றன. மேலவை என்பது முடிந்தவரை முதலாளித்துவ மாயைகளை கட்டியமைக்கவோ அல்லது ஆசைக்காட்டி மோசம் செய்யும் அமைப்பாகவோதான் செயல்படுகிறது என்பது எனது கருத்து. என்னைப் பொறுத்தவரை, ஓரவை கொண்ட அரசாங்கமே சிறந்த ஆட்சி வடிவமாக இருக்க முடியும் என்பதால் நாம் அதை அமைப்பதற்காகவே போராட வேண்டும்.

மாகாண அளவில் தன்னாட்சி என்ற கோட்பாடு பற்றி இங்கு நான் பேசுவது சரியாக இருக்கும். எனக்குத் தெரிந்த வரை, ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவரல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட உறுப்பினர்கள் அடங்கிய சட்டமன்றத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைவிட வரம்பு கடந்த அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்கிறபோது ஒரு எதேச்சதிகாரியாகவே அவரால் செயல்பட முடியும் என்பதை உறுதியாகக் கூற முடியும். இப்படியிருக்கையில் மாகாண அளவில் "தன்னாட்சி" என்று சொல்லிக் கொள்வதற்கு பதிலாக "மாகாண அளவில் நடக்கும் காட்டாட்சி/கொடுங்கோலாட்சி" என்றுதான் நாம் அழைக்க வேண்டும். அரசு இயந்திரத்தை இப்படியெல்லாம் மாற்றுவதைக்கூட ஜனநாயகத்தை வளர்க்கிறோம் என்பது போல காட்டிக் கொள்கிறார்கள்.  

மூன்றாவது அளவுகோலைப் பொறுத்தமட்டில் விளக்க வேண்டியதே இல்லை. பிரிட்டீஷ் அரசின் கருவூலம் கரைந்து போகாத நிலை வரைக்கும், பத்தாண்டுகளுக்கு ஒருமுறையாவது அரசியலமைப்பு சீர்த்திருத்தங்கள் கட்டாயம் நிறைவேற்றப்படும் என்று இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்த மாண்டேகு அளித்த வாக்குறுதியை எப்படியாவது திரும்பப் பெற வேண்டுமென்கிற நோக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்நாட்டின் அரசியல்வாதிகள் முனைப்புக் காட்டி வருகின்றனர்.

இதிலிருந்தே எதிர் வருங்கலாத்தில் (மூன்றாவது அளவுகோல்-மொ--ர்.) அவர்கள் என்ன செய்யத் திட்டமிட்டுள்ளனர் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

நாம் இதுவரை என்ன சாதித்துள்ளோம் என்பதை கண்டு மகிழ்வதற்காக இவற்றையெல்லாம் நாம் அலசி ஆராயவில்லை மாறாக தற்போதுள்ள யதார்த்த நிலைமை என்னவென்பது  குறித்து ஒரு தெளிவான புரிதலுக்கு வருவதற்காகவே  நாம் ஆராய்கிறோம் என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.  இதன்மூலமே, நம்மால் மக்களை பயிற்றுவிக்க முடியும், அவர்களை போராட்டத்திற்கு தயார்ப்படுத்தவும் முடியும். நம்மைப் பொறுத்தவரை சமரசம் என்பது ஒருபோதும் சரணடைவதல்ல, அடிபணிவதுமல்ல; மாறாக, நம்மை பலப்படுத்திக் கொண்டு ஒரு படி முன்னேறுவதாகும்.

தற்போதைய நிலைமை என்னவென்பது குறித்து தெரிந்து கொண்டோம்; நமது எதிர்காலத் திட்டமென்ன, நமது திட்டத்தை செயல்படுத்துவதற்கு நாம் என்ன மாதிரியான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து சிந்திப்போம்.

நான் முன்பே கூறியது போல, எந்தவொரு புரட்சிகர கட்சிக்கும் தெளிவான, வரையறுக்கப்பட்ட கட்சித் திட்டம் இருக்க வேண்டியது மிக மிக அவசியமானதாகும். புரட்சி என்பது (கோஷம்/வார்த்தை அல்ல-மொ--ர்.) செயல் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பு முறையின் கீழ், முறைப்படுத்தப்பட்ட செயல்பாடுகளின் மூலமாக நாம் திட்டமிட்டப்படி மாற்றத்தை கொண்டு வருவதே புரட்சியாகும். மாறாக, புரட்சி என்பது திடிரென்று, தன்னியல்பாக எந்தவொரு அமைப்புவழியுமின்றி கிளர்ந்தெழுவதல்ல. மேலும், கட்சித் திட்டத்தை உருவாக்குவதற்கு கண்டிப்பாக நாம் பின்வருவனவற்றை படித்தறிய வேண்டும்:

1. இறுதி இலக்கு

2. தற்போதைய நிலைமையில் நாம் எங்கிருந்து துவங்க வேண்டும்

3. நமது இலக்கை அடைவதற்கு என்னென்ன மாதிரியான செயல்தந்திரங்கள், போர்த்தந்திரங்களை நாம் வகுக்க வேண்டும்.

மேற்சொன்ன மூன்றையும் பற்றி நமக்கு தெளிவான புரிதல் இல்லையென்றால், நிச்சயமாக நம்மால் கட்சித் திட்டம் குறித்து ஒரு முடிவுக்கே வர முடியாது.

தற்போதைய நிலைமை என்னவென்பது குறித்து நாம் ஓரளவிற்கு ஆராய்ந்துள்ளோம். இறுதி இலக்கு என்னவென்பது குறித்து நாம் கொஞ்சம் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. நமக்கு வேண்டியது சோசலிசப் புரட்சியே; இதை அடைவதற்கு முதற்படியாக நாம் அரசியல் புரட்சி செய்வது அவசியமாகிறது. அவ்வகையில், அரசியல் புரட்சி செய்வதே நமது இலக்கு. ஆங்கிலேயர்களிடமுள்ள அரசதிகாரத்தை இந்தியர்களின் கைக்கு மாற்றித் தருவது அரசியல் புரட்சி ஆகாது; மாறாக, நமது இறுதி இலக்கை அடைவதற்காக நம்முடன் அணிசேர்ந்து போராடும் இந்தியர்களின் கைகளுக்கு அதிகாரம் மாற்றப்படுவதே புரட்சியாகும்; இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமெனில், ஏகோபித்த மக்களின் பேராதரவின் மூலமாக அரசியல் அதிகாரம் புரட்சிகர கட்சிக்கு கிடைப்பதே அரசியல் புரட்சியாகும்.

அரசியல் புரட்சிக்குப் பிறகு, அதே புரட்சிகர அர்ப்பணிப்புடன் தொடர்ந்து சோசலிசக் கொள்கையின் அடிப்படையில் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் புதிதாக கட்டமைக்க வேண்டும். நீங்கள் காண விரும்பும் புரட்சி இதுவல்ல எனில், தயவு செய்து "புரட்சி நீடூழி வாழ்க" என்று முழங்குவதை நிறுத்திவிடுங்கள். உங்களுக்கு எப்படியோ தெரியவில்லை, எங்களுக்கு, புரட்சியென்பது மகத்தானது (புனிதமானது); ஒருபோதும் எங்களால் தான்தோன்றித்தனமாகவும், தவறான அர்த்தத்திலும் புரட்சி என்ற பதத்தை பயன்படுத்த முடியாது. எனினும், நீங்கள் தேச விடுதலைப் (முதலாளித்துவ-மொ--ர்) புரட்சியின் மூலம் உருவாக்கப்பட்ட அமெரிக்க ஐக்கிய குடியரசைப் போல இந்தியக் குடியரசை உருவாக்குவதே உங்களது புரட்சிப் போராட்டத்தின் இலக்கு என்று கூறுவீர்களானால், யாரை அடிப்படை சக்தியாகக் கொண்டு நீங்கள் கூறும் புரட்சியை முன்னெடுப்பீர்கள் என்பது குறித்து ஒரு தெளிவான பதிலை எனக்கு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். தேச விடுதலைப் புரட்சியோ அல்லது சோசலிசப் புரட்சியோ, எந்தப் புரட்சியை செய்ய வேண்டுமென்றாலும் அதற்கு புரட்சிகர சக்திகளான தொழிலாளர்களையும், விவசாயிகளையும் அடிப்படையாக சார்ந்து நிற்பது மட்டுமே ஒரே வழியாகும். புரட்சிகர சக்திகளை அணிதிரட்டுவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் முயல மாட்டார்கள். மேற்குறிப்பிட்ட போராட்டங்களில் என்ன நடந்ததென்பதை வைத்து இதை புரிந்து கொள்ள முடியும். புரட்சிகர சக்திகளின் துணையில்லாமல் சிறுதுரும்பைக்கூட அசைக்க முடியாதென்பது மற்ற எல்லோரையும் விட அவர்களுக்கு நன்கு தெரிந்த விசயமாகும். உண்மையில் தலைகீழ் மாற்றத்தை குறிக்கக்கூடிய முழக்கமான முழு சுதந்திரம் பெறுவதே இலக்கு என காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியிருந்தாலும், அவர்களது மெய்யான உள்நோக்கம் அதுவாக இருக்கவில்லை என்பதே நிதர்சனமானது. காங்கிரஸ் கட்சியிலிருந்த இளைஞரணியினர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே இதைச் செய்துள்ளார்கள்; இது மட்டுமல்லாது, பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் கீழ் தன்னாட்சி அந்தஸ்து (டோமினியன்) என்று அவர்கள் மனதார விரும்பியதை பெறுவதற்காகவே இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்; அதையும்கூட பேரம்பேசும் உத்தியாக மட்டுமே பயன்படுத்த விரும்பினர். கடைசியாக நடந்த மூன்று காங்கிரஸ் கட்சி மாநாடுகளில் அதாவது, மதராஸ், கல்கத்தா, லாகூர் ஆகிய இடங்களில் நடந்த மாநாடுகளில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்களை படித்துப் பார்த்தாலே இதை உங்களால் எளிதாக புரிந்துக் கொள்ள முடியும். 

12 மாதங்களுக்குள் டொமினியன் அந்தஸ்து வழங்கப்படவில்லையெனில் பூரண (முழு) சுதந்திரம் பெறுவதற்காக போராட வேண்டியிருக்கும் என்று கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இவர்கள் எதிர்பார்த்தது போன்றதொரு பரிசு கிடைத்துவிடும் என்று 1929, டிசம்பர், 31 அன்று நள்ளிரவு வரை பயபக்தியோடு காத்திருந்தார்கள். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியதால், "சொன்னதைச் செய்பவர்கள்" என்பதைக் காட்டுவதாக நினைத்து முழு சுதந்திரம் பெறுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினார்கள், இல்லையென்றால் நிறைவேற்றியிருப்பார்களா என்பதே அவர்களின் உண்மையான நோக்கத்தை எடுத்துக் காட்டுகிறது. இருந்த போதிலும், அதன் பிறகும்கூட, சமரசத்திற்கான கதவுகள் திறந்தே வைக்கப்பட்டுள்ளன என்ற உண்மையை காந்தி வெளிப்படையாக அறிவித்தார். இதுவே, அவர்களின் உண்மையான வேட்கையாகும். எப்படியும் தங்களது போராட்டம் அடுத்தக் கட்டத்திற்கு போவதற்கு முன்பாகவே சில சமரசங்களோடு முடிந்துவிடும் என்பதை அறிந்தே அவர்கள் போராட்டத்தை துவக்கினார்கள். இது போன்ற அர்ப்பணிப்பற்ற தன்மையையே நாம் எதிர்க்கிறோமே தவிர போராட்டத்தின் ஒரு கட்டத்தில் எட்டப்படும் உடன்பாடுகளை (சமரசத்தை) நாம் எதிர்க்கவில்லை. இது ஒருபுறமிருக்க, புரட்சி செய்வதற்காக நாம் யாரை சார்ந்து நிற்க வேண்டும் என்பது பற்றி ஆராய்ந்து வந்தோம்.  எனினும், இதில் நீங்கள் கூலி விவசாயிகள், தொழிலாளர்களின் நேரடியான பங்கேற்பையும், பங்களிப்பையும் பெறப்போவதாக சொல்வீர்கள் என்றால், வெறுமனே அடுக்குமொழி வசனங்களால் மட்டுமே அவர்களை ஒரு போதும் உங்கள் பக்கம் இழுக்க முடியாது என்பதை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் நேரடியாகவே உங்களைப் பார்த்துக் கேட்பார்கள்: அவர்களின் தியாகத்தின் பலனாக நடக்கும் புரட்சியின் மூலம் நீங்கள் எதை சாதிக்கப் போகிறீர்கள் என்று கேட்பார்கள்; இந்திய அரசாங்கத்தை ரீடிங் பிரபு ஆளுவதற்கும், சர் புருஷோதம்தாஸ் தாகூர்தாஸ் ஆளுவதற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்பார்கள்? இர்வின் பிரபுவிற்கு பதிலாக சர் தேஜ் பகதூர் சப்ரூ வந்தால் கூலி விவசாயிகளின் வாழ்வில் என்ன மாற்றம் நிகழும் என்று கேட்பார்கள்! நாட்டுப்பற்று உணர்வைக் கொண்டு மட்டும் அவர்களை அணிதிரட்ட முயல்வது பயனற்றது. உங்களது அரசியல் ஆதாயத்திற்காக அவர்களை ஏய்க்க முடியாது; புரட்சி என்பதே உங்களுக்கானதுதான், அதை உங்களால் மட்டுமே செய்ய முடியும் என்பதை புரிந்து கொள்ள வைக்க வேண்டும், அதற்காக நீங்கள் மனப்பூர்வமாக, உண்மையாக உழைக்க வேண்டும். ஏனெனில், இது பாட்டாளி வர்க்கத்தின் புரட்சி, பாட்டாளி வர்க்கத்திற்கானப் புரட்சி. 

உங்கள் புரட்சியின் இலக்கு என்னவென்பது குறித்து சந்தேகத்திற்கிடமின்றி ஒரு தெளிவானப் புரிதலுக்கு வந்த பிறகு, புரட்சியை செய்யக்கூடிய புரட்சிகர சக்திகளை அணிதிரட்டவதற்கு நீங்கள் போராடத் துவங்கலாம். இதில் நீங்கள் இரண்டு கட்டத்தை கடந்து செல்ல வேண்டியிருக்கும். முதலாவது புரட்சிக்கான தயாரிப்பு கட்டம்; இரண்டாவது புரட்சியை செயல்படுவதற்கான கட்டம்.

விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, உண்மையான புரட்சியாளர்கள் மத்தியில் சில அவநம்பிக்கையும், சலிப்பும் தென்படுவதை உங்களால் காண முடியும். ஆனால், இதற்காக நீங்கள் வருந்த வேண்டியதில்லை. உணர்ச்சிவசப் படுவதை ஒதுக்கித் தள்ள வேண்டும். உண்மைகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். புரட்சியென்பது மிகக் கடினமான பணி. தனியொரு மனிதன் நினைத்துவிட்டால் புரட்சியை செய்துவிட முடியாது. அதேபோல, குறித்த தேதியில் புரட்சியை நிகழ்த்தவும் முடியாது. குறிப்பான சமூக-பொருளாதார சூழ்நிலைகள் கனிந்து வரும்போது மட்டுமே புரட்சியை அரங்கேற்ற முடியும். இதுபோன்ற புரட்சிகர சூழல் கனிந்து வருகிற போது அதை செம்மையாக பயன்படுத்திக் கொள்வதே ஒழுங்கமைப்பட்ட கட்சியின் பணியாகும். இதோடு கூடவே, மக்களை புரட்சிக்காகத் தயார்ப்படுத்துவதும், புரட்சிக்கான சக்திகளை அமைப்பாக்குவதும் மிக மிகக் கடினமான பணியாகும். இதைச் சாதிக்க வேண்டுமெனில் புரட்சியாளர்கள் மாபெரும் தியாகங்களை செய்தாக வேண்டும். நீங்கள் தொழில் செய்பவர்களாக அல்லது லௌகீக (தனிப்பட்ட) வாழ்க்கை அல்லது குடும்ப வாழ்க்கையில் மூழ்கியிருப்பவர்களாக இருந்தீர்கள் என்றால் புரட்சிகரப் பணியிலிருந்து விலகியே இருங்கள் (நெருப்போடு விளையாடாதீர்கள்) என்பதைத் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன். ஒரு தலைவராக உங்களால் கட்சிக்கு எந்தப் பயனும் உண்டாகப் போவதில்லை. நமது கட்சியில் இதுபோல நிறையத் தலைவர்கள் ஏற்கனவே இருக்கிறார்கள்; மாலையில் கிடைக்கும் சிறிது ஓய்வு நேரங்களில் மேடையில் பேசுவதற்கு நேரம் ஒதுக்கும் தலைவர்களால் கட்சிக்கு எந்தப் பயனும் உண்டாகப் போவதில்லை. லெனினால் அடிக்கடி சுட்டிக்காட்டப்பட்ட வார்த்தையில் சொல்வதானால், "தொழில்முறைப் புரட்சியாளர்களே" நமக்குத் தேவை. புரட்சிக்காகவே தங்களது வாழ்வை அர்ப்பணித்த அல்லது புரட்சியே தங்களது வாழ்வும்-பணியுமாக கொண்ட முழுநேர ஊழியர்களே தொழில்முறைப் புரட்சியாளர்கள். எந்தளவிற்கு முழுநேரப் புரட்சியாளர்கள் கட்சியில் அதிகரிக்கிறார்களோ அந்த அளவிற்கு புரட்சி வெற்றிப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகரிக்கும்.

திட்டமிட்ட முறையில் முன்னேறுவதற்கு, நான் முன்பு சொன்னது போல கொள்கைக் கோட்பாடுகள் குறித்த தெளிவான புரிதல் மட்டுமல்லாது எந்தவொரு நிலைமைகள் குறித்தும் சரியாகப் புரிந்துகொண்டு, உடனடியாகத் தீர்வு காண்பதோடு, வழிநடத்தும் பலம் பொருந்திய முழுநேரப் புரட்சியாளர்களை அதிகமாகக் கொண்ட கட்சியாக இருப்பது அவசியமானதாகிறது. கட்சியில் கட்டுப்பாடும், ஒழுங்குமுறையும் கறாராக பின்பற்றப்பட வேண்டும். எல்லோரும் நினைப்பதுப் போல இரகசியக் கட்சியாகவே இருக்க வேண்டியதில்லை, இதற்கு மாறாகவும் செயல்பட வேண்டியுள்ளது. தானாக முன்வந்து சிறைக்கு செல்லும் வழக்கத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். ஏனெனில், இதன் காரணமாக பல ஊழியர்கள் இரகசியப் பணியை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எவ்வாறாயினும், இரகசியப் பணியிலும் இதே உற்சாகத்தையும், துடிப்பையும் வெளிப்படுத்த வேண்டும். தக்கத் தருணம் வரும்போது இந்த வகையான ஊழியர்கள் மத்தியிலிருந்துதான் திறமையான தலைவர்கள் தோன்றுவார்கள். 

(பிரதானமாக - மொ--ர்்) இளைஞர் அமைப்பு மூலமாகவே கட்சிக்கு வேண்டிய ஊழியர்களை பெற வேண்டும். அவ்வகையில், இளைஞர் அமைப்பே நமது திட்டத்தின் துவக்கப் புள்ளியாக இருக்கிறது. வாசகர் வட்டங்களுக்கு ஏற்பாடு செய்வது, வகுப்புகள் எடுப்பது, துண்டுப் பிரசுரங்கள், சிற்றேடுகள், நூல்கள், இதழ்கள் போன்றவற்றைத் தயாரித்து வெளியிடுவது போன்றவற்றை இளைஞர் கழகம் செய்ய வேண்டும். அரசியல் போராளிகளை வென்றெடுத்து பயிற்றுவிப்பதற்கு இதுவே ஆகச் சிறந்த வழிமுறையாக இருக்கிறது.

புரட்சிகர சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதில் பங்குவமடைந்த, தங்கள் வாழ்வைப் புரட்சிக்காக அர்ப்பணிக்கத் தயாராக இருக்கும் இளைஞர்களை கட்சியில் சேர்க்கலாம். இளைஞர் கழகத்தின் பணிகளுக்கு தொடர்ந்து வழிகாட்டுவது, கட்டுப்படுத்துவது போன்ற பணிகளை கட்சி ஊழியர்கள் செய்ய வேண்டும். பிறகு, வெகுஜனப் பிரச்சாரப் பணியை கட்சி துவக்க வேண்டும். ஏனெனில் இது மிக முக்கியமான கட்சிப் பணியாகும். 

கட்சியின் இருப்பைக்கூட அறிய முடியாமல் போனது, கண்டுங் காணாமல் இருந்தது என்பன மட்டுமல்லாது சில சமயங்களில் மக்களிடமிருந்து நேரடியான எதிர்ப்பையும்கூட சந்திக்க நேர்ந்ததே கதார் கட்சியின் (khadar party) (1914-15) நடவடிக்கைகள் தோல்வியடைந்ததற்கு அடிப்படையான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. இதுபோக, கூலி விவசாயிகள், தொழிலாளர்களின் நேரடியான, உண்மையான ஆதரவையும், அனுதாபத்தையும் பெறுவதற்கு மட்டுமல்லாது அவர்களை அமைப்பாக அணிதிரட்டுவதற்கும்கூட பிரச்சாரப் பணி மிக முக்கியமானதாக இருக்கிறது. நமது கட்சி3, ஒரு கம்யூனிஸ்ட் கட்சி. கறாரான கட்டுப்பாடுகளும், ஒழுக்கமும் நிறைந்த ஊழியர்களைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியே மற்ற பிற இயக்கங்களை கட்டுப்படுத்த வேண்டும். கூலி விவசாயிகளுக்கான சங்கம், தொழிலாளர்களுக்கான சங்கம், இன்ன பிற உழைக்கும் மக்களுக்கான சங்கங்களை கட்டியமைப்பது கட்சியின் பொறுப்பாகும்; காங்கிரஸ் கட்சி அல்லது அதுபோன்ற கட்சிகள் மீது தாக்கம் செலுத்துவது, ஏன் கைப்பற்றுவதற்கான வேலைகளைக் கூட கம்யூனிஸ்ட் கட்சி செய்ய வேண்டும். தேசிய அரசியல் மட்டுமல்லாது, வர்க்க அரசியல் பற்றிய விழிப்புணர்வையும் உருவாக்க வேண்டும். இதற்கு அகல்விரிவான பிரச்சார இயக்கத்தை முடுக்கிவிட வேண்டியது கட்சியின் இன்றியமையாதப் பணியாகும். சோசலிச அரசியல்-தத்துவம் பற்றி வெகுஜன மக்களுக்கு பயிற்றுவிக்கும் நோக்கில் பல்வேறு தலைப்புகளின்கீழ்(!)4 பிரச்சாரத்தை முன்னெடுக்கலாம். அனைத்து வெளியீடுகளும் மிக எளிதாக, பரவலாக மக்களைச் சென்று சேரும் வகையில் இருக்க வேண்டும். நாம் எழுதி வெளியிடக்கூடியவைகள் அனைத்தும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாக இருத்தல் வேண்டும்.

அரசியல் சுதந்திரம் பெறாமலேக் கூட விவசாயிகளும், தொழிலாளிகளும் பொருளாதார சுதந்திரம் பெற்றிட முடியும் என்பது போன்ற அபத்தமான (கற்பனையான-மொ--ர்) கருத்துகளை பேசக்கூடிய நபர்களும்  பாட்டாளி வர்க்க இயக்கத்தில் இருந்து வருகின்றனர். ஒன்று இவர்கள் அடுக்குமொழி அரசியல்வாதியாகவோ அல்லது குழப்பவாதியாகவோ இருந்தால்தான் இப்படியெல்லாம் பேச முடியும். இதுபோன்ற கருத்துகளெல்லாம் பகுத்தறிவுக்கு ஒவ்வாத, கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாதவையாகும். நாமும் மக்கள் பொருளாதார அடிப்படையில் விடுதலை பெற வேண்டும் என்றே சொல்லுகிறோம், ஆனால் அதை அடைவதற்கு முதற்படியாக அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்காக நாம் போராட வேண்டுமென்கிறோம். துவக்கத்தில், உழைக்கும் மக்களின் சிறு சிறு பொருளாதாரக் கோரிக்கைகளோடு, இன்ன பிற சலுகைகளைப் பெறுவதற்கான போராட்டங்களையும்கூட நாம் முன்னெடுக்க வேண்டியிருக்கும். இறுதியாக அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பெரும் போராட்டத்தை நடத்துவதற்காக மக்களை பயிற்றுவிப்பதற்கு இதுபோன்ற சிறு சிறு போராட்டங்களே ஆகச் சிறந்த வழிமுறைகளாக விளங்குகின்றன.

இதுபோக, இராணுவப் பிரிவையும் உருவாக்குவது அவசியமானதாகிறது. சில நெருக்கடியான சமயங்களில் இதன் தேவை அவசர அவசியமானதாகிவிடும் என்பதால் இராணுவப் பிரிவென்பது மிக முக்கியமான பிரிவாக கருதப்பட வேண்டும். அப்படியொரு நெருக்கடியான நிலை உருவாகும் வரை காத்துக்கொண்டிருந்தோம் என்றால், இராணுவப் பிரிவு போன்ற அமைப்பை உருவாக்கி, அதற்குரிய அனைத்துக் கூறுகளையும் கொண்டு முழுமையாக ஒழுங்கமைத்து நெருக்கடி நிலையைத் திறமையாக முறியடிப்பதென்பது இயலாதக் காரியமாகும். இந்த விஷயம் குறித்து நான் சொல்வதை தவறாகப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பு மிக அதிகமாக இருப்பதால் இதுபற்றி மேலதிகமான விளக்கம் தருவது சரியாக இருக்கும். வெளியிலிருந்து பார்ப்பதற்கு, நான் பயங்கரவாதி போல செயல்படுவதாக தோன்றியிருக்கலாம். ஆனால், நான் பயங்கரவாதி அல்ல. நாம் இதுவரை விவாதித்து வந்தது போன்றதொரு தீர்க்கமான, தெளிவான கொள்கைக் கோட்பாடுகளில் பற்றுதியோடு பயணிக்கும் புரட்சியாளன் நான். ராம் பிரசாத் பிஸ்மில் என்பாரை விமர்சித்ததுபோல, சிறைவாசம் எனது கொள்கைகளை சிதைத்துவிட்டதாகக்கூட சில தோழர்கள் என்னை விமர்சிக்கக்கூடும், ஆனால் அது உண்மையல்ல. நான் சிறைக்கு வெளியிலிருந்த போது இருந்த அதே சிந்தனை, அதே கொள்கைப்பிடிப்பு, அதே வைராக்கியம், அப்போதிருந்த அதே மனவுறுதியுடன்தான் இப்போதும் இருக்கிறேன், இன்னும் சொல்லப்போனால், இவையனைத்தும் பெருகியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். எனவே, நான் எழுதியதை கூடுதல் கவனத்துடன் படிக்க வேண்டும். எழுதியதற்கு மாறாக உள்ளுறையாக மறைபொருள் ஏதும் உள்ளதா என்று ஆராயக்கூடாது. நான் பயங்கரவாதி அல்ல; ஒருபோதும் நான் பயங்கரவாதியாக இருந்ததில்லை என்பதை அடித்துச் சொல்கிறேன்; ஒருவேளை எனது புரட்சிகர வாழ்வின் துவக்க கட்டம் அப்படிப்பட்டதாக இருந்திருக்கலாம்; இதுபோன்ற வழிமுறைகளின் மூலமாக நாம் எதையுமே சாதிக்க முடியாது என்பதை உறுதியாக நம்புகிறேன். இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுக் கழகத்தின் வரலாற்றை திரும்பிப் பார்க்கும் போது நம்மால் இதை எளிதாக ஒப்புக்கொள்ள முடியும். மாபெரும் விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, அதன் இராணுவப் பிரிவாக செயலாற்றும் நோக்கில்தான் எங்கள் கழகத்தின் அனைத்து செய்லபாடுகளும் இருந்துள்ளது. எங்களது நோக்கங்கள் குறித்து தவறாக புரிந்து வைத்திருந்தீர்கள் என்றால், அவசியம் மறுபரிசீலினை செய்ய வலியுறுத்துகிறேன். கைத்துப்பாக்கிகளும், எறிகுண்டுகளும் பயனற்றது என்று நான் சொல்ல வரவில்லை; மாறாக, கண்மூடித்தனமாக (தாறுமாறாக) ஆயுதங்களை பயன்படுத்துவது பயனற்றதாகவும், சில சமயங்களில் நமது நோக்கத்திற்கே உலை வைத்துவிடுவதாகவும் இருக்கிறது என்றுதான் சொல்ல வருகிறேன். எந்தவொரு நெருக்கடியான நிலையையும், திறம்பட சமாளிப்பதற்கு வேண்டிய அனைத்து போர்க் கருவிகளையும் நமது கட்சியின் இராணுவப் பிரிவு எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். கட்சியின் அரசியல் பணிகளுக்கு துணை நிற்பதே அதன் முதன்மையான பணி. ஒருபோதும் இராணுவப் பிரிவு தன்னிச்சையாக செயல்படக் கூடாது, செயல்படவும் முடியாது.

மேலே விளக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றியே நமது கட்சி அதன் பணிகளை தொடர வேண்டும். பல்வேறுபட்ட தலைப்புகள் குறித்து கூட்டங்களையும், கருத்தரங்குகளையும் காலம் தவறாது நடத்துவதன் மூலம் கட்சியிலுள்ள ஊழியர்களை தொடர்ந்து பயிற்றுவித்து, தெளிவுண்டாக்க வேண்டும். 

மேற்கூறிய வழியில் நீங்கள் நடைபோடத் துவங்கினால், மிகுந்த மனவடக்கத்தோடும், அறிவுத் தெளிவோடும் பயணிக்க வேண்டும். நமது திட்டம் முழுமையாக வெற்றி பெறுவதற்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகளாவது ஆகும். ஓராண்டில் சுயராஜ்ஜியம் அமைப்போம் என்பது போன்ற காந்தியின் கற்பனாவாத முழக்கங்களால் ஈர்க்கப்பட்டு பத்தாண்டிற்குள்ளாகவே புரட்சியை சாதித்துவிடலாம் என்பது போன்ற சிறுபிள்ளைத்தனமான மனக்கோட்டைகளை தகர்த்துவிடுங்கள்.  நமது இலக்கை சென்றடைவதற்கு உணர்வெழுச்சியோ அல்லது உயிர்ப்பலியோ தேவையில்லை, மாறாக, வாழும் வரை தொடர்ந்து போராடுதல், துன்பத்துயரங்களை பொறுத்தல், தியாகம் செய்தல் போன்றவையே அவசியமாக உள்ளது. முதலில் உங்களிடமுள்ள தனிநபர்வாதத்தை ஒழித்துக்கட்டுங்கள். தனிப்பட்ட சுகபோகங்களை அனுபவிப்பது பற்றிக் கனவு காண்பதைக் கைவிடுங்கள். துணிச்சல், விடாமுயற்சி, தளரா ஊக்கத்துடன் மனவுறுதியோடு படிப்படியாக முன்னேறுங்கள். எந்தவொரு தடைகளும், துன்பத் துயரங்களும் உங்களை சோர்ந்து போகச் செய்யாது. எந்தவொரு தோல்வியும் நம்பிக்கையிழக்கச் செய்யாது. நீங்கள் எதிர்கொள்ளும் கஷ்ட நஷ்டங்கள் எதுவும் உங்களது சுதந்திர தாகத்தை தணித்துவிட முடியாது. விடாமுயற்சியும், தியாகமும் நிச்சயமாக தடைகளைத் தகர்த்தெறிய துணை நிற்கும். தன்னளவில் வெல்லும் ஒவ்வொரு வெற்றியும் புரட்சிக்கு மகத்தான பங்களிப்பாக மாறும்.

புரட்சி நீடூழி வாழ்க!                                                

பிப்ரவரி 2, 1931

அடிக்குறிப்புகள்:

1. பகத்சிங் தூக்கிலேற்றப்பட்ட பிறகு சேதமடைந்த நிலையில் இந்த ஆவணம் வெளியிடப்பட்டது. சோவியத் யூனியன், மார்க்ஸ், லெனின் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்பான அனைத்துக் குறிப்புகளும் வெளிவரக்கூடாதென்ற நோக்கில் நீக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, 1936ல், பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் இரகசிய அறிக்கை ஒன்றில் இந்த ஆவணம் இடம்பெற்றுள்ளது. அந்த இரகசிய அறிக்கையின் முழு நகல் ஒன்று லக்னோவில் அமைந்துள்ள சுதந்திர போராட்டம் ஆராய்ச்சி மையம்-தியாகிகள் நினைவாலயத்தின் நூலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

2. உரைப்பகுதி காணவில்லை.

3. உரைப்பகுதி காணவில்லை.

4. தெளிவாக இல்லை. சில உரைப்பகுதி விடுபட்டிருக்கலாம்.

நூல் வெளியீடு : மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் - செந்தளம் பதிப்பகம்

குறிப்பு:

இச்சிறு நூல் 500 பிரதிகளுக்கு மேல் அச்சிடப்பட்டு மாநாட்டு நிதியிலிருந்து விலையில்லாமல்  விநியோகிக்கப்படுள்ளது. 

மாநாட்டு செலவினங்களுக்கு தாராளமாக நிதியுதவி அளிக்க கோருகிறோம். 

நிதியுதவி அளிக்க / நூலினை பெற தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்

தோழர். மாயகண்ணன் - 97871 45335

தோழர். தெய்வ சந்திரன் - 94864 64963

தோழர். நியூ ரெட்மேன் - 90953 65292